நாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (3/4)

April 18, 2019

சரி. இதற்கு முன், முதல் இரண்டு பகுதிகளைப் படித்தால் நலம். அரசியல்சரியின்மை, இந்தப் பகுதியிலும் தொடர்கிறது. மகிழ்ச்சிதானே? :-(

 

 

[என் சொந்தப் பிள்ளைகளின், பள்ளிப் பிள்ளைகளின் வளமான, பிரகாசமான, அமைதியும் முன்னேற்றமும் துலங்கப்போகும் எதிர்காலத்துக்காக – தாமரை மறுபடி பூக்கவிருக்கும் தடாகத்திற்காக – படுமோசமான சுயநலத்துடன் பாஜக/மோதிக்கு வாக்களித்துவிட்டுத் தொடர்கிறேன்…]

… இப்படியாப்பட்ட சூழலில் தான் நானும், என் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் பாரதீய ஜனதா கட்சிக்காக அதன் மரியாதைக்குரிய தலைவர்களுக்காக, என் கவலைகளைப் பகிர்ந்து/எதிர்கொண்டு காத்திரமான வளர்ச்சியை நோக்கிப் பணிசெய்பவர்களுக்கு – என்னாலான, ராமாயணச் சேதுபந்தன அணில்முதுகின் மணற்துகள் ஒன்றைப்  போல வாக்குசேகரிக்க முயன்றேன். இது ஒரு பெரிய விஷயமும் இல்லை – ஏனெனில் கைவசம் நேரமும் கொஞ்சம் சக்தியும் புஜபலமும் இருக்கும் எவருமே செய்யக்கூடிய விஷயம்தான் இது.

பெரும்பாலும் தனியாக. சில சமயங்களில் சில முன்னர் அறிமுகமாகியிருந்தவர்களுடன். சில சமயங்களில் ஆப்த நண்பர்களுடன். சிலசமயங்களில் வீட்டில், முக்கியமான ‘மீட்டிங்’ போவதாகச் சொல்லிவிட்டும். ஏனெனில் (பள்ளிகிள்ளி எனச் செல்லாமல் வீட்டிலிருந்தே படிக்கும்) என் பதினான்கு வயது மகனும் கூடவருவேன் என்பான் – ஆனால் அவனையெல்லாம் இவ்விஷயங்களில் இப்போதே இழுத்துவிடவேண்டுமா என்று எனக்குக் கொஞ்சம் தயக்கம். மேலும், இந்த வாக்குசேகர விஷயங்கள் சிலசமயங்களில் படுமோசமாகவும் ரசாபாசமாகவும் ஆகிவிடச் சாத்தியக்கூறுகள் அதிகம் – எனக்கு இதில் முன்னனுபவம் இருக்கிறது. ஆகவேயும்.

(ஆனால் ‘முக்கியமான மீட்டிங்’குகளுக்குச் சென்றேன் என்பது உண்மைதானே? ஆனால் வீட்டிலும் ஆயிரம் மராமத்து வேலைகள் என் கடைக்கண் பார்வைக்காக ஏங்கிக் காத்துக்கொண்டிருக்கின்றன என்பதும் உண்மைதான்!)

-0-0-0-0-

வாக்களிப்பது உங்கள் கடமை என்கிறார்கள். இதற்கு மாறாக, என்னைப் பொறுத்தவரை இது ஒரு ‘உரிமை’யாகக் கருதி ஒவ்வொருவரும் இதற்காக போராடவேண்டும். வாக்களித்தே தீரவேண்டும்.
தேவைமெனெக்கெட்டு வாக்களிக்கச் சென்று, பேமானித்தனமாக – நோட்டா ஓட்டாகப் போடாமல் இருக்கவேண்டும்.

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்’ எனச் சும்மாவா சொன்னார் லத்தீனமெரிக்க காப்ரியேல் கார்ஸியா மார்க்கெஸ் எனச் சும்மாவா சொன்னார் சாருநிவேதிதா?

அதிகாலையில் வாக் செய்தால் உடற்பயிற்சிக்கும் உடற்பயிற்சி. வாக்குச்சாவடியின் சாவடிக்கும் பெரும் வரிசைகளையும் தனித்துவமாக ஜென் டர்புர் எனத் தவிர்க்கலாம், ரஷ்யக் குறும்படம் ப்ரஷ்யப் பெரும்படம் சுருட்டுப் புகைப்படம் டால்ஸ்டாய் என்று வக்கற்றுச் சொல்லவில்லையா, பேருரைக்கவில்லையா என்னருமைப் பேராசான் எஸ்ரா?

பண்டைய பாரதப் பாரம்பரியங்களில், ஆன்மீக முமுட்சு மரபுகளில் வாக் அளிப்பதற்காகவேன்றே ஒரு சிறுதெய்வம் இருந்திருக்கிறது, தேர்தலும் தேர்தல் சார்ந்த இடத்தையும் காக்கும் தேவதை வாக்தேவி அது, என்பதை நம்மில் எவ்வளவுபேர் அறிவார்கள் என என் பேராசான் ஜெயமோகன் அவர்கள் ஆகச்சிறந்ததாக எழுதியிருக்கிறார்தாமே?


(சான்று/ஆதாரம்: மோனியர்-வில்லியம்ஸ் அகராதியிலுள்ள மேற்கண்ட வாக் தேவி-யின் படம்; இந்தத் தேவியானவள், தன்னை ஏகோபித்து ஆகச்சிறந்ததாகவேயன்றிப் பிறிதொன்றில்லாமல் ஆமோதித்த ஜெயமோகனுக்கு, வாக்குத் தவறாமல் நன்றிக்கடன் செலுத்துவதற்காக, ஒரு வெண்முரசின்மீதுதான் உட்கார்ந்துகொண்டிருக்கிறாள் என்பதை ஆழ்ந்து அவதானிக்கவும்.

ஆனால், அது வெண்முரசு தமிழ்முரசு செம்புமுரசு.)

-0-0-0-0-

(…மன்னிக்கவும். ஏனெனில் அபத்தமான சூழ்நிலைகளில் நான், நிபந்தனையற்றுச் சரணடைவது – நம் தமிழ் இலக்கியப் பிதாமகர்களின் ஆக்கங்களில்தான்… எனக்கு இவை ஒருவிதமான ஆத்மசுகமளிக்கும் வகை!)

சரி. கொஞ்சம் ஸீரியஸ்ஸாக… :-(

என் தொகுதியில் உள்ள கள நிலவரங்களைக் குறித்த என்னுடைய சில அவதானிப்புகள், பிற கருத்துகள்: (இவற்றில் பல, பிற தொகுதிகளுக்கும் ஒத்துவரலாம்)

“I have recorded some of the outward events, but I cannot record the feelings they have left me with. It is all mixed up with sights, smells and sounds that cannot be conveyed in writing.”
–George Orwell, from ‘Homage to Catalonia’

சிலபல வரலாற்றுரீதியான ‘மதச்சார்பின்மை’ பரப்புரைகள் காரணமாக – சிறுபான்மையினரில் மிகப்பெரும்பான்மையோர் மதச்சார்புடன் ஒட்டுமொத்த கும்பலாக, வாக்குகள் சிதறாமல் செயல்படும் தன்மையினர். (இதற்கு விதிவிலக்குகள் உண்டு. ஆனால், இவை விதிவிலக்குகள் மட்டுமே! + இவர்களில் பலரை நான் நேரடியாக அறிவேன். நன்றி!)

இதற்கு மாறாக – பாரதத்தின் பெரும்பான்மை மக்கள்திரளாக உள்ள ஹிந்துக்கள், பலப்பல பிரிவினைகளிலும் (மொழி ரீதியாக, ஜாதித்திரள்ரீதியாக, நம்பிக்கைகள்ரீதியாக) பரப்புரைகளிலும் மயங்கி/சிதறிச் செயல்படும் தன்மையினர். (இதற்கு மாறாக இவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், இவர்கள் மீது மதவெறி முத்திரை, நம் அறிவுஜீவிகளால் குத்தப்படும்)

இதற்கு மேற்பட்டு, நம் தொடரும் ‘மதச்சார்பின்மை’ (அதாவது ஹிந்து மதங்களுக்கு மட்டும் எதிரான) வகைப் பாரம்பரியம்; முதலில் இது (நம் மேலைமோகி வரலாற்றாளர்களின் கருத்துகள் படி, மிகவும் ஆச்சரியம் தரும்வகையில்) தில்லி ஸுல்தான்களாலும் முகலாயர்களாலும் வளர்த்தெடுக்கப்பட்டது. அதாவது – மதச்சார்பின்மையுடன் பிறமதத்தவர்களிடம் ஜிஸியா+யாத்ரீகர் வரி வசூலித்தல், கோவில்களையும் விஹாரங்களையும் உடைத்து அதன்மேல் மஸுதிகள் கட்டுதல். பின்னர், ஆங்கிலேயர்களால் இதே வகை மதச்சார்பின்மை – அவர்கள் பிரித்தாள்வதற்காகப் பயன்பட்டு, ஏகத்துக்கும் க்றிஸ்தவ மிஷனரிகளால் உபயோகிக்கப் படுத்தப்பட்டது; பின்னர் கலாச்சார ஏகாதிபத்தியங்கள் தொடரவேண்டியதன் அவசியம் கருதி நம் இடதுசாரிகளாலும், தேங்காயிய ஸோஷலிஸ-நேருவிய(!) அறிவுஜீவிப்பேடிகளாலும் காங்க்ரெஸ் கட்சியாலும் போஷகம் செய்யப்பட்டது. அதன் வளர்ச்சிக்குக் கேட்பானேன்?

ஆக – சிறுபான்மையினர் பெரும்பாலும் மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கின்றனர். பாஜக/மோதி என்றாலே அவர்களிடையே ஒரு உடல்ரீதியான எதிர்வினை! காங்கிரஸ்காரர்கள் நம் வரிப்பணத்தில் கொடுத்த நல்கைகளும் பாரத நிலபுலன்களும் தேவகௌடாக்கள் போட்ட பிச்சைகளும் நன்றாகத்தான் பலன்கொடுத்திருக்கின்றன. வாங்கிய காசுக்கு நேர்மையுடன் குரைப்பது என்பது மானுடர்களில் அடிப்படைப் பண்பன்றோ?

மசூதிகளிலும் (வெள்ளிக்கிழமை கூட்டுத்தொழுகை சமயம்) சர்ச்களிலும் (ஞாயிற்றுக் கிழமை காலை கூட்டுப் பிரார்த்தனை சமயம்) – குறைந்த பட்சம், சென்ற இரண்டுமூன்று மாதங்களாக அவர்களை ‘பாஜக-மோதிக்கு ஓட்டுப்போடாதீர்கள், போட்டால் நம் சமூகத்தையே அழித்துவிடுவார்கள்! மோதி மைனாரிட்டி மண்டையோடுகளின்(!) மீது நடனமாடுபவர்’ எனப் பலப்பல முறை சொல்லி வந்திருக்கிறார்கள். உருவேற்றியிருக்கிறார்கள், வெறியைக் கிளப்பியிருக்கிறார்கள். (இதற்கு என்னிடம் ஆடியோ நிரூபணங்கள் இருக்கின்றன; ஆனால் அவற்றைப் பகிரங்கமாக வெளியிடமாட்டேன்; நண்பர்களுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறேன்)

மாறாக, பாஜக அற்ற வேட்பாளர்களானாலும் சரி. ஹிந்து கோவில்களில் நுழைந்து வழிபடுவதாக நடித்து இளித்தால் உடனே மயங்கி பூர்ணகும்பம், மேளதாளம் எல்லாம் கோவில்களில் கனகம்பீரமாக ரெடி. கோவில்களின் போக்கு என்னால் புரிந்துகொள்ளக்கூடியது – அவை வித்தியாசம் பார்ப்பதில்லை. ஆனால் பொதுக்கூட்டங்களில் கண்டபடி ஹிந்து நம்பிக்கைகளை ஏசிவிட்டு, பின்னர் கோவில்களுக்குச் சென்றால் அவர்களுக்கும் பிரசாதம் கிடைக்கிறது. ஈஸ்வரா!

வெட்கங்கெட்டு இவ்வெறியர்களும் அவற்றை வாங்கிக்கொள்கிறார்கள் – வெளியே வந்ததும் பழைய குருடி கதவத் தெறடி, (இதெல்லாம் நம் திருமாவளவளவளவன்கள் செய்யாததா என்ன?)

(பானஸவாடி ஆஞ்சனேயர் கோவிக்குச் சென்ற கேஜே ஜார்ஜ், ரிஸ்வான் அர்ஷத்; இளைஞராகிய பின்னவர் என் தொகுதிக்கான காங்க்ரெஸ் வேட்பாளர்!  சிறுவயதிலேயே வேண்டுமளவு ‘திரவியம்’ தேடிக்கொண்டுள்ள பெருமைக்குரியவர்; இளைஞ்ஜர் காங்க்ரெஸில் இருந்தபோதே ஓட்டுக்காக படுமோசடியெல்லாம் செய்துள்ள தகுதியுமுடையவர். குண்டர். ஜார்ஜின் மதச்சார்புவெறி லீலைகள் பற்றி முன்பகுதியில் சில விவரங்கள் இருக்கின்றன)

… …மேலும் மஸூதி/சர்ச்களுக்குள்ளேயே இல்லாவிட்டாலும், வெளியே வந்தவுடன், இந்தப் பாதிரிகளின்/முல்லாக்களின் ஆகாத்தியங்களைக் குறித்து முணுமுணுத்தவர்களும் கோபப்பட்டவர்களும் இருக்கிறார்கள்! – ஆனால், இவர்கள் மிகமிகமிகச் சிறுபான்மையினர்தாம்.

க்றிஸ்தவர்களில் எந்த சர்ச் அமைப்புமே – அது கத்தோலிக்கமானாலும் சரி, பென்டகோஸ்டல்களானாலும் சரி, ஸிஎஸ்ஐ பாப்டிஸ்ட் மெத்தடிஸ்ட் ஸிரியன் க்றிஸ்தவர்களாக ஆனாலும் சரி, பிற நேற்றுமழையில் இன்றுமுளைத்த காளான்களான ஏஓஜி நியூலைஃப் ஆனாலும் சரி – இதுதான் பொதுவிதி. ‘பாஜக அடுத்தமுறையும் வந்தால் சர்ச்கள் இடித்துக் கோயில்களாகி விடும், மதமாற்றம் நின்றுவிடும்‘ என்ற பயம் பூச்சாண்டி காட்டுதல்வேறு. (நான் சொன்னேன் – இதுவரை பாரதத்தில் கோயில்கள் அழிக்கப்பட்டுத்தான் சர்ச்களோ மஸுதிகளோ ஆகியிருக்கின்றனவே ஒழிய நீங்கள் சொன்னதுபோலில்லை; மேலும் திருட்டுமதமாற்றம்தான் நிற்கவேண்டுமே தவிர, மக்களாக விரும்பினால் அவர்கள் மாறிக்கொள்ளலாம்; ஏன், நீங்களுமே கூட, திரும்ப உங்கள் தாய்மதங்களுக்கு வரலாம்!)

இஸ்லாமியர்கள் இந்த நிலைக்குக் கொஞ்சம் பரவாயில்லை. பெள்ளாரியில் இருந்து பெயர்ந்த, சென்ற தலைமுறையில் மதமாற்றம் செய்யப்பட்ட வகுப்பினர் இன்னமும் இந்த அளவுக்கு இல்லை; ஆனால் இரண்டுமூன்று தலைமுறைகளாக இஸ்லாமியர்களாக இருப்பவர்கள் மூளை வேலைசெய்யும்விதமே எனக்குப் புரியவில்லை. தர்க்கம் இங்கே வேலையே செய்யமுடியாது. ஒரே இறுகல்மயம். ஸுன்னி-வஹ்ஹாப்பியத்துக்கு நன்றி.

ஒரு போஹ்ரா இஸ்லாமியச் சமூகமும் இங்கிருக்கிறது – இவர்களை ஸுன்னிகளும் ஷியாக்களும் முஸ்லீம்களாகவே மதிப்பதில்லை – இவர்களைக் காஃபிர்கள்/காரிஜ்ஜுகள் எனக் கரித்துக்கொட்டுவார்கள் – என்பது வேறு விஷயம் – ஆனால் இவர்கள் பொதுவாகவே நாட்டு நலனை மதிப்பவர்கள், உழைத்துச் சம்பாதிக்கும் வர்த்தகங்களில் இருப்பவர்கள், கடைகண்ணி வைத்திருப்பவர்கள். படிப்பறிவும் மிக்கவர்கள் – ஆகவே வெட்டிப்பரப்புரைகளை இனம் கண்டுகொள்ளக்கூடியவர்கள். இவர்கள் மிகச் சிறிய எண்ணிக்கைகளில் இருந்தாலும் – இவர்கள் விதிவிலக்குகள் மட்டுமல்லாமல், விடிவிளக்குகளும்கூட! ஆக காங்க்ரெஸ், ஜனதாதள மாயையில் இவர்கள் சிக்கவில்லை.

என்னைப் பொறுத்தவரை – என் தொகுதியில் க்றிஸ்தவர்களும், முஸ்லீம்களும் ஒருங்கிணைந்து காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டுப்போட்டால், பாஜக வெற்றிபெறாது. ஏனெனில் – ஹிந்துக்கள் பெரும்பாலும் மதரீதியாக ஓட்டுப் போடுவதில்லை. பிற மக்கள் பெரும்பாலும் அப்படியல்லர். ஆனாலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது – பிறமதங்களிலும் ஒரு சின்னஞ்சிறுபான்மையினர், திரிசமக்காரர்களல்லாத படித்தவர்களாகவும் தேசத்தின் வளர்ச்சியின் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் திரைப்படக் கோமாளி ப்ரகாஷ் ராஜ் வேறு எழவு ஒரு வேட்பாளர்! கண்களை உருட்டிவுருட்டி உளறிக்கொட்டிக்கொண்டு அழிச்சாட்டியம் செய்யும் இந்தக் கர்நாடகத்தின் கமலகாசனார், ஒரு நல்ல பொழுதுபோக்கு.

ஆகவே, பார்க்கலாம்.

இனி மேற்படி வாக்குசேகரம் குறித்த என் உரையாடல்கள், கோபங்கள், அலுப்புகள் அறியாமைகள், ஆதங்கங்கள் உள்ளிட்ட சிலபல துணுக்குகள் – இவற்றை நான் உரையாடல் ஸ்டைலில்  அதிகமாகவே சுருக்கிக் கொடுக்கிறேன் – 4/4 பதிவில்.

One Response to “நாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (3/4)”

  1. தினேஷ் Says:

    கிருத்துவ பள்ளிகள் (எல்லாம் அல்ல)…பணவரத்து குறைவால் பள்ளி கட்டணத்தை வெகுவாக உயர்த்தியுள்ளனர் என்று நண்பர் கூறினார்.. இதனால் பள்ளியை மாற்றியதாக குறை பட்டுக்கொண்டார்..


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s