ஒப்பேற்றுவது எப்படி?
May 9, 2017
அழகாக முடித்துவிட வேண்டிய, முடிக்கப்படவேண்டிய எந்தவொரு சிறு காரியத்தையுமேகூட, சும்மனாச்சிக்கும் செய்து கடனெழவே என்று ஒப்பேற்றுவது எப்படி?
…ஆகவே – இந்த அடிப்படை உரிமையை சகல விஷயங்களுக்கும் விரித்து – வாழ்க்கையையே ஒருமேம்போக்கான சால்ஜாப்பாகவும் அற்ப சமாளிப்பாகவும் மாற்றுவது எப்படி?
-0-0-0-0-0-0-
மன்னிக்கவும் – நம் திராவிடத் திரு(ட்டு)நாட்டின் செல்லக் கண்மணிகளைப் பற்றிச் சொல்லவரவில்லை இங்கு.
எஸ்ராமகிருஷ்ண அருந்ததிராய யுவகிருஷ்ண வகை அதீத விஞ்ஞானிக் கலைவாணர்களைப் பற்றியுமில்லை.
…மாறாக, பொதுவாகவே நம் கல்யாணகுணங்களில் தலையாயதாக எழும்பிக் கொண்டிருக்கும் இந்த விட்டேற்றித்தன நொதுமல் நிலையைப் பற்றித்தான் என் பிலாக்கணம். என்ன செய்வது சொல்லுங்கள் (=இது மெடா-பிலாக்கணம்)

-0-0-0-0-0-0-0-
நான் தற்போது பணி செய்துகொண்டிருக்கும் பல்கலைக்கழக எழவு தொடர்பான ஒரு அலுவலகத்தில் இந்த நிலை.
கடந்த சிலபல வருடங்களாகவே கால் சரியாக இல்லாதவர்களுக்காக (அய்யய்யோ மன்னிக்கவும், மாற்று நடப்பாளர்கள்… ஆ! மன்னிக்கவும், மன்னிக்கவும் – மாற்றுத் திறனாள நடப்பாளர்கள்! அரசியல் சரி கமபதநிச பாட ஒத்து வராமல், இளக்காரத்தன போலிப்பரிவு அரசியல்சரி நிலைகளுடன் பொருதித் தப்புத்தாளம் போடமட்டுமே தெரிந்தால்? ஹ்ம்ம்ம், இதுதான் என்னுடைய மெடா-மெடா பிரச்சினை!), நகர் நாற்காலி உபயோகிப்பாளர்களுக்காகவென்று — கட்டிட நுழைவாயில்கள், படிக்கட்டுகள் மாற்றியமைக்கப் பட்டு சரிவுப்பாதைகள்+மேடைகள் அமைக்கப்படவேண்டும் என மத்திய அரசு மும்முரமாக இருக்கிறது.
குறிப்பாக, நம் கல்விசாலைகள் – ஜாதி மத மாற்றுத்திற பேதமில்லாமல் அனைவருக்கும் அணுக்கமாக இருக்கவேண்டும் என்பதிலும் யார் வேண்டுமானாலும் வந்துபோக முடியவேண்டும் என்பதிலும் கல்விசாலைகளில் உள்ள வசதிகளைப் பரந்துபட்ட மக்கள் உபயோகிக்க முடிந்தவரை அனுகூலமான விஷயங்களைச் செயல்படுத்தவேண்டும் என முயன்றுவருகிறது.
இவையெல்லாம் மிக நல்லவிஷயங்கள்தாம்!
…கூடவே நம் மாற்றுமூளைத் திறனாளர்களுக்கும் (விரசமாக எடுத்துக்காட்டுபவர்களாக, 1) திராவிடர்கள் 2) போராளிகள்) இப்படி ஏதாவது செய்து அவர்களையும் நம்மையும் ஒரே சமயம் உய்வித்துக்கொள்ள முடிந்தால் அதுவும் நலமே!
-0-0-0-0-0-
ஆனால் அம்மணிகளே, அம்மணர்களே… குறிக்கோள் வகையறாக்கள் எவ்வளவுதான் உன்னதத்தில் இருந்தாலும் – நடைமுறை ஒப்பேற்றுதல் என ஒன்று இருக்கிறதே! :-(
சிலபல வாரங்களுக்கு முன்பு டமால்டுமீல் என, அலுவலக வாயிற்படிகளில் களேபரம். என்னடாவெனப் பார்த்தால் சரிவுமேடை அமைத்துக்கொண்டிருந்தார்கள். சரி. எனக்கும் தச்சுவேலையில் கொஞ்சம் பரிச்சயம் உண்டென்பதால் தச்சர்களுடன் பேச்சுக்கொடுத்தேன். அலுவலகத்தின் எல்லா படிக்கட்டுகளுக்கும் (அதாவது நுழைவாயில்களில் மட்டும்) இந்த மேடை அமைக்கப்போவதாகச் சொன்னார்கள். ஆனால் வெறும் ப்ளாக் போர்ட்களை மட்டும் அறுத்து ஆணியடிக்கப்பட்ட சமாச்சாரம். வடிவமைப்பைக் காண்பிப்பீர்களா என்றால், ஆனாக்க சார், நாங்க இங்கயே அளவெடுத்து அடுத்த ரெண்டு மணி நேரத்துல முட்ச்சிடுவோம். சரி. என்னென்ன பொருட்களை உபயோகிக்கப் போகிறீர்கள் என்றால் – வெறும் போர்ட்தான் சார். ஆணியடிப்போம். எனக்குக் கொஞ்சம் துணுக்குறுதல், ஆனால் வேறேதேதோ வேலைகள் குறிந்த அழுத்தத்தில் இருந்தேன்.
சரி. மூன்று மணி நேரத்திற்குப் பிறகு வந்து பார்த்தால் – அலங்கோலம். ஏறுகோணம் மிக அதிகமாக இருந்தது. அதில் மாறாத திறனாளிகூட ஏறமுடியாது. மேலும் அது வெறும் ப்ளாக் போர்ட் சட்டகம். மழை வந்தால் வழுக்கும் + உளுத்துப் போகும். ஏதாவது செய்யுங்கள் என ரெஜிஸ்ட்ராரிடம் சொன்னேன் – அவரும் என்னவோ எதிர்வினை — ஏதோ இன்ஸ்பெக்ஷன் கின்ஸ்பெக்ஷன் நேரமேயில்லை, நாளை இது தயாராக இருந்தாகவேண்டும், நீங்கள் இப்படிச் சொல்கிறீர்களே…
எனக்கு ஒருவாரம் வெளியூர்ப் பயணம். திரும்பி வந்து பார்த்தால் ப்ளாக்போர்ட் எழவின் மீது ஒரு அலுமினியம் தகடை அடித்துவிட்டு ஒரு பளப்பளா எஃபெக்ட். இன்ஸ்பெக்ஷன் முடிந்து விட்டிருந்தது. எல்லோரும் அதற்குப் பிறகு நெடுங்காலம் சந்தோஷமாக அந்த சரிவுப்பாதையழகில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தனர் என எழுத ஆசை. ஆனால்…
மறுபடியும் ரெஜிஸ்ட்ரார் அலுவலக விஜயம். என்னவோ தெரியவில்லை. என்னைப் பார்த்ததும் இம்மாதிரி ஆசாமிகளுக்கு அவசரமாக ஒண்ணுக்கு வந்துவிடுகிறது. அவர்களுடைய மூத்திரப்பைகளின் கொள்ளளவும் அதிகமென நினைக்கிறேன் – பத்து நிமிடங்கள் தேவுடு காத்தல்.
எனக்குக் கோபப் பிலாக்கணம். மிகவும் வழுக்குகிறது. நாம் ஏன் இப்படிக் கடனெழவே என ஒப்பேற்ற வேண்டும். உப்புக் காகிதம் எமெரி பேப்பர் என எதையாவது உராய்வை அதிகப் படுத்துவதற்காக ஒட்டிவிடுங்களேன். இதை மட்டுமாவது செய்யுங்களேன். விருப்பமில்லையென்றால் அந்தத் தற்காலிகத்தனமான மேடையை அகற்றி விடலாமே! இன்ஸ்பெக்ஷன் தான் முடிந்தே விட்டதே!
அய்யோ! அதெல்லாம் முடியாது. சரிவுமேடை முக்கியம். மாற்றுத் திறனாளிகள் எப்படி நம் அலுவகத்துக்கு வரமுடியும்? ரூல்ஸ். அது நன்றாகவே இருக்கிறது.
சார், நீங்க கான்ட்ரேக்டர். தற்காலிக வேலை பண்றீங்க. இது ரெகுலர், அட்மினிஸ்ட் ரேஷன் விஷயம். எங்களுக்கு ஆயிரம் பிரச்சினை. தயவுசெய்து எங்களை விட்டுருங்க.
ஆஹா.
நான் மண்டையிலும் அதற்கு ஒத்தியைபுடைய பலான பாகத்திலும் அடித்துக்கொண்டு வெளியேறினேன்.
மூன்று விஷயங்கள்:
1. அந்த ஒப்பேற்றப்பட்ட மேடையின் புகைப்படங்கள்; என் செல்ல ரெய்ன்ஹோல்ட்ஸ் பால்பாயின்ட் பேனாவை ஒரு ஒப்பீட்டுக்காக வைத்திருக்கிறேன். ஒரு 4×4 வண்டிகூட இந்தச் சரிவுமேடையில் ஏற கஷ்டப்படும்.
நான் புலம்பியபின் என் தொந்திரவைத் தாங்கமுடியாமல் – அவர்கள் இந்த எமெரி காகித ரிப்பன்களை ஒட்டியிருக்கிறார்கள். இருந்தாலும் ஒரே வழுக்கல் மயம்! இந்த எழவையும்கூட — ஏனோதானோவென, கண்ட நீளத்துக்கும் நறுக்கி, இடைவெளிகளையும் சரியாக அனுமானிக்காமல்!
செய்நேர்த்தி என்றால் கஜம் எத்தனை கிலோலிட்டர் கதை!
2. இன்று வரை – நான் மட்டும்தான் இச்சரிவுமேடையை உபயோகிக்கிறேன். ஒரு சமயச் சடங்குபோல இதனைச் செய்கிறேன். வேறு ஒரு கழுதையும் (மன்னிக்கவும் – மாற்று மூக்காளக் குதிரை என இதனை மாற்றிக்கொள்ளவும்; அல்லது மாற்றுக் குரலாளக் குதிரை எனவும் படிக்கலாம், நன்றி!) இதனை உபயோகிக்கவில்லை!
அம்மணிகளே, அம்மணர்களே! நாம் ஏன் இப்படி இருக்கிறோம், சொல்லுங்கள்? :-(
May 9, 2017 at 19:41
“Stairs incorporate three pieces of geometry: rise, going and pitch. The rise is the height between steps, the going is the step itself (technically, the distance between the leading edges, or nosings, of two successive steps measured horizontally) and the pitch is the overall steepness of the stairway. Humans have a fairly narrow tolerance for differing pitches. Anything more than 45 degrees is uncomfortably taxing to walk up, and anything less than 27 degrees is tediously slow. It is surprisingly hard to walk on steps that don’t have much pitch, so our zone of comfort is a small one. An inescapable problem with stairs is that they have to convey people safely in both directions, whereas the mechanics of locomotion require different postures in each direction. (You lean into the stairs when climbing but hold your centre of gravity back in descent, as if applying a brake.) So stairs that are safe and comfortable in the ascent may not be so good for going down and vice versa. How far the nosing projects outward from the tread, for one thing, can materially affect the likelihood of a mishap. In a perfect world, stairs would change shape slightly depending on whether a user was going up or down them. In practice, every staircase is a compromise.”
Excerpt From: Bryson, Bill. “At Home.” Transworld. iBooks.
This material may be protected by copyright.
Also there seems to be an interesting book on this subject “The Staircase: Studies of Hazards, Falls, and Safer Design” John A Templer, MIT Press
May 9, 2017 at 20:06
அய்யா சந்திரமௌலி, நன்றி.
தாங்கள் படிக்கட்டு வடிவமைப்பு பற்றிச் சொல்கிறீர்கள். ஆனால் நான் சரிவுமேடையெழவைப் பற்றி.
பொதுவாக சரிவுமேடை அமைப்புமிகக்கு – மிக அதிக பட்சமாக 20% சரிவு என்பது சரியாக வரும். அதாவது ஒரு அடி உயரவேண்டுமென்றால் ஐந்தடி நீளமாவது கிடைமட்ட நிலையில் (horizontally) நடக்கவேண்டும். இல்லாவிட்டால் கால் நடக்கமுடியாமல் இருப்பவர்களுக்கு இந்தச் சரிவுமேடைகளை உபயோகிக்கவே முடியாது.
ஆக மேற்கண்ட செங்குத்தான 2.5 அடி உயரத்துக்கு 12.5 அடியாவது கிடை மட்டத்தில் சரிவுமேடை அமைக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் மேற்கண்ட வடிவமைப்பெழவில் இது வெறும் ஐந்தடி கூட இல்லை!
மேலும் இச்சரிவுமேடையில் (தப்பித் தவறி) ஏதாவது வேற்றுக்கிரகத்தான் (அல்லது மாற்றுக் கிரகத்தான்) அவன் வண்டியில் ஏற முயன்றாலும் – இடதுபக்கத்தில் தடைகள் என ஒரு எழவும் இல்லை.
ஆக இது 100% ஒப்பேற்றல். சோகம்.
இதனைத்தான் சொல்லவந்தேன்; மற்றபடி நீங்கள் குறிப்பிட்ட எம்ஐடி புத்தகத்தைப் படிக்க முயற்சி செய்கிறேன். நன்றி.
__ரா.
May 10, 2017 at 01:48
Ram, this sucks. You are making me feel guilty about some of my deliverables. Now I have to read yuvakrishna, to make myself feel better.
May 10, 2017 at 04:55
Instead of these struggle , ready mix concrete are available and pour the concrete in the ramp area and solve the problem. Rgds S Velumani
May 10, 2017 at 07:44
ஏறக்குறைய நினைவு தெரிந்த காலத்திலிருந்து இது போன்ற ஒப்பேற்றல் வேலைகளைக் கண்டு நொந்து எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டிய இடங்களில் கொடுத்து அதனால் மாற்று மூளையாளியாகப் பார்க்கப்பட்டு வருகிறேன். இந்தியர்களுக்குப் பொதுவாக சக உயிர்கள் சக உடல்கள் மீது தடித்தனமான அலட்சியம். ஏதாவது நேர்ந்த பிறகு குய்யோமுறையோ என்று கத்துவதுதான் மரபு. மாற்றுத் திறனாளியோ மாற்றுக்குறைந்த திறனாளியோ யாரானாலும் இரக்கம் காட்டி சலுகை காட்ட இந்திய மனம் ‘பெருந்தன்மையுடன்’ தயாராக இருக்கும். பிறரின் நியாயமான உரிமையை மதிக்க அவ்வளவு அலட்சியம். இது ஒரு தேசிய வியாதி. இதற்கு உதாரணம், நடைபாதைகளின் நிலை. ஒப்பேற்றல் விஷயத்தில் நரகத்தில் XL சைஸ் கொப்பரை தயார் செய்ய வேண்டியது சாலை ஒப்பந்ததாரர்களுக்குத்தான். கோடிக்கணக்கில் வரிப்பணத்தை செலவு செய்து கட்டப்படும் சாலைப் பணிகளில் சாலையின் அமைப்பில் (அதுவே ஒப்பேற்றல்) காட்டப்படும் அக்கறையில் 10% கூட நடைபாதை அமைப்பில் காட்டப்படுவதில்லை (அது மாற்று ஒப்பேற்றல்)