நடைமுறை அரேபிய இஸ்லாம், சோகங்கள்: சில குறிப்புகள்

August 1, 2017

மனது ஒரு நிலையில் இல்லை.

எவ்வளவோ பிற முக்கியமான விஷயங்களில் முனையவேண்டிய தருணங்களில், சரியான பார்வைகளை முன்வைத்தால்கூட அதுதொடர்புள்ள(!) வெட்டிச் சச்சரவுகளில் ஈடுபடவேண்டியிருப்பது(!!) ஒரு சோகம். ஆனால் பிற அழுத்தங்களுக்கு அவை ஒருமாதிரியான வடிகால்கள் எனும் ஒரு மகாமகோ சால்ஜாப்பின் பின்னால் மறைந்து கொள்கிறேன்.

ஹ்ம்ம்… குர்தி நண்பர் ஒருவர் எழுதிக்கொண்டிருக்கும் அம்மக்களின் பாரம்பரியம்+போராட்டம் குறித்த குர்மாஞ்சி-ஜெர்மன் ஆவணப் புத்தகத்துக்கு, முடிந்த போதெல்லாம் (= பின்னிரவுகளில் அதிகபட்சம் இரண்டு மணி நேரம், அவ்வளவுதான் – அதற்குமேல் எல்லாமே வெறுமையாகி விடுகிறது) என்னாலான உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறேன்; வரலாற்றுக் குறிப்புகளைக் கொடுத்தல் + மித இஸ்லாமிய வாதம் அழிந்துகொண்டு வருவது, இஸ்லாமிய வெறிமுதல்வாத வளர்ச்சி குறித்த கருத்துகளைக் குவித்தல் + தேவையற்ற​-மதவன்முறையின் வளர்ச்சிவரலாற்றில் ஸூஃபிகளின் நேரடிப் பங்கு; ஆவணப்படுத்தப்பட்ட ருசுக்களை அகழ்வாராய்ச்சி செய்து எடுத்தல்; வாக்குமூலம் + பேச்சு + உரையாடல்களை ட்ரேன்ஸ்க்ரைப் செய்து தட்டச்சிடல், படி திருத்துதல் இன்னபிற.

இதன் காரணமாக வரலாற்று நடப்புகளை அசைபோடல் + தற்கால நிகழ்வுகளுடன் பொருத்திப் பார்த்தல் + சிலபல கருத்துகளுக்கு வந்தடைதல் –>> துணுக்குறுதல், கோபப்படல், அங்கலாய்த்தல், மனம் பேதலித்தல் எனத் தொடர்ந்து கொண்டிருக்கிறது என் வாழ்க்கை!

சரி. இவற்றிலிருந்து சில குறிப்புகளையும் சிலபல பின்புல விஷயங்களையும் இப்பதிவில் பகிர்ந்துகொள்கிறேன்.

ஆக, ஒரு முக்கியமான விஷயம்: இதில் வரலாறும் சோகமும் மட்டுமே. சிரிக்கவேண்டுமானால் தமிழ் அலக்கியம் பற்றிய பதிவுகளுக்குச் செல்லவும்.

-0-0-0-0-0-0-

தற்போதைய நிலவரத்தில் – அரேபிய/மத்தியதரைக்கடல் நாடுகளில் நான்கு நாடுகள் மட்டுமே தத்தம் வகையில் தீவிர இஸ்லாம் வெறியை ஊட்டிக் கொண்டிருக்கின்றன. அவை – துருக்கி, ஸவுதி அரேபியா, இரான், கத்தார். இவற்றின் அயோக்கிய அரசாங்கங்களும் வன்முறை நிறுவனங்களும் ஒழிக்கப்பட்டாலே இஸ்லாமினைப் பீடித்திருக்கும் புற்று நோயான வெறிமுதல்வாதம் அகலும் என்பது என் கருத்து. (…ஸிரியாவும் இராக்கும் இந்த வரிசையில் இருந்தன. ஆனால் பல்வேறு காரணங்களால் அவை க்ஷீணித்த நிலையில் இருக்கின்றன)

முதலில் துருக்கி — ஏனெனில் இதுதாண்டா காலிஃபேட் – இஸ்லாமிய காலிஃப்-ன் அரசாங்கம்!

உலகத்திலேயே, சமகால வரலாற்றிலும் சரி, பண்டைய வரலாற்றுரீதியாகவும் சரி — துருக்கியின் வரலாற்றில்தான் முதன்முதலில் அறிவியல்ரீதியிலான பெரியஎண்ணிக்கை மனிதத்திரள் அழித்தொழிப்புகள் நடந்திருக்கின்றன. இது நமக்கெல்லாம் மிக ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் 1800களில் இறுதியில் இருந்து துருக்கியில் ஆரம்பித்த படுகொலைகள் இன்றளவும் விட்டுவிட்டுத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

ஐரோப்பியக் காலனிவாத அயோக்கியர்கள் – சீனாவிலும் இந்தியாவிலும் ஆஸ்ட்ரேலியாவிலும் அமெரிக்க நிலப்பரப்புகளிலும் நடத்திய அழித்தொழிப்புகளுக்குச் சற்றும் குறைந்ததல்ல – இந்த கிலாஃபாக்களின் படுகொலைகள்.

இன்னொரு விஷயமும் ஆச்சரியகரமாக இருக்கலாம் – நாட்ஸிகளின் அறிவியல் ரீதியான மக்கள்திரள் அழித்தொழிப்புகளுக்கு பேராசானே துருக்கிதான். துருக்கிய கலீஃபாக்களின், கமால் பாஷாக்களின் சிஷ்யகேடிதான் ஹிட்லர். ஹிட்லர் சிலபல முறை, துருக்கியின் கொலைகாரச் செயல்பாடுகளைக் கண்டு வியந்திருக்கிறார். அதே போன்ற செயல்பாடுகளை வைத்துத்தான் யூதர்களை ஒழிக்கமுடியும் எனவும் பேசியிருக்கிறார். நாட்ஸிகளின் அயோக்கியத்தனங்களின் ஊற்றுக் கண்கள் எவையென்றால் அவை துருக்கியில் சென்ற இரண்டு நூற்றாண்டுகளில் நிலை நிறுத்தப்பட்ட இஸ்லாமிய மதநிறுவனரீதியான படுகொலை முறைகள்தாம். (இவற்றைப் பற்றி இன்னொரு பதிவில் எழுத முயற்சிக்கிறேன்)

-0-0-0-0-0-

துருக்கி நேரடியாகவே இஸ்லாமிக் ஸ்டேட் குண்டர்களை ஆதரிக்கிறது. அவர்களிடமிருந்து கச்சா எண்ணையை அடிமாட்டு விலைக்கு வாங்குகிறது. அவர்களுக்கு ஆயுதங்களைக் கொடுக்கிறது. ஸுன்னிவெறி ஸவுதி அரேபியாவும் அப்படியே – குண்டர்களுக்கு ஆயுதம் கொடுக்கிறது. ஷியாவெறி இரான், ஹிஸ்பொல்லாஹ் (=அல்லாவின் படை) வெறியமைப்பை போஷகம் செய்கிறது. கத்தார் ஆயுத ஸப்ளைக்கு அப்பாற்பட்டு, படுகொலைகளை அரங்கேற்றுபவர்களுக்கு ஊடக ரீதியான ஆதரவினை அமோகமாகத் தருகிறது.

இவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்தும் சேராமலும் குர்திகளை, குர்திகளின் நண்பர்களான யேஸிதிகளை கும்பல் கும்பலாக ஒழிக்கிறார்கள். நேரடியாக ஒழிக்க முடியாததை ஹிஸ்பொல்லாஹ், இஸ்லாமிக்ஸ்டேட் வழியாக ஒழிக்கிறார்கள்.

ஏனெனில், இந்தப் பிரதேசத்திலேயே ஜனநாயகப் பாரம்பரியம் இருந்தது மூன்று பகுதிகளில் மட்டுமே – அவை லெபனான், குர்தி பகுதிகள், இஸ்ரேல்.

இஸ்ரேலில், தன்னளவில் இன்னமும் ஜனநாயகம் தான் – பிரச்சினைகளும் இல்லாமலில்லை; ஆனால் இதனை அசைக்க முடியாது. லெபனானின் கதி கொஞ்சம் பாவம். ஸிரியா + இரான் + துருக்கி + பிஎல்ஓ தொடர்ந்து புகுந்து விளையாடி, அழகான நாட்டினைச் சின்னாபின்னம் செய்துவிட்டன (இஸ்ரேலுக்கும் இதில் சிறுபங்கு இருக்கிறது). எது எப்படியோ, இது மறுபடியும் மேலெழும்புமா என்பது சந்தேகமே.

இவைபோலல்லாமல் – குர்தி பகுதிகள் இரானிலும், இராக்கிலும், ஸிரியாவிலும், துருக்கியிலும் சிதறிக் கிடக்கின்றன – இவை அடுத்த பத்தாண்டுகளில் ஒரு தேசமாகத் திரண்டுவரமுடியுமானால் அது இஸ்லாமுக்கும் மத்தியதரைக்கடல் நாடுகளுக்கும் நல்லது. ஆனால் இது நடப்பதற்கு பல பலமுனைகளில் பகீரதப் பிரயத்தனம் செய்யவேண்டும்…

இஸ்லாமிக்ஸ்டேட் குண்டர் படைகளுக்கும் அவர்கள் கொடூரங்களுக்கும் எதிரான ஒரே காத்திரமான ராணுவத் திரள் எதுவென்றால், அது பெரும்பாலும் ஜனநாயக ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ள குர்திகளுடையதுதான். அதனால் தான் இஸ்லாமிக்ஸ்டேட் குண்டர்களும் ஹிஸ்பொல்லாக்களும் குர்திகளைக் குறிவைத்து ஒழிக்கிறார்கள். பாவப்பட்ட (இஸ்லாமியரற்ற மக்கள் திரளான) யேஸிதிகளையும் கொன்று குவிக்கிறார்கள்.

ஆனாலும், துருக்கிக்கும் ஸவுதிஅரேபியாவுக்கும் இரானுக்கும் கத்தாருக்கும் குர்திகள் தாம் பிரச்சினை. இஸ்லாமிக் ஸ்டேட்டோ அல்லத ஹிஸ்பொல்லாவோ பிரச்சினைகளல்ல. ஏனெனில் குர்திகளிடம் வளர்ந்து கொண்டிருப்பது ஜன நாயக ரீதியான, ஆயுதபாணியாக்கப்பட்ட மக்கள் திரள்.

என் நம்பிக்கை என்னவென்றால் இஸ்லாமிக் ஸ்டேட் ஒழிக்கப் பட்டுவிடும். கலீஃபா கதையாடல்கள் எல்லாம் மியா கலீஃபா போலக் கடக்கப்பட்டுவிடும். நன்றி.

-0-0-0-0-0-

துருக்கி  (தம் நாட்டுத் தலை நகரான அங்காரா-வில் அரங்கேறிய வெடிகுண்டுச் சம்பவங்களுக்காகக் கைதான) இஸ்லாமிக் ஸ்டேட்  குண்டர்களை நிபந்தனையின்றி விடுவிக்கிறது.  ஏனெனில், அவர்கள் வெளியே சென்று குர்திகளைக் கொல்வார்கள்.

துருக்கி அல்-கைய்தா அமைப்பினருக்கு ரத்தினக் கம்பளத்தை விரிக்கிறது. ஏனெனில் இவர்களும் குர்திகளின் கழுத்தை இஸ்லாமிய ரீதியாகச் சீவுவார்கள்.

துருக்கி – தம் நாட்டுக் குடிமக்களான குர்திகளின் பகுதிகளில் தொடர்ந்து வெடிகுண்டுகளை வீசுகிறது. வீடுவீடாகப் போய் துப்புரவு செய்கிறது; குழந்தைகளையும் ஆண்களையும் கொல்கிறது.  துருக்கி ராணுவம் குர்திப் பெண்களை பலாத்காரம் செய்கிறது. ஏனென்றால் வழக்கம்போல கொர்-ஆன் அல்-அன்ஃபல் மேற்கோள் (கொர்-ஆன் ஸுரா அல்-ஹஸப் 33.26; ஸுரா அல்-அன்ஃபல் 55-58) காட்டல். மொஹெம்மத் நபிகாலத்தில், அவரும் போர்முனையில் இருந்தபோது மதீனாவின் யூதர் திரள் ஒன்று நடத்தப்பட்ட விதம் (கிபி 627 ஏப்ரல்; சரணடைந்த 700+ வயதுவந்த ஆண்கள், ஆண்குழந்தைகள், மொஹெம்மத் அவர்களின் மருமகன்களால் தலை சீவப்படல், பெண்கள்+குழந்தைகள் அடிமைகளாக எடுத்துக்கொள்ளப்படுதல், பலாத்காரம் செய்யப்படல்; அத்திரளின் அபகரிக்கப்பட்ட சொத்துகளில் ஐந்தில் ஒரு பங்கு மொஹெம்மத் அவர்களிடம் போய்ச் சேர்தல், அவர் அதனைப் பிற தோழமுஸ்லீம்களுக்குப் பகிர்ந்தளித்தல், அவர் பங்காகக் கிடைத்த (கணவன் கொல்லப்பட்ட) யூத அடிமைப் பெண்ணை அந்தப்புர மகளிராக்குதல் இன்னபிற… …) சுட்டி, குர்தி+யேஸிதிகள் இஸ்லாமியர் அல்லர் ஆகவே என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற கதையாடல்.

…ஆனால், அந்தக் கால அற நெறிகள், வழிமுறைகள் எல்லாம் இந்தக் காலத்துக்கும் அப்படியே சரியாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லையே – அதே சமயத்தில் கொர்-ஆனில் அமைதியை விழையும் வசனங்களும் சிலபல இருக்கின்றனவே, அவற்றை மட்டும் சிரமேற்கொண்டு ஒழுகலாமே!

ஹ்ம்ம்… எது எப்படியோ, இப்படி வக்கிரமாக இருப்பது ஒரு உதிரி இயக்கம் என்றால் விட்டுவிடலாம். ஆனால் இவற்றைச் செய்வது ராணுவக் காரர்கள். சோகம்.

ஊக்கபோனஸாக – குர்தி அரசியல்வாதிகள் (எம்பி எம்எல்ஏ போன்றவர்கள்) அனைவரும் காலவரையில்லாமல் சிறையில்.

குர்தி மக்கள் திரளின் ‘ஸெலாஹெட்டின் டிமிர்டாஸ்’ எனும் மகத்தான தலைவன் (துருக்கிச் சிறையில் மாதக்கணக்காக இருக்கிறார்)

வெளியில் இருக்கும் ஓரிருவர் கொலை செய்யப்படல்.

 -0-0-0-0-0-0-

…துருக்கியின் அயோக்கிய இஸ்லாமிய அரசானது தொடர்ந்து குர்திகளுக்கு எதிராக நடத்திக் கொண்டிருக்கும் அழித்தொழிப்புகளையும் பற்றிய பல படுகோரமாகன செய்திகள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. துருக்கி நடத்திய அர்மேனியப் படுகொலைகளுக்கு நிகரான – அதேபோலப் பரவலாக வெளியே தெரியவராத விஷயங்களாகத்தான் தொடர்கின்றன இக்கோரக் காட்சிகள். கூடவே, அவர்கள் (+ ஸவுதி அரேபியா + கத்தார்) ஊக்குவித்துக்கொண்டிருக்கும் இஸ்லாமிக்ஸ்டேட் வெறிவாதம்.

(இந்த பாவப்பட்ட குர்திகளிலும் 95%+ முஸ்லீம்களே – ஆனால் வெறி இஸ்லாமைப் பொறுத்தவரை அவர்கள் முஸ்லீம்களே அல்லர். ஏனெனில் குர்திகள் இக்காலங்களில் உச்சாடன வெறியாளர்கள் அல்லர்; அவர்கள் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடையே ஜனநாயகம் தழைத்தோங்கிக் கொண்டிருக்கிறது; பெண்களையும் மானுடர்களாக மதிக்கும் ஆபத்தான போக்குவேறு அவர்களிடம் வளர்ந்துகொண்டிருக்கிறது. ஆகவே, கொலைவாளினை எடடா!)

ஆக, இஸ்லாமியவெறியர்களுக்கு – பிற மதக்காரர்களைப் போல குர்திகளும் வெறுத்தொதுக்கத்தக்க காஃபிர் அல்லது முனஃபிக். அல்லது ஃபாஜிர். அல்லது ஃபாஸிக். அல்லது தக்ஃபிர். அல்லது என்னைப் போல முர்டாட். ஆக, அவர்களை என்னவேண்டுமானாலும் செய்யலாம்! சொகுசாக, கொர்-ஆனையும் மேற்கோள் காட்டலாம்! இல்லாவிட்டால் இருக்கவே இருக்கின்றன ஹதீஸ்கள். ஆனால் அதே சமயம் அவற்றிலுள்ள பிற, அமைதி நிரம்பிய சிலபல வாசகங்களை லூஸ்ல விட்டுவிடலாம். சுபம்!

…அல்லது அந்த அமைதி வாசகங்களை மட்டும் எடுத்துக்காட்டி வெறி வாசகங்களைப் பூசி மெழுகலாம். அவற்றை நீங்கள் புரிந்துகொள்ளவேயில்லை எனச் சாதிக்கலாம். சால்ஜாப்பு சொல்லலாம்.

சுயபரிசோதனை, ஆத்மபரிசோதனை என்றுகூட இல்லை – குறைந்தபட்சம் ஒழுங்காக, குறிப்பெடுத்துக்கொண்டுக்கூட கொர்-ஆனையும் ஹதீஸ்களையும் படிக்காமல், சும்மனாச்சிக்கும் நுரைதள்ளப் பேத்தலாம். கடன் வாங்கிய கருத்துகளைக்கொண்டு ஒப்பேற்றலாம்.

இன்னமும் சுபம், வேறென்ன சொல்ல!

 

-0-0-0-0-0-0-0-

(அடுத்த பதிவில் நான் குறிப்பெடுத்துக்கொண்டிருக்கும் ஒலிப்பதிவுகள் (oral testimonies & interviews of the victims of islamism) குறித்த சில விவரங்களையும்*, என் எதிர் வினைகளையும் எழுதுகிறேன்; இப்பகுதியில் ஒருமாதிரி வரலாறு. அடுத்த பகுதியில் சோகம். சோகம் மட்டுமே.)

*இவற்றுக்கு குர்தி நண்பர்களிடம் அனுமதி பெற்றிருக்கிறேன். பாவப்பட்ட ஜீவன்களின் வயதினையும் அவர்கள் ஆணாபெண்ணா என்பதையும் மட்டும் குறிப்பிடுவேன். பெயர்களைக் குறிப்பிடமாட்டேன். முடிந்தவரை அனாமதேயப்படுத்தப்பட்ட விவரங்களை மட்டுமே கொடுக்கப்போகிறேன். நன்றி. :-(

-0-0-0-0-0-0-

சரி. கர்டிஸ்தான் அல்லது குர்திஸ்தான்  (அதன் ரொஜாவா உட்பட), இஸ்லாம் தொடர்புள்ள பிற பதிவுகள்:

15 Responses to “நடைமுறை அரேபிய இஸ்லாம், சோகங்கள்: சில குறிப்புகள்”

 1. RC Says:

  ஐயா,நன்றி. படித்துவிட்டு எளிதில் கடக்கமுடியாப் பதிவு.இவ்வளவு காத்திரமான பதிவில் மியாவ் சத்தம் டமில்ஸ்க்கு ஜாஸ்தி இல்லயா அண்ணே? இல்ல நாந்தேன் தப்பா உள்வாங்கிட்டனோ?


  • ​அய்யா, விடுதலைப் பூனைகள் பற்றிய ஒரு குறிப்பு என அதனைக் கருதிக் கடந்து செல்லவும்.

   நன்றி.

   விடுதலைக் கழுதை
   c/oதமிழ்க்கிழம்

 2. Sridharan S Says:

  வணக்கம், கில்யஸ் குறித்த தங்களது பதிவை இப்பதிவு நினைவூட்டியது,சமநிலை தொலைந்தது,இதற்கு முடிவே இல்லையா? இந்த மதவெறி பேடிகள் ஒழிவதுதான் எப்போது? குர்திகள் மதவெறிக்கு இடமளிக்காமல் மானுடத்தை வளர்த்தெடுப்பதால் மதவெறியை வெவ்வேறு வடிவங்களில் வளர்த்துவரும் ஸவுதி, இரான் போன்ற நாடுகளுக்கு பொது எதிரிகளாக உள்ளனர். ஆனால் ஓரணியில் நிற்கும் கத்தார் மீது திடீரென ஞானோதயம் பெற்ற ஸவுதிஅரேபியா உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாதக் குற்றச்சாட்டைக் கூறுவதன் பின்னணி என்ன?


  • ​அய்யா, சுருக்கமாகச் சொல்லப்போய் ஆகவே பொதுமைப்படுத்தப்போனால் ஐந்து காரணங்கள்: (இதில் ஒரு திடீரெக்ஸ் ஞானோதயமும் இல்லை)

   1)​​​ கத்தாரிடம் பெரிய அளவில் பெட்ரோலியம் மட்டுமில்லாமல், இயற்கைவாயு​ (இதற்கும் திராவிட மேடைப்பேச்சுகளுக்கும் சம்பந்தம் இல்லை, மன்னிக்கவும்) வளமும் இருக்கிறது. இதனால் ஸவுதிஅரேபியாவுடன் பலப்பல வருடங்களாக கமுக்கமான வாய்க்கா தகராறு.

   2) மேலும் கத்தார், ஷியாவாத இரானுக்கு அணுக்கமாக (ஏனெனில் இரண்டுக்கும் நடுவே ஒரு பெரிய இயற்கைவாயு பொக்கிஷம் பொதிந்து இருக்கிறது) நடந்துகொள்வது, பிற ஸுன்னிவாத நாடுகளுக்கு (முக்கியமாக, ஸவுதி அரேபியா) நாடுகளுக்குப் பிடிக்கவில்லை.

   3) கத்தார் குட்டி நாடாக இருப்பதால், ஏகத்துக்கும் எகிறிக்குதித்துத் தன் இருப்பை நிலை நாட்ட முயலும் நாடு.அரப் லீக் எழவில் இருந்து ஆரம்பித்து இது குதித்துக்கொண்டே இருப்பதற்கு அளவேயில்லை. இதுவும் பிற நாடுகளின் முகச்சுளிப்புக்குக் காரணம்.

   4) இதன் ஊடக பலம் என்பது அரேபிய நாடுகளில் வேறெதற்கும் இல்லை. அல்-ஜஸீரா எனும் தொலைக்காட்சிக் குழுமம் கத்தாருடையது. இது நம்மூர் என்டிடீவி அல்லது ஸன் டீவி போன்ற ஒரு பப்பரப்பா சேனல். பொய் வாதமும் பரப்புரையும் இதில் அதிகம். பிற அரபிய நாடுகளை,மக்களை உசுப்பிவிட்டு அதில் குளிர்காயும் தன்மை உடையது. (குர்திகள் இந்தச் சேனல்களை வெறுக்கிறார்கள். ஏனெனில் அல்-ஜஸீரா நெஞ்சாரப் பொய் சொல்வது, புளுகுப் பரப்புரை செய்கிறது என்பதைப் புரிந்துள்ளார்கள்) இந்த ஊடக வெறியும், பிற நாடுகளில் பிரச்சினை பண்ணுவதையும் அதன் அண்மை நாடுகள் விரும்புவதில்லை.

   5) அரபிய வசந்தத்துக்கு முதலில் இருந்தே பயங்கரவாதிகளுக்கு நல்கை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பது கத்தார். ‘முஸ்லீம் சகோதரத்துவம்’ என்ற பெயரில் பயங்கரவாதத்தையும் பழமைவெறியையும் ஊட்டிக் கொண்டிருக்கும் அமைப்பு அரபு நாடுகளில் வளர்ந்து வருகிறது. இது நம்மூர் ‘பாபுலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’வகை உதிரி இஸ்லாமியவெறி இயக்கம் போன்றது. இதற்கு பணத்தை ஊட்டிஊட்டிக் கொடுக்கிறது கத்தார். அந்த அமைப்பினால் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் நாடுகள் என்னதான் செய்யும்? மேலும் இஸ்லாமிக் ஸ்டேட் கும்பலுக்கும் நேரடி நல்கைகளும் ஆயுத உபசரிப்பும்.

   கத்தார் அரசு ஒழிந்தால் உடனடியாக, மத்தியதரைக்கடல் பகுதியில் 20% முன்னேற்றம் ஏற்படும் என்பது என் அனுமானம்.

   • Sridharan S Says:

    அய்யா, தங்கள் பதிலுக்கு நன்றி. கத்தாரின் அல்ஜஸீரா தொலைக்காட்சி பயங்கரவாதிகளின் ஊதுகுழலாக செயல்படுகிறது என்பதில் ஐயமில்லை, அரபு வசந்தம் (குறிப்பாக முஸ்லீம் சகோதரத்துவம் மற்றும் மோர்ஸி) குறித்த செய்திகளை கையாண்ட விதம் ஓர் உதாரணம்.எனினும், ஸுன்னிமுதல்வாதிகளான ஸவுதிக்கும் கத்தாருக்குமிடையில் உள்ள பிணக்கில் வாய்க்கால் தகறாரைக் கடந்த சர்வதேச பரிமாணம் ஏதும் உள்ளதா என அறியவே முற்பட்டேன், குறிப்பாக ஷியாமுதல்வாத இரானுடனான கத்தாரின் நட்பு, அமெரிக்காவின் நிலைப்பாடு உள்ளிட்டவை.ஐஸ் அமைப்பை பெரும்பாலான நாடுகள் எதிர்ப்பதாகவே கூறுகின்றனர் (மேற்குலக நாடுகள் முதல் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் வரை). குர்திகளை ஆதரிப்பதாக கூறும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ஒருவேளை ஐஎஸ் குண்டர்கள் ஒழிக்கப்பட்டால் அதன்பின் துருக்கி, ஸவுதி, கத்தார் மற்றும் இரான் ஆகியோரை எதிர்த்து, முழுமையாகத் தங்களைக் களத்தில் அர்ப்பணித்துக்கொண்டு காத்திரமான பங்களிப்பை வழங்கி வரும் குர்திகளுக்கான குர்திஸ்தான் அமைவதற்கு ஆதரவைத் தொடருமா? தாங்கள் கூறியதைப்போல இதற்கான பதில் எளிதானதல்ல, சுருக்கமாக எழுதினால் பொதுமைப்படுத்த வாய்ப்புண்டு, சாத்தியமாகும்போது எழுதுங்கள், நன்றி.


   • அய்யா, நன்றி. சமயம் வாய்க்கும்போது எழுதுகிறேன்.

    நான் ஒன்றும் இம்மாதிரி விஷயங்களில் விற்பன்னன் அல்லன். ஆகவே கண்டமேனிக்கும் கருத்துதிர்க்க கொஞ்சம் லஜ்ஜையாக இருக்கிறது.

    எனக்கு நிறைய அறிமுகங்கள் இருக்கிறார்கள். அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு அவசியம் ஏற்பட்டால் பேசுவேன். என் திறன் என நான் நினைப்பது பிறர் உரையாடுவதை ஆழ்ந்து கவனிக்கும் சுபாவம். ஓரளவு படிப்பேன். மும்முரமாக என் கருத்துகளை பரிசீலனை செய்வேன். அவ்வளவுதான். இம்மாதிரி எழுத ஆரம்பித்தது சுமார் 6 வருடங்கள் முன்பிலிருந்துதான். ஆக, நான் ஒன்றும் பெரிய்ய மயிராண்டியல்லன். சாதா சாதாரணன் தான்.

    சிலசமயம் அண்டப்புளுகுக் கருத்தாக்கங்கள் என் பக்கம் வீசப்படும்போது எதிர்வினை செய்யவேண்டி வருகிறது. வாயை மூடிக்கொண்டு அந்தப் பக்கம் சென்றுவிட என் அகங்காரம் இடம் கொடுக்க மாட்டேனென்கிறது. என்ன செய்ய. ஆகவே எழுதி விடுகிறேன். இப்போக்கினைக் குறைத்துக்கொள்ளவேண்டும்.

    வெட்டிப்பேச்சால் ஆய பயனென்கொல். :-(

   • RC Says:

    ஐயா, பெரியண்ணாச்சி டொனால்டு அவருடைய முதல் மத்திய கிழக்கு பயணம் முடித்த பின் “கத்தார்” எனக்கு பிடிக்கல ன்னு சொல்லீட்டார்.உங்கள் பதிலில் அமெரிக்க நிலைப்பாடு வெளிப்படாமலிருப்பது தற்செயல் இல்லை என்று நம்புகிறேன்.இவ்வளவும் சொன்னபிறகு, அண்ணாச்சி 12பில்லியன்$ F15 டீல் முடிச்சது,ஒரு பசு 2000$ வீதம் 2000 பசுக்களுக்கு மேல வித்தது கணக்கில் கொள்ள வேண்டாமா?

    துருக்கியின் வீரர்கள் தோகா வந்தனர் என்றசெய்தி தோகாவாசியான எனக்கு பீதீயை அளித்தது.”Al marai” சவூதி மில்க் குடித்து பழக்கப்பட்ட நாக்குக்கு, துருக்கி பால் கொஞ்சம் கஷ்டம் தான். துருக்கியின் கத்தார் ஆதரவு நிலைப்பாடும் புரிந்த கொள்ள கடினமே. ( அமுல் பால் ஏன் இங்கு இந்த நிலைமையில் கூட வாங்க கிடைப்பது இல்லை? மணிரத்ன கேள்வி தான இது :)

    “Al Jazeera” பப்பரப்பா சேனலா?. டமில் நண்பரொருவர் வேலை செய்கிறார் அங்கு தொழில்நுட்பப் பிரிவில். அதனால் தானோ? சொன்னால் அடிக்க வருவார்.ஆனால் என்னளவில் இது முழு பப்பரப்பா சேனல் என்பதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

    நீங்கள் சொன்னது போல ஈரானுடன் கத்தார் பகைமை கொள்ள வாய்ப்பே கிடையாது. Persian gulf (பர்சான்,அல் காலீஜ் போன்ற,Natural Gas fields தான் வேறன்ன :(
    ஷியா சுன்னி ல்லாம் சாதாரணர்களுக்கு தானே!

    நான் பழக நேர்ந்த கத்தார் அரபிகள் இப்பிரச்சனை தீவிரடையுமுன்பு ஓமன்
    மற்றும் அமீரக அரபிகளை சிறிது விலகலோடு தான் அணுகுகிறார்கள் என்று உணர்ந்ததுண்டு. சவூதிகளிடம் திருமண பந்த உறவு வரை நெருக்கமாக உள்ளவர்கள் தான்.

    தங்களைப்போல கத்தார் அரசு ஒழிய வேண்டும் என்று நான் கண்டிப்பாக ஆசைப்பட மாட்டேன். என்னளவில் என் போஜனத்தை ? ஆக்குவது அது.

    …நான் டமீலன் ஸோ தட்டச்சுகிறேன் :(

    அன்பும் நன்றியும் ..

 3. vijay Says:

  வணக்கம்,மத்திய கிழக்கு பிரதேசங்களில் நடக்கும் இவ் அழிவுகளில்,இஸ்ரவேலின்,நரித்தனங்கள் எதுவும் இல்லையென நீங்கள் நம்புகிண்றீர்களா?,


  • அய்யா, நரித்தனம் எனச் சொல்லமாட்டேன். ஆனால் பங்கு இருக்கிறது. அதற்கு அது உயிர்தரித்தல்.

   ஒவ்வொருமுறை இஸ்ரேல் (அல்லது அவர்கள் சொல்லிக்கொள்வதுபோல், இஸ்ரயேல் – இஸ்ரவேல் அல்ல) விட்டுக்கொடுக்க, உரையாடச் சம்மதித்த போதும் அதனை முட்டாள்தனமாக மறுத்த பிஎல்ஓக்கும், ஏனைய பிற நாடுகளுக்கும் இருந்திருக்கவேண்டிய குள்ளநரித்தனம் இல்லை.

   வெறும் வீராப்பு பேசிக்கொண்டலைவதிலேயே காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்களுக்கு முன்னேற்றத்தைக் காண்பிப்பதற்கு பதிலாக கொர்-ஆனையும் வெறுப்பையும் மட்டுமே அவர்களிடையே பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

   எனக்கு இஸ்ரேலில் இருக்கும் யூதர்களிடமும் அங்கேயே இருக்கும் சில பாலஸ்தீனியர்களிடமும் நட்பு உண்டு; அவர்களுடைய பார்வைகளைக் கண்டறிந்தால் அசந்து போவீர்கள் – வெறுமனே இணையத்தையும் இடதுசாரித்தன உளறல்களையும் படித்தால் மட்டுமே எதையும் புரிந்துகொள்ள முடியாது.

   அரேபிய நாடோடித் திரள்களில் ஒரு பகுதியான பெடுயின்களின் வழமையில் இருக்கும் வாசகம் ஒன்று இருக்கிறது: I, against my brothers. I and my brothers against my cousins. I and my brothers and my cousins against the world.

   என்னைப் பொறுத்தவரை இஸ்லாமின் (அரேபிய எடிஷன்) பிரச்சினையான இதுதான் அங்கிருக்கும் கந்தறகோளத்தின் அடிநாதம். இஸ்ரேல் மீதான வெறுப்பு மட்டுமே அரேபியர்களை (ஆகவே பரந்துபட்ட, அரேபிய மாசு ஏற்றப்பட்ட பிற முஸ்லீம் திரள்களை) ஒருங்கிணைக்கும். மேன்மையோ, முன்னேற்றமோ அல்ல.

   பிற இஸ்லாமிய நாடுகள் ஏதாவது, ஏதாவது ஒன்றாவது – பாலஸ்தீனியர்களுக்கு உபயோககரமாகச் செய்திருக்கின்றனவா? அவர்களுக்கு வெறும் வெறுப்பை மட்டும் ஊட்டி ஒரு கையில் கொர்-ஆனையும் இன்னொரு கையில் வெடிகுண்டையும் தந்ததுதான் அவர்களுடைய அதிகபட்ச பங்களிப்பு.

   … ஆழ்ந்த படிப்பும் அனுபவமும் சிந்திக்கும் திறனும் இருக்கும் எவனுக்கும், இம்மாதிரி விஷயங்களில் ஓரளவாவது தெளிவு கிடைக்கும் என நினைக்கிறேன். உங்களுக்கும் அப்படியே ஆகட்டும்.

   நன்றி.

   • vijay Says:

    வணக்கம் // நரித்தனம் எனச் சொல்லமாட்டேன். ஆனால் பங்கு இருக்கிறது. //நன்றி .வணக்கம் .


 4. Dear Ram,

  1. will the west help Kurds and make them a big player? I guess they can’t offend Turkey (NATO ally), a key member in stopping Russian dominance in Mediterranean sea.
  2. what do you think will settle things in the middle east? End of oil, or bigger problems like AI.(It would be great if we can get your thoughts about what AI’s impact will be on the Job Market. Jack Ma talks about WWIII).

  -Prathap


  • Dear sir,

   1. West (primarily US) is giving tactical support – primarily SIGINT to Kurds. Arms supply is also there to some extent and some involvement of the specialforces. But these interventions are far outstripped by what IS can command. Yes, if Trump could get out of the usual amerki ‘play international chess’ with ruskis, it will be great. Otherwise it is business as usual for turks.

   2. Settle? :-( The main reason is this: a primarily tribal culture of affiliations and alliances based on blood relations and blood bath is what is happening in that region – and there has been this sudden money. And it is not even that the whole of the region is prosperous. There is grinding poverty there with pockets of opulence. This requires an entire blog, but I have an important speech to give in UN – to solve the middleeast problems, so have to prepare for that, sorry.

   3. AI: Don’t worry, I know the service is quite pathetic and is loss making. It will soon be privatized and will have no impact on the job market in the middle-east. ;-)

   Thanks for sharing your thoughts / questions and now, I have some answers for the state of education in India. Would you please ask the correct questions?

   __r.


   • Dear Vijay, on second thoughts, sorry about that irreverent take on AI and UN. Meaning to write something about this AI and the brave new world, but then, life catches up with me! oh what to do.

    __r.


   • Dear Ram,

    My knowledge about the state of education in India is poor. I know it is not in a good shape as per articles I read in the past. But that is not enough to pose questions about it to you, right?

    Anyway, since you asked :), I now sponsor the prizes for rank holders in SSLC exam in my village “tuition center”. (This tuition center gave me and many in our village a reason to open their books after school). Besides, I tried to teach some soft skills in the school, without any success. If you have any advice for me, please let me know. I will be grateful.

    I wish you success in your efforts to fix Indian education system.

    Prathap


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s