கில்யஸ் மறுசுழற்சி: சில குறிப்புகள்
April 24, 2015
(முந்தைய பதிவுகள்: முதலாவது. இரண்டாவது. மூன்றாவது: ஜிஹாத் பற்றியது. நான்காவது: கபானியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் கர்ட்களின் வீரம் ஜொலிக்கும் போராட்டத்தைப் பற்றியது. இவற்றைப் படித்தால் கொஞ்சமேனும் பின்புலம் கிடைக்கலாம்)
கடும் எச்சரிக்கை: வழக்கத்தையும் (~1000 வார்த்தைகள்) விட இது நீளம் அதிகம். சுமார் 1500 வார்த்தைகள். கில்யஸ் பற்றி எழுதிஎழுதி எனக்கு மாளவில்லை. :-(
கில்யஸ் நினைவுகளில் பலவாரங்களாக உழன்று கொண்டிருக்கிறேன். இதனை எழுதச் சுமார் 6 மணி நேரம் எடுத்துக்கொண்டிருக்கிறேன். என் நண்பரின் நினைவுக்காக, இதனைக் கூடவா என்னால் செய்திருக்க முடியாது?
அதேபோல – இதனை முழுவதுமாகப் படிக்கப்போவது உங்களில் 30 பேரேயாயினும், உங்களால் இதைக் கூடவா செய்ய முடியாது? ஆகவே, பொறுமையாகப் படிக்கவும்.
… முடியாவிட்டால் இருக்கவேயிருக்கின்றன, நம்முடைய செல்ல ஞானத் தமிழர்களின் சுடச்சுடத் தமிழ்ச் சினிமா விமர்சனங்கள் – அவற்றுக்கு வேறெங்காவது செல்லவும். நன்றி.
கில்யஸ் அம்மணி புராணம் தொடர்கிறது… … :-(
-0-0-0-0-0-0-0-0-
… அம்மணி கில்யஸ்-ஸுக்கு – நடைமுறை/வன்முறை இஸ்லாமின்மீது எவ்வளவு வெறுப்போ அவ்வளவுக்கவ்வளவு இஸ்லாமிய அறிவியல், தத்துவார்த்த மரபுகளில் பெருமிதம். இந்திய மரபுகளைக் குறித்த மரியாதை. காந்தி, இந்தியா பற்றிய சில கேள்விகள். இந்திராகாந்தி (‘எஃகு மனுஷி’), நேரு (‘பஞ்ச் ஷீல்’) பற்றிய சில புரிதல்கள்.
ராஜ்கபூர் படங்களைப் பார்த்திருக்கிறார் – தப்பும் தவறுமாக ஃபிர்பீ தில் ஹை ஹிந்துஸ்தானி பாடிக்காட்டினார். கமலா சுப்ரமணியத்தின் மஹாபாரதம் படித்திருக்கிறார்.
ஜேடி ஸாலிங்கர் பிடிக்கும். ஸூஸன் ஸான்டக் ப்ரியை. ஸில்வியா ப்ளாத்-ன் காதலி. ஷேக்ஸ்பியர் விசிறி – அவருடைய நாடகங்களிலிருந்து நீளநீளமாக மேற்கோட்களைச் சுட்டும் திறமை. குழந்தைகளுக்கான எழுத்தாளர்களான ஷெல் ஸில்வர்ஷ்டீன், ஜேக் ப்ரெலுட்ஸ்கி, ராபர்ட் முன்ஷ், ஸ்பைக் மில்லிகன், ரோல்ட் டாஹ்ல் பிடிக்கும்; மாற்றிமாற்றி இவர்களுடைய எழுத்துகளை, கவிதைகளைச் சிலாகித்துப் பேசிக்கொண்டோம்.
ஹார்ப்பர் லீ-யைப் பிடிக்காது. அய்ன் ரேன்ட் ஒத்தேவராது. எனக்கு ஒரே குஷி! டெர்ரி ப்ரேட்செட், ராபர்ட் அன்டன் வில்ஸன், ஸ்டானிஸ்லாவ் லெம் மிகவும் பிடித்தவர்கள்.
துருக்கிய எழுத்தாளரான ஒரன் பாமுக் பற்றிப் பேச்சுவந்தது. அவர் ஒரு நல்ல சராசரி எழுத்தாளர் என்றாலும் – என் மதிப்பில் ஒரான் பாமுக் அளவுக்கதிகமாகப் போற்றப் படுகிறார், அவரிடம் இலக்கிய மேதமையில்லை – வெறும் நகாசுவேலைதான் இருக்கிறது என்பதையும் சொன்னேன்; மேற்கத்திய இலக்கிய மரபுகளை, பின்நவீனத்துவச் சரடுகளை துருக்கிய இலக்கியத்தில் சமனமில்லாமல் புகுத்த முயன்று, தன் எழுத்துகளை மேற்கத்தியவுலகில் சந்தைப் படுத்தியவர்தானே என்றேன்.
துருக்கிக்காரர்கள் பல நூற்றாண்டுகளாக கர்ட்களை, அர்மேனியர்களை அழித்தொழித்து வரும் பின்புலத்தில், சுயகௌரவம் மிகுந்த கர்ட் மனுஷியான அவரிடம், அவர் எண்ணங்களைக் (அவர் அலட்சியமாக, ‘ஒரன் பாமுக் – குப்பை’ எனச் சொல்லிவிடக்கூடாதேயென்று நினைத்துக்கொண்டே) கேட்டேன்.
ஆனால் மகிழ்ச்சிதரக்கூடிய வகையில் – அவருடைய கருத்து, துருக்கி Vs கர்டிஸ்தான் எனப் பார்க்காமல், மிகுந்த சமன நிலையுள்ள கறாரான இலக்கிய விமர்சனமாக இருந்தது. (அவர் சுட்டிய கட்டுரை – எனக்கு மிகவும் பிடித்த ‘காலாண்டுஉரையாடல்’ பத்திரிகையின் 2007 வசந்தகால இதழில் வெளி வந்தது: டேன் க்ரீன் அவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரை – ஒரன் பாமுக்-ன் பின்நவீனத்துவப் படைப்புகள் எப்படிக் குறைபட்டிருக்கின்றன)
… அவர் மேற்கத்திய ஸாஸ்த்ரீய சங்கீதத்தின் ரசிகை – ஆனால் இந்திய ஸாஸ்த்ரீய சங்கீதங்களை, இந்தியா வரும்வரை உன்னிப்பாகக் கேட்டதில்லை. அவர் ஸேக்ஸஃபோன் வாசிப்பார் என முன்னமே எழுதியிருந்தேன். ஏமாந்தால் அடித்தொண்டையிலிருந்து ஆரம்பித்து கிடுகிடுவென்று மேலேறி உச்சக் கீச்சல் வரை வாசித்தார். நான் கூடவே என்னுடைய மரக்குழாய் டிட்ஜிரெட்டூ-வை வைத்துக்கொண்டு மூச்சிரைக்கும் அமெச்சூர் பக்கவாத்தியம். இன்னொரு நண்பர் ட்ஜெம்பே மத்தளம்.
இரானிய மெலட்ராமா (அப்பாஸ் கியரஸ்டமி, மஜித் மஜீதி, மொஹ்ஸென் மக்மல்பஃப்) வகையறா சராசரித்தனமான, அடுக்குப்படிமங்களேயில்லாத, அலுப்பூட்டும் நேரடிவழக்குத் திரைப்படங்களின் மீது விமர்சனம்; அன்ட்ரெய் தார்கொவ்ஸ்கியும், குரஸாவா அகிராவும் பிடித்தமானவர்கள். ழான் பியஹ் மெல்வில் படமான லெ ஸாமுராய் படம்பற்றிப் பேசி மாளவில்லை; சிவப்பு வட்டமும் பேசப்பட்டது.
பலப்பல விதங்களில், திகைக்கவைக்கும் அளவில், எங்கள் குவியங்கள் ஒன்றாக இருந்தன. இத்தனைக்கும் அவர் என்னைவிட பதினைத்துவயதுபோல இளையவராக இருந்திருப்பார். எனக்கு மாளா ஆச்சரியம். (இப்போது மாளா வருத்தம்)
அடிப்படையில் ஸாக்ரடீஸின் அபிமானி. ஆனால் ‘தென்கிழக்காசியாவின் ஸாக்ரடீஸ்‘ ஆக நாமெல்லாம் ஏகோபித்து பெருமைப்படும் நம்முடைய ஈவெரா ‘பெரியார்’ பற்றிக் கேள்வியே படாமை. என்ன கொடுமை அய்யா, இது!
கிரேக்க நாட்டின் ஈவெரா ‘பெரியாரான’ மனிதரை (இவர் ஸாக்ரடீஸ் எனவும் அழைக்கப் பட்டாராம்!) – ஏன், ஐரோப்பாவின் ஈவெரா ‘பெரியார்’ என்று சொன்னால் குறைந்தா போய்விடுவோம்? நமக்கு ஏன் இந்தக் கஞ்சத்தனம்?)
… எங்களுடைய உரையாடல்களின்போது நான் அவரைக் கேட்டேன் – ஏன், தமிழகத்தில், பாண்டிச்சேரியில் ஒரு முஸ்லீம் தலைவருடன் கூடப் பேசவில்லையா? அவர் சொன்னார் – ‘நான் ஹோம்வர்க் செய்தவரை, எந்தவகையிலும் குறிப்பிடத்தக்க தலைவர்கள் இங்கு இல்லை; ஆனால் தில்லி இமாம், ஹைதராபாத் ஓவைஸி போன்ற அற்பர்கள் உங்கள் தமிழ்நாட்டில் இல்லாததும் ஒரு நல்லவிஷயம்தானே?’
நான், கூட இருந்த தமிழக நண்பர்களிடம் சொன்னேன் – “பாவம், நம் நண்பிக்கு – தமிழகத்ததுச் சிறுபான்மையினரின் காவல் தெய்வங்களாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் கருணாநிதி ஸ்டாலின் வீரமணி அமார்க்ஸ் போன்றவர்களை அறிந்து கொள்ளக் கொடுப்பினை வேண்டும் அல்லவா?” அவர்கள் சிரித்தனர்.
அம்மணிக்கு ஏதோ நகைச்சுவையென்று புரிந்தது – ஆனால் எங்களால் உதிர்க்கப்பட்ட பெயர்களை வைத்துக்கொண்டு சொன்னார், “எங்கள் கர்டிஸ்தானில் இப்படி வெளியூர் தலைவர்களை வழிபட்டு அவர்களின் பெயரை வைத்துக்கொள்ளும் விடலைத்தனம் (immaturity) இல்லை. எங்கள் சமூகத்தில் வழி வழியாக வந்துகொண்டிருக்கும் பெயர்களை வைத்துக்கொள்வோம். எங்கள் பண்பாடுகளை மறுதலித்து, சுயவெறுப்புடன், அன்னியக் கம்பளிகளுக்குள் அடங்க விருப்பமில்லை. அதேசமயம் எங்கள் பண்பாட்டைத் தொடர்ந்து, கறாராகப் பரிசீலித்து மேலெழும்பவே ஆசை.”…
நாங்கள் பேசிக்கொண்டிருந்த பாண்டிச்சேரி ‘ஸற்குரு’ உணவகத்தின் வாயிலில் திருமாவளவனை ‘தென்னாட்டுப் பிரபாகரனாக’ வரித்த, வழிபட்ட ஃப்லெக்ஸ் போர்ட் ஒன்று இருந்தது – அதில், பாயும் சிறுத்தையை மகாஅலுப்புடன் பார்த்துக்கொண்டிருக்கும், பாவப்பட்ட ‘சே’ குவேரா படம் ஒன்று ஓரமாக இருந்தது. அதற்கு எதிர் மூலையில், தொந்தியை அடக்கிக் கட்டியிருந்த பெல்ட்டுடன் பிரபாகரனின் ராணுவச் சீருடையைப் பார்த்துவிட்டு, சுவாரசியம் கிளம்பியதால், அவர் யாரென்று கேட்டார். நான் பெருமூச்சு ஒன்றை மட்டுமே பதிலாக அளித்தேன். என்ன என்றார். நான் தமிழ் ஹிட்லர் லும்பன் என்றேன். அவர் உடனே புரிந்துகொண்டாரென்று நினைக்கிறேன் – மறுபடியும் இதனைப் பற்றிப் பேச்செடுக்கவில்லை. (ஆனால், பிரபாகரன், தன்னை ஈழத்தின் திருமாவளவன் எனக் கருதிக்கொண்டாரா என்பது சந்தேகமே!)
… … இப்படிப்பட்ட பலப்பல கல்யாண குணங்களுடன் வளையவந்த அவர் சாகும்போது, அதிகபட்சம் 35 வயது இருந்திருக்கலாம். ஒரு பெண்குழந்தை (அதற்கு, இப்போது சுமார் நான்கைந்து வயது?). கணவர் இம்மாதியே துருக்கி ராணுவத்தினருடன் பொருதி, ஏற்கனவே இறந்திருந்தார். இளைய சகோதரரும் அப்படியே.
கில்யஸ் அடிப்படையில் பெஷ்மெர்கெ (இராக் பகுதி கர்டிஸ்தான்) ராணுவவீரரானாலும், இன்னொரு படைப்பிரிவான, துருக்கி கர்டிஸ்தானின் பிகெகெ கட்சியின் ராணுவமான – முழுவதும் பெண்களால் நிர்வகித்து நடத்தப்படும் ஒய்பிஜெ அணி சார்பாக கபானி நகரத்தில் போரிடச் சென்றிருக்கிறார்.
இந்த, பெண்களுக்கான, பெண்களாலான ஒய்பிஜெ அணியமைப்பு மிகவும் சுவாரசியத்தையும் பிரமிப்பையும் ஒருங்கே தருவது.
பல மத்தியதரைக் கடல் நாடுகள் சார்ந்த அறிமுகங்களையும் நண்பர்களையும் பெற்றுள்ள பேறுடைத்த என்னால் தயங்காமல் சொல்ல முடியும் – பெண்களை மரியாதையுடன் நடத்துவது, சமூகமேன்மைக்கு உழைப்பது என்பது அங்குள்ள இரு சமூகங்களுக்கே, மக்கள் திரள்களுக்கே சாத்தியம். அவை கர்டிஸ்தானும், இஸ்ரேலும்.
இந்த ஒய்பிஜெ, ஒய்பிஜி, பெஷ்மெர்கெ அமைப்பினர்தாம் இஸ்லாமிக்ஸ்டேட் தறுதலை இயக்கங்களின் சிம்மசொப்பனங்கள்…
… கில்யஸ் அம்மணி பங்குபெற்ற இந்த கபானி யுத்தங்களில் – கடந்த 7 மாதங்களாக, ஓய்வேயில்லாத, இடைவிடாத போராட்டம்.
பல இஸ்லாமிக்ஸ்டேட் பொறுக்கிகளை மேலே அனுப்பியிருக்கிறார்.
குண்டடிகளையும் வாங்கிக்கொண்டிருக்கிறார்… தன் பெண் குழந்தையை திக்ரித் நகரத்திலுள்ள தன் மாமியாரிடம் விட்டுவிட்டு, தான் நம்பிய ஜனநாயக கர்டிஸ்தானுக்காக, வஹ்ஹாபிய மதவெறிக்கெதிராகப் போராடச் சென்றிருக்கிறார்.
இந்த கபானி நகரம் – இஸ்லாமிக் ஸ்டேட் உதிரிகளால் 2014ல் கைப்பற்றப் பட்டு, அங்கிருந்த ஷியா, யேஸீதிகள் பலர் ஒழிக்கப்பட்டு – பின்னர் பெஷ்மெர்கெ அணியினரால், பிகெகெ அமைப்பினரால் கடந்த ஒரு மாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கப் பட்டிருக்கிறது.
மாய்ந்துமாய்ந்து நான் இந்தப்பதிவை எழுதிக்கொண்டிருக்கும் இன்றுகூட (24-04-2015) கபானி பகுதியில், இஸ்லாமிக் ஸ்டேட் அரைகுறைகள், ஜிஹாதிகள் அவர்கள் விருப்பப்படி 72 ‘கற்புடைய இளம்தேவதை’களுடன் சல்லாபிக்க அவர்களுடைய சொர்க்கத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். சில கர்ட் வீரர்களும் இறந்துள்ளனர்.
சரி. ஒரு வழியாக, என் தோழியும், அற்புத மனுஷியுமான கில்யஸ் – ஏன், எப்படி இறந்தார் என்ற செய்தித் துணுக்குகள் வந்து சேர்ந்தன.
… கில்யஸ் இறந்ததற்குக் காரணம், அவர் ஒரு தனிமனிதராக, ஒரு கபானி நகரப் பள்ளிப்பேருந்துமுழுவதும் இருந்த சிறுகுழந்தைகளை (யேஸீதிகள், கர்ட்கள், ஷியாக்கள், சில ஸுன்னி குழந்தைகளும் கூட இருந்திருக்கிறார்கள் இந்தப் பேருந்தில்) — மதப்பொறுக்கிமுதல்வாத ஐஎஸ் குண்டர்கள் ஆர்பிஜி-மார்ட்டர்களை வைத்து அழித்தொழிக்க முயற்சித்ததை – வெற்றிகரமாகத் தடுத்ததுதான். பள்ளிக் குழந்தைகள், ஒரு சேதமுமில்லாமல் காப்பாற்றப்பட்டன.
கில்யஸ் அம்மணி, குறி பார்த்துச் சுடுவதிலும் மகா திறமை வாய்ந்தவர் – பெருமைக்குரிய ஸ்னைபர் (Sniper).
சுமார் 50 நிமிடங்களுக்கு நீண்ட இந்த ஒரு சண்டையில் மட்டும், ஒரு ப்லேட்டூன் இஸ்லாமிய அயோக்கியர்களை (=சுமார் 10 இஸ்லாமிக்ஸ்டேட் குண்டர்கள்), அவர்கள் நம்பும் மேலுலகத்துக்கு அனுப்பியிருக்கிறார், தனி ஒரு மனுஷியாக! ஆனால், அவரும் வீழ்ந்தார்.
ஏனெனில் அவருடைய குண்டுச் சரம் தீர்ந்துபோயிருந்தது. ஐஎஸ் ஸ்னைபர் ஒருவனின் குண்டுக்கு வீழ்ந்தார். ரத்தச்சேதமும் மிக அதிகமாக ஆகியிருந்திருக்கிறது. உதவி வருவதற்குள் போய்ச் சேர்ந்துவிட்டார்.
அதாவது களத்தில், யாராலும் புகழப்படாமல் மரணமடைந்தார், அவ்வளவுதான்.
இன்னொரு மறுசுழற்சி ஆரம்பித்து விட்டது. தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.
… மறுசுழற்சிகளின் மறுசுழற்சிகளில் – சுமார் 600 வருடங்களுக்குப் பிறகு, இவ்வுலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையிலும் ஒரு பில்லியன் (1,000,000,000!) அணுக்கள், கில்யஸ் எனும் மகத்தான மனுஷியின் உடலில் தியானம் செய்து கொண்டிருந்தவையாகத் தான் இருக்கும். ஆனால், அணுக்களுக்கு நினைவோடைகள் இல்லை. அவை பாட்டுக்குத் தம் காரியத்தைப் பார்த்துக்கொண்டு போய்க்கொண்டேயிருக்கும்… [1]
இப்போது அவரிடத்தில் பலர் – இள ரத்தங்கள் – வந்து சேர்ந்திருக்கின்றனர்…
குறிப்பு: மேற்கண்ட, பல்வேறு ட்விட்டர்காரர்களிடமிருந்து எடுக்கப்பட்ட கபானி படங்களில், கில்யஸ் இல்லை. கொஞ்சம் யோசித்தால் – ஒரு பெயர்தெரியாத ஸோல்ஜராக, தன் மானுடக் கடமையைச் செய்தவராக அறியப்படத்தான் அவர் விரும்பியிருப்பார் – எனப் படுகிறது. (அவர் தன்னுடைய ஐஃபோனில் பிடித்த, நானும் அவரும் இருக்கும் ஒரு ஸெல்ஃபி இருக்கிறது. ஆனால், மிகுந்த யோசனைக்குப் பிறகு அதனை உபயோகிக்கவில்லை.)
முக்கியமான குறிப்பு: எங்களுடைய உரையாடல்களில் ஒரு சிறு பகுதியாக இருந்த இந்த இஸ்லாம்-அடிப்படைவாதம்-முன்னேற்றம்-கல்வி வகையறா விஷயங்களை மட்டும்தான் விலாவாரியாகக் கொடுத்திருக்கிறேன். இதற்கு இரண்டு காரணங்கள்:
1. எல்லாவற்றையும் எழுதவேண்டுமானால் நான் ஒரு 1000 பதிவுகளுக்கு என ஆரம்பிக்க வேண்டும். இது முடியாது. எனக்குச் சக்தியில்லை.
2. அவர் இறந்தது – இஸ்லாமில் உள்ள பயங்கரவாத, பழமைவாத, அடிப்படைவாதக் கயமைப் போக்குகளினால். மேலும் இந்த போக்குகளினால் முதலில் அழிவது பாவப்பட்ட சாதா முஸ்லீம்களும், மாற்று நம்பிக்கை/மதக்காரர்களும் – பின் அழிவது பன்முக இஸ்லாமும் என்பதால்தான்.பின்னிரண்டும் அழிவதை நான் விரும்பவில்லை. ஆனால் – எதிர்மறைப் போக்குகளின் அழிவை, அவற்றை வேரறுக்கும் செயல்பாடுகளை, நேரடியான எதிர்கொள்ளல்களை விரும்புகிறேன்.
ஐஎஸ் போன்றவர்கள் அடியோடு ஒழிக்கப்பட்டால், கூட அதன் இந்திய விசிலடிச்சான்குஞ்சப்ப ஆதரவாளர்களும் ஜிஹாதிகளும் கும்பலோடு ஒழிந்தால் சந்தோஷம். விஷக் கிருமிகள் மீது ‘என்கவுன்டர்கள்’ நடந்தால் சந்தோஷப்படுவேன்[2]. அதற்காக என்னால் முடிந்தததைச் செய்வேன். அவ்வளவுதான்.
மறுபக்கம், மகத்தானவர்கள் மடிந்துகொண்டேயிருந்தாலும் – ராஜனி திராணகமக்களும், ஷங்கர்குஹா நியோகிகளும், நியமத் அன்ஸாரிகளும், கஷ்மீரத்து ராஜீவ் குமார்களும், மதுரை மார்க்ஸிஸ்ட்டான நம்முடைய சொந்த லீலாவதிகளும்(இவரது பதினேழாவது நினைவு தினம்: 23 ஏப்ரல் – நேற்றுதான்) – தொடர்ந்து அழிக்கப் பட்டுக் கொண்டிருந்தாலும்…
…நானும், என்ன மசுத்துக்கு – ஆனந்தமாக திராவிடமுயக்கம் ஜாதிவெறி வீரமணி கருணாநிதி சமூகநீதி அலக்கியம் என்று கவைக்குதவாத அற்ப விஷயங்களைப் பற்றி, தமிழகக் குப்பைகூளங்களைப் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று தெரியவேயில்லை.
சில சமயங்களில், ‘போங்கடா, நீங்களும் ஒங்களோட குப்பைத் திராவிடத் தமிழகமும்’ என்று சொல்லிவிட்டு ஓடிவிடலாம் போலத்தான் இருக்கிறது. ஒத்திசைவையும் நிறுத்தி விட்டு, அதில் செலவழிக்கும் நேரத்தை உருப்படியாக வேறெங்காவது செலவழிக்கலாம் என்றும் தோன்றுகிறது. அலுப்பு. சலிப்பு.
மூன்று மணி நேரம்போல இன்று வெய்யிலில் தோட்டவேலை செய்திருக்கக்கூடாதோ? மூளை இளகி விட்டதோ??
அதே சமயம் – க்ஷண நேரத்தில் முடிவை எடுத்து, வாழ்வாசாவா என யோசிக்காமல், சில மனிதர்களால் எப்படி மகோன்னதமான காரியங்களைச் செய்ய முடிகிறது?
கில்யஸ்கள் – அற்புதமானவர்கள், மகத்தான எதிர்காலத்தை நிர்மாணிக்கக்கூடியவர்கள் ஏன் இளம் வயதில் சாகிறார்கள்? எனக்கு எப்படி இம்மாதிரி அழகான மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது? பழவினைப் பயனோ? ஊழ் என்றால் என்ன? ஊழினாற் பெரும்வலி மட்டும்தான் வருமோ?
ஹ்ம்ம்… கேள்விகளைக் கேட்பது மிகவும் சுலபம்தான்.
பின்குறிப்பு 1: அந்த, கில்யஸின் மகளான அனாதைப் பெண்குழந்தையை பிகெகெ அமைப்பினரே பார்த்துக் கொள்கிறார்கள், கொள்வார்கள் – அவர்கள் இம்மாதிரி அனாதைக் குழந்தைகளுக்காக, விடுதி வசதியுடன் கூடிய நல்ல பள்ளிகளை நடத்துகிறார்கள் எனக் கேள்விப் படுகிறேன்.
எனக்கு நேற்று வந்த செய்தியின் படி – ஐந்து வயதாகும் இக்குழந்தை ஆஸாதி (கர்ட் மொழியிலும் இதன் – Azadi – அர்த்தம் ‘சுதந்திரம்’ தான்) தற்போது பத்திரமாக – பெஷ்மெர்கெ நடத்தும் விடுதியில் இருக்கிறது. தகுந்த தத்தெடுக்கும் பெற்றோர்களும் கண்டடையப்பட்டு விட்டனர். (பல கர்ட் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிக அநியாயமாக இழந்திருக்கின்றனர் அங்கு!)
காலம்தான் இந்த கர்ட்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தரவேண்டும்
பின்குறிப்பு 2: கில்யஸ் அவர்கள் எழுதுவதாகச் சொன்ன புத்தகத்தைப் பற்றி (‘நவீன இந்தியாவில் நவீன பதூதா’) யாருக்கும் தெரியவில்லை. நமக்கு பழைய பத்தூதாவின் உளறல்கள் தாம் ஸாஸ்வதம் போலும்.
…ஆனாலும், கில்யஸ் – உங்களை எப்படி என்னால் மறக்க முடியும்? :-(((
-0-0-0-0-0-0-0-
[1] சாமினாதன்: மறுசுழற்சி 13/02/2014
[2] என்கௌன்டர்கள் – சில குறிப்புகள் 04/12/2012, மரணதண்டனையின் அவசியம் 28/11/2012, குழந்தைப் படுகொலைகள், எல்டிடிஇ பிரபாகரன், போராட்டங்கள்: சில சிந்தனைகள், குறிப்புகள் 25/03/2013
சில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)
April 25, 2015 at 23:04
[…] […]
April 26, 2015 at 15:46
அன்பின் ஸ்ரீ ராமசாமி,
கர்டிஸ்தான் மக்களின் போராட்டம் பற்றிய தங்களது வ்யாசத் தொடர்களை வாசித்து வருகிறேன்.
அராபியர்கள் மத்தியில் அதி தீவ்ர இஸ்லாத்தை எதிர்கொண்டவர்களாக யஹூதிகளைத் தான் அறிவேன். ஒரு இருபது வருஷம் முன்னர் LEON URIS அவர்களது EXODUS, THE HAJ போன்ற புதினங்களை வாசித்திருக்கிறேன். அதி தீவ்ர இஸ்லாத்தை எதிர்க்க விழைந்த …….. தங்களது பாத்யதை உள்ள நிலப்பரப்பை மீட்க விழைந்த யஹூதிகளில் ……. யஹூதியப் பெரும்பான்மை முகத்தை இவற்றில் அவர் பரிச்சயம் செய்துள்ளார். பின்னர் டோமினிக் லேபியருடைய (உச்சரிப்பு சரியா?) O JEUSALEM.
இவர்களுக்கு மத்தியில் இஸ்ரேல் என்ற நிலப்பரப்பு யஹூதிகளால் மீட்கப்பட்டது தப்பானது ………. அதன் உண்மையான மீட்பர் இறைவன் மட்டிலுமே என்று ……… இன்றும் நம்பும் ஆசாரவாத யஹூதிகளும் உள்ளார்கள் என்பது விசித்ரமான ஆனால் உறுதியாக பன்மைத்துவம் பேணும் யஹூதிகளுடைய மாண்பினைக் காட்டுகிறது.
கர்டுகளைப் பற்றிய தங்களது பதிவுகள் இப்படிப்பட்ட பெரும்பான்மை யஹூதிகளையே எனக்கு நினைவுறுத்துகிறது என்றால் மிகையாகாது.
இதுவரை இவர்களை குர்ட் என்றே உச்சரித்து வந்தேன். உச்சரிப்பு திருத்தப்பட்டது மேலதிக லாபம் :-)
வ்யாசத்தொடரின் இந்தப்பகுதி அளவில் அதிகமானால் என்ன? பெரும் தகவற்களஞ்சியம்.
April 26, 2015 at 16:49
அய்யா.
கர்ட், கர்டிஸ்ட்தான் போன்ற வார்த்தைகளை அவர்களுக்குள்ளே பேசிக் கொள்ளும்போது குற்து, குற்திஸ்தானு என்றுதான் உச்சரிக்கிறார்கள். வெளியாட்களுடன் பேசும்போது இவை கர்ட், கர்டிஸ்தான் என உருமாற்றம் பெற்று விடுகின்றன.
தமிழ் டேமில் ஆகி டுமீலாகும் கதையைப் போலத்தான்.
ஆனால், பாரதம் – இந்தியா எனவாகிய சோகம் இவற்றில் இல்லை.
ஆக – நீங்கள் இப்படி குர்ட் என உச்சரிப்பதில் பெரிய பிரச்சினையொன்றுமில்லை.
பிறபின்.
__ரா.
April 26, 2015 at 17:22
உங்களைப் போன்ற படித்தவர்கள், தைரியமாக எழுதுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இளம் வயதில் எதைப் படிக்க/பார்க்க/யோசிக்க/எழுத வேண்டும், வாழ்க்கையில் எது முக்கியம் என்பது போல அவ்வப்போது எழுதினால் நன்றாக இருக்கும் (இந்தப் பதிவிலும் குறிப்புகள் உள்ளன). தமிழில் இவற்றைப் பற்றி எழுதத் தகுதியுள்ள சிலரில் நீங்களும் ஒருவர் என்பது என் கருத்து. நீங்கள் மறுக்கலாம் – விஷயமறிந்த பலருக்கும் வரும் எண்ணம்தானே அது :-)
கெட்ட வார்த்தைகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன் – எதிர்காலத்தில் என் மகள் படிப்பதற்கு உதவியாக இருக்கும். நன்றி!
April 26, 2015 at 18:06
சொல்லாமல் விட்டேனே… கில்யஸ் பற்றிய தொடர் நன்றாக இருந்தது. இப்படிப்பட்ட நண்பரைப் பெற்று, குறுகிய காலத்தில் அவரை இழந்தது வருத்தமளிக்கிறது.
உங்களுக்கு நான் சொல்ல வேண்டுமா – விதி உண்டுதான், யாருக்கு என்பதுதானே கேள்வி.
August 4, 2017 at 12:27
[…] துவளவேயில்லை. இவருடைய தகப்பன் அப்துல்லாஹ் ஒஸலன் அணியில் இருந்தவர். ஆகவே இவருடைய […]