தமிழ் மொழியைக் கேவலப்படுத்துவது எப்படி? (அல்லது ‘இன்குலாப்’ அவர்களுக்கு ஸாஹித்ய அகடெமி விருதாமே!)
December 30, 2017
அடப்பாவிகளா! மூச்சு முட்டுகிறதே. :-(
ஆனால், ‘புரட்சிகர பென்ஸில் ஃபேக்டரி’ அன்னாரின் இறப்புக்குப் பின்னும்கூட பரிசுத்த ஆவியாக மேலேழுப்பப்பட்டு பெரும் பராக்கிரமத்துடன் விளங்குவதும் பொலிவதும் ஆச்சரியமாக இருக்கிறது, என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும். நன்றி.
-0-0-0-0-0-0-
ஒரு மராத்தி இலக்கியக்கார நண்பனுடன் நேற்று அலுவலகத்தொடர்பாக(!) அளவளாவிக் கொண்டிந்தபோது அவன் சொல்லித்தான் இந்த 2017 வருட ஸாஹித்ய விருதுகளைப் பற்றி அறிந்துகொண்டேன். மராட்டி மொழிக் கவிதைக்காக ஷ்ரீகாந்த் தேஷ்முக் அவர்களுக்கு ஸாஹித்யவிருது கிடைத்திருப்பதாகவும் சந்தோஷம்தானென்றும் இருந்தாலும் பரப்புக்கோ பாண்டேகருக்கோ கிடைத்திருந்தால் இன்னமும் மகிழ்ச்சியாக இருந்திருக்குமென்றும் சொன்னான். புளகாங்கிதமுற்று தேஷ்முக் அவர்களின் நெட்டுரு போட்டிருந்த கவிதையைச் சொல்லி நெகிழ்ந்தான். ஓரளவுக்கு அந்த மொழிபெயர்ப்பு நன்றாக இருந்ததுபோலத்தான் பட்டது.
…தேமேயென்று இருக்கலாம் எனக் கடந்த பத்து நாட்களாக அடக்கி வைத்திருந்த என் தமிழ் ஆர்வம் பீறிட்டெழுந்து உச்சமடைய, என் செல்லங்களான தமிழ்க் கவிதையாளர்களைப் பற்றிப் பீற்றிக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பை உடனடியாக உபயோகித்துக்கொள்ள, படபடக்கும் நெஞ்சுடன் இணையம் பக்கம் வந்து தேடினால் – உடனடி மாரடைப்பு.
ஆனால் – இதற்குக் காரணம், என் தமிழ் அலக்கியப் படிப்பு கடந்த சிலவருடங்களில் மிகவும் தேய்ந்துவிட்டதாலும் இருக்கலாம் – இந்த 2017ன் இறுதியில் நான் இந்தவருடம் அதிகபட்சம் 130 தமிழ்ப் புத்தகங்களை மட்டுமே படித்திருக்கிறேன் என்பது என் குறிப்புகளைப் பார்த்தால் தெரிகிறது – அடுத்த 2018ஆம் வருடம் இதனையும் குறைத்துக்கொள்ளவேண்டும். மேலும் சிற்றிதழ்களைப் படித்துக் சிதிலமாகவதையும், இணைய இதழ்களைப் படித்து இன்புறுவதையும் வெகுவாகத் தவிர்த்திருக்கிறேன். இம்மாதிரிப் பலப்பல காரணங்கள்.
ஹ்ம்ம்… இந்த யூமா அவர்கள் ஒருவேளை அடிப்படை மலையாளக்காரரோ என்னவோ! அல்லது நம் ஜெயமோகன் அவர்கள் போல இருமொழிகளிலும் பாண்டித்தியமும் படைப்புத்திறனும் உள்ளவரோ என்னவோ! ஆனால் புடைப்புத்திறன்கொண்டு மேலே துழாவ விருப்பமும் இல்லை. எப்படியும் நம் பெருமாள்முருகனாருக்கே விருதுகளும் விருதாக்களும் அளிக்கப்பட்டிருக்கும்போது, எனக்கு என்ன மேலதிக அவல நிலை, சொல்லுங்கள்…
ஆனால் எனக்கு மாரடைப்பு வந்ததற்குக் காரணம் (நெஞ்சையும் அதன் ஒத்தியைபுடைய இன்னொரு உடல் பாகத்தினையும் தலா ஒரு கையில் பிடித்துக்கொண்டு சொல்கிறேன்) – சென்றவருடம் போல இறந்த ‘இன்குலாப்’ அவர்களின் உணர்ச்சிமிகு புரட்சிமிகு எழுச்சிமிகு கவிதைகளுக்குப் பரிசாம்!
படுகேவலம், வேறென்ன சொல்ல…. இந்த எழவெடுத்த விருதுக்கு வேறு ஆட்களே கிடைக்கவில்லையா? என்னைக் கேட்டிருந்தால் இன்குலாப் அவர்கள் தரத்தில், எக்காளமிட்டுக்கொண்டே எண்ணிறந்த இறக்காத பூபாளம் இசைக்கும் சாகாவரம் பெற்ற புரட்சிப் புல்லரிப்பளிக்கும் ஆயிரக்கணக்கான கவிதைக்காரர்களை ஆர்பரித்து அணிவகுக்க வைத்திருப்பேனே! :-( சோகம். :-((

..அதாவது, இந்த இன்குலாப் அவர்கள், அரைகுறைப் பரப்புரை வசனங்களைப் பிரமையுடன் பரவவிட்ட சாதாரண வதந்தியாளர். ராஜராஜசோழனையோ, சோழ அரசையோ அல்லது காலனியாக்கம் எனும் கலைச்சொல்லையோ – அடிப்படை வரலாறுகளையோ ஒரு சுக்குக்கும் அறியாமல் – நடிப்புத் தொழில்முறை இடதுசாரிகளின் ஏகோபித்த உளறல்களை ஒடித்து உடைத்துக் கிவிதையாக்கம் செய்தவர். ஒரு கவிதைக்காரராக(!), மூடர்கூட்டத்துக்குப் பரப்புரை செய்து புல்லரிப்பு செய்துகொள்பவராக இனம் காணப்பட்டு இடக்கையால் புறம்தள்ளப்படவேண்டிவர்.
ஹ்ம்ம்ம்… எல்லாம் நம் தலைவிதி வேறென்ன சொல்ல! மண்டையிலும் அதனுடன் ஒத்தியைபுள்ள இன்னொரு உடற்பாகத்திலும் அமோகமாக அடித்துகொண்டு கொஞ்சம் யோசித்தால் – பொன்னீலன் அகிலன் நாபார்த்தசாரதி போன்றவர்களுக்கும் இதே விருது கிடைத்திருப்பதால், கொஞ்சம் மேலதிக ஆசுவாசம்.
ஆனாலும் பிரச்சினை என்னவென்றால், கண்ட குப்பைகளும் பரிசு பெற்றாலும் – அகில உலக அளவில் இம்மாதிரி அரைகுறைத்தனங்கள் விளம்பரம் பெறும், மொழியாக்கங்கள் உருவாகும், உரையாடல்களின் பாடுபொருட்களாகும் – அதுவும் தமிழ் எழுத்து உச்சங்களின், நம் கலாச்சாரத்தின் ஒரு உன்னத எடுத்துக்காட்டாக! நம் தமிழுக்கு இந்தக் கீழ்மை தேவையா?
எதிர்காலங்களில், தமிழர்கள் வெட்கித் தலைகுனியவேண்டிய விஷயமிது. சோகம்.
ஒரு பக்கம் சோழர்கள் என (மிகவும் நியாயமான) பெரும்பேச்சு பேசுகிறோம். அவர்களுடைய சமூகப் பங்களிப்புகளையும் கலை வளர்ச்சிக்கு அவர்கள் வித்திட்டதையும், பொருளாதார வளர்ச்சியையும் – திரைகடலோடியும் திரவியம் தேடுவதையும் கொண்டாடுகிறோம். (ஏன், நம் பிரதமர் நரேந்திரமோதி அவர்கள்கூட சமீபத்தில் சோழர்கள் குறித்துப் பெருமையாகப் பேசியதாக நினைவு)
ஆனால் – அதே சமயம், அதே சோழர்களைக் கரித்துக்கொட்டி வரலாற்றறிவற்று அமோகமாக உளறிக்கொட்டும் அரைகுறைகளையும், கீழோர்களையும் உச்சத்தில் வைத்துக்கொண்டாடுகிறோம். நாம் அற்பர்கள், வேறென்ன சொல்ல.
இந்த விபரீதம் எப்படி நடந்தது எனக் கொஞ்சம் நோண்டினால். ஆ!
இந்த மனிதரையும் அவர் கவிதையையும் தேர்வு செய்த ஆட்கள் – பொன்னீலன், இந்திரன், பா செயப்பிரகாசம். இந்த மூவர் கூட்டம்தான் தமிழுக்கு இந்தக் கேவலத்தை இழைத்திருக்கிறது.
இவர்களுடைய குரூரத்துக்கும் மௌடீகத்துக்கும் ஒரு அளவேயில்லை.
பொன்னீலன் அவர்கள் குறித்து எனக்குக் கொஞ்சம் கலங்கலான மதிப்பு. ஆனால் மற்றவர் இருவரும் மகத்தான அரைகுறைகளும் தமிழ்/பாரதக் கலாச்சார எதிரிகளும் ஆவர். பரங்கியர்களின் இந்தியக்கலாச்சாரப் பார்வைகளை கேள்விகேட்காமல் ஜெரித்து அமோகமாக உளறிக்கொட்டுபவர்கள். அழகியல் உணர்வற்றவர்கள்.
எப்படி இவர்களெல்லாம் இந்தக் கலாச்சார மேலாண்மை விஷயங்களில் உச்சாணிக் கிளைகளில் அமர முடிகிறது என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
பேய்கள் கமிட்டியில் அமர்ந்தால், பிணம் தின்னும் விருதுகள் – வேறென்ன சொல்ல. – ‘நான் உன்னைச் சொறிகிறேன், நீ என்னைச் சொறி’ என்றலையும் சிரங்கப்ப ராயர்களின் கூடமாகிவிட்டது இந்தப் போலி அறிவுஜீவிகளின் ஆகாத்தியம். இந்தப் பரஸ்பரச்சொறியர்களை விரட்டியடித்தால்தான் நம் தமிழச்சமூகம் உருப்படும்.
இந்தத் தேர்வுக் கமிட்டியை உருவாக்க, நம் தமிழ்ச் சூழலில் தரமான இலக்கியக் காரர்களே இல்லையா என்ன – எனக்கு மிகவும் ஆதங்கமாக இருக்கிறது. :-(
-0-0-0-0-0-0-
ஆனால் பயமாகவும் இருக்கிறது. ஏனெனில், இப்படியே போனால் – தமிழுக்கான 2018 ஸாஹித்ய விருதுகள் இப்படியும் வழங்கப் படலாம்.
தேர்வுக் கமிட்டி உறுப்பினர்கள்:
யுவகிருஷ்ணா, அதிஷா, நக்கீரன் புகழ் காமராஜ்
விருதுகள்:
ஜெகத் கஸ்பர் (அவர் விட்ட/விடும் தமிழ் கப்ஸாக்களுக்காக)
மதிமாறன் (வெறுப்பிலக்கியத்துக்காக)
நன்றி.
December 30, 2017 at 14:17
சாகித்திய அகடெமி பட்டியலில் மட்டுமின்றி உங்கள் பட்டியலிலும் கருணாநிதி, கனிமொழி இருவரும் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. தமிழனுக்கே தமிழ்க் கவிஞ்சர்களைப் பாராட்ட மனமில்லையா? மெல்லத் தமிழ்க் கிவிதை இனி சாகும் என்று பயமாக இருக்கிறது.
December 30, 2017 at 14:22
இந்தக் கூடுதல் பகீர் தகவலை நீங்கள் கேள்விப்படவில்லையா?
வைரமுத்துவுக்கு ஞானபீடம்?????????
ஜெயமோகன் தளத்தில் திடுக் திகில் அதிரடி!!!!!!!!!!
முகநூலில் பரபரப்பு!!!!!!!!!!!
http://www.jeyamohan.in/105208#.Wkdhj1WWbIU
December 30, 2017 at 14:59
ஆனந்தம்,
:-(
படித்தேன். தொடர்ந்து என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்வதற்கு நன்றி.
ஜெயமோகன் தன் ஆதங்கத்தை நன்றாகப் பதிவு செய்திருக்கிறார் என்றாலும் – நான் இம்மாதிரிச் செய்தி/வதந்தி பரிமாற்றக் குழுக்களில் இல்லை. இருந்தாலும், இது நம்பக் கூடியதாகவே இருக்கிறது. ஏனெனில் மேதகு வைரமுத்து ஒரு தேர்ந்த (எதிர்மறை அர்த்தத்தில் சொல்கிறேன்) அரசியல்வாதி. பழம்தின்று கொட்டையும் போட்ட கருணாநிதியிடம் பாடம் பயின்றவர்வேறு.
எது எப்படியோ, இன்குலாப் அவர்கள் ஸாஹித்ய விருதுக்கு ஒத்துவந்தால், வைரமுத்துவுக்கு ஏன் ஞானபீடப் பரிசு ஒத்துவரக் கூடாது?
December 31, 2017 at 15:43
இப்படி ஒன்றைச் சொல்லி மற்றொன்றை நியாயப்படுத்திக்கொண்டு நம் ‘தரத்தை’ அப்படியே காப்பாற்ற வேண்டியது தமிழினத்தின் கடமை.
ஆண்டு 2017
மாதம் டிசம்பர்.
ஆ.ராசா, கனிமொழி விடுதலை
தினகரன் எம் எல் ஏ
ரஜினி அரசியல் பிரவேசம்
இன்குலாபுக்கு அகடெமி விருது
வைரமுத்துவுக்கு ஞானபீடம்
சொர்கத்திலிருந்து கடவுள்
கவனித்துக்கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் எல்லாம் சரியாக இருக்கிறது.
(Robert Browning மன்னிப்பாராக!)
December 31, 2017 at 15:53
மேற்படி கிவிதை நானே எழுதிய போதும் தழுவல் என்பதால் முழிபெயர்ப்பு விருதுக்கான தகுதி இருக்கிறது என்பதைத் தன்னடக்கத்துடன் கூறிக்கொள்கிறேன்.
January 1, 2018 at 21:26
// தமிழ்நாட்டில் எல்லாம் சரியாக இருக்கிறது. //
அப்பாஆஆஆஆடா … எனக்கும் இப்போதுதான் ஆசுவாசமாக இருக்கிறது.
December 30, 2017 at 14:31
அசோகமித்திரனுக்கு ஞானபீடம் கிடைக்கவில்லை என்று இத்தனை நாட்களாக வருந்திக்கொண்டிருந்தேன். இப்போது நினைத்தால் ஆறுதலாக இருக்கிறது. ஹேமநாத பாகவதர்கள் செய்கிற நவீன ‘திருவிளையாடல்’களால் பாணபத்திரர்கள் தோற்றுதான் போகவேண்டும் என்பது திராவிட விதியோ? :(((
January 1, 2018 at 09:59
யுவகிருஷ்ணா, அதிஷா, நக்கீரன் புகழ் காமராஜ்,
மதிமாறன்..ஜேப்டி திருடர்களை விடவும் இழி பிறவிகள்.
Can’t believe I have to think and worry about this kind of people :(