ஃமுக ‘ஃபிஸிக்ஸ் ஸ்டார்’ ஃபெய்ன்மன்னார்சாமியார் வால்க!
November 4, 2013
பத்ரி சேஷாத்ரி (என நினைக்கிறேன்) அவர்களுடன் ஒரு முறை (பொதுவாக, நம் கல்லூரிகளில் அறிவியல் போதிக்கப்படும் நிலை பற்றி பல கோணங்களினூடே) பேசிக் கொண்டிருந்த போது – அவர் சொன்னார்: நம் தமிழ் சினிமாவில் யாராவது ஹீரோ அல்லது ஹீரோயின் ரிச்சர்ட் ஃபெய்ன்மன் போன்றவர்களைப் பற்றிப் பேசுபவராகவோ அல்லது படிப்பவராகவோ காண்பிக்கப் பட்டால் ஒருவேளை நாம் ஆவலுடன் இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சிப்போமோ? மேலெழும்பி வருவோமோ?
சில சமயம், இதைப் பற்றிக் கொஞ்சம் யோசிக்க முயற்சி செய்திருக்கிறேன். சில நாட்கள் தூக்கமின்மையால் புரண்டு புரண்டு படுத்து, படு பயங்கரக் கனவுகள் சிலவும் கண்டிருக்கிறேன்.
மேலும் — சினிமாவிமர்சனம், சினிமாவிமர்சனமாக எழுதித்தள்ளும் மனிதர்களைக் கொஞ்சம் பொறாமையுணர்ச்சியுடனேயே பார்க்கும் நான், சில சமயம், கண் துஞ்சாது, மெய்வருத்தம் பார்க்காது சினிமாசினிமாவாகப் பார்த்து — விமர்சனமெல்லாம் உடனுக்குடன் அமர்க்களமாகச் செய்வதாகவெல்லாம் கனவு கண்டிருக்கிறேன். அதில் ஒன்று…
‘எங்கும் தமிள், ஏங்கும் டமில்’
— புதிய படத்தின் ’சுடச்சுட’ விமர்சனம்
‘ஸ்டேட்ஸ்’ போய் பெரிய எம்பிஏ படிப்பெல்லாம் படித்த — தற்போதைக்கு ஒரு 100 ஸ்டார் ஹோட்டல் முதலாளினி கதாநாயகி (மலையாள அல்லது தெலெகு அல்லது வடநாட்டு மாதரசி) தமிள்ள கொஞ்கொஞ்சிப் பேஸ்றார்.
மேலதிகமாக, இவர் ஒரு பண்ணையாரின் செல்லப்பெண்; ஆனாலும், படம் முழுதும், ஒரு சிறு கைக்குட்டைத் துணியிலேயே உடலைப் போர்த்திக் கொள்ளவேண்டிய படுபீதியளிக்கும் ஏழ்மையில் உழல்பவர்.
கதாநாயகன் ‘ஃபிஸிக்ஸ் ஸ்டார்’ ரிச்சர்ட் ஃபெய்ன்மன் – நொபெல் பரிசுக் கனவுகளுடன் வளையவரும் ஒரு குக்கிராம ஏழை இயற்பியல் வாத்தியார்,
ஃபெய்ன்மன் அப்பா பாத்திரம் — நாஸர், இவர் ஒரு நக்ஸலைட். (அடிக்கடி, இவருடைய சீரிய, கூரிய மூக்கானது, பக்கவாட்டில் காண்பிக்கப் பட்டு அது மார்ஃப் செய்யப் பட்டு அது ஒரு அரிவாளாக மாறுவது, பின்னர் அது சுத்தி சுத்தி வந்து அரிவாள்-சுத்தி சின்னமாகி பேரோசையுடன் வெடித்துப் புகைமண்டலத்தை எழுப்புவது – அந்தப் புகை மண்டலத்திலிருந்து ஹீரோ மிதந்துகொண்டு வருவது, நம் மூக்கிற்குள் விரலை நுழைத்து ஏகத்துக்கும் நோண்ட வைக்கிறது; கிராஃபிக்ஸில் அசத்தியிருக்கிறார்கள் – தியேட்டரில் ஃபெய்ன்மன் விசிறிகளின், புனிதலாகிரி விசில் சப்தம் சதா எழும்பியவண்ணம் இருக்கிறது. நிச்சயம், இந்தப் படம் குறைந்த பட்சம் 10 ஆஸ்கர் பரிசுகளை அள்ளும்தான்!)
அடாவடிப் பண்ணையாராக — விஜயகுமார், இவர் ஒரு நக்ஸடார்க். (இவர் சாருநிவேதிதா மஸூம்தார்தேவி என்கிற பெயரில் ஒரு படுபயங்கர பின்நவீனத்துவ கொள்ளைக் கூட்டத்தை நடத்தி, காணக் கிடைத்ததையெல்லாம் விளிம்பு நிலையிலிருந்து ஆரம்பித்து கட்டுடைப்பு செய்வதை, பாலியல், மோரியல், தயிரியல் இன்னபிற வன்முறைகள் செய்வதை லூஸ்மோஷனில் காண்பிப்பது ஒரு புதிய உத்தி)
… முந்தைய தலைமுறையில், இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் நடந்த போர், எப்படி அடுத்த தலைமுறையில், காதல் மூலமாக வெல்லப் படுகிறது என்பதை, தத்ரூபமாக, இயல்பாக, இனிப்பாக (கவனிக்கவும்: வெல்லப் படுதல், சர்க்கரைப் படுதல்…) எடுத்துச் சொல்கிறார் டைரடக்கர்.
தமிழகத்தில் எங்கே காதல் செய்தாலும், சாதிக்காத சாதிக்கட்சிகள் வேலைவெட்டியற்று எதிர்க்கும் (அல்லது அய்யய்யோ, ஆதரிக்கும்) — தகப்பனார் சர்வ நிச்சயமாகத் தூக்கில் சாதல், ஊளையிடும் ஊடக ஊதல் என்றெல்லாம் தங்கள் உண்மைக் கண்ணீர்க்கதை விரியும், என்பதால் – கதாநாயகியும் நாயகனும், நைஸாகக் கழன்றுகொண்டு, எப்படி ஆஸ்ட்ரேலியா, கனடா, ஸ்விட்ஸர்லாந்தெல்லாம் சென்று காதல் செய்கிறார்கள் என்பதை செல்லுலாய்டிய கவித்துவமாகச் சொல்வது இந்தப் படம்.
கொஞ்சம், அந்தப் பாவப்பட்ட ஸஹாரா பாலைவனத்தில் ஒட்டகம், ஒட்டாத கோந்து சகிதம் ஒரு குத்தாட்டமும் வைத்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்குமே என்கிற எண்ணத்தை எனக்குத் தவிர்க்க முடியவில்லை, இங்கு. :-(
… இடைவேளையிலிருந்து படம் சூடு பிடிக்கிறது. நொபெல் பரிசை வெல்வதற்காக, ஃபிஸிக்ஸ் ஸ்டார் , மற்ற விஞ்ஞானிகளுடன் சண்டை போட்டு, க்ளைமேக்ஸ் காட்சிகள் – ஆல்ஃப்ரெட் நொபெல்லின் வெடிகுண்டுத் தொழிற்சாலையிலேயே நடப்பது என்பது இதுவரை தமிழ்ப் படத்தில் காணக் கிடைக்காத காட்சி.

அல்ஃப்ரெட் நொபெல் அவர்களின் நைட்ரோகிலிஸெரின் வெடிகுண்டுத் தொழிற்சாலை (ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்). கட்டடத்தை நோக்கி ஆவேசமாக ஓடிக் கொண்டிருப்பவர்தான் ஃபிஸிக்ஸ் ஸ்டார். பிற்காலத்தில் இரண்டு குடைகளுக்குக் கீழ் தமிழகத்தையே ஆளப்போகிறார் எனப் பொடிவைத்துச் சொல்கிறார், நம் டைரடக்கர்; அந்த இரு வெள்ளைக் குடைகளைப் பார்த்தீர்களா? (http://www.travelblog.org/Photos/1635643)
தமிழ்த் தலைப்புள்ள தமிழ்ப் படமாதலால், தமிழ்க்கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்ட காரணத்தால், படம் முழுவதும் இவர்கள் இருவருக்கும் தமிள் சரியாகவே பேசவரக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் காட்டப் பட்டிருப்பது, மிகவும் மெச்சத்தகுந்ததே.
திரைச்சதை, இயக்கம்: பம்ப்கின்.
திரைஓசை: ஏ ஈஸ் ரஹ்மான்.
பாடல்கள்: பழநிபாரதி திருப்பதிசாரதி.
ஒளிப்பதிவு: காமிரா.
சண்டைப் பயிற்சி: தோட்டா தரணி.
கலை: மான்.
எடிட்டிங்: மாலினி பார்த்தசாரதி.
விளம்பரம், மாக்கள் தொடர்பு: வெ. ராமசாமி.
ஒரிஜினல் கதை: வழக்கம்போலச் சுடப்பட்டதுதான், கவலையே படாதீர்கள்.
-0-0-0-0-0-0-0-0-
இந்தப் பட ஹீரோதான், பிற்காலத்தில் – அதாவது, 2040களில் – ரிச்சர்ட் ஃபெய்ன்மன்னார்சாமியார் என திராவிடவிரிக்கப்பட்டு, பின்னர், ‘ஃபிஸிக்ஸ் ஸ்டார்’ ரிச்சர்ட் என விளிக்கப்பட்டவர் ஆனதால் – ஒருவழியாக, இவர் பெயர் ‘பிஎஸ்ஆர்’ எனச் சுருக்கப்படுகிறது.
இப்படிக் குறுக்கப்பட்ட பெயருடையவர்கள் தமிழக அரசியலில் கோலோச்சுவதுபோல, இவரும் ‘ஆரிய மசால்தோசைய தம்பி திராவிட பின்னேற்றக் கலகம்’ (ஆமததிபிக) கண்டு… கீழ்க் கண்ட கட்சிக் கூறுகளை, நம் கூறுகெட்ட தமிழர்கள் மத்தியில் பரப்புகிறார்.
உலக அரங்கில் கட்சியின் பெயர்: ஃபிஸிக்ஸ் முன்னேற்றக் கழகம் (ஃமுக) [குறிப்பு: இது முதலில் பிமுக என்றிருந்தது; ஆனால் இது கொஞ்சம் அசிங்கமாக இனவிரோதிகளால் உச்சரிக்கப் பட்டதாலும், பி என்பது மெய்யாலுமே ஃபி என்பதாலும், மேலதிகமாக ஃ என்பது ஆயுத எழுத்தானதால், திமிறிக் கொண்டு, வீரிட்டுக் கொண்டு எழும் தமிழத்தை இது சித்திரிக்கக் கூடும் என்பதனாலும் – கட்சியின் பெயர் ஃமுக என்று புத்துருவாக்கம் செய்யப்பட்டது.]
அரசியல் முழக்கங்கள்: ‘தம்பி திருநீறு வாழ்க!’ ‘ஒநாயின் ஊளையில் ஒழுக்கத்தைக் காண்போம்!’ ‘மடமை என்பது கட்சியடா, மட்டித்தனம் ஃகர்களின் கடமையடா!’ ‘அடைந்தால் சுடுகாடு, இல்லையேல் சடுகுடு ஆடு’
அரசியல் சின்னம்: பரட்டைத் தலை.
அரசியல் கொள்கை: தோசைக்கும் ஆசைப்படு
கட்சிப் பிரகடனம்: மடமை, மன்னார்சாமியம், மப்பு.
அரசியல் கோஷ்டம்: ‘ஃபிஸிக்ஸ் ஸ்டார்’ ஃபெய்ன்மன்னார்சாமியார் வால்க!
அரசியல் நிலைப்பாடு: காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்.
கட்சிக் கொடி:
… மேற்கண்டவைகளைக் கொண்டு, முட்டிமோதி 2050ல் ஆட்சியைப் பிடித்து தமிழகத்தின் அடுத்த நிரந்தர முதல்வர் ஆக முயன்று கொண்டிருக்கிறார், நம் ‘ஃபிஸிக்ஸ் ஸ்டார்’…
ஆனாஆஆஆல்ல்ல்ல்… அதே சமயம்…
இப்போதும் திமுக-வின் இளைஞரணித் தலைவர்… சாட்சாத், நம் ஸ்டாலின் அவர்களே தான், அப்போது அவருக்கு நூற்றுச்சொச்சம் வயதுதானே ஆயிருக்கும்?
திமுக குழந்தைகள் அணியின் தலைவராக, ஸ்டாலின் அவர்களின் 75 வயது மகன் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். 6 வயதுக்குக் கீழுள்ள இயக்க மறவர்களுக்கு கோமணம் இலவசம் என்ற கொள்கையால், பல பாலகர்களை ஈர்க்கிறார்.
மேலும் முக்கியமாக, ஸ்டாலின் அவர்களுக்கும் அவர் மகனுக்கும் உள்ள கட்சித் தலைமைக்கான இழுபறிச் சண்டையை, தனக்கே உரித்தான பாணியில் தீர்த்துக் கொண்டேயிருக்கிறார் சுமார் 140 வயதேயான கருணாநிதி அவர்கள்.
திமுகவில் 50 மண்டல குண்டல நாயகர்கள் இருக்கின்றனர், ஏனெனில் 50 வருடங்களில் தலைவரின் குடும்பத்தில் குறைந்த பட்சம் 100 பேருக்காவது கட்சிப் பதவிகள் கொடுக்கவேண்டிய வயதும் அவசியமும் ஏற்பட்டிருக்கிறதே! கனிமொழி அவர்கள், 10ஆம் முறையாக ராஜ்யசபா எம்பி-யாகி கவிதை எழுதிக் கொண்டிருக்கிறார். பாவம், கவிதை.
ஸ்ரீலங்காவில் அனைவரும் சுபிட்சமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், பழ நெடுமாறன் அவர்களுக்கே தெரியாமல், அவர் வீட்டு தரையடித் தளத்தில் ஒளிந்து கொண்டு, சரியான நேரத்தில் திடீரென்று தன்னை வெளிப்படுத்தி, திடுதிப்பென்று தமிழ் ஈழத்தை மலரவைக்க ஆயத்தம் செய்துகொண்டு, ஓழிந்த நேரத்தில், விஜய் டீவியின் நீயா நானா பார்த்துக் கொண்டிருக்கிறார், புலித் தம்பி.
டெஸொ-வின் 108ம் ஜன்மமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சீமார் அவர்களின் ஆவேச முஷ்டியுயர்த்திய ஃப்லெக்ஸ் விளம்பரத் தட்டிகளின் அளவு 1000000 சதுர அடிகளில் மையம்கொண்டு நின்று கொண்டிருக்கிறது.
தேமுதிக கட்சியிலிருந்து விஜயகாந்த் அவர்களைத் தவிர மற்ற அனைவரும் (அவர் மனைவி, மச்சான் உட்பட) விலகி அஇஅதிமுக-வில் இணைந்து மாமாங்களாகியிருக்கும் காரணத்தால், அவரும், வேறுவழியில்லாமல் அந்தக் கட்சியில் இணைந்து விடுகிறார்.
இப்போதும் அங்கு அம்மாதான் தலைவி. தன் அமைச்சரவையை, அவர் அமைச்சமைதாவாக்கி உருட்டியடித்துப் பிசைந்து காற்றில் வீசி மண்டையில் தட்டிப் பரோட்டா செய்யும் பாங்கே பாங்கு.
ஆண்சாதிகளும் கருத்தரித்துப் பிள்ளைகள் பெறுவதற்கான ஆர்பாட்டத்தை விடுதலை வீரமணி அவர்களின் இயக்கம் மாவட்டம் தோறும் நடத்துகிறது – அரசு அலுவலகங்களில், மருத்துவமனைகளில் மனு கொடுக்கிறது. ஆரியமாயையால், பார்ப்பனச் சதிகளால் தமிழ ஆண்சாதிகளுக்கு குழந்தை பெறமுடியாமல் போனதை வலியுறுத்தி ஐநா தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என மனு கொடுக்கிறார் அவர். ‘மனு நீதிகேட்டான்’ என்கிற பட்டப்பெயரை அவருக்கு கலைஞர் கொடுக்கிறார்.
பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் ஒத்து வராது என்று புரிந்துகொண்ட வினவுக் குளுவான்கள், அவர்களுடைய வழக்கம்போல, பேச்சாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை, அதனுடன் கூடக் கொஞ்சம் சர்வாதிஸ்வீட்டை உயர்த்திப் பிடிக்கிறார்கள்… (இல்லையேல், இந்த எழவெடுத்த எறும்புகள் வந்து மொய்த்துவிடும், பாருங்கள்!)
சரி போகட்டும். ஆனால், என்னுடைய செல்லமான சர்வாதிகாப்பி எங்கே? (சரி. அவர்கள் தங்கள் வலைப்பூக்களில் காப்பியடித்தவண்ணம் இருக்கிறார்கள், ஆகவே அவர்களை விட்டுவிடுவோம்!)
பாமக எங்கே? விடுதலைச் சிறுத்தைகள்?? முக அழகிரி??? ஹ்ம்ம்ம்…
-0-0-0-0-0-0-0-0-
தினத்தந்தியில் கன்னித்தீவு வழக்கம்போலத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
காந்தி பற்றிய அவதூறாளர் ஒருவரால் விட்டேற்றியாக வீசியெறியப்படும் கடிதத்திற்கு, பொறுமையாக ஒரு நீள, தர்க்கரீதியான பதிலை மறுபடியும் அளிக்கிறார் ஜெயமோகன்.
இந்திரா சௌந்தரராஜன் அவர்களுக்கு இலக்கியத்துக்கான நொபெல் பரிசு கிடைக்கிறது. ஆக, சாருநிவேதிதா அவர்கள் கொதித்தெழுந்து, நான் அடுத்த வருடம் மேன்புக்கர் வுமன்நோட்டர் பரிசு வாங்கவில்லையானால், அதன் பெயரை மாற்றி விடுகிறேன் என்று சூளுரைக்கிறார்.
எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் தென்னமெரிக்க ஏஞ்சல் நீர்வீழ்ச்சியின் முன்னால் நின்று கொண்டு – தன்னைப் பார்க்கும் எவ்வளவு பேரை இந்த அருவி பல்லாயிரம் வருடங்களாக மௌனமாகக் காலத்தின் படிமத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் என ஒரு பாசிபடிந்த கூழாங்கல் சிந்திப்பதாக எழுதிக் கொண்டிருப்பார்…
… அவர் இப்படி எழுதிக் கொண்டிருப்பதை எவ்வளவு பேர் படித்துக் கொண்டிருப்பார்கள் என நான் நினைத்து, ஆகவே மனக்கிலேசமுற்று, உடனே ஃமுக-வில் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்துவிடலாமெனத் தோன்றிக் கொண்டிருக்கையில்… …
ஆ… ஆ… ஆ…
-0-0-0-0-0-0-0-0-
… ராம், ராம்…. ராஆஆஆஆ ம்ம்ம்ம்ம்! (வியர்த்து விறுவிறுத்துவிட்டது; சுருட்டிக் கொண்டு விருட்டென்று எழுந்திருக்கிறேன்)
… ராம், என்ன இன்னும் கொரட்டை வுட்டுக்கினு தூங்கிக்கிட்ருக்கீங்க? புதிர்க் கணக்கு சொல்லித் தரேனீங்களே… நாங்கெல்லாம் வெய்ட் பண்ணிட்ருக்கோம், அரைமண்ணேரமா…
…அய்யய்யோ!
-0-0-0-0-0-0-0-0-0-
தொடர்புள்ள பக்கங்கள்:
November 5, 2013 at 12:14
அங்கதம் அருமை ஐயா..;)
November 12, 2013 at 20:47
funny and real fact