ஹாஹ்ஹாவென்று எழுந்த ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ யுகப்புர்ச்சியின் ஒரு (ஒரேயொரு ?) சந்தோஷமான முடிவு!
January 6, 2014
(அல்லது) n = n +1
எல்லா நாட்களிலும் இப்படி நடப்பதில்லை. நடந்தால் நன்றாக இருக்கும்தான். ஆனால்…
… நேற்று மாலை, என்னவோ யோசனையில் (யாக்கை நிலையாமை என) ஆழ்ந்துகொண்டு, மெதுவாக சைக்கிள் ஓட்டிக் கொண்டு வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது – ஒரு மோட்டார்சைக்கிள் பீய்ங் பீய்ங் என்று ஹார்ன் அடித்துக்கொண்டு என் பின்னாலேயே வந்து கொண்டிருந்தது. முடிந்தவரை இடதுபக்க ஓரம் சென்றாலும் ஒரே பீய்ங் பீய்ங். சாலை என்னவோ விசாலமாக இருந்தாலும் இப்படி!
ஆனால், எங்கள் பக்கம் குடிவெறிக்காரர்கள், இருசக்கர வண்டிகளிலேயே, நேரடியாகக் கைலாயத்துக்குப் போகத் துடிப்பவர்கள் நிறைய – ஆகவே, பல்லைக் கடித்துக் கொண்டு, மிகவும் முயற்சித்து, மகாமகோ பொறுமையுடன், மெதுவாக தார் சாலையை விட்டிறங்கி, சாலையோரச் செம்மண்ணில் ஓட்ட ஆரம்பித்தேன். இருந்தாலும் பின்னாலேயே என்னைத் தொடர்ந்து ஓட்டியபடி பீய்ங் பீய்ங். கூடவே டர்ர்ர்புர்ர்ர்ரென்று த்ராட்டில் குறைக்கும் சப்தம்.
வெறுத்துப் போய், சைக்கிளை விட்டிறங்கி அந்த முட்டாள் பீய்ங்பீய்ங்-காரனை ங்கொம்மாள ரெண்டு சாத்து சாத்தலாம் என்று திரும்பினால்…
… ஒரேடியாக முகமெல்லாம் மகிழ்ச்சியுடன் இருந்த அந்த மோட்டார்சைக்கிள் ஓட்டுனன், நமக்கு முன்பே தெரிந்த – முன்னறிமுகமான மாணவன்.
தமிழகக் கோமாளிகளால் அரங்கேற்றப்பட்ட ஈழ ஆதரவுக் கூத்துகள் + கேளிக்கைகள் + திராவிடப் பசப்பல்கள் + டெஸ்ஸொபுஸ்ஸோக்கள் + மாய்மாலங்களில் ஒன்றான ‘போராட்ட’ அற்பத்தனத்திடமிருந்து சரியான சமயத்தில் மீட்கப்பட்ட மாஜி ’ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ காரப் பையன்தான் இவன். பாவம், என்னிடம் திட்டுவாங்கிக் கொண்டு, ஆனால் பின்னர் யோசித்து உருப்படியாக வாழ்க்கையை, தன் எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள முயன்றவன்.
என் கொலைவெறிக் கோபமெல்லாம் புஸ்ஸென்று போய்விட்டது.
இச்சமயம் உங்களுக்கு — என்னடா இவன் எழுதுகிறான், என்ன சொல்லவருகிறான் என்று தோன்றினால் — முந்தைய, இந்த ’ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ விசித்திரப் பேரோசையிடும் ஜந்து தொடர்பான பதிவுகளை – மார்ச் மாதப் பதிவிலிருந்து – படித்தால், இப்பதிவின் பின்புலம் கிடைக்கலாம்.
- ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ அல்லது முட்டை – இறந்த காலத்தின் நிகழ்காலக் குறிப்புக்கள் 08/07/2013
- மாணவர் போர் ஆட்டம் – பின்னூட்டம், விளக்கம்++ 30/03/2013
- போராட்டங்கள் – சில கேள்விகள், உரையாடல்கள் 9/03/2013
- மாணவர்கள் போராட்டம் அல்லது புண்ணாக்கு 19/03/2013
எனக்கு இந்தப் பையனை, கடந்த சுமார் இரண்டு வருடங்களாகத் தெரியும்.
-0-0-0-0-0-0-0-
… பின் ஸீட்டில் தோளில் பச்சைத் துண்டுடன், வாயெல்லாம் பல்லாக அவன் அப்பா.
குட் ஈவ்னிங் ஸார். வணக்கம் சார். வணக்கங்க. ரெண்டு பேரும் நல்லா இருக்கீங்களா. வூட்ல சௌக்கியமா?
கடவுள் புண்ணியத்துல நல்லா இருக்கோங்க…
அடடே, என்னப்பா இது, பளப்பளா புது ஹீரோ ஸ்ப்லென்டரா? ஷோக்கா இருக்குதே!
ஆமாம் ஸார். ஸ்ப்லென்டர் ப்ளஸ்! ஸெகன்ட் ஹேன்ட் தான் ஸார். நீங்க சொன்ன மாரி, ஒழச்சி சம்பாரிச்சி என் சொந்தக் காசுல வாங்கினேன் ஸார்.
ரொம்ப சந்தோஷமப்பா.
நீங்க சொன்னமாரி அஞ்சே மாசத்துல பணம் சேமிச்சு வாங்கிட்டேன் ஸார். இன்னிக்குதான் ரெஜிஸ்ட்ரேஷன் மாத்தினேன். வாட்டர்வாஷ் ஆயில் ஸர்வீஸ் பண்ணி ஒங்க கிட்ட காமிக்கலாம்னிட்டு வ ந்திட்ருக்கோம் ஸார்.
ரொம்ப ரொம்ப சந்தோஷம்பா.
… நான் வண்டி வாங்க துட்டு கொடுக்கறேன்னேன் சார். இருந்தாலும் என் பையன் தன் சொந்தக் காசுலதான் வாங்கிப்பேன்னு பிடிவாதம் பிடிச்சு வாங்கியிருக்கான். அஞ்சு மாசமா பகல்ல காலேஜ் ராவுல பார்ட் டைம் வேலன்னிட்டு ஒழச்சிருக்கான்.
தந்தையின் குரலில் பெருமிதம்.
அய்யா, ஒங்க பையன் பெரிய ஆளா வருவான், கவலயே படாதீங்க.
![n=n+1 or the importance of course corrections... [Image off: https://i0.wp.com/nplusonemag.com/images/txp/135.png] n=n+1 or the importance of course corrections... [Image off: https://i0.wp.com/nplusonemag.com/images/txp/135.png]](https://i0.wp.com/nplusonemag.com/images/txp/135.png)
n=n+1 or the importance of course corrections… [Image off: http://nplusonemag.com/images/txp/135.png] இப்பதிவுக்குத் தொடர்பில்லாத பத்திரிகையாக இருந்தாலும் எனக்கு இதன் பெயரையும் உள்ளடக்கத்தையும் மிகவும் பிடிக்கும். இதன் சில கட்டுரைகள் இணையத்தில் உள்ளன – முடிந்தால் படிக்கலாம்…
எனக்கும் மிகவும் சந்தோஷம். வாழ்க்கையில் பலவிதமான திருப்தி தரும் விஷயங்கள் நடக்கத்தான் செய்கின்றன. கொடுக்கும் உழைப்பிற்கு இன்னமும் நிறைய நடக்கவேண்டும் என ஆவலும் எதிர்பார்ப்பும் இருந்தாலும், ஒரு சிலவாவது நடக்கின்றனதான்.
ஆக: n = n +1
இதை நீங்கள் கர்வமாகச் சொல்கிறேன் என்று நினைக்கலாம். அது உண்மையாகக் கூட இருக்கலாம். எனக்குப் பிரச்சினையில்லை. எனக்கு கர்வம் கொஞ்சம் ரொம்பவே அதிகம்தான் என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்வதில், மிகவும் பணிவுடன் பெருமைப் படுகின்றவனே நான் தான்! ;-)
… ஆனால், ஒரு கிராமப்புற ஆசிரிய வேலை(!)யில், நம் குடிகாரச் சராசரிச் சூழலில், இலவசங்களுக்கு அலையும் சோம்பேறிக் கலாச்சாரத்தில், மகிழ்வதற்கு (எழுச்சி கொள்வதையே, மனவெழுச்சி பெறுவதையே விடுங்கள்) எனச் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு. மிகப் பெரும்பாலான சமயங்களில், அன்றாட வாழ்க்கை என்பது n=n-1 என்றேதான் அலுப்பும் சலிப்புமாகப் போய்க் கொண்டிருக்கும். சில சமயங்களில் ஆத்தும சுகம் அளித்து ஆவிக்கு எழுப்புதல் நடக்கும் தருணங்களும் உண்டு, நல்லவேளை!
ஹ்ம்ம்… ஆக, நேற்று என் கனவில் அந்தப் பையன் இஸ்ரோ விஞ்ஞானியானதும், பின்னர் பேரும் புகழும் பெற்றதும், செப்டெம்பர் 5 வந்தவுடன், அடித்துப் பிடித்துக் கொண்டு என்னைத் தேடிவந்து காலில் விழுந்து (வாழ்த்த வயதில்லாத காரணத்தால்) வணங்கி குருவே வந்தனம், வணக்கம், நமஸ்தே, நமோஷ்கார், காஷ்மீர், ப்யூட்டிஃபுல் காஷ்மீர்… என, பின்னணியில் ஆனானப்பட்ட எம்ஜிஆரே ஓடியாடிப் பாடுவதும், என்னைப் புகழ்ந்ததும் அவருடைய வலது கை கைக்கடிகாரத்தை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்ததும்… பொய் சொல்லக் கூடாது. ஒரு கனவும் வரவில்லை. அடித்துப் போட்டாற்போலத் தூங்கினேன் அவ்வளவுதான்.
இன்று மற்றொரு நேற்றே! நாளை மற்றொரு இன்றே!!
ஆமென்.