பாரதத்தின் மொத்த தேசிய உற்பத்தி-ஜிஎன்பி வளர்ச்சி (பாஜக-மோதி குறிப்புகள் 4/n)

March 27, 2019

ஜிஎன்பி (GNP – Gross National Product – மொத்த தேசிய உற்பத்தி) என்பதைப் பொதுவாகவே, ஒரு, எண்ணிக்கை சார்ந்த, ஆனால் பலபிரிவுகளிலிருந்தும் எடுத்துக்கோர்க்கப்பட்ட நேரிடையான பொருளாதார வளர்ச்சிக்கூறுகளின் சுட்டிக்காட்டியாக, சர்வ நிச்சயமாகக் கொள்ளலாம். (ஆனால் மேற்படிக்கு நாக்கு தள்ளாமல் இருக்கப் பார்த்துக்கொள்கிறேன்!) :-)

அதே சமயம் வெறும் ஜிஎன்பி ஜிஎன்பி என்றே பார்த்துக்கொண்டு (நம் மன்மோகன் சிங்கனாரும், மன்னிக்கவும் ஸோனியா காந்தியாரும், முன்ஜாமீன் புகழ்ப் பேடி பசிதம்பரமாரும் திருடியதற்கு அப்பாற்பட்டு ஏதோ செய்தாற்போல – ஆகவே அதையும் சரியாகச் செய்யாமல் + கூட ‘ஒட்டு கேஜ்’ அடித்துக் கருணாநிதிகளும் அமோகமாகச் சூறையாடியதையும் கமுக்கமாக மறைத்துவிட்டு) ஒற்றைப்படையாக அதனை மட்டுமே ஒரு காரணியாக வைத்துக்கொண்டு பாரதத்தில் பிறகனைத்தும் சரிதேன் எனவும் இருக்கமுடியாது என்பதையும் நான் அறிவேன்.

ஆனாலும் உலகளாவிய பொருளாதார அறிவுப்புலங்களில், நாடுகளின் வளர்ச்சியை ஆழ்ந்து கவனிப்பதற்கு, பொருளாதார ரீதியாக நாடுகளை ஒப்பிட்டுப் பார்ப்பதில் – இந்த ஜிஎன்பி ஒரு முக்கியமான பங்கை அளிக்கிறது/வகிக்கிறது என்பதை நான் சொல்லித்தான் சக ஏழரைகள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதில்லை.

-0-0-0-0-

என்னுடைய ஊர்சுற்றிப் புராணங்களில் – கடந்த சில வருடங்களில் வணிக ரீதியான பேரெழுச்சியையும், திமிறி எழுந்தவண்ணம் இருக்கும் பணப் புழக்கத்தையும் பார்த்துக்கொண்டு வருபவனுக்கு – நம் பாரதமானது, காங்கிரஸ் வகைத் தொடர்தூக்கத்திலிருந்தும், முடை நாற்றமெடுக்கும் மகாமகோ ஊழல்களிலிருந்தும் மேலெழும்பி, உலகத்தில் அதற்கான இடத்தை அடைய பெரும் பிரயத்தனங்களைச் செய்துவருகிறது என்பது வெள்ளிடைமலை.

ஆனால் இதனை வெகு எளிதாக ஒரு ‘பாமரப் பார்வை’ என (அதாவது தங்கள் சொந்தப் பார்வை என்னவோ பெரிய்ய துறைவல்லுநப் பார்வையென, சாய்வு நாற்காலி ‘விமர்சகர்கள்’) புறம் தள்ளலாம். என் கருத்துகளை, மோதி அபிமானியான என்னுடைய காவி/ஹிந்துத்துவபிரமைகள் எனக் கருதலாம் – பிரச்சினையே இல்லை.

ஆனால் ஐயன்மீர்! அவை கறார் தரவுகளின் மீதும் கட்டமைக்கப்பட்டவை, புரிந்துகொள்ளவும் – நன்றி!

உயர்மதிப்புப் பணநோட்டு மதிப்பிழக்கம் (டீமானடைஸேஷன்), சகிப்பின்மை, வளர்ச்சியில்லை, பொருளாதாரத் தேக்கம்,  விலைவாசி உயர்வு பஞ்சம் ஏழ்மை அது சரியில்லை இது சரியில்லை என்பவர்களுக்கெல்லாம், டீமானடைஸேஷன் போன்றவை பற்றி  டீவி பார்த்துவிட்டு அல்லது தஹிந்து எழவைப் படித்துவிட்டு – உட்கார்ந்த இடத்திலிருந்தே தாளித்த கடுகு போலச் சூடாகிக் குதித்து வெடிப்பவர்களுக்கெல்லாம், பாலபாடம் எடுக்க – முதலில் இந்த GNPயிலிருந்துதான் ஆரம்பிக்கவேண்டும்.

சரி.

நம் ‘மொத்த தேசிய உற்பத்தி’ என்பது ஓர் ஆண்டில் பாரதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்துவிதமான பொருட்கள்/பண்டங்கள் (goods) + மேற்கொள்ளப்பட்ட சேவைகளின் (services) ஒட்டுமொத்த இறுதிச் சந்தை மதிப்பாக வரிக்கப்படுவது. பல இடங்களிலிருந்தும் பலவிதங்களிலிருந்தும் திரட்டப்படுவது; மாமாங்கங்களாக உலகத்தில் அத்தனை நாடுகளாலும் இந்தக் கணக்கெடுத்த முறையாகச் செய்யப்படுவதால் – ஏறக்குறைய பெரும்பிழைகள் என இல்லாமல் கணிக்கப்படுவது. இதனை ஒருவிதமான ஃபார்முலாக்குள் அடக்கவேண்டும் என்றால்:

மொத்த தேசிய உற்பத்தி/ஜிஎன்பி  =   ஒட்டுமொத்த பண்டங்கள்+சேவைகளின் நுகர்வு

+ நம் முதலீடுகள் (நாம் வெளிநாடுகளில் செய்வது உட்பட)
+ அரசுகளின் செலவீனங்கள்
+ (ஏற்றுமதி – இறக்குமதி)
+ (வெளிநாடுகளிலிருந்து வரவு, முதலீடுகள் உட்பட – வெளிநாடுகளில் நாம் செய்யும் செலவு)

இப்போதைக்கு மேற்படி அடிப்படைகள் போதும்.

-0-0-0-0-0-

இந்த ஜிஎன்பி எண்ணிக்கை பசிதம்பரம்-ராசா-கனிமொழிகள் கொள்ளையடித்த மன்மோஹன் சிங்கனார் காலத்தில் எப்படி இருந்தது, பின் எப்படி வளர்ந்து கொண்டிருக்கிறது என்பவற்றை, சில வரைபடங்கள் மூலமாகப் பார்க்கலாம். இவை உலகவங்கியின் சித்திரங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. பொதுவாகவே இந்த உலகவங்கி – பாரதம் போன்ற ‘வளரும்’ பொருளாதாரங்கள் மீது தன் இளக்காரப் பார்வைகளைத் தான் வைக்கும் என்பதையும் கருத்தில் கொண்டு பார்க்கவும், சரியா?

2009ல் இரண்டாம் ஸோனியாகாந்திகருணாநிதி அரசு வந்தது – 2014 வரை நீடித்தது. அதற்கு முன்னும் அவர்கள் தாம் ஐந்தாண்டுகளுக்குக் கொடுங்கோலோச்சினார்கள். 2014ல் இருந்து பாஜக-மோதி ஆட்சி. கொள்ளையடிப்புகளில் இருந்து மீண்டு பொருளாதாரப் பிரச்சினைகளைத் தாண்டியெழுந்து நாம் இப்போது  சர்வ நிச்சயமாக முன்னேறிக்கொண்டிருக்கிறோம். இதனை ஒருமாதிரி ஜிஎன்பி எண்ணிக்கை வழியாகப் பார்க்கலாம்.

ஒரு ட்ரில்லியன் என்பது ஆயிரம் பில்லியன். பில்லியன் என்பது ஆயிரம் மில்லியன். மில்லியன் என்பது பத்து லட்சம்.

ஒரு ட்ரில்லியன் = 1, 000, 000, 000, 000.

ஒரு ட்ரில்லியன் $ டாலர் = 70 ரூபாய் என வைத்துக்கொண்டால், ஒரு ட்ரில்லியன் டாலர் = 70, 000, 000, 000, 000 ரூபாய். அதாவது – 700, 000, 000 லட்சம் ரூபாய். அல்லது 7, 000, 000 கோடி ரூபாய். அதாவது எழுபது லட்சம் கோடி ரூபாய்.

மேற்கொண்டு, 2007 ஆண்டிலிருந்து 2017 வரை உலகவங்கியின் கணக்கெடுப்புகளின் படி நம் வளர்ச்சி எப்படி இருந்திருக்கிறது என்பதை – சித்திரங்களின் உதவியுடன் பார்க்கலாம்… சிவப்புப் புள்ளிக்கோட்டின் சாய்வு மோதி ஆட்சியில் எப்படி நிமிர்ந்திருக்கிறது பாருங்கள்!

சரி. 2007லும் மன்மோஹன் சிங்கனார் ஆட்சிதான் – அவ்வருடம், நம் ஜிஎன்பி, 1.201 ட்ரில்லியன் அளவில் இருந்தது.

அடுத்த இரண்டு வருடங்களுக்கு மந்த வளர்ச்சி.

2010ல் கொஞ்சம் முன்னேற்றம். இதற்குப் பலவித, மன்மோஹன் சிங்கனாரின் ஆட்சியின் மாட்சிக்குத் தொடர்பற்ற பல காரணங்களும் இருந்தன. (முடிந்தவரை அள்ளிக்கொள்ளவேண்டும் எனும் கொள்கையைத் தொடர்ந்தால் தானே ஐயா, காங்கிரஸ்திமுக பருப்பு வேகும்?)

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மந்த நிலையில் முன்னேற்றம். (காரணங்களைக் கூறுபவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன!) ;-)

2014ஆம் ஆண்டில் முன்னேற்றம் ஆரம்பிக்கிறது. பாஜக மோதி தலைமையில் 2014 மே வாக்கில் அரசை அமைக்கிறது. வளர்ச்சி, வளர்ச்சி. ஏனெனில் மன்மோஹன் சிங்கனாரின் ஆட்சியைப் போலல்லாமல் – மோதி, ‘தானும் சாப்பிடவில்லை, பிறரையும் சாப்பிட விடவில்லை!’ – ஆகவே பாஜக தீண்டத்தகாத கட்சியாகி, பின்னர் ஏகத்துக்கும் பொய்க் கருத்துகள் காங்கிரஸ் திமுக இடதுசாரி அயோக்கியர்களால் பரவவிடப்பட்டன: ஹிந்துத்துவா, சகிப்பின்மை, மாட்டிறைச்சித் தடை இன்னபிற இன்னபிற…

இதெல்லாம் மோதியின் ஆட்சியில்தான்!

2014ல் ஜிஎன்பி இருந்த 2.039 ட்ரில்லியனில் (142.73 லட்சம் கோடி ரூபாய்)  இருந்தது 2017 வாக்கில் 2.601 ட்ரில்லியனை (182.07 லட்சம் கோடி ரூபாய்) எட்டி விட்டது. எல்லாவற்றுக்கும் தற்போதைய டாலர்-ரூபாய் மாற்ற எண்ணிக்கையான ~70 ரூபாயை, சமச்சீர்முறையாக உபயோகித்திருக்கிறேன்.

2018, 2019 ஆண்டுகளில் சுமார் 7.3% சதவீத வளர்ச்சியை பாரதம் எட்டும் என்றும் – இப்படியே தொடர்ந்தால் (அதாவது, நான் குறிப்பிடுவது – நம் மோதி தொடர்ந்தால்!) 2020, 2021 ஆண்டுகளில் வெகு சுலபமாக 7.5% வளர்ச்சியை எட்டும் என்றும் உலகவங்கி குறிப்பிடுகிறது. (உலகத்தில் பலப்பல நாடுகளிலும் சீனா அமெரிக்கா உட்பட இந்த அளவுக்குப் பொருளாதார ரீதியாக வளர்ச்சிவேகம் இல்லை).

பொருளாதார வளர்ச்சி, பாரதத்தில் குறைந்திருக்கிறதா என்ன? நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

மன்மோஹன் சிங்கனாரின் ஜிங்குசிக்கா ஜால்ராக்கள் சொல்வதற்கு மாறாக –  அதிகமான வேகத்தில் தாம், மோதியின் ஆட்சியில் பாரதம் வளர்ந்திருக்கிறது அல்லவா? அதுவும் காங்கிரஸ்திமுகவால் கழிசடையாக்கப்பட்ட பொருளாதாரத்தை சுத்திகரிப்பு செய்தபின்னரும் இம்மாதிரி என்றால் – இனி மறுபடியும் பாஜக வந்தால், நாம் எப்படி வளர்வோம் சொல்லுங்கள். ஜொலிக்க மாட்டோமா?

ஆக, சர்வ நிச்சயமாக – மோதிக்கும், அவருடைய அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் ஜே. ஆனால் இன்னமும் நிறைய செய்யவேண்டியதிருக்கிறது. கசண்டுகளைக் களையவேண்டியதிருக்கிறது.

நான் குறிப்பிட்டிருக்கும் எண்ணிக்கைகளைச் சரிபார்க்க உலகவங்கி தளத்துக்குச் செல்லலாம் – https://data.worldbank.org/ – அங்கு, இவை எப்படி கணக்கீடு செய்யப்பட்டன, பின்புலம், ஊகங்கள், சட்டகங்கள், தரவுகள் என்பதை விலாவாரியாக விளக்கியிருக்கிறார்கள்.

-0-0-0-0-0-

நிலைமை இப்படி இருக்கையிலே – நம் செல்ல தண்டகருமாந்திரமும் மப்பாருமான ராஹுல்காந்தி என்ன சொல்கிறார் என்றால் (அதனை நம் மிகச்செல்ல தண்டகருமாந்திரர்களான ஸ்டாலின்கள் மறுபேச்சில்லாமல் ஆமோதித்துக் குளிர்காய்கிறார்கள் என்றால்): பாரத ஜிஎன்பி-யில் சுமார் 14%  அளவை அவர் மக்களுக்கு ‘இலவசமாகக்‘ கொடுப்பதற்குத் திட்டங்கள் வைத்திருக்கிறாராம்! இது ஒரு கடைந்தெடுத்த ஓட்டுப்பொறுக்கித்தனம்தான்!

ஆனால், பாருங்கள் – பாரதம், ஒட்டுமொத்தமாகக் கீழ்கண்ட முக்கியமான துறைகளில் செலவு செய்யும் சதவீதங்களாவன:

ஆரோக்கியம் = ஜிஎன்பி-யில் 1%
பாதுகாப்பு = ஜிஎன்பி-யில் 1.5%
கல்வி (உயர்கல்வி உட்பட!)  =  ஜிஎன்பி-யில் 2.7%

அவ்ளோதான்!

ஆனால், ராஃபூல் காந்தி – ஜிஎன்பி-யில் 14%  – பதினான்கு சதவீதத்தை, அதாவது நம் வரிப்பணத்தை – இலவசப் பிச்சையாக நம்மிடமே விட்டெறியப் போகிறாராம்! என்ன அயோக்கியத்தனம் இது!

எப்படி இருக்கிறது, நம் பேடிகளின் கதையாடல்!

மேலும் இப்படி நம் நிதியை (‘பக்கத்து வீட்டுக்காரன் நெய்யே, என் பெண்டாட்டி கையே’ என) விரயம் செய்தால் – பலப்பல முன்னேற்ற நடவடிக்கைகளை எடுப்பது தடைப்படாதா? ஜிஎன்பியில் பதினான்கு விழுக்காடு ஐயன்மீர்! :-( இப்படி பிச்சைக்காரத்தனத்தை வளர்த்தால் பாரதம் எப்படி முன்னேறும்? நமக்குச் சுயமரியாதை மானம் ரோஷம் எல்லாம் இருக்கும், சொல்லுங்கள்?

இந்த ராஹுல் காந்திகளுக்கோ, கூடஓடி எரியும் வீட்டிலிருந்து கொள்ளிக்கட்டையையும் திருடிக்கொண்டு ஓடும் ஸ்டாலின்களுக்கோ – ஏதாவது கொஞ்சமாவது பொருளாதார அறிவோ, பொது அறிவோ இருக்கிறதா? மண்டையில் மசாலா இருக்கிறதா?

கொள்ளையடிக்கச் சொல்லுங்கள் – நாக்கைச் சப்புக்கொட்டிக்கொண்டு வருவார்கள்!

ஏகோபித்து உளறச் சொல்லுங்கள் – ஓடோடி வருவார்கள்! (இந்த அற்பக் கொள்ளையர்களுக்கு நம் விசிலடிச்சான் குஞ்சப்பனார்க் குளுவான்களின் ஆதரவு, ஊடக/அறிவுஜீவிப் பேடிகளின் ஜால்ரா! அயோக்கியர்கள்!!)

-0-0-0-0-

நம் நாட்டில் சமனத்துடன்,  நிதிவிரயம் செய்யப்படாமல், திருடப்படாமல் –  ஜிஎன்பி தொடர்ந்து ஏற, வளர்ச்சி பெருக, நமக்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பாக இந்த 2019 தேர்தல் பார்க்கப்பட்டு – நம் பாஜக மறுபடியும் ஜெயிக்க வேண்டும். மோதி மறுபடியும் பிரதமராகவேண்டும்!

ஏனெனில் அம்மணிகளே, அம்மணர்களே – மோதி செய்து காட்டியிருக்கிறார். இனிமேலும் செய்வார்.

ஏனெனில் – அவர் கண்டிப்பாக நேர்மறையாகவே நேரிடையாகவே ஆதரிக்கத் தக்கவர். மேலும் – அவரை எதிர்ப்பவர்கள் கடைந்தெடுத்த கொள்ளைக்காரர்களும் பொறுக்கிகளும்.

இரண்டும் முக்கியமான காரணிகள்.

ஆகவே!

ஜெய்ஹிந்த்!

இப்போது, வெட்கமே துளிக்கூட அற்ற ஒரு கோரிக்கை: அம்மணிகளே, அம்மணர்களே – தொடர்ந்து, எனக்கு முடிந்தபோதெல்லாம் இப்படி, விஷயங்களைச் சரிபார்த்து, தரவுசார்ந்த பரிந்துரைகளை எழுதவேண்டும் என நினைக்கிறேன்; ஆனால், நான் செலவழிக்கும் சக்திக்கு வெறும் ஏழரைகள் மட்டும் இதனைப் படித்துவிட்டுக் கடாசினால் போதாது (ஹ்ம்ம், பிறரும் கடாச வேண்டும்!). இம்மாதிரி விஷயங்கள் (நான் எழுதியவை மட்டுமல்ல) இன்னும் பலரையும் சென்றடையவேண்டும். ஆகவே, உங்களால் இயன்றவரை இவற்றைப் பரப்பவும்.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் – தாராளமாக எங்குஎப்படி வேண்டுமானாலும் இம்மாதிரி விஷயங்களை, உங்களுக்கு அக்கருத்துகளுடன் ஒப்புதல் இருந்தால் பரப்புங்கள் – திரிக்காமல் இருந்தால் போதும். என் பெயரையோ, ஒத்திசைவையோ இதற்கெல்லாம் குறிப்பிட வேண்டிய அவசியமே துளிக்கூட இல்லை. ஒரு எழவுக்கும் காப்பிரைட் காப்புரிமை கீப்புரிமை என்றெல்லாம் இல்லவே இல்லை. நன்றி!

 

 

 

13 Responses to “பாரதத்தின் மொத்த தேசிய உற்பத்தி-ஜிஎன்பி வளர்ச்சி (பாஜக-மோதி குறிப்புகள் 4/n)”

  1. venkatesh Says:

    பல நூற்றாண்டுகளாக, பஞ்சம் பிழைக்க வந்த பரதேச கழுதைகளால்,
    கட்டியம் கூறப்பட்ட காவிய நாடகமாய் கலங்கிய நாட்டின் அரசியல்நாயகி ,தன் தலைவனை கண்டு ,பொற்கால புராணங்களில் புழங்கிய பழங்கதைகள் பாடும் பருவங்களும், பாங்குற்ற உருவங்களும் பீடித்தனவோ?என்று பீடு குலையாமல் ,இக்கால நிதானத்திற்கு இறங்கி வருகிறாள் .


  2. ராம்
    நிச்சயமாக செய்வேன்

  3. K.Muthuramakrishnan Says:

    But Subramaniyam Swami says This figure had been achieved at the time of Narsimma rao’s time. Nothing to celebrate by Modi Government?


    • Sir, I do not think it is correct in entirety. Or he was talking only about the growth RATE in GNP; things were really in the pits thanks to the misrule of Congress govts from Nehru. NarasimhaRao unschackled pur potential. Definitely he was a GREAT PM. The rate was definitely MORE than 7.5%. But the actual GNP was not.

      It is difficult to maintain the same growth rate when the achieved figures have increased. The thing is one or two indicators alone cannot give a whole pic – and I hope this is clear.

      Please have a look at https://www.imf.org/external/pubs/ft/wp/2004/wp0443.pdf pages 8-9. There is a good summarization.

  4. Somu Says:

    சிறு, குறு விவசாயிகளுக்கு விவசாய கடன் தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதியளித்த தமிழ்நாட்டின் ராகுல் காந்தி (ஸ்டாலின்) பெரு விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்.

    திமுக அனுதாபியான உங்கள் கவனத்திற்கு :-)


    • :-( ​சாவுகிராக்கிகள் – எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என அலைகிறார்கள், அரசமைத்துப் புறங்கையை நக்கலாம் எனக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஒழிந்தாலே நமது பாரதத்தில் ஒரு அடிப்படைச் சுபிட்சம் வந்துவிடும்.

      மற்றபடி, வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டதற்கு நன்றி.​

  5. Akhilan Says:

    அரசாங்கத்தின் திறனை மதிப்பிட, அந்த அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத காரணிகளுக்கான விலக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். உதாரணமாக, 2009 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் இறக்குமதியாகும் கச்சா எண்ணை விலை (தோராய) சராசரியாக 120 டாலர் அளவிலும் 2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் (தோராய) சராசரியாக 60 டாலர் அளவிலும் இருந்திருக்கிறது. அதே நேரத்தில் டாலர் மதிப்பு முந்தைய காலகட்டத்தில் சராசரியாக 60 ரூபாய் அளவிலும், பிந்தைய காலகட்டத்தில் சுமார் 70 ரூபாய் அளவிலும் இருந்திருக்கிறது. முந்தைய காலகட்டத்தில் கச்சா எண்ணையின் தோராய இறக்குமதி நாள்ஒன்றுக்கு 3300 பேரல்கள். பிந்தைய காலகட்டத்தில் இதுவே 4000 பேரல்கள். இதில் ஐந்து வருட காலம் மொத்தமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

    இந்தக் கணக்கின்படி முந்தையகாலத்தில் தோராயமாக ரூபாய் 1,09,50,00,000 (ஒரு லட்சம் கோடிகள்) இறக்குமதிக்கு செலவிடப்பட்டிருக்கிறது. அல்லது இதே அளவு பிந்தைய காலத்தில் இறக்குமதிக்கு குறைவாக செலவிடப்பட்டிருக்கிறது. இது 2018 ஜிஎன்பி-யில் சுமார் 0.54%. இதுவே 2014 ஜிஎன்பி-யில் 0.7%. இத்தகைய கணக்குகளில் பணவீக்கத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கலாம். ஆனால் மொத்த உற்பத்தியை கணக்கிடுவதிலும் அது எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றே நினைக்கிறேன்.

    ஆனால் உற்பத்திப் பிரிவில் இது பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்காது என்றே நினைக்கிறேன். ஏனெனில் முந்தைய காலகட்டத்திலும் பிந்தைய காலகட்டத்திலும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணை விலையில் பெரிய வித்தியாசம் இல்லை.

    நான் எந்த அரசியல் சார்புநிலை எடுப்பதற்கும் தேவையான அளவு அரசியலறிவு இல்லாதவன். எனவே எந்த அரசுக்கும் சார்பாகவோ அல்லது எதிராகவோ இந்தக் கணக்கை முன்வைக்கவில்லை. வெறும் கணக்குக்காக மட்டுமே!


    • அன்பு நண்பருக்கு – உங்கள் கருத்துகளுக்கும் எண்ணிக்கை விவரங்களுக்கும் நன்றி.

      ஜி என் பி என்பதன் மூலமாக அனைத்து விஷயங்களையும் பிரதிபலிக்க முடியாது. அதன் வளர்ச்சிவேகம் மூலமாகவும் அப்படித்தான். வெகு துல்லியமாகவும் இருக்க முடியாது.

      ஆனால் – ஓரளவுக்குச் சரியாகவே அது பொருளாதார வளர்ச்சியைக் கணிக்கும் விஷயம். ஏனெனில் உலகளாவிய, பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட வழிமுறைகளின்/அணுகுமுறைகளின் படி இருப்பது அது. பொருத்திப் பார்ப்பதற்கு நல்ல விஷயம்.

      இது ஒருபுறமிருக்க – அந்த ஜி என் பி விஷயங்கள் எப்படி வந்தடையப்பட்டன என்பதற்கு அதே தளத்தில் விவரங்கள் இருக்கின்றன. விலைவாசி உயர்வுகளுக்கான மாற்றங்கள்/சரிப்படுத்தல்கள் அதில் இருக்கின்றன; அதில் உ

      மேலும் இந்திய அரசில் – Petroleum Planning & Analysis Cell என்றவொரு அமைப்பு இருக்கிறது; அங்கிருந்து நமக்கு வேண்டிய விவரங்கள் எடுக்கலாம். (பார்க்க: https://www.ppac.gov.in/WriteReadData/userfiles/file/PT_import_H.xls)

      எடுத்துக்காட்டாக 1998-99 ஆண்டிலேயே நாம் 39, 808, 000 டன் பெட்ரோலியத்தை இறக்குமதி செய்தோம் – அப்போதே! அதாவது ~ கிட்டத்தட்ட 4 கோடி டன்.

      சுமார் 7.33 பேரல் பெட் ரோலியம் ஒரு டன் எடை இருக்கும். ஆக நாம் 1998-99ல் இறக்குமதி செய்ததே, சுமார் முப்பது கோடி பேரல்கள்!

      இதனை 365 நாட்களால் வகுத்தால் – சுமார் 8.22 லட்சம் பேரல்கள். ஒரு நாளுக்கு குத்துமதிப்பாக இவ்ளோ பேரல்களை 1998-99லேயே இறக்குமதி செய்திருக்கிறோம்.

      ஆம் – தாங்கள் சொல்வதைக் குறித்துக்கொள்கிறேன். ஆனால் நான் சொல்லவருவது என்னவென்றால் – மன்மோஹன் சிங்கனார் ஆட்சிக்குப் பிறகு பாஜகவில் ஒர்ரேயடியாக வீழ்ச்சி எனப் பிரச்சாரம் நடக்கிறது​ – அது சரியில்லை என்பதைத்தான்.

      நான் பாஜக-வின் அனுதாபிதான். ஆனால் பிரச்சினைகளைப் பிரச்சினைகள் என்று சொல்வதில் எனக்கொரு மானப் பிரச்சினையுமில்லை. (எனக்கு நம் நாட்டின் சுபிட்சம் முக்கியம்; அதற்கான அடுத்த நாட்டை ஒழி எனச் சொல்லமாட்டேன்)

      விவரங்களுக்கு மறுபடியும் நன்றி.

      • Akhilan Says:

        தவறுகளுக்கு வருந்துகிறேன். நான் கொடுத்திருந்த கணக்கு விபரங்கள் அனைத்தும் தவறானவை. 33 லட்சம் மற்றும் 40 இலட்சம் பேரல்கள் ஒரு நாளுக்கு என்பதை 3300 என்றும் 4000 என்றும் குறிப்பிட்டிருந்தேன். அதன் கீழே கொடுத்திருந்த எண்களிலும் பல தவறுகள்.

        வேறு ஒன்றும் இல்லை. என் மூளையின் தேவையில்லாத வேலைகளை நிறுத்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அது எண்களை தர்க்க பூர்வமாக பார்ப்பதையும் நிறுத்தியிருக்கிறது போல!


      • ஐயா அன்பரே, ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் பெருந்தன்மையோடு திருத்திக்கொள்கிறீர்கள் பாருங்கள், அதற்காக மட்டுமேகூட உங்களை வணங்குகிறேன். (மேலும் பிற, தர்மம் குறித்த விஷயங்களுக்காகவும், நன்றி!)

        இன்னொரு விஷயம்: எனக்கும் இந்த கணக்கு வகையறாக்கள் நிறையக் குழம்பும். ஆகவே, மண்டைக்கு மேலில்லாமல் உள்ளுக்குள்ளேயே போய் மூளைக்குப் பதிலாக உட்கார்ந்துகொண்டு உள்ளிருப்பு மறியல் செய்யும் முடிக்குப் பயந்து கொண்டு ஒருமுறைக்கு இருமுறை சரிபார்ப்பேன். இல்லையேல் இளம் நண்பர்களைத் தொடர்பு கொண்டு அவர்களைச் சரிபார்க்கச் சொல்வேன் – வெட்கமே படுவதில்லை. (இப்பதிவுக்கும் செய்தேன்)

        ஆக, தொடர்ந்து (முடிந்தால்) படித்து பின்னர் தாராளமாக என் தவறுகளைத் திருத்தவும். நானும் பிழை புரியக்கூடியவன் தான்.

        அன்புடன்,

        ரா.

  6. Vinoth Kumar Says:

    Dear Ram,

    In this article the graph is showing the GDP data, but you are explaining about GNP, is this correct? I want to make sure before sharing this. Sorry, if i asked anything silly.


    • ஐயோ! நன்றி, வினோத்குமார் – நீங்கள் சொல்வதுதான் சரி. என்னை மன்னிக்கவும்.

      நான் பொருளாதாரவளர்ச்சி ஏறிய விகிதத்தைச் சுட்ட அந்த வரைபடங்களைச் சுட்டினேன். அவற்றில் மிகச் சரியாக ஜிடிபி எனத்தான் போட்டிருக்கிறது. அதைப் பற்றியும் எழுதவேண்டும் என நினைத்து, பின்னர் 2000 வார்த்தைகளுக்கும் மேலாகிவிட்டது என்றெல்லாம் யோசித்து. ஆனால் ஒன்று: நான் சர்வ நிச்சயமாகத் திரிக்கவில்லை. இன்னொரு இளைஞரிடம் இந்த வரைவைக் காட்டி, சரிபார்க்கவெல்லாம் வேறு சொன்னேன். அதற்கும் இது தப்பித்துவிட்டது!

      ஜிடிபி ஜிஎன்பி ஒன்றுக்கொன்று மிகவும் தொடர்புடையவை – ஜிடிபியை விட ஜிஎன்பி எண்ணிக்கை அதிமாகத்தான் இருக்கும் – நான் குறைந்த அளவில் இருக்கும் ஜிடிபியைத்தான் படத்தில் காட்டினேன் என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டலாம்.

      ஆனால், உண்மையென்னவென்றால், இது என் தவறு. இனிமேல் கவனமாக இருக்கிறேன். (ஒரு கோரிக்கை: ரொம்பத் தொந்திரவு கொடுக்கமாட்டேன்; ஆனால், இம்மாதிரி சரிபார்க்கவென உங்களை அணுகினால், உதவுவீர்களா?)

      ரா.(அசிங்கமாக இருக்கிறது)

  7. Vinoth Kumar Says:

    Dear Ram,

    Definitely, it’s my pleasure to do this small thing for your big effort like little squirrel who helped Lord Ram.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s