உப்புமாவோயிஸம்

November 29, 2016

உப்புமா செய்யலாம்தான். ஆனால் உப்புமா மட்டுமேதான் செய்யவேண்டுமென்றில்லை. இணைய உப்புமா கிண்டப்படுவதையும் கிண்டல் செய்யவேண்டியதுதான்.

–0-0-0-0-0-0–

ஆண்களும் வீட்டில் சமையல் செய்யவேண்டும். ஆனால் ஆண்கள் மட்டுமேதான் சமையல் செய்யவேண்டும் என்று சொல்லவில்லை. ஆண்கள் சமையல் செய்தால் நன்றால் இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.

அதற்காக, ஆண்களின் சமையல் நன்றாக இருக்கும் எனச் சொல்லவரவில்லை. சமையல் என்றால் சமைக்கப் படுவது என்றுதான் நினைக்கிறேன்.

இதனால், சமைக்கப்படுவதெல்லாம் சமையல் என்று சொல்லிவிடவில்லை.

ஆனால் அப்படியும் சொல்லிவிடலாம்தான். அதற்காக அப்படியே சொல்லிவிடவேண்டும் என்கிற அவசியமும் இல்லை.

உப்பும் மாவும் சேர்த்துக் கிண்டினால் உப்புமா வரும் என்று சொல்லிவிடலாம்தான். ஆனால், அப்படியே சொல்லிக் கொண்டிருந்தால் உப்புமா கிண்டப்பட்டுவிடுமா?

கிண்டப்படலாம் என்று சொல்லிவிட்டாலும் கிண்டப்பட்டதற்கு சாட்சி வேண்டும் என என் நண்பர் (இவர் அண்மையில் உப்புமாவாதத்திலிருந்து பேலியோ வாதத்துக்கு மாறியிருக்கிறார்) சொன்னார். அவர் அப்படிச் சொன்னதற்காக – கிண்டப்பட்டதை, கிண்டப்பட்டதா எனக் கேள்விகேட்கலாம்.

ஆனால் அப்படியெல்லாம் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனாலும் அப்படிக் கேட்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறதுதான்.

அதற்காக, நாம் கேள்வி கேட்கவில்லை.

திராவிட உப்புமா முன்னேற்றக் கழகக் கட்சியை பலப்படுத்தவேண்டும். அதற்காக, அவர்கள் அதனை பலப்படுத்தியே ஆகவேண்டும் எனச் சொல்லவரவில்லை. சட்டினியையாவது சரியாகச் செய்யலாமே! ஆனால் அவர்கள் சட்டினிப் போராட்ட அறப்போர் ஒன்றைத் தொடங்கவேண்டும் எனச் சொல்லவரவில்லை.

ஆனாலும், அவர்கள் வெங்காய சாம்பார் உள்ளிப்பூண்டு உள்ளிட்ட விஷயங்களிலும் ஈடுபடவேண்டும் எனச் சொல்கிறேன். அதற்காக, சட்டினியை அவர்கள் அம்போ என்று விட்டுவிடவேண்டும் எனச் சொல்லிவிடலாம்தான். ஆனால் அது அப்படியில்லைதான்.

ஆனால், எதிர்காலத்தில் உப்புமாகட்சி வளரவேண்டும் என்றால் சட்டினியும் சாம்பாரும் மட்டுமே போதும் என்று நான் சொல்லிவிடலாம்தான் – ஆனால் சொல்லவில்லை. ஏனெனில் உப்புமாகட்சிக்கு முதன்மைக் கச்சாப்பொருளான உப்புமா வேண்டும்தானே.

அதற்காக உப்புமாவைச் சரியாகச் செய்யவேண்டும் எனச் சொல்லிவிடலாம்தான். ஆனால் சொல்லவில்லை. இருந்தாலும் திராவிட உப்புமா முன்னேற்றக் கழகக் கட்சியில் இருக்கும் பென்னியத் தலைவர் கவிதாயினி கடுகுமொழி அதில் சரியாகத் தாளிக்கப்படவில்லை. அப்படியே இல்லாமல் இருந்துவிட்டுப் போகட்டும் எனச் சொல்லிவிடலாம்தான். அதற்காகச் சொல்லிவிடவில்லை. இருந்தாலும், இருந்துவிட்டுப் போகட்டும்.

இந்தப் பிரச்சினைக்காக – கடுகுமொழியைத் தாளித்துதான் ஆகவேண்டுமென்பதில்லைதான். ஆனால் தாளித்தால் சாப்பிட நன்றாக இருக்கும். கடுகுமொழியை ஏன் ஓரம்கட்டுகிறார்கள் எனக் கேட்டுவிடலாம். ஏன் உப்புமா கிண்டுப்போது கிளறாமல் அப்படியே ஒதுக்கிவிடுகிறார்கள் எனக் கேள்வி கேட்கலாம். ஆனால் கேட்கவில்லை. அதற்காக, அப்படிக் கேட்கக்கூடாது என்ற அர்த்தம் இல்லை. ஆனால் நான் அப்படிக் கேட்காமல் இருக்கக்கூடாதுதான். அதற்காக நான் கேட்பேன் என்று அர்த்தம் இல்லை; ஆனால், அப்படி அர்த்தம் இருக்கலாம்தான். இருந்தாலும் அப்படி இருக்கவேண்டிய அவசியமில்லை. அப்படியே இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும்.

பெண்ணியத்தைப் பற்றி பெண்ணியத்தனமாகப் பென்னை வைத்துக்கொண்டு எழுதுபவர்களை பென்னியவாதிகள் என்று சொல்லலாம்தான். ஆனால், அதற்காக அப்படிச் சொல்லியே ஆகவேண்டும் என்பதில்லை. ஆனால், கவிஞர் கடுகுமொழியை பென்னியக் கவிஞர் எனச் சொல்லிவிடலாம்தான். அதற்காக நான் அப்படிச் சொல்லிவிடமாட்டேன்தான்.

என் மனைவிக்குக்கூட இந்த விஷயத்தைச் சொல்லவில்லை. சொல்லிவிடலாம்தான். ஆனால் உதைப்பாள். இருந்தாலும் சொல்லிவிடுகிறேன். சென்றமாதம் பிரான்ஸில் அம்மணவாதிகளின் கடற்கரை ஒன்றுக்குப் போயிருந்தேன். ஆனால் ஒன்றுக்குப் போகவில்லைதான். அதற்காக ஒன்றுக்குப் போகவேமாட்டேன் என்று அர்த்தம் இல்லை.நிர்வாணமாக அலைந்துகொண்டிருந்த அவர்களைப் பார்க்கும்போது எனக்கு உப்புமாவில் நறுக்கிப் போட்டிருக்கும் சிவப்பு மிளகாய்  நினைவு வந்ததுதான். அதற்காக, உப்புமா ஒன்றுக்காகவே நான் இந்தப் பதிவை எழுதிவிட்டேன் என நீங்கள் நினைக்கவேண்டாம்தான். ஆனால் நீங்கள் அப்படி நினைப்பது முக்கியம். அதற்காக, நீங்கள் அப்படி நினைத்தே ஆகவேண்டும் எனச் சொல்லமாட்டேன் தான். ஆனாலும் அப்படிச் சொல்லிவிடலாம்.

என் வீட்டிற்குப் பக்கத்திலிருக்கும் ஈரோட்டின் மஞ்சள் சந்தை பேர்போனது. அதற்காக நான் மஞ்சள் இலக்கியத்தை ஆதரிக்கவில்லைதான். ஆனாலும் மஞ்சள் தூவி உப்புமா கிண்டினால், அதன் மணமே தனிதான் எனச் சொல்லிவிடலாம்தான். ஆனால் சொல்லவில்லை என அர்த்தமில்லை. சொல்லிவிடலாம் என்றே சொல்லிவிடலாம் என்பதே என் நிலைப்பாடு. அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். இல்லாமலிருந்தாலும் சரி.

அண்மையில் உப்புமா பாண்டவம் படித்தேன். தமிழ் இலக்கியத்தின் முப்பெரும் தலைவர்களில் ஒருவரான எஸ்ராமகிருஷ்ணன் எழுதியது. இந்த மூவர்களைப் பகைத்துக்கொண்டு, தமிழ் இலக்கிய உலகில் எந்தக் கொம்பனும் உப்புமா கிண்டவே முடியாது. நானும் பலகாலமாக முயன்றுகொண்டிருக்கிறேன்தான். ஆனால், உப்பாத மாவுதான் கிடைக்கிறது. அதற்காக நான் தொடர்ந்து உப்புமா கிண்டாமல் இருக்கமுடியுமா? இருக்கவேண்டிய அவசியமில்லைதான். ஆனாலும் பரவாயில்லை, அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன்.

-0-0-0-0-0-0-

காலையில் உட்கார்ந்துகொண்டு இப்படி ஒரு பதிவைக் கிண்டுகிறாயே என என் மனைவி என்னைக் கேள்விகேட்பதில்லை. ஆனால் கேட்கக்கூடியவள்தான்.

அதற்காக, அவள் அப்படிக் கேட்கவேண்டும் என நான் கேட்டுக்கொள்ள முடியுமா? நமக்கெதுக்கு வம்பு.

வாசகர் பின்னூட்டங்கள்:
—–
அண்ணே!  உங்களோட தெகிர்யம் எனக்கு ஆவேசத்தை அளிக்கிறது,
இப்படி ஒரு தெளிவான கட்டுரையை அளித்ததற்கு மிக்க நன்றி.
 நெத்தியடி! கடுகுமொழியில்லாமல் தமிழ்மொழி செம்மொழி எப்படி வளரும்?
சுவாரசியமான பதிவுக்கு நன்றி அண்ணா.
உப்புமா, திராவிடர்களின் தனிப்பெரும் சிற்றுண்டி என ஐநா சபை அறிவிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
—-
சமூகவலைத்  தளங்கள் உட்பட தமிழர்கள் ஆவேசப்பட்டுப் படையல் வைக்கும் உணவு பொங்கல்தான். உப்புமா இல்லை. உப்புமா ஆரியம். மிகவும் ஆறிப்போன ஆரியம். அண்ணா, உங்களைத் திருத்திக்கொள்ளுங்கள்.
—-
நீங்கள் சொல்வது சரியென்று ஒப்புக்கொண்டுவிடலாம்தான். ஆனால் அதற்காக, ஒப்புக்கொண்டேயாகவேண்டுமென்பதில்லை. பொங்கல் + உப்புமா தமிழ் சமூகவலைத்தளங்களின் இரண்டு கண்கள்.
உப்புமா கிண்டாத, பொங்காத தமிழன் – அதுவும் இணையத்தில் இப்படியில்லாது இருப்பவன் ஒருவனாவது இருக்கிறானா?
நீங்கள் சொல்வது சரி. உப்புமாவும் வேண்டும் பொங்கலும் வேண்டும்தான். அதற்காக அவை வேண்டும் என்று சொல்லவரவில்லை. ஆனால் அவை வேண்டும். அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.
-0-0-0-0-0-0-

உப்புமாயிஸ்ம் வாழ்க! பொங்கலியம் வளர்க!!

உப்புமாயிஸ்ம் வளர்ந்து பொலிந்து தீவிரவாத உப்புமாவோயிஸ்மாகப் பரிணாம வளர்ச்சியடைக!!

உப்புமாகொண்டான் புகழ் ஓங்குக! உப்புமாஉதியன் நெடும்தொடர்பதிவுச்சேரலாதன் தொடர்ந்து கிண்டுக!!

-0-0-0-0-0-

பின்குறிப்பு:மேலதிக உப்புமா கிண்டல் வகைகளுக்கு நீங்கள்,  நிசப்தம் பதிவுகளில் ஒரு மாதிரியான மாதிரி என இதனைப் படியுங்கள் எனச் சொல்லிவிடலாம்தான். ஆனால் சொல்லவில்லை. அதற்காக, அப்படிச் சொல்லவேமாட்டேன் என்று அர்த்தம் இல்லைதான். ஆகவே அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.

நமக்கெதுக்கு வம்பு. நன்றி.

அலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்…

11 Responses to “உப்புமாவோயிஸம்”


 1. ஃபேஸ்புக் தமிழன்
  ஆதித்தமிழன் கடலோரத்தில் கிடைத்த உப்பையும், மலையோரத்தில் கிடைத்த மாவையும், நதியோரத்தில் கிடைத்த நீரையும் வைத்து சமைத்ததே உப்புமா என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

  பொதுவான இணைய திராவிட சொம்பு
  கடலையே காணாத ஆரியர்கள் மலையுப்பை வைத்து செய்வதெல்லாம் உப்புமாவாகாது. கடலுப்பில் செய்வதே சுத்த சுயவுப்புமா.

  எழுத்தாளன் என்றால் எவன் மதிக்கின்றானய்யா இங்கு, உப்புமாவெல்லாம் எழுத்தாளன் தின்பதா? இதை தின்று தின்றுதான் பாரதியும், புதுமைபித்தனும் போய் சேர்ந்தார்கள். அவர்களுக்கு சோறு போடாமல் உப்புமாவை போட்டு சாகடித்த இந்த சமூகத்தில் நான் வாழ்வதே உச்சகட்ட வேதனை. இதற்குதான் சீனா செல்ல வேண்டும் என்று சொல்கின்றேன்.

 2. Leny Says:

  இதற்கு மேலும் அவர் இப்படிப்பட்ட உப்புமா கட்டுரைகள் எழுதுவாரென்று எனக்குத் தோன்றவில்லை. அதாவது தோன்றலாம். ஆனால் இப்போது இல்லை. ஆனால் தோன்றுவதை பற்றி வள்ளுவரே கூறியிருக்கிறார். நமக்கெதுக்கு வம்பு. கூடிய விரைவில் ஹங்கேரிய திரைக்காவிய விமர்சன உப்புமாவை அங்கே எதிர்பார்க்கிறேன். டாரெண்டில் இனாமாக ரவை கிடைக்கும் போது சும்மா விடுவானேன்.

 3. hemaravii Says:

  உஷ் …அப்பா …உப்புமாவே தின்றுவிடலாம் .
  வாழ்த்துக்கள்

 4. SivaKumar Viswanathan Says:

  உங்கள் இஷ்ட்டத்திற்கு உப்புமாவைப் போட்டு தாளிப்பதை என்னால் இனிமேலும் பொறுக்க முடியாது . இந்தச் செய்தியை படித்தபிறகாவது உ.மு.க வின் பின்னே அணிதிரளுங்கள்.
  http://m.timesofindia.com/nri/us-canada-news/Up-Up-Upma-Indian-chef-wins-100000-prize-in-New-York/articleshow/8881462.cms

 5. Anonymous Says:

  vaa.ma rocks!!!

 6. Aathma Says:

  I like to share an interesting fact. It is not uppuma..it is ubbuma.. because the kurunai ubbufy in water..

 7. Aathma Says:

  It was so

 8. Sridharan S Says:

  //அண்ணே! உங்களோட தெகிர்யம் எனக்கு ஆவேசத்தை அளிக்கிறது // I’m in stitches.

 9. Anonymous Says:

  நீங்கள் சொல்லாமலே வாம ணார் பதிவு என்று சொல்லிவிடலாம் தான்.இருந்தாலும் எனக்கெதுக்கு வம்பு. அவராச்சு நீங்களாச்சு


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s