பள்ளி, பத்ரி சேஷாத்ரியின் கோபங்கள், ஆதங்கங்கள்: என் கருத்துகள்

June 7, 2014

பள்ளி: சென்ற கல்விவருடமுடிவுச் சிந்தனைகள், குறிப்புகள்  பதிவுக்கு பத்ரி + சிலர் பின்னூட்டமிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பதில் கூறும் முகமாக இது…

இவற்றை எழுதும்போதே, ஏனடா இந்த தனிப்பட்ட முறை எழவுகளையெல்லாம் சபைக்குக் கொண்டுசெல்லவேண்டும் எனத் தோன்றிக் கொண்டேயிருந்தது. இருந்தாலும், ஒரு முழுமைக்காகவும், தமிழகத்தில் ஒரு தரமான நிறுவனத்தை (அரசிடம் ஒரு சுக்கு உதவியையும் எதிர்பார்க்காமல்,  பலன்பெறும் சமூகத்தின் முட்டுக்கட்டைகளை மட்டும் பெற்றுக்கொண்டு –  ஆகவே எதிர்நீச்சல் மட்டுமே போட்டு)  நடத்த வேண்டுமென்றால், எதிர்கொள்ளப் படவேண்டிய சகதிகளில் சிலவற்றைப்  பற்றி சில  கருத்துகளை,  என்னுடைய  பார்வையில் வெளிப்படுத்தவும் மட்டுமே இந்த தவணைப் பதிவும். இனிமேல், இம்மாதிரி பிலாக்கணம் வைக்கமாட்டேன். பயப்பட வேண்டாம்.

-0-0-0-0-0-0-0-0-0-

பத்ரிபாய்ஸாஹேப், உங்களுடைய கருத்துகளுக்கு [1] [2] நன்றி. அய்யாமார்கள் ரமணன், க்ருஷ்ணகுமார், கௌதமன் ராமசாமி, ரங்கன், பக்கிரிசாமி அவர்களுக்கும் நன்றி.

… உண்மையில் எனக்கும், பல சமயங்களில் பத்ரியைப் போன்ற எண்ணங்களும் – அதுவும் அதிதீவிர எண்ணங்களும் வருவதுண்டு.

அன்றாட நடைமுறை வாழ்க்கையில் – பல சமயங்களில், என்ன மசுத்துக்கு இங்கே பிடுங்கிக்கொண்டிருக்கிறேன் என்று பலதடவை தோன்றியிருக்கிறது – பதில்வன்முறை எண்ணங்களும்கூட. அதாவது பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண்   என ‘பழைய ஏற்பாடு’ (=எக்ஸோடஸ்: 21:14) சொல்வதைப் போலச் செய்தேயாகவேண்டும் என்கிற அரிப்பும்.  நிலைமை கட்டுமீறிப்போகும்போது,  கடந்த சில வருடங்களில் –  இரண்டுமூன்று முறை நான் குடிகாரர்களிடம், என் பெண்குழந்தைகளிடம் பாலியல்ரீதியாக வம்புசெய்யும் பொறுக்கிகளிடம் தள்ளுமுள்ளு (=அடிஉதை – இருபக்கமும்) விவகாரங்களிலும் ஈடுபட்டிருக்கிறேன் என்பதை வெட்கத்துடன் ஒப்புக்கொண்டேயாகவேண்டும். ஆகவே,  சர்வ நிச்சயமாக  நான் ஒரு காந்தியன் அல்லவேயல்லன் என்பது சரியானாலும் – சிலசமயம் இந்த எழவெடுத்த காந்தியும் நினைவுக்கு வந்து தொலைத்துவிடுகிறார். :-( கண்ணுக்குக் கண் என்றவெறியுடன் அலைந்தால், அனைவரும் குருடர்களாகிவிடுவோம் அல்லவா? :-((

வன்முறையில் ஈடுபட்டவுடன் பல நாட்கள் எனக்குக் குழந்தைகளிடமோ, என் குடும்பத்தினருடனோ பேசுவதற்கே வெட்கமாக இருக்கும். மேலும் ஆரோக்கியமும் இவ்வன்முறைகளால் (எண்ணங்களாலும் கூட) பாதிக்கப் படுவதை அனுபவரீதியாக உணர்ந்திருக்கிறேன்.  ஆக, இக்காலங்களில் என் பக்கத்திலிருந்து வன்முறையைத் தவிர்த்து விடுகிறேன். வயதும் ஆகிக் கொண்டிருக்கிறது.

இன்னொரு காரணம்: நான் இப்பள்ளியை நடத்தும் ட்ரஸ்ட் அமைப்பின் அறங்காவலர்களில் ஒருவன் வேறு! இந்த ட்ரஸ்ட் ‘எல்லாம் நல்லதற்கே’ ‘அன்னைக்காகத்தான் பணிசெய்கிறோம்’  ‘வாய்மையே வெல்லும்’ என்பவற்றில் நம்பிக்கையுள்ள அமைப்பு. அதற்கேற்றபடியும் சாத்வீகமாக நடனமாடவேண்டுமல்லவா?

ரமணன், க்ருஷ்ணகுமார், கௌதமன் ராமசாமி, ரங்கன் போன்றவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. இருந்தாலும், இந்தப் பள்ளியை விட்டு வெளியே செல்லும் குழந்தைகளில் ஒரு பத்து சதம், கொஞ்சமாவது நன்றியுடன் இருந்தால் (உதவி தேவையில்லை, உபத்திரவம் கொடுக்காமல் இருந்தால் போதும்) சரியாக இருக்கும் எனவும் தோன்றுகிறது. ஆனால் இந்தப்பள்ளியை விட்டு வெளியேபோன ஆண்பிள்ளைகளே (அனைவரும் இல்லை, சிலர்தான்!) பிற்காலத்தில் பள்ளியின்மேல் சுயலாபத்திற்காகக் கல்லெறிவதை (நிஜக் கற்களும்!) நேரில் பார்த்திருக்கிறேன்.

எங்கள் பஞ்சாயத் யூனியன் தலைவி (ஆனால், அவர் கணவன்தான் தலைவர் என அறியப் படுபவர் – திமுக உதிரியாக இருந்து பாமக உதிரியாகி இப்போது அஇஅதிமுகவில் ஐக்கியமாகியிருப்பவர்) எங்கள் பள்ளியில் படித்தவர்தான். அவர் படித்த காலத்தில், காலையில் குழந்தைகள் வந்தபோது அவர்களை வென்னீரில் குளிப்பாட்டி, அவர்களுக்குத் தலைவாரிப் பின்னிவிடுதல் முதல் மூன்று வேளை உணவும் பள்ளிதான் கொடுத்திருக்கிறது. அவர் இந்தப் பள்ளியில் தான் 10வது வரை படித்து நல்ல ஆங்கிலம் எல்லாம் பேசுவார். இருந்தாலும் இரண்டுமாதம் முன் அவரிடம் பள்ளியை நடத்தும் உரிமத்தை புதுப்பிப்பதற்காக, அனைத்து சரியான, சட்டரீதியான ஆவணங்களுடன் அவருடைய கையெழுத்துக்காகச் சென்றபோது – வெட்கமேயில்லாமல் “ நீங்கதான் பணம் ஒண்ணும் கண்ணுல காட்டவே மாட்டேம்பீங்களே! அதிகம் இல்லே ஒரு 50 ஸிமென்ட் மூட்டை இங்க வூட்ல எறக்கி வெச்சிட்டீங்கன்னா உடனே கையெழுத்து போட்டுட்றேன்! நாம்படிச்ச ஸ்கூலுக்கு இது கூட செய்யமாட்டேனா?”

எனக்கு விக்கித்து விட்டது. (பள்ளியில் ஒரு கட்டிடம் கட்டிக்கொண்டிருக்கிறோம் என்பது அவருக்குத் தெரியும்)

பொறுமையாகச் சொல்ல ஆரம்பித்தேன்: நம் கிராமத்துக் குழந்தைகள் – பெரும்பாலோர் உங்கள் தூரத்து உறவினர்கள்தாம், அவர்கள்தானே படிக்கிறார்கள்?  அவர்களுக்காகவாவது…

ஆனா காலனிலேர்ந்தும் பசங்க வர்ராங்களே!

சரிதான் – ஆனால் ஹரிஜன்குழந்தைகள் 20 சதம் மட்டும்தான் இருக்கிறார்கள். உங்கள் குழந்தைகள்தானே அதிகம் பள்ளியில்?

அதைவுடுங்க; தலைவர் எலக்‌ஷனுக்கு அதிகம் செலவழிச்சுட்டோம். ஏங்க, நாங்களும் சாப்பிட வேண்டாமா?

அம்மா, நாங்க இதையெல்லாம் கொடுக்கிற தொழிலில், லாபம் பார்க்கிறமாதிரியெல்லாம் இல்லை. லாபம் பார்த்தாலும் கூட கொடுக்கணும்னு அவசியம் இல்லையே! உங்க தொழில் நாங்க சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்கிறோமான்னு பார்ப்பது, எங்கள் தொழில், சரியான பள்ளி நிர்வாகம். அவங்கவுங்க வேலைய செய்ய, மேலதிகமா பணம் கேக்கறது நியாயமா?

அப்ப நான் லஞ்சம் கேக்கறேன்றீங்களா? ஒரு உதவிதானங்க கேக்கறேன்.

அம்மா,  நீங்களும இதே பள்ளியில்தான் படிச்சீங்க.  அது எப்படி நடக்குதுன்னு உங்களுக்குத் தெரியாம இருக்காது. அதுக்கப்புறம் உங்க மனச்சாட்சி படி நீங்க நடந்துக்கறது உங்க இஷ்டம்.

அப்போ, நீங்க பாக்க டீஸென்டா இருக்கீங்கல்ல. ஏன் நீங்களே தேவையானதைக் கொடுக்கக்கூடாது? ஸ்கூலுக்குத் தெரியவேண்டாம், காதும்காதும் வெச்சாப்ல முடிச்சிர்லாம். இப்பவே கையெழுத்து போட்டுத் தரேன். உங்களுக்காக பத்தாயிரம் ரூபாய்க்கே முடிக்கறேன்.

(இன்று வரை இந்த கையெழுத்து கிடைக்கவில்லை; மேமாத முடிவில் எங்கள் பள்ளியின் உரிமம் காலாவதியாகிவிட்டது. இப்போது ஜூன் முதல்வாரத்தில் இருக்கிறோம்; காலாவதி விவகாரத்தால் மேலதிகமாகப் பிரச்னைகள் வரும். இருந்தாலும் எப்படியும் முட்டிமோதி இந்த விஷயத்தைத் தீர்க்க முயன்றுகொண்டிருக்கிறோம்; காவல் துறையையும், அரசு நிர்வாகத்தையும் தொடர்புகொள்ளாமல் இருக்க உத்தேசித்திருக்கிறோம் – ஏனெனில் ஒவ்வொருமுறை இப்படிச் செய்யும்போதும் மேலதிக நடைமுறைப் பிரச்சினைகள் குவிந்து விடுகின்றன. இருந்தாலும் எங்கள் குறிக்கோள் – எங்கள்  குழந்தைகளுக்கு நாங்கள் நம்பும் கல்வியை அளிக்க முயல்வதுதான். இதில் பலவிதமான அலைச்சல்களும் அலுப்புகளும் இருக்கும்தான்! யோசித்தால், சில தளர்வான சமயங்களில் – பள்ளி நிர்வாக வேலை செய்வதற்குப் பதில் மாமா வேலையை மன நிம்மதியுடனும், சுயஅர்ப்பணிப்புடன் செய்யமுடியும் என்ற எண்ணம் வரும்தான். ஆனாலும்… இதுவும் கடந்துவிடும்)

சென்றமுறை உரிமத்தை நீட்டிக்கும்போதும் இந்தக் கேவலத்தைத் தாங்க முடியாமல் – விழுப்புரம் கலெக்டரைத் தொடர்புகொண்டு புகார் அளித்தோம்; விசாரணை அறிக்கை, ‘கொஞ்சம் அனுசரணையா நடந்துக்குங்க சார்’  போன்ற அறிவுரைகள்…  ‘எங்கள எதுத்துக்கினு கம்ப்லெயின்ட் தர்ரியா’ வகை கருவல்கள். பல நடைமுறைப் பிரச்சினைகள். கடைசியில் உரிமத்தை, மகாமகோ அலைச்சல்களுக்குப் பின் பெற்றோம். ஆனால் நிறைய பிக்கல்பிடுங்கல்கள், ஆயாசங்கள். வருத்தம் தரும் வகையில், இம்மாதிரி வெற்றிகள்(!) பிர்ரிக் வகையைச் சார்ந்தவை. :-(

என்ன சொல்லவருகிறேன் என்றால் – இதனால், இந்தத் தட்டாமாலைகளால் செலவழிக்கப்படும் சக்தி மிகவும் அதிகம்.இம்மாதிரி விரயமாகும் சக்தியை – மேலதிகமாக இரு பள்ளிகளுக்கு உபயோககரமாக அளிக்க முடியும் என்பதுதான் வருத்தம்.


இம்மாதிரி விஷயங்கள் ஒருபுறமிருக்க – குறைந்தபட்ச படிப்பிக்கும் தொகையைக் (ரூ 80-120 மாதத்திற்கு) கட்ட பல விதமான சால்ஜாப்புகள் சொல்லும் அதே குழந்தைகள் – எப்படி முதல் நாள் முதல் ஷோ என விஜய்-அஜித் அற்பப் படங்களைப் பார்த்த விவரங்களை மெய்மறந்து சொல்வார்கள் (=ப்ளாக் டிக்கெட் – 300 ரூ கொடுத்து போனேன் – போன்ற செய்திகள்) என்பதை நேரில் பார்த்திருக்கிறேன்; பின்னர் நான் அவர்களை ஒன்றும் பேசாமல் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும்போது அவர்களில் சிலர் வந்து வருத்தம் தெரிவிப்பார்கள் “வூட்ல கஷ்டம்தான், ஆனா என் மாமா டிக்கெட் வாங்கிக் கொடுத்தார்!” இதற்கு – அந்த டிக்கெட் பணத்தை இங்கு கட்டலாமே என்று சிரித்துக்கொண்டே சொன்னால் – ‘மாமா கோச்சுக்குவாரு!’  குழந்தைகளின் நெஞ்சில் கள்ளம் புகுவதைப் பார்ப்பது ஒரு படுகேவலமான விஷயம். மிகவும் வலிக்கும் விஷயம். ஆனால், அவர்கள் குடும்ப / சமூகச் சூழல்கள் அப்படி; வாய் கூசாமல் பொய் சொல்வது என்பதை, நாம் நம் தமிழ லட்சணமாகவே மாற்றி பல நாட்களாகிவிட்டன.

… ஆனால் ஒரு பத்து எதிர்மறை நிகழ்ச்சிகள் ஏற்பட்டால், ஒன்றிரண்டு சந்தோஷமான விஷயங்களும் ஏற்படுகின்றன என்பதையும் ஒப்புக் கொள்ளவேண்டும். இந்த சந்தோஷ நிகழ்வுகள் அனைத்தும் குழந்தைகள் பக்கத்திலிருந்துதான் வரும். எடுத்துக்காட்டாக – சென்ற வருடம் ஒரு குழந்தை ஸென்ட்ரிஃப்யூகல் ஃபோர்ஸ் என்பதைப் புரிந்துகொண்டபோது, அதன் ஆஹா என்ற பிரமிப்பு இருக்கிறதே! இவை போதும் என்றுதான் தோன்றுகிறது. (இந்த அழகான புனைவுகளான ஸென்ட்ரிஃப்யூகல் ஃபோர்ஸ், கொரியாலிஸ் ஃபோர்ஸ் போன்றவைகளை பல மெத்தப்படித்த மெக்கானிகல் கஞ்சிநீர்கள்கூட ஒரு எழவும் புரிந்துகொள்வதேயில்லை என்பதை இங்கு நினைத்துப் பார்க்கவேண்டும்).

சில பையன்கள் (பெண்களும்தான்!) – மின்னியல் காரர்களாகவும், கணித விஞ்ஞானிகளாகவும், கோட்பாட்டு இயற்பியல்காரர்களாகவும் (theoretical physicists),  விமானப்படை அதிகாரிகளாகவும், ஐஏஎஸ் அதிகாரிகளாகவும், இன்னும் பிறவாகவும் ஆகப்போவதாகக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களுக்கு மூளையும் இருக்கிறது. குவியமும் தொடர்ந்து இருந்தால், கேடுகெட்ட தமிழ் திரைப்படத்தாலும் சாராயத்தாலும் ஆட்கொள்ளப் படாமல் இருந்தால், நிச்சயம் அவர்கள் தங்கள் குறிக்கோட்களை அடைவார்கள். இது என் நம்பிக்கை.

இங்கிருந்து படித்து வெளியேபோன ஒரு இளம்பெண், ஃப்ரெஞ்ச் மொழியில் பிஹெச்டி செய்து தில்லி கல்லூரி ஒன்றில் பணி செய்துகொண்டிருக்கிறாள் எனக் கேள்விப் படுகிறேன். இம்மாதிரி – பலர்  இருக்கின்றனர். ஆனால், நம் சமூகத்தில் ‘திரும்பி கொடுப்பது’ அல்லது சமூக மேன்மைக்குக் கூட இல்லை,  ‘தாம் பெற்ற உதவிக்கு கொஞ்சமேனும் நன்றிக் கடனைச் செலுத்துவது’ போன்ற எண்ணங்கள் பொதுவாகவே இல்லை.

இந்தப் பள்ளி சுமார் 35 ஆண்டுகளாக இயங்கிக்கொண்டிருக்கிறது – சுமார் 600 குழந்தைகள் வெளிச்சென்றிருக்கிறார்கள். பலர் கை நிறையச் சம்பாதிக்கிறார்கள். இருந்தாலும், இதுவரை இவர்களில் ஒருவர் கூட பள்ளிக்கு ஒரு உதவியையும் செய்ய முயற்சிக்கவில்லை. பல பழைய மாணவர்களின் குழந்தைகள் இப்போது பள்ளி மாணவர்கள். ஆனால் – நான் இந்தப் பள்ளியின்  ‘ஓல்ட் ஸ்டூடென்ட்’  ஆகவே, என் குழந்தைக்குச் ‘சலுகை’ தர முடியுமா, முழு உதவித்தொகை அளிக்கமுடியுமா எனத்தான் கேட்கிறார்கள். மனிதர்களின் சுயநலத்திற்கும் பேராசைக்கும் அளவேயில்லைதான்!  எனக்கு இதையெல்லாம் பார்க்கப் பார்க்க மாளா ஆச்சரியம்தான். ஆனாலும் அடுத்து வரும் வருடங்களில் இந்த நிலைமை மாறலாம்.

ஆனாலும், என் பள்ளியின் குழந்தைகள் வெளியுலகத்திற்குச் செல்லும் போது – பொதுவாகவே மற்ற பள்ளிக்கூடங்களில், அவர்கள் வளர்ந்து, மேற்படிப்புகள் படித்து வேலை செய்யும் இடங்களில் மதிக்கத்தக்கவர்களாகவே இருக்கின்றனர் என்பதைக் கண்டுகொண்டிருக்கிறேன். ஆக, என்னுடைய பார்வையில், பலசமயங்களில் சாளரம் #1 தூக்கலாக இருக்கிறதோ என எனக்குச் சந்தேகம்.

சரி. சுற்றியுள்ள கிராமப் பகுதி பற்றி: குடிகார, குடிமையுணர்ச்சியற்ற, சோம்பேறிகளாலான, சராசரித்தனமான, உரிமைகளைப் பற்றி மட்டுமே பேசி கடமைகளைத் துளிகூடச் செய்யாத, அகங்காரத்துடன் வசதிகளைக் கேட்டு வாங்கும் தன்மையுடைய (arrogant sense of entitlement) சமூகம் என்பது – தமிழகத்தின் சாபக்கேடுகளில் ஒன்று; இது நம் தமிழகத்திற்கு, அந்த கேடுகெட்ட திராவிட இயக்கங்களின் கொடை. இந்த பிரத்தியட்ச உண்மையை கணக்கில் கொண்டுதான் நடைமுறைச் செயல்பாடுகளைக் கட்டமைத்துக் கொள்ளவேண்டும் – என நான் ஆத்மார்த்தமாக நினைக்கிறேன்; ஆனால் எண்ணங்களுக்கும் மனக்கொதிப்புகளுக்கும் இடையே அல்லாடுகிறேன்.

இன்னொன்று: எனக்கு மிகவும் வெறுத்துவிடும்போது, என்னை மறுபடியும் மறுபடியும் மேலெழுப்புவதற்கு, இறும்பூதடையவைப்பதற்கு மேலும் சில அற்புத விஷயங்களும் இருக்கின்றன: அவற்றில் சில தளங்கள் – எஸ். ராமகிருஷ்ணன், விடுதலை, வினவு, யுவகிருஷ்ணா போன்றவை… இவற்றைப் படிக்கும்போது நடைமுறை வாழ்க்கை இன்பமாகவே மாறிவிடுகிறது… உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. :-)

ஹ்ம்ம்… என்னைப் பொறுத்தவரை – இந்த ஒட்டம் ஓடுகிற வரை ஓடுவேன். எதிர்காலம் எப்படி அமையும் என்று தெரியவில்லை. கொஞ்சம் நம்பிக்கையிருக்கிறது. ஒத்து வரவில்லையென்றால், மிகவும் சுணங்கிப் போவதற்குமுன் விலகிவிடுவேன். ஒரு பிரச்சினையுமில்லை.

… ஆனாலும், ஒவ்வொரு முறை ஒரு தன்னம்பிக்கை மிகுந்த இளைஞியை/இளைஞனை பார்க்கும்போதெல்லாம், அவர்களை வடித்தெடுப்பதில் ஒரு கடுகளவுப் பங்கு கொடுப்பதிலெல்லாம் சந்தோஷமாக இருக்கிறது. இதுதான், இந்த அற்ப திருப்திதான் என்னைக் கடைத்தேற்ற வேண்டும். (என்னை மட்டுமல்ல, எங்கள் குழுவில் உள்ள அனைவரையும்)

Life is by and large, a sine curve – or a simple harmonic oscillation, if you will. As long as it does not become a heavily damped oscillation, it should be fine. However, when resonance happens, one gets into such a high that the next few weeks go by as if in  a trance! And, life is oh so harmonious!

I suppose, I wrote my previous post on this topic,  as a tired, beaten old man. I shall overcome, thanks.

நாளை மற்றொரு நேற்றே. :-)

ஆமென்.

‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…

19 Responses to “பள்ளி, பத்ரி சேஷாத்ரியின் கோபங்கள், ஆதங்கங்கள்: என் கருத்துகள்”

  1. Venkatachalam Says:

    அன்பு ராமசாமி நம் மக்களுக்கு இல்லாத பல திறன்களில் ஒன்று எதை ஒன்றையும் அப்ரிசியேட் செய்யும் திறன். அப்ரிசியேட் என்ற சொல்லின் ஆழத்தையும் வித்தியாசமான பொருளையும் தருகிற ஒரு சொல் நிச்சயம் பாராட்டு அப்ரிசியேசன் அல்ல தெரியாததால் அதனை அவ்வாறே தந்துள்ளேன். ஓரளவுக்கு யாருக்கேனும் இருந்தால் அவர்களையும் இந்த இலவசக் கலாச்சாரம் மழுங்கடித்துவிடுகிறது என்ன செய்ய? ஒரு வேளை உங்கள் மாணவர்களுக்கும் அவர்கள் மூலமாக அவர்களைப்
    பெற்றவர்களுக்கும் செய்நன்றி அறிதல் அதிகாரத்தின் உட்பொருளை நன்கு கற்பிக்கவேண்டுமோ?

  2. m chandrashekaran Says:

    You have put across your feelings and anguish in such a manner that one would only empathise with the central theme of the writing. May the Providence provide you with strength to cross many more miles.

  3. Nandu Says:

    உங்களின் பணிகளுக்குத் தலைவணங்குகிறேன்! இந்த முட்டாள் சமூகம், ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கை எனக்கில்லை ஐயா!

  4. ஞாநி Says:

    என் வேண்டுகோளுக்கு பதில் இல்லையே ? அன்புடன் ஞாநி


    • அய்யா ஞாநி – விட்டேற்றியாக இருந்ததற்கு மன்னிக்கவும்.

      நான் தற்போது ஊர்சுற்றிக் கொண்டிருக்கிறேன் – இன்னமும் இரண்டு வாரங்களுக்குப் பின் தான் திரும்பிச் செல்வதாக உத்தேசம். தங்களுடன் அவசியம் தொடர்பு கொள்கிறேன். உங்களுடைய உடல் நிலையையும் பார்த்துக்கொண்டு, எப்படி இதனைச் செயல்படுத்துவது எனப் பார்க்கலாம்.

      ஆனால் இரண்டு விஷயங்கள்:

      1) எனக்குப் பலருடன் ஒத்துப் போகாது, அவர்கள் அடிப்படையில் மிக நல்ல மனிதர்களாக இருந்தாலும், மதிக்கக் கூடியவர்களாக இருந்தாலும் இந்த நிலை – அதாவது என் பார்வைகள் (blinkers?) அப்படி. ஆகவே, உங்களுடைய பல நிலைப்பாடுகளை, கொஞ்சம் ரசக்குறைவாகவே கிண்டல் செய்திருக்கிறேன். (நீங்கள் அவற்றைப் படிக்கவில்லையென்றால் – ‘ஞாநி’ என, இந்த தளத்தில் தேடவும்)

      இருந்தாலும் என்னிடமும் பல நிலைப்பாடுகள் இருக்கின்றன – அவற்றில் சில (=பல) பிறருக்கும் (=உங்களுக்கும்) பிடிக்காது இருக்கலாம்; ஏன், எனக்கே பிடிக்காது இருக்கலாம். இதனைப் பற்றிய தெளிவு இருக்கவேண்டியது எனக்கும் உங்களுக்கும் அவசியம்.

      2) நான் ஒரு சுமுகமாகப் பழகக்கூடிய மனிதனோ, அன்பே உருவானவனோ, சுய அர்ப்பணிப்பு மிகுந்தவனோ, அசாதாரணமானவனோ, அறிவுஜீவியோ அல்லன். நான் ஒரு சராசரித் தமிழன் தான். வலைப்பதிவுகளில் நான் என்னைப் பற்றி, பள்ளியைப் பற்றி எழுதுவதை ஒரேயடியாக நம்பவேண்டாம். எல்லாம் புனைவுகள்தாம். இல்பொருளும், உயர்வு நவிற்சியும் கலந்தடித்து கந்தறகோளத் தமிழில் பரிமாறப்பட்டவைதாம். என் குழந்தைகளும் சாதாரணமானவர்களே – ஒரேயடியாக நன்றிகெட்டலைபவர்களோ, உதாரணபுருஷ சத்தியசந்தர்களோ அல்லர். ஆனால், மற்றெந்த குழந்தையையும்போல – அடிப்படையில் அழகானவர்கள். அவ்வளவுதான். மிகை எதிர்பார்ப்புகள் வேண்டாம்.

      3) சென்னை+பெங்களூரிலிருந்து வரும் வாரயிறுதிச் சுற்றுலா கேளிக்கைப் பப்பரப்பா பயணிகளினால், கடந்த காலங்களில் மிகவும் நேரவிரயம் செய்திருக்கிறேன். ஆக, இரண்டு வருடங்களாக இந்த ஜந்துக்களை கிட்டவே நெருங்க அனுமதிப்பதில்லை. ஆக, உங்கள் நேரத்திற்கும், என்னுடைய ஆயுளுக்கும் உரிய மரியாதையைக் கொடுக்கவே விரும்புவேன்.

      பிற பின்னர்.

      அன்புடன்:

      __ரா.

  5. ganeshmurthi Says:

    தெய்வம் மனுஷ்ய ரூபேன! உங்களப்போல, நம்மாழ்வார் ஐயா போல சிலர் செய்த ,செய்யும் செயல்களால் தான் எதோ கொஞ்சம் மழ பெய்யுது போல! இந்த நோய்வாய்ப்பட்ட சமூகத்தோட சார்பா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிரென் ஐயா! :( உங்கள் பணி தொடர இறைவன் சகல நன்மைகளையும் உங்களுக்கு தரட்டும். ஹர ஹர மஹாதேவா! பாரத் மாதா கி ஜெய்.

  6. க்ருஷ்ணகுமார் Says:

    த்ராவிட சாக்கடைகள் ஆட்சி செய்த தமிழகம் மோதியின் குஜராத்தை விட முன்னேறி எங்கோ ஆகாசத்துக்குப் போய் விட்டது என்று எழுதும் எனதன்பிற்கு உரிய பூவண்ணன் சார் தமிழகத்தில் கல்வி சம்பந்தமான இந்த வ்யாசங்களை வாசித்தாரா இல்லையா தெரியவில்லை?

    அல்லது அவர் மெய்ல் முன்னர் போல் ஸ்பேமுக்குப் போய் விட்டதா என்று சரிபார்க்கவும்.

    உங்களுக்கு ஆயாசமாக இருக்கிறதோ இல்லையோ ராம் (ஆயாசத்தை வாதாபீ ஜீர்ணோ பவா என்று முழுங்குவது உங்களால் முடியும் என எனக்கு நம்பிக்கை) — எனக்கு ஆயாசம் வருகிறது.

    கேழ்க்கக்கூடாது என்று அடக்கி வைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இந்த அசட்டுக்கேழ்வியைக் கேட்டுத்தொலைத்து விடுகிறேன்.

    அதி நுட்பமான விக்ஞான விதிகளைக் குழந்தைகள் புரிந்து கொண்ட போது உங்களுக்கு மனதில் பெரும் நிறைவும் உத்சாஹமும் உள்ள படி கிடைக்கிறது தான். 600 குழந்தைகள் வாசித்து வெளியே நல்ல நிலைகளில் இருக்கும் இந்தப் பள்ளியில் பள்ளிக்கு உதவாது உபத்ரவம் செய்பவர்களைப் பற்றியும் சலுகைகள் கேழ்ப்பவர்கள் பற்றியும் வாசிக்க நேரிடுகிறதே.

    விக்ஞானம், சுற்றுச்சூழல், மொழி இதைப்பற்றியெல்லாம் சொல்லிக்கொடுக்கும் பள்ளியில்…………..

    உயர்ந்த மனித குணங்களான நேர்மை, ந்யாயம், கடமை, உரிமை இதைப்பற்றியெல்லாம் கூட போதித்திருப்பீர்கள் என்று நிச்சயமாக எண்ணுகிறேன்.

    600 ல் சில பேருக்காவது இது போய்ச்சேரவில்லையா? அல்லது கல்வி சார்ந்த நுட்பங்கள் திறமையுடன் போதிக்கப்பட்டது போல ஆதர்சமான ஆத்மகுணங்கள் திறமையுடன் போதிக்கப்படவில்லையா? அல்லது க்ராமத்தின் மோசமான சூழ்நிலை என்பது நல்ல போதனைகளைக்கூட திரையிட்டு மறைக்கும் வல்லமை வாய்ந்த ஒரு தீய சக்தியா?

    மனது சோர்வடையும் போதெல்லாம் சொல்லிக்கொள்ளும் சில மந்த்ரங்கள்.

    பழனியாண்டவா

    தனித்து வழி நடக்கும் என
    திடத்தும் ஒரு வலத்தும் இரு
    புறத்துமருக்கடுத்திரவு
    பகற்றுணையதாகும்

    திருத்தணியில் உதித்தருளும்
    ஒருத்தன்மலை விருத்தன்
    எனதுளத்தில் உறை கருத்தன்மயில்
    நடத்துகுகன் வேலே

    All is well!!!!!!

    हम् होंगे काम्याब्
    हम् होंगे काम्याब् एक् दिन्
    मन् मे है विश्वाश् पूरा है विश्वाश्
    हम् होंगे काम्याब् एक् दिन्

  7. சான்றோன் Says:

    பத்ரி அவர்களின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்…….. கொஞ்சமேனும் நன்றி இல்லாதவர்களுக்கு உதவி செய்வது உங்களைப்பொறுத்தவரை ஒரு லக்சுரிதான்…..

    ஆனால் …. உங்கள் பள்ளி உள்ள ஊர் மட்டுமல்ல…. தமிழகத்தில் எந்த ஊருக்குப்போனாலும் இதே லட்சணமாகத்தான் இருக்கும்…..

    தமிழன் என்றோர் இனமுண்டு….. தனியே அதற்கோர் குணமுண்டு……

  8. சரவணன் Says:

    /// பத்ரி அவர்களின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்…….. கொஞ்சமேனும் நன்றி இல்லாதவர்களுக்கு உதவி செய்வது ///

    சோஷியல் ஒர்க் என்பதன் பாலபாடமே தான் வேலை செய்யும் சமூகத்திடமிருந்து எந்தவித நன்றியையும் எதிர்பார்க்க முடியாது என்று உணர்ந்திருப்பதும், உண்மையில் பல எதிர்ப்புகளும் இடர்பாடுகளுமே பரிசாகக் கிடைக்கும் என்பதும்தான். இது ராமசாமிக்கும் நன்றாகத் தெரியும். ஆகவே அவர் தான் செய்வதை செய்துகொண்டுதான் இருப்பார்.

    ஆனாலும் பள்ளியின்மீது கல் எறிவது, கண்ணாடியை உடைப்பது போன்ற சம்பவங்களை நான் அதிகம் கேள்விப்பட்டதில்லை. குறைந்த கட்டணத்தில் மிகத் தரமான கல்வி, உணவு தருகிறார்கள்; இந்தப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை; அரசு பாடத்திட்டத்தைப் பின்பற்றி, அரசு சட்டதிட்டங்களின் படி, அரசு கல்வி அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்பட்டுத்தான் பள்ளி நடத்தப்படுகிறது. இதில் யாருக்கு என்ன இடைஞ்சல் இருக்க முடியும் என்று புரியவில்லை.

    என் தனிப்பட்ட கருத்து அவர்கள் பள்ளியை இந்த நாட்டு கல்வி போர்டுகளில் இணைக்காமல், கேம்பிரிட்ஜ் ஐ.ஜி.சி.எஸ்.சி. போன்ற சர்வதேசக் கல்வித் திட்டம் எதையாவது பின்பற்றலாம் என்பது. அரசு அதிகாரிகள் தொல்லை கொஞ்சம் குறையும்; கல்வித் திட்டமும் நம் மனப்பாடத்தை ஊக்குவிக்கும் சிலபஸ், புத்தகம், கேள்வித்தாள்களைவிட (இந்த வருடம் 3 பேர் 500-க்கு 500!) மேம்பட்டது.


    • அய்யா சரவணன், கருத்துகளுக்கு நன்றி.

      ஐஜிஸிஎஸ்இ – தேர்வுக் கட்டணம் என்பது (மட்டுமே) ஒரு குழந்தைக்கு ரூ 24000/- போல ஆகும். இதன் ரிஸல்ட்ஸ்-ம் ஆகஸ்ட் மாதத்தில் தான் வரும். இதற்கு நம் நாட்டின் அழகான என்ஐஓஎஸ் திட்டத்திற்கே போகலாம்; ஆனால் ஊர் ஜனங்களுக்கு இது ஒத்து வராது. :-)

  9. Jataayu Says:

    சார், நீங்கள் ஒரு உண்மையான கர்மயோகி. உங்கள் எல்லாப் பதிவுகளிலும் பொதுவாக நகைச்சுவையும், அறச்சீற்றம் கொப்பளிக்கும் நக்கலும் நையாண்டியும் தான் வழிந்தோடும்.. இந்த இரண்டு பதிவுகளில், மனம் திறந்து உங்களுக்கு ஏற்பட்டு வரும் தடைகளையும், கஷ்டங்களையும் பற்றி எழுதியிருக்கிறீர்கள்.. இதை நீங்கள் பதிவு செய்திருப்பது மிகவும் முக்கியமானது. ஒரு வகையில் உங்களது ஆற்றாமைகளுக்கும் ஒரு வடிகால். உங்களது நிலையை எண்ணி மனம் வலிக்கிறது. நன்றி கெட்ட சமூகத்தை எண்ணி மனம் கொதிக்கிறது.

  10. Prabhu Says:

    I don’t have words to express my grief when I read this post.


  11. இன்றுதான் கட்டுரையைப் பார்க்க முடிந்தது. தேள் கடிப்பது அதனுடைய பண்பு. தேளுக்கு உதவி செய்வது என்னுடைய பண்பு என்ற கதைதான் நினைவுக்கு வருகிறது. எங்கள் கல்லூரிக்கு (காரைக்குடி) நாங்கள் சில்வர் ஜூப்ளிக்காக ஒரு கட்டிடம் கட்டிக்கொடுக்க பணம் வசூல் செய்தபொழுது, அமெரிக்காவில் இருக்கும் சிலர், கொடுக்க முடியாது, ஏன் கொடுக்கவேண்டும் என்று கேட்டது நினைவுக்கு வருகிறது. மற்றொருவர், இந்தியாவில் இஞ்சினீரிங்க்-ல் மிகப்பெரிய பதவியில் இருப்பவர். அவருக்கு வீட்டு வேலைக்குகூட அரசாங்கம், பணிப்பெண்ணைக் கொடுத்துள்ளது. ஒரு ரூபாய் கூட கொடுக்கமாட்டேன் என்று கூறிவிட்டார். இதில் முக்கியமான விஷயம் என்னெவென்றால், அரசாங்க உதவியில்லாமல் படித்த யாரும் பணம் கொடுக்க மறுக்கவில்லை. யாரையும் குறை சொல்ல முடியாது. சமூகமே அப்படி சிந்திக்கிறது.

  12. Ranganathan Says:

    You are a humming bird !

  13. பொன்.முத்துக்குமார் Says:

    ஜெ-யின் தளத்தில் விதி சமைப்பவர்கள் தொடர்பாக நடைபெற்ற உரையாடல்தான் நினைவுக்கு வந்தது.

    நேற்று மதிய உணவு நேரத்தில் எனது சகா இருவரோடு இதுபற்றி உரையாடிக்கொண்டிருந்தேன். (ஒருவர் வட இந்தியர், மற்றவர் பெருவிய அமெரிக்கர்)

    முதல் எதிர்வினையே (வட இந்திய நண்பரது) கிண்டலாகத்தான் வெளிப்பட்டது.

    ’அவருக்கு அவ்வளவு நேரம் உள்ளதா ? ஒன்று அவருக்கு குடும்பம் மனைவி என்று எதுவும் இருக்காது அல்லது குடும்பத்தை கவனிக்காதவராக இருக்கவேண்டும்’

    மேலும் ’அந்த பஞ்சாயத் யூனியன் தலைவி நேர்மையாளர், தனக்கு வேண்டியதை வெளிப்படையாக தெளிவாக கேட்டுள்ளார்’ என்று கமெண்ட்.

    ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்குமே உளவியல் சிகிச்சை அளிக்கவேண்டும் போலும்.

  14. A.Seshagiri Says:

    தங்கள் வலைத்தளத்தில் வெளியிடப்படும் கட்டுரைகளை மிகுந்த ஆர்வத்துடன் படித்து வருபவன்.அதன் மூலம் பல நல்ல பண்புகளை கற்றவன்.நமது நாட்டின் மேலும்,சமுகத்தின் மேலும்,குறிப்பாக இளைய சமுதாயத்தின் மேல் உள்ள தங்கள் அக்கறையைக்கண்டு பெருமிதம் அடைபவன்.நீங்கள் நடத்தி வரும் பள்ளியைப்பற்றியும்,அதன் மாணவர்களின்,திறமை, ஆற்றலைப்பற்றியும் வரும் கட்டுரைகளைக் கண்டு,இந்த மோசமான சூழல் நிறைந்த தமிழகத்திலும் இப்படி ஒரு பள்ளி நடத்த முடிகிறதே என்று வியப்பவன்.ஆனால் இந்த கட்டுரையை படித்த பின் ‘எல்லாம் விழலுக்கு இறைத்த நீராக போகிறதே'( சில விதி விலக்குகள் இருந்தாலும்) என்ற ஆதங்கம்தான் எழுகிறது.நமக்கு விமோசனமே கிடையாதா?

  15. ராம் குமார் Says:

    ஐயா தாங்கள் சேவாபாரதியை சற்று அணுகிபார்க்கலாமே! உங்களுக்கு எல்லாவகையிலும் அவர்கள் உதவ முன் வருவார்கள்,


  16. […] உடனடிநாளையைப்பற்றியே பேசுவார்கள். உதாரணம் ஒத்திசைவு ராமசாமி எழுதிய இக்…. இதில் நம் கிராமமக்களின் […]


  17. ஐயா, உங்கள் பள்ளியைப் பற்றி நீங்கள் எழுதிய இரு பதிவுகளைத்தான் படித்தேன். உங்கள் பணி தொடர வாழ்த்துகள். உங்களிடம் உரையாட வேண்டும் , உங்களைத் தொடர்பு கொள்ள மின்னஞ்சல் முகவரியோ தொலைபேசி எண்ணையோ எதிர்பார்க்கிறேன். நான் பொறியியல் படிப்பை முடித்துள்ளேன்; எனக்கு நான் படித்த படிப்பு பிடிக்கவில்லை; ஒரு நல்ல ஆசிரியனாக வேண்டும்; என்னைப் போன்று மாணவர்கள் யாரும் தடுமாறிவிடக்கூடாது; அதற்காக உழைக்க வேண்டும் என்று தீர்க்கமாக முடிவு செய்துள்ளேன்; உங்களால் எனக்கு உதவ முடியும் என்று நம்புகிறேன். அதனால் தான் உங்களிடம் பேச விரும்புகிறேன் ஐயா. உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s