பகபகத் சிங்: நான் ஏன் ஆத்திகன் ஆனேன்?
November 29, 2013
என் நண்பர் பகபகத் சிங் அவர்களின் ‘ நான் ஏன் ஆத்திகன் ஆனேன்’ என்கிற புத்தகத்தை அறிமுகம் செய்வதில், உள்ளபடிக்கே மிகவும் பெருமையடைகிறேன்.
இவரை நான் பல வருடங்களாக அறிவேன்; இவர் என்னுடன் வாய்-பாடு — அதாவது 2×3=8 == ரெண்ட் மூண் வொம்போத் வகையறா – ஆனால் தேவனுக்கு நன்றியுடன் சங்கீதமாகப் பாடுவது பாடுபொருள் — கற்றுக் கொள்கிறார்; ஏப்ரல் 1, 2014 அன்று சென்னை தாக்கர் பாபா பள்ளி வளாகத்தில் எங்களுடைய முதல் வாய்பாடுக் கச்சேரி எனத் திட்டம் வைத்திருக்கிறோம்; இவர் பெயரில் உள்ளது ஆங்கில sing – தமிழ் சிங், அதாவது அசிங் (-1 அல்லது -2) அல்.
ஒரு விண்ணப்பம்: கச்சேரிக்கு அலைகடலென ஆர்பரித்துத் திரண்டு வரவும்.
அதற்குள் மறந்து விட்டீர்களானால், மறுபடியும் சொல்கிறேன் – இந்தப் புத்தகத்தின் தமிழ் மொழித் தலைப்பு: வை டிட் ஐ பிகம் எ தீய்ஸ்ட்? – அதாவது ஆங்கிலத்தில்: naan yen aaththigan aanen?
சரி, தமிழுக்கு ஆங்கில வரிவடிவம் என்று ஆரம்பித்தால், நம் பச்சைகுத்தும் தமிழர்கள் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் நம் உடலில் தீய்த்து — வரிவரியாக வடிவம் வடித்துவிடுவார்கள் – அது மட்டுமல்லாமல் மனு ஒன்றையும் ஐநா சபை வரை சென்று கொடுத்துவிடுவார்கள் எனத் தெரியுமாதலால்… (தம்பி திருநீறு வால்க!)
.. இந்த பகபகத் சிங் அவர்கள், அந்த காந்தி செய்த துரோகத்தால் நாமெல்லாம் ஏற்கனவே அறிந்திருக்கும் பகத்சிங் — அல்லது சேங் – அய்யய்யோ, இது சைனாக்கார சேங் அல்ல – ஆங்கில sang தான் – அதாவது இறந்த காலம், அல்லது ரோ – உங்களுக்கு நம்முடைய செல்ல மேட்ரிஸீஸ் புரியுமானால் இது சுலபம்தான். … ஆனால், இன்னொரு ரோ-வை இங்கே ஆரம்பித்தால் நான் ரோதனையுடன் என் படகை ரோ செய்துகொண்டு ரொட்டீனாக ரோட்டோரக் கால்வாயில் ரொமான்டிக்காக ரோந்து சுற்ற வேண்டியதுதான்!
ஆ… என்ன சொல்லவந்தேன்? இந்த பகபகத், அந்த பகத் அவர்களுடைய ஒன்றுவிட்ட மாமாவின் கொள்ளுப் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்புத்தகத்தில், மகாமகோ பகபகத் அவர்களின் போதாத காலத்தில் — தமிழில் நகைச்சுவைப் பதிவு எழுதுகிறேன் என்கிற பெயரில் எதையோ எழுதி, அதைப் புரிந்து கொள்ளாமல், தட்டச்சுக் குளுவான்கள் எதையோ கற்பனைசெய்துகொண்டு கலந்தடிக்கும் பின்னூட்டங்களைப் படித்து அவற்றை எதிர்கொள்ள முடியாமல் கொள்ளெனச் சிரிக்க முடியாமல் மனம் பேதலித்து, பயப் பிராந்தியுற்று, வாழ்க்கையையே முழுவதுமாக வெறுத்து, கொள்ளிடத்திலிருந்து கொள்ளேகாலுக்கு நாலு கால் குதிரைப் (அழகர்சாமியினுடையது அல்ல, எழவாவது அறிவுடையதும் அல்ல – அது சீக்காளி) பாய்ச்சலில், குதிரையைக் கொள்ளே சாப்பிடவிடாமல் கொளைவெறியில் சவுக்கடி கொடுத்து, புறமுதுகிட்டோடி ஓடி — கடைசியில் எப்படி, ஒரு கொள்கைப் பிடிப்புள்ள ஆத்திகனானார் என்பதை விவரிக்கிறார். இது நெஞ்சைப் பிழியவைக்கும் சோகக்கதை என்றால் மிகையாயாகாது.
ஆனால் – பகபகத் அவர்களை நான் மிக, மிக நன்றாக அறிவேன். இதில் இரண்டு முக்கியமான விஷயங்களை எழுதாமல் விட்டிருக்கிறார். அவை யாவையென்றால்:
ஒன்று:
பகபகத் யோசித்து (அல்லது யோசிக்காமல்), தன் கற்பனைக்கழுதையைத் தட்டி, உசுப்பி, சவுக்கடி கொடுத்து நகைச்சுவை என்கிற பெயரில், மிக மிக முயற்சி செய்து எழுதுவதை விட — மிக அனாயாசமாக, ஒரு விதமாக முயற்சியும் செய்யாமல், ஏன், மூளையைக் கூட உபயோகிக்காமல், அசால்ட்டாக, வெகு இயல்பாகப் பலர் மகாமகோ நகைச்சுவைப் பின்னூட்டங்கள் இட முடிவது தான்.
பகபகத் அவர்கள் பொறாமையால் தான் கொள்ளேகால் சென்றிருக்கிறார்.
அவருடைய போதாமையால் தான், திகைப்பால்தான் புறமுதுகிட்டிருக்கிறார்.
அவர் ஆத்திகரானது, நம் வீரமிக்க பின்னூட்டக் காரர்களால் தான். நம் தன்னிகரிலாத் தமிழர்களின் வீரம் நானிலம் அறிந்ததே!
இளம் பின்னூட்டக் கன்று அறிவறியாது அல்லவா?
ஆத்திகத்தை ஊட்டி வளர்ப்பது — நம் மேற்குத்தொடர்ச்சிமலையுச்சிகளைக் கண்ட, அங்கிருந்து யூகலிப்டஸ் மரங்களைத் தஞ்சைக்குச் சரபோஜி மகாராஜாவின் தலையில் வைத்துக் கொண்டுவந்த — செந்தமிளர்களால் மட்டுமே முடியும் என்பது வெல்லிடை மளை.
இரண்டு:
தமிழர்களுக்கு நகைச்சுவையுணர்ச்சி குறைவு என்று பல காலங்களாகப் பலர் விஷம் கக்குகிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் அப்படியல்ல என்பதற்கு, பழுத்த நாத்திகராம் பகபகத் அவர்களையே ஆன்மிகராக்கியிருக்கும், நகைச்சுவையுணர்ச்சி மிக்க பின்னூட்டக்காரர்களே சான்று. ஆனால் இதனையும் குறிப்பிட மறந்தார், இந்த பகபகத் பகவத்பாத வடவர்.
-0-0-0-0-0-0-0-
என்ன இருந்தாலும் அய்யா, இது ஒரு முக்கியமான புத்தகம். தமிழில் வரவேண்டியது என்பதால், இதனையும் நானே மொழி பெயர்க்கிறேன். ஏதோ நம் ஆருயிராம், மூச்சாம், சங்காத மங்காம் தமிழுக்கு, என்னால் ஆன சேவை.
ஆனால், வரவிருக்கும் இப்புத்தகத்தின் அட்டைப்படங்கள் முதலானவை இன்னமும் தயாரிக்கப் படவில்லை. தயாரித்தவுடன் உங்களிடம் பகீர்ந்து கொள்கிறேன்.
நான் இப்புத்தகத்திற்கு முன்னுரையாக ‘நானும் ஏன் ஆத்திகன் ஆனேன்’ என ஒரு அழகான,அற்புதமான, இனமான, அடமானக் கட்டுரை எழுதியிருக்கிறேன். இதற்கு நான் நிச்சயம் அடுத்த வருட (ஜப்பானிய) சிறுத்தைட்சர் விருதைப் பெறுவேன் என்று என் நண்பர் ஜப்பானியப் பேராசிரியப் பெருந்தகையார் நிக்காதனார் கருதுகிறார். ஏன் இந்த தடவையே இந்தப் பிரபலமான விருதை, விருதாவான எனக்குக் கொடுக்கமுடியாதா என்று கேட்டதற்கு, அதனை அவருடைய இன்னொரு தமிழ் நண்பர் எழுதிக் கொண்டிருக்கும் நாவலுக்குக் கொடுக்கப் போவதாக முடிவு செய்து விட்டோமென்கிறார்! அய்யகோ!! வடை போயிற்றே!!!
எது எப்படியோ, தமிழ் படிப்பவர்கள் (நிச்சயமாக, அடிவயிற்றுக் கலவரம் கொடுக்கும் அந்தப் பின்னூட்டக்காரச் சிகாமணிகள் அல்ல) தொடர்ந்து ஆதரவை நல்கவும்.
நன்றி. வணக்கம்.
பின்குறிப்பு: இது பெருமை வாய்ந்த உழக்கு இம்ப்ரின்ட்டில் வெளிவரவிருக்கும் இரண்டாம் புத்தகம்.
பின்பின்குறிப்பு: தொடர்ந்து ஆதரவை நல்கும் பத்ரி சேஷாத்ரி அவர்களுக்கும், அவருடைய கிழக்கு பதிப்பகத்துக்கும், என் கடைக்கண் நன்றி.