பேத்துரிமை: இந்தியர்களின் முக்கியமான அடிப்படை உரிமை
February 27, 2016
அய்யன்மீர்! இது வெறும், அற்ப, பேச்சுரிமையல்ல. மாறாக, இது மகாமகோ பேத்துரிமை!

நம்முடைய இப்படிப்பட்ட தொடர்ந்த பயிற்சி காரணமாக, பல சமயங்களில் நமக்கு முன்னால் ஊடகப்பேடித்தனக் கருவிகளெல்லாம் இல்லாமலேயே உளறிக் கொட்டுகிறோம். அதாவது, பரிமாண வீழ்ச்சியடைந்த நம் உளறும்திறன், நம் அடிப்படை இயல்பாகிவிடுகிறது. ஆகவே, எதிர்காலத்தின் நம் மரபணுக் கட்டமைப்பு ஜோதியில் இது சேர்ந்தும்விடும், கவலை வேண்டேல்.
-0-0-0-0-0-0-0-
ஹ்ம்ம்… ஏனிப்படியாகிறது? அடிப்படையில் கொஞ்சமாவது வேலை செய்யும் மூளை உடையவர்களுக்குக் கூட இந்த வியாதி வந்து விடுகிறதே!
உங்களுக்கு, இப்போது ஒரு சந்தேகம் வந்தால் நியாயமானதே! எவன் என்ன உளறிக் கொட்டியிருப்பதால், இவன் இப்படி விரக்தியில் எழுதியிருக்கிறான் என…
மன்னிக்கவும். நான் இதைப் பற்றி ஒரு பெரிய எழவையும் சொல்லப்போவது இல்லை; ஆனால் ஒரு சின்ன எழவைமட்டும் சொல்லிவிட்டு அகல்கிறேன். அமெரிக்காவாழ் என்ஆர்ஐ அறிவிலி நண்பன் ஒருவன், இந்த ஜந்துக்களின் வழமையேபோல தமிழக அரசியல் பற்றிக் கரிசனத்துடன் உளறினாலாவது பரவாயில்லை – ஆனால் இவன் முகாந்திரமேயில்லாமல் உளறியிருப்பது அமெரிக்க தேர்தல் ஜுரத் தொடர்பான தன்னுடைய மேலான கருத்துகளை.
ஒரு விதமான பின்புலமுமில்லாமல் அறிவிலி மூட்டையைக் கழற்றி அவிழ்த்துவிடப்படும் கருத்து எலுமிச்சம்பழங்களை! அமெரிக்க அரசியல் நிலவரத்தையும் அறியவில்லை. அதன் வரலாற்றுப் பின்புலமும் தெரியவில்லை. அவனுடைய கச்சாப்பொருட்களென்பவை: டீவி பேச்சுக்கச்சேரிகளும் உரையாடல்களும்தான்; அதுவும் அவற்றின்மீதான அரைவேக்காட்டுப் புரிதல்கள் மட்டுமேதான், அவனுக்கு லபித்திருக்கிறது; ஆனால், பெத்த பேச்சு! டொனல்ட் ட்ரம்ப், ஹில்லரி க்லின்டன் என – ஒரு விதமான அரசியல் பயிற்சியோ, ஈடுபாடோ, அறிவோ இல்லாமல்… ஊக்கபோனஸாக, மாபெரும் யூதச் சதித்திட்டக் கதையாடல்கள்வேறு.
…பொறுக்கமுடியவில்லையப்பா, பொறுக்கமுடியவில்லை. அவனவனுக்கு ஸாகரிகா கோஷ் அல்லது அர்விந்த் கெஜ்ரீவால் என நினைப்பு. இவர்கள் போன்றவர்கள் மட்டுமே போதுமே, இவனும் மேலதிகமாக வேண்டுமா? :-(
இவ்விஷயத்தில் வேறொன்றும் சொல்வதற்கு இல்லை. மன்னிக்கவும்.
இது சென்றவாரம் நடந்த (இன்னொரு) விஷயம்.
குறிப்பிட்ட சில விஷயங்களைப் பற்றி, சிலபல நெடுநாள் நண்பர்களுடன் அளவளாவ, பலப்பல வருடங்களுக்குப் பின் – பெங்களூர் ஸெய்ன்ட் மார்க்ஸ் சாலையில் உள்ள கோஷி’ஸ் ரெஸ்டாரென்ட் சென்றிருந்தேன். முகப்பு கொஞ்சம் ஜோடனை செய்யப்பட்டிருந்தாலும், கோஷி’ஸ் தன் அடிப்படைகளை மாற்றிக்கொள்ளவேயில்லை. தேவகௌடாக்களுக்கு நன்றி.
மூன்றாம் சுற்றுக் காப்பிக்குடுவைகளுடன் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, இந்த இளைஞன் வந்தான்; தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டான். இவன், அங்கிருந்த என் நண்பன் ஒருவனின் அறிமுகம்; ஏதோ ஒரு ‘ஐடி ஸ்டார்ட்-அப்’ வைத்திருக்கிறேன் என்றான். ஏதேதோ தொடர்பேயில்லாமல் பேசிக்கொண்டிருந்தான். இந்திய சமூகத்தைப் பற்றியும், தொழில்முனைவோனாக இருப்பதில் உள்ள பிரச்சினைகள் பற்றியும், சரியான ஆட்கள் கிடைக்காமல் இருப்பது பற்றியும், அரவிந்தன்கண்ணையன் அவர்கள் போலவே அமெரிக்காவின் மேன்மையைப் பற்றியும்… ஒன்றுக்கொன்று தொடர்பில்லை. ஆனால், இதுவும் சரிதான். நாமெல்லாருமே அப்படித்தானே!
…எங்களுடைய முக்கியமான உரையாடல்கள் ஏற்கனவே முடிந்திருந்தபடியால், பேச்சு ‘நீ இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறாய்?‘ எனும் வழக்கமான தடத்துக்குச் சென்றது. நானும், என் வழக்கம்போலவே, நானும் ‘சுக ஜீவனம்‘ என்றுச் சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தேன். அதாவது அப்படி நினைத்துவிட்டேன்.
ஆனால், அந்தப் பையன் துள்ளிக்குதித்துக்கொண்டு வந்து – நாங்கள் ஆப்ஸ் (=apps) சிலவற்றை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம், இரண்டு வருடங்களில் ஏதாவது பெரிய நிறுவனத்தால் வாங்கப்பட்டுவிடுவோம், எங்களுக்கு நிறைய ஐடியாக்கள் இருக்கின்றன… … – என்கிற ரீதியில் மூச்சு விடாமல் பேசினான்.
சரி. நான் கடந்த சில மாதங்களில் சில இம்மாதிரி ‘ஆப்ஸ்’காரர்களுடன் (‘ஆப்ஸ்’ அசைக்கும் மந்திகள்?) பேசி, ஏற்கனவே வெறுத்துப் போயிருப்பவன். வணிக ரீதியில், நெடுநாள் நோக்கில் என்ன செய்யலாம் என்பதற்கு ஒரு காத்திரமான திட்டமும் இல்லாமல், இம்மாதிரி ‘ஆப்ஸ்’ ஒன்றிரண்டை உருவாக்கி, பெரிய நிறுவனங்களால் ஆட்கொள்ளப்படுவதையே கனவாகக் கொண்டு, புற்றீசல் போல இந்த ஆப்ஸ்காரர்கள் கிளம்பியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்திருப்பவன்.
…. ஆகவே, அவன் சொல்வதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவன் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக்கொண்டிருந்தான். எனக்கு அடுத்த ஐந்து நிமிடங்களில் கிளம்பவேண்டும்.
அந்த சமயத்தில், அந்தப் பையனுடைய அறிமுகம் (என் நண்பன்) அவனிடம் சொன்னான் – ராமுக்கு வேறுவேலையில்லை, தன்னார்வ பஜனைதான் செய்துகொண்டிருக்கிறான், நீ ஏன் இவனை இப்போதே நேர்காணல் செய்யக் கூடாது? அவன் உங்களுடன் சேர்ந்தால் அது நன்றாக இருக்கும். பார், இவனுடைய நரைத்தமுடியை, ஒவ்வொரு முடியும் ஒரு காத்திரமான அனுபவத்துக்குச் சான்று… …
எனக்குப் படுபீதியளிக்கும் வகையில், அந்தப் பையன், இந்த உந்துதலை மிகத் தீவிரமாக அணுகிவிட்டான். ஆ!
என்னிடம் கேட்டான் – நான் உன்னிடம் சில கேள்விகளைக் கேட்கலாமா?
நான் சொன்னேன் – தாராளமாக; ஆனால் நான், அடுத்த சில நிமிடங்களில் கிளம்பவேண்டும்; மேலும், எனக்கு உங்கள் நிறுவனத்தில் சேர விருப்பமில்லை. மன்னிக்கவும்.
அவன் விடவில்லை; தொடர்ந்தான் – சரி, நான் இரண்டு கேள்விகளை மட்டும் கேட்கிறேன்; முதல் கேள்வி: உன்னுடைய மிகப்பெரிய பலவீனம் எது? (=“What’s your greatest weakness?”)
என் பதில்: ஹ்ம்ம்… எனக்கு, முட்டாள்களுடன் சுத்தமாக ஒத்துவராது என்பதாக இருக்கலாமோ?? (=”Um… That, I don’t suffer fools gladly??”)
கூட இருந்த நண்பர்கள், உடனே சிரித்துவிட்டார்கள்.
ஆனால் எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது; அவன் தொடர்ந்தான்: சரி, உன்னுடைய மிகப்பெரிய வலிமை எது? (=“What’s your greatest strength?”)
உண்மையாகவே விக்கித்துப் போய்விட்டேன்; எனக்குச் சிரிப்பைவிட, வருத்தம் தான் அதிகமாகி விட்டது. எப்படிப்பட்ட ஐடி இளைஞர் சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்! :-((
…ஆகவே, நன்றியென்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டேன்.
அல்லது, இம்மாதிரி கேள்விஞானிகளின் அடிப்படை உரிமைகளில் ஒன்றா இந்தப் பேத்துரிமை?
-0-0-0-0-0-0-0-
குறிப்பு: இப்பதிவில், திராவிடர்களின் மேற்படி பேத்துரிமையைப் பற்றி எழுதுவதைத் தவிர்த்துவிட்டேன். ஏனெனில், அவர்கள் கீழ்கண்டவாறெல்லாம் ஆரம்பித்து விடுவார்கள்:
- உலகின் முதல் பேத்தல், திராவிடப் பேத்தல்!
- கள்தோன்றி மப்புதோன்றாக்காலத்திலிருந்தே திராவிடன் ஒரு பேத்தாளன்!
- பேத்தல், பேத்தியம், பேந்தப்பேந்தல்!
- பேத்தினால்தால் பிள்ளையா?
- பேத்திமான் பத்திமான் ஆவான்! (அதாவது: ஊடகங்களில் பணியாற்றி, பத்திபத்தியாக எழுதித் தள்ளுவதற்கு முக்கியமான பண்பு: பேத்தல்)
ஆனால், நம் போன்ற சாதாரணத் தமிழர்களுக்கு இதெல்லாம் தேவையா?
முக்கியமாக, எனக்கு இந்த பேத்துரிமை பற்றிய பேத்துரிமை தேவையா?
நிறுத்திக்கொள்கிறேன்.
நன்றி.
-0-0-0-0-0-0-0-
- திராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை!)
- போங்கடா, இதுதாண்டா *&#@! பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)
- தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??
- ‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…
- சில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)
- அலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )
February 28, 2016 at 14:53
ராம்,
பேத்துவது எங்கள் பிறப்புரிமை என்ற தமிழ் பழமொழி மறந்துவிட்டதா.