டெரெக் பார்ஃபிட், பரக்கத் அலி – சில குறிப்புகள்
January 7, 2017
மகாமகோ பார்ஃபிட் (Derek Parfit) போன்றவர்களைப் பற்றி ஒரு நூறு வார்த்தைகளையாவது தமிழில் எழுதவேண்டும், அவர்கள் எழுதி நான் படித்துமுள்ள சிலபல புத்தகங்களைப் பற்றி, கட்டுரைகள் குறித்து என் மீதான அவற்றின் தாக்கத்தைக் குறித்து, என் விசனங்களையும் விகசிப்புகளையும் விவரித்து – குறைந்த பட்சம் ஒருகோடிட்டாவது காண்பிக்கவேண்டும் எனப் பலமுறை ஆரம்பித்து அப்பதிவுகளை நட்டாற்றில் விட்டிருக்கிறேன்; சுமார் 300க்கு மேம்பட்ட வரைவுப்பதிவுகள் இப்படிக் குறைப்பிரசவ ரீதியில் இருக்கின்றன! (தப்பித்தீர்கள்!)
…பிரச்சினையென்னவென்றால் – ஒரு புத்தகத்தைப் பற்றியோ அல்லது குறிப்பிடத்தக்க ஆளுமையைப் பற்றியோ அல்லது எந்த எழவைப் பற்றியுமேகூட பொருட்படுத்தத்தக்க அளவில் எழுதவேண்டுமென்றால், எனக்கு குறைந்த பட்சம் 1000 வார்த்தைகளுக்காகவாவது நீளும் அது; மன்னிக்கவும், நான் என் கட்டுரையைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் – நீங்களாக ஏதையாவது ஏடாகூடமாகக் கற்பனை செய்துகொள்ளவேண்டாம்.
எப்படியுமே நான், ஒரு வெகுநீளக் கட்டுரையாசாமி – ஹ்ம்ம், உண்மையில் காட்டுரையாசாமி. கரடுமுரடான ;-) நடைவேறு. நான் திராவிடனல்லன் என்ற அடிப்படைக் காரணத்தால் – முட்டாள்தனமாகக் கண்டமேனிக்கும் அட்ச்சுவுடுவது என்பது கூடுவதில்லை. பொதுவாகவே, மானாவாரியாகத் தப்பும் தவறுமாக எழுதுவதும் ஒத்துவராது. இதன் காரணமாகவே, செய்தேயாக விஷயங்களைத் தள்ளிப்போட்டுவிட்டு சில்லரை அக்கப்போர்களில் இன்பம்ஸ் பெறுவது வழக்கமாகிவிட்டது.
ஆக, இனிமேலிலிருந்து முழுமையற்ற குறுங்குறிப்புகளாக மட்டுமே எந்த எழவைப் பற்றியும் எழுதலாம் (யாரும் எழுதும்படிக்குக் கேட்கவில்லையென்றாலும்) என எண்ணம்.
இவற்றையெல்லாம் – இந்தப் பிரகாசிக்கும் விஷயங்களைப் பற்றி ரெண்டு வார்த்தைகள் எழுதுவது என்பதற்குக் காரணம் – அவை எதிரொளிக்கும் ஜ்வலிப்பில் என் சொட்டைத்தலையை மினுக்கிக் கொண்டு ஏதோ ‘நான் எவ்ளோ பட்ச்சிருக்கேன் பார்டா’ என உளறிக்கொண்டு அலைவதற்காக அல்ல. விஷயம் இதுதான்: நான் இப்படிப்பட்டவர்களை, இப்படிப்பட்டவைகளை – தகுதியென ஒரு எழவும் எனக்கு இல்லாமலிருந்தாலும் எப்படியோ அறிந்துகொள்ளும் பேறு பெற்றவன். சிலபல திறப்புகளையும் விகசிப்புகளையும் பெற்றவன். ஆக, இந்த ஒத்திசைவு எழவைத் தொடர்ந்து படிக்கும் அதிகபட்சம் பத்து பேருக்கு இந்தவிஷயம் போய்ச் சேரவேண்டும் எனவொரு ஆவல். அவ்வளவுதான். யாம் பெற்றபேறு பெறுக இவ்வையகம், ஆம்.
சரி. இவற்றில் இந்த மனிதர்களைப் பற்றி அதிக பட்சம் ஒன்றிரண்டு வரிகளும், புத்தகங்களைப் பற்றிய விவரங்களும் இருக்கும்; அதனால் தான் இந்த மகாமகோ பார்ஃபிட் பற்றி, அவர் போய்ச் சேர்ந்தபின் (= ஜனவரி 1, 2017) இன்றுதான் (= ஜனவரி 7, 2017) எழுதுகிறேன்.
அதுவும் துக்ளக்+விகடன் புகழ் பரக்கத் அலி அவர்களின் அடிவருடியாக, அதிக பட்சம் அவர் பாணியில்மட்டுமே!
அன்புடன்:
பரக்கத்அலிதாசன்.
-0-0-0-0-0-
புத்தக விமர்சன வல்லுநரும் இந்த விஷயத்தில் என் பேராசானுமான பரக்கத் அலி அவர்களுடைய பேட்டியொன்று யூட்யூப் தளத்தில் இருக்கிறது; இதில் – உலகத்தைக் குலுக்கும் பிரச்சினைக் கேள்விகள் (எடுத்துக்காட்டு: ‘துக்ளக் சோ ஆர்எஸ்எஸ் பிஜேபி காரரா’) முட்டாள்தனமாக அவரிடம் கேட்கப் பட்டாலும், அவர் அவற்றை ஆத்மார்த்தமாக எதிர்கொள்கிறார், பதில் சொல்கிறார்; அவசியம் பார்க்கவும். கொஞ்சம் பாவமாகவே இருக்கிறது, அவர் புலன்விசாரணை செய்யப்படுவது – இது காலத்தின் ஓலம்தான், வேறென்ன சொல்ல. பரக்கத் அலி ஆதிரைபிறை.இன் நேர்காணல்.
சரி. பரக்கத்அலிதாசனாக, அவரது பாணியிலேயே அவருடைய பேட்டி பற்றி, சில குறிப்புகளை எழுதியிருக்கிறேன் – ஏதேனும் குறையிருந்தால், என்னைத் தடுத்தாட்கொள்ளவும்:
குறும்படத்தின் நீளம் 9.23 நிமிடங்கள். ஆதிரைபிறை.இன் என்று அவருக்கு முன்னால் இருக்கும் மைக்கில் கார்ட் வைத்திருப்பது இதன் சிறப்பு. படம் பல வண்ணங்களில் இருக்கிறது. 0.00 நிமிடம் ஆரம்பித்து 9.23 நிமிடங்களில் முடிகிறது. ஒரு நொடிக்குக் குறைந்த பட்சம் 22 சட்டகங்கள் காண்பிக்கப்பட்டு அவை தொடர்படமாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. பரக்கத் அலி அவர்கள், இஸ்திரி போட்ட வெள்ளை சட்டை போட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால், கால்சராய் போட்டுக்கொண்டிருக்கிறாரா என ஆதிரைபிறை.இன் விளக்கவில்லை. காண்பிக்கவும் இல்லை. இதை சாய்ஸில் விட்டுவிட்டார்களோ? குறும் படத்தைப் பார்ப்பவர்களுக்கு, பார்ப்பவர்களின் அனுபவம் கிடைக்கும். கேட்பவர்களுக்கு, கேட்பது கிடைக்கும். ஆனால் அவர்கள் காதுகளில் மெழுகு அடைத்துக்கொண்டிருந்தால் கொஞ்சம் கஷ்டம். இஸ்லாமிய சடங்கு ஒன்று நடந்துகொண்டிருக்கும் சுபதருணத்தில் இந்தப் பேட்டி எடுக்கப்பட்டிருப்பது ஒரு கூடுதல் சிறப்பு. இந்த யூட்யூப் காணொளிலி முற்றும் இலவசம். இணையத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு.
ஹ்ம்ம்ம்… ஆனால், எதிர்காலத்தில் இம்மாதிரி பேட்டியை இதே ஆதிரைபிறை.இன் தளத்திற்கு, நான் பரக்கத்அலிதாசனாக (‘பஅதா!’) அளிக்கும் பேற்றினைப் பெறும்போது இந்த மாதிரி உலகத்தைக் குலுக்கும் பிரச்சினைகள் பற்றிய அபத்த நகைச்சுவைக் கேள்விகள் கேட்கப் படலாம்:
- ‘பரக்கத் அலி பேண்ட் போட்டுக்கொள்வாரா?’
- ‘முகம்மது அலியோட பரக்கத் அலி, ஒண்டிக்குஒண்டி குத்துச்சண்டை போட்டா என்ன நடக்கும்?’
- ‘சலீம்அலி பறவை ஆராய்ச்சியாளர், இது ஹராமா?’
- ‘நாம் ஒருவரை ஒருவர் மரியாதையுடன் வணங்கிக்கொண்டால், அது ஷிர்க் ஆகிவிடுமா?’
- ‘இந்தியா இஸ்லாமியா ஆகும் வரை, அதை ஷிர்க்கியா என அழைக்கலாமா?’
ஆஹ்! ஆக, நான் என்னென்ன பதில்ஹ் சொல்லவேண்டும் என்பதை இப்போதே நெட்டுருஹ் போட்டுக்கொள்ள ஆரம்பிக்கவேண்டுமோஹ்? கதி கலங்குகிறதேஹ்! பயபீதிஹ்! :-(
-0-0-0-0-0-0-

என்னிடம் இருக்கும் புத்தகத்துக்கு வேறுமாதிரி அட்டைப்படம் இருந்ததென நினைவு. இப்போது புத்தகமே டார்டாராகப் போய்விட்டது. இதற்குத்தான் நான் என் புத்தகங்களை இக்காலங்களில் இரவல் கொடுப்பதேயில்லை – கொடுத்தால் ஒரேயடியாக தானம், அல்லது கொடுப்பதேயில்லை. அவ்வளவுதான்! இருமை இருண்மை நிலைதான் எனக்கு ஒத்துவருகிறது, என்ன செய்வது சொல்லுங்கள். :-(
என்னுடைய பூனையைப் போலவே , பெரும்பாலும் நான் எதைச் செய்யவேண்டும் என விரும்புகிறேனோ அதனையே செய்துவிடுகிறேன். ஆக, மனிதர்களுக்கு இருக்கும் ஒரு திறனை நான் பயன்படுத்துவதில்லை.
ஆனால் – நாம் செயல்படுவதற்கான காரணங்கள் என இருக்கின்றன என்பதையும், அவற்றில் சில மற்றவைகளை விட பலமானவையாகவும் சரியானபடியாகவும் இருக்கின்றன என்பதையும் அறிவோம். ஆக, இப்படிப்பட்ட, செயல்பாடுகளுக்கான காரணங்களைப் பற்றிய கேள்விகளை எழுப்பித் தொகுப்பது இந்தப் புத்தகத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்று. இது தொடர்பாக, நான் பல கோட்பாடுகளை விவாதிக்கப்போகிறேன். இவற்றில் சில தார்மீக கோட்பாடுகள் தொடர்பானவை, பிற பகுத்தறியும் தன்மை குறித்த கோட்பாடுகள்.
நாமெல்லாரும் தனித்துவம் வாய்ந்த பிறவிகள். நான் வாழ்வது என் வாழ்க்கையை, நீங்கள் வாழ்வது உங்களுடையதை. இந்த உண்மைகளில் என்ன பொதிந்திருக்கிறது? என் வாழ்நாள் முழுவதும் நான் அதே நபராக இருக்கும் சமயத்தில், எப்படி நான் உங்களைப் போலல்லாமல், இன்னொருவனாக இருக்கிறேன்? இந்த உண்மைகளின் முக்கியத்துவம் தான் என்ன? ஒவ்வொரு உயிரின் ஒருங்கிணைப்புக்கான முக்கியத்துவம் என்ன? பல்வேறு உயிர்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள்? மானுடர்களுக்கிடையே? இம்மாதிரிக் கேள்விகள் தாம் இப்புத்தகத்தின் சாரம்.
என்னுடைய இரண்டு பாடுபொருட்கள் – காரணங்கள் + மானுடர்கள் – நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளன. என் நம்பிக்கை என்னவென்றால் – நம்மில் பெரும்பாலோர் நம் இயற்கை இருப்பைப் பற்றியும் அடையாளங்களைப் பற்றியும் தவறான எண்ணங்களைக் கொண்டிருக்கிறோம்; மேலும், நாம் என்ன செய்யவேண்டும் என்பதற்கான காரணங்களைப் பற்றிய நம் நம்பிக்கைகளை நாம் மாற்றிக்கொள்ளவேண்டும் என்றும் நான் நம்புகிறேன். ஆக நாம், நமது தார்மீகக் கோட்பாடுகளை, மற்றும் பகுத்தறிவு பற்றிய நம் நம்பிக்கைகளை மறுஆய்வு செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.
(*ப்ச* மொழியை நான் சரியாகப் பெயர்க்கவில்லை – அதன் மண்டையில் சம்மட்டியால் அடித்துச் சரிசெய்ய நேரமில்லை: ஆகவே என் நிர்மூலத்தைப் பிடிக்காதவர்களுக்கு, மூலம் இதோ இருக்கிறது)
அண்மையில் போய்ச் சேர்ந்த அன்னாரின் ஆத்மா, சாந்திமுகூர்த்தம் அடைய என் விழைவுகள். நன்றி.
January 7, 2017 at 20:42
அன்புள்ள ராம்,
பகிர்வுக்கு நன்றி :)
இம்மூன்று புத்தகங்களை நிச்சயம் படிப்பேன்