மும்பய், பல பேராசிரியர்கள், சில மாணவர்கள் – குறிப்புகள்

March 19, 2016

கடந்த சில தினங்களை மும்பய் மாநகரில் கழிக்கவேண்டியிருந்தது; என்னுடைய நேரம், ஆனந்தமாக – டாடா சமூக அறிவியல் கழகம் (Tata Institute of Social Sciences), ஹோமிபாபா அறிவியல் கல்வி மையம் (Homi Bhabha Centre for Science Education ) சார்ந்த பல போற்றத்தக்க பேராசிரியர்களுடன் ‘அதிகாரபூர்வமாகவும்,’ சிலபல மாணவர்களுடன் இலக்கற்ற உரையாடல்களுடனும் கழிந்தது.  (பின்புலம்: அரசுப் பள்ளிகள், கல்வி, நாம் என்ன செய்யவேண்டும், எந்தவகையான தொழில்நுட்பங்களை நாம் உபயோகிக்கலாம், ஆசிரியர்களுக்கு உதவுவது எப்படி, பாரதமுழுவதற்குமான வீச்சை ஏகோபித்துக் கட்டியெழுப்புவது எப்படி… … இன்னபிற)

ஆனால், பேச்சு பேச்சு பேச்சு பேச்சு பேச்சு பேச்சு… …

…உரையாடல்கள் முக்கியமென்றாலும், இம்மாதிரி அளவளாவல்களின் மூலமாகத்தான் பலவிஷயங்கள் சாத்தியப்படும் என்றாலும், சம்பந்தப்பட்ட பெரும்பாலானவர்களின் விழைவுகள் உண்மையானவை என்றாலுமேகூட — எனக்குச் சதாசர்வகாலமும் பேசிக்கொண்டேயிருப்பது ஒத்துவராது. எத்தையாவது கழற்றாமல், முடுக்காமல், கையில் க்ரீஸ் பிசுக்குக் கறையாகாமல் இருக்கும்  எந்தவொரு நாளும் — முழுமையானதில்லை, அனுபவிக்கப்படவில்லை எனும் பிரமையில்தான் நான் என் காலட்சேபத்தைக் கடந்த பலபத்தாண்டுகளாகச் செய்துகொண்டிருக்கிறேன்.

ஆகவே, கொஞ்சம் கஷ்டப்பட்டுவிட்டேன். சிலருடைய உள்ளீடற்ற அலங்கார, ஜோடனையுடன்கூடிய ஜேர்கன்தனமான (=’development jargon’) வெட்டிப் பேச்சுகளை மேலதிகமாகக் கேட்கும்போது,  மலைபோலக் குவிந்திருக்கும் பிறவேலைகளைப் பற்றிய நினைவும் வந்துகொண்டிருந்தது. ஆனாலும் பொதுவாகவே மதிக்கப்படவேண்டியர்களின் சமூகத்திலிருக்கும்போது நம்முடைய அசௌகரியங்களைப் பொருட்படுத்தக்கூடாது என, எனக்கு நானே எஸ்ராமகிருஷ்ணத்தனமாகச் சொல்லிக்கொண்டேயிருந்தேன். சரி.

ஆனால், இப்பதிவு அக்கஷ்டத்தைப் பற்றியல்ல.

ஹோமிபாபா அறிவியல் கல்வி மையம் சார்ந்த, என் மனதைக் கவர்ந்த சில அழகான விஷயங்களைப் பற்றி எழுதலாம் என்றால், எனக்குக் கொஞ்சம் பயமாகவே இருக்கிறது; ஏனெனில் – மேதகு அரவிந்தன் கண்ணையன் அவர்கள், இதற்கு உடனே ஒரு எதிர்வினையாற்றி – ‘ஹ்ஹ! அமெரிக்காவில் இல்லாத அறிவியல் கல்வியா? ராமசாமியின் பாரதத்துக்கு, அறிவியலும் ஒரு கேடா?? அய்ன்ரேன்ட் அறிவியல் பார்வையின் தேவை, இந்தியாவுக்குத் தேவை!!‘ என்கிற ரீதியில் எழுதினால் – எனக்கு மேலும் கோபம்வந்து அரவிந்தன் கண்ணையன் அவர்களின் மேதமையைப் பற்றி விலாவாரியாக (= விலா நோகச் சிரிக்க) எழுதவேண்டிவரும். தேவையா?

ஆகவே இது பற்றியும் எழுதவில்லை, சந்தோஷமா? ;-)

-0-0-0-0-0-

என் இளமைக்காலத்திலிருந்து என்னுடைய நண்பர்களில் ஒருவனாகத் தொடர்ந்து இருக்கும் (இம்மாதிரி விஷயங்கள் எனக்கு மாளா ஆச்சரியம் தருபவை – ஏனெனில் எனக்கே என்னைப் பொறுத்துக்கொள்வது பல சமயங்களில் ஒரு கஷ்டமான விஷயம்!) ஒருவன் இந்த டிஸ் நிறுவனத்தில் பேராசிரியனாக இருக்கிறான்.

இவன், ‘இடதுசாரிக்காரன்’ என அறியப்படுபவன் – ஆனாலும் பெரும்பாலும் முன்முடிவுகளல்லாமல் (எடுத்துக்காட்டுகளாக: மோதி = ஹிந்து வெறியர்; ஓவைஸி = சமாதானப் புறா; கண்ணையாகுமார் = படிப்பில் சூரப்புலி என்பதற்கு அப்பாற்பட்டு, மகாமகோ மாணவர்தலைவர்! ஆமிர்கான் = ஒரு திறமைசாலி திரைப்படநடிகர்; சிவாஜிகணேசன் = நடிகர் திலகம்; கமல்ஆ!சான் = ‘World Hero’  போன்ற புரிதல்களல்லாமல்) பிரச்சினைகளை அணுகுபவன். சமனத்தன்மை மிகுந்தவன் (ஹ்ம்ம்… எவ்வளவுதடவை இவனுடன் மாரடித்திருக்கிறேன்! ;-)) …கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருப்பவன், ஞானத்தின் கதவுகளைத் தொடர்ந்து உதைத்துத் திறந்துகொண்டிருப்பவன்.

வெறுமனே கல்லூரிவளாகத்துக்குள்ளே (அல்லது சொகுசான ஐடி வேலைச் சூழலுக்குள்ளே) உட்கார்ந்துகொண்டு சமூகமாற்றங்களின் அவசியத்தைப் பற்றி மைல் நீளத்துக்குப் பேசி/எழுதி வராமல், சமூகப்பிரச்சினைகளைப் பற்றி – ங்ஙொம்மாள, கொமாஸ்தாமாரீ  வூட்ல ஸேஃபா வொக்காத்துக்கினே அல்சிக்கினு இர்க்காமல் – களங்களிலும் பணியாற்ற முயல்பவன்.

In theory, theory may be good, but — in practice, only practice is good – என்பதையும் உணர்ந்தவன். செழுமையான உலக அனுபவங்களைப் பெற்றவன்.

ஆனாலும் அறிவுஜீவிகளின் வியாதிகளான (இந்த வியாதிகளுக்குச் சாதக அம்சங்களும் இருக்கின்றன என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்!) – அறிக்கை விடுதல், கையெழுத்துகளைக் சேகரித்தல், சவால் விடுதல்,பொங்குதல், எதற்கெடுத்தாலும் அரசமைப்புகளைக் கரித்துக்கொட்டல், பொத்தாம்பொதுவாகத் தொழில் நுட்பங்களுக்கெல்லாம் எதிரான நிலைப்பாடு – போன்றவற்றிலும், சில சமயம் தயக்கத்துடனேயும் பங்கு பெறுபவன்.

ஏண்டா உனக்கு ஒவ்வாத விஷயங்களையும் ஆதரித்துக் கையெழுத்துப் போடுகிறாய் என்றால், அவன் பதில் “ஊரோடு ஒத்துவாழ் – I don’t want to raise eyebrows by taking a contrarian view – you do not know about the left academic mafias!” ஏண்டா பாவி, நீயே உன்னை இடதுசாரி என்று சொல்லிக்கொள்கிறாய், பின் ரவுடிகும்பல் என்கிறாய், என்னடா இதெல்லாம் என்று கேட்டால், சோகத்துடன் சிரிக்கிறான்.

-0-0-0-0-0-0-

ஒரு நாள் மாலை எட்டு மணிவாக்கில் ஆரம்பித்து, இவனுடன் மாணவர் போராட்டம், சமூகவியல் சார்ந்த டிஸ் மேற்படிப்பின் தன்மை, ஜேஎன்யு கல்வி நிலவரம், மாணவர்களின் ஈடுபாடுகள், மேற்படிப்புகளின்-ஆராய்ச்சிகளின் தரம் என்பது பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு புதிய விஷயமும், புள்ளிவிவரத்தையும் தெரிந்துகொள்ளவில்லை என்றாலும் –தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கும்-சிந்தனை செய்துகொண்டிருக்கும் புத்திசாலி ஆசாமிகளுடன், பகடிகளை ரசிப்பவர்களுடன், நகைச்சுவை உணர்ச்சி அதிகமானவர்களுடன், அரசியல்சரித்தனத்துடன் உளறிக்கொட்டாதவர்களுடன் — அளவளாவுவதற்குக் கொடுத்துவைத்திருக்கவேண்டும்… நான் கொடுத்துவைத்தவன்தான். :-)

சுமார் ஒன்பதரைமணி வாக்கில் அவனுடைய பிஹெச்டி மாணவர்கள் பெண்களும் ஆண்களுமாக இளைஞர்கள் ஏழெட்டுபேர் வந்தார்கள் – ஏதோ ரிவ்யு கூட்டம். நானும் ஓரமாகச் சுவற்றுப் பல்லிபோல் உட்கார்ந்துகொண்டு பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் நண்பன் கொஞ்சம் கறாராகவே அக்கூட்டத்தை நடத்தினான். அழகான பிஹெச்டி காமிக்ஸ் நினைவு வந்துகொண்டேயிருந்தது! ;-)

சுமார் பத்தரை மணிவாக்கில் இது முடிந்தது. இறுக்கம் தளர்ந்தது. ஒருவழியாக முடிஞ்சுதுராப்பா என ஆசுவாசப் படுத்திக்கொள்வதற்குள்  சூடான சாய்,  வடாபாவ் சமேத தம்பதியாக வந்தவுடன் (உற்சாகம் மிகுந்த இளைஞர்களுக்கு நேரம்காலமென்பதே இல்லை – சாப்பாட்டுவிஷயத்திலும், சமூகஊடகப் பயன்பாட்டிலும்!) அரட்டை ஆரம்பித்தது.

…ஒரே தீப்பொறி பறக்கும் அரசியல். ‘நான் இந்தியாவின் பிரதமராக இருந்தால் என்ன செய்வேன்’ எனச் சுவாரசியமான பார்வைகள். நரேந்திரமோதியின் விவசாயக் கொள்கைகள் ஏன் சரியில்லை எனத் தவறான புரிதல்கள். பின்புலங்களைப் புரிந்துகொள்ளாத வாய்ச்சவடால் ‘இன்ஸ்டன்ட்’ கருத்தாக்கங்களும், தாம் பிடித்த முயலுக்கு ஐந்தே கால்கள் எனும் அட்ச்சுவுடலும் (=ஈவேரா-வின் ஆளுமையினால், திராவிட இயக்கங்களினால்தான், தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் நச்சுப்பாம்பு(!) வளரவேயில்லை; ஆகவேதான் அங்கு, ஒருவிதமான ஜாதிப்பிரச்சினையுமில்லை!)… மனிதவுரிமைத்தன வசீகரமும், கறுப்பு-வெளுப்பு மட்டுமே சார்ந்த உலக அவதானிப்பும்…

தமிழகத்தில் ஜாதிப்பிரச்சினையேயில்லை எனத் திராவிடர் சொன்னால் பரவாயில்லை, புளுகல்களைத் தவிர வேறெதையும் அறியாதவர்கள் அல்லவா அவர்கள்! ஆனால், இதைச் சொன்னது, பெருமைவாய்ந்த நிறுவனத்தில், சமூகஅறிவியலில் பிஹெச்டி செய்துகொண்டிருக்கும் மாணவர்கள்!

அணுசக்திக்கெதிராக என்று போராடுபவர்களுக்குப் பொதுவாக, ஒரு விதமான அறிவியல் பின்புலமுமேயில்லை என்பதை மறுபடியும் மறுபடியும் நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வேதனைவேறு.

ஃபேஸ்புக்குக்கு எதிராகப் போராடிவிட்டு, அது நம் வாழ்க்கையை/இணையவுரிமையை ஏகபோகமாகத் திரித்து ஒடுக்க முயல்கிறது என்று சொல்லிவிட்டு –  ஆனால் நிமிடத்துக்கு நிமிடம் தன்னிச்சையாக (அனிச்சையாக?) தம் ஸ்மார்ட் ஃபோனில் வழியாக தம் ஃபேஸ்புக் பக்கங்களைப் பார்க்கும் முரண் என்னைக் கவர்ந்தது.

இருந்தாலும்,  சுவற்றோரப் பல்லியாக இருக்கத்தான் முயற்சித்தேன். ஏனெனில் இளைஞர்களின் ஆர்வமும், தங்கள் கருத்துகளை உரத்துச் சொல்லும் பாணியும், விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத தன்மையும் எனக்கு என் இளமையை நினைவுபடுத்திக்கொண்டிருந்தன.

எனக்கு, மனிதர்களை ஆழ்ந்து கவனிப்பது என்பது ஒரு பிடித்தமான விஷயம். ஆகவே ஒன்றுமே பேசாமல் உட்கார்ந்துகொண்டிருந்தேன். என் மேலான கருத்துகளைச் சொல்லவேண்டிய அவசியமே எனக்கு ஏற்படவில்லை; ஏனெனில், அவரவர்களுக்கு அவரவர் வழி என்பதில் எனக்கு ஐயமேயில்லை. சொல்லித் தெரிவதில்லை, சிந்திக்கும் கலை.

 -0-0-0-0-0-

…ஆனால், என் சிந்தனைப் போக்குகளை(!)  நன்றாக அறிந்துள்ள என் நண்பன் – இத்தனை நேரமாக எல்லா உரையாடல்களையும் கேட்டுக் கொண்டிருக்கிறாயல்லவா? நீ என்ன சொல்கிறாய், பலவருடங்களாகக் களப்பணியாளனாக இருக்கும் உன் கருத்துகளையும் கேட்க எங்களுக்கு ஆசை  – என்று சொன்னான். தன் மாணவர்களுக்கு ஏதாவது அறிவுரை(!) சொல்லமுடியுமா என்றும் கேட்டான்!  (அவனுடைய கருத்தில் – பெற்றோர்கள் சொல்வதைக் கேட்பதை விட, குழந்தைகள், பிறர் சொல்வதையே அதிகம் மதிப்பார்கள்; ஆகவே நன்கு அறிமுகமான ஆசிரியர்களின் சொல்லைக் கேட்பதை விட, மாணவர்கள்,  பிறர் சொல்வதைக் கேட்டுக்கொள்வதுதான் நடக்கும்; familiarity breeds contempt etc)

மேலதிகமாக, அம்மாணவர்களுக்கு என் பிரதாபத்தைப் பற்றி விவரித்தான்.  ஆகவே, எனக்கு அவசரமாக மூத்திரம் போகவேண்டிவந்ததால் ஐந்து நிமிடம் போல ஆசுவாசம் செய்துகொண்டுவந்தேன்.

நான் சொன்னேன்: நான் ஒரு வெறும் பேச்சலர் பட்டதாரி மட்டுமே; எனக்கு கல்லூரிவளாக ஆராய்ச்சிச் சூழல் பற்றிய நேரடி அனுபவம் இல்லை. மேலும், உங்களுடைய கருத்துகளைச் சமைத்தெடுத்துக்கொள்வதற்கான உங்கள் உரிமையை மதிக்கிறேன். நான் ‘அந்தக் காலத்துல நாங்க எல்லாம் இப்டியா இருந்தோம்!’ என்று பிலாக்கணமிடும் அரைகுறையல்லன். அல்லது ‘இந்தக் காலத்துல உங்களுக்கு இருக்கிற வசதிகள் எங்களுக்கு இருந்திருந்தால் நாங்க எங்கியோ போயிருப்போம்’ என்று சொல்வதும் பிடிக்காது. உங்களுடைய உற்சாகமும், தைரியமும், காரணகாரியங்களைப் பற்றிக் கவலைப்படாத தன்மையும், ‘காலா, உன்னை நான் மிதிக்கிறேன்’  (sense of immortality) எனும் மனப்பான்மையும், ஹார்மோன்களால் உந்தப்பட்ட உங்கள் வசீகரமும் – எனக்குப் பிடித்தமானவை.

மேலும் – ‘நானும் இளம்வயதில் உங்களைப்போலத்தான் இருந்தேன், இப்போது பாருங்கள், வேறெங்கேயோ இருக்கிறேன், உங்களுக்கும் அப்படித்தான் ஆகும், நீங்களும் வளர்ந்துவிடுவீர்கள்’ – என்று செல்லமாக மட்டம் தட்டவும் மாட்டேன். நான் அறிவுரை-கிறிவுரை கொடுத்து என்னையும் உங்களையும் கொச்சைப் படுத்தவேண்டிய அவசியமேயில்லை.

எனக்கு என் வழி, உங்களுக்கு உங்கள் வழி. உங்கள் காலகட்டம் வேறு, சூழல் வேறு. என்னைப் பொறுத்தவரை, எனக்கான அறிவுரையாக எங்கள் தமிழ் நாட்டின் பாரதி அவர்களின் பிரார்த்தனையையும், ராபர்ட் ஹெய்ன்லெய்ன் அவர்களின் வரிகளையும் வைத்திருக்கிறேன். அவ்வளவுதான். எந்த எழவைப் பற்றியும் தொடர்ந்த மறுபரிசீலனையில் இருக்கும் நானும் ஒரு மாணவனே.

சரி. நீங்கள் அனைவரும் உங்கள் பிஹெச்டி ஒருவழியாக முடிந்து (சிரித்து விட்டார்கள்!) , உங்களுக்குப் பிடித்தமானவராக ஆக என் வாழ்த்துகள். நன்றி.

-0-0-0-0-0-0-

இளைஞர்கள் சென்றவுடன், என் நண்பன் கோபத்துடன் கேட்டான் – டேய், ஏண்டா இப்படிச் செய்தாய். ஒரு அரிய வாய்ப்பைத் தவற விட்டுவிட்டாயே! சொதப்பி விட்டாயே, பாவி! தரமான இந்தியப் பிரஜைகள உருவாக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருக்கிறாயே! ஆனாலும் இப்படிச் செய்துவிட்டாயே… … என்றெல்லாம்.

…எனக்கு, என் மரியாதைக்குரியவர்களில் ஒருவரான அந்தனி டிமெல்லோ அவர்களுடைய சிறு குறிப்பு ஒன்று நினைவுக்கு வந்தது. அவனிடம் சொல்லவும் சொன்னேன்.

OPENNESS

An anxious couple complained to the Master that their son had abandoned the religious traditions of the family and proclaimed himself a freethinker.

Said the Master, “Not to worry If the lad is really thinking for himself, the Mighty Wind is bound to arise that will carry him to the place where he belongs.”

  (பக்கம் 150, One Minute Wisdom, Anthony de Mello, 1990)

எனக்கு டிவைன்வின்ட், மைட்டி வின்ட்,  குசு என்பதிலெல்லாம் நம்பிக்கையில்லை. ஆனால் இவர் சொல்லவருவதைப் புரிந்துகொள்கிறேன்.

இந்தப் ஆன்மிகப் பெருங்காற்று/சூறை என்பது –  மறுபரிசீலனைகளையும், தொடர்ந்து செழுமைப்படுத்திக்கொள்ளல்களையும், விழைந்துபெறும் செறிவான அனுபவங்களால் வரும் படிப்பினைகளையும், சுற்றுச்சூழல் குறித்த மரியாதையையும் இன்னபிற கல்யாணகுணங்களையும் உள்ளிட்ட மனப்பான்மையைக் குறிக்கிறது – எனப் புரிந்துகொள்கிறேன்.

ஆகே, இவ்விளைஞர்களில் பெரும்பாலோர், வரப்போகும் மகோன்னதக் காலகட்டங்களில், மதிக்கத்தக்க பிரஜைகளாகத்தான் உருவாகச் சாத்தியக் கூறுகள் உள்ளன என நம்புகிறேன்.

ஆகவே, எதிர்காலத்தைக் குறித்துக் கவலைப்பட்டுக் கவலைப்பட்டு வழுக்கை மண்டையை வரவழைத்துகொள்வதற்குப் பதிலாக, நம்மால் என்ன முடியுமோ அதனைச் சரியாக, திறம்படச் செய்தால் போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்தோ என்ன எழவோ!

முடிந்தது.

2 Responses to “மும்பய், பல பேராசிரியர்கள், சில மாணவர்கள் – குறிப்புகள்”

  1. Ramanan Says:

    So, does social science mean neither science nor social ? :(


    • Personally, I would not append ‘science’ to ‘social’ at all – because of three reasons: 1) lack of complete understanding and mapping of the agents being studied 2) the lack of the linear cause-effect narrative possibilities and 3) non-repeatability (and lack of control and untestability thereof) of events that are central to social stuff and..

      … It is galling that – in spite of all the three above, the rabid stand of many otherwise learned folks belonging to this ‘social’ studies that it is scientific, after all!

      May be in the age of ‘new machines’ study of societies and individuals will get near ‘sciences.’

      And, in TISS, of say 2000 researchers (phd+ candidates + normal graduate school guys), my sample of just 7/8 guys is not really representative, I think and hope -but my prof pal says that is fairly representative.

      About the ‘smart’ness of these lads, I do not have any doubt all – but they are not at all moored in the relevant Indian social contexts and they jump to conclusions – which is not exactly scientific.

      But, we all learn and live and of course die and get recycled.

      I always pin my hope on those stellar individuals who would miraculously emerge from the morass of mediocrity that is omnipresent in our academia (and in our civil-society) – especially in the ‘social studies’ circles.

      Yes, sometimes I like to believe in miracles. :-)

      There is a reason for hope.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s