இதுதாண்டா தமிழனின் பேராண்மை இழப்பீடு!
November 27, 2013
மன்னிக்கவும்: எனக்குக் கொஞ்சம் தேவைக்கதிகமாகவே வெட்கமும் அவையடக்கமும் உண்டு. என்னுடைய பெருமைகளை நானே தம்பட்டம் அடித்துக் கொள்வது என்பது, எனக்கு எப்போதுமே என்னவோ போலிருக்கும். இருந்தாலும் வழக்கம்போலத் தொடர்கிறேன்.
இரண்டு பதிவுகள் முன், ஒரு பின்னூட்டத்தில் திரு ‘ரவிக்குமார்’ அவர்கள், டெலக்ஸ் முறையில் (அல்லது தற்கால எஸெம்மீஸ் மொழியில்) அவருடைய உள்ளக் கிடக்கையை, ஒரு தமிழராகத் தம் சகோதரத் தமிழரை அறிய அவருக்கிருக்கும் ஆர்வத்தை, ஜெம்மொழி ஆங்கிலமொழிப் பின்னூட்டமிட்டு ஜெவ்வனே வெளிப்படுத்தினார்கள்: “sir, thankz for recomending book. plz tell when the book released.” இவர் ஒரு தகவல்தொழில் நுட்பத் தட்டச்சுக் குளுவானாகத்தான் இருப்பாரென்று என்னுடைய அனுமானம். ஏனெனில் இவருக்குத் தமிழிலும் எழுதமுடியவில்லை; ஆங்கிலத்தையும், பாவம் என்னைப் போல எழுதுகிறார். எழுதியதை இடஞ்சுட்டிப் பொருள் புரிந்துகொள்ளும் முனைப்பும் இல்லை. கொஞ்சம் வெள்ளந்தி மனிதரோ?
சரி… இதனால் வாழ்க்கையையே வெறுத்துவிட்ட நான், முதலில் அதற்கு விட்டேற்றியாக ஒரு பதில் அளித்திருந்தேன். ஆனால் அது சரியில்லை, நியாயமில்லை என்று தோன்றியதால, வேறு வழியில்லாமல் உண்மையைச் சொல்லிவிடலாம் எனத்தான் இந்தப் பதிவு. மன்னித்தருளவும்.
-0-0-0-0-0-0-0-0-
சரி. பேராசிரியர் நிகுமா நிகாதா அவர்கள் எழுதிய புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்தேன் (=: ‘தமிழர்களின் பேராண்மை இழப்பீட்டுக் கோட்பாடு’ (‘The Theory of Compensatory Machismo of Tamils née Dravidians‘ / Professor Nikma Nikatha, Department Tamil Studies, Tokyo University, Japan / Sluts & Zen Press / 2013); அந்த மிக முக்கியமான மானுடச்சமூகவியல் புத்தகத்தின் அட்டைப் படத்தைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

இந்த ஸ்லட்ஸ் & ஸென் பதிப்பகம் பல விளிம்பு நிலை ஜென் துறவிகளைப் பற்றிய இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ம் வகையறா புத்தகங்களை – அவர்கள் பொதுவாக வேசிகள் பின்னால் அலைந்துகொண்டிருந்ததை, எதிர்க் கலாச்சார, அகலாச்சார, கட்டுடைப்பு, ஃபூக்கோ வான்கவிக்கோ என ஆராய்ச்சிகளை வெளியிட்டு வரும், புகழ் பெற்ற, ஃபோர்ட் ஃபௌண்டேஷன் உதவிபெற்ற ஜப்பானிய பதிப்பகம். இதனைப் பற்றி நான் முன்பே எழுதியிருக்கிறேன் அதுவும், இப்பதிப்பகத்தை நான்தான் முதலில் தமிழர்களுக்கே அறிமுகம் செய்தவன் என்பதையும் தன்னடக்கம் ததும்பும் கர்வத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலதிகமாக, பேரா. நிக்காதனார் அவர்களின் புத்தகத்தில், ஒரு சகோதரத் திமிறியெழும் கட்டுடைக்கும் தமிழனை அட்டையில் போட்டிருப்பதானால் எனக்கும் பெருமைதான்!
இதன் தமிழ் மொழிபெயர்ப்பு அடியேனால் முடிக்கப்பட்டு, வரும் 2014 சென்னைப் புத்தகச் சந்தையில் வெளியடப் படவுள்ளது. இப்பதிவைப் படிக்கும் அனைவரும், இதனை வாங்கி, தமிழகத்தில் தொலைந்து கொண்டிருக்கும் பேராண்மையைக் காப்பாற்றவேண்டும்.
ஏனெனில் புத்தகவிற்பனையில் ஐந்து விழுக்காட்டை, பத்ரி அவர்கள் தமிழக முதலமைச்சரின் ‘தமிழாண்களுக்கு உடும்புத் தைலம் தலா ஐந்து கிராம் இலவசம்’ எனும் மகத்தான சமூக முன்னேற்றத் திட்டத்திற்கு நன்கொடையாகக் கொடுக்கப் போகிறார் என அறிகிறேன். இதுவல்லவோ CSR?
சரி. இப்புத்தகத்தின் அட்டைப்படம் கீழே:
நிற்க, இப்புத்தக வெளியீட்டு விஷயத்தில், பத்ரி சேஷாத்ரி அவர்களுடன், எனக்குச் சிறிது மனத்தாங்கலாகி விட்டது. இதற்கு முக்கியமான காரணம்: அவர் இப்புத்தகத்தை வெளியிடுவது கிழக்கு பதிப்பகம் மூலமாக என்று, முதலில் சொன்னார். ஆனால் இப்போது இப்புத்தகம் உழக்கு பதிப்பகம் என்ற இம்ப்ரின்ட் வழியாகத்தான் வருகிறது.
கேட்டால், இம்மாதிரிப் பெயர்ப்பு வகையறா அக்கப்போர்ப் புத்தகங்களுக்கு என்று தனியாக ஒரு இம்ப்ரின்ட் ஆரம்பித்திருக்கிறேன் – அதுதான் உழக்கு – என்கிறார். மேலும் நான்கு உழக்குகள் சேர்ந்தால் ஒரு படி. படி என்றால், அளப்பதை அளந்து படி. அதாவது, அளக்கப்பட்டதை ஆழ்ந்து படி. உழக்கு போல இருந்தாலும் தள்ளுபடியில் வாங்கியதைப் படித்தால் அதிகப்படியாகலாம், வள்ளுவனே சொல்லியிருப்பது போல (‘உழக்குண்டு வாழ்வாரே வாழ்வார், மற்றவரெல்லாம் கொழுக்கென்று வழுக்குபவர்’) என்றெல்லாம் ஒரு பின்நவீனத்துவ வியாக்கியானம் கொடுக்கிறார்.
இப்படியே இவர் சொல்வதைக் கேட்டு யோசித்தால் எனக்கு உள்ளபடியே இவர் எப்படி என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. ஆனால் ஏதோ முக்கியமாகச் சொல்கிறாரென்று படிப்படியாகப் புரிகிறது. இருந்தாலும் இவர் நன்றாகவே ஆங்கிலம் பேசுகிறார். வெளி நாட்டுப் படிப்பெல்லாம் வேறு படித்திருக்கிறார். தொலைக்காட்சியிலெல்லாம் வருகிறார்; சில விஷயங்களைப் படித்துப் படித்துப் பொறுமையாகச் சொல்கிறார். இவையனைத்தையும் விட முக்கியமாக, இவருக்குத் தோல் நிறம் கொஞ்சம்போல வெள்ளை. ஆக, இவர் சொல்வது சரியாகத் தான் இருக்கும்.
… ஆகவே, பின்னர் ராசியாகி விட்டோம். ஆக, என்னுடைய மொழிபெயர்ப்புப் புத்தகம்தான் உழக்கு-வின் முதல் புத்தகம் என்பதில் எனக்கு, மிகமிகப் பெருமைதான்! 8-)
சரி, புத்தகத்து ஜாக்கெட்டின் பின் அட்டை:
உங்களுக்கு, இந்த ஜாக்கெட் பின்புறத்தில் என்ன எழுதியிருக்கிறது என்பதைச் சரியாகப் படிக்கமுடியாது என்று எனக்குத் தெரியும். ஆகவே, இவ்வரிகளைத் திரும்பிக் கீழே கொடுத்திருக்கிறேன். என்னை மதித்து, ப்லர்ப் சரியாக அமைவதற்காக, சிறு மதிப்புரைகள் வழங்கிய கீழ்கண்ட அனைவருக்கும் நன்றி பல…
பின் அட்டைக் குறிப்பு:
“இந்தப் புத்தகத்தைத் திறந்தவுடன் அது என்னைப் படிக்க ஆரம்பித்தது. என்னைப் படித்த அதனை நான், கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு தன்னைப் படிக்கும் கண்களை, இந்தப் புத்தகம் இப்படிக் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் என என் கண்கள் நினைத்ததால், தமிழுக்கு முக்கியமான ஒரு புத்தகம் இது.”
— எஸ் ராமகிருஷ்ணன்
“இந்த நிக்மா நிக்காதனார் அவர்களை, நான் பிறப்பதற்கு முன்பிலிருந்து அறிவேன். அவர் என் ஸீரோ டிகிரி-யைப் படித்துவிட்டு, இது ஜப்பானில் வெளிவந்திருந்தால், இது நிச்சயம் புலிட்ஸர் விருதிற்குச் சமமான ஜப்பானிய சிறுத்தைட்ஸர் விருது வாங்கியிருக்கும் என்று சொன்னார். நான் ஒரு பெரிய பேராண்மைக்காரன்; ஆகவே பேராண்மை பற்றிய எந்தப் புத்தகத்தையும் பரிந்துரைப்பேன். தினமும் கடுக்காய் கஷாயத்தை பனங்கல்கண்டுடனோ அல்லது பனங்குமுதத்துடனோ, இவையிரண்டும் கிடைக்காவிட்டால் பனங்குயிர்மையுடனோ கொஞ்சம்போல ஈசல்களைத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் நின்று ஆடும் என்பதை நேரடி அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். ஆகவே அவசியம் இந்தப் புத்தகத்தைப் படியுங்கள்.”
— சாரு நிவேதிதா
“திரு நிக்காதனார் என்பவரை இது வரை நான் கேள்விப் பட்டதேயில்லை. நமது பகுத்தறிவு புகட்டும் கல்வியுலகத்தின் போதாமைதான் இது. இந்தப் புத்தகத்தை இரண்டு வழியாகப் புரிந்து கொள்ளலாம். ஒன்று தமிழரின் பேராண்மை, இன்னொன்று – பேராண்மையின் தமிழ். தமிழரின் பேராண்மை பற்றிப் பல புத்தகங்கள் வந்துள்ளன. குறிப்பாக சாண்டில்யன், கருணாநிதி, புஷ்பா தங்கதுரை போன்றோர் பல்வேறு கோணங்களிலிருந்து இதனை அணுகியிருக்கின்றனர் என்பதைச் சொல்லலாம். ஆனால், பேராண்மையின் தமிழ் என்பது மெட்றாஸ் பாஷை என அறியப் படுவது – இது பற்றி நிக்காதனார் ஒன்றுமே சொல்லவில்லை என்பது ஒரு சிறு குறையே. ஆனாலும், என்னுடைய நண்பர் ராமசாமி இதனை நன்றாக மொழி பெயர்த்திருக்கிறார். தமிழ்ச் சிந்தனையை, ஆண்மிக மிகையாண்மை தரிசனங்களை, அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும் புத்தகங்களில் இது முக்கியமானதொன்று.”
— ஜெயமோகன்
“ஏழைக் குமாஸ்தாப் பார்ப்பானை எங்கு சென்றாலும் விடமாட்டாய்ங்க. ஆனால் பாப்பான்களெல்லாம் ஒழுங்கா? மயக்கத்துக்கும் முயக்கத்துக்குமான இடைவெளிகளில் சிந்திக்கும்போது விஷ்ணுபுரக் குழுமக் குசும்புகள், ஈ வேராவா எஃப் வேராவா அது வேறோ இது வேரா அது மரமா எனஜ் ஜோடனைகள் சார்ந்த விவாதத்தில் சிக்கி — சின்மயி ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே… இன்னாடா ராஸ்கோல், ஒரு கருத்தும் இல்லை, போடாங்.”
— விமலாதித்த மாமல்லன்
“இந்தப் புத்தகத்துக்கு ஒரு அட்டைப்படம் இருக்கிறது. பின்னர் அரைமுகப்புப் பக்கம், முகப்புப் பக்கம், உள்ளடக்கம் உள்ளன. நிறைய அடிக் குறிப்புகள் உள்ளன. 10 பின்னிணைப்புகளும் இருக்கின்றன. உழக்கு பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது. இதைப் படிப்பவர்களுக்கு அரிய செய்திகள் பல கிடைக்கின்றன. கனம் 1.2 கிலோ. பக்கங்கள் 499; விலை ரூ 999/-; பக்கத்துக்கு சுமார் இரண்டு ரூபாய்.”
— பரக்கத் அலி ( ‘துக்ளக்’ பத்திரிகை)
“அன்புத் தம்பி எழுச்சிவேங்கை இளம் தமிழர் தலைவர் இளவல் சீமான் அவர்களின் அட்டைப் படத்தைத் தாங்கி வந்துள்ள இப்புத்தகத்தினைப் படிக்கும் ‘அவாள்’களுக்கெல்லாம் சாட்டையடி கொடுத்திருக்கிறாரே இந்தச் சப்பான் தேசச் சான்றோர், பகுத்தறிவு மாலையவர் அண்ணார் நிக்காதனார் அவர்கள், எனப் பேருவகையடைகிறேன்!! தமிழறிஞர் நிக்காதனார் சற்றொப்ப 40 வருடங்களுக்கு முன்பு பெரியார் காலடியில் அமர்ந்து இனமானத்தின் அரிச்சுவடியைக் கற்றவர் என்பதை, பக்கத்தில் அமர்ந்திருந்த நானும் கலைஞரும் பிரமிப்போடு பார்த்திருக்கிறோம். ஆகவே, பார்ப்பனப் புல்லர்களை திராவிடக் காளைகள் சாப்பிடும் நாள் வெகு தூரத்தில் இல்லை என முழங்கி, இவ்வறிய புத்தகத்தை நமக்கு மொழி பெயர்த்தளித்த மூதறிஞர் ராமசாமியார் அவர்களை திராவிடம் கண்ணுள்ளவரை வாழ்த்தும், காதுள்ளவரை பேசும், வாயுள்ளவரை முகரும், மூக்குள்ளவரை பார்க்கும் என வாழ்த்தி இனி இப்புத்தகத்தைப் படிப்பேன் என உறுதி கூறுகிறேன்.”
— மானமிகு ‘விடுதலை’ கி. வீரமணி.
-0-0-0-0-0-0-0-0-0-
ஜாக்கெட்டின் உள்பக்கம்: (எழவெடுத்த தமிழர்களே! நான் புத்தகத்தினுடையதைச் சொல்கிறேன் – உங்கள் கந்தறகோள பேராண்மைத் தினவெடுத்தலை, தமிழ்த் திரைப்படக் கதாநாயகிமார்களைப் பற்றிய காமச் சித்திரங்கள் விரிவதை — மட்டுப் படுத்திக் கொள்ளவும்)
புத்தகஜாக்கெட்டின் உள்பக்கக் குறிப்புகள்:
பேராசிரியர் ‘கலைமாமணி’ நிக்மா நிகாதானார் சப்பான் நாட்டுத் தமிழ்ச் சான்றோர். தொல்காப்பியத்துக்கு சப்பானிய உரையொன்றையும், அந்த உரையை ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தும் (இது இரன் அண்ட் மார்ட்டின் என்கிற ஆங்கில இலக்கணப் புத்தகமாக புகழ்பெற்று, அறியப்படுகிறது) அறிவுலகத்திற்கு பலவாறாக சேவைஇடியாப்பம் செய்திருக்கிறார். இவருடைய வழிகாட்டுதலின் பேரில் நடந்த தமிழ்மொழி செம்மொழி மாநாடு, பல உச்சங்களைக் கூச்சமில்லாமல் தொட்டதை தமிழுலகம் அறிந்து விரைத்து விடைத்து விதிர்விதிர்த்து வியந்தது நமக்கெல்லாம் தெரிந்ததே.
இவருக்கு மனைவி, துணைவி, தோழி, சேடி, பங்குதாரர், பக்கத்து வீட்டினர் என அறுவர் வாழ்க்கைத் துணைகள். இத்துணைகளிடம் தலா இரு குழந்தைகள் பெற்று – சப்பானிய மேற்படிப்புலகத்தை பனிரெண்டு மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொன்றிற்கும் ஒரு தனையனை மண்டல நாயகனாக நியமித்திருக்கிறார். இந்தத் தனையர்கள் அனைவர்கள் பெயர்களில் ‘நிக்கும்’ என்ற வார்த்தை சேர்க்கப்பட்டு அவர்களுடைய வீரியத்தையும். அவர்தம் தந்தையின் வீரியத்தையும் குறிப்பது வெள்ளிடை மலை.
மூடறிஞர் வெ. ராமசாமி அவர்கள், முன்னோடி மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர். பல ஆங்கிலக் கதைகளை லிஸ்ப் மொழியில் புத்துருவாக்கம் செய்திருக்கிறார். சப்பானிய மொழியில், தொல்காப்பியத்துக்கு பேராசிரியர் நிகாதனார் எழுதிய உரையை, மறுபடியும் தமிழில், அதுவும் அவருக்கே உரித்தான அழகு கொஞ்சும் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். இதற்கு (‘க்ரியாவின் கற்காலக் கல்லகராதி’ ) இவர் அஞ்ஞானபீடை விருதைப் பெற்றிருக்கிறார். அழகு தமிழில் இவர் தன்னுடைய வலைப்பூவில் எழுதும் கட்டுரைகளைப் படிக்கத் திரளும் கூட்டமானது, அவர் எழுதும் கட்டுரைகளின் நீளத்தினால், அடர்த்தியினால், மூளைக் குடைச்சல்களினால் – பிற தளங்களுக்குக் கதிகலங்கி வீரப்புறமுதுகிட்டு விரைந்தோடும் காட்சி காணக்காண அலுக்காததொன்று.
இவருக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது என்பது ஒரு ஆச்சரியகரமான உண்மை.
-0-0-0-0-0-0-0-0-
பின்குறிப்பு: அய்யா ‘ரவிக்குமார்’ அவர்களே! எல்லாம் உங்களால் வந்தது. தயவு செய்து, த ய வு செ ய் து, ungalukku ithu sariyaagap puriavillaienraal, thayavu seithu, இன்னொரு முறை நீங்கள் முன்னம் பின்னூட்டியது போல். இந்தப் பதிவுக்கும் பின்னூட்டமிடாதீர்கள் – எனத் தெண்டனிட்டு விஞ்ஞாபனம் செய்து கொள்கிறேன்.
-0-0-0-0-0-0-0-0-
இந்தப் பதிவு: தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (8/n)
மேலும், அடுத்தது… தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (9/n)
தொடர்புள்ள பதிவுகள்: தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??
November 28, 2013 at 07:43
:-)
November 28, 2013 at 21:09
அது சரி எப்போ புக் வருது. ;)
November 28, 2013 at 08:05
இந்தப் பதிவில் இரண்டே இரண்டு ப்ராக்கெட்கள்தான் உள்ளன. இனமான டமிலர்கலின் நள்வால்வுக்கெதிரான இது ஆரிய சதியா? திராவிட விதியா? அடைப்புக்குறிகள்மீது அடக்குமுறையை ஏவிவிட்ட தற்குறிகளை அடையாளம் காட்டி சமூக நீதியை நிலைநாட்டும்படி வேண்டிக் கொள்கிறேன்.
இவண்,
டமிலர் எலுச்சிப்படை, 23456வது வட்ட செயலாலர்
புர்ச்சி அடலேரு ஆனந்தம்.
November 28, 2013 at 08:59
I HAVE USED WREN AND MARTIN IT IS A ENGLISH GRAMMAR BOOK. IT IS NOT TRANSLATED FROM JAPAN. U BLAME YUVA FOR NOT CHECKING INFORMATIONS. U FIRST CHECK FACT BEFORE WRITING.
November 28, 2013 at 12:42
இப்பதான் ஒத்திசைவார் ரவிக்குமாரனாருக்காக ஒரு பதிவு போட்டு முடிச்சிருக்கார். அதுக்குள்ள அனானிமஸார்… கடவுளே………… முடியல…….
November 28, 2013 at 20:54
MUDIYALA. ;)
November 28, 2013 at 20:59
பதிவைவிட Response செம காமடி. அண்ணனுக்கு ஓரு புக் பார்சல்,
November 28, 2013 at 21:05
WREN AND MARTIN அப்பாவியா, அடப்பாவியா..
November 29, 2013 at 06:24
இந்த கேஸை விசாரிக்க போனா பல விஷயங்கள் வெளியில வரும் போல இருக்கு. சார், நீங்க எங்கேயோ போயிட்டீங்க :-)
November 29, 2013 at 18:52
:-)))
November 29, 2013 at 19:54
என்னதான் நீங்கள் அவ்வப்போது சுஜாதாவை கலாய்த்தாலும், இந்த பின்னூட்டங்களைப்பார்க்கும்போது அவரது ஒரு வைரவரி தான் நினைவுக்கு வருகிறது….
” தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்ச்சியே கிடையாது ”
November 29, 2013 at 20:48
அய்யா ‘சான்றோன்’ அவர்களே, அடுத்த சாளரம் நீங்கள் அடைப்புக் குறிக்குள் சொல்லியிருக்கும் விஷயம்தான். :-(
உண்மையில், சிலசமயம் எனக்கு, இந்த ஒன்றுமே புரிந்து கொள்ளாமல் பின்னூட்டமிடும் சிலருடைய காதைத் திருகித் தலையில் குட்டி, கன்னத்தில் இரண்டுஅறை கொடுத்து யோசீங்கடா வெட்டிப் பசங்களா என்று சொன்னால் என்ன என்று நினைப்பதைத் தவிர்க்க முடிவதில்லை. என்ன செய்வது சொல்லுங்கள். :-((
அலுப்பாகவே இருக்கிறது. ஆனால் இதிலும் சிறிதளவு நகைச்சுவை இருக்கிறதுதானே? 8-)
November 30, 2013 at 08:25
2014-புத்தகக் கண்காட்சியில் உழக்குப் பதிப்பகத்தின், “எழுச்சிவேங்கை இளவல் சீமான்” அட்டையில் இருக்கும் மற்றும் வெ. ராமசாமி அவர்கள் WREN AND MARTIN பற்றித் தவறான தகவலை அளிக்கும் அந்த நூலை கேட்டு திரு பத்ரி அவர்களை யாரும் தொந்தரவு செய்யாத வரை.. சுபம் :-)
-ரமணன்
November 30, 2013 at 17:28
Why not? இந்த தொடர் புத்தகமாக வந்தால் கூட சுவாரஸ்யம்தான். ;).பாருங்க உங்களுக்கு உடும்புதைலம் வேற கிடைக்கும். ;)
யார் சொன்னா தமிழனுக்கு நகைச்சுவை உணர்ச்சி இல்லை என்று ?
(பழமொழி) சொன்னா அனுபவிக்கனும் ஆராயகூடாது.
November 30, 2013 at 09:49
பேராசிரியர் நிகாதா புகைப்படம் சூப்பர் (யார் அவர்? போட்டோ எங்கிருந்து பிடிச்சீங்க?). பரக்கத் அலியின் விமர்சனமும் நன்றாக உள்ளது :-)
திரிஷா, அனுஷ்கா போன்ற கலைமேதைகளின் வரிசையில் இவருக்கும் கலைமாமணி பட்டம் அளித்தது சொல்லொணா மகிழ்ச்சி தருகிறது :-)
November 30, 2013 at 10:23
அப்படம், நிக்காதனார் அவர்களுடையதுதான்; சில காலம் அவர் குரஸாவா அகிரா என்கிற பெயரில் மாறுவேடத்தில் வளையவந்து கறுப்புக் கண்ணாடியுடன் ஜப்பானிய இனமானம் என்று பேசிவந்து சில திரைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது எடுத்த படம் அது.
பேராசிரியர் நிக்காதனார் அவர்களின் துக்கிரித்தனத்துக்கு அளவேயில்லை. :-(
நீங்கள் குறிப்பிட்ட அம்மணிகள் கலைமாமணி பட்டம், மாஞ்சா நூல் பெற்றுவிட்டார்களா என்ன! எனக்கு மயிர்க்கூச்செறிகிறது!!
November 30, 2013 at 11:19
ஒ! அகிரா குரசோவா? நான் இவரை பற்றி அங்கே இங்கே கேள்விபட்டிருந்தாலும், இதற்கு முன் இவரது படத்தை பார்த்ததில்லை. இவர் எடுத்த படத்தையும் பார்த்ததில்லை. இந்த கட்டுரை புண்ணியத்தில் இப்போது பார்த்தாயிற்று.
கலைமாமணி வாங்கியோர் வரிசை மிக நீண்டது. இது வரை வாங்கியோர் அனைவரையும் உள்ளடக்கிய பட்டியல் இணையத்தில் உள்ளதா என தெரியவில்லை. சாம்பிள் பட்டியல் கீழே.
http://www.valaitamil.com/kalaimamani-awards-1991-2010_10578.html
அனுஷ்காவுக்கு 2010 இல் வழங்கப்பட்டது. உடன் விருது பெற்ற மற்றொருவர் தமன்னா. 2009 இல் எழுத்தாளர் ஆ மாதவனுடன் விருது பெற்ற மற்றொருவர் சின்னத் திரை கலைஞர் தேவிப்ரியா. 2006 இல் த்ரிஷாவுக்கும், 2008 இல் மிமிக்ரி கலைஞர் ரோபோ சங்கருக்கும் தந்தபின் 2009 இல் சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர்கள் சா கந்தசாமி, நாஞ்சில் நாடன் ஆகியோருக்கு வழங்கி உள்ளனர். இதே வருடம் விருது பெற்ற மற்ற இருவர் சின்னி ஜெயந்த், மற்றும் சின்னத் திரை கலைஞர் மாளவிகா.
என் தகுதிக்கு நான் அகிரா குரசோவா படத்தை முன்னே பார்த்ததில்லை. உங்கள் தகுதிக்கு அனுஷ்கா, தமன்னா படத்தை பார்த்திராமல் இருக்க வாய்ப்புண்டு. உங்கள் வசதிக்காக இவர்கள் படங்கள், மற்றும் நாஞ்சில் நாடன், சா கந்தசாமி ஆகியோர் படத்தையும் இந்த தளத்தில் கண்டு இன்புறலாம்:
http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=357:2011-01-30-19-12-16&catid=1:2010-07-12-16-58-06&Itemid=19
November 30, 2013 at 14:17
மிக்க நன்றி. அம்மணி த்ரிஷா அவர்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் மற்ற பெயர்களைப் பற்றிய அறிமுகமில்லை. உங்கள் தயவில் குருவருள் கிடைத்தது. மன இருள் அகன்றது.
சவுக்கு தளத்திற்குச் சென்றால் பக்கமுழுதிலும் உள்ள சிகாம்மணிகளின் உடலுறுப்புகளின் அணிவகுப்பு. பின்னால் நின்றுகொண்டு என்னுடன் படித்துக்கொண்டிருந்த என் மகள், என்னைப் பார்த்துக் கிண்டலாகச் சுட்டெறிப்பு. நான் உடலை ரசிக்காதவனில்லை – ஆனாலும் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. இன்னும் நாம் கலைமாமணி பெறாததுதான் பாக்கி. என்னுடைய ஒருகால நண்பன் (’தோழன்’) இவ்விருதுகளை எச்சக்கலைமாமணி எனத் துச்சமாகப் பேசியது நினைவுக்கு வருகிறது.
உங்கள் நகைச்சுவையுணர்ச்சி/தற்கிண்டலுக்கு அப்பாற்பட்டு – நீங்கள், குரஸாவா அகிரா படங்களை அவசியம் பார்க்கவேண்டும் – அவற்றில் யொஜிம்பொ, இகிரு, ஷிசினின் நொ ஸாமுராய், காகெமுஷா, ரன், ஆகாஹிகெ, ரஷோமொன் – மிக முக்கியம்.