அணிந்துறை: ஒரு சோக காவியம் 😩

July 31, 2021

தமிழச் சூழலில், தடுக்கி விழுந்தால் கவிங்கர்கள் என்பதை நான் நன்றாகவே அறிவேன்; அவர்களை எதிரிகொள்வதற்கான சகல முஸ்தீபுகளுடனும் கவசகுண்டலங்களுடன் தான் வெளியில் கிளம்புவது வழக்கம். இருந்தாலும், சில சமயங்களில் எதிர்பாராத நேரங்களில், இடங்களில் கெர்ரிலாத் தாக்குதல் செய்துவிடுகிறார்கள், பாவிகள்.

முன்னாட்களில் நோட்டுப் புத்தகம் சகிதம் அலைந்துகொண்டிருந்த கவிங்கப் பேடிகள், இக்காலங்களில் ஸ்மார்ட் ஃபோன்களுடன் நடமாடுகிறார்கள். சில நொடிகளுக்கு கவனக் குறைவாக இருந்தால் கூட, உடனடியாக அட்டாக் செய்து, தம் கவிதைகளைக் காண்பித்து விடுகிறார்கள்.

எழவெடுத்த ஸ்மார்ட்ஃபோன் திரையில் வலதுகைப் பெரு, ஆட்காட்டி விரல்களைத் தேய்த்துக் குவித்து அகற்றி,

“இந்த கவிதை பெண்ணியம் பத்தி; ஊடகப் படிமங்களைச் சிதைக்கும் அரூபமான குறியீடாக…”

“ஹிஹ்ஹி, மூக்குக்கண்ணாடி இல்ல, அதனால தம்பீ ,படிக்க முடில… மன்னிச்சிடுங்க!” எனச் சால்ஜாப்பும் சொல்லமுடிவதில்லை; ஏனெனில் அதற்குச் சில வினாடிகள் முன்புதான் கண்ணாடியில்லாமலேயே எஸ்எம்எஸ் அனுப்பியிருப்பேன்… :-(

சரி.

சீனாக்கார கோவிட் உபயத்துக்கு நன்றியுடன் கடந்த ஒன்றரை வருடங்கள்போல பழைய நண்பர்களைச் சந்திக்கவே முடியவில்லை. ஆகவே, முடிந்தவரை போர்க்கால ரீதியில் கடந்த சில நாட்களாக, சிலபலரைச் சந்தித்து வருகிறேன்.

…இப்படியாகத்தானே மூன்று வருடங்களுக்குப் பின் நண்பரைச் சந்தித்தேன்.

இந்த நண்பருக்கு இலக்கியம் அலக்கியம் என்பதில்  துளிக்கூட ஆர்வமேயில்லை. கொடுத்து வைத்தவர். மற்றபடி வேலைவெட்டியற்ற ஆன்மிகம் ஆஃப்யூகோ தத்துப் பித்துவ வாந்தியெடுத்தல்களிலும் நம்பிக்கையற்றவர். ஐயகோ.

ஏதோ தானுண்டு, தம்தொழிலுண்டு, தொழில் நுட்பங்களுண்டு, முன்னேற்றமுண்டு, நூற்றுக் கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டு… புதுத்தொழில்களில் முதலீடு உண்டு… இப்படியா விட்டேற்றியாக இருப்பார்கள், இந்த ஆணாதிக்க, முதலாளிப் பாவிகள்?

கொஞ்சம் கூடச் சுற்றுச்சூழல் பற்றிய புலம்பலோ, ‘அரசியல்வாதிகள் அயோக்கியர்கள்’ பம்மலோ, ‘எனக்கெதுக்கு வம்பு’ டபாய்த்தலோ, வெண்முரச சிலாகிப்புகளோ இல்லாமல் வாழும் வாழ்க்கையெல்லாம் ஒரு வாழ்க்கையா?

ஈனப் பிறவிகள், பார்வையூனமடைந்தவர்கள், சுகபோகிகள், சுயமோகிகள்…(…என்று சொன்னாலும், இம்மாதிரித் துளிக்கூட ‘இருப்பின் அவஸ்தை’ பற்றிய விசாரங்களும், ‘உலகத்தை உய்விப்பது’ குறித்த மேலான சிந்தனைகளும் இல்லாமல்  ‘தன்னளவில் இன்பம்பெற்று’ சந்தோஷமாக வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் பொறாமையாகவே இருக்கிறது, என்ன செய்ய!)

:-(

இவர் திரைகடல் ஓடித் திரவியம் தேடி, அபரிமிதமாகச் சம்பாதித்துக் கொண்டிருப்பவர்; அதாவது பிழைக்கத் தெரிந்தவர். ஆனால், மூன்றாம் மனிதருக்குத் தெரியாமல் பல தர்மகாரியங்களும் செய்துகொண்டிருப்பவர்; ஆகவே பிழைக்கத் தெரியாதவர்.

என்னைப் பொறுத்தவரை, படு புத்திசாலி, செயலூக்கம் மிக்கவர், பெரிய கிண்டல்காரர் & சிரித்துக்கொண்டே இருப்பவர்.

-0-0-0-0-

ஆனால், படுமோசமான விஷயம் நடந்தே விட்டது. :-(

அவர், தன் தொழிற்சாலை குறித்த முன்னேற்றங்களை, கடந்த சில ஆண்டுகளில் அவர் வாங்கிய புது இயந்திரங்களைக் காண்பித்துக் கொண்டே வருகையில்…

… “இவர் டூல்ரூம் பயிற்சியாள இஞ்சினீயர். *****.  ***** கல்லூரி. நம்ப *******ன் மருமகன். பலமான பரிந்துரை. நம் நண்பர்களுக்கு இதைக்கூடச் செய்யமாட்டேனா என்ன?

…கவிதையெல்லாம் எழுதுவார்! என்ன தம்பீ, நீங்க சேர்ந்து ஒரு வருஷம் ஆய்டிச்சில்லையா?”

(எனக்கு அடி வயிற்றுக் கலக்கம்; அந்தக் கவிங்கர் இளைஞருக்கு வெட்கம் கலந்த பெருமிதம், ‘படைப்பாளி தம் காலகட்டத்தின் அறச்சீற்ற அண்ணல், சமூகத்து ஆதாரசுருதிகளின் படிமரூபம், சமூக நனவிலிகளின் உட்கிடக்கைகளைப் பிரதிபலிப்பவன், மக்கட்திரளின் மனச்சாட்சி, காலத்தைத் தாண்டி நிற்பவன்+++’ – எனக்குத் தெரியாதா இந்த ‘லுக்?’)

“இவர் என் நண்பர், பயங்கர ஃபேமஸ் தமிழ் எழுத்தாளர், இவரை கபக்குனு பிடிச்சுக்குங்க!”

* & % $ # @ !

(கலவரம், கோபம், முதுகில் குத்தப் பட்டுவிட்டதால் சுயபச்சாத்தாபம்+++)

“ஐயோ தம்பீ, இவர் யாரையோ நினைத்துக்கொண்டு சொல்கிறார், வயதாகி விட்டதால் வந்த மறதியாக இருக்கலாம். நண்பர்களோடு சேர்ந்து ஒரு ப்ளாக் வைத்திருக்கிறேன், வருடத்துக்கு ஓரிருமுறை எழுதுவேன், அதுவும் அந்த யூஸ்லெஸ் ஆங்கிலத்தில்தான்…”

“இல்லையில்லை; இவருக்கு அடக்கம் ஜாஸ்தி, இவரை கெட்டியா பிடிச்சிக்கோ. ஒருகாலத்துல பதிப்பகம் எல்லாம் நடத்தியிருக்கார்! இப்டியே ஒரு குட்டி ரவுண்ட் போய்ட்டு வந்திட்றேன், நீங்க பேசிட்டு இருங்க…”

* & % $ # @ !

“தம்பீ, நீங்க என்ன துறை? மெக்கனிக்கலா?? எதில் ஆர்வம்? இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?”

“சார், எனக்கு ஐடி வேலைக்கு ஷிஃப்ட் பண்ணிக்கணும், ஸிஸ்டெம் அட்மினிஸ்ட்ரேஷன் கோர்ஸ் ஒன்றுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.”

* & % $ # @ !

“ஏன் தம்பி, இங்க என்ன வேல பண்ணிட்ருக்கீங்க? இது பிடிக்கலயா? என் ஃப்ரெண்ட் கிட்ட இதுபத்தி பேசினீங்க்ளா?”

“இந்த வேலைல நிறைய கத்துக்கணும், ஒண்ணுமே புரீல. டயர்டாய்டுது, கவித எழுதமுடில.”

* & % $ # @ !

“நீங்க அவர் கிட்ட பேசினீங்களா?”

“பேசினேன், அவர், எப்ப கெளம்பணுமோ கெளம்பிக்கோன்னிட்டாரு.”

“சரி நல்லது. உங்களப் பாத்ததுல சந்தோஷம். வாழ்த்துகள்.”

“!”

(நான் நகர ஆரம்பித்தேன்…)

“சார், ஒரு ரிக்வெஸ்ட்.”

(அடிவயிற்றுக் கலக்கம்)

“நான் என்னோட முதல் கவிதைத் தொகுப்பு வெளியிடலாம்னு இருக்கேன். ஸாம்பிள் கவிதைகளை காட்டறேன், கருத்து சொல்லமுடியுமா?”

“தம்பீ – எனக்கு இலக்கியத்தோட ஒரு அறிமுகமும் இல்லை, கவிதைகளைப் பற்றிப் பெரிதாகக் கருத்து சொல்கிற அளவுக்கு எனக்குப் பயிற்சியும் இல்லை, மன்னியுங்கள். தவிர எனக்கு நேரமும் அவ்வளவு இல்லை.”

“சார், ஜஸ்ட் ரெண்டு கவிதைகளைக் காட்டறேன், பிடிக்கலைன்னா சொல்லிடுங்க… இதே போல 800 ஆக்கங்களுக்குமேல எழுதியிருக்கேன். கூக்ள்ட் ரைவ்ல இருக்கு, ஷேர் செய்யட்டா?”

(ஸ்மார்ட்ஃபோன் மட்டரகக் கழுதைகள்; ரெண்டும் (போகஸ் சங்கர் + மனுஷ்யபுத்திரன் + பெருந்தேவி)/3 வகை கவிஷ்டைகள்.  போதாக்குறைக்கு ஏகப்பட்ட தமிழ்ப் பிழைகள். வெறுத்து விட்டது. கொஞ்சம் ஆவேச ஆவேஷ சமூக நீதி, புரட்சிப் பூபாளம், பொதுவாக முகரக்கட்டை முகாரி)

“தம்பீ, எனக்கு இதெல்லாம் புரியல; படிக்க நேரமும் இல்ல. ஆனால் நீங்கள் இனிவரும் காலங்களில் கவிதை எழுதி வெற்றிபெற வாழ்த்துகள்…”

(பாவி நண்பன் இந்த சமயம் வந்து தொலைத்தான்)

“தம்பீ, இவர் தப்பிக்கப் பார்க்கிறார், விடாதே. பிடித்துக்கொள். சார் பெரிய ஆள். இவர் சொன்னால் உன் கவிதைகள் பிய்த்துக்கொண்டு போகும்!”

* & % $ # @ !

“தம்பீ, நீங்கள் என்னை மிகைமதிப்பீடு செய்யாதீர்கள். நான் ஒரு அனாமதேய, சராசரி ஆசாமி. ஆகிற வேலையைப் பாருங்கள். வாழ்த்துகள்.”

“தம்பீ, இவர் டபாய்க்கிறார். ஃபோர்வர்ட் எழுதித் தரச் சொல்…”

* & % $ # @ !

தம்பீ கேட்டே விட்டான்: “சார், கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க.”

ஆ!

“தம்பீ என்னால் முடியவேமுடியாது, பிறகு இன்னொருசமயம் பார்க்கலாம், எனக்கு வேறுவேலைகள் இருக்கின்றன, உங்கள சந்திச்சதில மகிழ்ச்சி, வாழ்த்துகள்.”

சிறிது நேரம் டூல்ரூம் ஆசாமிகளுடன் பேசிவிட்டு அடுத்த அரைமணி நேரத்தில் கிளம்பி விட்டேன். ஏற்கனவே, அடுத்த உரையாடலுக்கு நேரமாகிக் கொண்டிருந்தது… பின்னர் உயர்நீதிமன்றம் செல்லவேண்டியிருந்தது… கடும் அழுத்தம்.

-0-0-0-0-

நேற்றைய முன் தினம் மேற்கண்ட கொடுமையான நிகழ்வு நடந்தது.

நேற்றிரவு அதனை விடக் கொடூரமான விஷயம் அரங்கேறியது.

தம்பீ எனக்கு ஒரு மின்னஞ்சல் எழுதியிருந்தார். நண்பரிடம் இருந்து என் முகவரியைப் பெற்றுக்கொண்டிருக்க வேண்டும்.

தமிழும் ஆங்கிலமும் கலந்தடித்த ஒரு அசிங்கக் கலவை. எதுவும் சரியில்லை. ஆனால், அதன் சாராம்சம்: “அணிந்துறை கொடுக்க முடியுமா?”

அணிந்துறை!

எனக்கு வந்ததே கோபம்.

ஆனால் பொறுமையுடன், சுருக்கமாக ஒரு மின்னஞ்சலை இன்று காலை அனுப்பினேன்:

இளைஞரே,

தேவையே இல்லாமல் அழுத்தம் கொடுப்பதை நிறுத்தவும். நான் உங்களிடம் ‘என்னால் முடியாது’  எனத் தெளிவாகச் சொன்னேனா இல்லையா? நான் தமிழ் எழுத்தாளன் அல்லன், மேலும் சர்வ நிச்சயமாகத் தற்காலக்கவிதை வெறுப்பாளன் தான். என்னை நீங்கள் இந்த அளவு வற்புறுத்தியிருக்கக் கூடாது.

முதலில் நீங்கள் தமிழை ஓரளவாவது சுத்தமாக எழுதப் பழகவேண்டும்; பின்னர் கவிதை எழுதலாம். தமிழில் மஹோன்னதர்கள் (தருமுசிவராமு, ஞானக்கூத்தன், ஆத்மாநாம், விக்கிரமாதித்தன், உமாமஹேஸ்வரி+++) எழுதிய கவிதைகளைப் படிக்கவும், குறுந்தொகை உட்பட.

நீங்கள் முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால்: ‘செல்லவேண்டிய தூரம் அதிகம்.’ ஆனால் முயன்றால், ஓரளவுக்கு ஒப்புக்கொள்ளக்கூடிய உரைநடையை எழுத முடியலாம்.

(ஆனால் என்னால் உங்களுக்கு எவ்விதத்திலும் உதவமுடியாது. உங்கள் கூக்ள்ட் ரைவ் கவிதைகளைப் பார்க்கும் சக்தி எனக்கு இல்லை, அவற்றைப் படிப்பதையே விடுங்கள். என்னைப் பொறுத்தருளுங்கள், தயை செய்து…)

அது அணிந்துரை, அணிந்துறையல்ல. அணிந்துறை என்றால், ஏதோ அணிந்து விட்டெறியும் உபயோகப்படுத்தப்பட்ட காண்டம் போல ஒரு சித்திரத்தை விரிக்கிறது. உங்களுடைய தற்போதைய ஆக்கங்களுக்கு அணிந்துறைதான் சரிவரும் என நான் நினைத்தாலும் – எனக்கு எதுவும் செய்ய ஏலாது, முடியாது. விட்டுவிடுங்கள்.

நான் வேறு யாரையும் உங்கள் அணிந்துறைக்காகப் பரிந்துரைக்க முடியாது. உங்கள் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கும் எந்தவிதத்திலும் என்னிடம் அறிவுரையில்லை. பொறுத்தருளுங்கள்.

மற்றபடி நீங்கள் உருப்படியாக உருமாற வாழ்த்துகள்.

__ரா.

–00-0-0-00–

மின்னஞ்சலை அனுப்பிய பின், என் நண்பருக்கும் அறிவுரைகள் சிலவற்றைக் கொடுக்கவேண்டி வந்துவிட்டது.

1. டேய், நீ இன்னொருதடவை இப்படி என்னை அசிங்கப்படுத்தாதே; நான் தமிழ் எழுத்தாளன் இல்லை – என்னை எவனுக்காவது அறிமுகம் செய்தாகவே வேண்டுமென்றால், வேறு ஏதையாவது சொல்லு, ‘இவன் கிறுக்கன்’ என்பது உட்பட.

2. என்னையும் உன்னையும் இணைப்பது தொழில் நுட்பம், பொறியியல் ஆர்வம்; தமிழல்ல, நல்லவேளை! இதனை நினைவில் கொள்.

3. நம் தமிழ்ச் சூழலில் உள்ள கவிஞர்கள், அலக்கியவாதிகள் பேரில் எனக்குப் பெரிய மதிப்பு இல்லை என்பது உனக்குத் தெரியும். மேலும் இஞ்சினீயர்(!) இளைஞர்கள் நாசமாகப் போவதில் எனக்குச் சோகமே. இந்த நிலையில், நீ செய்தது நகைச்சுவை பாற்பட்ட விஷயம் என்றாலும், எனக்கு வெறுத்துவிட்டது. அந்த இளைஞனிடம் ‘நீ வேலையை விட்டு விலகலாம்’ என்று சொல்லியிருக்கிறாய் – அதே சமயம் அதே சராசரியோனை என் மண்டையில் கவிழ்த்துகிறாய். இது எந்த விதத்தில் நியாயம்?

4. நாம் பேசிய ப்ளாக்செய்ன் வகையறா மீதான உன் கருத்துகளை எனக்கு அடுத்த சில நாட்களில் சொல்.

5. செய்யவேண்டிய காரியங்கள் குவிந்துகொண்டிருக்கின்றன. மீதமிருக்கும் வாழ்நாட்கள் அருகிக்கொண்டே வருகின்றன. வேகமய்யா வேகம்.

-0-0-0-0-

அணிந்துரை பிரச்சினைகள் குறித்து, திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள ஒரு நிதர்சன நிலவரக்கலவரக் கட்டுரை.

12 Responses to “அணிந்துறை: ஒரு சோக காவியம் 😩”

 1. K.Muthuramskrishnan Says:

  எனக்கொரு “அணிந்துறை” பார்சேல்!7


  • யோவ்! இந்த வயஸ்ல இப்டீ ஆசெயா? இன்னாபா இது!

   வூக்க அல்லது வீக்க போனஸ்ஸா… அதுங்கூட

   சிட்டுக்குர்வீ லேவியம் ரெண்ட்கிலோ + மல்லிப்பூ ரெண்டுமுழம் + திர்னெல்வேலி அல்வா ரெண்கிலோ பார்ஸேல் பண்ட்டா?

 2. dagalti Says:

  கணையாழி கடைசி பக்கம் சுஜாதா:

  கவிதை எழுதுகிறவர்கள் நிறையக் கிளம்பியிருக்கிறார்கள். அன்று என் நண்பரும் கவிஞருமான ‘கீகீ’யை (அவருடைய புனைபெயர்) பார்த்ததும் சரேலென்று சந்தில் மறைந்தேன். அவர் என்னைத் துரத்தி ஒரு மூலையில் மடக்கி பைக்குள்ளிருந்து ஒரு காகிதத்தை எடுத்து ஒரு நேரிசை வெண்பா எழுதியிருப்பதாகச் சொல்லி அதைக் கணையாழியில் பதிப்பிக்குமாறு சொன்னார். ஆசிரியர் கி.க. மறுத்து விட்டார். அதனால் அதை இப்பகுதியில் நுழைத்திருக்கிறேன்……..

  …புதுக்கவிதை தற்போது ஒரு rash போல நம்மிடம் பரவி இருக்கிறது. “அடிக்கடி கட்சி மாறும் அரசியல்வாதிக்கு அடுத்த தேர்தலில் குரங்கைச் சின்னமாய்க் கொடுத்தால் என்ன” என்கிற வாக்கியத்தை ஐந்தாகப் பிரித்து கவிதையாகப் பதிப்பித்திருந்தார்கள்.
  என்னய்யா விளையாடுகிறீர்களா?

  —————————-

  And that was in October 1972!


  • :-)

   இதனைப் படித்த நினைவு இல்லை. ஆனால் டமாஸ்.

   இப்போது தோன்றுகிறது, நம் சங்ககாலத்திலும் (அதாவது கண்டிப்பாக பொயு ~600க்குப் பின்னர்தாம்!) இதே புலம்பல்ஸ் இருந்திருக்கவேண்டுமல்லவா?

   • dagalti Says:

    – முதல்ல வாத்யாரை கேக்கணும்
    அவர் ‘உனக்கு கத்துக்கொடுத்ததே பாவம், அப்பால போ’ அப்படின்னு தெர்த்தினா

    – கூட படிச்சவண்ட்ட கேக்கணும்
    அவன் ‘கைமாத்து கூட கேளு ஆனா இந்த பாவத்துக்கு நான் ஆளாக மாட்டேன்’ அப்படின்னு நழுவினா

    – வெக்கமானம் பாக்காம, நாம பாடம் நடத்தின பையண்ட்டயே கேக்கணும்.
    அவன் ‘உன் கிட்ட படிச்சது ஒரு குத்தமாய்யா?’ அப்படின்னு பின்னங்கால் பிடறில பட ஓடினா

    – எவனையாவது ஒருத்தனப் புடிச்சு ‘நீ தான் இதை எழுத சரியான ஆள்’ அப்படின்னு ஒரு செர்ட்டிஃபிகேட் குடுத்து அணிந்துரை எழுதி வாங்கிரணும்

    இதெல்லாம் நானா சொல்லலைங்க நன்னூல் சூத்திரம் சொல்லுது!

    ——————-

    /பொயு 600/

    தாங்கள் ஒரு கைபர் போலான் கணவாய் ஸ்டாக், அதனால்தான் இப்படிப் பேசுகிறீர். விட்டால் பாண்டியர்கள் சங்கமே வைக்கவில்லை, பாண்டித்துரை தேவர் மட்டும் தான் வைத்தார் என்பீர்கள்.

    எழுநிலவனார் (இஆப) கூடிய சீக்கிரம் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டு உங்களை மிரள வைக்க வேண்டும் என நான் இயற்கையை வேண்டுகிறேன்.

    எம் தென்புலத்தார் முதுநாரை, முதுகுருகு, முதுஎமுக்கோழி ஆகியவற்றை யாத்தபோது, நுமர் ஒன்றிய ஆசியப் படிகளில் நாடோடிகளாகத் திரிந்தீர், என்பதை நினைவில் கொள்க.

 3. ட்டமிளன் Says:

  ஐயகோ! தமிழுக்காகத் தன்னையே ஆகிருதியாகத் தரச் சித்தமாயிருக்கும் ஒரு இளைஞனது கோரிக்கையை இப்படியா நிராகரிப்பது? அதிலும் ‘அணிந்துறை’ கேட்டுத் தனது ட்டமில்ப் புலமையை நிறுவிய பின்னரும் எப்படி ஐயா உங்களால் இப்படிச் செய்ய முடிந்தது?

  உருப்படியாக எதையேனும் கற்றுக்கொண்டு தொழில் நுட்ப வளர்ச்சிக்குப் பங்களித்து வேலைவாய்ப்பை உருவாக்கித் தானும் உயர்ந்து பிறரும் உயர வாய்ப்பளிப்பதைத் தவிர இந்த முதலாளித்துவத் தொழில்முனைவோர் தங்கள் வாழ்வில் கண்டதென்ன?

  டமிளை உய்விக்கத் தவித்துக் கிடக்கும் இளைஞன் ஒருவன் தொழில்நுட்ப மாயவலைக்குள் சிறைப்படுத்தப் பட்டிருக்கிறான். நெஞ்சு பொறுக்குதில்லையே இந்தத் தொழில்முனைவு முதலாளிகளை நினைத்துவிட்டால்!

  டமில் டம்மிளன் எனத் தொடர் உச்சாடனம் மட்டுமே செய்து ஆட்சியில் அமர்ந்து தொடந்து தமிழையும் தமிழனையும் கழுவில் அமர்த்திவரும் வெடியல் அரசிடம் உடனடியாக இதுகுறித்து முறையிடப் போகிறேன்.

  ட்டமில் வால்க! கல்வி ஒயிக! டாஸ்மாக் வால்க!! தொழில்நுட்பம் ஒயிக!! எலவசம் வால்க!!! எடுபட்ட மொதலாளிகள் ஒயிக!!!


  • என்னவோ போங்க…

   தஞ்சாவூர் பல்கலைக்கழகக் கல்லூரிசார் லெக்சரர் ஒருவரின் புலம்பல் என்னவென்றால், கனிமொழி குறித்த கவிதையாராய்ச்சிகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன.

   கவிதைகளே ஒரு பெரும்பிரச்சினை என்றால் இந்தக் கவிதை ஆராய்ச்சிகள்?
   சலிப்பாக இருக்கிறது.

   (நானும் இப்படியே பிலாக்கணம் வைத்து ஒரு கையறுனிலைக் கவிதை எழவை எழுதிவிடப் போகிறேனோ எனப் பயமாகவும் இருக்கிறது)

  • dagalti Says:

   /ஆகிருதியாகத் தரச் சித்தமாயிருக்கும்/

   ஆகுதி?

   • ட்டமிளன் Says:

    /ஆகுதி?/

    ஆம் ஐயா, சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

    ஆனால் தமிழலக்கிய வாதிகளுக்கு ஆகுதியோ ஆகிருதியோ அல்லது அடுப்புத்தீயோ எதுவாகிலும் சம்மதமே. அவர்கள் கைக்கு என்ன வருகிறதோ அதுதான் அலக்கியம், எத்தனை பக்கங்கள் என்பதே முக்கியம், அதற்கு பொருள் இருக்கிறதா இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லை.

 4. தீராவிடன் Says:

  தமிழகத்தின் உயர்கல்வி/ஆராய்ச்சித் தரத்தை உணர்த்தும் அற்புதமான செய்தி ஐயா, மிக்க நன்றி. இனி ஒவ்வொரு நாளும் புது உச்சங்கள் எட்டப்படும் என்பதில் ஐயமில்லை. அநேகமாக இந்த ஒற்றைச் செய்தியே பெரும்பாலான திராவிடியாக்களுக்கும் அவர்தம் அடிவருடிகளுக்கும் பிறவிப்பயனை அளித்திருக்கும்.

  இவ்வகை பராக்கிரமங்கள் பேருருக் கொண்ட வாமனனாக வானோங்கி நிற்பதாலேயே கல்வி குறித்து எழுதத் தொடங்கிய பதிவுகள் சில அந்தரத்தில் நிற்கின்றன. கொஞ்சமே எஞ்சி நிற்கும் சமனத்தையும் பலியிட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில் மேற்கோண்டு எழுதுவது நிறுத்தப்பட்டது.

  மற்றபடி, கவிங்கரின் ராசலீலாக்களையும் இன்னபிற குடும்பத்தினரின் லீலாவினோதங்களையும் ஆராயும்பொருட்டு சர்வதேசப் பல்களைக்கலகம் உருவாக்கப்பட்டாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

 5. பொன்.முத்துக்குமார் Says:

  ராம், அவர் அணிந்துகொள்ள உறை கேட்டிருக்கிறார், அது புரியாமல் நீங்கள் வேறு …. :)


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s