தொழில்முறையில், பழைய அனுபவங்களை உற்பத்தி+புத்துருவாக்கம் செய்வது எப்படி
July 26, 2017
அண்ணா!
உங்கள் பாதாரவிந்தங்களில் என் வழுக்கை மண்டையை மானசீகமாக வைத்து – உங்களிடமும் அண்ணியிடமும் ஆசி பெற்றுக்கொண்டு இக்கடிதத்தை எழுதுகிறேன். இதிள் ஏதாவடு டப்பு இறுந்தாள் மண்ணிக்கவும்.
ஆங்கிளத்திலும் எளுதியிருக்கலாம் – ஆணால் டமில்ட்டாயைக் கொள்வதைவிட ஆங்கிள அங்கிளைக் கொள்வது எணக்குக் கடிணம் என்பதாள்…
…எப்படியண்ணா உங்களுக்கு இவ்வளவு பெரிய அளவில் இப்படிப்பட்ட செறிவான அனுபவங்கள் வாய்த்தன! நம் தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகளாவிய அளவில் பலப்பல சான்றோர்களிடன் தனிப்பட்ட முறையில் நட்புகொண்டும் பல ஆழமான உரையாடல்களை நடத்திக்கொண்டும் இருந்திருக்கிறீர்களே! எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கும் 90 வயதாகி விட்டது. உங்களுடைய 50+ வருடங்களில் நீங்கள் பெற்றுள்ள அனுபவக் கடலில் 0.000000001 % கூட எனக்கு லபிக்கவில்லை என்பதை நினைத்தால் மிகவும் சங்கடமாக இருக்கிறது.
ஆனால், அதேசமயம், சான்றோரான உங்களுக்கு வாசகர் கடிதமெழுதி பிறவிப் பயனையடைய வாய்ப்பு கிடைத்திருப்பதை நினைத்தால் புளகாங்கிதமாக இருக்கிறது என்பதும் உண்மை.
உங்களிடம் எனக்குப் பிடித்தமான விஷயம் என்னவென்றால் – நடந்திருக்கக் கூடிய அனுபவங்களை அசைபோட்டு அப்படியே தத்ரூபமாக உங்கள் பொன்னான கைவிரல்களால் தட்டச்சு செய்து அவைகளுக்கு உயிர் கொடுத்து உண்மையாகவே ஆக்கிவிடக்கூடிய அருமையான கற்பனை வளம் உங்களிடம் இருக்கிறது.
மேலதிகமான எனக்குப் பிடித்த விஷயம் என்னவென்றால், யாராவது இவற்றைக் குறித்து ஏதாவது ஏடாகூடமாகக் கேள்விகேட்டாலும், அதைக் கண்டுகொள்ளாமல் அடுத்த கட்டுரைக்குச் சென்றுவிடும் மனோதைரியமும் இருக்கிறது. உங்கள் ஆன்மீக் ஆண்மைக்கு அளவேயில்லை.
மகாமகோ பேராசானே! உங்கள் அனுபவ ஆழியில் அமிழ்ந்து முக்குளிக்க எனக்குத் தெம்பில்லை.
ஆகவே என் கோமணத்திற்கும் அதனுள் இருந்ததற்கும் மாறாக, அழுத்தத்துடன் காற்றடிக்கப்பட்ட ரப்பர் ட்யூப்பினை மாட்டிக்கொண்டு இந்திய சமுத்திரத்தில் குதிக்கிறேன் – என்னைத் தடுத்தாட்கொல்லவும்.
மதிமாறன் இராக்கதபுத்திரன் தலையசிங்கம்
*தொபுக்*
…மூச்சு முட்டுகிறதே! காப்பாற்றுங்கள்!!
அண்ணா! அண்ணீ! பேரா…
(முற்றிவிட்டதற்கு முடிந்ததுகதை)
(திரை)
-0-0-0-0-0-0-
அன்புள்ள மதிமாறன் இராக்கதபுத்திரன் தலையசிங்கம்,
உங்கள் கடைசிப்பெயர் தலையசிங்கமா, தலை அசிங்கமா? உங்களுக்குப் பெயர் வைத்தவர்களைக் கேட்டுச் சொல்லவும்.
ஆனாலும் – நீச்சல் தெரியாமல் நீங்கள் குதித்திருக்கக்கூடாது. குறைந்த பட்சம், நீச்சல் கற்றுக்கொள்வதைப் பற்றி நான் எழுதிய பதிவுகளைப் படித்திருந்தாலாவது நீங்கள் ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொண்டு பிழைத்திருப்பீர்கள். (நான் அப்படித்தான் செய்வேன். ஃப்ரெஞ்ச் மொழி கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், அதை எப்படிக் கற்றுக்கொள்வது என்று ஒரு பதிவு போடுவேன். அது முடிந்தவுடன் ஆட்டோமேடிக்காக நான் ஃப்ரெஞ்ச் மொழியில் பாண்டிச்சேரித்தியம் அடைந்துவிடுவேன். பார்லே வூ ஃப்ரான்ஸே?)
எனக்குத் தெரிந்து எத்தனையோபேர் இப்படி என் பதிவுகளைப் படித்து பல்துறை வல்லுநர்களாகி விட்டனர். பலப்பலர் தமிழ்வாணர்களாகி Master of All Subjects ஆகியே விட்டனர்.
என் இணையதளத்தையே ஒரு பல்கலைக் கழகமாக்கிவிடலாமென நம் பிரதமர் மோதி யோசித்துக்கொண்டிருப்பதாக ஒரு ஐஏஸ் உயர்அதிகாரி (இது ஒரு பெரிய விஷயமில்லை என்றாலும் இவர்கள் இருவரும் பலபத்தாண்டுகளாக என் வாசகர்கள்தாம்) சொன்னார். ஆனால் எனக்குத்தான் சுயவிளம்பரத்தில் ஆர்வமில்லையே. அவையடக்கம் அளவுக்குமீறி அதிகமாகி விட்டிருக்கிறதே! ஆகவே, முதலில் என் பேராசான்களின் தளங்களை அப்படி அங்கீகரித்தால் நல்லது எனப் பரிந்துரை செய்திருக்கிறேன்.
ஹ்ம்ம்… எது எப்படியோ – இப்பதிலை உங்களுக்கான அஞ்சலியாகக் கருதிக் கொண்டு சுவர்க்கம் செல்லவும்.
உங்கள் ஆத்மா சாந்திமுகூர்த்தம் அடைவதாக. ஆமென். மாஷாஅல்லாஹ்.
ஆனால் நல்லவேளை, எனக்கு அஞ்சலிக் கட்டுரைகள் எழுதியும் நல்ல அனுபவம் இருக்கிறது. இருந்தாலுமேகூட இந்தச் சாவை வைத்துக்கொண்டு ஒரு பதிவைப் போடவேண்டுமா எனத் தோன்றினாலும் – என்னைப் பொறுத்தவரை, சுயமுன்னேற்றத்துக்கென ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதை நழுவவிடக் கூடாது. ஆகவே.
-0-0-0-0-0-0-0-
உங்கள் கேள்வியை இரண்டுவிதமாகப் புரிந்துகொள்கிறேன். மூன்று பக்கங்களிலிருந்து நோக்குகிறேன். நாற்திசைகளில் அவற்றை விரிக்கிறேன். பஞ்சபூதங்களின் பங்கு பற்றிப் பார்க்கிறேன். அறுசுவையுடன் பதிலைத் தர விழைகிறேன். ஏழு ஸ்வரங்களாக இழைக்கிறேன். ஏழரையாக இருக்கிறேன்.
நீங்கள் என்னை அளவுக்கதிகமாகப் போற்றுவது எனக்குக் கூச்சமாக இருக்கிறது. இருந்தாலும் நீங்கள் மேன்மேலும் முயற்சி செய்து இதில் உச்சங்களை எட்டி உங்களுடைய பராக்கிரமத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் என் அவா. எனக்கு மானுட வளர்ச்சி முக்கியம், மிகமுக்கியமாக என் வாசகர்களுடைய மேன்மை.
சர்வே வாசகோ புகழ்ந்தோ பவந்து.
முதலில் ஒரு விஷயம்: என்னுடைய குருக்களில் ஒருவரான மார்க் ட்வெய்ன் அவர்களை மேற்கோள் காட்டி ஆரம்பிக்கிறேன், இந்த அரிய அறிவுரையை:
அதாவது, என் பார்வையில் – வேறுவழியேயில்லாமல் சிலபல குறைந்தபட்ச உண்மைகளை எடுத்துக்கொள்ள வேண்டும், பின்னர் அவற்றுடன் சாவகாசமாக மானே தேனே கலந்துகட்டி கற்பனைக் கழுதையைத் தட்டிவிட்டு ஆரோகணித்து அமோகமாகப் பீலா விடலாம். யாரும் கேட்கமாட்டார்கள்.
அப்படியே கேட்டாலும் சாய்ஸில் விட்டுவிடலாம். அப்படி சாய்ஸில் விடமுடியாவிட்டாலும் ஹிஹி எப்போதோ நடந்த விஷயமில்லையா, அதுதான் கொஞ்சம் கன்ஃப்யூஸ் ஆய்டிச்சி என சால்ஜாப்பு சொல்லலாம்.
இரண்டாவது விஷயம் என்னவென்றால்: மறுபடியும் மறுபடியும் அதே விஷயத்தைச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும். திரும்பித் திரும்பி தொழில்முறையில் ஜோடித்து உருவாக்கப்பட்ட ‘பழைய’ அனுபவங்களை நான் முன்னமே சொன்னதையே மேற்கோள் காட்டிப் பேசி எழுதிக்கொண்டிருந்தேனானால் காலப்போக்கில் நான் சொல்வதுதான் உண்மையாக நடந்ததுபோல ஆகிவிடும். ஹ்ஹ! ஆகிவிடும் என்ன, அதுதான் உண்மை.
இதில் எனக்கு குரு கீபல்ஸ்.
மூன்றாவது விஷயம்: இதில் எனக்கு வாய்த்த பரமார்த்த குரு மு. கருணாநிதி அவர்கள். கலைஞர் இந்தக் கலையில் வல்லவர். பிதாமகர்.
இந்த விஷயத்தின் மசாலா என்னவென்றால் – புகழ்பெற்ற ஒருவர் இறக்கும் வரை காத்திருக்கவேண்டும். அதாவது ஒடும்பிணம் ஓட உறுபிணம் விழும்வரை வாடியிருக்கவேண்டும். விழுந்தவுடன் அதனைப் பற்றி எதைவேண்டுமானாலும் அட்ச்சுவுடலாம். கேட்பாரே இருக்கமாட்டார்கள். அந்தப் புகழ் பெற்றவர் என்னிடம் அறிவுரை பெற அலையோ அலை என அலைந்ததாகவும், வேசைகளைத் தேடியோடுவதிலேயே காலத்தை செலவ்ழித்ததாகவும், வருத்தத்துக்குரிய குடும்ப நிகழ்வுகளை எதிர்கொள்வதற்காக என்னிடம் சரணடைந்ததாகவும் தாராளமாகப் பிலுக்கிக் கொள்ளலாம். அந்த மனிதரை மிகமோசமாக வசை பாடலாம். அல்லது அவருடன் பழகக் கிடைத்த அரிய வாய்ப்புகள், அவர் சொன்ன பிரத்தியேகமான ஆனால் வேறு யாருக்குமே சொல்லியிருக்காத விஷயங்களாகப் பலப்பலானவையை கண்டமேனிக்கும் அட்ச்சுவுடலாம்.
இந்த வகை ‘பழைய அனுபவங்களை தொழில் முறையில் உற்பத்தி செய்தலில்’ பொதுவாக எவனுமே ஒரு எதிர்ப்பேச்சையும் பேசமுடியாது. அப்படித் தப்பித் தவறி ஏதாவது பேசினாலும் கண்டுகொள்ளாமல் பனங்காட்டு நரி போல சலசலப்புக்கு அஞ்சாமல் போய்க்கொண்டே இருக்கலாம். அல்லது எருமை மாட்டின்மீது மழை பெய்தாற்போலவும் ஆற அமர நடை பயிலலாம்.
ஒரு படிமேல் போய், புழுதி வாரியிறைப்பவர்கள் என உண்மையைச் சுட்டிக்காட்டுபவர்களைத் தூற்றி – அவர்களுடன் அவர்கள் அளவில் கொச்சைத்தனமாகப் பேச நமக்கு விருப்பமில்லை எனச் சொல்லி, நாம் பெருந்தன்மை மிக்க பெரியவர் போல அலுங்காமல் நலுங்காமல் போய்க்கொண்டே இருக்கலாம். குறைகளை நிறைகளாக நிரவிக்கொண்டே ஆனந்தத்தில் திளைக்கலாம்.
என்ன சொல்லவருகிறேன் என்றால் – சுயமுன்னேற்றத்துக்கு எத்தனம் செய்யும்போது, புளுகுணி மாங்கொட்டையாக இருப்பதற்கும், கண்டமேனிக்கும் பீலா விடுவதற்கும் தயங்குவதே கூடாது. அப்படித்தான் எனக்கு என் பேராசான் சொல்லிக்கொடுத்திருக்கிறார்.
நான்காவது விஷயம்: Everyone rises to the level of his incompetence என ஒரு வசனம் (= பீட்டர் கோட்பாடு), மேலாண்மை வட்டாரங்களில் உண்டு. பொதுவாக, நம் தமிழ்ச்சூழலில், நிறைய எழுதிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த நிதர்சன வசனம் பொருந்திக் கொண்டே வருகிறது. விதம்விதமாக எழுதவேண்டி வருவதால், சரக்கு தீரும் அபாயம் இருந்தாலுமேகூட, அடாவடியாகக் கண்டகண்ட விஷயங்களிலும் மேதாவித்தனமாக எழுதி, படிப்பவர்களைத் திக்குமுக்காடச் செய்து அதனைச் சமன் செய்து விடலாம், பள்ளங்களை நிரப்பி விடலாம் என்ற போக்கு இருக்கிறது, நம் அருமைத் தமிழில்! ஆம், நானும் இதற்கு விதிவிலக்கல்லதான். ஏனெனில் நான் ஒரு தமிழ் இலக்கியக் காரன்.
இப்போது நான் அட்ச்சுவுடுகிறேன் என வைத்துக்கொள்ளுங்கள். நான் அப்படிச் செய்கிறேன் என நீங்கள் அறிந்துகொண்டு, வெறுத்துப் போய் அதனைப் பற்றிய ஆதாரபூர்வமான விமர்சனம் வைக்க ஆசைப்பட்டால், அதற்கு உங்களுக்கு ஐந்தாறு நாட்களாகும். உங்கள் எண்ணங்களைக் குவித்து, ஒருமுறைக்குப் பலமுறை என் அட்ச்சுவுடுதலைப் படித்துக் குறிப்புகள் எடுத்துக்கொண்டு பின் தான் உங்கள் மாற்றுக் கருத்துகளை வைக்கமுடியும். ஆனால் நான் அதற்குள் சுமார் 100 மேலதிக அட்ச்சுவுடல்களைச் செய்திருப்பேன். உங்களுக்கு மேலதிகமாக வெறுத்துவிடும். வாழ்க்கையின், அட்ச்சுவுடல் மீதான விமர்சனத்தின் வெறுமையை நினைத்து நீங்கள் உங்கள் கட்டுரையையே எழுத மாட்டீர்கள். எதை விடுப்பது எதை எடுப்பது எதைக் கோர்ப்பது என நீங்கள் திக்குமுக்காடி விடுவீர்கள், பாவம் நீங்கள்.
அப்படியே நீங்கள் மூச்சைப் பிடித்துக்கொண்டு எழுதினாலும் – என் பிற வாசகர்களை வைத்து உங்களுக்குப் பொறாமை, கையாலாகாத்தனம் எனவெல்லாம் சித்திரங்களை விரித்து – ஒரு படிப்பாளியும், மக்கள்சேவையில் ஈடுபட்டுக்கொண்டுருப்பவனுமான என்னை எதிர்த்துக் கருத்துகளை உதிர்க்கும் உங்களைப் பற்றிய அவதூறுகளைப் பரப்பமுடியும்.
…ஆக – அட்ச்சுவுடுவதில் கிடைக்கும் இன்பம்ஸ் என்பது அலாதிதான். அதுவும் நான் அட்ச்சுவுடுகிறேன் எனத் தெரியாத என்னெருமை வாசகர்கள் என்னைப் புகழ்ந்து பேராசானே என விளிக்கும்போது கிடைக்கும் இன்பம்ஸ் என்பதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. நன்றி வாசகர்களே!
இப்போதைக்கு இவ்வளவு போதும்.
என்னிடம் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன என நீங்கள் அறிந்துதான் என் தளத்தைத் தொடர்ந்து படித்து வந்திருக்கிறீர்கள்; ஆனால் பாவம், நீங்கள் செத்துப் போய்விட்டீர்கள். அதுவும் நீரில் மூழ்கி.
தண்ணீர் என்பது ஒரு படிமம். தொன்மம். குறியீடு. சித்தாந்தம். அதைக் குடிப்பது ஒரு அடிப்படை உரிமை என்பது ஹம்முராபி காலத்திலிருந்தே வரும் வழமை. நீரைக் குடிப்பது எனும் அடிப்படை மானுட விழைவுதான் பிற்காலத்தில் குடியுரிமை என ஆயிற்று.
இதனை நான் அண்மையில் டக்ளஸ் ஹொஃப்ஸ்டேட்டர் எனும் உலகப் புகழ்பெற்ற அமெரிக்கப் பேராசிரியர் என் வீட்டுக்கு வந்து என்னை அவர் மகன் திருமணத்துக்கு வந்து வாழ்த்திப்பேச அழைத்தபோது, சொல்லிக் கொண்டிருந்தேன். அவருக்கு ஒரே ஆச்சரியம். என் காலில் விழுந்துவிட்டார். எனக்கு ஒரே வெட்கமாகப் போய் விட்டது. எவ்வளவு பெரிய மனிதர் அவர்!
ஓ, சொல்ல மறந்துவிட்டேனே! ‘தண்ணீர்‘ எனவொரு நாவல் தமிழில் வந்திருக்கிறது; பார்க்கப் போனால், நான் தான் அதனை எழுதினேன்; ஆனால் அவருடைய மதிப்புரைக்காக நான் அனுப்பி வைத்திருந்த அந்த நாவலின் வரைவை, அசோகமித்திரன் திருடி தன் பெயரில் போட்டுக்கொண்டுவிட்டார். கேவலம். ஆனால் அவரிடம் எனக்கு இருந்த மரியாதையால் நான் இதனைப் பற்றி ஒருவரிடமும் மூச்சு விடவில்லை.
பின்னர், அவர் இறந்ததற்கு இரண்டு வாரம் முன் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். நானும் பெருந்தன்மையுடன் அவரை மன்னித்து விட்டேன். அவரை ஆரத் தழுவி உச்சி முகர்ந்தேன். கொஞ்சம் கேசவர்த்தினி தைல வாசனை.
அவர் கண்ணீர் மல்க. ‘ராமசாமீ – நீங்கள் ஒரு மகான், கீதையில் வருவதுபோல ஒரு ஸ்திதப் ப்ரக்ஞன்‘ என்றார். அவர் பெரிய மனிதர்.
சரி.
அய்யா மதிமாறன் இராக்கதபுத்திரன் தலையசிங்கம், நீங்கள் போய்ச் சேர்ந்ததற்கு இன்னொரு வாசகர் கடிதம் போடவும். நன்றி.
அஞ்சலியுடன்,
__பேராசான்.
- பத்தே நிமிடங்களில் சுயமுன்னேற்றம் அடைவது எப்படி 23/07/2017
- கம்பர் காலத்தில் வாசகர் கடிதம் 20/07/2017
July 27, 2017 at 08:13
இப்பொழுதெல்லாம், நான் ஒரு நாளைக்கு நாலுதரம் ஜிமெயில் திறந்து ஒத்திசைவு தளத்தில் நம்முடைய பேராசான் , புதிய வலைப்பூ போட்டிருக்கிறாரா , என பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
எனக்கு இது தீராத ஒரு பழக்கமாகவோ அல்லது ஒரு போதை வாஸ்து போலவோ ஆகிவிட்டது.
|| Tell me to what you pay attention and I will tell you who you are ||
நீங்கள் தான் சொல்லவேண்டும் , நான் எப்படி இதுபோல ஆனேன் என்று !!!
( எனக்கு ஒரு பக்கம் பயமாக வேறு இருக்கிறது, பேராசான் அவருடைய பேராசானை கிண்டல் செய்வது போல் , நானும் போய் வான்டெட் ஆகா சிக்கிக்கொண்டேனோ என்று )
July 27, 2017 at 09:03
யோவ், சுந்தர்!
1. நான் பேராசான் அல்லன் – வெறும் பேர்Assஆன், சரியா? கண்டமேனிக்கும் எதிர்பார்ப்புகளை (=anti-brahmin weed ©2017 எஸ்ரா) வளர்த்துக் கொள்ளவேண்டாம்.
2. போதை ‘வாஸ்து’ – இது புத்ஸாக் கீதே! ;-) ஏதாவது ஸூஃபி எல்எஸ்டி வகையோ?
3. ஜிமெய்லை மூடிவிட்டு உருப்படியாக எத்தையாவது செய்யவும்.
July 27, 2017 at 10:07
“ஆணால் டமில்ட்டாயைக் கொள்வதைவிட ஆங்கிள அங்கிளைக் கொள்வது எணக்குக் கடிணம் என்பதாள்…”
“ஆணால் டமில்ட்டாயைக் கொல்வதை விட ஆங்கிள அங்கிளைக் கொல்வது எணக்குக் கடிணம் என்பதாள்…”
இப்படித்தானே எழுதியிருக்கவேண்டும் தவறாக எழுதியிருக்கிறீரே ஆசானே! இது தகுமா!!
July 27, 2017 at 12:12
யோவ் பாம்புமலையாரே!
என்னையே கேள்வி கேட்கிறீரா? என்னைத் திருத்துகிறீரா?? திமிர் அதிகமாகி விட்டது அல்லவா?
பிடியும் சாபத்தை… *^&%#!@
|| Arrogant dragon will repent | I Ching ||
August 6, 2017 at 16:02
[…] தொழில்முறையில், பழைய அனுபவங்களை உற்ப… 26/07/2017 […]
August 10, 2017 at 20:34
[…] தொழில்முறையில், பழைய அனுபவங்களை உற்ப… 26/07/2017 […]
February 14, 2018 at 17:23
[…] தொழில்முறையில், பழைய அனுபவங்களை உற்ப… […]