‘பெண்கள் எழுத்து,’ ‘தலித் எழுத்து’ ‘…’ ‘…’ – சில குறிப்புகள்

August 3, 2018

பெண்ணியமும் பெண்களின் எழுத்தும் எனும் கட்டுரையைப் படித்தேன். ஜெயமோகன் இதனை நேரடியாக, பட்டவர்த்தனமாக எழுதியிருக்கிறார். இந்த இளங்கோ கிருஷ்ணன் இளைஞரின் கருத்துகளும் நன்றாகவே வந்திருக்கின்றன – இவர் யார்?

இந்த இளங்கோகிருஷ்ண-ஜெயமோகனக் கட்டுரையின் உள்ளடக்கத்தை, அதன் தர்க்கரீதியான கூறுகளை ஒப்புக்கொள்பவர் அனைவருக்கும், இதே போல, ‘தலித் எழுத்து’ எனும் செயற்கையான வலிந்து புனையப்பட்ட அடையாள அரசியல் பாகுபாடும் – பொதுவாகவே ஒத்துவராது. (எனக்கு நிச்சயமாக; ஒரிரு முறை இதனை உபயோகப்படுத்த நேர்ந்தபோது – ஒரு சங்கடத்துடன் தான் செய்தேன்)

இப்படியே போனால் க்றிஸ்தவ அலக்கியம், இஸ்லாமிய அலக்கியம் என மார்க்கரீதியான அலக்கியங்களும் + கோனார் நோட்ஸ் அலக்கியம், தேவர் அலக்கியம் வன்னியர் அலக்கியம் என விதம்விதமான ஜாதிப்பாகுபாடு ரீதியான அலக்கியங்களும் + திருநங்கை அலக்கியம் திருமதிநங்கா அலக்கியம் போன்ற பாலியல் தயிரியல் சார்ந்த அலக்கியங்களும் + பின்நவீனத்துவ அலக்கியம் முன்பழமைத்துவ அலக்கியம் ரெண்டுங்கெட்டான் அலக்கியம் போன்ற சுளுக்கெடுப்பு அலக்கியங்களும் + லத்தீ அலக்கியம் சாணி அலக்கியம் புழுக்கை அலக்கியம் போன்ற சாரு நிவேதித விளிம்புக் களிம்பு அலக்கியங்களும் + குழந்தை அலக்கியம் விடலை அலக்கியம் நடுவயதுஅரைகுறை அலக்கியம் கிழக்கோட்டான் அலக்கியம் போன்ற வயதுவாரி அலக்கியங்களும் + இடதுsorry வலதுசாரி அலக்கியம் நட்டநடுசாரி அலக்கியம் என சகல சாரி அலக்கியங்களும் வந்து ரவுண்டு கட்டிக்கொண்டு அடித்து நம்மை திக்குமுக்காடச் செய்துவிடும்.

ஊக்கபோனஸாக – அஇஅதிமுக அலக்கியம் திமுக அலக்கியம் சீமார் அலக்கியம் எனத் தீராவிடக் கட்சி அலக்கியங்கள் + சமையல் அலக்கியம் சாம்பார் அலக்கியம் பரோட்டா அலக்கியம் எனச் சாப்பாட்டு அலக்கியங்கள் + தச்சு அலக்கியம் ஸாஸ்திரி அலக்கியம் கொத்தனார் அலக்கியம் போன்ற தொழில்முறை அலக்கியங்கள் + பாச அலக்கியம் ஆபாச அலக்கியம் போன்ற லவ்வு அலக்கியங்களும் – இவ்வகைசார்ந்த வகைவகையான வகையறாக்கள் கொள்கைக் கூட்டணி அமைத்துக்கொண்டு நமக்குப் படுபயங்கர பீதி அளித்து பேதி வரவழைக்கும்….

தேவையா, சொல்லுங்கள்?

என்னைப் பொறுத்தவரை நல்ல (தரமுள்ள) இலக்கியம், எஸ்ராமகிருஷ்ண (தரமற்ற) அலக்கியம் எனும் பாகுபாடே போதுமானது.

பிற உள் ஒதுக்கீடுகள் தேவையற்றவை. அவை தகுதியற்றவைகளைப் பிரகடனப் படுத்தி மினுக்கிக் கொண்டும் பிலுக்கிக்கொண்டும் அலையவே பயன்படுபவை.

இன்னும் மோசமாக – இம்மாதிரி காரியார்த்த பிரிவினை வாதங்கள், பாரத சமூகக் கூட்டுறவுகளைக் குலைத்து, நம்மை சண்டை சச்சரவுகளில் ஈடுபடவைத்து, அவ்வுடைப்புகளில் லாபம் காணும் குயுக்திச் சக்திகளுக்கே பயன் கொடுப்பவை.

பின்குறிப்பு: என் மீது சாடுவதற்கு முன், தயவுசெய்து ஒன்றைப் புரிந்துகொள்ளவும். நான் எழுதுபவன். ஆனால் எழுத்தாளன் கிடையாது. வெறும் துய்ப்பாளன்தான். எனக்குச் சர்வ நிச்சயமாக இலக்கியக் காரன் என்கிற பிரமையெல்லாமும் இல்லை. சரியா? ஆக – நான், பொச்சரிப்பு எனும் எழுத்தாள அடிப்படை சுபாவத்தின் காரணமாக இதனை எழுதவில்லை.

ஆனால், சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக, கண்டபடி கண்ணில் பட்டதையெல்லாம் வாசித்திருக்கும் எனக்கு, பலப்பல மகத்தான இலக்கியங்களை வாசித்து விகசித்திருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ள எனக்கு, இலக்கியம் என்றால் என்ன என்பதைப் பற்றி சிலபல கருத்துகள் உண்டு.

ஆக – நல்ல இலக்கியத்தை வேட்டி அவிழ்வதை அறியாது வெட்கமில்லாமல் ரசிப்பவன், கேடுகெட்ட அலக்கியத்தை தாட்சண்யம் பாராமல் எட்டி உதைப்பவன் என்பதில் எனக்குப் பெருமைதான்.

நன்றி.

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s