‘பெரியார்’ இங்கே… ஐயகோப் பெருந்தேவி எங்கே?

December 13, 2018

#SheToo? :-(

இந்த அம்மணியைப் பலப்பல மாமாங்கங்கள் முன் பார்த்து / அகஸ்மாத்தாகச் சந்தித்து ஏதோ கொஞ்சம் அளவளாவியிருக்கிறேன் (1988/89? அப்போது கநாசு அவர்களும் அங்கிருந்தாரோ? அல்லது மா.அரங்கநாதன் வீட்டிலா?) என நினைவு. அப்போது அம்மணியாரும் இந்தமாதிரி மானாவாரியாகக் கொடும்பீலா வாதத்திலும், சுந்தரமான சுளுக்கெடுப்புகளிலும் அமோகமாக ஈடுபட்டிருக்கவில்லை எனவும் மங்கலாக

ஏகத்துக்கும் தமிழலக்கிய மும்மூர்த்திகளைப் படித்துவிட்டுக் கிடைத்த தமிழ்ப்பூரிப்பு செம்பூரிப்பால் என்னுடைய தமிழ்மண்டை செம்மண்டை காய்ந்து விட்டதால் – இந்த மூளைக் கலக்கலில் நிஜமாகவே நடக்காதவைகளைக் கூட நான் அலாதியாகக் கற்பனை செய்து உங்களைக் கொல்கிறேனோ என பயமாக இருக்கிறது.

ஆனாலும்… ஐயகோ! :-(

இந்தப் பெருந்தேவி அம்மையார் இந்தமாதிரியெல்லாம் படுமோசமாக இருந்ததில்லை என நினைவு. இருந்தாலும் அவரவர்கள் கொஞ்சம் எழுதித் தாளித்த பிறகு, காலாகாலத்தில் சீரழிந்து உளறிக்கொட்டுவதும், காலப்போக்கில் அமோகமாக இளிப்பதும் தானே நம் தற்காலத் தமிழ் அலக்கிய உலகில் வழக்கம்?

இந்தத் தற்காலப் பொதுவிதிக்கு, ஒரு ஆசாமியாவது விதிவிலக்காக உளறா?

மேலும் ஏதோ வெள்ளைக்காரப் பல்கலைக்கழகத்தில் ஏதோ படிப்புவாசிப்பு என இந்த அம்மணி அலைபாய்ந்துகொண்டிருப்பதால் (இந்தச் செய்தி உண்மையா எனத் தெரியவில்லை, தவறாக இருந்தால், பழைய செய்தியாக இருந்தால் திருத்திக்கொள்கிறேன் – அவர் பாவம், தன்னுடைய பூர்வாசிரமத்தில் ஏதோ கழுதை கிழுதை பெண்ணியம் மொழிபெயர்ப்பு ட்ரியோட்ரியோவென ஓட்டிக் கொண்டிருந்ததாகத்தான் நினைவு) – அவருக்கு மேலதிகத் தகுதிகள் ஆட்டொமேடிக்காக வந்து ஒட்டிக்கொண்டுவிட்டன எனக் கருதுகிறார் போலும்!

…பிரச்சினை என்னவென்றால் — எனக்குச் சிலபல நண்பத் துரோகிகள் இருக்கிறார்கள். :-(

அவர்களுடைய வேலையே என் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க வைத்து என்னைக் கூடியவிரைவில் கைலாசத்துக்கு அனுப்புவதுதான்! அப்படி ஒரு பெருந்தகை, ~அக்டோபர் மாதத்தில் எனக்கு ஒரு பெருந்தேவிய வம்பின் படங்களை அனுப்பி – ஏதோ நான் தான் உலகத்திலேயே எல்லா விஷயங்களும் தெரிந்துகொண்டவன் போல – டேய், இப்படிச் சொல்லியிருக்கிறாரே, இது சரியா எனக் (கிண்டலாகத்தான்) கேட்டான்.

உடனேயே எனக்கு ஏகத்துக்கும் சிரிப்பு வந்து மாரடைப்பினால் இறந்துவிட்டு, உடனடியாக யேசுவைச் சரணடைந்தேன்.

அவரும் படுபிஸிதான்; ஆனால், அதனையும் மீறி, பாவம் பெண்களின் தலைமுடிகளையெல்லாம் வளர்ச்சிபெற வைக்கும் (‘வழுக்கை மண்டையர்களுக்கு முடி வளர்கிறது!“) அவர் என்னைப் புத்துயிர்ப்பிக்க மாட்டாரா என்ன?

ஆகவே.

-0-0-0–0-0-0-

எனக்கு வந்து சேர்ந்தன: பெருந்தேவி அவர்களின் ஃபேஸ்புக் பதிவு ஒன்றின் பகுதி ஸ்க்ரீன்ஷாட்கள் + அவற்றின் 14அக்டோபர், 2018 அன்று பதிப்பிக்கப்பட்ட சுட்டி. ஆனால் இவைகுறித்து எழுதவேண்டுமென்றால் எனக்கு முழுப்பதிவும், அதன் பின்புலமும் வேண்டுமே என இரண்டு நாட்கள் முன் கேட்டதற்கு – அந்தக் கணக்கோ கருத்தோ சுட்டியோ ஃபேஸ்புக்கில் இப்போது இல்லை எனக் கையை விரித்துவிட்டான்!

அம்மணி தன் கருத்தாக்கங்களை ஏறக்கட்டிவிட்டார் போலும், சரிதான். யாவரும் எங்கோ சௌக்கியத்துடனும் சகல சௌபாக்கியங்ளோடும் இருந்தால் சரியே! (இதைப் படிக்கும் ஃபேஸ்புக் வல்லுநர்கள் யாராவது, அப்படியில்லை, இதோ பெருந்தேவியக் காட்டுரை எனச் சுட்டிகொடுத்தால், ஆத்துமசுகமடைவேன்)

முதல் ஸ்க்ரீன்ஷாட்:

Perundevi

“சுயசாதி விமர்சனம், அதன் வாயிலாக சுயசாதிக்குச் செய்யும் துரோகம் சாதி ஒழிப்புக்கான வழி என்று பெரியாரிடம் கற்றிருக்கிறேன்.”

அம்மாடியோவ்! இப்படியா அட்ச்சிவுடுவார்கள்?

சிரத்தையும் இல்லை. படிப்பறிவும் இல்லை. மினுக்கல் மட்டும் ஏகத்துக்கும் இருக்கிறது. தேவையா?

இவர் பெரியாரின் எழுத்துகளைச் சர்வ நிச்சயமாகப் படிக்கவில்லை. ஏனெனில் நான், அவருடைய அனைத்து எழுத்துகளையும், கருத்துகளையும் (சிலவற்றை,என் மேலதிகப் புரிதலுக்காகப் பலமுறை) படித்திருக்கிறேன். என்னிடம் அவருடைய எழுத்துகளின் தொகுப்பு இருந்தது – மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியேறிவிட்டது.

உண்மை என்ன என்பதை என் நினைவிலிருந்து எழுதுகிறேன். இந்தப் பெரியார், அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்றுமுறை தன் சுயசாதியைக் குறித்து எழுதியிருக்கிறார்; அதையும் ஒரு பெரிய விமர்சனமாக எழுதவில்லை – வெறுமனே தன் சாதி – எப்படி பிராமணர்களின் சதியால், தம் முட்டாள்தனத்தால், மூட நம்பிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது என எழுதியிருக்கிறார். அவ்வளவுதான். வெறும் ‘செல்லமாக மண்டையில் லேசாக குட்டல்’ வகைதான்.

ஆனால், அவர் பிராமணர்களை ஏகத்துக்கும் திட்டி, அவர்கள் பெண்களை வேசிகள்/தேவடியாள் எனக் குறிப்பிட்டது மிகமிக அதிகம்; மேலும் அவர் பட்டியல் மக்கள் திரளான ‘தலித்’களையும் ஏகத்துக்கு ஏசியிருக்கிறார் – குறிப்பாகப் பெண்களை! ஆனால் பெருந்தேவியாருக்கு இதெல்லாம் கண்ணிலேயே படவில்லைபோலும்! பெரியாரின் கற்றல் என்பது காட்டுக்கத்தல் என்றால் பெரியாரிடமிருந்து கற்றல் என்பது, வெறும் நகைச்சுவைதான்.

அவருடைய ‘மரண ஸாஸனம்’ கூட்டத்துக்கு நான் நேரில் போய், பெரியாருடைய விடலைத்தனமான வெறுப்பியப் பேச்சைக் கேட்டிருக்கிறேன்கூட! டிஸெம்பர் 19, 1973 தி நகரில் நடந்த கூட்டத்தில் படுமோசமாகவும் விரசமாகவும் பேசினார் இந்த ஈவெராமசாமி – ஒரு எடுத்துக்காட்டு: “மலையாளிகளில் பெரும்பாலும் பார்ப்பானின் தேவடியாள்மகன் தான்!” இதனைக் குறித்து ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன்.)

அவர் ‘சுயசாதிக்குக்’ கண்டிப்பாக, சர்வ நிச்சயமாக, ‘துரோகம்‘ செய்யவில்லை. மன்னிக்கவும். பிற ஜாதிகளை அசிங்கம் மட்டுமே செய்தார். ஆனால் கவனமாக, பிற மதத்தவரை விமர்சிக்கவேயில்லை, துரோகம் செய்வதையே விடுங்கள்!

அவர் ஜாதிஒழிப்புக்காக உழைக்கவில்லை. ஒரு ஜாதி (=பிராமணர்கள்) ஒழிந்தால் போதும் என்றுதான் தீவிரமாகச் செயல்பட்டார். பட்டியல் இனத்தவரைக் குறித்துக் கேவலமான, ஜாதிமேட்டிமைத்தனமான எண்ணங்களில் இருந்தார். இவற்றுக்கெல்லாம் வேண்டுமளவு ஆவணரீதியான சான்றுகள் – அவருடைய தொகை நூல்களிலேயே உள்ளன.

பெரியார் தமிழகத்தில் மிகைமதிப்பீடு செய்யப்படும் நபர். அலப்பரை அராஜகவாதி. அதாவது, சராசரி திராவிடனுக்கு ஏற்ற மிகைசராசரித் தலைவர். நீர் தன் படுமட்டத்தை அடையும். நன்றி.

ஆனால் – பெரியாரின் சிஷ்யாயினிகளான பெருந்தேவிகள் ஏன் இப்படி அட்ச்சிவுடுகிறார்கள்?

  1. பெரியார் சொன்னார் அல்லது செய்தார் என்றால் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள் எனும் தெகிர்யம்.
  2. ஒரு மசுத்தையும் படிக்காமலேயே படித்தேன் என்று பாவலா காட்டும் திராவிடத்தன்மை
  3. ‘பெரியார்’ என்றாலே ஒரு பிம்பத்தைக் குறிக்கும் – ஆகவே இந்தத் தொழில்முறையில் உருவாக்கப்பட்ட பிம்பத்துக்குத் தோதாக எதைவேண்டுமானாலும் பினாத்தலாம் எனும் எண்ணம்.
  4. சுயஜாதிக்குத் ‘துரோகம்’ செய்வது எனும் கவைக்குதவாத கருத்தாக்கத்தை வைத்தால் தாம் உடனடியாக முற்போக்காகிவிடுவோம் எனும் கற்பனை
  5. பெண்ணியம் கிண்ணியம் எனவெல்லாம் வீரத்துடன் பேசவேண்டுமானால் ஆணாகிய பெரியாரிடம் நிபந்தனையற்றுச் சரணடைவது தமிழியல்பு என்பதை அறிந்துள்ளது
  6. பெரியார் என்று பேசினாலே பொதுவாக ‘விடுதலை’  தர பகுத்தறிவாள ஆசாமியாக அறியப்படுவோம் எனும் திராவிடமோஸ்தர் ஃபேஷன்
  7. இவை எல்லாவற்றையும் விட – அறியாமை, மேலோட்டமான அதிசராசரித்தனமான பார்வை, புளுகும்தன்மை — இருந்தாலும் நான் அறிவாளி/போராளி/சாம்பார்வாளி எனப் பிலுக்குவேன் எனும் அனுபூதி நிலை!

இவர் ஏன், தம்மை, எழவெடுத்த அலக்கிய மும்மூர்த்திகளின் தரத்துக்கு இறக்கிக்கொள்கிறார்? :-(

ஹ்ம்ம்…

எப்படியும் – இவர்கள்தாம் காத்திரமான ஆய்வாளர்கள், பெண்ணியர்கள், பெரியாரின் சிஷ்யாயினிகள் என்றால் – பாலியல் தயிரியியல் வெண்ணையியல் என ஏகோபித்துப் பினாத்துவார்கள் என்றால் – சர்வ நிச்சயமாக நமக்கு இவ்வகைகள் தேவையில்லை.

ஆகவே – உதிரிக் கலாச்சாரங்களுக்கு உவந்து உதவுபவர்கள், உலர்ந்து உதிர்ந்துபோவது மகிழ்ச்சியைத் தருவது.

இரண்டாம் ஸ்க்ரீன்ஷாட்:

“அவர்களின் முகமையை இந்தப் போராட்டம் அங்கீகரிக்கிறது” என்று எழுதுகிறார்.

என்ன எழவோ இந்த முகமை!

Agent என்பதற்கும் Agency என்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் அப்படியொரு மொழிபெயர்ப்பு உளறிக்கொட்டல். என்னருமை ஸாஹித்ய அகாடம்மியே தேவலாம்.

Agent என்பது, பொதுவாகவே – ஒரு அமைப்பு/ஆசாமி சார்பாக இன்னொரு அமைப்பு/ஆசாமி தன் மூஞ்சியைக் காட்டிக்கொள்ளுதல், முன்னவைகளின் சார்பாக விஷயங்களைச் செய்தல் என்ற பொருளில் உபயோகிக்கப்படுவது. agency என்பதும் வர்த்தகம்/மேலாண்மையியல் வழியாக அதே பொருளில் உபயோகப்படுத்தப் படுவது.

மேற்கண்ட agent எழவை, பொதுவாகச் செல்லமாக நம் தமிழில் ‘முகவர்’ என அழைப்போம். இன்னமும் கரடுமுரடாக, இது தொடர்புள்ள வர்த்தக/மேலாண்மை ரீதியான agency எழவு, முகமை என மூஞ்சிகளில் அப்பிக்கொள்ளப்படும் சாயக்களிம்பு (மன்னிக்கவும்) அர்த்தத்தில் உபயோகிக்கப்பட்டு திடுக்கிடலை வரவழைக்கிறது என்பதையும் மண்டையில் அடித்துக்கொண்டு நாம் அறிந்துள்ளோம்.

ஆனால், agency எனும் சொல், வசதியாக இந்தச் சமூகவியல், அரசியலியல், மானுடவியல், மண்ணாங்கட்டியியல் போன்ற துறைகளில், பின்நவீனத்துவயியல் எழவு சார்புடைய பின்புலங்களில் உபயோகப்படுத்தப்பட்டால், அதற்கு இன்னொரு பொருள் – அதாவது – குறிப்பிட்ட விளைவை ஏற்படுத்தக்கூடிய செயல்பாடு/தகுதி/விருப்பம் என்றெல்லாம் விரியும்.

அம்மணியார் இந்த agency எழவை, முகமை என வளமையாகப் பெயர்த்திருக்கிறார். இவர் எஸ்ரா-வின் உறவினரோ? ;-)

இப்படியே போனால் fly என்பதை பூச்சி என்று பெயர்த்து, ஆகவே flyover என்றால் பூச்சிமேலிமை எனவும் பெயர்த்துவிடுவார். எது வேர்ச்சொல் எப்படி அது விரிகிறது என்றெல்லாம் ஒரு ப்ரக்ஞையும் இல்லை. ஆங்கில வேர்ச்சொல், தமிழ் வேற்சொல் வகையறாக்களிலிருந்து நடைமுறைச் சொற்கள் எப்படி வளர்கின்றன – எப்படி அவை உபயோகிக்கப்படலாம் என்பவை குறித்து ஒரு மசுத்துக்கும் குவியம் இல்லை.

வெறும் சுளுக்கெழுத்தில் அப்படியொரு பாலியம் பாலிதீனியம் பார்த்தீனியம்! தேவையா?

என்ன படிப்போ, என்ன பெயர்ப்போ என்ன மசுத்துக்கு அலக்கியமோ…

-0-0-0-0-0-

ஹ்ம்ம்ம் – எல்லாம் சரி, ஏனிந்தத் தலைப்பு?

ஐயகோப் பெருந்தேவி எங்கே?

;-)

‘கோப்பெருந்தேவி எங்கே’ என (கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் வகையறா ‘சரித்திர நவீன’ பாணியைக் கிண்டலடித்த) ஒரு அழகான பகடி அத்தியாயக் கதை (மழநாட்டு மகுடம் எனும் வரலாற்றுத் தொடரின் பகுதியென) ஒன்று கணையாழியில் சுமார் 30/40 ஆண்டுகளுக்கு முன் வந்தது.

இன்றுநேற்று இது எங்காவது இணையத்தில் கிடைக்குமா எனத் தேடினால் – இந்த அழகான, ‘நகுபோலியன்’ என்ற ஒருவர் எழுதிய கதையினை, செயலூக்கம் மிக்க இளைஞர் ரங்கரத்தினம் கோபு அவர்கள், தன்னுடைய தளத்தில் தரவேற்றியிருக்கிறார்; ஆச்சரியம்தான், இது மறுபடியும் படிக்கக் கிடைத்த பாக்கியம்!

சகஏழரைகளே! இதனை அவசியம் படிக்கவும். நல்ல, தரமான நகைச்சுவை.  :-)

வெற்றுவேட்டரையர், நாட்டின் முதற்கிழவியாம் ராஜமாதா முதுகொங்கைப் பிராட்டி, இளவரசி ஸப்ரகூட மஞ்சரி… :-)

நன்றி கோபு! :-) நீங்கள் உருவாக்கினீர் என் நாளை. உருண்டு மேல் தரை சிரிக்கிறேன் என்னுடைய கழுதை அணை. நீங்கள் வைத்துக்கொண்டீர் என்னை பிரித்தல்களில். வயிறு வலிக்கிறது.

வெண்முரசு தொடர்ச்சியாகத் தொடர்ந்து, செயற்கைப் பேரிடராகப் பரிணாமம் கொள்ளும் சூட்சுமம் – நகுபோலியன் கிண்டலில்தான் இருக்கிறது. (இந்த மனிதர் வெண்முரசைப் பகடி செய்தால் அது (அதாவது, பகடி) எப்படி அற்புதமாக இருக்கும் எனும் சிந்தனையைத் தவிர்க்க முடியவில்லை.) :-)

நான் அந்தத் தலைப்பிலிருந்துதான் இந்தப் பதிவெழவின் தலைப்பைக் கொஞ்சமாக யுவகிருஷ்ணா செய்திருக்கிறேன். நன்றி.

6 Responses to “‘பெரியார்’ இங்கே… ஐயகோப் பெருந்தேவி எங்கே?”

  1. K.Muthuramakrishnan Says:

    //இவர் பெரியாரின் எழுத்துகளைச் சர்வ நிச்சயமாகப் படிக்கவில்லை.//
    இல்லை! படித்திருந்தாலும், கண்டுக்காமல் விட்டுவிட்டு, தான் நினைப்பதைப் பெரியார சொன்னார் என்றால் யாராவது கேள்வி கேட்கப்போகிறார்களா என்ன?


    • :-)

      ஹ்ம்ம்ம்…

      ஒன்றும் ஒத்துவரவில்லையென்றால் இருக்கவே இருக்கின்றன நான்கு ப்ரம்ஹாஸ்திரங்கள்:

      1. ‘தனிப்பட்ட முறையில் என் காதில் கிசுகிசுவெனச் சொன்னார்’
      2. ‘நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும் இதைப் பற்றி?’
      3. ‘நீ ஆணாதிக்க ஹிந்துத்துவ பார்ப்பனபனியன், ஆகவே உன்னை சட்டை செய்யமாட்டேன்!’
      4. மௌனம்.

  2. சேஷகிரி Says:

    இந்த அளவிற்கு ஈ.வே.ரா.வை பற்றி விவரமாக தெரிந்த நீங்கள் மற்ற தமிழ் கூவான்கள் போல் அவரை அதீதமாக “பெரியார்”(அந்த சொல்லுக்கே சற்றும் தகுதியில்லாத ஒருவரை) என்றே ஏன் எழுதுகிறீர்கள்?. இந்த வகையில் ஆசான் எவ்வளவோ மேல் எனக்குத் தெரிந்த வரை அவரை ஈ.வே.ரா. என்றே எழுதுகிறார்!.


    • ஐயா, இனிமேலிருந்து அவரை ஸ்ரீலஸ்ரீ பெரியார் என அழைக்கிறேன், சரியா?

      ஜெயமோகன் எங்கே நான் எங்கே, சொல்லுங்கள்? இப்படிப் பொருத்திப் பார்ப்பது தகுமா? அவர் மோகத்தை வென்றவர் அல்லவா? மனமாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டவரல்லவா?

      ஆனால் ஐயா – என் மோனியர்வில்லியம்ஸ் அகராதியில் என் கைக்கு வந்தபடி நான் எழுதலாம் என இருக்கிறது. தட்டச்சு செய்வதற்கு பெரியார் கொஞ்சம் சுலபம். ஆனால் அதற்காக மரியாதை என்றில்லை. பயப்படாதீர்கள்.

      இன்னொரு விஷயம்: இசுடாலிரைத் தளபதி என்று அழைக்கிறார்கள், அதைவிடவா ஈவெராவை பெரியார் என அழைப்பது அதிகப்படி கிண்டல்?

      மேலும் அந்த ஈவேராவுக்கும் இந்த ஈவேராவுக்கும் (ஈது வேறு ராமசாமி) கொஞ்சம் குழம்பிவிடும்.

      ஆகவே.


  3. […] பெருந்தெய்வங்கள் அனைத்தும், கவிதாயினி பெருந்தேவி போல மாபெரும்தெய்வங்களால் […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s