இயற்கை விவசாயம் எனும் பம்மாத்து, ஜெயமோகன், அடியேன், ஆகவே உதையேன் இன்னபிறர் ;-)
July 17, 2017
…ஜெயமோகன் அவர்கள், போயும்போயும் நான் எழுதிய அற்பப் பதிவைப் படித்துவிட்டுப் பாவம், இப்படி – “…ஆனால் ஒத்திசைவு ராமசாமியை எனக்குத்தெரியும்- இது அவருடைய மாறாத உணர்வுநிலை. கசப்பு, கோபம் இல்லாமல் அவரால் எதையும் விவாதிக்க இயல்வதில்லை” ஆரம்பித்து வசைபாடியெனக் கோடிகாட்டி வருத்தப்பட்டு எழுதியிருக்கிறார். வஸிஷ்டர் வாயால் ப்ரம்மராக்ஷஸ் எனப் பட்டம் வாங்குவதற்கும் கொடுத்து வைத்திருக்கவேண்டும். :-)
…நன்றி. அவ்வப்போது இப்படி ஏதாவது ஆனால்தான், நானும் ஒரு நிலையில் இருப்பேன். இல்லாவிட்டால் பித்தம் தலைக்கேறி பேயாட்டம் ஆடிவிடுவேனென்பதும் எனக்குத் தெரியும். பேயவன் காணென் ராமசாமி. பெரும் பித்துடையான். காய்கறி ஏந்திய பித்தன்தனைக் காதலிப்பான் அவன். (பாரதிக்கு ஒரு ஸலாம் வெச்சிக்கறேன்பா!)
ஹ்ம்ம்… போக்கற்றுப் போய், கண்டகண்ட விஷயங்களிலும் அனாதரவுக் கையறு நிலையில் ‘எனக்கு வயிற்றில் உபாதை; வாயுத் தொந்திரவுவேறு, கவிதையாக வெளியேற்றம் காண்கிறது. இது ஏன் இப்படியாகிறது, நான் அழுகல் கலாச்சாரத்தின் குறியீடா, சங்ககாலத்தில் இம்மாதிரி முரணியக்கப் பிரச்சினைகள் இருந்திருக்கின்றனவா? எனக்குப் பதட்டமாகவும் வருத்தமாகவும் உப்புசமாகவும் இருக்கிறது. உங்கள் கருத்துகளை அறிய ஆவலாக இருக்கிறேன்‘ வகை வேலைவெட்டியற்ற வாசகக்குளுவானியக் கருத்து கேட்கிறார்கள் என்பதற்காக, நல்ல மனதுடன் ஆனால் தொடர்பில்லாத அதிகமறிய வாய்ப்பில்லாத அற்ப விஷயங்களில் எல்லாம் பகீரங்கமாக படுதீவிரவாத நடுநிலை வகிக்கவேண்டுமா எனவும் படுகிறது.
எவ்வளவோ பிற விஷயங்கள் அவருடைய கடைக்கண் பார்வைக்காக ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனவே! அவற்றில் தொடர்ந்து காத்திரமாகப் பங்களிக்கலாமே. … ஆனால் எனக்குப் புரிகிறது. கருத்துரிமையும் கருத்தின் மீதான கருத்துரிமையும், இந்தக் கருத்துரிமையின் மீதான…∞… ∞… முடிவிலாக் கருத்துக் குவியல்களும் முக்கியம். தொடர்ந்த உப்புமா உரையாடல்களும் ஆகவே என்னுடைய அலுப்பு நரையாடல்களும் மிக முக்கியம்.
மேலும் – ‘எப்பொருள் யார்யார் வாயில் விழுந்துபுறப்படினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு‘ என்று அன்றே சொல்லிவிட்டுக் கன்யாகுமரிக் கற்சிலையாகிவிட்டானல்லவா திருவள்ளுவன்?
ஹ்ம்ம்ம்… பிரச்சினை என்னவென்றால், இந்தயெழவையெல்லாம் எழுதிக்கொண்டிருக்கவேண்டுமா என்றாலும் மண்டையில் அடித்துகொண்டு இவற்றை எழுதுகிறேன். ;-) எல்லாம், அந்த எல்லாம் வல்ல வஸிஷ்டரால் வந்தது, என்ன செய்வது சொல்லுங்கள்… நீங்களும் மண்டையில் அடித்துக்கொண்டு முடிந்தால் படியுங்கள். இல்லை, மகத்தான நடுநிலை வகித்து நாட்டை முன்னேற்றுங்கள்… இல்லை – “உண்மையான ஆய்வும் விவாதமும் வேறெங்கோ நிகழ்கிறது என நம்பி ஆறுதல்” அடைய ஜெயமோகன் அவர்களின் பரிந்துரையைக் கருத்தில் கொள்ளுங்கள். எது எப்படியோ…
-0-0-0-0-0-0-
இந்த ‘இயற்கை(!)’ தோட்டக்கலை, வேளாண்மை, ‘தீவிரச் செயல்பாடு’ போன்ற வட்டங்களிலும் சதுரங்களிலும் மோபியஸ் வளையங்களிலும், கோழிமுட்டைகளிலும் நான், என்னுடைய 22ஆம் வயதிலிருந்து முயங்கிக்கொண்டிருக்கிறேன். விளையாட்டுப் போல இப்போது முப்பது வருடங்களுக்கு மேலாகி விட்டன. இன்னமும் 40 ஆண்டுகளுக்காவது மேலதிகமாக விளையாடுவதாகத்தான் எண்ணம்.
…ஆனாலும் ‘இயற்கை’ ஆர்வலன், பெரும் மசுறுகளை இதில் பிடுங்கிவிட்டேன் (அல்லது விதைத்து விட்டேன்!) என என்னை நானே பெருந்தன்மையுடன் சொல்லிக்கொள்வதில் எனக்கு மகாமகோ சங்கடங்கள் இருக்கின்றன – இவற்றைப் பற்றிய மேலதிக விவரங்கள் இப்பதிவின் கடைசிப் பகுதிகளில்…
-0-0-0-0-0-0-
…ஹ்ம்ம். சிலபல தொழில்களில் ஈடுபாடுள்ளவன் என்றாலும் நான் ஒரு தொழில்முறை எழுத்தாளனோ அறிவுஜீவியோ அல்லன் – வெறும், சாதாரண வாழ்க்கையை வாழும் சராசரித் துய்ப்பாளன் மட்டுமே. இதில் எனக்குப் பல அனுகூலங்கள். இவற்றில் ஒன்று – வாசகர்களைப் போஷகம் செய்யவேண்டிய அவசியமின்மை. ஏனெனில் என் கொள்கை: வேணும்னா படி. இல்லை, ஓடு. உருப்டியா எத்தையாவது செய். அவ்ளோதான்.
…சரி. பாரம்பரிய விதைகளைத் தேடித்தேடி சேகரித்து, உபயோகித்துப் பரப்பும் வேலைகளை கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்து வருகிறேன் – பலமுறை விதை விழாக்களில் கலந்துகொண்டிருக்கிறேன். ஒன்றிரண்டுமுறை பிறருக்காக ஸ்டால் போட்டு (வழக்கம் போல) கையைச் சுட்டுக்கொண்டிருக்கிறேன், இப்போதும் என்னிடம் தரமான காய்கறிகீரை விதைகள் உள்ளன – இவை ஓசியில் கொடுக்கப் படுவதற்காகவே – சுமார் 60 ஸ்பீஷிஸ்/வகைகள், அவற்றில் மொத்தம் சுமார் 400 கல்டிவார்/வகைகள்.
அதே சமயம் வீரிய விதைகளையும் உபயோகித்திருக்கிறேன். (சென்ற மாதம் கூட ஷிர்ஸி பகுதி சித்திகளுடன் (இவர்கள் ஆஃப்ரிக்க வம்சாவளியினர்; குத்துமதிப்பாக, ஹிந்துமக்களின் பெருந்திரளில் இதுவரை ஐக்கியமாகியுள்ள ஜனங்களில், தற்போதைக்குக் கடைசித் திரள் இதுவாகத்தான் இருக்கும்) கூடிக் குலாவிவிட்டு – விதம்விதமான கிழங்குவகைகளுக்கான விதைக் கிழங்குகளை வாங்கி வந்திருக்கிறேன். இவை இப்போது என் தோட்டத்தின் புது செல்லக் குழந்தைகள்)
இரண்டு மாமாங்கங்களுக்கும் மேலாக வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம், ஒரு பெரும்விவசாயப் பண்ணையில் அடிமட்டக் கூலியாள் (கூலி வாங்காமல்தான்!) என்றெல்லாம் சுற்றுகள் வந்து ருடால்ஃப் ஷ்டீனர் அவர்களின் பயோடையனமிக் முறையை முறையாகக் கற்றுப் பெரும் களிப்படைந்தேன். இது கொஞ்சம் ஜீபூம்பா வகை. ஆனாலும் ஒரு அழகு.
மகாமகோ ஆசாமிகள் ரொடேல், க்ரகார், அல்பர்ட் ஹொவர்ட், லவ்டர்ஹெட், ஸெல்மன் வக்ஸ்மன், நிகலய் வேவிலொவ், க்ராஸில்னிகவ், டாபொல்கர், பாஸ்கர்ஸாவே என ஒரு ரவுண்ட் வந்திருக்கிறேன். மண்வளம், மைக்ரொபயாலஜி, வ்ருக்ஷ ஆயுர்வேதம் எனக் கொஞ்சம் படித்திருக்கிறேன். சிலபல பரிசோதனைகள் செய்து பயிர்களுக்கு ரோதனை கொடுத்திருக்கிறேன். தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறேன். ப்ரிக்ஸ் ரெஃப்ரேக்டொமீட்டர் எனும் அழகு வழியே நிர்வாணத்தை அடைந்திருக்கிறேன். புத்தம் மரணம் மச்சாமி. சத்தம் அசுத்தம் ராமசாமி. சங்கம் ஆர்எஸ்ஏஸ்ஸம் காவியாமி.
ஆக, நான் முடிவு செய்தது, அவர்களுடைய உணவில் வெறும் வெள்ளைச்சோற்றின் அளவைப் படிப்படியாகக் கொஞ்சம் குறைத்து அதேசமயம் காய்கறிகீரை அளவுகளை அதிகரித்தல். ஆனால் காய்கறிகளைச் சமைத்துப் போடவேண்டுமானால் அதிக செலவு; ஏற்கனவே எங்களுக்குச் செலவுகளுக்குத் ததிங்கிணத்தோம். (நல்லவேளை பேலியோ மண்டையர்களுக்கு இது பற்றித் தெரிந்திருக்கவில்லை; இல்லையேல் பள்ளிச்சுவரை இடித்துக்கொண்டு வந்து குழந்தைகளுக்குப் பன்றிக்கொழுப்பு கொடுத்தேயாகவேண்டும் என ப்ரொட்டெஸ்ட் செய்திருப்பார்கள்; ஒவ்வொரு குழந்தைக்கும் தினமும் ஒருகிலோ வெண்ணெயும் ரெண்டுகிலோ முந்திரியும் கொடுக்காத பள்ளியெல்லாம் பள்ளியா என எள்ளி நகையாடியிருப்பார்கள்! ஆனால், தப்பித்தோம்!)
…ஆக, சுமார் இரண்டரை வருடங்களுக்காவது சுமார் முக்கால் ஏக்கர் நிலத்தில் (அதிகமில்லைதான்! ஆனால் அது முழுவதிலும் கட்டிடச் சிதிலங்களைப் போட்டு வைத்திருந்தார்கள் + தங்கள் வயக்காட்டில் பசுமை விரும்பிகளான பக்கத்து விவசாயிகள் அவர்கள் வீட்டுக் குப்பைகளைக் கொட்டுமிடமாகவும் அது இருந்தது – ஆக, முதல் இரண்டு மாதங்கள் இந்தக் குப்பைகளை அகற்றுவதிலேயே போய்விட்டன!) தனி ஆளாக அனைத்து வேலைகளையும் செய்து ஒரளவு சத்தான விதம்விதமான காய்கறி மஹ்ஸூல் எடுத்திருக்கிறேன்.
இதே சமயம் பள்ளியில் ஏறத்தாழ முழுநேர வாத்தியாகவும் இருந்திருக்கிறேன். இந்தக் காலகட்டத்தில் அனுதினமும் சுமார் 260-300 பேருக்கு மதியவுணவு, காலை+மாலை சிற்றுண்டி தயாரித்துக்கொண்டிருந்த என் பள்ளியின் சமையலறைக்கு – வாரத்துக்குக் குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் (திங்கள் காலை + வியாழன் காலை) தேவையான காய்கறிகீரை வகைகளைக் கொடுத்திருக்கிறேன். இப்படி – வாரத்துக்கு சுமார் 120 -145 கிலோ போல சுமார் 105 – 110 வாரங்கள் தொடர்ச்சியாகக் கொடுத்திருப்பேன். தோட்டவேலை ஒரு யோகநிஷ்டைமுறைதான்.
(‘சிறகு’ அவரைக்காய் – ஒவ்வொன்றும் ஒன்றரையடி நீளம் – winged bean – இக்கொடியின் ஒவ்வொரு பாகத்தையும் உண்ணலாம் – மகாமகோ சத்துகள்பொதிந்துள்ளன இதில்; பொதுவாக, இது பொதுவாக 6-7 சென்டிமீட்டர் அளவு நீளத்துக்குமேல் வளர்த்தால் முற்றியதுபோலக் கடுக் முடுக் என்றாகி விடும்; ஆனால் என் தோட்டத்தில் இவை 48 சென்டிமீட்டர் அளவு வளர்ந்தும் இளசுகளாக இருந்தன; இதைப் போன்ற பலவிதமான செடிகொடிகளைப் பயிர் செய்தேன். இவை தெரிவு செய்யப்பட முக்கியமான காரணம் – முடிந்த வரை ஒரு தாவரத்தின் அனைத்துப் பாகங்களும் உண்ணப்படமுடியவேண்டும். )
…கடையில் வாங்கிய மேலதிக உரம் எதையும் உபயோகிக்கவில்லை. சாணியுரம் மட்டும் முதல்வருடம் அரை ட்ராக்டர் லோட் வாங்கினேன். மற்றபடி வெறும் மூடாக்கு/மல்சிங் மட்டும்தான். எல்லாம் உயர்த்தப்பட்ட பாத்திகள். நீர்த்தேவை மிகக் குறைவு. வாரமிருமுறை காய்கறி பறித்தேயாகவேண்டுமென்பதால் அதுவும் அது ஒரேமாதிரியிருந்து குழந்தைகளுக்கு போரடிக்கக்கூடாது என்பதால் ஏகப்பட்ட திட்டமிடல். கிராமத்தில் நம் மக்கள் திருடியதுபோக (வேலியைத் தாண்டி எகிறிகுதித்து உள்ளே வந்து காய்களைத் திருடும்போது மாட்டிக்கொண்டால் – சாவகாசமாக ‘கீள விளுந்திரிந்திச்சி, வீணாப் போவவோணாம்னிட்டு எட்த்தேன்!‘), முயல்/மான்/மயில்/முள்ளம்பன்றி தின்ன என சுமார் 15% போய்விடும்வேறு.
நான் உபயோகித்த தோட்ட முறைகள் பெரும்பாலும் என் குரு பெர்னார்ட் டிக்லர்க் அவர்கள் + சில காந்திஜி அவர்களால் உருவாக்கப்பட்டு — என்னால் உபயோகப்படுத்தப் பட்டவை. கொஞ்சம் ஜான் ஜீவான்ஸ் வழிமுறைகளையும் உபயோகித்திருக்கிறேன்.
ஆனால், ஒருபோதும் கடையில் வாங்கிய கிருமி நாசினியையோ, உரத்தையோ அல்லது எரிபொருள் சார் உபகரணங்களையோ அல்லது பஞ்சகவ்யா போன்ற தேவையற்ற பம்மாத்துகளையோ, அல்லது மேலதிக நுண்ணுயிரி ஊக்குவான்களையோ உபயோகிக்கவேயில்லை. ஏன், நான் ‘ஆர்கனிக்’ கிருமி நாசினிகளைக்கூட (எகா – பூண்டு-மிளகாய் அரைத்து நீரில் கரைத்து தெளித்தல்) உபயோகிக்கவில்லை. என் ஷ்டீனர் சொல்வது படி முடிந்தவரை நடந்துகொண்டேன், அவ்வளவுதான். வேறொன்றுமில்லை.
இதற்கு ஜெயமோகன் சொல்லியதற்கு மாறாக – எந்தமதமும் காரணமில்லை. நான் விளையாடிக் கொண்டிருந்த தளத்துக்கும் அளவுக்கும், அவை தேவையாக இருந்திருக்கவில்லை. அவ்வளவுதான். ஆனால் அவற்றின் (பஞ்சகவ்யா தவிர்த்து) தேவையை இடங்கால வர்த்தமானம் அறிந்துகொண்டு உபயோகித்தல் நலம் எனவே நினைக்கிறேன். ஏனெனில் நம்மில் பலர் நினைப்பதுபோல இவ்விஷயங்களால் (‘கெமிக்கல்ஸ்!’) பயப் பிராந்திபிடித்து அல்லாட வேண்டிய அவசியமே இல்லை. நம் உலகத்தில் பலப்பல விஷயங்கள் பொய்மையால் கட்டமைக்கப்பட்டவை. வதந்திகளால் ஊதிப் பெருக்கவைக்கப் பட்டவை. அவ்வளவுதான். ‘இயற்கை’ என்றால் புளகாங்கிதம், ‘செயற்கை’ என்றால் காரணமற்ற அசூயை. ஆனால், பெரும்பாலும் நம் மக்களுக்கு இரண்டைப் பற்றியும் ஒரு எழவும் தெரியாது. இருந்தாலும் ஆழ்ந்த கருத்துகளைக் கைவசம் வைத்திருப்பார்கள். ஒவ்வொருமுறை இதனை அறியும்போதும் எனக்கு மாளா ஆச்சரியம்தான்!
…தேவையாக இருந்திருந்தால் அளவுடன் அனைத்துத் தொழில் நுட்பங்களையும் இடுபொருட்களையும் உபயோகித்திருப்பேன். இவை தீமை பயப்பனவாகவும் இருந்திருக்கமாட்டா. ஏனெனில், எதற்குமே நான் தேவையான ‘ஹோம் வர்க்’ செய்பவன். அவ்வளவுதான்.
இந்த அய்யய்யோகெமிக்கல் வகையறாக்களை ஊரார் குழந்தைகளுக்காக மட்டும் அல்ல – என் சொந்தப் பிள்ளைகளுக்கும் சரி, இவற்றை உபயோகித்திருப்பேன். ஏனெனில், இரட்டைவேடம் போடும் பழக்கமில்லை. மேலும், நான் வதந்திவாதியோ ஃபேஸ்புக் விவசாயியோ அல்லது வாட்ஸ்அப் பசுமை விஞ்ஞானியோ, அல்லது உருகிவுருகி வாசகர் கடிதம் எழுதுபவனோ அல்லன். நன்றி. +வேண்டுமளவு நகைச்சுவையுணர்ச்சியும் உண்டு.
இப்போது – சிறு அளவில் மாடியிலும் தரையிலும் தோட்டம். அவ்வளவுதான். ஆனால், மறுபடியும் ஒரு பெருஞ்சுற்று வரலாமென எண்ணம், பார்க்கலாம். வீழ்வேன் என நினைத்தாயோ?
…விகடன் என்றாலோ, எப்படியும் கேட்கவேவேண்டாம். இது நக்கீரன் உயிர்மை தஹிந்து போன்ற ஜந்துக்களைப் போலத்தான். ஆக – விகடன் என்று எழுதுவதற்கே கூசுகிறது எனக்கு.
ஆம். நம் மக்களின் அறியாமையையும், பப்பரப்பாக்களுக்கு மட்டும் செவிசாய்க்கும் தன்மையையும் அவர்கள் உபயோகப் படுத்தி பொய்மைகளைப் பரப்புவதை நம் பண்பாட்டின் அசிங்கமானவொரு கூறாக நினைக்கிறேன்; உட்கார்ந்த இடத்திலிருந்து ஓயாமல் கருத்துதிர்க்கும் நம் தொழில்முறை அறிவுஜீவிகளையும் (இவர்களில் தீத்தீவிர இடதுசாரி, படுதீவிர நடுசாரி-அவுசாரி எனப் பல்வகைகள் இருக்கின்றன) நினைத்தாலே எனக்குக் கசக்கிறது, என்ன செய்ய, சொல்லுங்கள்… :-( ஒரு விஷயம் எனக்குத் தெரிகிறது: நான் இன்னமும் முதிர்ச்சியடையவில்லை ஞானமும் பெறவில்லை – அனேகமாக என் வாழ்நாளில் இவை எனக்கு லபிக்குமா என்பதும் சந்தேகமே. ஆகவே, இல்லாத கடவுளுக்கு நன்றி.
-0-0-0-0-0-0-
July 17, 2017 at 08:56
போற்றுவார் போற்றட்டும் ! தூற்றுவார் தூற்றட்டும்!! தொடருங்கள் உங்கள் பணியை.
July 17, 2017 at 09:05
யோவ் பெருசு! கிண்டலா?
இப்போது நீங்கள் போற்றுகிறீரா, தூற்றுகிறீரா? முதலில் இதனைத் தெளிவுபடுத்தவும். நன்றி.
;-)
பிகு: என் வாசகர் வட்டத்திலிருந்து ( = 0) ஏதாவது அறிவார்ந்த கேள்விகளை எழுப்பி எழுதுவார்களா என்றால், அந்த ஐவரும் ஒன்றும் எழுதுவதில்லை, என்ன துக்கிரித்தனம் பாருங்கள்; ஆகவே, நானே எனக்கு வாசகர் கடிதம் எழதிக் கொள்ளலாமா எனப் பார்க்கிறேன். வேறு வழியில்லை. எப்படியும் நானும் அந்த ஐந்து வாசகர் பெருமாக்களில் ஓருவன் தானே!
July 17, 2017 at 10:48
நலமா ராம்.
தொடருங்கள் உங்கள் பாணியை அப்புடீன்னு வாசித்து விட்டேன் :-) இப்புடி கால வாறிட்டாரே சேஷகிரின்னு இன்னொரு வாட்டி வாசிச்சதும் நெனச்சேன் :-)
சகட்டு மேனிக்கு புளுகுகளை பரப்புரை செய்யும் அயோக்யர்களுக்கு அயோக்கியத் தனம் செய்வதிலே லவலேசமும் லஜ்ஜை கிடையாது.
கோமணம் கட்டிக்கொண்டு அல்லது அதை அவுத்துப் போட்டு தில்லி மாநகர வீதிகளில் நிர்வாணமெய்தும் கூலி வாங்கும் நாடக நடிகர்கள் தங்களை விவசாயிகள் என்று சொல்லிக்கொள்வதில் லஜ்ஜை கிடையாது. ஆனால் அந்தக் கோவாணாண்டிகளையோ அவர்களது நிர்வாணத்தையோ நாடகத்தையோ தோலுறித்தால் அது வசவு. நல்ல ந்யாயம்டா சாமி.
ஆரம்பப் புலம்பல்கள் கடுப்பளிக்கின்றன ராம். ஔவையாரிடம் கம்ப்ளேண்ட் செய்ய வேண்டும். அல்லது காக்காய்க்கு செய்தி அனுப்பி கத்தச் சொல்லி பூவண்ணன் சாரை இங்கு உரலாயுத சஹிதமாக வரச்சொல்லி விடுவேன். ஆமாம் :-)
***பொய்மை என்றால் வெறுப்புடன்தான் விவாதிப்பேன்**……. அது !!!!!!
carry on in ur usual style ——–
क़दम क़दम बढ़ाये जा
ख़ुशी के गीत गाये जा
ये ज़िंदगी है क़ौम की
तू क़ौम पे लुटाये जा
****சிறகு’ அவரைக்காய் – ஒவ்வொன்றும் ஒன்றரையடி நீளம் – winged bean – இக்கொடியின் ஒவ்வொரு பாகத்தையும் உண்ணலாம் ***…… சிலப்பல மாதங்கள் மின்னாடி வகை வகையான வெள்ளரி / கீரா / கக்கடி உங்கள் தோட்டத்தில் நட்டதைப் பதிவு செய்திருந்தீர்கள். அது பற்றிய பதிவு வெய்டிங்க்.
July 17, 2017 at 12:12
யோவ் கறுப்புப் பையனாரே! எங்கே ஆளையே காணோமே என நினைத்துக் கொண்டிருந்தேன்!
ஹ்ம்ம்ம்…நானே ஒருமாதிரி மணிப்பிரவாள நடையில் ‘எனக்கு நானே’ வாசகர் கடிதம் எழுதிக்கொள்ளலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே வந்தீர்! நான் தன்யனானேன் ஸ்வாமீ!
ஆனால் பூவண்ணன் அவர்களை இஸ்துக்கினு வர்ட்டா என்றெல்லாம் சொல்லி பயமுறுத்துவது தகுமா? சொல்லும்??
July 17, 2017 at 11:41
Very informative. Every time I read your post, I getting to know that ‘how much I don’t know”. These are eye-openers.
July 17, 2017 at 12:01
அறுவரானோம்! (உங்களுக்கு இது தேவையா?)
July 17, 2017 at 14:36
எழுவராவதற்கும் தயாராக இருக்கிறார்கள் / இருக்கிறேன்
July 17, 2017 at 19:28
ஆ! வாசகர் வட்டத்தில் ஒரே நாளில் 50% வளர்ச்சி! மூச்சு முட்டுகிறதப்பா, ஏ அப்பா!
July 17, 2017 at 21:48
:-) make wind while the fan (group) is around :-D
July 17, 2017 at 12:18
ஐயா
நன்று
கீழே உள்ள சுட்டிகளை அவசியம் பார்க்கவும். எல்லாம் விவசாயம் சார்ந்த நேர்காணல்கள் தான். ஆனால், வெளிவந்திருப்பது இங்குள்ள இதழ்களில் அல்ல. அமெரிக்க இதழில். இதை அங்குள்ளவர்கள் எல்லாம் படிப்பார்களா என்பதே ஆச்சரியம் தான்.
திரு. மாதவனின் நேர்காணல் மிகச் சிறப்பானது என்பது என் கருத்து. எல்லாவற்றையும் வாசித்து விட்டுச் சொல்லுங்கள். நன்றி
மாதவன் : http://tamilonline.com/thendral/article.aspx?aid=10617
24 மந்த்ரா ராஜ்சீலம் : http://tamilonline.com/thendral/article.aspx?aid=10749
ரேவதி : http://tamilonline.com/thendral/article.aspx?aid=11223
http://tamilonline.com/thendral/article.aspx?aid=11277
July 17, 2017 at 19:35
அய்யா, நன்றி. அவசியம் படிக்கிறேன்.
July 17, 2017 at 13:22
அருமையான தகவல்கள்.மிக்க நன்றி
திரு ஜெயமோகன் தங்களுடைய எழுத்து நடையை ஒருமுறை ‘தவளை நடை என்றார்.’ தவளை நடையா,முயலின் தாவலா என்று எனக்கு சந்தேக்ம வந்துவிட்டது.
ஏற்கனவே ஒருமுறை இந்த வலைதளததை உங்களுக்குப் பரிந்துரைத்து இருக்கிறேன்.
http://www.sevalaya.org
நீங்களும் திரு முரளீதரனும் சந்திக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
தங்களுடைய பள்ளி அனுபவங்கள், இயற்கை விவசாயம் ஆகியவை அவர்களுக்கு மிகவும் பயன்படும்.ஏனெனில் இதே போல அவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.
July 17, 2017 at 19:34
அய்யா, ஜெயமோகன் என் நடையை விமர்சிப்பதில் ஒரு பிரச்சினையும் இல்லை. அவருடைய நகைச்சுவை உணர்ச்சி எனக்குப் பிடித்தமானது.
ஆனால், இந்த ஸேவாலயா விவகாரம் – அய்யா, நான் கொஞ்சம் கெடுபிடியில் இருக்கிறேன். பின்னர் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன். (நீங்கள் முன்னமே ஒருதடவை மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறீர்களோ? – இல்லையெனில் ஒன்றினைத் தட்டிவிடவும்)
July 17, 2017 at 14:13
Yes Sir. With pleasure.
July 17, 2017 at 19:30
அம்மணீ! எச்சரிக்கைகளை மீறி படுகுழியில் வீழத்தான் வேண்டுமா? யோசிக்கவும். நன்றி.
July 17, 2017 at 19:22
இயற்கை விவசாயம் குறித்து தாங்கள் எழுத முன்வந்தது மகிழ்ச்சியளிக்கிறது, நன்றி. இதன்மூலம் தற்போது நிலவும் பெரும்பாலான குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்குமென நம்புகிறேன்.செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் ஆகியவற்றின் பயன்பாடு குறித்தும், முழுமையாக அவற்றைத் தவிர்த்து இயற்கை இடுபொருட்களை மட்டுமே பயன்படுத்துவதிலுள்ள சாதக பாதகங்கள் குறித்தும் தங்களது அடுத்த பதிவில் தெளிவாக்குவீர்கள் என எதிர்நோக்கியுள்ளேன், நன்றி.
July 17, 2017 at 19:27
அய்யோ அய்யா!! நான் அப்படியெல்லாம் எழுதவேண்டுமென்றால் பல நாட்கள் இதையேதான் முழுமூச்சாவாகச் செய்துகொண்டிருக்கவேண்டும். அதற்குத் தற்போது திராணியில்லை.
மேலும் நான் முழு நேர வாசகர்கடித இலக்கிய முகாமில் இணையலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன். நன்றி.
July 17, 2017 at 20:17
தங்களது பல்வேறு பணிகளுக்கிடையில் விவசாயம் குறித்தும் எழுத நேரம் எடுத்துக் கொண்ட மகிழ்ச்சியில் பெரிதினும் பெரிது கேட்டு, பெருஞ்சுமையைத் தங்கள் தலையில் ஏற்றிவிட்டேன், மன்னிக்கவும். பின் குறிப்பில் சீமைக்கருவேல மரங்கள் குறித்துவேறு கேட்டிருக்கிறேன், அதற்கும் சேர்த்து மன்னியுங்கள்.எனினும், தாங்கள் அனுபவித்துணர்ந்தவற்றைச் சமயம் வாய்க்கையில் பகிர்ந்துகொள்ளுங்கள், பலர் பயனடைவர், நன்றி.
July 17, 2017 at 20:39
மற்றபடி, வாசகர்கடித இலக்கியம் தங்கள் எல்லைக்கப்பால் உள்ள தொலைதூரக் கானல் நீரென்பது என் எண்ணம், அதற்கெனத் தொழில்முறையாளர்கள் பலர் உளர், உருப்படியாகச் செய்ய எண்ணற்ற பணிகளை அட்டவணைப்படுத்தி வைத்திருப்பீர்கள், அதற்கு நேரம் கிடைப்பதே அரிது, ஆகவே தாங்கள் வாசகர்கடித இலக்கியம் புனைவது ஒருகாலமும் நடவாது, பகற்கனவை உதறுங்கள், தங்களைப்போல ஒருசிலராவது பூமியில் இருந்துவிட்டுப்போகட்டும்.
July 17, 2017 at 19:56
பி.கு : சீமைக்கருவேல மரங்கள் நிலத்தடி நீரை பெருமளவு உறிஞ்சுவதோடு மண்வளத்தைச் சிதைக்கின்றன என்றும், அவற்றை முற்றிலுமாக அகற்ற வேண்டுமென்றும் சில ஊர்களில் அகற்றி வருகிறார்கள். அதேவேளை, இம்மரங்களால் கெடுதல் ஏதுமில்லையென்றும், மற்ற மரங்களைவிடக் குறைவாகவே நீரைப் பயன்படுத்துவதாகவும், இவற்றால் நன்மை மட்டுமே விளைவதாகவும் விகடன் கட்டுரையை மேற்கோள் காட்டி நண்பர்கள் விவாதித்தனர். இருவேறு கருத்துக்களுக்கும் அறிவியல் ஆதாரங்கள் உள்ளதாகக் கூறுகிறார்கள். தங்களால் இதுகுறித்து விளக்க முடிந்தால் பேருதவியாக இருக்கும், நன்றி.
July 18, 2017 at 08:25
i have read that wood from the tree is used to make furniture and the seed pods for making oil. but the problem is that it is invasive and doesn’t co-exist with other species. nothing grows around the tree. this particular aspect of it makes it un-desirable, if i am right. in fact, people in villages don’t even rest in the shadow. they do use it as firewood though.
here is a photo of the nAtu ‘Karuvela Maram’ shot in black and white. interested people can google ‘Vachellia nilotica’ for more information.
Thanks
Ramanan
July 18, 2017 at 19:18
The tree I was referring to was ‘Prosopis juliflora’, ‘seemai karuvela maram’ is the name widely used in media these days, in our area we call that ‘koduvela maram’ and few call that ‘yeri mullu’ as it is present in all the lakes around here, this is the one which is being uprooted in some places. This tree wont be used for making furniture. ‘Vachellia nilotica’ is the tree which might be used for making furniture and we call that as ‘karuvela maram’. This tree (Vachellia nilotica) is not regarded as harmful as ‘seemai karuvela maram'(Prosopis juliflora).
July 18, 2017 at 13:29
[…] […]
July 20, 2017 at 19:59
[…] […]
February 14, 2018 at 17:23
[…] […]