[அலி அம்ஜெத் ரிஸ்வி] மிதவாத முஸ்லீம்களுக்கு ஒரு கடிதம்
February 29, 2016
அலி அம்ஜெத் ரிஸ்வி (Ali A. Rizvi) எனும் டொரன்டொ நகர இளைஞர் எழுதியுள்ள மிக அழகான, தெளிவான, மிகமிக முக்கியமான கட்டுரையின் மொழிமாற்றம் இது. ‘மிதவாத’ முஸ்லீம்கள் எனத் தம்மைக் கருதிக்கொள்பவர்களும், இந்திய இஸ்லாமின் தொடர்ந்த பின்னடைவினால் வருத்தம் கொண்டிருக்கும், ஆனால் அதன் மேன்மையையும், வளர்ச்சியையும் விரும்பும் அனைவரும் அவசியம் இந்தக் கட்டுரையைப் படிக்கவேண்டும்.
அலி அம்ஜெத் ரிஸ்வி அவர்கள் – லிபியா, ஸவுதிஅரேபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வளர்ந்தவர்; ஒரு நவநாகரீக, மதிக்கத்தக்க முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்தவர். அமெரிக்க ஸுனி-பஃபல்லொ பல்கலைக்கழகத்தில் (+ ராஸ்வெல் பார்க் புற்றுநோய் ஆய்வுமையம்) புற்றுநோய்க் குறியியல் (oncologic pathology) படிப்பைப் படித்து, பின்னர் கனேடிய அன்டாரியோ பிரதேசத்தில் உள்ள மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியல் மேற்படிப்பும் படித்திருக்கிறார். 2011லிருந்து அவர் மருத்துவம் தொடர்பான செய்திப்பரிமாற்றங்களிலும், முஸ்லீம் சமூக மேன்மைப் படுத்தலிலும், எழுத்துப்பணியிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். டொரன்டொ நகர ராக் இசைக்குழு ஒன்றில் இருக்கிறார்கூட (மூலம்).அலி அம்ஜெத் ரிஸ்வி அவர்களின் கூக்ல்+ தளம்.
நான் மிகவும் மதிக்கும் அலி அஹெம்மத் ரிஸ்வி அவர்கள், தன்னுடைய முதல் புத்தகத்தை (= நாத்திக முஸ்லீம்: என் மதத்தை விடுகிறேன், ஆனால் என் அடையாளத்தை அல்ல! = The Atheist Muslim: Losing My Religion but Not My Identity) எழுதிக்கொண்டிருக்கிறார். …And, I just can’t wait to lay my hands on it and devour it pronto! May Rizvi’s tribe increase!
இந்த வெகுநீளக் கட்டுரையை மாய்ந்துமாய்ந்து மொழிமாற்றிய இளம் நண்பரும் தன் பெயரை வெளியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆகவே!
இது, அலி அம்ஜெத் ரிஸ்வி அவர்களுடைய கட்டுரையின் முதற்பகுதி.
-0-0-0-0-0-0-0-
மிதவாத முஸ்லீம்களுக்கு ஒரு கடிதம்
முதலில் நான் என்ன செய்யப் போவதில்லை என்பதிலிருந்து தொடங்கலாம்.
- உலகில் உங்கள் சகமதத்தினர் செய்யும் கொடூரமான அட்டூழியங்களைக் கண்டும், நீங்கள் அதைக் கண்டிக்காமல் அமைதியாக இருப்பதாகக் குற்றம் சாட்டப் போவதில்லை. உங்களில் பெரும்பாலோர் வெளிப்படையாக, ஐயத்திற்கு இடமின்றி இஸ்லாமிக்ஸ்டேட் (ISIS) போன்ற இயக்கங்களுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறீர்கள், மேலும் உங்களை அவர்களிடமிருந்து பிரித்துக் காட்டி இருக்கிறீர்கள். நீங்கள் இஸ்லாமிக்ஸ்டேட் இயக்கத்தை வெற்றிகரமாகத் தனிமைப்படுத்தி, அதன் நம்பகத்தன்மையை குறிப்பிடத்தக்க அளவுக்கு கேள்விக்குள்ளாக்கியிருக்கிறீர்கள்.
- வன்முறை ஜிஹாத் மற்றும் பலவந்தமான மத மாற்றம் போன்ற, மதஅடிப்படைவாதிகளின் செயல்களுக்கு அனுதாபம் காட்டுவதாக உங்கள்மேல் குற்றம் சுமத்த போவதில்லை. மற்றவர்களைப் போல, நீங்களும் அவர்களின் தந்திரங்களைக் கண்டிப்பது தெரியும், ஏனெனில் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் செயல்களால் அதிகமாகப் பாதிக்கப்படுவது, நம்மைப் போன்ற மிதவாத முஸ்லிம்களே.
ஆனால், மிதவாத முஸ்லீம்களின் குறைந்து வரும் நம்பகத்தன்மையைப் பற்றி நான் இங்கு பேச விரும்புகிறேன்.
-0-0-0-0-0-0-
இஸ்லாமிய அடிப்படைவாதிகள், இஸ்லாமின் முகமாகத் தங்களைக் காட்டி கொண்டு , இஸ்லாமின் குரலாகத் தங்களை முன் நிறுத்திக்கொள்கிறார்கள். பொது மக்களும் அதை நம்புகிறார்கள். எனவே நீங்கள் எப்போதையும் விட, மேலதிகமாகத் தவறாகப் புரிந்துகொள்ளப் படுவதாக உணர்கிறீர்கள்.
உங்களது ஏமாற்றம் தெளிவாகத் தெரிகிறது. மத அறிஞர் ரேஸாஅஸ்லான் — நகைச்சுவையாளர் பில் மேஹெரின் சமீபத்திய நிகழ்ச்சியில் இஸ்லாமை விமர்சிப்பதில் தாராளவாதிகளின் அமைதியை நகையாடியதை — ஒரு CNN தொலைக்காட்சிப் பேட்டியில் கண்டித்து இருந்தார். மிகவும் ஆத்திரமடைந்திருந்த அவர், “முட்டாள்” மற்றும் “வெறியன்” (Bigot) போன்ற சபை நாகரிகமற்ற வார்த்தைப் பிரயோகங்களில் ஈடுபட்டார். (அதற்காக, அவர் பின்னர் வருத்தம் தெரிவித்தார்.)
ரேஸாஅஸ்லானின் மற்ற வாதங்களைப் பிறகு பார்க்கலாம். முதலில் அவர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் கூறிய ஒன்றைப் பார்ப்போம். உங்களில் பெரும்பாலனோர் இவரின் இக்கருத்துடன் ஒத்துப்போவதை உணர்கிறேன்:
“மிதவாத இஸ்லாமியர்கள், பெரும்பாலும் அடிப்படைவாதிகளுடன் சேர்த்து சாயம் பூசப்படுகின்றனர்”
…என்பது அது. பெரும்பாலான நேரங்களில் இது உண்மையே. இது மிதவாத முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
ஆனால் இதற்காக, நீங்கள் மற்ற மதத்தினரின் அறியாமையின் மீதும், ஊடகங்களின் சார்பு மீதும் பழி சுமத்த முடியாது. ஏனெனில் மற்ற மதத்தினரோ, ஊடகங்களோ நம்மை விட அதிகமாக ஒற்றைப்படைவாதத்தை (monolithic ) முன்வைப்பவையல்ல.
பிரச்சினை என்னவெனில், உங்களுடைய குறிக்கோள் அதுவாக இல்லாவிட்டாலும் – உங்களைப் போன்ற மிதவாத முஸ்லிம்களும், இக்கருத்து நிலைநிறுத்தப் படுவதற்குக் குறிப்பிடத்தக்க அளவு காரணம் என்பதே.
இந்தச் சிக்கலைப் புரிந்துகொள்ள, அந்தப் பக்கத்திலிருந்து இது எப்படிப் பார்க்கப்படுகிறது எனப் பரிசீலிப்பது முக்கியமானதாகும்.
-0-0-0-0-0-0-0-
சொல்லுங்கள், கீழ்கண்ட கருத்துகளை / உரையாடற் போக்குகளை நீங்கள் கவனித்திருப்பீர்கள் அல்லவா?
(1) இஸ்லாமிக்ஸ்டேட் இயக்கம் தவறானது என்றும் அதைப் பின்பற்றுபவர்கள் மெய்யான முஸ்லீம்கள் இல்லை என்றும் இஸ்லாம் அமைதியைப் போதிக்கிற ஒரு மதம் என்றும், ஒரு மிதவாத முஸ்லீம் கூறுவார்.
(2) அதை மறுக்க விழைபவர் வினவுவார்:
- கொர்ஆனின் ஸுரா 4:89 ல் “இறைமறுப்பாளர்களைப் பிடித்துக் கொலை செய்யுங்கள்” என இருக்கிறதே!
- 8:12-13ல் அல்லாவையும் அவரது தூதரையும் (=மொஹெம்மத் ‘நபி’) மறுக்க விழைபவர்களுடைய விரல் நுனிகளையும் கழுத்தையும் சிதைக்குமாறும், கடும் தண்டனைகளைக் கொடுக்குமாறும், அவர்களுக்குக் கொடும் தண்டனைகளின் அச்சத்தை ஊட்டவும், அல்லா, தேவதைகளை ஏவியுள்ளார் – எனவும் இருக்கிறதே!
- 5:33ல் – மார்க்கத்தில் உள்ள தகவல்களுக்கு புறம்பான தகவல்களை பரப்புரை செய்ய விழைபவர்களை, அதாவது மார்க்கத்தை இழிவு செய்யும் அல்லது மறுதலிக்கும் படிக்குப் பரப்புரை செய்பவர்களை, “சீர்கேட்டைப் பரப்புபவர்களை” (தெளிவற்ற இச்சொற்றொடர், தெய்வ நிந்தனை மற்றும் விசுவாச துரோகம் எனப் பொருள் கொள்ளப்படுகிறது) கொல்லப்பட வேண்டுமென்றும், சிலுவையிலறையப்படவேண்டுமென்றும் – சொல்லப் படுகிறதே!
- 47:4ல், ஜிஹாதில் எதிர்கொள்ளப்படும் அல்லா மறுப்பாளர்களது தலைகள் கொய்யப்பட வேண்டும் – எனவும் போதிக்கப்படுகிறதே!
(3) ஒரு முஸ்லீம் – இவையெல்லாம் அல்லாவின் கட்டளைகள், போதனைகள் என்று மறுதலிக்க விழைவார். அல்லது – இவைகள் தவறாக விளக்கமளிக்கப்பட்டுள்ளவை என்றோ, சம்பந்தமில்லாமல் சுட்டிக்காட்டப்படுகின்றன என்றோ, அவை வெறும் உருவகம் தானேயன்றி யதார்த்தம் இல்லை என்றோ அல்லது தவறாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளவை என்றோ சொல்லிவிடுவார்.
(4) இப்படி எண்ணிறந்த பல மொழியாக்கங்களை/உரைகளைச் சுட்டி ஆதாரம் காண்பித்த பின்னரும் அல்லது, இவை போன்ற பகுதிகள் (மற்றைய மதங்களின் புனிதப் பிரதிகளில் காணப்படும் இது போன்ற பகுதிகளும்கூட) நிச்சயமாக, எந்த சூழ்நிலையிலும் கேள்விக்குரியவை என்று சுட்டப்பட்ட பின்னரும்கூட – மார்க்கத்தில் அயராத நம்பிக்கை உள்ள ஒரு முஸ்லீம், தம் இறைநூலில் சொல்லப்பட்ட விஷயங்களுக்கு வக்காலத்து வாங்குவார்.
-0-0-0-0-0-0-
சிலசமயங்களில், இது போன்ற உரையாடல்கள் கேள்வி கேட்பவரை இஸ்லாம்வெறுப்பாளன் (=Islamophobe) எனவும் “வெறியன்”(=Bigot) எனவும் முத்திரை குத்த வழிவகுக்கும்; அதாவது, ரேஸாஅஸ்லான் – பில் மெஹர் மீதும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீதும் குற்றம் சாட்டியது போல. இம்மாதிரித் தீவிரமான குற்றச்சாட்டு, பெரும்பாலும் உரையாடலை நிறுத்தும் வல்லமையுடையது. யாரும் இங்கு “வெறியன்” என அழைக்கப்பட விரும்புவதில்லை.
உங்களை முஸ்லீம் அல்லாதோரின் இடத்தில் நிறுத்துங்கள். அவர்கள்தான் இஸ்லாமையும் தீவிரவாதத்தையும் தொடர்புபடுத்துகிறார்களா? ஜிஹாதிகள், “அல்லாஹு அக்பர்” எனக் கத்திக் கொண்டு கொர்ஆனில் இருந்து வசனங்களை கூறிக் கொண்டு, ஒரு (வழக்கமாகவே, ஒரு முஸ்லீம் அல்லாத) அப்பாவியின் தலையைக் கொய்வது போன்ற, வெடிகுண்டு வைப்பது போன்ற, சகாக்களை போருக்கு அழைத்து செல்வது போன்ற – படங்கள் மற்றும் வீடியோக்களால்தானே நாம் சூழப்பட்டிருக்கிறோம்?
யோசியுங்கள், நிஜமாகவே யார் இத்தொடர்பை ஏற்படுத்துகிறார்கள்?
இந்தச் சூழ்நிலை முற்றிலுமாக தலைகீழாக மாற்றப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
இஸ்லாமிய அடிப்படைவாதிகள், மற்றவர்களைக் கொல்வதற்காக மேற்கோள் காட்டும் அதே வசனங்களையும் புத்தகத்தையும், மிதவாத முஸ்லிம்களும் சரியானது மற்றும் பிழை இல்லாதது என வாதிடும்போது, முஸ்லிம் அல்லாதோர் என்னதான் நினைக்க முடியும்?
-0-0-0-0-0-0-0-
(அடுத்த பாகத்தில் இந்தக் கட்டுரையின் மொழிமாற்றம் தொடரும்…)
- [ஷகீல் ஹாஷிம்] வன்முறைகளுக்குப் பின், இஸ்லாமின் ஒரு புதிய மறு உருவாக்கத்திற்கான நேரம் வந்துவிட்டது! 25/02/2016
- [ஹாஸன் ரட்வான்] முஸ்லிம்களால் அவர்களது நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்துகொள்ளமுடியும்: இஸ்லாமிக்ஸ்டேட்டுக்கு இதுவே சரியான பதில்! 17/02/2016
- [ஸுலைமான் தாவுத்] இஸ்லாமிக்ஸ்டேட் கும்பல் நடத்திய பாரிஸ் கொலைகளுக்குப் பிந்தைய சிந்தனைகள்: சில குறிப்புகள் 06/02/2016
- அறியாக் குழந்தைகளை மதராஸாக்களில் சேர்த்து, அவர்களை மதவெறித் தற்கொலைக் கொலைகாரர்களாக மாற்றுவது எப்படி – சில குறிப்புகள் 03/02/2016
- தொடரும் ‘அல் அன்ஃபல்’ – சில குறிப்புகள் 12/01/2016
- அயதொல்லாஹ் நிம்ர் பக்ர் அல்-நிம்ர்: இரான் அரசின் இரட்டைவேடமும், நடைமுறை இஸ்லாமின் பெரும்பாலும் கதிமோட்சம் இல்லாத நிலைமையும் 08/01/2016
- இஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)