பள்ளி: சென்ற கல்விவருடமுடிவுச் சிந்தனைகள், குறிப்புகள்
June 4, 2014
ஒரு வழியாக, இந்த 2013-14 கல்வி வருடமும் சுமார் இரண்டு வாரங்களுக்குமுன் முடிந்தது. அயர்வாகத்தான் இருக்கிறது. இனி நான்கு வாரங்கள், எனக்கே எனக்கு எனச் செலவழிக்கவேண்டும்; மீளவேண்டும். ஆரம்ப விழாவாக – மூன்று நாட்கள் விமரிசையாகத் தூங்கினேன். :-)
-0-0-0-0-0-0-0-
என் பள்ளியில் பத்தாம் வகுப்புப் பிள்ளைகள் பரீட்சையில் தேர்வடைந்து / கெலித்து விட்டார்கள். சந்தோஷமான செய்திதான்; எப்படியோ வெளியுலகத்திற்குச் சென்று, தேவையான மேற்படிப்பு படித்து, உழைத்துச் சம்பாதித்து, இவர்கள் முன்மாதிரிப் பிரஜைகளாக விளங்கினால் சரி.
… சென்ற ஒரு வருடமாக, இந்தப் பிள்ளைகள் +2 இங்கேயே படிக்கிறோம், தமிழக அரசின் ஹையர் ஸெகன்டரி பரீட்சைகளையும் இன்னொரு இரண்டு வருடம் இந்தப் பள்ளியிலேயே படித்து எழுதுகிறோம் என்றார்கள். மகாமகோ அழுத்தம் கொடுத்தார்கள். எங்களுக்காக மேலதிகமாக இரண்டு வருடம் செலவழிக்க முடியாதா எனப் பரிதாபமான, நியாயமான, கோபமான, வருத்தமான கெஞ்சல்கள். அவர்களுக்கு இப்பள்ளியை விட்டுவிட்டு வெளியேறவே ஆசையில்லை. ஆனாலும் – நான் முதலில் இருந்தே அது முடியாது என்றுதான் சொல்லி வந்திருக்கிறேன்.
ஏனெனில், மூன்று வருடங்கள் முன் இவர்களுக்கு மூன்று வகுப்பு ஸீனியர்களுக்கு +2 வரை படிப்பிக்க முனைந்தோம். நம்பவே முடியாத பிரச்சினைகள், தகுதி வாய்ந்த பிற ஆசிரியர்கள் கிடைக்காமை, தமிழக அரசின் கல்வி ஆய்வாளர்களிடமிருந்து அபத்தமான பிரச்சினைகள்; எதற்கெடுத்தாலும் கூப்பிடும் கல்வித்துறையின் ஆணைகளுக்கு அடிபணிந்து – திண்டிவனத்துக்கும், கடலூருக்கும், விழுப்புரத்துக்குமென்று ஆவணங்களை எடுத்துக்கொண்டு ஓட்டங்கள். கவைக்குதவாத ஆய்வுகள், கூட்டங்கள், அறிவுரைகள். பள்ளியிலோ – மேலதிகமாக குடிகார அப்பன்களின் அழிச்சாட்டியங்கள், வன்முறைகள், திருடல்கள். பாமக, விசிகே உதிரிகளால் பிரச்சினைகள்.
…இத்தனைக்கும் நாங்கள் தமிழக அரசிடமிருந்து ஒரு சுக்கு உதவியும் பெறுவதில்லை. குழந்தைகளிடமிருந்து வசூலித்த கட்டணமும் அபத்த அளவில் (பள்ளியின் நடத்தும் செலவில் 6% மட்டுமே!) இருக்கிறது. சென்ற வருடம் வரை, மாதக் கட்டணம் 80 ரூபாயைத் தாண்டவில்லை. ஆனால் பள்ளியில் – மிகப்பல நகரம்சார் பல்தேசியப் பள்ளிகளை (=இன்டர்னேஷனல் ஸ்கூல்கள்) விட அபரிமிதமான அளவிற்குக் கட்டுமானங்களும், திறமைத் திறப்புகளும், நிகழ்ந்து கொண்டிருக்கும் அற்புதங்களும்!)
ஒன்றரை வருடங்கள் போல வாரத்துக்கு ஏழு நாள் வேலை; ஞாயிறன்றும் மதியம்வரை வகுப்புகள். மேலதிகமாக, அன்றாட வேலைகளைத் தாண்டித் திட்டமிடல் வகையறா. கிராமத்து ஒலிபெருக்கிகளுக்கு பயந்து கொண்டு, ஐந்து மாதங்கள் போல காலை 4:30 மணியிலிருந்து வகுப்புகள் – இன்ன பிற இன்ன பிற. எனக்குக் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவதும், கல்விபெறுவதும் மிகவும் பிடித்தமான விஷயங்கள்தான். ஆனாலும் வெறுத்து விட்டது.
நாயர் பிடித்த புலிவால் போல, குழந்தைகளையும் விடமுடியவில்லை. ஆனால் அலுப்பும், களைப்பும் தாளவில்லை. என் தலைமுடியெல்லாம் கடந்த மூன்று வருடங்களின் நரைத்தே போய்விட்டன. ஆகவே, அந்தக் குழந்தைகள் +2 எழுதி முடித்தபின் – இந்தப் பைத்தியக்காரத் தனத்தை இன்னொரு முறை செய்யக் கூடாது என்று முடிவெடுத்தேன். ஒருவழியாக, கடந்த ஒரு வருடமாக இந்த +1/+2 வகுப்புகள் இல்லை. ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா!
ஆனால், இந்த வருடம் 10வது முடித்த குழந்தைகளுக்கு, இந்த விஷயங்களை நான் ஒரு வருடம் முன்னமே தெரிவித்தும் கூட அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை – அவர்களுக்கு மட்டும் ஏன் செய்தாய், நாங்கள் இரண்டாம் பட்சமா – என்பதிலிருந்து பல மனோதத்துவரீதியான அழுத்தங்கள். ஒரு — பல வருடங்களாக, ‘நாளைமுதல் குடிக்க மாட்டேன்’ குடிகார அப்பனின் – ‘ நீ ஐயர்செகன்டரி நடத்தறேன்னு சொல்லு, நான் நாளைக்கே குடிக்கறத வுட்டுர்ரேன்! கலாட்டாவெல்லாம் பண்ணமாட்டேன்!’ ஒரு குழந்தை: ‘ராம், நீங்க ரொம்ப ஸெல்ஃபிஷ்; கவுத்திடுவீங்கன்னு நெனக்கவேயில்ல!’
பெங்களூரிலிருந்து வந்த ஒரு நண்பர் கூடச் சொன்னார் – பையன்கள் சூட்டிகையாக இருக்கிறார்கள் – ஏன் நீ இவர்களுடன் +2 வரை நேரம் செலவழிக்கக் கூடாது? மேலதிகமாக இரண்டுவருடங்கள்தானே, திரும்பிப்பார்ப்பதற்குள் ஓடிவிடுமே!
அவரிடம், என்னைத் தடுமாற வைக்கும் பிரச்சினைகளையெல்லாம் சொன்னபிறகு, இந்த அறிவுரை! நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை. பத்திருபது வருடங்களுக்கு முன்பு இது நடந்திருந்தால் – நான் இவனிடம், ‘ஏண்டா, நீயும் இங்க வர்ரியா, சேர்ந்து வேலை செய்யலாம்’ என்றாவதாவது கருணாநிதி போலச் சொல்லியிருப்பேன். ஆனால் வயதாக வயதாக, சுத்த சன்மார்க்க அறிவுரை பெறுவதில் உள்ள இன்பம்ஸ் அதிகரித்துக்கொண்டு வருகிறது, வேறென்ன சொல்ல.
… எனக்கும் இதில், என்னுடைய அணுகுமுறையில் பல சந்தேகங்கள். இன்னொரு இரண்டு வருடம் இவர்களுடன் இருந்தால், குறிப்பிடத்தக்க அளவில் அவர்களை மேல் நோக்கிச் செலுத்தலாமே என்பது போல, நம்மால் செய்துமுடிக்கக்கூடிய காரியங்களை செய்துமுடித்தேயாக வேண்டாமா என்பதுபோல. நாம் ஒரு விஷயத்தைச் செய்யாமல், பிறத்தியார் மட்டும் செய்வார்கள் என எதிர்பார்ப்பது நியாயமா என்பதுபோல. ஆனால், எப்போதுமே நான் ஒரு சுயநலவாதி. எனக்கு சுயத்தை தக்கவைத்துக் கொள்வது, ஆரோக்கியமாக, சந்தோஷமாக வாழ்வது முக்கியம்; என் குடும்பமும் மிக முக்கியம். அதற்குப் பிறகுதான் மற்றதெல்லாம்.
ஆக, இந்த வருடமும் பத்தாம் வகுப்பு முடித்த குழந்தைகள் வேறு பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். புத்திசாலிகள். மேலெழும்பி வருவார்கள். எதிர்காலமும் ஒத்துழைக்கும் எனத்தான் நினைக்கிறேன்.
-0-0-0-0-0-0-0-0-
சுமார் எட்டு மாதங்கள் முன் ஒரு இளைஞன் (=வாலன்டியர், தன்னார்வக்காரன்) தொடர்புகொண்டான். ஒரு தமிழக அவல்பொரியியல் பிடெக் + படிப்புக்குத் தொடர்பேயில்லாமல் பெங்களூரில் 5 வருட கணினிப் பொட்டிதட்டல் + தேசத்திற்கு ஏதாவது செய்யவேண்டும். நிச்சயம் நாம் இருவரும் சேர்ந்து +2 நடத்தலாம் என்று உற்சாகத்துடன் சொன்னான். முன்முடிவுகளை ஒதுக்கிவைத்துவிட்டுப் பேசினேன். 28 வயதுக்காரன் இந்த அளவு ‘சேவை மனப்பான்மை’யுள்ளவனாகத் தம்மை நினைத்துக் கொள்வதே பெரிது.
இதுவரை என்ன செய்திருக்கிறான் எனக் கேட்டால் – ஐ ஆம் வெய்ட்டிங் ஃபார் எ ப்ரேக்.
சேவையை பெங்களூரிலேயே செய்யலாமே? அங்கில்லாத பிரச்சினைகளா, தேசத்திற்குச் செய்யமுடியாதவைகளா? சில அழகான பள்ளிகள் அங்கும் இருக்கின்றன – என் நண்பர்கள் இருக்கிறார்கள், அவர்களிடம் பரிந்துரைக்கட்டா?
எனக்குக் கன்னடம் தெரியாது. மேலும், தமிழனான எனக்குத் தமிழ் நாட்டில்தான் பணிசெய்யவேண்டுமெனத் தோன்றுகிறது.
சில மாதங்களுக்கு இம்மாதிரி உரையாடல்கள் தொடர்ந்தன.
ஆனால் – அவன் வாரத்திற்கு ஒருமுறை ஒரு நினைவூட்டல் அனுப்பி, களப்பணி செய்தேயாகவேண்டும் எனத் துடித்தான். எனக்கும் நப்பாசை, எப்படியாவது +2வை நடத்திவிடலாம் என்று.
ஆக – இரண்டுமாதம் முன் வந்தான். ஒருவாரம் பள்ளியில் தங்கி வெள்ளோட்டம் பார்ப்பதற்காகவென்று. அறை+சாப்பாடு இலவசம். பேசுகையில் அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஆர்வம் இருந்த அளவிற்கு அனுபவமில்லை எனத் தோன்றியது. இருந்தாலும் பரவாயில்லை என நினைத்தேன். உரையாடலின் முடிவில் அவனிடம் சொன்னேன்: சரி, நீ இரண்டு வருடம் என்னுடன் இருக்கப்போவது இருக்கட்டும். அடுத்த ஒரு வாரத்துக்கு ஒவ்வொரு நாளும் காலை 8:20 மணிக்கு வந்து என்னுடன் பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்ய, பெருக்க வா. சில குழந்தைகளுக்கு பிரத்தியேகமான உதவிகள் தேவைப்படுகின்றன – அவர்களுடன் அறிமுகம் செய்துகொள்ள நீ கொஞ்சம் நேரம் செலவழிக்கலாம், பேசலாம். எதிர்காலத் திட்டங்களைப் பின்னர் பார்க்கலாம்.
முதல் நாள் வந்தான். ஏனோதானோ என்று பெருக்கினான். குழந்தைகளுடன் பேசுவதற்கு, அவர்களைப் புரிந்துகொள்வதற்கு – தமிழ்த் திரைப்படங்களைப் பற்றிப் பேசினான். எனக்கு இதில் மகாமகோ பிரச்சினை; என்னைப் பொறுத்தவரை, திரைப்படங்களின் மூலமாக கலாச்சாரக் கூறுகளையோ (cultural references), சமகால வாழ்க்கையையோ அணுகுவதென்பது, அதை ஒரு உரையாடல்களுக்கான தளமாக உபயோகிப்பது என்பது எனக்கு உடன்பாடில்லை. இருந்தாலும், பையன் கற்றுக்கொள்வான் என விட்டுவிட்டேன்; ஒரு சராசரித் தமிழனால் திரைப்படத்துக்கு அப்பாற்பட்டவைகளை – திரைப்படப் பரிபாஷைகளினூடே மட்டுமேதான் பார்க்க முடியும் என்பதை, சராசரியான நான் ஒப்புக்கொண்டு பல வருடங்களாகிவிட்டன.
மாலையில் எங்களிடம் வந்து சொன்னான் – எனக்கு துப்புரவு வேலை செய்யப் பிடிக்காது. மாணவர்களுக்கு கணிதம் வேண்டுமானால் கற்றுக்கொடுக்கிறேன்.
எனக்கு கொஞ்சம் வெறுத்துவிட்டது – அவனிடம் சொன்னேன்: நான் இது பற்றியெல்லாம் மின்னஞ்சலில் முன்னமே தெரிவித்தேன் அல்லவா? இங்கு வேலை என்பது ஒரு பேக்கேஜ். குழந்தைகள் படிப்பதற்காக, அவர்களை நல்ல பிரஜைகளாக உருவாக்குவதற்காக என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அவை அனைத்தையும் செய்யவேண்டுமென்று. ஒப்புக் கொண்டுதானே, நீயாகவேதானே வந்தாய்? அதுவும் நான் – நன்றாக யோசித்துவிட்டுப் பிறகுதானே வா என்றுதானே படித்துப்படித்துச் சொன்னேன்? எனக்கு வர்க்-எதிக் மிகவும் முக்கியம். டிக்னிடி ஆஃப் லேபர் விஷயமும். எந்த வேலையையும் சுயஅர்ப்பணிப்புடன் செய்யவேண்டும். இந்தப் பள்ளியில் பெருக்க மாட்டேன், ஒட்டரை அடிக்கமாட்டேன் என்றெல்லாம் சொல்லமுடியாது. இந்தப் பள்ளியில் ஒரு சராசரி நாள் எப்படிப் போகும் என்பதையும் தெரிவித்திருந்தேன் அல்லவா?
இருந்தாலும் ஒரு ஆசிரியர் என்றால் இந்த மாதிரி எல்லாவேலையும் செய்யவேண்டிய அவசியம் இல்லையல்லவா – என்றான்!
ஆமாம். ஆனால், இங்கு இரண்டுவிதமாக ஆசிரியர்கள் இருக்கிறார்கள் – பிஎட், எம் எட் படித்து கூலிக்கு மாரடிக்கும் இனம் ஒன்று – இவர்களை வைத்து பாடப்புத்தகத்தைச் சுற்றிய கரும்பலகைதான் சாத்தியம். அவர்களிடம் நான் ஒன்றுமே கேட்கவே மாட்டேன். ஆனால், நம்மைப் போல இன்னொரு இனம் – ஆக, தன்னார்வக் காரர்களின் முனைப்பே வேறாக இருக்கவேண்டுமல்லவா? இதனைப் பற்றி விலாவாரியாக எழுதியிருந்தேனே? நீயும் தானே ஒப்புக் கொண்டாய்? நீ ஒரு வெறும் பிடெக் தானே படித்திருக்கிறாய். ஒரு பிஎட் தகுதிச் சான்றிதழ் கொண்டுவா, பின்னர் தாராளமாக – ஒரு சாதாரண ஆசிரியராக உன்னைச் சேர்த்திக் கொள்கிறேன். அரசுக் கல்வியதிகாரிகளின் தொல்லையை கொஞ்சமாவது சமாளிக்கலாம்.
அவன் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவன் முகம் சிவந்தது. எனக்கும், கோபத்தை அடக்கிக் கொண்டதும், அவனைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது. உடலை வளைத்து வேலையே செய்யாமல், சும்மனாச்சிக்கும் பன்னாட்டு(!) நிறுவன தகவல் தொழில் நுட்பக்(!!) கூலிக்கடைகளில் பொட்டி தட்டிக்கொண்டிருந்தால், அவைகள் தரும் அதிகக்கூலியில் புளகாங்கிதமடைந்து பீட்ஸா சாப்பிட்டுக்கொண்டிருந்தால், இப்படித்தான் ஆகும் என நினைத்துக்கொண்டேன்.
… ஒரு வேலை இருக்கிறது என்று (பொய்) சொல்லிவிட்டு – ஐந்து நிமிடத்திற்குள் திரும்பி வருவதாகச் சொல்லி – பள்ளி வளாகத்திற்குள் ஒரு சிறு நடை பழகியவுடன், எனக்கும் கொதிப்பு அடங்கி கொஞ்சம் தெளிவு பிறந்தது. சரி, பெங்களூரிலிருந்து வந்திருக்கிறான் பாவம், தமிழிளைஞன் வேறு – அவன் பாடம் மட்டும் நடத்துவதென்றால், அதையாவது ஒழுங்காகச் செய்யட்டும் என முடிவெடுத்தேன். திரும்பி அவனிடம் போய் அப்படியே சொன்னேன்.
அவன் இரண்டு நாட்கள் இருந்தான். எதிர்பார்த்தபடி அவன் தரம் இல்லாததால், மாணவர்களிடமும் ஒரே எதிர்ப்பு. அவனுக்கும் கணித அடிப்படைகளை விளக்கத் தெரியவில்லை; ஒரே ‘அதுதாண்ணேய் இது’ விவகாரங்கள். அவன் நான் கொடுத்திருந்த சுட்டிகளை, ஆவணங்களை, புத்தகங்களை படிக்கவேயில்லை. ஹோம் வர்க் என்பதைச் செய்யவேயில்லை.
சுபம். இனிமேலிருந்து வாலன்டியர் என்று வந்தாலே அவர்களை விட்டு காததூரம் ஓடப் போகிறேன். எனக்குச் சராசரிகளுடன் மாரடிக்க நேரமில்லை. நான் மேட்டிமைவாதிதான்.
-0-0-0-0-0-0-0-0-
கடந்த மூன்று வருடங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்… இந்த விஷயம் எனக்கு மிகவும் துக்கத்தை அளிப்பது.
என் பள்ளியில், சுமார் 230 குழந்தைகளும் 40 ஆசிரிய/மற்றைய வேலைசெய்யும் வளர்ந்தவர்களும் மதியவுணவு சாப்பிட, தினசரி சுமார் 18 கிலோ அரிசி சமைக்கப் படும்; ஆனால் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் குழந்தைகள், சுமார் ஒருமாத விடுமுறைக்குப் பின், கொஞ்சம் மெலிந்தவர்களாகத் திரும்பி வரும்போது – அவர்கள் சாப்பிடும் வேகத்தையும் அளவையும் பார்த்தாலே பாவமாக இருக்கும். ஆக, ஜூன் 15 முதல் ஜூலை 10 வரை போல – தினசரி சுமார் 6-7 கிலோ மேலதிகமாகச் சமைப்போம். பின்னர் கொஞ்சம்கொஞ்சமாக அரிசியைக் குறைத்து காய்கறிவகைகளின், பழங்களின் அளவுகளை ஏற்றுவோம்.
ஏனெனில் – வீடுகளில் குழந்தைகளுக்கு சரியான உணவளிப்பது என்பதே நடப்பதில்லை. ஏன் தான் இவர்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்களோ என்று நான் பல சமயம் நினைத்திருக்கிறேன்.
இத்தனைக்கும், சுற்றுவட்டார கிராமங்களில், அடிப்படைக் கூலிவேலை செய்தாலும் தினம் ரூ 300/- சம்பாதிக்க முடியும். ஒரளவுக்குத் தொழில் தெரிந்தவர்களாக இருந்தால், சுலபமாக ரூ 700/- சம்பாதிக்க முடியும். வேண்டிய அளவுக்கு மேலேயே வேலைகள் செய்யப்படுவதற்குக் காத்திருக்கின்றன.
ஆனால், பெரும்பாலான தந்தையர்கள் குடிகாரர்கள். ஒரு நாள் வேலை செய்தால் இரண்டு நாள் அந்தப் பணத்தில் குடித்துவிட்டுச் சாக்கடையில் குஞ்சாமணி தெரிய புரள்வதற்கே, மனைவியை அடிப்பதற்கே நேரம் பற்றாது அவர்களுக்கு. அயோக்கிய அற்ப திரா விட அரசுகள், மாறிமாறி இலவசமாக, பிச்சைகளை விட்டெறிந்து, தாமஸ குணத்தை பெரிதும் வளர்த்து விட்டிருக்கின்றன. தமிழர்களை சோம்பேறிக்கூவான்களாகக் காயடித்துவிட்டிருக்கின்றன. மேலதிகமாக இந்த மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் திட்டம் வழியாக வருடத்துக்கு 100 நாள் விட்டெறியப்படும் அற்பப் பிச்சை – அதாவது வேலை என்று ஒரு எழவும் செய்யாமல் வரும் ஊழல் சம்பளம்(!) – தாராளமாக, இன்னமும் குடித்ததற்குப் பின் பெருக்கெடுத்தூறும் சிறுநீரில் புரளலாம், அற்பர்கள்.
மனைவிகள் பாடு பரிதாபம். குடிகாரக் கணவனிடமிருந்து தன்னையும். முக்கியமாகத் தன் மகளையையும் காப்பாற்றவேண்டிய நிலை. மேலதிகமாக, அவள் சம்பாதித்தால்தான் அடுப்பில் உலைபொங்கும். அதாவது, அமோகமாக நீரிழிவுநோய் வர ரேஷன் வெள்ளையரிசிச் சோறு – அதுவும் குறைவாக. ஆனாலும். இந்த நிலையிலும், குழந்தைகள் புதுத் திரைப்படம் வெளியிடப்பட்டால், திரையரங்குகளுக்குச் சென்று அதனைப் பார்த்தே தீர்வார்கள் – அதுதான் தமிழர்களுடைய அபின்; நான்கு வருடங்கள் முன் இது எனக்கு மாளா ஆச்சரியம் தந்த விஷயம்; இப்போது அப்படியில்லை. பழகிவிட்டது. :-(
சரி. இந்த வருடமும் – ஜூன் நடுவில், விடுமுறை முடிந்து குழந்தைகள் பள்ளிக்கு வருவார்கள். சில வாரங்களுக்கு அதிக அளவு அரிசிச் சோறு வடிக்க வேண்டியிருக்கும். எனக்கு இதில் சந்தேகமேயில்லை.
-0-0-0-0-0-
சில மாதங்கள்முன் பார்க்க வந்திருந்த ஒரு நண்பர் திடுதிப்பென்று கேட்டார்: ஏன் நீ ஒரு ஆசிரியனாக இருக்கிறாய்?
இதனைப் பற்றி நான் தீவிரமாக யோசித்திருக்காத காரணத்தால் – அவரிடம் முட்டியடி எதிர்வினையாகச் சொன்னது: ‘குற்றவுணர்ச்சினால் இருக்கலாமோ?’ ஆனால், அவருக்கு அந்த பதில் திருப்தி தரவில்லையென்று தெரிந்தது; யோசித்தால் எனக்கும்தான் அது திருப்தி தரவில்லை. பின்னொரு சமயம், இதனைப் பற்றி.
நன்றாகத் தூங்கவேண்டும்.
(இதனைத் தொடர்ந்த அடுத்த பதிவு: பள்ளி, பத்ரி சேஷாத்ரியின் கோபங்கள், ஆதங்கங்கள்: என் கருத்துகள் 07/06/2014)
June 5, 2014 at 07:53
நீங்கள் விரும்பினால், உங்கள் பள்ளிக்கு வந்து குழந்தைகளைப் பார்க்க விரும்புகிறேன். அநேகமாக ஜூலையில் எனக்கு அது சாத்தியமாகலாம். ( உடல்நிலை காரணமாக.) அவசியம் தகவல் தெரிவியுங்கள். அன்புடன் ஞாநி. gnanisankaran@gmail.com
June 5, 2014 at 13:25
நல்ல பணி. வாழ்த்துக்கள்.
June 5, 2014 at 14:58
ராம்: நான் உங்களிடம் ஏற்கெனவே கேட்ட கேள்விதான். இங்கே பொதுவில் வைக்கிறேன். கொஞ்சம்கூட நன்றியுணர்ச்சி இல்லாத மக்களுக்கு இடையே ஏன் போராடவேண்டும்? எனக்கு அன்று கோபம் கோபமாக வந்தது. சென்னை வந்தவுடனேயே உங்கள் பள்ளியைப் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் எழுதவில்லை. உங்கள் பள்ளியில் மிகச் சாதாரண கிராம மக்களின் பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுக்கும் அற்புதமான வசதிகளைப் பற்றி எழுத விரும்பினேன். என் மகள் படிக்கும் பள்ளியில் இவையெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத வசதிகள். இத்தனைக்கும் சென்னையின் மிகப் பெருமை பெற்ற பள்ளிகளில் ஒன்று. ஆண்டுக்கு இப்போது ரூ. 30,000 கட்டணம்.
உங்கள் பள்ளி இருக்கும் இடம், அதன் இயற்கையான சூழல், மரங்கள், அவ்வளவு அழகான கட்டடங்கள், விளையாடும் வசதிகள் (பொறாமையாக இருக்கிறது!), பரிசோதனைச் சாலைகள், கணினி மையம், சிறுவர்களுக்கான வண்ணமயமான வகுப்பறைகள், கைவேலைப் பயிற்சிகள், கூடவே உள்ளேயே சமைத்துப் பரிமாறப்படும் உணவு, …
இப்ப்டி அத்தனையையும் கொடுத்தாலும் உங்களை அலைக்கழிக்கும் பொறுக்கித்தனமான கல்வி அமைப்பு, லஞ்சம் வாங்கும், மிரட்டும், ஏய்க்கும் ஈனப்பிறவிகளான கல்வி அதிகாரிகள்.
சரி இதெல்லாம் போகட்டும். சுற்றியுள்ள மக்களாவது உங்களை மதிக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. பின் எதற்காக இந்த வேலை? அதுவும் நீங்கள் சொன்ன பல விஷயங்கள், அடிதடி, குடித்துவிட்டு வந்து மிரட்டுவது, பள்ளிக் கண்ணாடிகளை உடைப்பது, பள்ளியின் வாசலில் மலம் கழிப்பது, போன்றவை.
இந்த மக்களுக்கு, இப்படிப்பட்ட சீராட்டுதல்கள் தேவையே அல்ல. போய்ப் படிக்கட்டுமே அரசுப் பள்ளிக்கூடத்தில்.
June 5, 2014 at 17:43
பத்ரி,
பெற்றோரின் தவறுக்கு அந்த குழந்தைகள் என்ன செய்யும்? இத்தகைய கல்வி மூலம், இந்தக் குழந்தைகள் நல்ல பொறுப்பான குடிமகன்களாக (citizens) உருவாக, எந்த ஒரு அரசாங்கப்பள்ளியில் படிப்பதை விட, சாத்தியங்கள் அதிகம் இல்லையா?
யோசித்துப் பார்த்தால், சென்னை போன்ற ஒரு நகரத்தில் இத்தகைய வசதிகளுடன் (அதற்கேற்ற கட்டணத்துடன்) ஒரு பள்ளி அமைவது கடினமயிருந்தாலும், கொஞ்சம் முயற்சி எடுத்தால் சாத்தியமே, ..
ஆனால் ஒரு கிராமத்தில் அத்தகைய பள்ளியின், பள்ளிக் கல்வியின் தாக்கம், நகரத்தை விட அதிகமாக இருக்கும் இல்லையா?
நன்றி
ரமணன்
June 5, 2014 at 21:03
அன்பின் ராம்,
தளர்வில்லா ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
அப்பன் செய்யும் தவறுகளுக்குக் குழந்தைகள் என்ன செய்ய இயலும்.
நட்டவனுக்குப் பயன் தாரா பனைமரம் என்று சும்மாவா சொல்கிறார்கள். நீங்கள் செய்யும் பணியின் பயன் தலைமுறை கடந்து அந்தப்பகுதிக்கு நலமளிக்கும். இதை மனதில் கொண்டோ அல்லது “என் கடன் பணி செய்து கிடப்பதே” (அப்படியா?) என்றோ தளராது பணி செய்து வருவதற்கு வாழ்த்துக்கள்.
இந்த சூழ்நிலையில் +2 ஆரம்பிப்பது சரியல்ல என்பது என் அபிப்ராயம். அகலக்கால் வைப்பதாக ஆகும்.
ம்…………தமிழக பாலைவனத்தில் ஒரு சோலை.
June 6, 2014 at 03:19
பத்ரி,
ராமசாமி அவர்கள் யாருக்காக இத்தனை செய்கிறாரோ அவர்களைப் பற்றி உங்கள் கேள்வியில் ஒன்றுமே இல்லையே? தன் மகள் சாப்பிடாததை பார்த்து திருந்தாத தந்தையா இவரின் சேவையை பார்த்து திருந்தபோகிறார்? ஒருவேளை இவர் இத்தனை பாடுபட்டு வளர்த்த குழந்தைகள் எல்லோரும், ஒருத்தர் பாக்கி இல்லாமல், வந்து ராமசாமி அவர்கள் செய்தது எதுக்கும் பயன் இல்லைன்னு சொன்னா…….உங்க கேள்விக்கு இடம் இருக்கும்.
உங்கள் ஆதங்கம் புரியாமல் இல்லை. ராமசாமி அவர்களின் மீதான மதிப்பும் அக்கறையும் கொண்டுதான் இந்த கேள்வியை நீங்கள் கேட்டிருக்கறீர்கள். அவரின் மகா-உழைப்பு விரயம் ஆகிறதோ என கேட்கறீர்கள். ஆனால் அதை பெற்றோர் வழியாக, ஊர் பொதுஜனம் வழியாக அளக்க முடயுமானு தெரியல.
எங்கோ உட்காந்துகொண்டு, ஒரு பங்களிப்பும் செய்யாமல், அவரின் கஷ்டங்களை புரிந்துகொள்ளாமல் ராமசாமிக்கு வக்காலத்து வாங்குவதும், நாமளா செய்யறோம்…..அவர் கிடந்தது செய்யறார், செய்யட்டுமே என்ன இப்ப என்று கூட தோன்ற கூடிய இந்த பதிலை நான் எழுதுவதும், தகுதி இல்லாத செயல்ன்னு தெரிந்தாலும் எழுதாமல் இருக்க முடியவில்லை..
கெளதம்
June 6, 2014 at 09:07
திரு பத்ரி அவர்களின் ஆதங்கம் மிகச் சரியானதே. அப்பன் செய்யும் தவறுகளுக்கு குழந்தைகள் என்ன செய்யும என்பது சரிதான். – ஆனால் பொதுவாக குழந்தைகள் அப்பாவின் போக்கைக் கடைப்பிடிக்கும். அதனால்தான் அப்பாக்கள் தீய பழக்கத்தை – முக்கியமாக குடி பழக்கத்தை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். ஆனால் அரசு இதை நடக்க விடாமல் பார்த்துக் கொள்கிறது.
June 6, 2014 at 11:58
எனக்கு அந்தக் குழந்தைகள்மீது பரிவுதான் உள்ளது. ஆனால் ஓரிடத்தில் ஒரு வேலையைச் செய்வதற்கு ஓரளவுக்காவது ஊக்கம் தேவை. சுற்றியுள்ள மக்கள் குறைந்தபட்சக் கரிசனத்தைக் காண்பிக்கவேண்டும். அதற்குமேல் அவர்கள் ஒன்றும் செய்யவேண்டாம். சோர்வும் அயற்சியுமாக இருக்கும்போது இந்தக் கரிசனம் ஒன்று போதும், நம் செயல்களை முன்னெடுத்துச் செல்ல. அப்படி ஒரு நிலை இல்லை என்றால் ஒருவர் என்னதான் செய்வது?
ஆனால் உண்மையில் ராம் அந்த இடத்தைவிட்டுப் போய்விடவேண்டும் என்பதல்ல என் விருப்பம். அந்தப் பகுதி ஓர் அற்புதமான வாழிடம். என் உண்மையான விருப்பம் அப்பகுதியின் மக்கள் கொஞ்சமாவது தங்கள் நல்வாய்ப்பைப் புரிந்துகொண்டு, தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையில் மிகக் குறைந்த அளவுக்காவது ஈடுபாடு காட்டவேண்டும் என்பதுதான்.
April 1, 2015 at 19:53
[…] […]
April 17, 2015 at 19:30
ஐயா
வணக்கம். உங்கள் பதிவு படித்தேன். நான் ஒரு ஊடகவியலாளன். கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். கல்வி தொடர்பாகவும் சில புத்தகங்கள் எழுதியுள்ளேன். நீங்கள் நிர்வாகிக்கும் பள்ளி எங்குள்ளது? அதன் விவரங்கள் என்ன? எனது பெயர் அப்பணசாமி. மின்னஞ்சல்: jeon08@gmail.com மேற்கூறிய விவரங்கள் அளித்தால் மேற்கொண்டு சிந்திக்க உதவியாக இருக்கும்.
அப்பணசாமி