புரட்சிகர பென்ஸில் ஃபேக்டரி: சில குறிப்புகள்
December 3, 2016
புரட்சிகர பென்ஸில் ஃபேக்டரி அவர்கள், போய்ச் சேர்ந்துவிட்டார். அவரது உடல், அவர் விருப்பப்படியே, செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரிக்கு தானம் செய்யப்படும் என்பதை ‘த மண்டு‘ தினசரி மூலம் இன்று அறிந்துகொண்டேன். ஒர்ரே அந்தக்கால நினைவுகள்…
ஷாஹுல் ‘இன்குலாப்’ ஹமீத் ஒரு இஸ்லாமியராக இருந்துகொண்டு வெளிப்படையான நாத்திக நிலைப்பாடு எடுப்பதற்கு, அதுவும் அமைப்புரீதியான ஆதரவு அதிகமில்லாமல் இருந்த பின்புலத்தில் இப்படி இருந்ததற்குத் துணிச்சல்வேண்டும். அதுவும் ‘அந்தக்காலத்தில்’ மட்டுமே அவர் இப்படி இருந்திருந்தால் அதுகூட ஒரு பெரிய விஷயமில்லை – ஆனால் இந்திய இஸ்லாம் தேவையற்று இறுகிவரும் இக்காலங்களில், அது அரைகுறை மதவெறி அரேபிய மயமாக்கப்படும் சமயங்களிலும் கூட அவர் தனிப்பட்ட முறையில் தைரியமாக இயங்கியதற்கு அவர் நிச்சயம் போற்றப்படவேண்டியவரே!
பொதுவாகவே நேர்மையாளர், நல்ல மனிதர்; இதில் எனக்குச் சந்தேகமில்லை.
‘ஈழ,’ தமிழ் தேசிய(!) ஆதரவாளர். தீவிர இடதுசாரிக்காரர்; அவர் எழுத்தில் இருக்கும் உச்சாடனமும் வெறியும் புரட்சிகரமைதுனமும் இருப்பதற்கு மாறாக — நேரில் பழகுவதற்கு இனிமையானவர். (இதைச் சம்பிரதாயத்துக்காகச் சொல்லவில்லை)
-0-0-0-0-0-0-0-0-
ஆனால், வருத்தத்துகுறிய வகையில் அவரைக் கவிஞர் எனக் குறிப்பிடுகிறார்கள்; ஏனெனில் அவர், சர்வ நிச்சயமாகக் கவிஞர் அல்லர். மன்னிக்கவும். வரலாற்றையும் அரைகுறையுமாகப் புரிந்துகொண்டு உணர்ச்சிவசப்பட்டு அதை உச்சாடனக் கிவிதைகளாக வடித்தவர். அவருக்கென உணர்ச்சிகரமான ஒரு இளம் கும்பல் (இப்போது இவர்களெல்லாம் வளர்ந்து(!) திராவிடத் திராபைத் தட்டச்சுப் போராளிகளாக ஆகியிருப்பார்கள் என நினைக்கிறேன்) வாசகர் குழாம் இருந்தது.
…அப்போதும் ‘தமிழ் தேசியம்’ என்று உளறிக்கொட்டுவது, தேசம் – தேசியம் – குறும் தேசியம் – தேசிய இனப்பிரச்சினை – இந்தியா தேசிய இனங்களின் சிறைச்சாலை – எனவெல்லாம் மானாவாரியாக, எச்சில் ஒழுக, வாயோர நுரை தள்ள ஜல்லியடிப்பது என்பது ஃபேஷன் தான்…
ஆக, கடைசி வரையில் அவர் திருந்தவேயில்லை, வளரவேயில்லை. தான் நம்பியதில் (கிவிதையானாலும் சரி, தேசியமானாலும் சரி, நாத்திகமானாலும் சரி) தீவிரமாகவே இருந்தார்.
-0-0-0-0-0-0-0-0-
வெ. நாராயணன் என்பவர், (வெள்ளை மனதுக்காரர்; இலக்கிய வெறியர்; ‘பிழைக்கத் தெரியாதவர்’) காஞ்சிபுரத்தில் ‘இலக்கிய வட்டம்’ எனவொரு அமைப்பை நடத்திக் கொண்டிருந்தார் (இவர் சில வருடங்கள்முன் போய்ச்சேர்ந்தேவிட்டார் எனக் கேள்விப்பட்டேன்; ஆனால் அப்படியில்லை என்றால் ஆனந்தமாகத் திருத்திக் கொள்கிறேன்; நெடுநாள் வாழவேண்டிய வெள்ளந்தி ஆசாமிதான் அவர்!)
என்னால், செல்லமாக வெ(ங்காய) நாராயணன் எனக் கூப்பிடப் பட்டுக்கொண்டிருந்த அவர் – அந்த வட்டம் சார்பாக மாதாந்திரக் கூட்டங்களை நடத்திவந்தார். அதில் பேசுவதற்கோ (=பேத்துவதற்கோ) என்ன எழவுக்கோ, என்னையும் கூப்பிட்டிருந்தார் என நினைவு. (நான் எக்காலத்திலும் பிரபலமானவன் அல்லன் – வெங்காய நாராயணன் எனக்கு முன்னறிமுகமானவர்; சிலபல முறை என் வீட்டுக்கு வந்திருந்தார், அரட்டை அடித்திருந்திருக்கிறோம், அவ்வளவுதான்!)
இந்த எழவுக்காக – தொடர்ந்து கட்டமைத்து மேலெழுப்பப்பட்ட உளறல்களுக்காக இரண்டுமூன்று முறை முட்டாக்கூ விசிறிகளிடமிருந்து கரகோஷம் பெற்றார்! ஆச்சரியம்!!
மாறாக, நம்முடைய செல்ல சராசரி மடத்தமிழனுக்கு அவனுடைய மிகச்செல்லமான திராவிடத்துக்கென்று என ஒரு பெரிய-நெடிய பாரம்பரியமும், வரலாற்றுத் தொடர்ச்சியும் இருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
… பொறுத்துக்கொள்ளவே முடியாத உளறல் குவியல்களினால் – எனக்கு முணுக்கென்று கோபம் வந்துவிட்டது. அப்போது என்னுடைய வயதும் 20 போல இருந்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். விவேகமென்பதோ அப்போதும் இல்லை, இப்போதோ கேட்கவே வேண்டாம். மைக்கைப் பிடித்து இன்குலாப் அவர்களையும், இந்தத் தவற்றுக்காக ஒரு பிடிபிடித்தேன் என நினைக்கிறேன்.
அலக்கியத்தின், அகவிதையின், அவரலாறுகளின், அபத்தங்களின் மீதான என் வெறுப்பு என்பது அத்தகையது, வேறென்ன சொல்ல.
வெங்காய நாராயணன் அவர்களிடமும் – ஏன் கண்டகண்ட ஆசாமிகளைக் கூப்பிட்டுக் கூட்டம் போடுகிறீர்கள், ஏன் அரைகுறைக் கருத்தாக்கங்களுக்கு – சொந்தச் செலவில் மேடையமைத்துத் தருகிறீர்கள் எனவும் சண்டை போட்டேன். பாவம் அவர். ஜனநாயகவாதி. கொஞ்சம் நெளிந்தார். எல்லா கருத்துகளும் வந்துசேரவேண்டுமே என்றார். எனக்கு வந்த கோபத்தில் அவரை உதைத்திருப்பேன். ஆனால் செய்யவில்லை. நல்லவேளை. என்னுடைய இங்கிதமற்ற தன்மைக்கு அளவேயில்லை. :-(
-0-0-0-0-0-0-0-
…
அவனுக்கு, நான் சொன்னது பிடிக்கவில்லை. சும்மா சிலேடை பண்ணாதடா குசும்புப் பாப்பானே என்றான். ‘அக்கினிபுத்திரன்??’
என்னடா ஒனக்கென்ன திமிரா, ஏற்கனவெ ஒங்கப்பா கட்சீல ஏற்கனவே ஒரு அக்கினி யிருக்காரு, தெரியாதா? நீ வேண்டுமானால் இரண்டாம் அக்கினிபுத்திரன் – அப்டீன்னு வெச்சிக்கோ? சரியா? இல்லன்னா அவ்ரு லாயிட்ஸ் ரோடு அக்கினி. நீ வண்ணாரப்பேட்டை அக்கினி! சபாஷ், சரியான போட்டி! தீப்பத்தி எறிய வையுங்கடா இந்த கவிதையுலகத்த… வண்ணை அக்கினி-ன்னிட்டு மட்டும் சுருக்கிடாத – ஏதாவது குசும்பு விமர்சகன் ஒன்னை வெண்ணை + அக்கினி = நெய்-யின்னு உருக்கிச் சாப்டே விடுவான், பாத்துக்கோ.
போடா, வேற ஏதினாச்சும் ஐடியா இருக்கா? புரட்சி பூபாளம் செங்குயில் மாரி ஏதாவது சொல்லுடா மச்சி, எனக்கு மண்ட காயுது…
ஹ்ம்ம்… இல்லன்னாக்க, டேய், நீ ஒரு நாய்டு மனவாடு தான, அத்தொட்டு ஏதாச்சும் வானம்பாடி கட்பாடி, ஜம்பர், நாய்டுஹால் பாடி-ன்னிட்டு மவனே, போவாத ஊருக்கு மார்புக்கச்சைய போட்டுக்கினு போவப்போறியா? சாண்டில்யன் வந்து அந்தக் கச்சையை நெகிழ்த்திடுவார்டா, மச்சான், டேஞ்சர். ராஜமுத்திரை படிச்சிருக்கயில்ல? டேய், நீ ஏன் – ஜலதீபன் அப்டீன்னு வெச்சுக்கக் கூடாது?
டேய், கிண்டல் பண்றன்னிட்டு தெரியுது. ஆனா, ‘வாயுபுத்திரன்’ எப்டிடா இருக்கு?
டேய், நீ அழகாத்தானடா இருக்க? வாயுபுத்திரன்னா ஹனுமான் மாரி வருண்டா. நீ என்ன என்னமாரி ஹனுமான் போல வாய்வீங்கியா இருக்க? அழகாதானடா இருக்க? மொதல்ல கவிதை எழுதுடா. சும்மனாச்சிக்கும் புனைபெயர் போங்காட்டமெல்லாம் வேண்டாண்டா. இந்த மாரி ஸெக்ஸியாக ஒரு புனைபெயர் வெச்சிக்கணும்னு யார்டா ஒனக்கு சொன்னாங்க? ஒங்கப்பா கிட்ட கேட்டியா?
… …
… ஒரு நோட்டுப் புத்தகத்துக்கு அழகாக ஜிகினா காகித அட்டை போட்டு, மணிமணியான எழுத்தில் (எனக்கு ஒரே பொறாமையாக இருந்தது என நினைவு, என் கோழிக்கிறுக்கல் கையெழுத்தை, பொதுவாக என்னாலேயே படிக்கமுடியாது! ஆனால் அவனுடைய நோட்டோ, அழகான கேல்லிக்ரேஃபி பேனாக்களை வைத்து, இந்தியன் மசி உபயோகித்து அருமையான கருப்புக் கோட்டோவியங்களோடு இருந்தது) – ஆனால் சுமார் 110 பக்கங்களுக்குக் கவிதைகளோ கவிதைகள் – பென்ஸில்ஃபேக்டரி வசனங்கள்… எனக்கு மூச்சு முட்டியது. முன்னுரைக்காக என்று முதல் 5 பக்கங்களை அவன் வெற்றுத் தாட்களாக விட்டிருந்ததால், கடவுளுக்கு நன்றி சொல்லி… அரை மணி நேரத்திற்குப் பிறகு…
டேய், நீ நம்பளோட தருமு சிவராமு, ஆத்மாநாம், ஞானக்கூத்தன், பசுவய்யாஎல்லாம் படிச்சிருக்கயில்ல. நம்பவே முடியல, இவ்வளவு படு கேவலமா எழுதியிருக்கயே! என்னடா ஆச்சு உனக்கு. சாதா உரைநடைய ஒடச்சி ஒடச்சி போட்டு எதுகைமோனை எல்லாம் சேர்த்தா ங்கொம்மாள, புதுக்கவிதையாயிருமா, இன்னாடா இது? ஒரே பென்ஸில் ஃபேக்டரி (அவனுடைய அப்போதைய ஆதர்சமான ‘இன்குலாப்’ என்ற ஒரு கவிஞரின் பெயரை வைத்து எங்களுடைய கிண்டல்; ink lab — pencil factory) கடபுடாவா இருக்கே! காலனியாதிக்கத் தொழுநோய்த் தேமலை இன்னமும் வெரட்ட முடியலையாடா? ராஜராஜசோழப் புல்லன காயடிச்சி வைக்கோலனா ஆக்கலயா, இவ்ளோ நாளுக்கப்புறமும்? ஏண்டா இப்டியெல்லாம் உச்சாடனவாதத்துல எழுதறீங்க… இதெல்லாம் வெறும்ன வுட்டுட்டு, நீ அழகா வரையற இல்ல, நீ ஒரு ஆதிமூலம் போல ஆகறத வுட்டுட்டு – என்னடா இது கருமாந்திரம்… தூ.
ஒனக்குப் பொறாமைடா, அதுதான் ஒன்ன இப்படி சொல்ல வைக்குது. ஒன்னோட பாப்பார புத்திய காட்டிட்ட பாரு… வந்தேறிங்க கிட்ட பேச்சுக் கேக்க வந்த என்னத் தான் ஜோட்டால அடிச்சிக்கணம்…
… சிரித்துக் கொண்டே எனக்கு நிச்சயம் பொறாமைதானென்று சொல்லி – ஆனாக்க, பாப்பான் வீட்டுக் காப்பிக்கு மட்டும் நேரத்துக்கு டாண்ணுனு வந்திருவ இல்ல என்று – அவன் நோட்டுப்புத்தகத்தின் முதல் பக்கம் சென்றேன்.
அதிர்ச்சி.
அவனுடைய புனைபெயர் – இகாரஸ்தாசன்! (அய்யய்யோ!!)
… …
ஆனாலும், இன்குலாப் = கவிஞர் என்பது, அதிகபட்சம் ஒரு அசமன்பாடு என்பதில் எனக்கு இரண்டாம் கருத்தில்லை.
- இகாரஸ்புத்திரன்(!), இகாரஸ்குமார்(!!) இன்னபிற – சில ‘டயரி’ குறிப்புகள் 16/10/2013
- டீடலஸ், இகரஸ் – நான்கு குறிப்புகள் (=கொஞ்சம் தொன்மம் + கொஞ்சம் ஸானெட்+ கொஞ்சம் தவிப்பு))
- ‘ஒத்திசைவு’ வெ. ராமசாமி ஒழிந்தார்! 27/10/2016
- உலகத்திலேயே படுவேகமாக ஓடுபவன், அஞ்சலியை முந்தித் தரும் தமிழ் எழுத்தாளச் சிகாமணிதான்! 17/04/2015
- அலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்…
December 3, 2016 at 10:30
எவ்வளவோ கழண்டு போன எழுத்துக்களை எல்லாம் படித்திருக்கின்றேன். ஆனால் இவ்வளவு கழண்டு போனதை எல்லாம் அதுவும் தனக்கு பெரிய தகுதியை தானே சூட்டிக் கொண்டு நொந்து நூலாகிப் போய் தகிடு தத்த எழுத்தை எல்லாம் இப்பதான் படிக்கிறேன். இப்படி ஒரு சோதனை தமிழுக்குத் தேவை தான்.
December 3, 2016 at 12:45
அய்யா இருமேனி முபாரக்காரே!
உங்கள் புகழ்ச்சிக்கு நான் அருகதை உள்ளவனா என அறியேன்.
‘கழண்டுபோன எழுத்துகள்’ என மத, உச்சாடன, கையேட்டுப் புத்தகங்களைக் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். கண்டிப்பாக அவற்றைத் தவிர்க்கவும். அப்படியே படிக்க நேர்ந்தால், சிரித்துக்கொண்டே படிக்கவும்.
இன்குலாப் அவர்களின் கிவிதைகளும் அப்படிப்பட்டவையே! ஏனெனில் – அவருடைய மதமானது – அமார்க்ஸ் வகையறாக்கள்போலப் படுமோசமாக இல்லாவிட்டாலும், சர்வ நிச்சயமாக அது திராவிட-மார்க்சிய-லெனினிய-குறுந்தேசியம்; ஆகவே இக்கிவிதைகளிலும் வேண்டுமளவு தகிடுதத்தங்கள் இருக்கின்றன; கவலை வேண்டேல். மேலும் இன்குலாப் அவர்கள் ராஜராஜசோழன் பற்றி உளறிக்கொட்டியிருக்கும்போது, அடியேன் ஒரு சாதாரண இன்குலாப் அவர்கள் பற்றி என் கருத்துகளை எழுதக் கூடாதா என்ன? :-)
நான் எழுதுவதும் (நான் உட்பட) சிரிப்பதற்காகத்தான். மேலும் இன்குலாப் போன்றவர்களையே தாங்கும் திறன் கொண்ட நம் தமிழானது, ஒத்திசைவு போன்ற — ஒரு 50பேர் (நீங்களும் நானும் உட்பட) படிக்கும் தளத்தினாலா துவளப் போகிறது, ஹ்ம்ம்ம்??
பல மாமாங்கங்களுக்குப் பின் மறுவருகை தந்து பொன்னெழுத்துகளைப் பதித்தமைக்கு நன்றி.
…வாய்விட்டுச் சிரிக்கப் பழகிக் கொள்ளுங்கள், சும்மனாச்சிக்கும் முறுக்கிக் கொள்ளாதீர்கள், சரியா? ;-)
December 30, 2017 at 12:11
[…] […]
July 31, 2018 at 16:30
[…] […]