[நமக்கு நாமே!] பயோசார் ‘உரக்கரி’ செய்துகொள்வது எப்படி – சில குறிப்புகள்
February 4, 2016
கவலைப் படாதீர்கள்! நான் இசுடாலிர் கட்சியில் ஐக்கியமாகவில்லை. B-)
… முடிந்தால் வாரத்துக்கு ஒரு முறை, நான் இருவரது ட்வீட்களைப் படிக்கும் வழக்கத்தை வைத்திருக்கிறேன். அவர்கள்: பத்ரி சேஷாத்ரி, கல்யாணராமன். விழைவு என்னவென்றால், நான் பொதுவாக மதிப்பவர்கள், சொல்வதை – ஆரவாரமில்லாமல், படாடோபம் இல்லாமல் அமைதியாகச் சமனத்துடன் செய்பவர்கள், ஏதாவது சொன்னால், அவற்றை நான் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற விஷயஞான எழவு விவகாரம்தான். தமிழைக் கூறுபோடும் நல்லுலகில் வேறு எப்படித்தான் நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்வதாம்? குழந்தைகளைத் தவிர, வேறு யாருடனும் (முக்கியமான சமவயதினர்கள்!) வெட்டியாகப் பேசிப்பழகுவதை வெறுத்து ஒதுக்கும் மனப்பிறழ்வுவேறு எனக்கு! :-(
இப்படியாகத்தானே பத்ரி அவர்களின் ட்வீட் ஒன்றை நேற்று படித்து, உடனே மகிழ்ந்துபோய் அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன்.
-0-0-0-0-0-0-
இந்த பயோ-சார்கோல் (Bio_Charcoal) – நம்மால், நம்வீடுகளிலும் தோட்டங்களிலும் தயாரிக்க முடியும் அழகான கன்னங்கரேல் கரிதான்.
இதனைப் பொடி செய்து, வயல்களில் (அல்லது தோட்டங்களில், அல்லது தொட்டிகளில்) மண்ணுடன் கலந்தால் – அது பயன் தரும் மகாமகோ நுண்ணுயிரிகள் பல்கிப்பெருக /தங்க இருப்பிடமாகவும், நுண்சத்துகள் தங்கும் வங்கியாகவும், அத்தியாவசியமான தண்ணீரை சேமித்துக்கொள்ளவும், வேர்கள் வசதியாகப் பரவ வகையாகவும், மேல் மண்ணின் அடர்த்தியைக் குறைப்பதற்கும், மேல்மண்ணில் காற்றோட்டத்தை அதிகப்படுத்தவும், செடி/பயிர்களுக்குக் கொடுத்த நீர் வீணாக ஆவியாகப் போவதைத் தடுக்கவும், கடைசியில் ஓரளவுக்கு மக்கி, செடிகளுக்குக் கார்பனைத்தரும் உரமாகவும், மிகமிக மகோன்னதமாகப் பயன்படும்.
இதன் அனைத்து கல்யாண குணங்களுக்கும் அடிப்படையான முக்கிய காரணம் – பயோசாரின் ஒவ்வொரு துணுக்கிலும் இருக்கும் நுண் ஓட்டைகள், அவற்றின் வழியாகப் பல்லாயிரம் கிமீ அளவுக்கெல்லாம் நீண்டிருக்கும் குகைக் கணவாய்கள்… இந்த நீளக் குகைகளில் ஆனந்தமாக வசிக்கக்கூடிய நுண்ணுயிரி ஜந்துக்கள், நுண்தனிமங்கள், சத்துகள், நீர் இன்னபிற!
அதனால்தான் உரக்கரி என்று இதனை மொழிபெயர்க்க முயன்றிருக்கிறேன். ஆனால் இக்கட்டுரை முழுவதும் இதனை பயோசார் (bio-char) என்றுதான் குறிப்பிடப் போகிறேன். ஏனெனில், எந்த பிறமொழி வார்த்தையையும் தமிழ்ப்படுத்தித்தான் ஆகவேண்டுமென்றால், தமிழ் பாவமாகிவிடும். நம் தமிழ் – நவீன திசைச்சொற்களை அப்படியே, அவற்றின் பின்புலங்களுடன் உள்வாங்கிக் கொண்டால்தான் தமிழுக்கும் சரி, நமக்கும் சரி – கதிமோட்சம்!
-0-0-0-0-0-0-
இந்த நமக்கு நாமே வரிசையில், சிலகாலம் முன்பு, வீட்டில் இருக்கக்கூடும் பொருட்களை வைத்துக்கொண்டு தரை-துடைப்பான் செய்துகொள்வது எப்படி என எழுதியிருந்தேன். (= சொந்தமாகக் காயலான் கடை நடத்துவது எப்படி 19/09/2015)
அதே மனப்பான்மையுடன் (= வீட்டிற்கு வந்துசேரும் எந்த ஒரு பொருளையும் ‘எதற்காகவாவது உதவும்’ எனச் சேகரம் செய்து கொள்வது (இது விவாகரத்தில்தான் போய் முடியப்போகிறது என்பது தெரிந்திருந்தாலும்) + (என் பல உறவினர்களும் நண்பர்களும் சொல்வது போல) கிறுக்குத்தனமாக அவற்றை ஏதாவது வேலைக்கு உபயோகம் செய்து புளகாங்கிதம் அடைவது; அவ்வளவுதான்!) இப்பதிவில், வீட்டில் இருக்கும் கண்டாமுண்டா சாமான்களை (தமிழ ஆண்களுடைய தம்பட்டப் பெருமைக்குரிய, ஒரேயொரு வஸ்துவைச் சுட்டவில்லை, இங்கு!) வைத்து எப்படி பயோசார் செய்து கொள்வது என்பதைப் பற்றி எழுத ஒரு அவா.
பயோசார் செய்வதற்காக, பலவிதமான அடுப்புகள்/ஐடியாக்கள் இருக்கின்றன; இந்த விஷயத்தை ஆய்ந்து, அழகாகக் கதை சொல்லும் பவர்பாயின்ட் நிரல் ஒன்றும் இருக்கிறது; இது விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஆரோவில் நகரத்து விவசாயிகளைப் பற்றியது. நானும் இவற்றில் இரண்டு வகைகளை உபயோகித்திருக்கிறேன்; ஆனால் நான் சொல்லவருவது, நம் வீட்டில் நாமே செய்துகொள்ளக்கூடிய விஷயம்.
பயோசார் என்பது கரி – ஆனால் முழுவதும் எரிந்து சாம்பலாகாத வகை. இதனைக் காய்ந்த மரக்கிளைகளைத் சிறுதுண்டுகளாக ஆக்கிக்கொண்டு செய்யலாம் – அல்லது, நான் இக்காலங்களில் செய்வதுபோல தேங்காய்ச் சிரட்டைத் துண்டுகளை வைத்துக்கொண்டும் கூட. இதன் அடிப்படை ஐடியா என்னவென்றால் – முடிந்தவரை காற்றில்லாமல், மரத் துகள்களைச் சூடுபடுத்தி எரிக்கமுடிந்தால், நமக்கு மிஞ்சுவது ஓரளவு தரமான பயோசார். இதனுடைய கல்யாண குணங்களால், இதனை 5 -20% மேல்மண்ணில் கலந்து தேவைக்கேற்ப உபயோகித்தால், கைமேல் பலன். ஓம் தேவி பராசக்தி ஆணையுரைத்தேன். பெண்ணை உரைத்தால், அது விடலைத்தன அசிங்கம். ச்சீ.
சரி. பயோசார் செய்யத் தேவையானவை:
- வீட்டில் தோட்டம் போடுவது, வயலில் இறங்கி வேலை செய்வது போன்றவற்றில் முனைப்பு
- (உயிருடன் இருக்கும்) தோட்டம்/வயல்
- ஓரளவுக்காவது காய்ந்த தேங்காய் மூடிகள்/சிரட்டைகள்
- சுத்தியல்
- அரம்
- ஸ்க்ரூ ட்ரைவர்
- கட்டிங் ப்ளையர்
- சைக்கிள் பம்ப் / ஊதுகுழல்
- ஓட்டை உடைசல் பழைய பால் குக்கர்
- கொஞ்சம் களிமண் (யாராவது திராவிடர் அருகில் இருந்தால் மண்டையில் தட்டி எடுத்துக்கொள்ளலாம்! அவர்களுக்கு அது எடுக்கப்படுவதுகூடத் தெரியாது, கவலைவேண்டாம்; உங்களுக்கு இப்போது பதற்றமாகவிருந்தால் – ஆரியசதி என்று தூரத்தில் எதை நோக்கியாவது கைகாட்டினால், சுவாரசியத்துடன் அதனைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள், பாவம்! அஞ்ஞானிக் குளுவான்கள்!)
- ரத்தக்களறி அடிபட்டுக்கொண்டால், கழுவி சுத்தம் செய்துகொள்ள கொஞ்சம் டெட்டால் (அல்லது உங்களது சொந்த மூத்திரம்; நகைச்சுவைக்குச் சொல்லவில்லை. அடிபட்டுக்கொண்ட என் உடல்பாகங்களை, சுத்தமாக நானே, பலமுறை இப்படிக் கழுவிக்கொண்டிருக்கிறேன்! இதைச் சொல்லிக்கொள்ள என்ன வெட்கம்?)
- ஏடாகூடமாக எதையானும் செய்ய ஆவல் + சுமார் 2 மணி நேர அவகாசம் + புகையில் கண் எரிதல் + சட்டைவேட்டியில் புகைவாசனை + பக்கத்து வீட்டுக்காரர்களின் பயபீதியைச் சிரித்துக்கொண்டே புறம்தள்ளும் தன்மை.
-0-0-0-0-0-0-
வீட்டில் சட்டினி வகையறாக்கள் செய்வீர்களானால் அல்லது தேங்காய்களை உபயோகிப்பீர்களானால் – சிரட்டைகளுக்குப் பஞ்சமில்லை; உங்கள் பக்கத்து வீடுகளில் கேட்டால், ஒரு மாதிரி பார்த்துக்கொண்டு கொடுப்பார்கள் – உடனே வாயிற்கதவை மூடி, தாள் போட்டுக்கொள்வார்கள், பாவம்!
இவற்றைக் காயவிட்டு சேகரம் செய்துகொள்ளலாம்.
தொழில்முறை அரைகுறைச் சுற்றுச்சூழல்வாதிகள் கவனிக்கவும்; இதெல்லாம் ஒரு ப்ளாஸ்டிக் பையில்! ஐய்யய்யோ!!!
கீழே காண்பது சுத்தியால் சிறுதுண்டுகளாக உடைக்கப்பட்ட சிரட்டைகள். இல்லாவிட்டால் ஏதாவது காய்ந்த மரக்கிளைகளைத் துண்டுதுண்டாக வெட்டிக்கொள்ளலாம்.
தொழில்முறை அரைகுறைச் சுற்றுச்சூழல்வாதிகள் மறுபடியும் கவனிக்கவும். ஐய்யய்யோ டெட்ராபேக் டப்பிகள்! இந்த ராமசாமி, நிச்சயம் பூவுலகின் எதிரிவெறியன் தான்!
நான் சுற்றுப்புரத்தின் கடன்வாங்கிய + என் வீட்டில் சேர்ந்த, டெட்ராபேக் டப்பிகளைத்தான் ‘செடித் தொட்டிகளாக’ உபயோகிக்கிறேன். மன்னிக்கவும்!
நம் வீடுகள் பலவற்றில் பழைய ஓட்டைவிழுந்த ‘பால் குக்கர்கள்’ கிடைக்கும் – நம் வீட்டில் இல்லாவிட்டால், நம் பக்கத்துவீட்டுக்காரர்கள் இருக்கவேயிருக்கிறார்களே!
இந்த குக்கர், ஒரு சரியான நம்பிக்கைக்குப் பாத்திரம், நம் வேலைக்கு மிகவும் பொருத்தமான ஒன்று; ஏனெனில், இதற்கு இரண்டு வெளியடுக்குகள் – ஆகவே சூட்டை உள்ளேயே தக்கவைத்துக்கொள்ளும் தன்மை மிகவும் அதிகம்.
இதை எடுத்துக்கொண்டு, அதன் கீழ் விளிம்பில் 2 செமீ X 4 செமீ ஒரு வளைந்த செவ்வகமான ஓட்டையை/திறப்பை வெட்டிக்கொள்ளவும்.
இந்தத் திறப்பு, குக்கரின் இரண்டு அடுக்குகளையும் துளைத்துக்கொண்டு செல்வது அவசியம்.
இந்த பால்குக்கர்களுக்கு ஒரு விசில் இருக்கும்; இதனைக் கழற்றி உங்கள் குழந்தைக்கோ அல்லது உங்களுக்கோ, விளையாடக் கொடுத்துவிடவும். ஈரமான (திராவிடக்)களிமண் கொஞ்சம் எடுத்து குக்கரின் விசில் ஓட்டையை நன்றாக மூடிவிடவும்.
இப்போது குக்கரின் அடியில் சில காகிதத் துணுக்குகளைப் போட்டு, அதன் மேல் சில சிறு சுள்ளித் துண்டுகளைப் போட்டு, தீ பற்றவைக்கவும்.
கொஞ்சம் எரிய ஆரம்பித்தவுடன், கொஞ்சம் கொஞ்சமாக, சிரட்டைத் துண்டுகளைப் போடவும். கீழுள்ள ஓட்டையின் வழியாக (உங்களுடையதல்ல, மன்னிக்கவும் – குக்கருடையது!) காற்றை ஊதவும். இதற்கு நான், என் சைக்கிளின் பம்பினை உபயோகித்தேன்.
நன்றாக எரிய ஆரம்பித்தவுடன் முழு குக்கரையும், அத்துண்டுகளால் நிரப்பவும். நன்றாகப் புகை வரும். இது சிரட்டைத் துண்டுகளின் ஈரப்பதத்தைப் பொறுத்த விஷயம். நன்றாகக் காய்ந்தால், குறைவாகத்தான் புகை வரும்.
ஆனால் இச்சமயம், உங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள், தீயணைப்புப் படையினருக்குப் படபடப்புடன் தொடர்பு கொள்வார்கள்.
இதைப் பற்றி ஒரு கவலையும் படாமல், குக்கரின் மேல் வரை சிறு தீப்பிழம்புகள் வந்தடையும் போது, குக்கரை அதன் மூடியால் மூடி, விளிம்புகளைக் களிமண்ணால் சுற்றி மூடிவிடவும். கீழுள்ள திறப்பினையும் அப்படியே.
இப்போது என்னவாகுமென்றால், உள்ளேயிருக்கும் மகத்தான சூட்டினால் (ஆனால் காற்றின்மையினால்) துண்டுகள் கருகிப்போய் கரியாகிவிடும். இதற்கு சுமார் 4-5 மணி நேரமாகலாம். ஃப்ளாஸ்க் போல இருக்கும் குக்கரின் இரட்டை அடுக்கு வெளிவரிசை, துண்டுகள் குமுங்கி எரிவதற்கு ஏதுவாக இருக்கும்.
எல்லாம் குளிர்ந்தவுடன் அந்த மூடியைத் திறந்தால் கிடைப்பவை மூன்று:
1. குக்கர் நிறைய (இப்போது அது முக்கால் அளவே இருக்கும்!) பயோசார்.
2. கீழே கொஞ்சம் சாம்பல் – இதனையும் செடிகளுக்குப் போடலாம், அல்லது பாத்திரம் தேய்க்க உபயோகிக்கலாம்.
3. குக்கர் மூடியில் இருந்து சொட்டிக் கொண்டிருக்கும் தேங்காய்ச் சிரட்டை எண்ணெய் – இது அடிபட்ட இடங்களில் (நம் உடலில்) தடவ ஒரு நல்ல ஆன்டிபேக்டீரியல் (anti-bacterial) வஸ்து. இதனைச் சேகரம் செய்துகொள்ளலாம்.
எல்லாவற்றையும் எடுத்தவுடன் இப்படித்தான் அந்த பாவப்பட்ட குக்கர் விழுப்புண்களுடன் இருக்கும். :-(
உள்ளே இருக்கும் கரியாத துண்டுகள் பிற்சேர்க்கைகள்.
இந்த குக்கரை இதுவரை நான் ஏழுமுறை உபயோகித்திருக்கிறேன் என நினைக்கிறேன்.
பயோசார் துண்டுகளை மிருதுவாகச் சுத்தியால் அடித்து, பொடியாக்கி – தேவைப்படும்போது தொட்டிகளின் மேல்மண்ணுடன் கலந்து உபயோகிக்கலாம்.
என் தற்போதைய வாடகை வீட்டு பால்கனியில் இருக்கும் சின்னஞ்சிறு தோட்டம். சிறிய இடம், சுமார் 90 ‘டெட்ராபேக்’ செடித்தொட்டிகள் மட்டுமே! சூரியவெளிச்ச ஊடுருவலும் அவ்வளவு இல்லை – இருந்தாலும் விட்டேனாபார்தான்!
இதில் பயோசார் உபயோகித்திருக்கிறேன். சுமார் 8-9 வருடங்களாக இதனை என் செடிகளுக்கு/பயிர்களுக்கு உபயோகித்து நல்ல பலனைக் கண்டிருக்கிறேன். பள்ளியிலுள்ள பெரிய காய்கறித் தோட்டம் ஒன்றிலும் இதனை உபயோகித்திருக்கிறேன்.
இம்மாதிரி தொழில் நுட்பங்களின், பொருட்களின் உபயோகங்கள் பரவலாக்கப்பட்டால் — நம் சுற்றுச்சூழல் மேன்மை முதல் ஆரோக்கியம் வரை பல விஷயங்களும் பல்கிப்பெருக காத்திரமான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன, என்பதில் எனக்கு மாளா நம்பிக்கை.
-0-0-0-0-0-
இதனுடைய பயன்களைப் பற்றி, இதன் வேதியியலைப் பற்றி, பைராலிஸிஸ் என்றெல்லாம் ஜல்லியடித்து நிறையவே எழுதலாம், மூன்று நான்கு அழகான புத்தகங்களும் இருக்கின்றன – ஆனால் ஒரு அறிமுகத்துக்கு இது போதும். பின்னர் பார்க்கலாம்.
இது ஒரு புதிய தொழில் நுட்பமல்ல; இந்தியாவிலும், தென்னமெரிக்காவிலும் பல்லாயிரம் வருடங்கள் முன் உபயோகித்த முறைமைதான் இது. இதன் இக்காலப் பெயர் டெர்ரா ப்ரேடா (terra preta) – அமேஸான் பகுதிகளின் இதனைப் பற்றி அகழ்வாராய்ச்சி செய்திருக்கிறார்கள்.
தங்க நாட்டின் ரகசியம் (The Secret Of Eldorado – TERRA PRETA) என ஒரு விலாவாரி டும்மாடக்கா யூட்யூப் விடியோ ஒன்றும் இருக்கிறது. என் கிண்டலுக்கு அப்பாற்பட்டு, இது கொஞ்சம் பரவாயில்லைதான்.
-0-0-0-0-0-0-
இப்போது ஒரு சுவாரசியமான(!) நிகழ்வு பற்றி:
இது நடந்து சுமார் மூன்று வருடங்களிருக்கலாம். ஆனந்தமாக விசிலடித்துக்கொண்டே (=பூங்கதவே தாள்திறவாய்!) சைக்கிளில் ஒரு பையனின் வீட்டிற்குப் போய்க்கொண்டிருந்தபோது சாலையின் வலதுபக்கத்தில் ஒரு பெரிய நிலக்கடலை (‘மல்லாட்டை’) அறுவடை செய்யப்பட்ட வயலிருந்தது – அதன் நடுவில் நிறைய மரத்துண்டுகளையும் (விறகாகவோ, சுள்ளியாகவோ உபயோகிக்க முடியாதவை) கரும்புத் தோகைகளையும் குவித்து, எரிப்பதற்கு ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்கள். (இந்த மாதிரி மட்க விடாமல் எரிப்பது என்பதைப் பார்த்தாலே எனக்கு எரியும்!)
அட, சாம்பலாகவோ புகையாகவோ வீணாகப் போகப்போவதை, நாம் பயோசார் அல்லது ப்ரிக்கெட் (briquette – ‘கரிச்செங்கல்’ என இதனைச் சொல்லலாமோ?) செய்து உபயோகப் படுத்தலாமோ என எண்ணினேன். போய், அந்த விவசாயக்காரருடன் பேசினேன். அவர் வட்டார வழக்கம்போலவே கொஞ்சம் மப்பில் இருந்தார், அப்போது காலை 8 மணி இருந்திருக்கும். கொஞ்சம் குசலம் ‘பாப்பா எங்க படிக்குது’ விசாரித்து விட்டு…
‘இதோ ஓடிப்போய் முக்கால் மணி நேரத்தில் ஒரு பிக்-அப் ட்ரக்கை ஓட்டிக்கொண்டு வருகிறேன் – என் பள்ளியில் இதனை உபயோகிக்கிறேன், அல்லது உங்களுக்கே கூட இதனால் செய்த பயோசாரை இலவசமாகக் கொடுக்கிறேன் – உபயோகித்துவிட்டுச் சொல்லுங்கள்’ என்றேன். சரியென்றார்.
மூச்சிரைக்கத் திரும்பிப்போய், அடுத்த அரைமணிக்குள் வெறிபோல வண்டி ஓட்டிக்கொண்டு, மறுபடியும் அவ்வயல் பக்கம் வந்தால் – எரிந்துகொண்டிருந்தது. மகா வருத்தம்.
மப்புக்காரரிடம் வருத்தத்துடன் சொன்னேன் – தோ வரேன்னிட்டு சொன்னேன், முன்னாடியே வந்திட்டேன், ஆனா நீங்க இப்டீ பண்ணிப்டீங்களே! எனக்கு என் ஆதங்கம் – என் செல்ல மாணவன் வீட்டுக்குப் போவதில் ஒரு மணி நேரம் தாமதம் + இந்த பயோசார் எழவு வேலையும் ஆகவில்லை.
விட்டேற்றியாகக் கேட்டுக்கொண்டிருந்த அவர் தம் பல்லைக் குத்திக்கொண்டு வெற்றுப் பார்வையோடு சொன்னார் – யோவ், சூத்த மூடிக்கிட்டு போ, பெருஸ்ஸா ஸொல்ல வந்த்ட்டான், ங்கோத்தா!
நான், என்னுடைய தலைவரான கருணாநிதி அவர்கள் போல யோசித்தேன்: எனக்கு இருப்பதோ ஒரு சூத்து. அது [தினம்] போகப்போவதோ ஒரு முறை. ஆகவே.
அத்துடன், ஒரு அஸ்ஸெம்ப்ளி _ஆஃப்_காட் / பென்டகோஸ்டல் க்றிஸ்தவப் பிரசங்கியின் வெறிபிடித்த மதப்பிரச்சாரம் போல இந்த வயக்காட்டு விஷயங்களைப் பற்றி மூன்றாம் மனிதர்களுடன் ஆர்வத்துடன் பேசுவதை – விட்டேன்.
இதனால் எனக்குக் கிடைத்த நீதி: பொதுவாக சூத்தை மூடிக்கொண்டிருப்பது நல்லது. ஆனால் அதைத் திறந்தேயாக வேண்டுமென்றால், இணையம் இருக்கவே இருக்கிறதே!
ஆமென்.
-0-0-0-0-0-0-
February 4, 2016 at 14:39
நீங்கள் குறிப்பிட்ட அந்த இரு ட்வீட் தலைவர்கள் என்னளவில் மிகவும் தீவிர இடதுசாரி கருத்துகள் உள்ளவர்கள். நடுநிலை தேவை. நிற்க, கரிச் செங்கல்கள் சேலம் மாவட்டத்தில் முயற்சி செய்து தோல்வி அடைந்த ஒன்று. மக்க வைத்து எரு ஆக்குவதை விட, எரித்து அந்த சாம்பலை வயலில் தூவுவது என்பது செலவு அடிப்படையில் விவசாயிக்கு நல்லது. மற்றபடி, பயோசாரை முயற்சி செய்து பின் எழுதுகிறேன். பால் குக்கர் இல்லாத காரணமும் ஒன்று.
February 6, 2016 at 08:12
அய்யா பரமசிவம்,
எனக்குத் தெரிந்தவரையில் – இவர்கள் இருவரும் மனதாறப் பொய் சொல்பவர்கள் அல்லர். ஆகவே தொழில்முறை இடதுசாரிகளும் அல்லர். ஆனால் – மிக முக்கியமாக, இணையத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் அரைகுறை மனப்பான்மைகளுக்கு, இவர்கள் எதிரானவர்கள். அதனால்தான் அவர்கள் மானாவாரியாக ட்வீட் செய்வதில்லை என நினக்கிறேன்.
மேலும், இருவருக்கும் நகைச்சுவையுணர்ச்சியும், பொறுமையும் அளவுக்கதிகமாகவே இருக்கிறது என நினைக்கிறேன். அவர்கள் படிப்பாளிகளும்கூட.
என்னளவுக்கு இவைபோதும், அவர்களைக் கொண்டாடுவதற்கு. ஆனால் அய்யா, நமக்கு, முத்திரைகுத்தல்களுக்கு அப்பாற்பட்டு – வேண்டுபவற்றை எடுத்துக்கொண்டு மற்றவைகளைகளை, மென்மையாகக் கடாசிவிடும் மனப்பான்மையும் வேண்டும்.
அதனால்தான், என்னை நீங்கள் ஒரு ‘பேக்கேஜ்’ போல (நான் எவ்வளவு மனம் சுளிக்கவைக்கும் விஷயங்களை எழுதுகிறேன்!) எடுத்துக்கொள்வதைப் போல, அவர்களையும் அப்படித்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். உங்களையுமேகூட! இல்லாவிட்டால் வாழ்க்கை ரொம்ப ஸீரியஸாகிவிடும். இது தேவையா?
எனக்குத் தெரிந்து சேலத்தில் இந்த பயோசார் விஷயம் நடப்பதாக/நடந்ததாக நினைவில்லை; வெறும் ப்ரிக்கெட்டிங் என்பது வேறு. ஆனால், உங்களிடம் மேலதிகத் தகவலிருந்தால் தெரிவிக்கவும்.
நன்றி.