அழகான xkcd சித்திரம், ஜெயமோகனின் எழுத்துருக் கருத்துகள்: இவை தமிழச் சோம்பேறிகளுக்கானவையல்ல!
November 5, 2013
முன்குறிப்பு: எனக்கு ஒருவர், என் பதிவுகளை விட நீளமான ஒரு (ஆங்கில) மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். பல ஆலோசனைகளை (நல்ல எண்ணத்தில்தான் என நினைக்கிறேன்) வாரி வழங்கியிருக்கிறார். சில உலகத்தைக் குலுக்கும், என் உலகப் பார்வையை தலைகீழாக மாற்றும், கேள்விகளையும் கேட்டிருக்கிறார். நன்றி, அய்யா.
அவற்றில் — மிக முக்கியமான கேள்விகளில் நான்கு: 1) நீ எழுதும் தமிழ் கரடுமுரடாக இருக்கிறது. எளிமையாக எழுதினால் ‘ரீச்’ அதிகமாகும். எனக்கு உன் பதிவுகளைப் படிக்க மிகவும் சிரமமாக இருக்கிறது. நீ ஏன் உன் ‘ஸ்டைலை’ மாற்றிக் கொள்ளக் கூடாது? 2) நீ தமிழ்ச் சினிமாவைப் பற்றி என்ன நினைக்கிறாய்? 3) ஏன் தமிழ் சினிமா விமர்சனம் எழுதுவதில்லை? இப்படி எழுதினால் நிறைய பேர் படிப்பார்களே! 4) டீவியில் நிறைய நல்ல விஷயங்கள் வருகின்றனவே! பொத்தாம் பொதுவாக டீவியே வேண்டாம் என்று சொல்வது, குழந்தைத் தனமாக உள்ளது. உனக்கு ஏன் இந்த வீம்பு?
என் பதில், முறையே:
1) என்னுடைய தமிழ் அற்புதமானது, எழுத்து அழகானது என்றெல்லாம் சொல்கிற அளவுக்கு நான் அற்பனல்லன். மேலும், தமிழில் ‘பயணிக்க’வென்று எழுதுபவர்கள், தொடுவதை ‘ஸ்பரிசிப்பது,’ சும்மானாச்சிக்கும் மேலோட்டமாக விட்டேற்றியாகப் படிப்பதை ‘வாசிப்பது’ என்றெல்லாம் எழுதுபவர்கள் நிறைய இருக்கிறார்கள். எளிமையான, உள்ளீடற்ற தமிழ் வேண்டுமென்றால், ‘ரீச்’சோடு ரீச்சாகப் போய் ஐக்கியமாக வேண்டுமென்றால், நீங்கள் தாராளமாக அவர்களிடம் செல்லலாம். நீங்கள், நான் எழுதுவதையெல்லாம் படித்தே ஆகவேண்டிய கட்டாயமில்லை. என் ஸ்டைல்(!) இழவை உங்களுக்காகவெல்லாம் மாற்றிக் கொள்ளமுடியாது. ஒரு விஷயம்: நீங்கள் என்னுடைய தமிழைக் குறை சொல்வதற்குமுன் உங்கள் மின்னஞ்சல் இழவையாவது தமிழில் எழுதியிருக்கலாமே!
2) ஒரு இழவையும் நினைக்கவில்லை.
3) பார்ப்பதில்லை, ஆகவே எழுதுவதில்லை. கடைசியாகப் பார்க்க முயன்றது: எழவாவது அறிவு. எனக்குத் தாளவில்லை. மன்னிக்கவும். நான் எழுதுவதை(!) நிறைய பேர் படிக்கவேண்டும், ஜனரஞ்சகம் என்றெல்லாம் எழுதுவதில்லை. எனக்குத் தரமான பத்து சகவாசகர்கள் இருந்தால் போதும். இதுதான் முக்கியம் – நிச்சயமாக, அற்பத் திரைப்படங்களல்ல – சர்வ நிச்சயமாக, அவற்றை மட்டும் ஆராதிக்கும் தமிழச் சோம்பேறிகளல்ல. மேலும், எனக்கு எழுதவேண்டும் என்று தோன்றியதைத்தான் எழுதுவேன்.
4) ஒப்புக் கொள்கிறேன்: எனக்கு வீம்புதான். என்னை விட்டுவிடுங்கள். தயவுசெய்து. எனக்கு. முடியவில்லை. மன்னிக்கவும்.
அறிவுரைகளுக்கு மிக்க நன்றி.
-0-0-0-0-0-0-0-0-
… சரி, நீங்கள், இம்மாதிரிப் பதிவுகளைத் தப்பித் தவறிப் படிக்க ஆரம்பித்து முடிக்காமல் ஓட்டமெடுக்கும் தினசராசரிகளில் ஒருவரானால், இரண்டு வினாடிகளுக்கு மேல் படிக்கவேண்டிய எதுவும் அற்பம் என்று கருதுபவரானால், நீளமான பதிவுகளைப் படிக்குமளவு மூளையில் இடை நிலைதாங்கி (=பஃப்ஃபர்) இல்லாதவரானால், மூளையை அனாவசியமாக உழைக்கவைக்க விரும்பாதவர்களில் ஒருவரானால், வெட்டிக் கேளிக்கை விரும்பியானால் – உடனே தலைதெறிக்க ஒடுங்கள் – இது தவறான ஐபி முகவரி, மன்னிக்கவும்.
இது, பொழுதுபோகவில்லையானால் தமிழ்க் கழிசடைச் சினிமா விமர்சனம் படையல் வைக்கும் தளம் அல்ல. அது கிடைக்கவில்லையானால் ஏதாவது அமெரிக்கப் பட விமர்சனம் (முக்கியமாக வெள்ளைக்காரப் பாலூட்டிகளின் பிதுங்கும் சுரப்பிகளுடன்), இதுவும் இல்லாவிட்டால் காப்பிக்கடைச் செய்திவாசிப்புகள், அப்படியே தான் ஆனந்தமாக அட்டைக்காப்பியடித்துக் கொண்டே மற்றவர்கள் நேர்மையாக-சுடாமல் படம் எடுக்கக் கூடாதா, யார் குறைவாகக் காப்பி அடித்திருக்கிறார் – இளையராஜாவா, ஏஆர் ரஹ்மானா, யார் இசைஞானி, யார் இசைஞாநி, மிஷ்கின் நடத்தும் நரசுஸ் காப்பிக்கடை போன்றவைகளை அக்குவேர் ஆணிவேராக ‘அலசும்’ தளமில்லை – தமிழ்ச் சினிமாவைச் சுற்றிச் சுற்றி மட்டுமே கும்மியடிக்கும் பதிவுகள் இங்கு இல்லை. வேகமய்யா, வேகம்… ஓடுங்கய்யா…
-0-0-0-0-0-0-0-
… ஓ! ஆக இன்னும் இங்குதான் இருக்கிறீர்கள். வருத்தப் படாதீர்கள், இப்போதும் ஓடலாம். டோபி கீத் உபயத்தில் வேறெங்காவது செல்லலாம்.
அல்லது – இவன் என்னதான் சொல்லவருகிறான் என அவ்வப்போது (அனுதினம் அல்ல) வரும், படிக்கும், சுமார் 10 பேர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால், மேலே படியுங்கள். உங்கள் மூளையைப் படுகேவலமாக அவமதிக்கும், கிச்சுக்கிச்சு மூட்டும், சொறிந்து கொடுக்கும் செயல்களைச் செய்யப் போவதில்லை இந்தப் பதிவு.
-0-0-0-0-0-0-0-
எக்ஸ்கேஸிடி தளம், மிக அருமையானது. இதன் படிமங்களும், அட்டகாசமான நகைச்சுவையுணர்ச்சியும், எளிமையான கேலிச் சித்திரங்களும், பல அடுக்குகளில், திசைகளில் புரிந்து கொள்ளக் கூடிய / வேண்டிய தன்மையும் – எப்போதுதான் நம் தமிழில் இப்படிப்பட்டவை வரும் என ஏங்க வைப்பவை…
சுயகுறிப்பு அல்லது தற்குறிப்பு (self description) என்கிற தலைப்பில் எக்ஸ்கேஸிடி தளத்தில் எப்போதோ வெளியான ஒரு சித்திரமும் அந்த சித்திரத்தின் ஒரு (மாதிரியான) தமிழாக்கமும் – நீர்த்த தமிழ் மாற்றம் என்பது தான் சரி — கீழே:
இந்தச் சித்திரத்தின் ‘ஒரிஜினல்’ – அதன் மௌஸ்ஓவர் வியாக்கியானத்துடன் கீழே இருக்கிறது.

The contents of any one panel are dependent on the contents of every panel including itself. The graph of panel dependencies is complete and bidirectional, and each node has a loop. The mouseover text has two hundred and forty-two characters.
இதன் ‘ஒரு மாதிரியான’ தமிழ்ப் ‘படுத்தல்’:

ஒவ்வொரு சட்டகத்திலும் இருக்கும் கருத்து, மற்ற இரு சட்டகங்களில் இருக்கும் கருத்துகளோடு மட்டுமல்லாமல், தன் சட்டகத்தில் உள்ள கருத்தின் பாற்பட்டும் இருக்கிறது. சட்டகச் சார்புகளை வைத்து, குவியங்கள் மூலமாக ஒரு வரைகோட்டுப்படம் வரைந்தோமானால், அது முழுமையானதாக, இருவழி சார்ந்ததாக, ஒவ்வொரு குவியமும் தன்னளவில் சுழிந்ததாக இருக்கும். இந்த கணினியெலி மேலோடும்போது தென்படும் செய்தியானது நாற்பது வார்த்தைகளைக் கொண்டிருக்கிறது. (புரிந்து கொள்ள மிகவும் பிரயத்தனப் படவேண்டியிருக்கிறது அல்லவா?)
இந்தப் படத்தின் மேல் எலியை ஓட்டிப் பார்த்து – கர்ஸர் இருக்கும் பகுதிக்கான வியாக்கியானத்தைப் படிக்க முயலவும். என்னமா யோசித்து, அருமையாக வடித்து, எளிமையாக வரைந்திருக்கிறான் இந்த ஆள் – ரேன்டல் மன்றோ!
என்னைப் பொறுத்தவரை இம்மாதிரிப் பல ஆட்கள் புற்றீசல் போலப் புறப்பட்டு வந்தால், தமிழகம் தழைக்கும்… ஹ்ம்ம்.
‘தூய’ நற்றமிழில் விஸ்தாரமான ஆய்வுக் கட்டுரைகளை வாசிக்க ஓரளவு முனைவும் விழைவும் இருக்கும் எனக்கே – இந்த எக்ஸ்கேஸிடி சித்திரம் சார்ந்த கணித வார்த்தைகளைத் தமிழில் தருவது, அதனைப் படிப்பது — என்னவோ போலிருக்கிறது.
நாம் — ஜப்பான்காரர்கள், தங்கள் மொழிக்குள் கலைச்சொற்களை இழுத்துக் கொண்டுவந்து போல (கம்ப்யூட்டர் = கம்ப்யூட்டரு) தமிழிலும் செய்தால்தான் முடியும். க்ராஃப் தியரி, டொபொலொஜி, கால்குலஸ், ரிகர்ஷன், டெய்ல்-ரிகர்ஷன் என்பனவற்றை அப்படியே எடுத்தாட்கொள்வது தான் தமிழைச் செம்மைப் படுத்தும் என் நினைக்கிறேன். சும்மா வெட்டியாக, ‘யாதும் ஊரே’ என்று உளறிக் கொண்டு புளகாங்கிதம் அடைந்து கொண்டிருந்தால் கவைக்குதவாதுதான்.
எல்லா கலைச்சொற்களையும் தமிழ்ப்படுத்துதல் என்பது நம் கலாச்சாரச் சூழலின் மிகவும் கடினம். யோசித்தால், தமிழ்ப் படுத்துதலைக் கூடப் படுத்தி எடுத்துவிடலாம். ஆனால் அவற்றைப் பரந்துபட்ட மக்களிடம் கொண்டு சேர்த்து புழக்கத்திற்குக் கொண்டுவருவது, என்பது… ஹ்ம்ம். ஏற்கெனவே – பல துறைகளில், எழுத்துரு-உச்சரிப்புப் பிணைப்புகள் உட்பட, நாம் செல்லவேண்டிய தூரம் அதிகம் வேறு! ஹ்ம்ம், உண்மையில் அது மிக மிக அதிகம்!
அதனாலென்ன, நாளைக்கு ஒரு புது திரைப்படம் வெளியிடப்படுகிறது. தமிழ்ப் பெயரில், தமிழ்க் கதை கொண்டு, நம் நாற்றமிழ் தமிழ்நாட்டை உய்விக்க வருவதினால் தமிழக அரசின் கேளிக்கைவரி ரத்து வேறு. இதனை உடனே பார்த்து ‘விமர்சனம்’ எழுதவேண்டும்… முதலில் நான் இதைப் பற்றி எழுதி 1000000 பேர் அதற்கு ‘லைக்’ போடவேண்டும். என்னுடைய தளப் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும்…
… யோசித்து, ஒரு பால்சுரப்பி படம் தேற்றி, ஒரு 100 வார்த்தை விமர்சனம் எழுதுவதற்குள்…
அய்யய்யோ! இன்னொரு அற்பத் தமிழ்ப்படம் வெளிவந்துவிட்டதே! அடிப் பராசக்தியே! (… வேகமா எள்த்றா, சோமாறி)
இப்படிக் கும்மியடித்தே – தமிழ் வாழ்க்கையே, தமிழ்ச் சூழலையே ஒரு மகாமகோ கேளிக்கையாக்கி விட்டோம்! கேடுகெட்ட பாவிகள் தாம் நாம்.
அதனாலென்ன?
தமிழ்க் கருத்துலகில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் ஜெயமோகன் அவர்கள் — எழுத்துரு பற்றி, தர்க்கரீதியாக வாதங்களைக் கோர்த்து ஒரு கட்டுரை எழுதுகிறார். பதிலுக்கு ஒரு தரவு, தர்க்கம் சார்ந்த வாதமில்லாமல், புல்லரிப்பு உணர்ச்சி பொங்கக் கல்லடிப்பதுதான், நம் எழுச்சித் தமிழர்களின் அதிகபட்சப் பங்களிப்பு.
அதனாலென்ன?
மறுபடியும் கல்லெறிதல்களை எதிர்கொண்டு ஒரு தர்க்கபூர்வமான எதிர்வினைக் கட்டுரை எழுதுகிறார். இதற்காகவும் கல்லெறிவார்கள்.
அதனாலென்ன?
ஆனால் இந்த கல்லெறிவாதிகளை, தமிழப்போராளிகளை, ஒரு பத்தி – ஒரேயொரு பத்தியை மட்டும் – அழகுதமிழில் ஒரு சிக்கலான பிரச்சினையைப் பற்றி அலசி. சொந்தச் சிந்தனைகள் சார்ந்து எழுதச் சொன்னால். சாயங்கள் வெளுத்துவிடும்.
அதனாலென்ன?
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்தே கல்லெறிந்து மட்டுமே உரையாடுவது தானே தமிழினம்?
அதனால்தான்.
தொடர்புள்ள பதிவு:
வாடிக்கையாள வாலிப வயோதிக அன்பர்களுக்கு சில நற்செய்திகள்! (27/04/2013)
November 6, 2013 at 14:45
Hello!
The Jayamohan article in “the hindu” and the response really makes for comic entertainement. Thanks to the defenders of Tamil, I know now that the whole language and its long heritage can be easily destroyed by a mere malayalee writing an article in “the hindu”!
Sadly there is very little debate in the responses about the core issue of decreasing Tamil readership and what needs to be done to promote it.
November 7, 2013 at 12:57
‘mere தமிளர் ‘ போதுங்க, தமிழை ஒழித்துக் கட்ட! உருப்படாத மேடைப் பேச்சுக்களும், பத்திரிக்கைகளும், பட்டி (வெட்டி) மன்றங்களும்தான் இன்றைய இளைஞர்களும், குழந்தைகளும் தமிழ் ‘பயிலும் (!)’ களங்கள். இவற்றில் தாண்டவமாடும் உச்சரிப்புப் பிழை, எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இதிலெல்லாம் நாசமாகாத தமிழ் ஜெயமோகனின் உத்தியால் நாசமாகி விடுமா? ஜெயமோகனின் உத்தி தமிழை வளர்க்க உதவாது என்பது திண்ணம். அதைப் புறந்தள்ளுங்கள். அந்த அளவில் விமரிசியுங்கள். அதென்ன ‘mere malayalee’ ? தங்களைப்போல ‘.. what needs to be done to promote it’ போன்ற ‘feeling’ பாசாங்குகள் இன்றி விடாப்பிடியாகப் பிழையின்றித் தமிழில் எழுதி வருகிறார். அவரைப் பெரிதாக என்ன ‘promote’ செய்து விட்டீர்கள், ‘mere malayalee’ என்று பரிகசிப்பதைத் தவிர? தமிழின் போலி ஆங்காரிகளால்தான் தமிழுக்கு ஆபத்து.
November 7, 2013 at 16:22
ஆனால் இந்த கல்லெறிவாதிகளை, தமிழப்போராளிகளை, ஒரு பத்தி – ஒரேயொரு பத்தியை மட்டும் – அழகுதமிழில் ஒரு சிக்கலான பிரச்சினையைப் பற்றி அலசி.
அருமை
மருத்துவர்களை போட்டு கிழித்து எடுக்கிறார்களே .அவர்களை பார்த்து உங்களுக்கு ஒரு ஊசி சூட்டதிலாவது ஒழுங்காக போட தெரியுமா.அது கூட தெரியாமல் அவர்களை திட்ட,குற்றம் சொல்ல வந்து விட்டீர்களே என்று கேட்கலாம் போல
இன்று இந்தியா முழுவதும் போட்டு கிழி கிழி என்று கிழிக்கப்படும் 11 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட கொல்கத்தா மருத்துவர் (பத்திரிக்கையாளர்கள் ஆனந்த தாண்டவம் ஆடுகிறார்கள் )தான் அங்கு தலை சிறந்த மருத்துவராக பெயர் எடுத்தவர்.அதனால் தான் அவரை தேடி சென்று கணவரே மருத்துவராக இருந்தாலும் கேள்வி கேட்காமல் அவர் கொடுக்கும் மருந்துகளை கொடுத்தார்கள்
பல்லாயிரம் உயிர்களை காப்பற்றி பெயர் எடுத்தவர்.குணமாகும் என்று அவர் ஒரு நோயாளிக்கு கொடுத்த அதிக டோஸ் வேலை செய்யாமல் நோயாளி உயிர் இழந்ததால் அவரை திட்ட கூடாது என்று வாதிடுகிரோமா.
November 8, 2013 at 08:15
ஜெயமோகனும்.நீங்கள் வெறுக்கும் திராவிட இயக்கத்தினரும் என்னைப் பொறுத்தவரை நாணயத்தின் இரு பக்கங்கள்தான்.இரு தரப்பிலும் இல்லாத ஒன்று அறிவார்ந்த நேர்மை.ஒரு வெறுப்பின் அடிப்படையில் இன்னொரு தரப்பினை கொண்டாடுவது அறிவார்ந்த செயல் அல்ல.மாறாக இரு தரப்பின் மீதும் கறாரான விமர்சனம் வைக்கப்பட வேண்டும்.நீங்கள் அதை செய்வதில்லை.நேற்றுவரை பெரியாரை வசைபாடிவிட்டு இன்று வேறுவிதமாக எழுதுவது எத்தகைய அறிவார்ந்த நேர்மை என்று நீங்கள் அவரைப் பற்றி எழுதினால்தான் வியப்படைவேன்.
November 8, 2013 at 16:42
அய்யா ‘tamil,’
1. நான் ஒரு தொழில்முறை நடுநிலைமைக் காரன் அல்லன். இதைக் அடிக்கோடிட்டு 108 முறை பாராயணம் செய்யவும். இந்த நடு நிலைமை இழவைப் பற்றி நான் நிறைய எழுதியிருக்கிறேன். முடிந்தால் படிக்கவும்.
2. எனக்குப் பிடித்ததை, பிடிக்காததைப் பற்றித்தான் கறாராக நான் எழுதமுடியும். உங்களுக்குப் பிடித்ததை, பிடிக்காததை நீங்கள் தயவுசெய்து எழுதிக் கொள்ளுங்கள். நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது – எப்படியும் நீங்கள் வியப்படைவீர்கள் அல்லது அடையமாட்டீர்கள் என்றெல்லாம் நான் நினைத்து ஒன்றும் எழுதவில்லை. மன்னிக்கவும்.
3. நான் ஒரு தொழில்முறை விமர்சகன் அல்லன். ஆக, பொய் பொய்யாக நடு நிலைமை என்றெல்லாம் உளற வேண்டிய அவசியம் எனக்கில்லை.
4. எனக்குத் தொழில், சர்வ நிச்சயமாக, எழுத்து அல்ல. இந்த அல்ல-வை இரண்டுமுறை அடிக்கோடிடவும். எனக்கென்று பல தொழில்கள் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை இந்த ஒத்திசைவு ஒரு குறிப்புப் புத்தகம் அல்லது நாட்குறிப்பு போல – அவ்வளவுதான்.
5. மனிதர்கள் மாறுவது, நிலைப்பாடுகளை தரவுகளின் படி தங்களைச் செம்மைப் படுத்திக் கொள்வது சரியானது. நான் ஈவெரா அவர்களை ஆராதிப்பவனாக இருந்த இளமைப் பிரகடனங்களிலிருந்து, அவர் ஒரு சாதாரண மனிதர்தான் (ஒரு விஷயத்தைத் தவிர) என்கிற எண்ணத்திற்கு வந்திருக்கிறேன்.
6. ஜெயமோகன் என்ன எழுதியிருக்கிறார், எழுதினார், வேறுவிதமாக எழுதுகிறார் என்பவற்றை நான் படிக்கவில்லை. அப்படியே, அவர் நீங்கள் சொல்வதுபோல எழுதியிருந்தாலும், தன் நிலைப்பாட்டை கட்டமைத்துக் கொள்வதற்கும், மாற்றிக் கொள்வதற்கும், அவருக்கு உரிமை உள்ளது என்பதையும் மீறி, அவருக்கு இக்காரியங்களைச் செய்வதற்குத் தேவையான விசாலமான படிப்பறிவும், மனவலியும் உள்ளது என்று நான் நம்புகிறேன். எவரிடமும் நமக்குக் கற்றுக்கொள்ள வேண்டியது எனச் சில விஷயங்கள் இருக்கலாம் என்பதையும் உணர்ந்திருக்கிறேன்.
7. எனக்கு என்று ஒரு அரசியல் இருக்கிறது. உங்களுக்கென்றும் ஒன்று இருக்கிறது. இதை உணர்ந்து கொண்டால் உரையாட முடியும்.
8. நான், பல விஷயங்களில், ஒரு தொழில்முறை அறிவுரையாளன் கிடையாது. அப்படி இருக்க வேண்டுமானால், எனக்குக் கோபமே வரக் கூடாது. மேலும், என்னுடைய பங்களிப்பு என்பதை எங்கு கொடுக்கலாம் என்பதில் எனக்குச் சந்தேகங்களில்லை.
9. என்னைப் பொறுத்தவரை திராவிட இயக்கத்தினரிடம் இல்லாதது நாணயம். ஜெயமோகனிடம் இருப்பது நாநயம். கொஞ்ச டிராஜேந்தர்த்தனத்திற்கு மன்னிக்கவும்.
10. ஜெயமோகனை நானும் கரித்துக் கொட்டவேண்டும் என்கிறீர்கள். சரி, நான் உங்களை ஏமாற்றமடையச் செய்கிறேன் – இதுதான் முடியும் என்னால்.
நன்றி.