தயவுசெய்து இப்பதிவைக் குறித்து யாரும் ஜெயமோகன் அவர்களுக்கு வாசகர் கடிதம் எழுதாமலிருப்பீர்களா? :-(

July 28, 2017

ஏற்கனவே நான் பயபீதியில் இருக்கிறேன். :-((

மேன்மேலும் தொடர்ந்து அறிவுரைகளைப் பெற்றுக்கொள்ளும் திராணியில்லை, எனக்கு. வாழ்க்கையே கசந்து போய் விட்டது. எதைப் பார்த்தாலும் வெறுப்பாக இருக்கிறது. என்னைப் பார்த்துக்கொண்டால் வெறியே வந்து விடுகிறது. நான் உட்பட, உலகமே எனக்கு எதிராகி விட்டது எனப் படுகிறது. ஏனெனில் என்னை மிக நன்றாக எனக்குத் தெரியும். பலப் பல்லாண்டுகளாக என்னை நானே ஆழ்ந்து நுணுக்கமான நுண்ணுணர்வுடன் கவனித்து அவதானித்து வருகிறேன் என்கிற முறையில் சொல்கிறேன்… என் முதல் எதிரியே நான்தான். பாவி, எப்போது எனக்குக் குழிபறிக்கலாம் எனக் காத்துக்கொண்டிருக்கும் அயோக்கியனை எப்படி நம்புவது, சொல்லுங்கள்?

….உரையாடலையே விடுங்கள், தோய்த்துத் தொங்கும் துணிமணிகள் காற்றில் உடையாடலைப் பார்த்தால்கூட எனக்குச் சதியாட்டமாகத் தோன்றுகிறது. ஆகவேதான் இப்படி வெட்கம் கெட்டு ஒரு கோரிக்கையை வைக்கிறேன். புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். அட்வான்ஸாக நன்றியும் நவின்று விடுகிறேன், சரியா? :-(

இதனை மறுபடியும் படிக்கவும்: தயவுசெய்து இது குறித்து யாரும் ஜெயமோகன் அவர்களுக்கு வாசகர் கடிதம் எழுதவேண்டா! ப்ளீஸ்!! :-(

-0-0-0-0-0-

இப்போது ஒரு சோகக்கதை. நான் பலப்பல கந்தறகோளங்களைத் தொடர்ந்து செய்துவருபவன் என்றாலும் – அண்மையில் செய்த ஒரு பெரிய்ய்ய்ய அயோக்கியத்தனத்தையும், அது யாராலோ எப்படியோ ஜெயமோகன் அவர்களின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டால் என் கதி என்னவாகும் என்பதையும் முன்கூட்டியே யோசித்து உங்களுடன் பகீரெனப் பகிர பகீரதப் பிரயத்தனம் செய்யப் போகிறேன்.

இது ஒரு தன்னிலை வாக்கூமூலம். ஆனாலும் ஜெயமோகன் அவர்கள், என்னுடைய பாவத்தை மன்னிப்பாரா என்பது கேள்விக்குறியே. ஆக, இதற்காக அவர் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்கத் தயார் என நாத்தழுதழுக்க வார்த்தை குழற கண்கள் இனிக்க இதயம் படபடக்க – என்னுடைய கோரிக்கையை வைக்கிறேன். தடுத்தாட் கொல்லவும். நன்றி.

என் பாவச்செயலைக் குறித்த முழுவிவரங்களும் முதல்தகவல் அறிக்கையும் இதோ:

அம்மணிகளே அம்மணர்களே – கடந்த ஏப்பிரல் 2017 வாக்கில், இந்த ஈஎம்ஸி எனும் வெள்ளைக்கார ஐடி கும்பெனியில் ஐடி குமாஸ்தாவாக மகத்தான சீரிய பணி செய்து உலகமக்களின் வாழ்வை அமோகமாக முன்னேற்றிக் கொண்டிருக்கும் (முப்பதுகளில் இருக்கக்கூடும்) இளைஞன் ஒருவனும் அவன் மனைவியும் (இவரும் அதே கம்பெனியில் அதே உய்விப்பைச் செய்து கொண்டிருப்பவர், காதல் திருமணமாம், பாவம்; வரவர இந்த லெக்கிங்க்ஸ் எழவுகளை ஊதிய மகளிர் போடுவதைப் பார்க்கச் சகிக்கவில்லை, என்ன செய்வது சொல்லுங்கள்?) என் வீடு இருக்கும் குடியிருப்பில் ரெண்டு தெரு தள்ளி குடிபுகுந்தனர்.

வீட்டைக் கட்டுவதற்கு முன்னாலிருந்தே இந்த இளைஞன் இயற்கை, ஒத்துவாழ்தல், சமூகம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, உயிரினங்களின் உரிமை, இயற்கை உணவின் மேன்மை, பாரம்பரியத்தின் மேன்மை, பன்னாட்டு நிறுவன ஏகாதிபத்தியம், ‘ஒன்றேகுலம் ஒருவனே அசுரன்,’ ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்கிற ரீதியில் வயதுக்கு மீறிய ஞானத்துடன் அவ்வப்போது என்னுடன் பேசுவான். என் மூஞ்சியையும் நரைத்த தாடியையும் பார்த்துவிட்டு இது போராளிக் கிழம் என நினைத்துவிட்டான் போலும்.

எல்லாம் சரி, நீங்கள் இப்படிக் கஷ்டப்பட்டுக்கொண்டு வேண்டாவெறுப்பாக ஏன் இன்னமும் பன்னாடுப் பன்னாடை நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள் என்றால் – ஏதாவது கடப்பைக்கல் பெஞ்ச் ஒன்றைக் காட்டி உன் வீட்டில் இதை ஏன் இப்படிக் கட்டினீர்கள் எனக் கேட்டு, குறிப்புகள் எடுத்துக்கொள்வான். இந்தப் பையனுக்கு சமூகப் பொறுப்புணர்ச்சி கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே நிரம்பி வழிகிறதோ என எனக்குக் கொஞ்சம் கவலையாகவே இருந்தது. (பிரச்சினை என்னவென்றால் சுமார் 99% ஐடி குமாஸ்தாக்களுடைய பிரச்சினை இதுதான்: கொஞ்சம் கூடப் புரிந்துகொள்லமுடியாதபடிக்கு இருக்கும் அவர்களுடைய அதீதமான சமூகப் பொறுப்புணர்ச்சி, பாவம் அவர்கள்!)

குடியிருப்பின் வாட்ஸ் அப் குழுக்களில் ஒரே இயற்கைவேளாண்மை பற்றிய ஞானவுதிர்ப்பு. பிடி கத்தரிக்காய், பருத்திக்கெதிரான கொடி தூக்கல். ஒர்ரே போராளித்தனம். என் புளகாங்கிதத்துக்குக் கேட்கவேண்டுமா?

…ஆனால் அவர்கள் குடிபுகுந்தபின் தான் தெரிந்தது; அவர்கள் பாவம், சாதாரண குமாஸ்தாக்கள்தாம். பசுமைப் போராளித்தனம் எல்லாம் வழக்கமான வெறும் பேச்சுதான் என்று. ஆகவே எனக்கு ஆசுவாசம். வீட்டில் இரண்டு கார்கள். ஒரு என்ஃபீல்ட் தண்டர்பேர்ட். ‘ஆம் டேகிங் வெஹிகிள் ஃபார் எ ஸ்பின்’ மூன்று ரூமில் குளிர்விப்பான்கள். பெரிய்ய்ய டீவி. அன்றாடம் வெளியிலிருந்து சாப்பாடு, ஆகவே அனுதினமும் வீட்டு வாசலில் குப்பை. ‘வீட்டிலிருந்தே வேலை செய்கிறேன்’ போங்காட்ட வழி. வாழ்க.

வீட்டு வாசலில் ஒரு க்ரோட்டன்ஸ் ‘தோட்டம்’ – அதற்குப்போய் மெர்கேப்டன் வாசனை அமோகமாக வரும்படிக்கு ஒரு பூச்சிக்கொல்லித் தெளிப்பான். என்னிடம் கேட்டு இந்த பஞ்சகாவ்ய எழவைப் பற்றிக் குறிப்பெடுத்துக்கொண்டு போனதற்கும் நுண்ணுயிரிகளைப் பற்றிப் பேசியதற்கும் ஒரு தொடர்பும் இல்லை; அந்தக் கோமணத் தோட்டத்துக்கு ஒரு தோட்டக்காரர். வாரம் ஒருமுறை வரும் விஸிட்டிங் ப்ரொஃபெஸ்ஸர். ஆனால் இவனே எல்லா வேலைகளையும் செய்து ஒரு பெரிய காய்கறித் தோட்டம்போட்டது போல ஒரு பில்ட்-அப்.

எனக்கு இதிலெல்லாம் -‘பெத்தபேச்சு பேசுவது ஒருவிதம் நடந்துகொள்வது இன்னொரு விதம்’ எனக் கூச்சமேயில்லாமல் நம்மில் பலர் நடந்துகொள்வதெல்லாம் – பெரிய பிரச்சினையில்லை – ஆகவே, மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாலும், அந்த எழவெடுத்தவன், அவ்வப்போது வாட்ஸ் அப் ஃபேஸ்புக் தர  செய்தி பரிமாறல்களால் என்னைக் கொடுமைப் படுத்திக் கொண்டிருந்தான்.

ஆக, பயபீதியில், அந்தத் தெருபக்கம் போவதையே விட்டுவிட்டேன். லேஅவுட்வாசிகளின் கூட்டமைப்புக்கு – எழவெடுத்தவன் உபயோகிக்கும் நீருக்குப் பணம் கொடுக்காமை (கட்டபொம்மன் டைப் ‘வானம் பொழிகிறது ஆழ்துளைக்கிணறு கொடுக்கிறது – உனக்கேன் வரி கொடுக்கவேண்டும்‘ வசனம்), வீட்டுவாசலில் குப்பை, உரத்த டமுக்குடமுக்கு பாட்டு வகையறா. வெள்ளிக் கிழமை மாலை என்றால் ஒரு குடிகாரப் பார்ட்டி.  இம்மாதிரி ஏகப்பட்ட பிரச்சினைகளைக் கொடுத்துக்கொண்டேயிருக்கிறான் இந்த ‘கூடி வாழ்ந்தால் கோட் நன்மை’ பையன்.

…ஆனால் இவையெல்லாம் என் பக்கத்துவீட்டுக்காரன் செய்யவில்லை – ரெண்டு தெரு பின்னால்தான் வேறு எவனோ ஒருவன் செய்து கொண்டிருக்கிறான்… ஆகவே எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை அல்லவா? NIMBY. உலகம் இனிமைதான்.

ஆனால் சில நாட்கள் முன் காலையில் திடீரென்று குடியிருப்பு அஸோஸியேஷன்காரர்களிடமிருந்து ஒரு ஃபோன். அந்த ஈஎம்ஸி பையன் வீட்டின் முன்னால் இருக்கும் சாலையோர மரத்தில் அமிலத்தை ஊற்றி விட்டார்கள் என்று.

-0-0-0-0-0-0-

…நான் பொதுவாகவே ஒரு மரத்தமிழன் என்று அவர்களுக்குத் தெரியுமாதலால் – உடனே ஸ்தலத்துக்கு வரும்படிக்கு ஒரு அவசரச் செய்தி. என்ன விஷயமென்றால், அந்த ஃபேஸ்புக் வாட்ஸ்அப் இயற்கை வெறிப் போராளியானவன் அவன் சுற்றுச் சுவருக்குள் இலை விழுவதால் – அவன் வீட்டுக்கருகில் இருந்த சாலையோர மரத்தினையே ஒழிக்க முனைந்திருக்கிறான்.

…அங்கே போய்ப் பார்த்தால் அந்த இயற்கைப் போராளி வீட்டிற்கு முன் இருந்த ஒரு மரத்தைச் சுற்றி வட்டமாகச் செதுக்கி அங்கு ஸல்ஃப்யூரிக் அமிலம் ஊற்றப்பட்டிருந்தது. மேலும் அந்தச் செதுக்கலின் உள்ளே சிறுசிறு துளைகள் நோண்டப்பட்டு அவற்றின்மூலமாகவும் உள் மர அடுக்குகள் வரை அமிலம் செலுத்தப்பட்டிருந்தது. கொடூரம்.

எங்கள் குடியிருப்பில் – வாட்ஸ் அப் போராளித்தனத்துக்கு அப்பாற்பட்டு நிஜமாகவே பணி செய்யும், பிழைக்கத்தெரியாத கிறுக்கு கும்பல் ஒன்று இருக்கிறது. அவர்களுடன் சேர்ந்து பாம்பு பிடித்தலிலிருந்து கம்போஸ்ட் செய்வது வரை கொஞ்சம் ஈடுபாடு. தாணே சூறாவளிக்குப் பின் வேரோடு கீழே சாய்ந்து அல்லது மண்ணில் இருந்து பிடுங்கப்பட்டு இறந்துகொண்டிருந்த 60-70 மரங்களை எங்கள் குழுவுடன் சென்று புல்லி ப்ளாக் போட்டு நிமிர்த்தி அவற்றுக்குப் புனர்ஜென்மம் கொடுத்த அனுபவமிருந்ததால், அம்மரத்தையும் சாகாமல் தடுக்க முடிந்த விஷயங்களைச் செய்தோம்.

வெட்டப்பட்ட, அமிலம் ஊற்றப்பட்ட பாகத்தை நன்கு கழுவி பின்னர் அமிலத் துளைகளில் ஒரு ப்ளாஸ்டிக் ஸ்ட்ராவை வைத்து நீரை உமிழ்ந்து முடிந்த வரை அமிலத்தை வெளியில் எடுத்தோம். மரத்தைச் சுற்றி ஒரு வட்டக் குழியை நோண்டி அதற்கு வேண்டுமளவு நீர் விட்டு நிரப்பி பின் செம்மண் கொணர்ந்து போட்டோம். பின் பக்கத்து கிராமத்துக்குச் சென்று சாணியை அள்ளிவந்து புல்லுடன் கலந்து பிசைந்து அடிபட்ட பாகங்களில், உள்மரம் தெரிந்த பகுதிகளில் அப்பி, பின்னர் வெட்டப்பட்ட பகுதி வரை காய்ந்த இலைகள்+மண் கலந்து நிரப்பி, ஈரப்பதமிருக்க மூடாக்கு போட்டு –  கோணிப்பைகளைக் கிழித்துப் போர்த்தி லுங்கி டான்ஸ் செய்தோம்.

நாங்கள் சுமார் இரண்டு மணி நேரம் வேலை செய்து (இம்மரம் பிழைக்குமா எனத் தெரியவில்லை; ஊரில் இருக்கும்போதெல்லாம் தினமும் போய் குசலம் விசாரித்துவிடுகிறேன்) முடித்த பின் வீட்டை விட்டு வெளியே வந்தார் இயற்கை ஆர்வலர். என்ன செய்துகொண்டிருந்தீர்கள், உள்ளே பிசியாக இருந்தேன். கான்-கால் (=தொலைபேசி வழி மீட்டிங்). ஏதாவது உதவட்டா?

கோபத்தை அடக்கிக்கொண்டு – நான் ஒன்றுமே பேசவில்லை.

கொஞ்ச நேரம் ஏதோ குப்பைத்தனமாகப் பேசிவிட்டு – யார் இப்படிச் செய்தார்களோ இது அநியாயம்தான் – ஆனால் இந்த மரம் பிழைக்காது, ஏன் பிரயத்தனப் படுகிறீர்கள் வெட்டிவிடலாம், எனக்கும் வாசலில் ஒரே இலைகுப்பை என்றானே பார்க்கலாம்.

நான் கூட இருந்தவர்களுடன் சொன்னேன். நடிப்புக்கு இவருக்கு ஏதாவது விருதுதான் கொடுக்கவேண்டுமென்றேன். விஷயம் தடித்துவிட்டது. இன்னொருவர் சொன்னார் – நடிப்புப் பசுமைவாதி அவர் வீட்டின் பின் மனையில் இருந்த ஒரு மரத்துக்கும் இப்படியே அமிலம் ஊற்றிச் சாகடித்திருக்கிறார், அதோ பாருங்கள்!

நீயெல்லாம் ஒரு படித்த ஆசாமி, உனக்கெல்லாம் இயற்கைப் போராளித்தனம் ஒரு கேடு, பொறுக்கிப் பயலே (what a lumpen element) என்றேன். அடியுதை ஆகியிருக்கவேண்டும். ஆனால் ஆகவில்லை. இது கொஞ்சம் சோகமே!

பிரச்சினை என்னவென்றால் – பெரும்பாலான போராளிகள், உதயகுமார்கள் உட்பட அயோக்கியர்கள்; ஆனால் இவர்கள் பெத்த பேச்சு பேசி மினுக்கிக் கொண்டு டீவி ஃபேஸ்புக் ட்விட்டர்  எனஅலைவதினால் இவர்கள் பின் ஒரு ஜால்ரா அடிக்கும் அற்ப கும்பல். இதுதான் வாழ்க்கை.

-0-0-0-0-0-

… ஆக, சிலபல இரவுகளாகச் சரியாகத் தூக்கமே வரவில்லை. ஜெயமோகன் அவர்கள் என் வன்முறைத்தனத்துக்காக, எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்கத் தயார் என்று படுதெகிர்யமாகச் சொல்லிவிட்டாலும் அவர் என்ன செய்துவிடுவாரோ என நினைத்தால், பாவி இனமானப் போராளித் திராவிட நெஞ்சம் அது பாட்டுக்குப் படபடத்துக்கொண்டேயிருக்கிறது.

என் மனைவி ஆறுதல் சொன்னாள் – டேய், அந்த ஐடி இஞ்சினீயர் குமாஸ்தா ஒரு கன்னடக்காரன், அவன் எப்படி ஜெயமோகனுக்குக் கடிதம் எழுதுவான், கவலை வேண்டேல்.

என் பிரச்சினையென்னவென்றால் – இந்தக் கஞ்சினீயர்களுக்கு, அலுவலகத்தில் உழைத்துச் சம்பாதிக்கவேண்டிய அவசியமில்லாததால் – தங்கள் ஐடி குமாஸ்தாவிய வலைப்பின்னல்களை வைத்துக்கொண்டு, என் மகாமகோ சிற்றாசான் ‘நிசப்தம்‘ மணிகண்டன் அவர்களைத் தொடர்புகொண்டு விட்டால் நான் எப்படி அதனை எதிர்கொள்ளவேண்டும் என்பது எனக்குப் பிடிபடவில்லை,

நிசப்தம்காரருக்கு அனுதினமும் குறைந்தபட்சம்  ஒரு பதிவாவது போடவேண்டும் எனும் வேண்டுதல் இருப்பதால், அதன் காரணமாக எந்த விஷயத்தை எப்படிப் பீராய்ந்து நமக்கெதுக்குவம்பு என விலகிக்கொண்டே விலகாமல், எத்தையாவது பாவம் எழுதவேண்டியிருப்பதால் – என் விஷயம் அவரிடம் போய்ச் சேர்ந்தால் எனக்குச் சங்குதான். ஏற்கனவே எனக்கும் அவருக்கும் பாலஸ்தீன்-இஸ்ரேல் குறித்த வாய்க்கா தகராறுவேறு** நிலுவையில் இருக்கிறது.

ஆக, நிசப்தத்தின் சப்தத்துக்கு உடனடியாகச் செவிசாய்த்து, ஜெயமோகன் அவர்கள், என்னைச் சீர்திருத்தும் பணியை மறுபடியும் சிரமேற்கொண்டால் நான் என்னதான் செய்யக்கூடும், சொல்லுங்கள்? :-(

… பாவி ஐடி குமாஸ்தாக்கள், இவர்களுடைய சதி வலைப் பின்னல்களை வைத்துக்கொண்டு எப்படியாவது திரியாவரம் செய்து உலகத்தில் எந்த மூலையில் எந்த ஏடாகூட விஷயம் நடந்தாலும், மொழிகளுக்கு தேசங்களுக்கு அப்பாற்பட்டு ஜெயமோகனின் பார்வைக்கு எடுத்துச் சென்று விடுகிறார்கள்.

மேலும் வாசகர் கடிதங்களாக எழுதிக் குவித்து ஜெயமோகனுக்குக் கெடுபிடி கொடுத்து அவரை எனக்கு எதிராகத் திருப்பிவிடுவார்கள் என்பதும் எனக்குத் தெரியும். நானே இப்படி ஜெயமோகனுக்குச் சுமார் 500 மின்னஞ்சல்களை எழுதியிருக்கிறேன் – அதில் குறைந்த பட்சம் 500 பேர் பற்றி அவரிடம் மட்டுறுத்தலுக்காகவும் அறம்போதித்தலுக்காகவும் கோரிக்கை வைத்திருக்கிறேன். பாம்பின் கால் பாம்பறியுமல்லவா?

-0-0-0-0-0-0-

மத்தியஸ்தம் செய்கிறேன் என்று ஜெயமோகன் இப்படியெல்லாம் எழுதினால் பரவாயில்லை:

1. ஒரு பார்வையில் பார்த்தால் ஈஎம்ஸிகாரர் செய்தது சரி. இன்னொரு பார்வையில், நீ செய்தது. இப்போது நீங்கள் இருவரும் சமர்த்தாகக் கைகுலுக்கி ஆரத் தழுவிக் கொள்ளுங்கள்.

2. ஈஎம்ஸிகாரர் இளைஞர். இன்னமும் தமிழ் கற்றுக்கொள்ளவில்லை. ஆகவே என் தளத்தைப் படிக்கவில்லை, ஆகவே ஞானம் கிடைக்கவில்லை. இப்படி மாற்றுத் தமிழாளராக அவர் இருக்கும்போது, உன்னைப் போன்ற கிழம் ஏன் அவருடன் அனுசரித்துக்கொண்டு போகக்கூடாது?

3. கொஞ்சம் கூடப் பொறுப்பில்லாமல் கன்னடர்களுடன் நீ வீண்வம்புக்குப் போனால், தமிழர்களுக்குக் காவிரி நீர் எப்படிக் கிடைக்கும்? உன்னைப் போன்றவர்கள் இருப்பதால்தான் சமுதாயத்தில் நல்லிணக்கம் என்பதே இல்லை. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை துளிக்கூட இல்லையே! 50ல் வளையாதது 60ல் எப்படி வளையும்?

4. வெறுப்பும் சலிப்பும்தான் உன் வாழ்க்கை என்றாகிவிட்டது. உன்னை நான்தான் திருத்தவேண்டும். வேறு வழியேயில்லை. இந்த தடவை ஜே அல்லது ஐ என்பவர் கடிதம் எழுதும்போது (சென்ற தடவை திரு கே எழுதினார், நினைவிலிருக்கிறதா?) விலாவாரியாக உன்னைப் பின்னி எடுத்துவிடுகிறேன்.

ஹ்ம்ம்ம்… மேற்கண்டபடி எழுதினால் அவற்றை என் வழுக்கை மண்டையில் வைத்துக்கொண்டு கூத்தாடுவேன். அவர் அறிவுரைப்படி ஒழுகுவேன்.

…ஆனால், “உண்மையான ஆய்வும் விவாதமும் வேறெங்கோ நிகழ்கிறது என நம்பி ஆறுதல்கொள்வோம்” என்று மறுபடியும் ஏதோ எழுதிவிட்டால் — ஒருசேர, அற்பனாகிய என்நுடைய ஓஸி ஒத்திசைவு தளத்திலும், அவருடைய ஜெயமோகன்.இன் தளத்திலும் ஒரு உண்மையான விவாதமும் ஆய்வும் ஒரு எழவுக்கும்கூட நடப்பதேயில்லை என்றெல்லவா ஆகிவிடும்?

ஒரே குழப்பமாக இருக்கிறது. உதவமுடியுமா?

-0-0-0-0-0-0-0-

…ஆனால் என் மனைவி+துணைவியானவள், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தி. ஆகவே மேலும் தொடர்ந்தாள் – இந்த விஷயம் எப்படியாவது ஜெயமோகனிடம் போய்ச் சேர்ந்தாலுமேகூட, நான் வேண்டுமானால் அவருக்கு ஒரு ‘மாற்றுப் பார்வை’ வாசகர் கடிதம் எழுதுகிறேன் அது பத்தாது என்றால் மேலும் இரண்டுமூன்று பெயர்களில் எழுதுகிறேன் – அவர் ஒன்றும் நீ இப்படி பயந்து நடுங்கும் அளவுக்கு கோபக்காரர் அல்லர். (அவள் அண்மையில்தான் ‘இந்திய ஞான மரபில் ஆறு தரிசனங்கள்‘ படித்திருக்கிறாள்) – எப்படியும் இப்படி மலைபோல வாசகர்கடிதங்கள் குவிந்தால் அவை அனைத்தையும் மட்டும் பதிப்பித்து தன் மட்டுறுத்தலை சாய்ஸில் விட்டுவிடுவார். பயப்படாதே!

இருந்தாலும் பயமாகவே இருக்கிறது. ”judgement day’ குறித்து அடிவயிற்றில் மகாமகோ கலக்கம்.

முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும்.

ஆக அம்மணிகளே, அம்மணர்களே! நீங்கள் ஒவ்வொருவரும், என் சார்பாக, என்னை ஆதரித்து ஆளுக்கொரு மின்னஞ்சலை ஜெயமோகன் அவர்களுக்குத் தட்டிவிடமுடியுமா? ப்ளீஸ்?? :-((

-0-0-0-0-0-

இந்தத் தகராறு குறித்த பதிவுகள்:

 

 

**மணிகண்டப் பதிவுகள்: (பாலஸ்தீன-இஸ்ரேலி வாய்க்கா தகராறு++ ஆவணங்கள்)

22 Responses to “தயவுசெய்து இப்பதிவைக் குறித்து யாரும் ஜெயமோகன் அவர்களுக்கு வாசகர் கடிதம் எழுதாமலிருப்பீர்களா? :-(”

  1. Arun Says:

    RS பிரபுவின் சமீபத்திய இந்தக் கட்டுரையை http://bit.ly/2eS2qSz நீங்கள் படித்துஇருக்கலாம். உங்கள் கட்டுரைக்குத் தொடர்புடையது என்பதால் இங்கே பதிகிறேன்.

    நன்றி!


    • thanks. someone else had sent it along last night. :-) it is good to have a healthy discussion on ‘taking positions’ – yeah?


    • what are you waiting for, sir arun?

      did you write to jeyamohan representing my case and asking him to be please kind to me?

      • Arun Says:

        இந்த ஆரோக்கியமான விவாதத்தை என்னளவில் உள்வாங்க முயல்கிறேன். உங்கள் மற்றும் பிரபு தரப்பு எனக்கு முக்கியமாகப் படுகிறது, இதன் மூலம் பொதுபுத்தி சார்ந்த என் முன்முடிவுகளில் இருந்து விலகி களஉண்மையைப் புரிந்துகொள்கிறேன்.

        ஜெயமோகன் தொடர்ந்து உங்களைப் படித்துக்கொண்டுதான் இருக்கிறார் என நினைக்கிறேன். நான் கொண்டு செல்ல தேவை இல்லை :-)


      • அன்புள்ள அருண்,

        உங்களுக்கு என் பிரச்சினை புரியவில்லை. நான் என் பதிவைப் பற்றி ஜெயமோகனுக்கு எழுதச் சொல்லவில்லை அய்யா! அதை திரு ஐ அல்லது திரு ஜே அல்லது திரு எல் அல்லது திரு எம் செய்துவிடுவார்கள்.

        என்னை பற்றி நல்லதாக நாலு வார்த்தை (கொஞ்சம் கஷ்டம்தான், ஆனால் அட்ஜஸ்ட் செய்துலகொள்ளுங்கள்) அவருக்கு எழுதி – என் தவறுகளை அவர் உடனடியாக மன்னித்து தடுத்தாட்கொள்ளும்படிக்கு அவருக்கு ஒரு பரிந்துரை வாசகர் கடிதம் அனுப்பினால் போதுமானது.

        நேரமாக நேரமாக, எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது! காலையில் நான் இப்பதிவைத் தரவேற்றியதில் இருந்து லேசாக மார் வலித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவர் ஏடாகூடமாக ஏதாவது தண்டனையை எனக்கு அளித்துவிட்டால், எனக்கு மேன்மேலும் அழுத்தம் வரும்.

        நானும் வேறு வழியேயில்லாமல் தொடர்ந்து இப்படியே எழுதிக்கொண்டிருக்கவேண்டி வரும்.

        நீங்கள் யாரென்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் உங்களுக்கு இதெல்லாம் தேவையா, சொல்லுங்கள்?

        தொடர்ந்து வெறுப்பிலும் கசப்பிலும் துவர்ப்பிலும் காரத்திலும் எழுதப்படும் இந்த ஒத்திசையாப் பதிவுகளைப் படித்து உங்களுக்கு என்ன லாபம்?

        ஆக, உடனடியாக ஒரு பரிந்துரை மின்னஞ்சலை ஜெயமோகனுக்குத் தட்டிவிட்டு என்னை ஆசுவாசப் படுத்தவும்.

        நடுக்கத்துடன்,

        __ரா.

  2. A.Seshagiri Says:

    இதைத்தான் எங்கள் பகுதியில் “காரிய கிறுக்கு” என்கிறார்கள் போலும்.நீங்கள் காரியத்திலும் சரி கிறுக்குத்தனத்திலும் சரி எங்களை(என்னை)க்காட்டிலும் எட்டாத்தொலைவில் இருக்குறீர்கள்! வாழ்த்துக்கள்!!


    • ஆக, மரத்தில் ஏறி உச்சாணிக் கிளையில் உட்கார்ந்துகொண்டு அழகு காட்டும் குரங்கு என்கிறீர்கள். வாழ்க. :-(


  3. அன்புள்ள ராம்
    என் முதல் வாசகர் கடிதம்.

    “இயற்கை, ஒத்துவாழ்தல், சமூகம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, உயிரினங்களின் உரிமை, இயற்கை உணவின் மேன்மை, பாரம்பரியத்தின் மேன்மை, பன்னாட்டு நிறுவன ஏகாதிபத்தியம், ‘ஒன்றேகுலம் ஒருவனே அசுரன்,’ ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” சங்கத்தின் சார்பில் உங்கள் படத்தை எரிக்க போகிறோம்.

    இந்த நிகழ்வு ஹாப்கின்டன், எம்.ஏ. (ஈ.எம்.சி தலைமையகம்) மற்றும் பெங்களூரில் திட்டமிடப்பட்டுள்ளது.

    தங்கள் உண்மையுள்ள
    புரட்சித் தமிழன்

    Thanks to Google translator


    • அய்யா, நன்றி.

      என்று எரிக்கப் போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே சொன்னால், வந்து தலைமை தாங்க வசதியாக இருக்கும்.

      ஏதாவது பணமுடிப்பு கொடுக்கமுடியுமா. பயணப்படி, பேட்டா கிடைக்குமா?

      உங்கள் பணி இனிதே நடைபெற வாழ்த்துகள்.

      அன்புடன்,

      ரா.
      பிகு: அடுத்தமுறை என் கொடும்பாவியை எரிக்கவும்.


  4. I have seen this lip service to environmental causes in chennai after the Varda cyclone. People just dont care, but act as if they do. everyone wants fresh air, but they dont want leaves fallen off leaves ( ideal for mulching) or the birds or insects that live in trees.

    I have had some very depressing moments in the aftermath of the Vardah cyclone. One thing that i will never forget is that an young tree was just cut down ( electric saw – clean work) because one resident in the apartment thought that it may ( notice may) damage his car parked on the road. It was an young tree , growing straight and the stump is all left today, as an evidence to our selfishness and stupidity.

    i am now a days more in agreement with Scott Adams :-(


    • ​எல்லாஞ்செரி, ஜெயமோகனுக்கு உங்கள் பரிந்துரையை அனுப்பினீர்களா இல்லையா?

      என் பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு, ஆமாஞ்சொல்லிப்புட்டேன்!

  5. க்ருஷ்ணகுமார் Says:

    இந்த இளைஞ்சர் த்ராவிட பாஷாணத்தில் ஊறிய புழுவா (உபயம் தக்ஷிணாமூர்த்தி காரு பிட்ட அளகிரி) அப்புடீன்னு நீங்கள் விசாரிச்சிருக்கலாம். தமிழகத்தில் எங்கெங்கெல்லாம் கடைந்தெடுத்த அயோக்யத்தனம் நடக்கிறதோ அதுக்கெல்லாம் மூல வித்து த்ராவிட சாக்கடை என்பது என் பக்ஷபாத அவதானம்.

    இருக்கட்டும் நான் இத எழுதினது இதுக்கெல்லாம் இல்லை. இல்லவே இல்லை என்று எஸ் ரா சார் மீது ஆணையாக அட்ச்சு சொள்கிரென். உங்கள நென்ச்சு ரெம்ப கவலயா இருக்கு.

    \\ பலப் பல்லாண்டுகளாக என்னை நானே ஆழ்ந்து நுணுக்கமான நுண்ணுணர்வுடன் கவனித்து அவதானித்து வருகிறேன் என்கிற முறையில் சொல்கிறேன்… உரையாடலையே விடுங்கள், தோய்த்துத் தொங்கும் துணிமணிகள் காற்றில் உடையாடலைப் பார்த்தால்கூட எனக்குச் சதியாட்டமாகத் தோன்றுகிறது. \\

    இந்த எழுத்துக்கல் வார்த்தைல் வாசகங்கல் இவையெல்லாம் என்னைப் பார்த்தும் பார்க்காமலும் ராமை வெறிக்க வெறிக்கப் பார்த்து எஸ் ரா எஸ் ரா என்று என்று நாட்டியம் பாடுவதாக உனர்க்கிரென்.

    ராப்பகலா எஸ் ரா வைப் படிச்சா என்னென்னல்லாம் ஆகும்னு பிரியல். நடுக்கமா இருக்கு. புழுவை குளவி கொட்டிக் கொட்டி குளவியா மாத்தும்னு கேழ்விப்பட்ருக்கேன். நீங்க என்ன ஆகப்போகிறீர்களோ என்று திகிலா இருக்கு. இந்த எஸ் ரா நஷாவிலிரிந்து உங்கள எப்புடி வெளிக்கொணர்கிறதுன்னு யோஜனை செய்துவிட்டேன்.

    ஹஸ்ரத் நிஜாமுத்தீன் தர்க்காஹ் ஷெரீஃபில் இருந்து அல்ஹம்துலில்லாஹ் என்று மந்த்ரப்ரயோகம் செய்த தாயத்தை வாங்கி அனுப்பலாம்னு முடிவு செஞ்சுட்டேன்.

    லாயிலாஹா இல்லல்லாஹ்
    ராமுக்கென்ன ஆச்சல்லாஹ்

    வேலும் மயிலும் சேவலும் துணை


    • ​ // எஸ் ரா சார் மீது ஆணையாக அட்ச்சு சொள்கிரென்.

      அய்யா கொமாரூ…

      என்னால் செய்யமுடியாததை நீங்கள் செய்கிறீர்கள்! ஏதோ என் பங்கையும் சேர்த்து மேலதிகமாக ரெண்டு சாத்து சாத்தவும். மனிதரின் டொல்லை டாங்க முடியவில்லை.

      நன்றி:

      ​​ரா.
      பிகு: பொதுவாக நீங்கள் திராவிடத்தைப் பற்றி எழுதுவது சரிதான். ஆனால் மூளையும் உழைப்பும் செய்நேர்த்தியும் நேர்மையும் உள்ள எவரும் நெடுநாள் அங்கே தாக்குப் பிடிக்க முடியாது. ஆகவே. தருமத்தின் வாயு அதனைச் சூத்து கவ்வும், கருமம் அப்படியே வெல்லாது. கவலை வேண்டேல்.

  6. karthi Says:

    உங்களுக்கு facebook அக்கவுண்ட் இருக்கா !!!! , பகிரவும் .ஒரு 10-20 ஆதரவு கடிதம் ஜெயமோஹனுக்கு அனுப்பும் உறுதி அளிக்கிறேன்

  7. karthi Says:

    எனக்கென்னமோ உம மேலதான் ப்பா சந்தேகமா இருக்கு, இல்லாட்டி நீங்க ரண்டு பேரும் (jemo&you) செய்யும் சதியாக இருக்கும்

  8. nparamasivam1951 Says:

    ஜெமோ க்கு நான் எழுதிவிட்டேன். அய்யா, பயம் வேண்டாம். கடிதம் கொரியரில் அனுப்பியதால் அந்த சார்ஜை மட்டும் எனக்கு அனுப்பவும்.
    நிற்க/நடக்க, அநிசப்தம் இப்போது குளம் வெட்டுவதில் கவனமாக இருப்பதால், தங்களின் மர பாவாடை பற்றி கவலைப்பட படமாட்டார்.


    • அய்யா, நிசப்தத்தை விட்டுவிடுவோம். நமக்கெதுக்கு வம்பு.

      ஆனால் நீங்கள் உங்கள் ஆணாதிக்க மனோபாவத்தையும் வக்கிர உணர்வையும் இப்படி வெளிக்காட்டிக்கொண்டது தகுமா?

      நான் லுங்கி டான்ஸ் என்று எழுதியிருப்பதை நீங்கள் திரித்து பாவாடையாக்கி விட்டீர்களே! ஐயகோ!

      தாங்கொணா வருத்தத்துடன்,

      பேருக்கு ஆசான்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s