விஜய்தான் ‘பிஜ்ஜி’ தேதா, ராஜஸ்தானி இலக்கியக்காரர் – சில குறிப்புகள்

November 13, 2017

நான் கொடுத்து வைத்தவன், வேறென்ன சொல்ல. ஒரு வெகுசாதாரணனாகிய எனக்கு, வாழ்க்கை கொடுத்துள்ள வாய்ப்புகள் அதிகம். மகமகோ பிஜ்ஜி அவர்களின் கதைகள் அவற்றில் ஒரு பகுதி. :-)

ஏனெனில், நம்மால் (= அதாவது தமிழ் இலக்கியம்(!) பற்றிக் கொஞ்சமேனும் பரிச்சயம் உள்ளவர்கள்) புரிந்துகொள்ளும்படி சொல்லவேண்டுமானால் :

பிஜ்ஜி‘  அவர்கள் = (புதுமைப்பித்தன்)புதுமைப்பித்தன் அல்லது (சுந்தரராமசாமி)திஜானகிராமன்

அவ்வளவு நேரடியான, நேர்மையான அழகுணர்ச்சி ததும்பும் + அங்கதச் சுவையும் கூட்டி மெருகூட்டப்பட்ட தரமான கதைகள்.

தணித்து வெளிப்படுத்தப்பட்ட மிகையற்ற, உள்ளார்ந்த தர்மாவேசம். வேஷமில்லாத நெருடாத, கதை மாந்தரைப் பின் தொடரும் எழுத்தாளனின் ஆழமான கம்பீரமான, ஆளுமை.

-0-0-0-0-0-

கடந்த சில நாட்களாக பிஜ்ஜி அவர்களின் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கதைகளை கொஞ்சம் போலத் திருத்தமும், படி சரிபார்த்தலும் செய்துகொண்டிருக்கிறேன். பலமுறை இம்மாதிரி பிரதி சரி பார்க்கும், எடிட்டிங் இழவுகளில் தன்னிச்சையாக மாட்டி முழித்துக்கொண்டிருக்கும் பாக்கியமுள்ள :-( எனக்கு – இந்தமுறை ஒரு ஆச்சரியம். இரண்டுமூன்றுமுறை படித்தாலும் அடங்காக அழகுடையவையாக மிளிர்கின்றன இவர் கதைகள். இத்தனைக்கும் இவற்றைப் படித்தது ஆங்கிலத்தில்…

மொழிபெயர்ப்பாளர் ஒரு அதிபுத்திசாலியும், நிறைகுடமாகவும்தான் இருக்கவேண்டும். அவரை மானசீகமாகக் கட்டிக்கொண்டு நெற்றியில் ஒரு முத்தம் கொடுக்கிறேன். May her tribe increase! (நம் செல்லத் தமிழில், மொழிபெயர்ப்பாளர்கள் பெரும்பாலும் ஏகோபித்த முழிபெயர்ப்பாளர்களே – இந்தப் பொதுத் தலைவிதிக்கு, எனக்குத் தெரிந்தவரை ஒரிரு விதிவிலக்குகளே இருக்கின்றனர்)

இந்த பிஜ்ஜி அவர்களின் புத்தகங்கள் (ஆங்கில மொழிபெயர்ப்புகள்) அமேஸான் தளத்தில் கிடைக்கின்றன. அவசியம் வாங்கிப் படிக்கவும்.

ராஜஸ்தானியில் மட்டும்தான் எழுதுவேன் எனப் பிடிவாதம் பிடிக்கும் – பிஜ்ஜி அவர்களுக்கு நொபெல் பரிசு கிடைக்கவெல்லாம் சாத்தியக்கூறுகள் இருந்திருக்கின்றன. சர்வ நிச்சயமாக இவருக்குக் கிடைக்கவேண்டிய மரியாதைதான் இது.

சமயம் கிடைக்கும்போது இவரைப் பற்றி மேலதிகமாக எழுதவேண்டும். ஒரிரு சிறு தவறுகள் இருந்தாலும் – பிஜ்ஜி அவர்களின் இந்த விக்கிபீடியப் பக்கம் பொறுத்துக்கொள்ளும்படியாகவே இருக்கிறது. பொய்யில்லை. மிகையில்லை.

பின்குறிப்பு: ஒவ்வொருமுறை இப்படியாப்பட்ட பிறமொழி இலக்கியங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எனக்குச் சுயபச்சாத்தாபமே மிஞ்சும். ஏன் இம்மாதிரி தரத்தில் எழுத யாருக்கும் முனைப்பில்லை? ஏன் குண்டுசட்டிகளில் கழுதை ஓட்டிக்கொண்டு காலட்சேபம் செய்துகொண்டிருக்கிறோம்? ஏன் அதிகபட்சம் 1000 பேர் படித்தாலே அது பெரும் இலக்கியம் என முத்திரை குத்தப்படவேண்டும்? தற்கால இலக்கிய வாதிகளில் ஏன் ஒரிருவர்கூட இப்படியில்லை? ஏனெனில் – பெரும்பாலும் அவசர கோலத்தில் அட்ச்சுவுடப்பட்ட எழுத்துகளின் வெள்ளங்களாலும், உழைக்க வக்கில்லாத அரைகுறைகளாலும் அரைவேக்காடுகளாலும் நிரவப்பட்டுள்ளது நம் தமிழ் இலக்கிய நரகம். :-(

இவர்களைக் காட்டிலும் – நடிகக் கோமாளிச் சிங்கங்களான வொலக நாயகக் கமலகாசன்களே தேவலாம் போல…

 

 

5 Responses to “விஜய்தான் ‘பிஜ்ஜி’ தேதா, ராஜஸ்தானி இலக்கியக்காரர் – சில குறிப்புகள்”

  1. ஆனந்தம் Says:

    //ஏன் அதிகபட்சம் 1000 பேர் படிக்த்தாலே அது பெரும் இலக்கியம் என முத்திரை குத்தப்படவேண்டும்? //
    வாசகர்களின் எண்ணிக்கைதான் இலக்கியத்தரத்தைத் தீர்மானிக்கிறது என்று சொல்ல வருகிறீர்களா?

  2. ஆனந்தம் Says:

    அல்லது பெரிய இலக்கியத்தைக்கூட ஆயிரம் பேருக்கு மேல் படிக்கவில்லையே என்ற ஆதங்கமா?


    • நான் சொல்லவருவது (அல்லது வந்தது): ஆதங்கம் ஒன்றுமில்லை. ஒரு இலக்கிய எழவுக்கு, குறைந்த எண்ணிக்கையில் வாசகர்கள் (எதோ காரணங்களால்) இருந்தால் ஆட்டோமேடிக்காக அது அதியுன்னத இலக்கியமாகிவிடுகிறது – ஏனெனில் இவர்கள் எலீட் (உச்சாணிக்கிளை/தேர்ந்த) வாசகர்களாகக் கருதப்பட்டு எழுத்தாளர்கள் மினுக்கிக்கொள்ள ஏதுவாகிறது.

      அதேசமயம் அதிகம்பேர் படித்தால் – அய்யோ அது ஜனரஞ்சக மலினம் ஆகிவிடுகிறது.

      ஆனால் நம் இலக்கியவான்களுக்கு அதிகம்பேர் படிக்கவும் வேண்டும், அதேசமயம் அவ்வாசகர்கள் எலீட் ஆக ஒரு சித்திரத்தை விரிக்கவும் வேண்டும்.

      தடுமாற்றம்தான்!

      (வழக்கமாக பிழை திருத்துபவர் அவர் வேலையைச் செய்யாததால், இப்பதிவில் ஏகப்பட்ட பிழைகள், மன்னிக்கவும்!)

      • ஆனந்தம் Says:

        இலக்கியவாதிகளுக்கு மட்டுமல்ல, வாசகர்களுக்கும் தடுமாற்றம்தான். இருபது வருஷங்களுக்கு முன்னால் விகடன், கல்கியில் தொடர்கதை படித்து இலக்கிய தாகத்தைத் தணித்துக்கொள்ள முடிந்தது. இப்போது ஏகப்பட்ட கோட்பாடுகள், இஸங்கள்! சாரு குப்பை என்பதை ஜெயமோகன் கொண்டாடுவார். ஜெமோ நிராகரிப்பது சாருவுக்கு உன்னதம். தமிழ், ஆங்கிலம்
        என்றால் நானே தட்டுத்தடுமாறி ஏதோ ஒரு முடிவுக்கு வர முடிகிறது. முற்றிலும் அந்நியக் கலாசாரப்பின்னணி கொண்ட இலக்கியங்களென்றால் இந்த இரண்டு பேர் கருத்து தெரிந்துகொள்ளாமல் சொந்தமாக ஒரு முடிவுக்கு வருவதும் எனக்குக் கடினமாக இருக்கிறது. இனி ராஜேஷ்குமார் கதைகளுக்குத் திரும்பிப்போவதும் இயலாத ஒன்றாகிவிட்டது. #வாசக பரிதாபங்கள்! :-(((


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s