ஐயோ பாவமே! இதுவரை, உங்களுக்கு விருது ஒன்றுமே கிடைக்கவில்லையா? :-(
July 9, 2018
கவலைப் படாதீர்கள்.
தமிழகத்தில் ‘விருது கொடுப்பது’ என்பது குடிசைத் தொழில்.
சுமார் 95% தமிழர்கள் இந்த எழவுகளைக் கொடுப்பதிலோ வாங்குவதிலோ எக்காலத்திலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் (மிஞ்சியிருக்கும் 5% ஆசாமிகள் இது குறித்த யூக மார்க்கெட் – ஃயூச்சர்ஸ் தரகு & பெட்டிங் வேலைகளில்), அதுவும் கல்தோன்றி மண் தோன்றி மண்ணாங்கட்டி தோன்றாக் காலத்திலிருந்தே – என என்னெருமை நண்பரும் அற்புதமான வரலாற்றாய்வாளரும் ஆஇரா வேங்கடாசலபதியாருக்கே அல்வா கொடுக்கும் அனுபூதி நிலையில் உள்ளவருமான பேரறிஞர் ராமச்சந்திரகுஹா என்னிடம் சொன்னார் எனச் சொல்லிக்கொள்கிறார்கள்.
அதாவது – எந்தக் கழுதையோ கழுதைகள் குழுமமோ எந்தவொரு வினாடியும் ஒரு விருதையோ பட்டுச்சால்வையையோ குல்லாவையோ மேற்துண்டையோ பரிசிலையோ பொற்கிழியையோ பணமுடிப்பையோ ரொக்கத்தையோ செக்கையோ நல்கையையோ – பிற வெள்ளிமூக்குக் குதிரைகளுக்குக் கொடுத்தபடியிருக்காமல் தமிழகத்தில் கடிகாரம் முன்னோக்கி நகரவே முடியாது. மன்னிக்கவும்.
-0-0-0-0-0-0-
சரி.
ஆகவே.
இதுவரை உங்கள் வாழ்நாளில் ஒரு சிறு சாதிப்பையும் (=caste bag even) கூடச் செய்யவில்லையா?
அதிசராசரிகளாக வாழ்ந்து அமோகக் குப்பைகளாக வரலாற்றுச் சூழியில் அடித்துக்கொண்டு போக ஏகோபித்த வாய்ப்பு பெற்றவராக இருந்தாலும், இந்தப் பிரபஞ்சத்தில் (=other famine not) உங்களுக்கேயென்ற ஒரு உன்னதசராசரியிடத்தைப் பெற உங்களுக்கு வாய்ப்பில்லை என உருகுகிறீர்களா?
சுற்றுச்சூழலியல் காப்பு, இயற்கைவளமியல் அகவல், மனிதவுரிமையியல் கூவல், மற்றபடி ஆதிமுதல் பகவன் வரை அந்தாதி மதச்சார்பின்மை பஜன், சகிப்புத்தன்மை ஆஸான் எனச் சூறாவளியைப் போலச் சுற்றிச்சுற்றி இணையத்தில் இடம் கிடைத்தபோதெல்லாம் தங்கள் மேலான கருத்துகளைப் பகிர்ந்து வலம் வந்தாலும், அவ்வப்போது பொழுதுபோக்காகத் தெருவில் இறங்கி போராளித்தனமாகப் பேருந்துகளின்மீது கல்விட்டெறிந்து சந்தடிசாக்கில் காவல்துறையினரை அடித்தாலும் உங்களை எந்த அமைப்பும் கண்டுகொள்ளவே மாட்டேனென்கிறதே என வருத்தமாக இருக்கிறதா?
ஒரு விருதும் வாங்காவிட்டால், உங்களை விருதாப் பயல் என அழைத்து ஏளனம் செய்வார்களே என வேதனைப் படுகிறீர்களா?
–0-0-0-0-0–
கவலை வேண்டேல். ஏனெனில் ஏற்றம் உண்டு.
குழப்பமாக இருந்தால், உங்கள் சாய்வு நாற்காலிக்கு அடுத்த நாற்காலியில் அமர்ந்துகொண்டிருக்கும் மாற்றுவிவசாயியைக் கேட்கவும். முழ நீளத்துக்கு அதைப் பற்றி ஃபேஸ்புக்கில் அவர் இதுகுறித்து எழுதியிருக்கும் குறிப்புகளை உங்களுடன் உடனடியாகப் பகீர்ந்துகொள்வார்.
ஆகவே.
வா தம்பீ (அல்லது தங்காய்) வா! வாழ்வியலில் வசந்தம் கண்டு விருதியல் பெறலாம்!
ஏனெனில். எப்படியெனில்.
சராசரியாக, சராசரித்தனம் மிக்க நம் வாழ்நாள் வாழ்வியலில் – அதிசராசரி ஒருவரிடம், ஒரு வஸ்து இல்லையென்றால், அரசியல் சரிகமபதநிசவின் அடிப்படைகளின் படி அவரை மாற்றுவஸ்துவாளர் என நாம் கடைந்தெடுத்த இளக்காரத்துடன் பாடிக்கொண்டாடி அழைப்பதில்லையா?
சிலபல தவிர்க்க இயலாத உடலியல் (அல்லது உளவியல் அல்லது உளறியல்) காரணமாக வாடும், ஆனால் மற்றபடியும் திறனற்று அலையும் ஒருவரைப் பவ்யமாக, மாற்றுத்திறனாளர் என்று கடந்தெடுத்த போலிக் கரிசனத்துடன் அழைப்பதில்லையா? (எடுத்துக்காட்டு: கனிமொழி ஒரு மாற்றுக்கவிதையாளர்)
அதுபோலத்தான்.
நீங்கள் ஒரு…
…மாற்றுவிருதாளர்!
அதாவது, நீங்களுமேகூட தனித்துவம் மிக்கவொரு மகாமகோ மாற்றுவிருதாளரே!
நன்றி.
—
வெகு நீளமான பின்குறிப்பு: பொதுவாகவே, ஒருவிதமான காரணமும் பின்புலமும் அறிவும் உழைப்பும் இல்லாமலிருக்கும்போதே மிகக் கர்வமுடையவனாக இருக்கும் பேறுபெற்ற நான் – ஒரு பொதுஜன விரோதியும்கூட. அனாவசியமான அரட்டைகளுக்கு நேரமில்லை (ஒத்திசைவு இந்தப் பொதுவிதிக்கு ஒரு விதிவிலக்கு என்பது, பாவப்பட்ட உங்கள் தலைவிதியோ?) என ஒரு சுயசால்ஜாப்பு வேறு.
மேலும் எலக்கியம் கல்வியியல் அறிவுரை மண்ணாங்கட்டி தெருப்புழுதி எழவுகள் தொடர்பாக எவர் பேசுகிறேன் என வந்தாலும் அவர்களைத் தவிர்த்து விடுவேன்; ஏனெனில் அவர்கள் வாழ்நாளும் என் வாழ்நாட்களும் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்றன. மேலும் பாவம், அவர்களுக்குத் தெரியாது, நான் எப்படிப்பட்ட வெறுப்பிய ஆசாமி என்று.
இருந்தாலும், இன்னும் சில நாட்களுக்காவது சென்னையில் படுதீவிரமாகக் குப்பைகொட்டும் வாய்ப்பு பெற்ற காரணத்தால் – என் பலான நடவடிக்கைகளைச் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக (அதாவது கீழாக) அறிந்திருக்கும்(!) ஒரு ஆசாமி, என்னுடன் அவசியம் பேசியே (ஒரு தற்கொலை முயற்சியோ என்னஎழவோ!) தீரவேண்டும் என்றதால் சரி என்றேன்.
ஆக, கஸ்தூர்பா நகர் ரெய்ல்வே ஸ்டேஷனில் நேற்றிரவு பத்துமணிக்கு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அவருக்கு ஒரே துக்கம் + ஆச்சரியம். துக்கம்: அவர் அபிமான எழுத்தாளர்(!) எஸ்ராவை நான் இப்படிப் படுத்தி எடுக்கிறேன். ஏதாவது முன் விரோதமா? ஆச்சரியம்: நான் எப்படி இவ்வளவு இளமையுடன்(!) இருக்கிறேன்.
ஒருதடவை இரண்டுதடவை இப்படிப் பேசினால், சரி, கொஞ்சம் ஆர்வக் கோளாறு என நமட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்டே விட்டுவிடலாம். ஆனால் மறுபடியும் மறுபடியும் இந்த எழவு ஆச்சரியத்தையும் துக்கத்தையும் வெளிப்படுத்தி என்னைச் சோதனை செய்துகொண்டிருந்தார் அந்த ஆசாமி.
ஒரளவுக்குமேல் பொறுக்கமுடியாமல் போன என்னுடைய அலுப்பு எதிரிவினையின் சாராம்சம்:
துக்கத்திற்கு: ஒரு முன்விரோதமும் இல்லை. (தமிழகத்தில் நாம் பொதுவாகவும் போலியாகவும் செய்வதற்கு மாறாக) தகுதியில்லாத ஒருவரை எந்தத் துறையிலும் நாம் கொண்டாடவே கூடாது – எப்படியும், நான் பொய்பொய்யாகக் கொண்டாடமாட்டேன். பொதுவாகவே ‘இங்கிதம்’ பார்த்து, காரியார்த்தப் பேடித்தன ‘விமர்சனம்’ செய்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. நேரில் பார்க்கும்போது ஹிஹியென்று இளித்துப் புகழ்வதும், நேரில் பார்க்கப்பட்டவர் அகன்றவுடன், ‘அவன் அயோக்கியன்’ என்பதுபோல ஏசுவதும் எனக்கு ஒத்துவராது. அவ்வளவுதான்.
ஆச்சரியத்திற்கு: 30 வயது வந்தாலே (பெண்ணானாலும் சரி ஆணானாலும் சரி!) தொந்தி சரிய ஆரம்பித்துவிடும் நம் சமூகத்தில், உடலுழைப்பை வாய்ப்பேச்சுக்குக்கூட மதிக்காத தமிழச் சமுதாயத்தில் – நீங்கள் இப்படி ஆச்சரியப்படுவதில் எனக்கு ஆச்சரியம் இல்லை. உங்களுக்கு 60 வயதுதான் ஆகிறது. தொந்தி சரிகிறது. தேவையா? எனக்குத் தெரிந்து 85 வயதில் மாரத்தன் ஓடுபவர்கள் பலரை அறிவேன். தொந்தியில்லாமல் இருப்பதுதான் சாதாரணமான விஷயம். மிகமுனைந்து சோம்பேறியாக இருந்து அளவுக்கதிகமாக உண்டால்தான் தொந்தி வரும்.
…தேவையில்லாமல் பேசிவிட்டேன், பாவம். நெளிந்தார். ஆனால், கேள்வி என ஒன்று என்னிடம் தேவைமெனக்கெட்டும் மறுபடியும் மறுபடியும் பொறுப்பற்றுக் கேட்கப்பட்டால், கட்டாயம், பதில் என ஒன்று சர்வநிச்சயமாகச் சொல்லப்படும். நன்றி.
சரி விஷயத்திற்கு வாரும் என்றால்…
உங்களுக்கு ஒரு விருது கொடுக்கிறோம் என்றார். விதிர்விதிர்த்துப் போன நான் அவரிடம், “ஐயா, நான் செய்த பாவம்தான் என்ன?” எனக் கேட்டபோது, “கல்வியியல்” என்றாரே பார்க்கலாம். வோத்தா. ஒரு மசுத்தையும் சாதிக்காமல் இருக்கும் எனக்கு இது தேவையா? ங்கொம்மாள.
ஆகவே, அவர் எதிர்பார்க்காதவகையில் அவர் அர்ச்சனை செய்யப்பட்டதால் அவருக்கு வருத்தம். வேண்டுமானால் என்னுடைய மெட்றாஸ்பாஷை பாண்டித்தியத்திற்காகக் கொடுங்களேன் என்றேன்.
அவர் ‘யோசித்துச் சொல்லுங்களேன்’ என்றார். பதிலாக நான் சொன்னது: உங்களுக்கு விரயம் செய்ய நேரம் இருக்கலாம். எனக்கு இல்லை. போகலாமா?
அவர் விடவில்லை. அவர் மண்டை மூளை ஒரு ஸ்லோ ஸிபியு. ஒரு மாஜி ஐடி குமாஸ்தாவேறு. என்ன செய்வது. “என்னதான் செய்வது எனச் சொல்லுங்களேன்!”
பதிலுக்கு நான் சொன்னது 1) உண்மையாகவே உழைக்கிறவர்கள் இருக்கிறார்கள்; அவர்களை நேரில் போய்ப் பார்த்துப்பேசி அவர்களுடைய செயல்களுக்கு பணவுதவி செய்யலாம். அவர்களை கௌரவப் படுத்தி எடுக்கிறோம் என விழா நடத்தி, ‘இன்னார் உபயம்’ எனச் சொல்லிக்கொண்டு பணத்தை வியர்த்தம் செய்யவேண்டா. 2) உங்கள் வீட்டின் சுற்று வட்டாரத்தில், கற்கும் ஆவலுடன் பல குழந்தைகள் இருக்கும். எந்தவிதமான வித்தியாசமும் பார்க்காமல் வாரமிருமுறை மாலை வேளைகளில் அவர்களுடன் வேலை செய்யலாம்.
“நன்றி. ஆனால் என் விண்ணப்பம்? அதுகுறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?”
“ஐயா, நான் உங்களுடன் நடத்திய உரையாடலைப் பற்றி எழுதி என் அடுத்த மேலான பதிவைத் தேத்தப் போகிறேன். நன்றி!”
“கொடுப்பதற்காகப் புத்தகங்கள் இருப்பதாகச் சொன்னீர்களே, இருந்தால் வந்து எடுத்துக்கொள்ளட்டா?”
“சொல்லவில்லை. எழுதியிருந்தேன். ஆனால், இப்போது இல்லை. ஆகவே முடியாது. மன்னிக்கவும். மின்னஞ்சல் அனுப்பியிருக்கலாமே, ஏன் செய்யவில்லை?”
…
“மந்தைவெளியில் தானே தங்கியிருப்பதாகச் சொன்னீர்கள், எனக்கு ஆல்வார்பெட்தான். நாளை மறுபடியும் பார்க்கலாமா? தமிழிலக்கியம் பற்றிப் பேசவேண்டும்போல இருக்கிறது.”
“வேண்டாம். நன்றி. மேலும் அது ஆழ்வார்பேட்டை அல்லது ஆழ்வார்பேத்.”
—
- சுடச்சுட ‘வாழ்நாள் வாழ்நாளாளர்’ விருது! அப்டியே அள்ளிக்குங்க!! 06/07/2018
- வெ. ராமசாமிக்கு வாழ்த்துகள் (ஏன், உங்களுக்குமேகூட!) 05/07/2018
July 9, 2018 at 14:18
அவர் ஆல்வார்பெட் காரர் எனில் நிச்சயம் மய்யம் நடிகர்/எதிர் கால அரசியல் வாதி தான் ஐயா!
அவரிடம் போய்…..இப்படி…..
July 9, 2018 at 14:47
:-) ஓ!
அவர் மாயா மய்யீந்த்ரா மச்சம் பாக்க வந்தாரா?
July 11, 2018 at 18:15
மனுஷ்ய புத்திரனுக்கு விருது
………………………….
கவிஞர் வைரமுத்து ஆண்டுதோறும் சிறந்த கவிஞர் ஒருவருக்கு வழங்கி வரும் ‘ கவிஞர்கள் திருநாள் விருது’ இந்த ஆண்டு எனக்கு அறிவிக்கபட்டுள்ளது. 25 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் ஒரு பட்டயமும் சால்வையும் கொண்டது இவ்விருது.
கவிஞர் வைரமுத்துவுக்கும் வெற்றித்தமிழர் பேரவை நண்பர்களுக்கும் என் நன்றிகள்.
– மனுஷ்ய புத்திரன்
July 11, 2018 at 19:35
ஐயா (அல்லது அம்மணீ?),
கோபப்படாதீர்கள். பொறாமைக்கு அவசியமேயில்லை.
உங்களுக்கு உடனடியாக ‘மாற்றுவிருதாளர்’ பட்டயத்தை கிரயம் செய்து பார்ஸேல் பண்ணி நாளைக்கே குரியரில் அனுப்பி அழகு பார்க்கிறேன்.
வாழ்த்துகள்!