எஸ் ராமகிருஷ்ண லீலா தரங்கிணி… (1/3)

January 8, 2014

B-(      8-(     :-(    …  …  :-{

… (அல்லது) எஸ் ராமகிருஷ்ணன் எழுத்துகளில் சோகச்சித்திரங்கள்…

முதலில், ஒரு முக்கியமான தன்னிலை விளக்கம்: இக்கட்டுரைத் தொடரில் முதல் பகுதியான கட்டெறும்பு பெருத்து கழுதையான கதை என்பதில் கட்டெறும்பு என்பதுதான் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களைக் குறிக்கிறது; கழுதையென்பது அடியேனை. அதாவது முன்னவர், தனக்கேயுரிய பாணியில் எழுதி எழுதித் தள்ளி, என்  அளவுக்கு மிக மிகப்  பரிதாபமாக இறங்கி விடுகிறார் என்பதைக் குறிப்பதற்கே, இந்தத் தலைப்பு. இதைத் தயவுசெய்து தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.

இன்னொரு விஷயம்:வரவர மாமியார் கழுதை போல் ஆனாராம்’   என்கிற ஔவையாரின் மூதுரையுடன், நீங்கள் இந்தத் தலைப்பினை இணைத்துக் குழப்பிக்கொண்டு, தவறுதலாகப் புரிந்துகொள்ளவேண்டாம் எனவும் தெண்டனிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். தவறான புரிதல்களினால் — சின்னஎஸ்ராவே, கட்டெறும்பு என் மாமியாரக் கடிக்குது-என்றெல்லாம் நான், நடிகை சுகன்யா  நடிகர் பிரபுதேவா அவர்களைப் போல விலுக்விலுக்கென்று இடுப்பை வெட்டிக்கொண்டு பாடியாடவேண்டியிருக்கும், உங்களுக்கு இது  தேவையா??

-0-0-0-0-0-0-0-0-0-

காந்தியும் சாப்ளினும் எஸ் ராமகிருஷ்ணனும்

மேற்படி தலைப்பில் ஒரு உள்குத்து ஸப்டெக்ஸ்ட்டும் இல்லை. ஒரு இறங்குவரிசையோ ஏறுவரிசையோ குத்துவரிசையோ இல்லை, சரியா?

காந்தியும் சாப்ளினும் என்று அண்மையில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் என்னுடைய அபிமானத்துக்குரிய ஆசிரியர் அவர்கள். முதலில் அதனைப் படிக்கவும்.  அது ஒரு சிறிய கட்டுரையே – ஒன்றரை நிமிடங்கள் எடுத்துக் கொண்டால் அதிகம்.
… … …     … … …    … … …

… என்ன, படித்தீர்களா?

சரி. இப்போது கீழே, தலையில் அடித்துக் கொண்டு கடனெழவே என்று தேவைப்பட்டால்  தொடரவும்.

எஸ்ரா இக்கட்டுரையை இப்படி ஆரம்பிக்கிறார்:

“வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள 1931ம் ஆண்டு லண்டன் வந்திருந்த காந்தியை நேரில் சந்தித்து உரையாடினார் சார்லி சாப்ளின், செப்டம்பர் 22 அன்று டாக்டர் கத்தியால் வீட்டில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது,

இந்தச் சந்திப்பு எப்படி நடைபெற்றது என்பது குறித்துப் பல்வேறுவிதமான தகவல்கள், மாற்றுகருத்துகள், கற்பனைகள் இன்றும் உலவி கொண்டேயிருக்கின்றன. எரிக் பிளாம் எழுதிய சாப்ளின் பற்றிய புத்தகத்தினை வாசித்த போது அதில் இச்சம்பவம் பற்றிச் சுவாரஸ்யமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.”

சரி. இது என்ன புத்தகம் என்பதை இவர் தெரிவிக்கவில்லை. ஆனால் எஸ்ரா அவர்களின் கட்டுரையிலும்  ‘இச்சம்பவம் பற்றிச் சுவாரஸ்யமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன’ என்பது தொக்கி நிற்கிறது.

ஆனால், மிக முக்கியமாக, நம்மைப் போல அரைகுறைச் சோம்பேறி முட்டாக்கூவான்களான தமிழ் வாசகர்களுக்கெல்லாம் மகிழ்ச்சி தரக்கூடிய விதத்தில், எஸ்ரா கட்டுரையில் உள்ள கதைகளுக்கு – ஒரு வரி கூட இந்தப் புத்தகத்தில் தரவுகள் இல்லை. சுபம்.

இந்தப் புத்தகம்: Chaplin in the Sound Era: An Analysis of the Seven Talkies; எழுதியது: Eric L. Flom; இந்த எரிக் ஃப்லோம் (நம்மாள்,  இந்தப் பெயரை எரிக் ப்ளோம் என்றாவது எழுதியிருக்கலாம் – ஆனால் எரிக் பிளாம் என்றுதான் எழுதுவார்; ஏனெனில், அவர் நம்முடைய எச்சு இராமகிருட்டிணன் அல்லவா, வேறென்ன சொல்ல) எண்ணி இரண்டு புத்தகங்கள் தான் எழுதியிருக்கிறார். அதில் இந்தப் புத்தகம் மட்டும்தான் சாப்ளின் பற்றியது. ஆக, எஸ்ரா அவர்கள் எடுத்துத் தடுத்தாட்கொண்ட விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் இருந்துதான் எடுக்கப் பட்டிருக்கவேண்டுமல்லவா?

இதனை வாங்கவேண்டுமென்றால், எனக்குப் பிடித்த இணைய புத்தகக் கடையான ஏபிஇபுக்ஸ்.காம் செல்லவும்.

இதனை வாங்கவேண்டுமென்றால், எனக்குப் பிடித்த வெள்ளைக்கார இணையப் புத்தகக் கடையான ஏபிஇபுக்ஸ்.காம் செல்லவும்.

இங்கிருந்துதான் எஸ்ரா அவர்களின்  தமாஷ்  ஆரம்பிக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வரியையும் கற்பனைக் கோவேறு கழுதையின்மீது ஒய்யாரமாக ஆரோகணித்து, சும்மா சொல்லக் கூடாது,  மிக அழகாகவே எழுதியிருக்கிறார்.

“தனது சிட்டி லைட்ஸ் படத்தின் துவக்க நிகழ்விற்காக லண்டன் வந்திருந்த சாப்ளின் தானே விரும்பி காந்தியை சந்திக்க நேரம் ஒதுக்கி தரும்படி கேட்டிருந்தார், ஒரு நடிகரோடு தான் பேசுவதற்கு என்ன இருக்கிறது என அவரது வேண்டுதலை காந்தி நிராகரித்துவிட்டார்,”

இப்படி ஒரு  செய்தியும் ஃப்லோம் புத்தகத்தில் இல்லை. :-(

ஸிடிலைட்ஸ் திரைப்படம் ஏற்கனவே அமெரிக்காவில் வெளியிடப் பட்டிருந்தது. லண்டன் வெளியீட்டிற்கு (ஃபெப்ரவரி 1931) சாப்ளின் போனது சரி. ஆனால் அது முடிந்தவுடன் பலமாதங்கள் ஐரோப்பாவில் (பாரிஸ், பெர்லின் வெளியீடுகள் இன்னபிற) சுற்றி விட்டு பின்னர்தாம் திரும்பி லண்டன் சென்றார் அவர். அதற்குப் பிறகுதான் காந்தியுடனான சந்திப்பு (செப்டெம்பர் 1931)  நடந்தது.

அவரும் காந்தியைப் பார்க்க நேரம் கேட்கவில்லை. காந்தியும் – சாப்ளின் விண்ணப்பித்தும் அவரைப் பார்க்க நேரம் ஒதுக்காமலில்லை. எப்படியும் இருவரும் ஒருவரையொருவர் முன்பே அறிந்தவர்கள் அல்லர்.

இவர்கள் சந்திப்பின் பின்புலம்: சாப்ளின் பெருமையடிப்பதற்காக, சுயபிம்பத்தை ஊதிப் பெரிதாக்கிக் கொள்ள — தன்னுடைய அரைவேக்காட்டுப் பொருளாதார, சமூகச் சிந்தாந்தங்களைப் பற்றிப் பொத்தாம்பொதுவாக உளறிக்கொட்டி – பெரிய அரசியல்வாதிகள், தத்துவவாதிகள், பொருளாதார வல்லுனர்கள், விஞ்ஞானிகள் என்று கண்டமேனிக்கும், எல்லா அறிவாளிகளிடமும் நூல் விட்டுப் பார்க்கும் இயல்பு கொண்டவர். பின்னவர்கள், மரியாதை நிமித்தம் பொறுமையாக சாப்ளின் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்ததனாலேயே, சாப்ளினுக்கு, மற்றவர்கள் எல்லாம் தன்னுடைய கருத்துகளுடன்(!) உடன்படுகிறார்கள் என்ற எண்ணம்.

மேலும், தன்னுடைய திரைப்படத்தை, அதன் பாக்ஸ் ஆஃபீஸ் சேகரத்தை அதிகரிக்கவும் இம்மாதிரி ஸ்டன்ட்களைச் செய்து வந்தார். தற்காலங்களைப் போலவே, அப்போதும்  வேலை வெட்டியற்ற ஊடகங்கள், வசீகரக் கோமாளிகள் பின்னால்தாம் அலைந்து கொண்டிருந்தன.

ஆக, இவரைப் பின் தொடர்ந்து, கண்டமேனிக்கும் புல்லரிப்புச் செய்திகளை வெளியிட்டுவந்தன. அவரும் தன் பங்கிற்கு அதிகப்படி ஸ்டன்ட்கள் செய்து தனக்கு விளம்பரத்தையும், ஊடகங்களுக்குப் பப்பரப்பாவையும் ஊட்டியவண்ணம் இருந்தார்.  எனக்கும் போன ஜென்மத்தில் இதன் காரணமாக ஒரே இன்பம்ஸ் கிடைத்தது சட்டென்று ஞாபகம் வருகிறது.

சரி. இந்தப் பின்புலத்தில் – சாப்ளினின் விளம்பர உதவியாளர்கள் (publicists) இந்தச் சிறு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தனர்; என்னுடைய மங்கலான நினைவுகளிலிருந்து – இந்தச் சந்திப்புக்கு, காந்தியின் நெருங்கிய நண்பரான அம்மணி ம்யூரியல் லெஸ்டர் அவர்களும் ஒரு காரணம் என நினைக்கிறேன். காந்தி எவரையும் சந்திக்கமாட்டேன் என்று சொல்லவில்லை. நடிகரோடு என்ன பேச இருக்கிறது என்றும் எதையும் நிராகரிக்கவில்லை. எங்கிருந்து இந்தக் கதையினைப் பிடித்திருக்கிறார் இந்த எஸ்ரா? இது நிச்சயம் ஃப்லோம் புத்தகத்தில் இல்லை. (ஆனால் ம்யூரியல் லெஸ்டர் வழிக் கதை ஒன்றில் இம்மாதிரிச் சம்பவம் இருக்கிறது.)

எனது கருத்தில், நாதுராம் கோட்ஸே, காந்தியைக் கொல்ல தனக்கு நேரம் ஒதுக்கும்படிக்குக் கேட்டிருந்தாலும், அதற்கு ஒப்புக் கொண்டிருப்பார் அவர். இப்படிப்பட்ட ஆளைப் பற்றித்தான் எஸ்ரா ஒரு புதுக்கதையை அவிழ்த்துவிடுகிறார். தேவையா?

…பின்னர் தொடர்கிறார் எஸ்ரா:

 “சாப்ளின் ஈஸ்ட் எண்ட் எனும் அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதியில் வளர்ந்தவர், ஏழை எளிய மக்களின் விருப்பத்திற்குரியவர், நம் காலத்தின் மிக முக்கியமான கலைஞன் என்று சரோஜினி நாயுடு எடுத்துச் சொன்னபிறகே காந்தி இந்தச் சந்திப்பிற்கு ஒத்துக் கொண்டார், காந்தி சட்டம் பயில லண்டன் வந்த போது அதே ஈஸ்ட் எண்ட் பகுதியில் தான் குடியிருந்தார், ஆகவே சந்திப்பிற்கு அது ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது”

சரோஜினி நாயுடு பற்றி ஒரு வார்த்தை  கூட இல்லை, இந்தப் புத்தகத்தில். மற்ற புத்தகங்களின் கதைகளை எடுத்துக் கொண்டாலும் இந்தச் செய்தி சரியில்லை, ஈஸ்ட்என்ட் பகுதியின் மீதான காந்தியின் அபிமானத்தைப் பற்றிய செய்தி, எஸ்ரா அவர்களின் நகைச்சுவை உணர்ச்சியையும், காந்தியின் உளவியல் பற்றி ஆய்ந்தறிந்தமையையும் சுட்டுகிறது. வாழ்க நீவிர் எஸ்ரா அம்மார்!

 “சாப்ளின் ஏன் காந்தியை சந்திக்க ஆர்வம் கொண்டார், லண்டன் வந்திருந்த சாப்ளின் முன்னதாகப் பெர்னார்ட் ஷா, ராம்சேமெக்னால்ட், ஹெச்.ஜி.வெல்ஸ்,சர்ச்சில் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து அன்றைய சமூக அரசியல் நிலவரங்களைப் பற்றி உரையாடியிருக்கிறார், அதைத் தொடர்ந்தே காந்தியை சந்திக்க விரும்பினார் சாப்ளின்”

மற்ற பெயர்களை தயவுபண்ணி விட்டுவிட்டார் எஸ்ரா. நன்றி. ஆனால் – இந்தச் சந்திப்புகளெல்லாம் மரியாதை  நிமித்தம் நடந்தவை. சாப்ளின் பேசுவதை மற்றவர்கள் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள், அவ்வளவுதான்.

நம் தமிழ் / ஹிந்தி / … நடிகர்கள் போன்றவர்தான் இந்த சாப்ளினும். நடிப்பதைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் உள்ளீடு அற்றவர். ஆனால் மீஅறிவு (meta-cognition) குறைவானதால், தான் என்ன செய்தாலும்/சொன்னாலும் அதை மெச்ச ரசிகக்குளுவான்கள் இருந்ததால், உண்மையாகவே தனக்குப் பல விஷயங்களும் தெரியும் என நம்பினார்.

இந்த சாப்ளின், ஐன்ஷ்டீன் அவர்களையும், பாவம், விட்டு வைக்கவில்லை. இச்சமயம் பெர்லின் போயும், அவர் கழுத்தையும் அறுத்தார். ஏற்கனவே அவருக்கு அமெரிககாவிலேயே ஐன்ஷ்டீனை வெறுக்கடித்த முன்னனுபவமும் இருந்தது… ஆக, ஐன்ஷ்டீன் அவர்களுக்கு நொபெல் பரிசென்பது, அவருடைய சாப்ளின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த அசாத்திய பொறுமைக்குத்தான் கிடைத்தது. இயற்பியலுக்காக, ஃபோட்டோஎலெக்ட்ரிக் விளைவுக்காக அல்ல. மன்னிக்கவும்.

காந்தி அரைமணி நேரம்போலத்தான் சாப்ளினுடன் பேசினார். அதனால் தான் அவருக்கு நொபெல் பரிசு கிடைக்கவில்லை என்பது வெள்ளிடை மலை.

 “லண்டனின் பெக்டன் ரோடில் வசித்துவரும் இந்திய மருத்துவரான டாக்டர் கத்தியாலின் வீட்டில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது, தனது நண்பர்களுடன் காந்தி டாக்டரை சந்திக்க வந்திருந்தார், அன்று மாலை ஆறரை மணிக்கு சாப்ளின் காந்தியை சந்திக்க நேரம் ஒதுக்கபட்டிருந்த்து, காந்தி, சாப்ளின் என இரண்டு முக்கியப் பிரமுகர்கள் வருகிறார்கள் எனக் கேள்விபட்டு மக்கள் சாலை முழுவதும் பெரும் திரளாகத் திரண்டிருந்தார்கள், சாப்ளின் காரில் வந்தபோது பலத்த கரகோஷத்துடன் வரவேற்பு அளிக்கபட்டது, மரங்களின் மீது ஏறிக் கொண்டு கத்தியால் வீட்டினுள் என்ன நடக்கிறது என்பதைக் காண மக்கள் முண்டியத்தார்கள்”

இந்த விஷயம் ஒன்றுகூட இப்புத்தகத்தில் இல்லை. வேறு இடங்களிலிருந்து, இணைய வரலாறுகளிலிருந்து, அக்கப்போர்களிலிருந்து இதனை எடுத்திருக்கிறார் எஸ்ரா. (கத்தியால் வீட்டினுள் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கமுடியுமா என்ன? கத்தி என்பது தூரதர்ஷினியா, தொலைநோக்கியா என்ன? ;-) )

மரங்கள் மீதெல்லாம் மக்கள் ஏறினார்கள் என்பது அழகான கற்பனை. நம் தமிழ் நாட்டில் நடக்கக் கூடியது, ரிச்சர்ட் அட்டன்பரோவின் காந்தி படம் பார்த்த ஞாபகம் – அனைத்தையும்  கலந்தடித்து காந்தீயக் கதம்பச்சோற்றினை நமக்குப் பரிமாறுகிறார் இந்த  எஸ்ரா மனிதர், என்ன செய்ய…

“காந்திக்கு சாப்ளினின் திரைப்படங்கள் பற்றி எதுவும் தெரியாது என்பதால் அவர் பற்றிய அறிமுகத்தை உதவியாளர்கள் தயாரித்துத் தந்திருக்கிறார்கள், சாப்ளினுக்குக் காந்தி இங்கிலாந்தே பயப்படும் சர்ச்சிலை மிரட்டு மிரட்டென மிரட்டுகிறாரே என ஆச்சரியம், முதல்மாடியில் இருந்த சிறிய அறையில் அந்தச் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது”

காந்திக்கு சாப்ளின் பற்றித் தெரியாது என்பது சரி. ஆனால் மற்ற விஷயங்கள் அழகான கற்பனை. உதவியாளர்கள் குறிப்புகள் என்பதெல்லாம் தமிழ் சினிமா அஸிஸ்டென்ட் டைரடக்கர்கள், டைரடக்கர்களைச் சுற்றிச் சுற்றி வரும் ரேஞ்சுக்கு இருக்கிறது. சர்ச்சிலை மிரட்டுவது, முதல்மாடியில் சிறிய அறை என்பதையெல்லாம் பார்த்தது போல எழுதியிருக்கிறார். இவையெல்லாம் எஸ்ராத்தனமான ஊகங்கள். சான்றுகள் சொல்வது எதிர்மாதிரி. இங்கிலாந்தும் சர்ச்சிலுக்குப் பயப்படவில்லை. சாப்ளின் சந்தித்ததும் இந்த காரணத்துக்காக இல்லை.

<ஹ்ம்ம்… இப்படியே தொடரலாம். ஆனால், செத்த மாட்டினை அடிப்பது எனக்கும் அயர்வாகவே இருக்கிறது…>

எஸ்ரா பதிவு இப்படி முடிகிறது: (ஸ்ஸ்ஸ்…. அப்பாடா…)

 “காந்தியின் எண்ணங்களை உள்வாங்கிக் கொண்டே சாப்ளின் பின்னாளில் தனது மார்டன் டைம்ஸ் படத்தில் இயந்திரம் ஒன்றினுள் தான் மாட்டிக் கொள்வது போன்ற காட்சியை வைத்தார் என்று கூறுகிறார் எரிக் பிளாம்”

எரிக் ஃப்லோம் தன் புத்தகத்தில், பக்கம் 103ல் எழுதியுள்ளது இது: “In Chaplin’s conversations with Gandhi and Einstein, for instance, one can see the kinds of concerns that would influence Modern [மார்டன் அல்ல] Times.” அவ்வளவுதான்.

ரீல் சுற்றுவதற்கும் ஒரு அளவு  வேண்டும், ஆசிரியரய்யா!

-0-0-0-0-0-0-

எப்படி இவ்வளவு குண்டு தைரியமாக, விலாவாரியாகச் சொல்கிறேன் என்கிறீர்களா? அதுவும் ஒரு சோகக் கதைதான்.

உங்கள் மேலான பார்வைக்கு, அந்தப் புத்தகத்தில் காந்தி பெயர், அந்த சந்திப்பு பற்றிய துக்குணியூண்டுச் செய்தி வரும் பக்கங்களை எல்லாம் (=5)இங்கு கொடுத்திருக்கிறேன். இப்பக்கங்கள், ChaplinInTheSoundEra_RelevantPages பிடிஃப் கோப்புக்குள் இருக்கின்றன. நீங்களே சரிபார்த்துக் கொள்ளவும்.(மற்ற செய்திகள் நான் படித்திருக்கும் மற்ற புத்தக நினைவுகளிலிருந்து)

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், எஸ்ரா அவர்கள் இந்தப் புத்தகத்தைப் படிக்கவேயில்லை. அதிக பட்சம், அக்கட்டுரையில் இருக்கும் படத்தைப் பார்த்து, நாம் முன்னமே எழுதியது போல – இச்சந்திப்பு பற்றிய சில புத்தகங்களைப் பற்றிய விமர்சனங்களை மட்டும் படித்துவிட்டு அல்லது காற்றுப் போக்கில் கேள்விப்பட்டவைகளை வைத்து, இணையத்தில் வரும் அற்பமான, உள்ளீடற்ற அக்கப்போர்களை வைத்து,  – தன் க்ரியாசக்தியையும், கற்பனை வளத்தையும் உபயோகித்து, முந்தைய பதிவில் உள்ள மற்றைய உத்திகளைப் பயன்படுத்தி, ஒரு பதிவைத் தேற்றி விட்டார். (ஆம். நானும்  இப்படியே இந்தப் பதிவைத் தேற்றிக் கொண்டிருக்கிறேன்)

இன்னொரு முக்கியமான விஷயம் – எந்த இணைய பக்கத்திலிருந்து சுட்டுஒற்றியெடித்து,  தன்னுடைய பதிவில் 90%ஐ நேரடியாகத் தேற்றியிருக்கிறார் எஸ்ரா அவர்கள், என்பதையும் நான் கண்டுகொண்டேன். (ஆனால், இப்பதிவின் பாவப்பட்ட வாசகர்களுக்கு அது ஒரு ஹோம்வர்க்; வேண்டுமானால், அதனை நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்; முதலில் இதனைக் கண்டுபிடிப்பவர்களுக்குத் தண்டனை: உங்கள் முகவரி கொடுத்தால், உடனே என்னிடம் இருக்கும் பதினைந்து போல இருக்கும் எஸ்ரா புத்தகங்களை உங்களுக்கு பொட்டலம் கட்டி ‘டு பே’ (to pay) முறையில் லாரி பார்ஸேல் ஒண்ணேய்  அனுப்பிவிடுகிறேன்!)

-0-0-0-0-0-0-

சரி, எஸ்ரா அவர்களின் நிலைமை படு மோசமாக  இருக்கிறது – இப்படியே இருந்தால், என் நிலைமை பரிதாபமாக ஆகிப்போய், என்னால் அடுத்த 24 மணி நேரம் தாங்க முடியுமா என்பதும் தெரியவில்லை. என்னுடைய தமிழ உறவுக்காரர்களுக்குச் சொல்லிவிட வேண்டும்.

… ஆகவே, இப்போதைக்கு எனக்கு வேறு வழியேயில்லை. நான் இனிமேல் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதுவதைப் படிப்பதை நிறுத்தி விடப் போகிறேன். பலகாலம் முன்பு, யுவகிருஷ்ணா அவர்களின் எழுத்துகளைப் படிப்பதையும் இப்படித்தான் நிறுத்தினேன் – ஆனால் பின்னவருடையது எஸ் ராமகிருஷ்ணன் அவர்களைப் போன்றதல்ல – அது திகைக்கவைக்கும் அரைகுறைத்தனம். காப்பியடிப்பதையும் கூட மறைக்காத தினவுத்தனம்; தன்னுடைய வாசகத் தமிழர் மேல் இவர் வைத்திருக்கும் அற்ப மதிப்பீட்டின் எதிரொளிப்பு… (எனக்குத் தெரியும், நான் ஒருவன் படிக்காததால், குளுவான்களால் சூழப்பட்டுள்ள இவர்களுக்கு ஒரு புண்ணாக்கு  நஷ்டமும் இல்லை; ஆனால், நான் இவர்களைப் படிக்காததால் எனக்கு  நிச்சயம் லாபம் என்றுதான் தோன்றுகிறது!)

ஆனால், எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் மட்டும்தான் கண்டமேனிக்கும் மனம் போன போக்கில் எழுதுகிறார், தரவுகளை உல்டா செய்து தொடர்பேயில்லாமல் கட்டுரைகளை பதிப்பித்துத் தள்ளுகிறார் என்றெல்லாமும் இல்லை.

தமிழ் எழுத்தாளர்கள் பலரும் இப்படித்தான் எழுதுகிறார்கள் – நம் தமிழைக் கூறு போடும் நல்லுலகில், ஓரிருவரைத் தவிர, இந்த சோகப் போக்கிற்குப் பொதுவாக விதிவிலக்குகளே இல்லை; ஆனால் இம்மாதிரியான மற்றவர்களிடத்தில் – அவர்களுடைய / நம்முடைய மீட்புக்கான ஒரு வழியாவது (= at least, one single redeeming factor) இருக்கிறது. மிகவும் வருத்தத்துக்குரிய விதத்தில், இவரிடம் அதுவும்  இல்லை. என்ன செய்வது, சொல்லுங்கள்.

ஆக – தற்காலத் தமிழ் இணைய எழுத்தாளத் தகர டப்பிகளுடைய மகாமகோ ஜோதியில் கலந்து அதன் உச்சங்களில் ஒன்றாக இருக்கிறார், இவர்.

இருந்தாலும், மனிதனின் ஆன்மீக மீட்பின் (=spiritual redemption) மீது, பொதுவாகவே மிக நம்பிக்கை வைத்திருப்பவன் நான். அனைவருக்கும் மீட்பு உண்டுதான். ஆனால், எனக்குத்தான் இந்த மீட்பு இழவு லபிக்குமா என்பதே தெரியவில்லை.

தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி  இருக்கிறோம்? மிக, மிக முக்கியமாக – நான்  ஏன் இப்படி இருக்கிறேன். :-(

எனக்குப் பேய்தான் பிடித்து விட்டது.

(எச்சரிக்கை: இன்னமும் இரு பதிவுகள் இந்த ரீதியில் வரலாம் – ஆனால் அவை இவ்வளவு நீளமாக இருக்கமாட்டா!)

-0-0-0-0-0-0-0-0-0-

தொடர்புள்ள பதிவுகள்:

அலக்கியம், காப்பிக்கடை, இன்னபிற இழவுகள்…

13 Responses to “எஸ் ராமகிருஷ்ண லீலா தரங்கிணி… (1/3)”

 1. Venkatesan Says:

  மன்னா, ஆயிரம் பொன்னும் எனக்கே!

  https://groups.google.com/forum/#!msg/sies-1969/Z_RGwBRX5kc/1RLNFUp5Hb4J

  தருமிக்கு ஈசன் என்றால், நமக்கு கூகுள்!

  ———————————————————-

  நீங்கள் திட்டினாலும் ஒரு விஷயம் சொல்லத்தான் வேண்டும். எனக்கு எஸ் ரா புத்தகங்களில் துணையெழுத்து, வாசகப்பர்வம் இரண்டும் பிடித்திருந்தன!

  ——————————————-

  நீங்கள் சொல்லும் abebooks தளம் பற்றி. நான் முன்பு தேடிய ஒரு புத்தகம் அமேசான் போன்ற இடங்களில் கிடைக்காமல், இங்கு இருந்தது. டாலரில் விலை சொன்னதாலும், தபால் கூலி அதிகமாக இருந்ததாலும் விட்டு விட்டேன். புத்தகம் ஒழுங்காக இந்தியா வந்து சேருமோ என வேறு அச்சம். உங்கள் அனுபவம் எப்படி?

  —->>>>
  1. உங்கள் சுட்டியில் உள்ள இந்த ‘chinu’ அவர்களும் இன்னொரு இடத்திலிருந்து இதனை உருவியிருக்கிறார். இணையத்து அராஜகத் திருடல்களில் — ரிஷிமூலம் அதன்மூலம் நிர்மூலம் எனப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம்.

  2. நான் ஏன் உங்களைத் திட்டப் போகிறேன்? தாராளமாகப் படியுங்கள். Each of us have our own crosses to bear.

  3. நிச்சயம் வந்துசேரும். மிகவும் நம்பகமான தளம். ஆனால் தபால் செலவு மிகவும் அதிகமாகிவிடும். தடுக்கி விழுந்தால் ‘ஸ்டேட்ஸில்’ உறவினர்களும் மற்ற வாலில்லா ஜந்துக்களும் இருக்கும் இக்காலங்களில், அங்கேயே புத்தகத்தை அனுப்பச் சொல்லிவிட்டு பின்பு அதை இந்தியாவில் பெற்றுக்கொள்ளும் முறை எனக்கு ஒத்து வருவது.


  • தருமியே! உமக்குப் பொன் கிடையாது. உமக்கு முன்னாலேயே நக்கீரர் ஒருவர் நேற்றிரவு தொலைபேசியில் அங்கலாய்த்து விட்டார். அவர் பொட்டலத்தை வேண்டாமென்று இதுவரை சொல்லவில்லை. அவருக்கு வேண்டாமென்றால், உமக்குத்தான் அது. (உமக்குத் தேவையா இது?)

   இப்படிக்கு:

   கொங்குதேர்வாழ்க்கையோன்.

 2. Venkatesan Says:

  http://maddy06.blogspot.in/2009/05/when-gandhiji-met-chaplin.html

  இதுவா மன்னா? அல்லது இதற்கும் பின்னே ஏதேனும் உண்டா? singly linked list இல் பின்னே செல்வது கடினம் என்பது தாங்கள் அறியாததல்ல. கூகுள் தயவால் ஏதோ செய்ய முடிகிறது!

  ————————–

  இந்தக் கதையை சுவாரஸ்யம் கருதி எஸ் ரா பகிர்ந்ததில் தவறில்லை என நினைக்கிறேன். எனினும், தானே எரிக் பிளோம் புத்தகத்தை படித்தது போன்ற தோற்றம் தந்திருக்க வேண்டாம். எரிக் பிளோம் புத்தகத்தில் இப்படி இருப்பதாக ஒருவர் சொல்கிறார் என சுட்டி தந்து நிறுத்தி இருக்கலாம்.

  பொதுவாகவே, எவ்வளவு பெரிய அப்பாடக்கர் ஆசாமியாக இருந்தாலும் ஒரு சிறிய வட்டத்தில் தான் நேரடி ஞானம் இருக்கும் எனத் தோன்றுகிறது. அதற்கு வெளியே பேசுவதை குறைத்துக் கொள்வதும், அப்படியே பேசினாலும் அடக்கி வாசிப்பது நல்லது என்ற எண்ணம் ஏற்படத் தொடங்கியுள்ளது.

  —————————

  abebooks போன்ற மற்ற சில பழைய புத்தக கிங்கரர்களையும் கண்டேன். மற்ற இடங்களில் கிடைக்காத புத்தகங்களை கூட ஏழெட்டு டாலருக்கு தருகிறார்கள். சுமை கூலி தான் ஜாஸ்தி. அமெரிக்கவாழ் நண்பர்கள் மூலம் வரவழைப்பது என்ற யோசனை நன்றாக உள்ளது. நன்றி. பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும் என்ற நிலை அடுத்த தடவை தோன்றும் போது பயன்படுத்திக் கொள்கிறேன்.


  • அஹோ தருமி!

   ஸிங்ளி லின்க்ட் லிஸ்ட் என்றால் சிங்கம் (கொஞ்சம் தெகிர்யமாக பவனி வரலாம் – எவன் கண்டுபிடிக்கப் போகிறா என்று)
   டப்ளி அல்லது மல்டிப்ளி லிங்க்ட் லிஸ்ட் என்றால் அசிங்கம். (சீக்கிரம் மாட்டிக்கொள்ள நேரிடும்)

   ஆகவேதான், எஸ்ரா போன்றவர்கள் இணையச் செய்திகளை தடுத்தாட்கொள்ளும்போது முன்னதைக் கருத்தில் கொள்கின்றனர் என அறிவீர்!

   அந்த மாட்டி066, பிற ஐந்துபோல தளங்களிலிருந்து கொள்முதல் செய்திருக்கிறார். ரிஷிமூலம் கந்தறகோளம். ஆகவே மன்னர் உமது இந்த முயற்சியையும் தள்ளுபடி செய்கிறார். ஹஹ்ஹா!

   எஸ்ரா போன்றவர்களுக்கு மீஅறிதல் நிலைக் கொடுப்பினை இல்லை. இவர்களெல்லாம் அடக்கியாவது வாசிப்பதாவது… இப்படியெல்லாம் தள்ளுபடியில் இவர்களின் காரியங்களை ஒப்புக் கொண்டால் விமோசனமே கிடையாது. அதாவது உங்களுக்கு!

   அமெரிக்கவாழ்(=இறப்பு) நண்பர்களையே அப்புத்தகங்களை விலைக்கு வாங்கச் சொல்வது இன்னமும் புத்திசாலித்தனமானது. அவர்கள் ஒரு டாலர் இழவுகளைப் பெத்த பரிசுகளாகக் கொணர்ந்து பெரிய மனது பண்ணி இந்தியவாழ் பரிதாப ஜீவன்களுக்குப் பரிசில் கொடுப்பதற்குப் பதிலாக இதனைச் செய்யலாம்.


 3. ரொம்பவே நீளம் தான் :)

 4. Rajan Says:

  ராமசாமி அவர்களே

  நாவலைப் படிக்காமலேயே அதைப் பற்றி பேசும் கலையும் நம் எழுத்தாளர்கள் சிலரது கை வசம் உண்டு. அது. போகட்டும். ஏதோ இணைய தயவில் இப்படி கதை, கட்டுரை, புத்தகங்கள் எழுதிக் கொண்டு தமிழர்களின் ”அறிவை” வளர்த்துக் கொண்டிருப்பவர்களைப் போய் இப்படியா கிழித்துப் போடுவது? :) உங்கள் கட்டெறும்புக் கடிக்கெல்லாம் அசந்தால் கூகுளாண்டவர் துணை கொண்டு இலக்கியம் வளர்ப்பது எப்படி? பிழைத்துப் போகட்டும் விட்டு விடுங்கள் :)

  ராஜன்

 5. க்ருஷ்ணகுமார் Says:

  \\ ‘வரவர மாமியார் கழுதை போல் ஆனாராம்’ என்கிற ஔவையாரின் மூதுரையுடன் \\.

  ஔவையார் என்ன பாவம் செய்தார்.

  மூதுரையில் ஔவையார் இப்படியெல்லாம் சொல்லவில்லை.

  http://store.tamillexicon.com/%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/

  மெனக்கெட்டு, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நல்வழி மற்றும் தனிப்பாடல்களையெல்லாம் கூகுள குருகண்டால் மண்டையில் தட்டித் தட்டிப் பார்த்தாலும் கிடைக்காது.

  யுவக்ருஷ்ணன், ராமக்ருஷ்ணன் என்று பட்டது போதாது என்று க்ருஷ்ணகுமாராகிய நான் வேறு படுத்துகிறேன் என நினைக்கிறேன்.

  ம்………க்ருஷ்ண க்ருஹ பீடித: என்று மட்டிலும் புரிகிறது.

  ——>>>> அய்யோ அய்யா, அந்தப் பழமொழிக்கும், கேபி சுந்தராம்பாளாக நடித்துக் கொண்டிருந்தவருக்கும் ஸ்னானப்ராப்தி கிடையாது என்பதை அறிவேன். கிண்டலாக ஔவையார் கிவ்வையார் என்றெழுதியதிற்கு அவரையும் அவர் ஏஜென்டான உங்களையும் வம்புக்கிழுத்ததற்கு, தேவரீர் என்னைச் க்ஷமிக்கவும்.

  இனிமேல் உங்களுக்கு என்னை – how why யார் என கேள்விகேட்க சந்தர்ப்பம் கொடுக்காமல் பார்த்துக் கொண்டு — கொன்றவேந்தன் எழுதிய ஒதெல்லோவும், நல்வழி எழுதிய ஐந்தரையடியாரும் (அவ்வையாரின் உச்சங்களை உயரத்தை நானா குறைத்து மதிப்பிடுவேன்? அவருக்கு பயப்படா விட்டாலும், அவருடைய ஏஜென்டுக்கு பயப்படுகிறவனே நான் தானே!) தாம் என்னைக் காப்பாற்ற வேண்டும்.

  __ரா.

 6. க்ருஷ்ணகுமார் Says:

  \\ இந்தப் புத்தகம்: Chaplin in the Sound Era: An Analysis of the Seven Talkies; எழுதியது: Eric L. Flom; இந்த எரிக் ஃப்லோம் (நம்மாள், இந்தப் பெயரை எரிக் ப்ளோம் என்றாவது எழுதியிருக்கலாம் – ஆனால் எரிக் பிளாம் என்றுதான் எழுதுவார்; ஏனெனில், அவர் நம்முடைய எச்சு இராமகிருட்டிணன் \\

  பாவம் சார் இராமகிருட்டிணனை மட்டிலும் இந்த விஷயத்தில் இடித்துரைப்பது தகாது.

  இது Tamil லாங்க்வேஜ் லைக் பண்ணுபவர்களான ஒரிஜினல் அக்மார்க் செண்டமிலர்களின் கலாசார பாரம்பர்யம்.

  த்ராவிட மடத்தினர், த்ராவிட மடாதீசரான கருணாநிதி என்கிற தக்ஷிணாமூர்த்திகாரு வாள்ளு பிட்ட — ஸ்டாலின் அவர்களை சுடாலின் என்று சொல்லவே மாட்டார்கள். ஆனால் ராஜாஜியை இராசாசி என்றோ குல்லுகபட்டர் என்றோ அன்பு பொங்க மருவாதையுடன் அழைப்பர்.

  Bartholomäus Ziegenbalg – பர்த்தலோமேயு சீகன்பால்கு –

  கொஞ்சம் ஈனமானமுடைய டுமீலர் என்றால் செல்லமாக சீகன்பால்கு அய்யர் என்று அழைக்க வேண்டும்.

  William Shakespeare – வில்லியம் சேக்சுபியர்

  டுமீல் பற்றாளரானால் சேசுப்புஅய்யர்

  ஊர்வசி – உருப்பசி — இதாவது புரிகிறது – ரொம்பவே பசியுள்ளவளாதலால் பசிக்குணவிடாத அர்ஜுனனை சபித்தவள்.

  ஒரு லிஸ்ட் அல்ல தனி ஒரு வ்யாசமே எழுத வேண்டும்.

  ஆனால் பூரா ஹிந்துஸ்தானமும் இதற்கு விதிவிலக்கல்ல. த்ராவிட மடாதீசரின் புத்ர புத்ரி ரத்னங்களை பதவி ப்ரோக்கர் பர்க்கா தத், அடாவடி அர்ணாப் கோஸ்வாமி இத்யாதிகளெல்லாம் அன்புடன் அஜகிரி, கனிமொஜி என்று சொல்லும்போதெல்லாம்…..

  தானாடாவிட்டாலும் தன் சதையாடி ……

  பயலுவளா அகர் மகர் இதையெல்லாம் அகழ் மகழ் என்று சொல்லும் உங்களால்

  தர்ப்பைப் புல்லைப் பொசுக்கினால் தான் அழகிரி, கனிமொழி என்று சொல்லமுடியுமா என்று தோன்றும்.

  பாவம் சார் எஸ்.ரா.

  இதெல்லாம் மேரா பாரத் மஹான் சமாசாரம்.

 7. Ganesh Says:

  எஸ்.ரா.ஒரு மிகப்பெரிய அப்பாடக்கர்.இரண்டு வருடங்களுக்கு முன் உலக திரைப்படங்கள் எனும் தலைப்பில் சென்னை தி.நகரில் இரண்டுவாரம் பேசினார்.கூட்டமாவது கூட்டம்..பலர் நோட் பக்கும் பேனாவும் கொண்டு நோட்ஸ் எடுத்துக்கொள்ள..அமர்க்களம்தான்.நான் ஒரே ஒரு நாள் போய்விட்டு நொந்து விட்டேன்.அவர் சொன்னது அனைத்தும் விக்கி பீடியாவிலி
  ருந்து எடுத்தவை..


  • ‘அப்பாடக்கர்’ என்றால் என்ன? இடஞ்சுட்டிப் பொருள் விளக்கி, மேலதிகமாக இரண்டு எடுத்துக்காட்டுகள் கொடுக்கவும்.

   • ஆனந்தம் Says:

    டக்கரான அப்பா என்று தொல்காப்பியம் கூறுகிறது.
    தக்கர் பாபா வித்யாலயா என்று ஒரு பள்ளி இருக்கிறதே அங்கு படித்த முன்னாள் மாணவர் ஒருவரின் குழந்தைகள் தங்கள் அப்பாவை இப்படி அழைப்பார்கள் என்பதும் தமிழ் கூறும் நல்லுலக மரபாம்.
    (இதற்கு முன் ஒரு தகுதிச்சுற்றில் ஒரு கேள்விக்கு நீங்கள் பதிலளித்தாக வேண்டும். மொக்கை என்றால் என்ன? இ.சு.பொ.வினால் அஞ்சல் வழியில் அப்பாடக்கர் மேலும் விவரமாக விளக்கப்படும்.)

 8. ஆனந்தம் Says:

  ஸ்ரீ நாராயணதீர்த்தர் மீது தேவரீருக்கு என்ன கோபம்? யுவகிருஷ்ணனார் பற்றிய முன்னொரு கட்டுரையிலும் கிருஷ்ணலீலா தரங்கிணியை வம்புக்கிழுத்திருந்தீர்கள். தற்போது எஸ்ராவுக்கும்.
  (எஸ்ரா பவுண்டை இழுக்காமல் விட்ட காரணம் என்னவோ? அவரிடம் எத்தனை பவுண்ட்கள் வாங்கினீர்கள்?)

  —–>>>> அய்யா ஆனந்தம்! அவர் பெயரில் இருக்கும் தீர்த்தம் கொஞ்சம் அதிகமாகவே என்னுள்ளே போய்விட்டதோ என்னவோ! ;-)

  எஸ்ரா பவுன்டையும் இழுத்து என்னுடைய பவுன்ட் ஆஃப் ஃபெஷ்-ஷினைப் பெற்று கதாசிரியரை ஏசிக் கொல்லலாம் எனத்தான் நினைத்தேன். ஆனால், என்னுடைய பிலுக்கலுக்கும், பெயருதிர்த்தலுக்கும் கூட ஒரு அளவு உண்டல்லவா? ;-)

  …அந்தக் காலத்தில், தருமு சிவராமு-வும், வெங்கட் சாமிநாதனும் (என நினைக்கிறேன்) எஸ்ரா பவுன்ட், வேக்னர் என்றெல்லாம் மாறி மாறிப் பேசி, உரக்க உரையாடியதெல்லாம் அந்த அக்கப்போர்களெல்லாம் நினைவுக்கு வருகின்றன. இந்தக் காலங்களில் அப்படிப்பட்ட பாண்டித்தியம் உள்ளவர்கள் மிக மிகக் குறைவு. ஹ்ம்ம்ம்.

  உங்கள் தூண்டுதலினால், ‘ராவும் எஸ்(s)ராவும், எஸ்(z)ராவின் அரமும்’ என இந்தப் பகலிலேயே எழுதலாமோ எனத் தோன்றுகிறது.

  இன்னாபா ஸொல்றே?

  __ரா.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s