20,000 ஆண்டுகளுக்கு முன்பே தென்னமெரிக்காவை வென்று வாகை சூடினர் கற்காலச் சோழர்கள்! #தமிழேண்டா!

December 8, 2017

​தென்னமெரிக்காவில் ஒவ்வொரு வீட்டிலும் இதனைப் பற்றி பரணி பாடினாலும், நம்மில் எத்தனை பேருக்கு தென்னமெரிக்கச் சோழர்கள் பற்றியெல்லாம் தெரியும்?

ஏனெனில், மரத் தமிழனுக்கு வரலாற்று நுண்ணுணர்வு கிடையாது. இது மிகுந்த விசனம் தரும் விஷயம்… :-(

-0-0-0-0-0-

லத்தீன்  அமெரிக்க இலக்கியம், லத்தி அமெரிக்க உலகத் திரைப்படம் என, சமயம் கிடைத்தபோதெல்லாம் புலம்பும் எஸ்ராமகிருஷ்ணன்களும் சாருநிவேதிதாக்களும் என்ன, தங்கள் வாயில் கொழுக்கட்டையையா அடைத்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்?

இந்த முக்கியமான வரலாற்றைப் பற்றி ஆஇரா வேங்கடாசலபதியும் யுவகிருஷ்ணாவும் தொ.பரமசிவம் அவர்களும் ஒருங்கிணைந்து –  விலாவாரியாக ஒரு கூட்டுக் கட்டுரையைக்கூட எழுததாது ஏன் என எனக்கு ஆதங்கமாக இருக்கிறது. ​

தமிழரின் நெடிய பாரம்பரியத்தின் குன்றிலிட்ட விளக்குகளாம் சோழர்கள் மீது  இவர்களுக்கு இவ்வளவுதான் மதிப்பா, அல்லது இந்துத்துவா சக்திகளிடம் பொட்டி வாங்கிக்கொண்டு கமுக்கமாக இருக்கிறார்களா?

அல்லது – இந்தத் தென்னமெரிக்கச் சோழர்கள், கைபர்-போலன் வழியாக இந்தியாவுக்கு வந்த ஆரியர்கள்தாம் என நிறுவ முயன்று கொண்டிருக்கிறார்களோ? மத்தியில் நடப்பது பாஜக ஆட்சியல்லவா? அதற்கு இதற்கு என ஜால்ரா போட்டால்தானே அய்யா மாதாந்திரச்சிலவு கட்டுப்படியாகும்?

…ஏன், மெத்தப்படித்த வரலாற்றாளர்களான ரொமிளா தாபர்களும் இர்ஃபன் ஹபீப்களும் – சந்தடிசாக்கில் புகுந்து விளையாடி ‘ஹிந்துத்துவாவால் மறைக்கப்படும் தென்னமெரிக்க திராவிடத் தமிழக வரலாற்று உண்மைகளும், கீழடியின் மாயா, இன்கா கருதுகோள்களும்‘ என ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை வழக்கம்போலத் தட்டிவிட்டால் குடிமுழுகியா போய்விடும்? வட நாட்டு நாகரிகங்களைப் பற்றி இப்படிப்பட்ட அற்புதமான ஆத்தும சுகமளிக்கும் செய்தி வந்திருந்தால் ஓடிப்போய் அகழ்வாராய்ச்சி செய்திருப்பார்களே!

…எம் மானமிகு தமிழன் – திராவிடன், சோற்றால் அடித்த பிண்டம், வாழைமட்டை என்பதால்தானே இந்த வடவர்கள், எமது கலாச்சாரப் பராக்கிரமங்களைக் கண்டுகொள்ளமாட்டேனென்கிறார்கள்?

லெமூரியத் தமிழனின் இவைபோன்ற வீரதீர பராக்கிரமத்தைப் பறைசாற்றும் – மறைக்கப்பட்ட புதைக்கப்பட்ட நசுக்கப்பட்ட கொளுத்தப்பட்ட வரலாறுகள் – வெளிச்சத்துக்கு வரும் காலம் எப்போது?

கொலம்பஸுக்கு மீசை முளைப்பதற்கு முன்பே, புலிக்கு வால் தோன்றுவதற்கு முன்னாலேயே தென்னமெரிக்காவை அடைந்து நம் மரத்தமிழன், மிச்சமில்லாமல் அடைந்த உச்சங்கள் அனைத்தும், எச்சங்களா? அல்லது சொச்சங்களா?

அங்கிருந்த மலைத் தொடருக்கு ஆண்டவர் எனப் பெயர் வைத்த திருப்பரட்டை கொண்ட நெடுமுடி தாங்கிய அதிகேசரி உப்புமாந்தக கமலஹாஸ்யச் சோழன் பற்றியாவது நமக்குத் தெரியுமா?
அங்கா இங்கா எங்கு தம் திரைப்படத்தை ரிலீஸ் செய்வது என அவர் விஸ்வரூபம் எடுத்து ரூம்பு போட்டு யோசித்த பின்னர்தாம் தென்னமெரிக்காவில் இன்கா பழங்குடியினர் குடியேற முடிந்தது என்பது நம்மில் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

ஆனால் மேற்படி (=upper step; translation © S.Ramakrishnan, 2017) சோழர், கீழ்க்கண்டபடி பூடகமாக ட்வீட் செய்வதன் மர்ம அர்த்தங்கள் எனக்கெல்லாம் புரியாமலா போய்விடும்?

…இருந்தாலும், அவர் ட்விட்டரில் ஆண்டவர் மலை பற்றியது போல என்னவோ தமிழ் மாதிரி ஒரு விசித்திர மொழியில் எழுதிச் சுற்றியட்ச்சிவுட்டதுதான்…
…பிற்காலத்தில் மாயன் எழுத்துவரிவடிவம் ஆனது என்பது நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும்?

(மேற்கண்ட, மாய மொழிக்கு மாற்றம் செய்யப்பட்ட கமலஹாஸ்யனாரின் ட்வீட்டில் – மூன்றாவது வரியின் இரண்டாம் படவெழுத்தில் (third row, second column – from top left of the above tablet) அவர் முகம் நயம் விளக்கெண்ணையில் பொரிக்கப்பட்டுள்ளது ஒரு சாட்சியம்!)

…உலகமே வியந்து பாராட்டிய ‘மாயா மச்சீந்திரா, மச்சம் பார்க்க வந்தீரா‘ திரைப்படப்பாடலின் உண்மைப் பின்புலம் இப்போதாவது புரிபடுகிறதா?

குறைந்தபட்சம், அந்த இந்தியத் திரைப்படத்தில் நடித்த நடிகை உண்மையில் ஒரு மனிஷக் கொரில்லா என்பதாவது?? :-(

… கமலஹாஸ்யச்சோழனால் பெயரிடப்படும் பேறு பெற்ற அந்த மலைத்தொடரான ஆண்டவரென்பதுதான் மரூவி உருவப்பட்டு உரூமாற்றப்பட்டு – ஆண்டீஸ் என ஸ்பானிய போர்த்துகீசிய கத்தோலிக்கப் பாதிரிமார்களால் பேர்மாற்றம் செய்யப்பட்டது என்கிற உண்மை நம்மில் எவ்வளவுபேருக்குத் தெரியும்?

கொடுமை. :-(
-0-0-0-0-0-0-

இதில் இன்னொரு வெட்கக்கேடான விஷயத்தையும் சொல்லவேண்டும்.

சொல்வனம், சொல்வனம் எனவொரு வடக்கமெரிக்க இந்தியத் தமிழர்களால் நடத்தப்படும் இணையப் பத்திரிகை ஒன்று இருக்கிறது. அதில் அண்மையில் தெலுங்குச் சோழர்கள் பற்றிய ஒரு கட்டுரையும் வந்திருந்த காரணத்தால், நான் என்னுடைய மிகமுக்கியமான, வரலாறுகளைப் புரட்டிப்போடும் இந்தத் தென்னமெரிக்கச் சோழர்கள் பற்றிய கட்டுரையையும் (அதுவும் ஏகப்பட்ட அடிக்குறிப்புகளுடன்) அனுப்பியிருந்தேன்.

ஆனால், பாவிகள் இதனைப் பதிப்பிக்க மறுத்தது மட்டுமல்லாமல், ‘சோழர்கள் காலத்து தேசிய விளையாட்டு பெண்ணியச் சோழி ஆட்டம்‘ எனவொரு கட்டுரையைக் கொடுத்தால் அதனை பிரசுரிப்பதாகச் சொன்னார்கள். அல்லது’ The Critical Theory of the Stone-age Chola Subaltern Studies‘ என ஒரு தலைப்பில் பாண்டியர்களின் தேசிய விளையாட்டான பாண்டியாட்டம் பற்றி எழுதலாமே, பின்னர் அதன் தமிழாக்கத்தை எஸ்.ராமகிருஷ்ணனை விட்டு செய்யச் சொல்லலாமே எனப் பரிந்துரைத்தார்கள்.

ஆனால் நான் கறாராக அவர்களிடம் சொல்லிவிட்டேன் – “என்னைப்போன்ற பராக்கிரமம் மிக்க திராவிட வரலாற்றுப் படைப்பாளிக்கு – ‘இதனை எழுது அதனை எழுதாதே’ எனச் சொல்ல நீங்கள் யார்? யார் உங்கள் பின்னால் இருக்கிறார்கள், ஆட்டுவிக்கிறார்கள் (=goat selling; translation © S.Ramakrishnan, 2017) என்பது எனக்குத் தெரியாதா, பாவிக்காவிகளே?”

 -0-0-0-0-
​ஆதாரம் கீழே.

மேற்கண்ட வரலாற்று ஆவணப் புத்தகத்திலிருந்துதான் – நான் சோழர்களின் பெருமையைப் பறை சாற்றும் உண்மைகளைக் கண்டறிந்தேன்!வாழ்க தமிழர் பாரம்பரியம்!வெல்க தென்னமெரிக்கச் சோழர்களின் மாண்பு!!சரி. இந்த மிக முக்கியமான கட்டுரையைப் படிக்கும் பேறு பெற்ற தாங்கள் இந்த விஷயத்தைப் பரவலாக்கி – நாம் தமிழர்கள் அனைவரையும் எழுச்சி பெறவைக்க ஆவன செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

நன்றி!

6 Responses to “20,000 ஆண்டுகளுக்கு முன்பே தென்னமெரிக்காவை வென்று வாகை சூடினர் கற்காலச் சோழர்கள்! #தமிழேண்டா!

  1. A.Seshagiri Says:

    இந்த தென் அமெரிக்கச் சோழனெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.நமது தொல்.திருமாவளச்சோழன் கீழே பேத்தினது சரியானதுதானா?பார்த்துச் சொல்லவும்.

    “இந்தியா முழுவதும் சிவன் மற்றும் பெருமாள் கோயில்கள் பவுத்த மற்றும் சமண கோயில்களை இடித்தே கட்டப்பட்டுள்ளன என்பது வரலாற்று உண்மை.” – :-!

    https://www.minnambalam.com/k/2017/12/08/1512716286


    • அய்யா, அய்யோ!

      1. கோமாளிகளையும் அறிவிலி உணர்ச்சி உச்சாடனக் காரர்களையும் ஸீரியஸ்ஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.

      2. நீங்கள் அவரிடம் கேட்கவேண்டிய கேள்வி: இந்தியா முழுவதும் இப்படித்தான் எனச் சொல்கிறீர்கள். ஆக – மாநிலத்துக்கு ஒன்று என்பது போல, இந்தியா முழுதும் 30-40 இவ்வாறு ஏற்பட்ட நிகழ்ச்சிகள் குறித்த ஆவண பூர்வமான, நம்பகத் தன்மை வாய்ந்த தகவல்களைத் தாருமையா!

      3. அவரால் முடியாது. ஏனெனில் அவருக்கே தெரியும் – தான் வாய்கூசாமல் பொய் சொல்வது பற்றி. தன்னை ஒரு அயோக்கியர் என்று முழுவதுமாக உணர்ந்துள்ள ஒரு ஞானி அவர். பேசுவதற்கு வேறொன்றும் இல்லை. நன்றி.

      ​​ரா.


  2. still if we click the book image link, the url fails
    http://http//press.uchicago.edu/ucp/books/book/chicago/C/bo3626081.html

    below the book image, there is text link that works. before sending this post link to my friends/group, want to make sure all these links works.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s