| அசோகமித்திரனை வாசித்தல் | ஷிவ் விஸ்வனாதனின் கட்டுரை மொழிபெயர்ப்பு | பிந்த்ரான்வாலே | வினவு: கஜினியும் கலிலியோவும் | பாரதிதம்பி: ந்யூட்ரினோ! |
June 6, 2014
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு உருப்படியான, அழகான இலக்கியப் புனைவுகளை மொழிபெயர்ப்பு செய்யும் மாமனிதர்களில் ஒருவரான (இவர் ஒரே ஒருவர்தானோ இப்படி, என்பது என் சந்தேகம்!) ‘சிவசங்கரா’ கல்யாணராமன் அவர்கள், ‘அசோகமித்திரனை வாசித்தல்’ எனும் நிகழ்ச்சிக்கான ஒரு அழைப்பிதழை அனுப்பியிருக்கிறார்.
அசோகமித்திரன் எழுத்துகள் எனக்குப் பிடிக்கும் – அவர் போற்றப் படவேண்டியவர்தான். சென்னையில் வசித்தால், நிச்சயம் போகவேண்டிய நிகழ்ச்சிதான்; ஆனால், பேரறிவாளர் ராஜன் குறை அவர்களும் அதில், தமிழ் போன்ற ஒரு மொழியில் ஒரு சிடுக்கல் கட்டுரை (= ‘வரலாற்றிற்கப்பால் அன்றாடம்: அசோகமித்திரன் அழகியல் காட்டும் மீட்சி’)வாசிக்கப் போகிறார் என்பது, எனக்கு அடிவயிற்றில் இனம்புரியாத கலக்கத்தையும் பயபீதியையும் ஏற்படுத்துவது. (ஆனால் அதீதமாகப் பயப்படவேண்டாம் – ஆறு கட்டுரையாளர்களில் ஒருவர்தான் ராஜன் குறை அவர்கள் என்பது கொஞ்சம் ஆசுவாசமளிக்கும் விஷயம் என எஸ்ரா அவர்கள் போலச் சொல்லிக்கொள்கிறேன். குறை ஒன்று போதுமே கோவிந்தா!)
மேலதிக விவரங்கள்: கருத்தரங்கம் / ஜூன் 7 சனிக்கிழமை / மயிலை ஸ்ரீனிவாச சாஸ்திரி ஹால் / 10:00 – 16:45 /
இந்த நிகழ்வில் அசோகமித்திரன் அவர்கள் ஒரு சிற்றுரை (=30 நிமிடங்கள்!) மட்டுமே ஆற்றுவார் எனும் செய்தி, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் பேருரைகளில் சிலவற்றைக் கேட்டு மனம் பேதலித்துப் பாயைப் பிறாண்டிக் கொண்டிருக்கும் எனக்கு – நிச்சயம் ஆத்தும சுகம் அளிக்கக் கூடியதுதான்; ஆனாலும், போகமுடியாது.
-0-0-0-0-0-0-0-0-
ஷிவ் விஸ்வ நாதன் அவர்களின் ஒரு ஆங்கிலக் கட்டுரையைச் சுட்டி(ஷிவ் விஸ்வநாதன்: மோதி, என்னைப் போன்ற லிபரல்களை (=முற்போக்காளர்களை) எப்படித் தோற்கடித்தார்? 23/05/2014), அதன் தமிழ் வடிவத்தை யாராவது உருவாக்க முடியுமா என்று கேட்டதற்கு, திரு அர. வெங்கடாசலம் அவர்கள், வேலைமெனெக்கட்டு உழைத்து மொழிபெயர்ப்பு ஒன்றை அனுப்பியிருக்கிறார். அவருக்கு என் நன்றி.
இத்தனைக்கும் அதன் தமிழ் வடிவம் ஒன்றை ‘த அன்டி தமிழ் ஹிந்து’ பிரசுரித்த விஷயத்தை அவருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருந்தேன். ஆனால், அவர் அதனை அவர் கவனிக்கவில்லை.
ஆக, கீழே இருக்கும் இரு விதமான கட்டுரை மொழிபெயர்ப்புகளைப் படித்து இன்புறவும்.
அர. வெங்கடாசலம் வடிவம்: மோடி என்னைப் போன்ற தாராளவாதிகளைத்... ‘த அன்டி தமிழ் ஹிந்து’ வடிவம்.
என் பங்கிற்கு – இவை இரண்டையும் அலசி ஆராய்ந்து – ‘மொழிபெயர்ப்புக்கப்பால் ஆரூடம்: ஸெக்யூலரிஸ எழவியல் ஓட்டும் ஈ’ என ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதலாமென்றிருக்கிறேன்.
எப்படியோ, ஒவ்வொரு முற்போக்காள லிபரலும், ஸெக்யூலரிஸ மாயவாத மரத்தை விட்டு வாலைச் சுருட்டிக் கொண்டு கீழிறங்கிவந்து உழைத்துச் சம்பாதித்துச் சாப்பிட்டால், அதை வரவேற்பவனே நான்தான்! ;-)
-0-0-0-0-0-0-0-
இதனைப் படிக்கும் எவ்வளவு பேர், 1980களின் ஆரம்பத்தில் நடந்த பஞ்சாப் படுகொலைகள் (அதாவது, சீக்கியர்களில் ஒரு வெறியனின் அடிவருடிகள், ஹிந்துக்களைக் (+சில சீக்கியர்களையும் கம்யூனிஸ்ட்களையும்) குறிவைத்துக் கொன்றது) பற்றிய நினைவுகளைச் சுமந்து கொண்டிருப்பார்கள் எனத் தெரியாது.
இந்த விஷயம் தொடர்பாக – நான் மிகவும் மதிக்கும் ஷேகர் குப்தா (இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் நாளிதழின் தலைமையாசிரியர்) அவர்களின் – ஜர்னைல் ஸிங் பிந்த்ரான்வாலே பற்றிய, அவசியம் படிக்கவேண்டிய ஆங்கிலக் கட்டுரை.
ஷேகர் குப்தா அவர்கள் என்னை இதுவரை ஏமாற்றியதே இல்லை. கண்ட கழிசடைகளும் தினசரி ஆசிரியர்கள் எனக் கும்மாளமிட்டுக் கொண்டிருக்கும் இந்த காலகட்டங்களில் இவர் அபூர்வப் பிறவிதான்.
-0-0-0-0-0-0-0-0-
நகைச்சுவைப் பகுதி #1: நேற்றும் வினவு தளம் சென்று (=fatal attraction?) சில கட்டுரைகளைப் படித்தேன். சில சோகமான தருணங்களில், என்னை மீட்டுக்கொள்வதற்காக வினவிடம் சரணாகதியடைவது என்னுடைய தொடரும் வியாதிகளில் ஒன்று.
ஒரு எழவையும் தெரிந்துகொள்ளாமல், அறிவியல்-வரலாறு போன்றவையெல்லாம் என்ன ஜந்துக்கள் என கடுகளவு கூட புரிந்துகொள்ளாமல், ஆவண மூலங்களைப் படிக்காமல், காப்பியடித்து அதுவும் தப்பும்தவறுமாக ஒற்றியெடுத்து, உணர்ச்சிகரமாக புரட்சிகர முஷ்டிமைதுனத்தை உயர்த்திப் பிடிக்கும் திடுக்கிடும் வினவுதரக் கட்டுரைகள் கீழே:
படித்து வாய் விட்டுச் சிரிக்கவும். வரிக்கு வரி அபத்தங்கள், அபுரிதல்கள், அற்பத்தனங்கள்.
-0-0-0-0-0-0-0-0-0-
நகைச்சுவைப் பகுதி #2: சிலமாதங்கள் முன் மேதகு ‘மைக்குக்கு முன்னால் அழும்’ வைகோ அவர்களுடைய தொழில் நுட்பத்திற்கெதிரான அறியாமையின் பாற்பட்ட போராட்டம் ஒன்றைப் பற்றி எழுதியிருந்தேன். (நம் தமிழ்த் திரைப்படங்களில் அறிவியல் படும் பாடு! 08/11/2013)
ஆனால், அய்யய்யோ – எனக்கு நண்பர் ஒருவர் நேற்று அனுப்பிய சுட்டியில் இன்னுமொரு திடுக்கிடவைக்கும் அஅறிவியல் கட்டுரை பரபரப்புப் பப்பரப்பா!
இதில் ந்யூட்ரினோ ஆய்வு மையம் குறித்த திரித்தல் செய்திகள் – போதாக்குறைக்கு ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் (= ‘தொழில் நுட்பத்தின் எதிரிகள் – ஆனால் தொழில் நுட்பத்தைமட்டும் வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள்’) நிரந்தரத் தலைவரான ‘அய்யய்யோ அணுசக்தி’ புகழ் சுந்தர்ராஜப் பொரியியலாளரின் பொரி பொரித்தல்கள். இவர்களுக்கெல்லாம் நான் சொல்வது – உருப்படியாக ஒரு காரியமாவது செய்துவிட்டு, பின்னர் தூசி வாரியிறைக்க வாருங்கள்.
நியூட்ரினோ ஆய்வு மையம்… ஆராய்ச்சியா? அணுக்கழிவா?
“அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தை அலறவைக்கப்போகிற சொல்… ‘நியூட்ரினோ’!
“நியூட்ரினோ என்பது சூரியனில் இருந்தும், இந்தப் பேரண்டத்தின் மற்ற விண்மீன்களில் இருந்தும் வெளிப்படும் துகள்”
… என்பது போல ஆரம்பிக்கும் தமாஷ் இந்தக் காட்டுரை. தொடர்ந்து விழுந்துவிழுந்து சிரிக்கவைக்கும் கோமாளித்தனம் இது.
தொடர்ந்து ஒரே ரோல்லர்-கோஸ்டர் பப்பரப்பா!
கருத்துப் பிழைகள் (இவைகளையாவது, செல்லமாக மண்டையில் குட்டிப் புறம்தள்ளிவிடலாம்) மலிந்திருக்கும் இக்கட்டுரையில் – தகவல் பிழைகளும் முதலிடத்திற்குப் போட்டியிடுகின்றன என்பது ஓரு கூடுதல் மகிழ்ச்சி தரும் விஷயம்.
அணுக்கருவுலை, சக்தி, அணுத் துகள்கள், அணுக்கழிவு போன்றவற்றைக் கொஞ்சமேனும் அறிந்த விஞ்ஞானிகளிடம் இதனைப் பற்றி விசாரித்து எழுதாமல் ஏன் அரைவேக்காட்டுத்தனத்திலேயே மூழ்கியிருக்கிறார்கள்?
அறிவியல் கட்டுரை என்பது – ஒரு அற்ப தமிழ்சினிமாப் பட விமர்சனம் இல்லை என்பதை எப்போது இவர்கள் உணர்வார்கள்?
இயற்கைக்கும் செயற்கைக்கும் உள்ள தொடரும் முரணியக்கம் என்பதும்தான் மனிதகுலத்தின் தொடர்ந்த வளர்ச்சியைச் சாத்தியப் படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவ்வளவு கஷ்டமா என்ன?
குறைந்தபட்சம் இந்த ந்யூட்ரினோ ஆய்வு மையத்தின் தளத்தையாவது முழுமையாகப் படித்திருக்கவேண்டாமா? இவருக்கு என்ன, தான் யுவகிருஷ்ணா என்ற நினைப்பா?
இந்த அரைகுறை ஆனந்தவிகடன் தான் – இந்த அரைகுறைக் கட்டுரைகளைப் பதிப்பிக்கமுடியும். இந்த ‘பாரதி தம்பி’ யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால், இவர் காந்திமதி நாதன் அவர்கள் சொல்லியிருக்கக் கூடுவது போல – ‘சின்னப் பயலோ’ என்ன எழவோ…
ஆனாலும் மேதகு பாரதிதம்பி அண்ணன் அவர்கள், கூடிய விரைவில் மேலும் அமோகமாக வளர்ந்து, பொலிய, ப்ரபஞ்ச தாத்பரியத்தைக் கண்டுணர்ந்து முட்டாள் சகதமிழர்களை அறிவியல் ரீதியாகத் தடுத்தாட்கொள்ள என் ஆசிகள்.
-0-0-0-0-
ஆம். எனக்கு, தற்போது வேறுவேலையே இல்லை! 8-)
June 6, 2014 at 18:58
கஜனி –
அய்யா அது வேறு ஒன்றும் இல்லை – TNTJ ஐப் பற்றி கார சாரமாக கட்டுரை எழுதி இருந்தார்கள் – அட பரவாயில்லையே வினவு நடு நிலைமையோடு உள்ளதே என்று தான் நினைத்தேன். ஆனால் அவர்கள் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டார்கள் போலிருக்கிறது. திப்பு, ஹைதர் அலி இவர்களைப் பற்றி எல்லாம் ஏற்கனவே வானளாவிய வரைக்கும் தமிழ் பேப்பரில் வந்து விட்டது. என்ன செய்யலாம் என்று ( ரூம் போட்டோ அல்லது போடாமலோ ) யோசித்து – ஆஹா கஜனி நல்லவன் என்று எவருமே எழுதவில்லை இதுவரை – அப்படி ஒரு கட்டுரை எழுதினால் TNTJ விடம் இழந்த நல்ல பேரை மீட்கலாமே என்ற எண்ணம்தான்.
1947 இல் தான் இந்தியா வந்தது – 11 ம் நூற்றாண்டில் கஜனி எப்படி இந்தியா மீது படை எடுத்து இருக்க முடியும் என்ற கேள்வியும் அதற்கு பின் வினையில் ஒரு குளுவான் ஆமாமாம் இதற்கு என்ன பதில் என்பதும் – தாங்க முடியவில்லை !
June 6, 2014 at 20:28
/// ஷேகர் குப்தா (இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் நாளிதழின் தலைமையாசிரியர்) ///
அவர் எக்ஸ்பிரஸை விட்டு ரொம்ப நாளாச்சு. http://www.business-standard.com/article/current-affairs/shekhar-gupta-quits-as-editor-in-chief-of-indian-express-114060201009_1.html
June 6, 2014 at 20:50
ஓ! நன்றி.
ஆனால் அவர் இந்த திங்கள் கிழமைதான் வேலையை விட்டிருக்கிறார் என உங்களுடைய 3 ஜூன் 2014 செய்தி சொல்கிறது. நான் எழுதிய பதிவின் தேதி 5 ஜூன் 2014. இன்று தேதி 6 ஜூன் 2014.
:-) நானும் எழுதுவதற்கு முன் இதனைச் சரிபார்த்திருக்கலாம்தான். தினசரிகளைப் படிக்காதிருப்பதால் சில திருகுவலிகள்.
June 6, 2014 at 23:20
// அறிவியலின் கதியும் அறிவியலாளனின் நிலையும்
இந்தக் கட்டுரையின் அபத்தங்கள் சிலவற்றை குறிப்பிட முடியுமா? வினவு தள கட்டுரைகளை சீரியசாக படிக்கும் எனக்கு உபயோகமாக இருக்கும்.
June 7, 2014 at 07:24
அன்புள்ள வெங்கடேசன்,
இதனைப் பற்றி விலாவாரியாக எழுத ஆரம்பித்தால் விலாவலிக்கச் சிரிக்க(=அழத்) தோன்றும். ஆகவே, சில அவசரக் குறிப்புகள் மட்டும்:
1. இவர்கள் மூலப் புத்தகங்களையோ, அதன் ஓரளவுக்குச் சரியான பொழிப்புரைகளையோ படிக்கவில்லை. அல்-பெருனி 1030 வாக்கில் பல விஷயங்களைக் காற்றுவாக்கில் வாங்கி எழுதிய புத்தகத்தின் 1910 வாக்கில் எழுதப்பட்ட ஆங்கில உரையை (நான் படித்திருக்கிறேன் – சுமார் 900 பக்கம்) முன் வைத்து தப்பும்தவறுமாக எழுதப்பட்ட ரொமிலா தாபர் அவர்களின் தற்கால எழுத்துகளை (நான் படித்திருக்கிறேன் – பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும்) – அதுவும் அவருடைய லிபெரெல் சாயத்தைப் புரிந்துகொள்ளாமல் (=புரிந்துகொண்டு) – வேதவாக்காகக் கருதி அப்படியே ஒற்றியெடுத்திருக்கிறார்கள். இவருடைய வரலாற்றுப் புத்தகங்கள் திரிப்புகளுக்காகப் புகழ் பெற்றவை)
2. உதாரணம்: “பார்ப்பனர்களுக்குப் பயந்து இப்படிச் சொல்ல வேண்டியிருப்பது பற்றி” எனும் பதத்தையே விடுங்கள் – அப்படி அர்த்தம் வரும் எழுத்துக்கோவை அல்-பெருனியிடம் இல்லை. மேலதிகமாக அல்பெருனி – உட்கார்ந்த இடத்தில் இருந்து நேரில் பார்த்தார்போல கருத்துகளை, டயரி குறிப்புகளை வெளியிட்டமையையும், க்ரேக்க, இஸ்லாமிய சிந்தனை மரபுகளைப் பற்றியும் தப்பும் தவறுமான கருத்துகளைப் பரப்பியமையும். (ஆனால் ரோமிலா புத்தகத்தில் இப்படி இருக்கிறது, பாவம் வினவாளர்கள் என்னதான் செய்வார்கள்!)
3. வினவு கட்டுரை: “பழமையான கிரேக்க நாகரீகம் தான் ஆரம்பகால அறிவியல் சாதனைகளைப் படைத்தது.” இது தவறு. மேற்கத்திய மேட்டிமைவாதிகளின் கருத்து இது. இதன் ஊற்றுக்கண்கள் பல. சீனா-இந்தியா விலிருந்து வணிகத்தடங்கள் மூலமாக அரேபிய வழியாக இஸ்லாம் ஊடாக மேற்கத்திய உலகத்தைச் சென்றடைந்தவைதான் உலகத்தின் ‘ஆரம்பகால’ அறிவியல் சாதனைகள். இந்த ‘ஆரம்பம்’ என்பதிலேயே மகாமகோ அரசியல். பின்னர் கத்தோலிக்க ‘திருச் சபை’யாலும், மேற்கத்திய அறிவியலாளர்களாலும் க்றிஸ்தவ கோட்பாடுகளை உட்செலுத்தி வரலாறு புத்தம்புதிதாக எழுதப்பட்டது.
4. ஆனால் ரோமிலா தாபர் அம்மணியை மட்டும் படித்தால் – ஆம், மௌடீகம்தான் தொடரும்.
5. ப்ரெக்ட் நாடகத்தை (=Leben des Galilei 140 சொச்சம் பக்கங்களே!) அதன் ஜெர்மன் மூலத்தில் படிக்காமல், அதன் ஆங்கில வடிவத்தின் தமிழ் மொழிபெயர்ப்பைப் படித்து அதன் மேல் தங்கள் கருத்துகளை ஏற்றி, மிகவும் தட்டையாக எழுதியிருக்கிறார்கள். நீங்கள் சதாசிவம் மொழிபெயர்ப்பைப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன் – வெகுவாக சுத்திகரிக்கப்பட்டு சுளுவாக்கப்பட்டதை நயம் விலையில் விற்றிருக்கிறார்கள். இதனையும் ஆங்கில மொழிபெயர்ப்புமூலத்தையும் ஒருங்கே படியுங்கள், முடிந்தால்.
6. ப்ரெக்ட் – அவருடைய பார்வையில் ஒரு புனைவை எழுதியிருக்கிறார், அதிலும் பிரச்சாரத் தொனிதான் அதிகமே தவிர, இலக்கியம் அல்ல. அதனை வரலாறாக அறிவிலிகள்தான் கொண்டாடுவார்கள். அப்படிப் பார்த்தால், சுஜாதாவின் கணேஷ்-வசந்த், எழவாவது அறிவு போன்றவை வரலாற்றைத்தான் சித்திரிக்கின்றன.
7. இதைத் தவிர – இவர்கள் படிக்க வேண்டியது என்று சொல்வது:
ஏங்கெல்சின் ‘இயற்கையின் இயக்கவியல்’ என்ற கட்டுரை.
ஏங்கெல்சின் ‘கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும்’ என்ற கட்டுரை.
நவீன ஐரோப்பிய வரலாறு.
ஜார்ஜ் தாம்சனின் ‘மனித சமூக சாரம்’
மாவோவின் ‘அறிவுத் தோற்றம்’ பற்றிய கட்டுரை.
(இவையனைத்தையும் நான் படித்திருக்கிறேன் – தமிழிலும் ஆங்கிலத்திலும்)
இவை போன்றவைதான் விஞ்ஞான-தத்துவ அடிப்படைகளைக் கொடுக்குமென்றால், மீதமுள்ள விஷயங்களை உங்கள் ஊகத்துக்கு விட்டுவிடுகிறேன்.
இப்போதைக்கு இவ்வளவு போதும்.
வினவு தளம், நிச்சயம் படிக்கவேண்டியதுதான் – ஆனால் எதற்கு என்கிற தெளிவு இருக்கவேண்டியது அவசியம் என்பது என் கருத்து.
அன்புடன்:
__ரா.
August 25, 2014 at 14:59
அப்போ நியுட்ரினோ பற்றி விகடனார் சொன்னது தப்பா? அப்டின்னா நீங்க கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அண்ணே!
August 25, 2014 at 17:29
Yes sir. It is very incorrect. It is scaremongering.