ஜெயமோகன் தள வதந்தி: ‘ஆர்கைவ் ‘archive.org’ தளம் இந்தியாவில் முடக்கம்’

February 14, 2018

என்னது? முடக்கமா?? சர்வ நிச்சயமாக இல்லவேயில்லை.

ஆனால் – ஜெயமோகன் அவர்களின் தளத்தில் ஒரு திருவாசகர் கடிதம் ‘ஆம்’ என்று சொல்லி சாண் நீளத்துக்கு (நல்லவேளை முழ நீளம் இல்லை!) ஒரு வெட்டிப் பிலாக்கண பிரமையை வைத்திருக்கிறது. சோகம். இது தேவையா?

வாசகர்கடிதமுதல்வாதிகள் (பெரும்பாலும்) அரைகுறைகள், பப்பரப்பாக்களைத் தேடியலைந்து போராட்டப்பேயாட்டங்களுக்கு ஏதுவான வதந்திகளைத் தர்மாவேஷத்துடன் பரப்புபவர்கள், சுயசிந்தனையற்றுச் சாமியேசரணச்சாமியாடும் தலையாட்டி அடிமைகள், அடிப்படை ஹோம்வர்க் என்பதன் பக்கம் தப்பித்தவறிக்கூடப் போகாதவர்கள் – ஆகவே பின்புலங்களைத் தெரிந்துகொள்ளாமல் மட்டையடி அடிப்பவர்கள் எனும் என் காமாலைக்கண் எண்ணத்தை – மறுபடியும் நிரூபணால் செய்ததற்கு திருவாசகர் ‘மது’ அவர்களுக்கு நன்றி. :-(

(ஜெயமோகன் தளத்தில் இந்தச் சோகத்தைப் படிக்கலாம்:  ஆர்கைவ் தளம் முடக்கம் – ஃபெப்ருவரி 10, 2018 அன்று பதிக்கப்பட்டது இது!

-0-0-0-0-0-0-

எவ்வளவோ அரைகுறைத்தனங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும்போது, பலப்பல காரியங்கள் காத்துக்கொண்டிருக்கும்போது – போயும்போயும் இந்த எழவைப் பற்றி ஏன் எழுதவேண்டும் என்றால், அதற்கு நான்கு காரணங்கள்:

அ. ஜெயமோகன் அவர்கள் தளத்தில் ஒருவிஷயம் வந்தால் அதனைப் பலர் படிக்கிறார்கள். நம்பகத் தன்மையுடையதாக நம்புகிறார்கள் (யாரிவர்கள் என ஏடாகூடமாகக் கேட்காதீர்கள், சரியா? ஆனால், அவருடைய சில கட்டுரைகள் காரணமாக அவருடனும் ஒத்துப்போகிறேன், மாதிரிக்கு, ஒரு அழகான, திருப்தியளிக்கும் கட்டுரை).

ஆக, ஒரு தவறான விஷயம் அதில் வந்தால், அவசியம் அதனைப் பொறுமையாகவும், தரவுகளுடனும், முடிந்தவரை பணிவாகவும் சுட்டிக்காட்டவேண்டும். இந்தியா குறித்த பொய்ச்செய்திகளை சிரமேற்றிக்கொண்டு சுளுவாகப் பரப்புபவர்களுக்கு, வதந்திவாந்தியாளர்களுக்குத் தக்க பதில், தரவுகளின் மேற்பட்டுக் கொடுக்கப்படவேண்டும். மேலும், ஜெயமோகன் அவர்களுக்கு இவை குறித்தெல்லாம் மின்னஞ்சல் எழுதினால் அவர் அதனை படிக்க நேரம் இருக்குமா, அப்படியே படித்தாலும் அவர் பதிப்பிப்பாரா என்பதெல்லாம் கேள்வித்தற்குறிகள். அவருக்கு ஆயிரம் பிறவேலைகள் இருக்கின்றன, ஒப்புக்கொள்கிறேன்.

ஆ. பலப்பல வருடங்களாக நான் இந்த ஆர்கைவ் காப்பகத் தளத்தில் இருந்து பலவிஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். #நெகிழ்வாலஜிடா!

ஆக பலமுறை நேரடியாகவும் மறைமுகமாகவும் (என் நண்பர்கள் மூலமாக) முடிந்தபோதெல்லாம் சிறிய அளவிலும் பெரிய அளவிலும் பணம் அனுப்பியிருக்கிறேன். ஏன், மூன்று வாரங்களுக்கு முன்புகூட ஒரு சிறியதொகைஅனுப்பினேன். ஏனெனில் அது என் கடமை. அது ஒரு பொக்கிஷம். போஷகம் செய்யப்படவேண்டிய விஷயம். (என்னுடையதெல்லாம் அற்ப விஷயங்கள் – இதெல்லாம் ஒரு பெரிய மசுறில்லை என்றாலும் சொல்கிறேன், ஏனெனில் ஆர்கைவ் தளத்தின்மீது எனக்கு கடும் விமர்சனங்களும் இருக்கின்றன. ஏனெனில் –அணைக்கிற கைதான் அடிக்கும்.)

இ. பிரச்சினை என்னவென்றால் – காப்பகத்தில் மட்டுறுத்தல் என்பது இல்லவேயில்லை. காரணங்கள்: அவர்கள் நல்லமனம் கொண்டவர்கள் + அவர்களிடம் மட்டுறுத்தலுக்காக ஒரு மனிதக்கூட்டத்தை அவர்கள் சார்பாக மேய்க்கத் தெம்பில்லை. அதனால் குறைந்த பட்சம் மூன்று முறைகள் இந்தத் தளத்தில் படுமோசமான இஸ்லாமியத் தீவிரவாதமும் இந்தியஒழிப்புவெறியும் பிரச்சாரமும் (தமிழிலும் மலையாளத்திலும் கூட) நடந்தபோது – அதனைப் பற்றி அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை (அல்லது விருப்பமில்லை) – நான் இரண்டுமுறை அவர்களுக்கு இதுகுறித்து எழுதியும் நண்பர்கள் மூலமாகத் தொடர்புகொண்டும் ஒன்றும் நகராததால் – நானும் என் சில நண்பர்களும் இந்திய அரசுக்குக் கடிதம் எழுதினோம். விண்ணப்பம் (skybread ©எஸ்ரா, 2018) வைத்தோம். இதன் காரணமாக (எனச் சொல்லிக்கொள்ள ஆசை) அல்லது பிறரின் காரணமாகவோஅல்லது இந்திய அரசின் நேரடிச் செயல்பாடுகளலாலோ, இத்தளம் குறைந்த பட்சம் ஒருமுறையாவது மட்டுறுத்தல் செய்யப்பட்டது. இது 2009ல் ஆனது என நினைவு. 2008 மும்பய் வெடிகுண்டுச் சம்பவங்களுக்குப் பின் அநியாய ஜிஹாத் பிரச்சாரத்தைக் குறித்து எழுப்பப்பட்ட விஷயம். அதுவும் இரண்டே நாட்களில் சரிசெய்யப் பட்டது.

ஈ. உலகமக்கள் அனைவரும் பொறுப்புணர்வுடனும், நல்ல மனதுடனும் நடந்துகொண்டால் அதுவும் எல்லோருக்கும் படிப்பறிவு வாய்த்து அவர்களால் தர்க்கரீதியாகவும் கனிவுடனும் சிந்திக்கக்கூடுமென்றால் – மட்டுறுத்தல் என்பதற்கு அவசியமில்லை. ஆனால் இது, உலகமே கஞ்சாமயமாக ஆகும்போதுதான் சித்திக்கும். ஆக, நான் ஸென்ஸார்ஷிப் விஷயங்களுக்குப் பொதுவாகவே அவற்றின் அவசியத்தைக் கருதி ஆதரவளிப்பவன். அவற்றை அர்த்தத்துடனும், மானுடத்தின்மீதான கரிசனத்துடனும், இந்தியமதச்சார்பின்மை உளறாலாளர்களிருந்து இந்தியாவைக் காப்பாற்றவும் உபயோகிக்கவேண்டிய தேவையை உணர்ந்தவன் – நான் மட்டற்ற, மட்டமான கருத்துதிர்ப்புகளுக்கு ஒத்துவராதவன்கூட. (ஆக, சமயங்களில், எனக்கு நானே ஒத்துவரமாட்டேன் என்பது ஒரு இயல்பான விஷயம்)

…இந்த ரீதியில், என் சில கடிதங்களை கடந்தகாலங்களில் ஜெயமோகன் பதிக்காததையும் ஏற்றுக் கொள்கிறேன். அது அவர் தளம். அவருடைய கருத்து. அவருடைய ஸென்ஸார்ஷிப் அவருடைய சுதந்திரம். ஆகவே.

மேலும், நானும் சிலபல பின்னூட்டங்களைப் பதிப்பதில்லை. இதற்கு முக்கியமான காரணம் திராவிடலைகள் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. ஆகவேயும்

-0-0-0-0-

சரி விஷயத்துக்கு வருவோம்.

சர்வசுதந்திரமாகக் கரித்துக்கொட்டுவது – அடிப்படை விஷயங்கள் புரிபடாவிட்டாலும் எப்படியேனும் தம் மேதாவிலாசத்தைக் காண்பித்துக்கொள்வது போன்ற அடிப்படை மானுட இயல்புகளை ஒப்புக்கொள்ள முடியாவிட்டாலும் – பொதுவாக மதிக்கப்படும் ஒரு பிரபலஸ்தருக்கு எழுதும்போது இயல்பாக ஏற்படும் மகாமகோ இணையப் போராளித்தனத்தை அரைமனதுடன் ஒப்புக்கொள்வேன், ஆனால் அதற்குமேகூட தேவையான ஹோம்வர்க் செய்யவேண்டுமல்லவா, அய்யன்மீர்?

அய்யா ‘மது’ சுளுவாகப் பொங்கியிருக்கும் விஷயம் அடிப்படையில் ஒரு பொய். ஏன்?

வலைத் தளங்களை, ஒர் அரசு முடக்குவது அவ்வளவு சுளுவில்லை; முதலில் ஒரு விஷயம்: எந்த தளத்தையும் இந்தியஅரசு (ஏன், எந்த அரசுமேகூட) நினைத்தால், டமாலென்று முடக்க முடியாது. அத்தளத்தினை நேரடியாக நுகர்வோர் அணுகுவதைக் கொஞ்சம் மட்டுறுத்த முடியும். அந்த நுகர்வோர்களுக்கு ஓரளவுக்கு தொழில் நுட்ப அறிவு இருந்தால் (அதாவது அவர்கள் சராசரி தமிழ்வாசகராக, வாசகர்கடிதமுதல்வாதியாக இல்லாமலிருந்தால்) அவர்களால் அந்த மட்டுறுத்தல்களை மீறவும் முடியும். நன்றி.

இப்படி மட்டுறுத்தல் செய்வதற்கும் (= இந்தியாவிலிருந்து ஒருவரும் ஒரு சர்ச்சைக்குள்ளான இணையதளத்தை அணுகமுடியக்கூடாது) பலப்பல படிகளினூடே நடக்கவேண்டிய அத்தியாவசியம் இருக்கிறது. (அதே சமயம் வலைத்தளங்களைப் பலவழிகளில், ஒரு குழுபோல இயங்கும் வேலையற்ற க்ரேக்கர்கள் (crackers, they are not hackers) முடக்கமுடியும். எடுத்துக்காட்டாக: இதில் ஒருவழி DDoS என்பது. பலபேர் பலதிசைகளிலிருந்தும் தொடர்ந்து கோரிக்கை வைத்து ஸர்வர்களைச் சுந்தரமாகப் படுக்கவைத்துவிடும் வேலை.

மேலும் இந்தத் தகவல்தொழில்நுட்பங்கள் தொடர்பான விதிகளும் நடைமுறைகளும் பாரதத்தில் இன்னமும் முதிர்ச்சியடையவில்லை. அரசுச் சட்டகங்கள், DoT, பொலீஸ்/ரகசியப் பிரிவினரின் தேவைகள், ‘கருத்துச் சுதந்திர’க் கொடிபிடிப்போர், அவதூறுவழக்கு முதல்வாதிகள், வக்கிர/பொய்வாத இணையக் கேனையர்கள் இவர்களுடன் இந்திய உச்ச நீதிமன்றமும் பிற நீதிசார் அமைப்புகளும் சேர்ந்து ஒரே அவியல் கொண்டாட்டம் – இவை அனைத்தையும் ஒருங்கிணைத்துத்தான் நாம் முன்னேறவேண்டும். (ஆனால் தற்போதைய மத்திய அரசு ஒருங்கிணைப்புக்கான சட்டகங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது என்பதையும் அறிவேன்)

என்ன சொல்லவருகிறேனென்றால் – – நம் அரசைப் பொறுத்தவரை., ரகசியமாக எழவாக என்றெல்லாம் இம்மாதிரி அற்ப விஷயங்களைச் செய்யவேண்டிய அவசியமும் கிடையாது – செய்யவும் சுளுவில்லை.

-0-0-0-0-0-

சரி, இப்போது நம்முடைய செல்ல மதுஸ்மிரிதி (மதுநிந்தனை?) பப்பரப்பா பக்கம் வருவோம். :-(

//ஆர்கைவ் தளம் (www.archive.org) TRAI உத்தரவின் படி பல இடங்களில் முடக்கப்பட்டிருக்கிறது.

இல்லை. TRAI அமைப்புக்கு, இதனைச் செய்ய முடியாது. பொருந்தப் பரப்பவேண்டும் வதந்திகளை. CERT-In என்றவொரு அமைப்பு (2003-4 வாக்கில் கட்டமைக்கப்பட்டது) – இந்த Indian Computer Emergency Response Team அமைப்புக்குத்தான் இதனைச் செய்யமுடியும். நன்றி.

இப்படித் தீவிரமாகச் சொல்லும் திருவாசகர் மதுவார், ஏதாவது சுட்டி கிட்டி இருந்தால் கொடுக்கலாம்.

//சென்ற ஆண்டு முடக்கப்பட்டு இணைய செயல்பாட்டாளர்களின் முயற்சியால் தடை நீக்கப்பட்டது. இப்போது மீண்டும் ரகசியமாக தடை செய்திருக்கிறார்கள்.

இணைய செயல்பாட்டாளர்களாமே? இதென்னடா oxymoron! அதென்னடா ரகசியம்? அப்படியே ரகசியமாகத் தடை செய்தாலும் அது வெட்டவெளிச்சமாகவேண்டுமே! அப்படி இல்லையே!

ரகசியபோலீஸ்115 எம்ஜிஆர் படங்களைப் பார்த்துவிட்டு கொஞ்சம் தலைக்கேறி விட்டதோ?

கருத்துப்படம்: திருவாசகர் ‘மது’ கையில் டுப்பாக்கியுடன் டுப்பார்க்குட் டுப்பாயட் டுப்பாக்கிட் டூவ வினையுடன் காத்துக்கொண்டிருக்கிறார். ஜாக்கிரதை! இடக்கைப் பெட்டியில், படு ரகசியமான ஆர்கைவ் தள முடக்குவாத ஆவணங்கள் இருக்கின்றன. அவருக்குப் பின்னால் தளத்தை முடக்கி கதவைத் தாளிட்டு ஸீல் வைத்திருக்கிறார்கள், பாவி TRAI ஆசாமிகள்! :-(

// இது மிகவும் அபாயகரமானது.

அய்யா! அப்படியா? ;-)

// ஒரு ஜனநாயக அரசுக்கு இதைச் செய்ய, அதுவும் திருட்டுத்தனமாக செய்ய எந்த அனுமதியும் இல்லை. தீவிரவாதம் பொதுநலன் என்று எந்த காரணம் சொன்னாலும் இது ஒரு பிற்போக்குதனமே.

ஆனால் நீங்கள் பிற்போக்குதனம் என்று ஒற்றெழுத்தில்லாமல் எழுதி மாய்வது றொம்பறொம்ப முர்பேக்குதனமா?

நீங்கள் ஆதாரமேயில்லாமல் எழுதும் விஷயங்கள் எல்லாம் மிகமிகமிக முற்போக்குதனம். மன்னிகவும். ஒறெழுத்து விட்டுபோய்விட்டது.

எது எப்படியோ – மத்திய பாஜக அரசு பற்றி அபாண்டம் சொல்வதற்கு பொதுவாகவே தரம், அடிப்படை அறிவு என ஒரு பிரச்சினையும் இருக்கவேண்டிய அவசியமில்லை, அல்லவா?

// வாசகர்களுக்கு தெரிந்திருக்கலாம்-

இப்படி எழுதுவதே – ‘டேய், வொங்க்ளுக்கு இத்தெல்லாம் பிர்யாதுதாடா, அத்தாண்டா வொங்க்ளுக்கு மண்டேல அட்ச்சிக்கினு பெர்யமன்ஶத்தனம்ம் பெர்யமன்ஸு பண்ணீ ஸொல்றேன்!‘ காரணத்துக்குத்தான்.

ஆனால் அய்யா, உண்மைதான். உங்களுக்கு நிறைய்ய்ய்ய்ய விஷயம் தெரிந்திருக்கிறது. கடுமையாக உழையோவுழை எனவுழைக்கிறீர்கள். கொஞ்சம் கற்பனை வளமும் அதிகமாகவே இருக்கிறது, என்ன செய்வது சொல்லுங்கள்! :-(

// இதில் ஏதாவது பிரச்சனையான ஆவணங்கள் இருந்தாலும் அதை தனியாக தீர்க்கவேண்டுமே தவிர இப்படி மொத்தமாக சென்சார் செய்வது அட்டூழியம்.

அய்யா, அப்படிச் செய்தால் ‘கட்டப் பஞ்சாயத்து’ என்பீர்கள். ஆகவே உங்களுடைய ‘ஒட்டுமொத்த ஸென்ஸார்’ கற்பனை ஒரு நல்ல சதிவலைத்திட்ட இல்லுமினேட்டி கம்மினேட்டி வகை அவல். மெல்வதற்கும் பொங்குவதற்கும் தோதானது, நமக்கு வேறென்ன வேண்டும் சொல்லுங்கள்?

// இந்திய அரசு இன்னும் ஜமீந்தார்கள் கையிலிருந்தும் பொலிட்பீரோக்கள் கையிலும் தான் இன்னும் இருக்கிறது போல நடந்துகொள்கிறது

அய்யா, ஜமீந்தார்கள்?  சரி – எழவை  மண்டையில் அடித்துக்கொண்டு மேலோட்டமாக ஒப்புக்கொள்ளலாம். ஆனால், பொலிட்பீரோக்கள் எல்லாம்? அவர்களிடமா ‘இன்னும்’ அரசு  இருக்கிறது? அவர்களிடம் எப்போதாவது இருந்ததா? அல்லது நேருவகை இந்திராவகை அமுக்கிவாசித்தல்களையும் காட்ரெஜ் பீரோக்களையும் போட்டு ஒருசேர குழப்பிக்கொண்டுவிட்டீர்களா?

// இந்த இணைய யுகத்தில் தகவல் உரிமை என்பதே பெரிய உரிமை. பகிர்தலும் கூட்டுச்செயல்பாடும் மக்கள் இயக்கங்கள். அதற்கு எதிரான இந்திய அரசின் அடக்குமுறை கண்டிக்கப்படவேண்டும்.

அடக்குமுறையா, இடக்குமுறையா? பகிர்தல் சரி, ஆனால் இப்படியாப்பட்ட பகீர்தல்களையாவது கொஞ்சம் சுயமட்டுறுத்தல் செய்துகொள்ளலாமல்லவா? :-(

// உங்கள் குரலை பதிவு செய்யவேண்டுகிறேன்.

!! இந்த திருவாசக எழவுக் கடிதக்கந்தறகோளத்தை ஜெயமோகன் அவர்கள் பதிப்பித்து விட்டார். ஆகவே, மது அவர்களின் அநியாய (தெரியாமல் அறியாமையின் பாற்பட்டு இப்படிச் செய்திருந்தாலும் – இது குறைந்த பட்சம், வடிகட்டிய அரைவேக்காட்டுத் தனம்தான்!) அவதூறுக்கு ஒப்புதல் கொடுத்து தன்னுடைய குரலைப் பதிவு செய்ததுபோலத்தானே ஆகிறது.

ஜெயமோகன் அவர்களுக்கு இது தேவையா? :-(

Or, was it a momentary lapse of reason? :-((

-0-0-0-0-0-

என்னுடைய பையன்கள் – ராஜஸ்தான், தமிழ்நாடு, சத்தீஸ்கட், தெலெங்கானா, மிஸொரம் மாநிலங்களில் இருக்கிறார்கள் – ஒவ்வொன்றிலும் இரு வெவ்வேறு மாவட்டங்களில். இவர்களில் ஒருவருக்குக் கூட ஒரு விதமான ஸென்ஸார்ஷிப் பிரச்சினையும் இல்லை. அனைவருக்கும் அமோகமாக ஆர்கைவ் தளத்தை அடைந்து தரவிரக்கங்களைச் செய்யமுடிந்தது.

சரி. கடந்த மூன்று நாட்களில் மூன்று இடங்களில் இருந்து ஆர்கைவ் தளத்தைப் பரிசோதனை செய்தேன். அதாவது எந்தெந்த நாடுகளிலெல்லாம் இது தடை செய்யப்பட்டுள்ளது என்று.

அதாவது – நான் முறையே பெங்களூர், மும்பய், தில்லி நகரங்களில் இருந்து ஆர்கைவ் தளத்தை ஆனந்தமாக அணுகினேன். எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை.

அணுகுமுறை: சுமார் 110 நாடுகளில் வெளியாட்களுக்கு, இணையம் மூலமாக (Web-வெப் அல்ல, இது Internet-இன்டர்னெட்) ஓரளவு அணுகமுடியும் ஸர்வர்களிலிருந்து, இந்த ஆர்கைவ் தளத்தை அடைய முடியுமா எனப் பார்த்தல். அதாவது இந்தியா என்றால் தில்லி, மும்பய் என ஜாபிதா விரியும். இம்மாதிரி சர்வர்களிலிருந்து இணையம் வழியாக ஆர்கைவ் தளத்தை அடைந்து அதிலிருந்து அதன் ஃபைல்களை அந்தந்த நாடுகளில்/நகரங்களில் பெற முடியுமா எனப் பார்ப்பது. (நம்முலகில் சுமார் 200 தேசங்களில் இன்டர்னெட் இருக்கிறது – ஆனால் என்னால் முடிந்தது இவ்வளவு – சுமார் 110 தேசங்களில் தான்)

படங்களில் முழு ஜாபிதாவைக் கொடுக்கவில்லை. அது ரொம்ப நீளம்.

கீழ்கண்ட படம் – பெங்களூரிலிருந்து 11-2-2018 அன்று செய்த முயற்சியின் ஒரு பாகம். பெங்களூரில் இருந்து ஆர்கைவ் தளம் ஆஹா தான்! ஒரு பிரச்சினையும் இல்லை. (ஆனால் இவ்வுலகில் உள்ள அனைத்து நாடுகளில் – சீனாவும் வடகொரியாவும் சிலபல அரேபிய நாடுகள் மட்டும்தான் ஆர்கைவ் தளத்தை அனுமதிக்கவில்லை; யாராவது என்ராம், மாலினி, மாவோயிஸ்ட்களிடம் சொல்லி – சீனாவில் மனிதவுரிமைகூட வேண்டாம், இணையவுரிமையையாவது அளிக்கக்கூடாதா எனக் கேட்கச் சொல்லவும், நன்றி!)

 

கீழே உள்ள படம் – மும்பயிலிருந்து 80கிமீ தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 12-2-2018 அன்று எடுத்த முயற்சி. இதிலும் சீனா பிரச்சினை. அவ்வளவுதான்.

கீழே இன்று 13-2-2018 அதிகாலையில் தில்லி நகரில் இருந்து எடுக்கப்பட்ட விவரம். பச்சை நிற அடிக்கோடிட்டவை பாரதம் சார்ந்தவை.

-0-0-0-0-0-

ஆர்கைவ் தளத்தில் ஒரு முடிக்குக் கூடப் பிரச்சினையும்,  இல்லை. முடக்கமோ மட்டுறுத்தலோ கூட இல்லை!

திருவாசகர் ஏனிப்படிச் செய்தார் என எனக்கு விளங்கவில்லை. திரியாவரம் இல்லாமல் — வெறும் சோம்பேறித்தனத்தாலும், சரிபார்க்கும் திறமை இல்லாததாலும், பப்பரப்பா செய்திகளைத் திரித்து உடனுக்குடன் அதனை விளம்பரப்படுத்தி அதனால் புளகாங்கிதமடைபவராக இவர் இருக்கக்கூடும் என நம்பவே ஆசை.

-0-0-0-0-0-

ஒருவேளை மது அவர்கள் ரகசியபொலீஸாகவும் இல்லுமினேட்டிக்காரராகவும் இருப்பதினால் TRAI ஆசாமிகள் ரகசியமாக அவருடைய இணைய இணைப்பை அவ்வப்போது தடையும் தணிக்கையும செய்கிறார்கள் என நினைக்கிறேன்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

கடைசிச் செய்தி!

ஆ! அவசரம்! அய்யய்யோ!!

பாவி TRAIகாரர்கள் என்னுடைய தளத்தையே முடக்கி விட்டார்கள், இந்த அவலத்தைக் கேட்பாரே இல்லையா?

நீங்கள் இப்போது இந்த ஒத்திசைவு தளத்திலிருந்து இந்தக் காட்டுரையைப் படிக்கவில்லை! இது வேறேங்கேயோ இருந்து தரவிரக்கம் செய்யப்பட்டது. இது என்னவோ சாத்தான் ஜின்னு TRAI வேலை.

தகவல் உரிமை, பகிர்தல், கூட்டுச் செயல்பாடு, பொறியல் கூப்பாடு, சாம்பார் சதி, மக்கள் முயக்கங்கள்… இவற்றுக்கெதிரான இந்திய அரசின் அடக்குமுறையை ஆணிவேருடன் அறுத்தெறிவோம்!

என்ன அவலம்!

வலம் என்றால் இடம். ஆகவே இது இடதுசாரிகளின் சதியோ??

சாரி.

:-(

கம்பர் காலத்தில் வாசகர் கடிதம்

20/07/2017

வாசகர் கடிதம் – புத்தம்புதிய காப்பி, செம்பதிப்பு*

06/08/2017

பத்தே நிமிடங்களில் சுயமுன்னேற்றம் அடைவது எப்படி

23/07/2017

17/07/2017

 

7 Responses to “ஜெயமோகன் தள வதந்தி: ‘ஆர்கைவ் ‘archive.org’ தளம் இந்தியாவில் முடக்கம்’”

  1. A.Seshagiri Says:

    ஜெயமோகன் அவர்களின் கருத்து செறிவுமிக்க தளத்தில் இந்த மாதிரி அபத்த செய்திகள் வருவதை கண்டு அதன் உண்மைகளை கண்டறிய மேற்பட்ட உங்களின் இத்தகைய முனைப்பும் அதற்கான கடின உழைப்பும் மிகவும் பாராட்டதக்கது!.இந்த செய்தி வந்த அன்று அந்த தளத்தை சோதனைக்கு சென்று பார்த்தேன்.என்னால் அணுக முடிந்தது. ஆனால் இந்த விஷயத்தில் உங்களை போன்று இது பற்றிய அறிவும்,வசதிகளும் எனக்கு இல்லாததால் வேறு எங்காவது முடக்கியிருப்பார்கள் என நினைத்து வாளாயிருந்துவிட்டேன். உங்களுக்கு நன்றி !

  2. மதுசூதனன் Says:

    திரு சேஷகிரி – ஒத்திசைவு சார் சொல்வதை அப்படியே வேதவாக்காக எடுத்து கொள்ள வேண்டாம். அவரது அரசியல் பதட்டங்கள் தெளிவாக தெரிகின்றன. இப்போது மட்டுமல்ல, 2017ல் பல இடங்களில் தளம் முடக்கப்பட்டுள்ளது. https://www.medianama.com/2017/08/223-india-blocks-access-internet-archive-wayback-machine/


    • மது அவர்களின் சூதினைப் புரிந்துகொள்வீர். ஓன்றும் தெரியாமல் அறிவிலியாக இருப்பது பிரச்சினையில்லை. ஆனால் டன்னிங்க்ரூகராகத்தான் இருப்பேன் என்றால்?

      நேரடியான, ஆணித்தரமான தரவுகள் தேவை. நான் கொடுத்தேன். அவர் (அதே மதுதானா இது?) பப்பரப்பா தள அரைகுறைத்தனத்தை – அவர்கள் சொல்கிறார்கள் இவர்கள் சொல்கிறார்கள் என, போன வருடப் புரளியைக் கொண்டு வருகிறார்.

      ஆனாலும், திருவாசகருக்கு ஜெயமோகன் அவர்களும் உருகத்தானே வேண்டும்.

      சலிப்பாக இருக்கிறது. மற்றபடி அரசியல் ரீதியான பதட்டம் ஒன்றுமில்லை.

      எது எப்படியோ – நல்லவேளை, பொதுவாகவே இதுவரைஅரைகுறைகள் என்னை நேரடியாகத் தொடர்பு கொள்வதில்லை. ஆனால் இப்போது?

    • A.Seshagiri Says:

      திரு.மதுசூதன் அவர்களுக்கு,
      நீங்கள் முன்பு ஜெயமோகன் அவர்கள் தளத்தில் எழுதியதையோ அல்லது ஒத்திசைவுசார் சொல்லுவதையோ,ஏன் நீங்கள் இப்போது கொடுத்திருக்கும் ‘விளக்கத்தையோ’ வேதவாக்காக என்றும் எடுத்துக்கொண்டதில்லை. (:-)
      உதாரணத்திற்கு உங்கள் விளக்கத்தில் கொடுத்த சுட்டியின் மூலம் ‘MEDIANAMA’ தளத்தில் Nikhil Phawa அவர்கள் எழுதிய கட்டுரையை படித்தேன்.அதில் ஆர்கைவ் ‘archive.org’ தளம் முடக்கப்பட்டதை பற்றிய சில விவரங்கள் இருந்தாலும்(அது போதுமானதாக இல்லை என்பது என் எண்ணம் ) அதன் பின்னூட்டத்திலேயே மிகப் பெரும்பாலோர் அன்றைய தினங்களில் அத்தளம் செயல்படுவதாகவே குறிப்பிட்டுள்ளனர்.எனவே இதில் நீங்கள் ‘இந்திய அரசின் அடக்குமுறை’அப்படி, இப்படியென்று ‘பொங்கியது’,ஒத்திசைவுசாரின் இந்த மறுப்புக்கட்டுரையை படித்தபின் எனக்கு ஏற்புடையதாக இல்லை! :-)

  3. Sachidanandam Says:

    ஒரு முறை ஜெயமோகன் அவர்கள் மாட்டிறைச்சி பன்றி இறைச்சி மற்றும் கள் பற்றி அவரது தளத்தில் விலாவாரியான விளக்கத்தை படித்ததில் எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது எனவே அறிந்ததில் இருந்து விடுதலை (freedom from the known)என்று ஜே.கிருஷ்னமூர்த்தி சொல்லியிருப்பதால் இனி புதிதாக அறியப்போவதிலிருந்தும் நாம் எப்படி தப்பிக்க வேண்டும் என்று சிந்தித்து பார்ததில்.ஜெயமோகன் தளத்திற்கு செல்வதில்லை.


  4. […] பின்புலம்: ஜெயமோகன் தள வதந்தி: ‘ஆர்கைவ் ‘archive.org’ த… 14/02/2018 […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s