ஹேம் ரேடியோ, டுர்க்மேனிஸ்தான், பாகிஸ்தான் – சில பெருமூச்சுகள், வேறென்ன செய்ய…

March 23, 2017

ஒருகாலத்தில் நான் அமெச்சூர் ரேடியோ கிறுக்கனாக(வும்) (HAM Radio Operator, so my ham handedness continues, hamen!) இருந்தேன். விடலைப் பருவத்தில் என் மனதைக் கொள்ளைகொண்ட பல விஷயங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது.  (இந்த அழகான பொழுதுபோக்கு பற்றிய இந்திய சுட்டி. அமெரிக்க விவகாரம்)

முட்டிமோதி (மற்ற எந்த விஷயம் போலவேயும், வேறு யாராக இருந்தாலும் இது ஒன்றுதான் வழியும் சத்தியமும் ஜீவனும் என்பதை உணர்ந்திருக்கிறேன்) மின்னியல் சமாச்சாரங்களைக் கற்றுக்கொண்டு, பின் நானே கொக்கறாமொக்கறாவென வடிவமைத்த கோரமான வெறும் ஒரு 3வாட் ட்ரான்ஸ்மிட்டரை வைத்துக்கொண்டு – கல்லூரி விடுதிமேல்மாடிலிருந்த யாகி அன்டென்னாவை அப்படியும் இப்படியும் திருப்பி அது வேலை செய்யாமல் பின் வெறும் டைபோல் அண்டென்னாவுடம் மல்லுக்கட்டி கடைசியி…ல்… … ஒரு பின்னிரவில் அன்டார்ட்டிகாவில் இருந்த நம் தக்ஷிண் கங்கோத்ரி ஆய்வகத்துடன் (1984?) மோர்ஸ் சங்கேதச் செய்திகளைப் பரிமாறிக்கொண்டபோது கிடைத்த மகாமகோ இன்பம்ஸ் இருக்கிறதே!  :-) ஆனால் அப்போது என் கல்லூரியிலேயே கூட மொத்தம் 3 பேர்தான் ஹேம்-கள் – ஆகவே ‘வெற்றிடா மச்சான்’ எனச் சொல்லி எக்களிப்புடன் ஆரத்தழுவிக்கொள்ளவும் ஆட்கள் இல்லை. இன்றுதான் வெளியே இந்த எழவைச் சொல்லி புளகாங்கிதமடைகிறேன்…

… ஆனால் — இது நடந்த இரண்டுமூன்று நாட்களுக்குப் பின், என் அப்பாவிடம் இந்த வெற்றியைப் பற்றிய புல்லரிப்புடன் விளக்கிச் சொன்னபோது, பதிலுக்கு ஒரு தொடர்புமில்லாமல் ஏதோ காமராஜர் கதையையோ ஓமந்தூரார் கதையையோ கக்கன் நிகழ்வையோ சொல்லி எனக்கு மகாமகோ கடுப்பேற்றினார் என்பது நினைவில் இருக்கிறது; அதன் உள்ளுறை நீதிபோதனை: நீ அன்டார்ட்டிகாவுடன் தொடர்பு கொண்டதால் ஏதாவது உலகப் பிரச்சினை தீர்ந்ததா? :-(  (ஆனால், இன்று யோசித்துப் பார்த்தால் – நான் செய்ததும் உலகத்தில் ஒருவருமே செய்யாததல்ல, அதற்குமுன்னும் பின்னும் பலர் செய்திருக்கிறார்கள் – ஆக அவர் சொன்னதை நான் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என நினைக்கிறேன் – கல்லூரி மாணவத்தனமாக முணுக்கென்று விடலைக் கோபம் மட்டும் வந்துவிட்டது.  ஆனால், இப்போது அதைப் பற்றி நினைத்தால் எனக்குச் சிரிப்புத்தான் வருகுதய்யா – one lives and learns, what else!)

கனவுகளால் நிரம்பிய காலங்கள் அவை – ஏதோ நான் வெடித்துக் கிளம்பி உலகத்தையே உய்வித்துவிடுவேன் போல! சோப்பு நுரைக் குமிழ் நிறப்பிரிகைகள். உலகமே வண்ணமயம், ஹ்ம்ம், பெரும்பாலும் சிவப்பு! ;-)

…ஆனால், அக்காலங்களில் இந்த அமெச்சூர் ரேடியோ விவகாரத்தில் இருந்தவர்கள் – இக்காலத்தில் மிகப்பெரும்பான்மையில் இருக்கும் (பெரும்பாலும்) வெறும் ஷோக்கு கேஸ்களான – ரொபாட்டிக் ஸ், க்வாட் காப்டர் என உளறிக்கொட்டிக்கொண்டு அதிக பட்சம் கிட்-களிலிரிந்து உருமாற்றிய வஸ்துக்களை வைத்துக்கொண்டு அலைபவர்களாக இல்லை. அவர்கள் நிஜமான எஞ்ஜினீயர்கள். உலகமெலாம் நிறைந்திருந்தவர்கள்.

மேலும் அவர்கள் வெறும் பொறியியல் மின்னியல் எனமட்டும் முனைவுகளில் இருந்திருக்கவில்லை – இஸ்ரேல், ஸோவியத்யூனியன் (இப்போதைய ரஷ்யா, ஜார்ஜியா, எஸ்டொனியா, டுர்க்மேனிஸ்தான்), நார்வே, ஃபின்லாண்ட், ஜப்பான், கூபா, சிலே, மெஹிகோ,  உருகுவே, ஸ்ரீலங்கா, பர்மா, ஆஸ்ட்ரேலியா, அமெரிக்கா, நியூஸிலாண்ட், பாகிஸ்தான், இரான், ஸிரியா, யேமன், கீன்யா என… … பலப்பல பகுதிகளின் கலாச்சாரங்களை ஓரளவு ஆழமாகவே அறிந்தவர்கள். புத்தகத்திலிருந்து இசை, சினிமா, நாடகம், அரசியல் எனச் சகலவிதமான விஷயங்களையும் பேசலாம். அதுவும் மேலெழுந்தவாரியாக அல்ல, மினுக்குவதற்காக அல்ல – விரிவுடனும் அறிவுடனும் – முக்கியமாக ஆழத்துடன் மட்டுமே விவாதங்கள் நடைபெற்றன!

பின்னர் ஹேம் ரேடியோவிலிருந்து பலர் முன்னோக்கி நகர்ந்து சிலபல தனிப்பட்டமுறை ஐஆர்ஸி சேன்னல்களுக்கும் (இன்னமும் இருக்கிறோம்) சிலர் யூஸ்னெட்டுக்கும்  மாறினோம்; மிகச்சிலர் ஃபேஸ்புக் ட்விட்டர் என்று உலாவுகிறார்கள் எனக் கேள்விப்படுகிறேன்; ஆனால் ஆழமில்லை. ஏனெனில் அந்தந்த வகை ஊடகத்துக்கு, தொடர்புக்கருவிக்கு என – ஒவ்வொரு மூளையளவு இருக்கிறது. ட்விட்டர் ஃபேஸ்புக் வாட்ஸப் போன்றவைகளில் அதிமேதாவிகளும், இவர்களைத் தாங்கும் திறம்கொண்ட தடித்தோல் உள்ளவர்களும்தான் தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியும் போல! ஏனெனில் அங்கு இன்ஸ்டண்ட் ‘டூ மினிட் நூட்ல்ஸ்’ விஞ்ஞானிகள் நிறையவே இருக்கிறர்கள் என்பதை நான் அறிவேன். ஆகவே, எனக்குக் கொஞ்சம் பயபீதிதான்.

எது எப்படியோ… உண்மையிலேயே நான் கொடுத்துவைத்தவன் தான்! எவ்வளவு பேருக்குக் கிடைக்கும் இம்மாதிரி அனுபவங்களும் நண்பர்களும்…

-0-0-0-0-

கடந்த நான்கைந்து வருடங்களாக – அந்தக் காலத்தில் நாடு நாடாக சக அமெச்சூர்களைத் தொடர்புகொண்டு விதம்விதமான ஆங்கில உச்சரிப்புகளுக்குப் பழகிக்கொண்டுச் சேகரம் செய்த அறிமுகங்களுடன் – மீண்டும் தொடர்பு கொள்ள https://www.qrz.com/index.html மூலம் முயன்று கொண்டிருக்கிறேன்.

அப்படித் தொடர்புகொண்டவர்களில் இருவருடன் (ஒருவன் பாகிஸ்தான், இன்னொருவன் டுர்க்மேனிஸ்தான்) இரண்டு நாட்கள்முன் அரட்டை அடித்துக்கொண்டிருந்தேன் – ஸ்கைப் மூலமாகத்தான்.

டுர்க்மேனிஸ்தான்காரன் ஒரு ஸாஃப்ட்வேர்நிறுவனம் நடத்திக்கொண்டிருக்கிறான். இயற்பியலில் டாக்டர் பட்டம் பெற்றவன். படுபுத்தியாலியான ப்ரொக்ராம்மர்களைக் கொண்ட குழு ஒன்றை நிர்வகிக்கிறான் – இருந்தாலும், அடிமாட்டு விலைக்கு அவர்கள் திறனை விற்கிறான் – நிலைமை இப்படியிருந்தாலும் அவன் கொள்ளைலாபமடிக்கவில்லை – மாறாக, அவனுக்குக் கஷ்ட நிலைமைதான், பாவம். 30 வருட அனுபவம் இருக்கும் ஜொலிக்கும் ப்ரொக்ராம்மர்களுக்கு நாளுக்கு வெறும் 650ரூ சம்பளம் (சனி+ஞாயிறு வேலையில்லை, சம்பளமுமில்லை!) தான் கிடைக்கிறது – ஏனெனில் அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாதாம். (நம்மூரில் கெடுத்து வைத்திருக்கிறார்கள்! ஒரு எழவையும் தெரியாத ஐடி குளுவான் டம்மிபீஸ்களுக்கு ஆரம்ப சம்பள அளவே மாதம் 40-50 ஆயிரம் ரூபாய்!  அடுத்த தடவை யாராவது என்னிடம் ஐடி வேலையை யாருக்குக் கொடுக்கலாம் எனக் கேட்டுவந்தால் இந்த டுர்க்மேனிஸ்தான்காரனைத்தான் பரிந்துரை செய்யப்போகிறேன்)

இரண்டு குழந்தைகள். படிப்பும் சரியில்லை, ஸோவியத்திலிருந்து பிரிந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக சர்வாதிகாரமும் இஸ்லாமியமயமாக்கலும் ஆரம்பித்து இப்போது நாடே அபத்தக் களஞ்சியமாகிவிட்டது என்றான். அதேசமயம் 2006ல் நியஸொவ் இறந்தபின் கொஞ்சம் முன்னேற்றம் இருக்கிறது என்கிறான் – ஆனாலும் நாட்டில் 80% மக்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம். கொடுமை. மனிதவுரிமையாவது மசுராவது. கம்யூனிஸம் இருந்தபோதாவது படிப்பும் சாப்பாடும் வேலையும் கிடைத்துக்கொண்டிருந்தன. இப்போது வெறும் மதபோதனையும் சுருங்கிப் போதலும் தான்.

தீனி இருக்கிறது, அதுவும் எழவு, வறட்டு மசூதிமுதல்வாதமாக  இருந்துவிட்டுப் போகட்டும் — ஆனால் துனியீ? நம் குழந்தைகளுக்கு எதிர்காலம் எனவொன்று வேண்டாமா என்றேன். பாவம், அவன் என்னதான் சொல்வான்? :-(

தமிழகத்து ஸ்டாலின் சசிகலா வகையறாக்களின் அரசியலை — அயோக்கியத்தனம், கிறுக்குத்தனம், அற்பத்தனம் என வர்ணிப்பவர்கள் டுர்க்மேனிஸ்தானின் கதையைக் கேட்டால் கொஞ்சம் ஆசுவாசம் அடையலாமோ என்ன எழவோ! (எனக்கு ஆசுவாசம்தான்! ஏனெனில் நால் இந்தியாவில் தான் இருக்கிறேன், தமிழகத்தோடு மட்டுமல்லவே!)

-0-0-0-0-0-0-

பாகிஸ்தான்காரனுடன் பேச்சு இன்னமும் சுரத்தில்லாமல் இருந்தது. ஒரு சமயத்தின் ஏண்டா பேச ஆரம்பித்தோம் என்றாகி விட்டது, பாவம் அவன்.

இவன் ஒரு டெலிகாம் எஞ்சினீயர் –  கொஞ்ச நாள் ஸவுதி அரேபியாவுக்குச் சென்று அங்கு உட்புழுக்கம் தாங்கமுடியாமல் திரும்பி வந்துவிட்டான். மானஸ்தன். பெண்டாட்டி பெண்பிள்ளைகளுக்கு ஷட்டில்காக் புர்க்கா போடமாட்டேன் எனப் பிடிவாதம் பிடித்ததநாலும் அவன் ஷியா பிரிவினன் என்பதாலும் அங்கே அவனுக்குப் பலப்பல பிரச்சினைகள். இப்படிப்பட்ட ஸவுதி கதைகளைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு வாந்திதான் வரும். இப்படியுமா இந்த யுகத்தில் ஒரு அரசாங்கமிருக்கும் என்று!

பத்து வருடங்களுக்கு முன்போல பாகிஸ்தான் திரும்பியிருக்கிறான். ஏதோ ஸெல்ஃபோன் கம்பெனியின் டவர் பராமரிப்புப் பிரிவில் வேலை. கடந்த 20-30 ஆண்டுகளில் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதென்றான். முதலில் ஹிந்துக்களுக்கு வந்தார்கள், பின் அஹ்மெதியாக்களுக்கு – இப்போது எங்களுக்கும் பலூச்சிகளுக்கும் முறை என்றான், பாவம். எப்படியாவது அமெரிக்கா அல்லது கனடாவுக்குக் குடிபெயர்ந்துவிடலாமா எனப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

அவனிருக்கும் பஞ்சாப் மாகாணத்தில் அண்மையில் வெளியான அரசாணையைப் பற்றிச் சொன்னான்.  ஒரே ஒப்பாரி. பள்ளியில் படிக்கும் பெண்பிள்ளைகள் ஹிஜாப் போட்டுக்கொண்டு வந்தால் அவர்களுக்குச் சலுகை கொடுக்கப்படும் எனக் கல்வியமைச்சர் சொன்னவிஷயம் பற்றி:

https://www.dawn.com/news/1320465/minister-announces-policy-to-make-hijab-mandatory-in-punjab-colleges

செய்தியைப் படித்த நான், டேய் – இந்த ஆணையைத்தான் உங்கள் முதலையமைச்சர் ஒப்புக்கொள்ளவில்லையே, ஏன் அழுகிறாய் என்றேன். அவன் சொன்னது என்னவென்றால் இதெல்லாம் வெள்ளோட்டம் பார்க்கும் விஷயம்தான் (இந்த டான் பத்திரிகைச் செய்தியிலும் அப்படித்தான் இருக்கிறது) – அனைத்துப் பள்ளிகளிலும் கொர்-ஆனைக் கட்டாயப் படிப்பாக்கப் போகிறார்கள் வேறு. இந்த நாடு போகும் பாதையே சரியில்லை. அந்த அமைச்சரைப் பார் – முழுவதும் ஷவரம் செய்துகொண்டுவிட்டு பிறத்தியாருக்கு மதரீதியான அறிவுரை! நான் அந்த ஆளை மழித்துக்கொள்ள வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால் மதரீதியாக பெண்கள் இப்படி உடையணியவேண்டுமென்று சொல்பவர், தானும் மதரீதியாக தாடிவைத்துக்கொண்டு தொளதொள பைஜாமாவோடுதானே அலையவேண்டும்? ஆனால் இந்த மனிதர் டைட்டாக ப்ளுஜீன்ஸ் போட்டுக்கொண்டு ஆண்குறி புடைப்புத் தெரிய அலைபவர்தாமே? நபி ஆணுக்கும் உடலைப் பிடிக்கும் உடைகள் கூடாது என்றுதானே சொன்னார்?  இவருக்கு ஒரு நீதி, பிறத்தியாருக்கு ஒரு நீதியா? (எனக்கு கில்யஸ் அவர்களின் கருத்துகள் நினைவுக்கு வந்தன)

ஸெஹ்வான் வெடிச் சம்பவம் (=ஷியா மஸுதியைத் இஸ்லாமிக் ஸ்டேட் ஃபெப்ருவரி2017ல் தாக்கி  100க்கும் மேற்பட்ட ஷியாக்கள் இறந்தது) பற்றிச் சொன்னான்.

விஸா கிடைத்தால் குடும்பத்தோடு இந்தியாவுக்கு வா, ஊர்சுற்றிக் காண்பிக்கிறேன் என்றேன், வேறென்ன சொல்வது, பாவம்.

(ஆனால் என்னுடைய பிற பாகிஸ்தான் நண்பர்கள், நிலைமை மோசம்தான் ஆனால் படுமோசமில்லை, நாங்கள் பெனஸீர் புட்டோவின் பெண் மேலெழும்பி வந்து பாகிஸ்தானை உய்விக்கக் காத்திருக்கிறோம் எனக் கிண்டலாகச் சொல்கிறார்கள் – ஆனால் இவர்கள் வெறியர்களல்லாத, படிப்பறிவு பெற்ற ஸுன்னிகள், ஆக பார்வை மாறுபடலாம் என நினைக்கிறேன்)

எது எப்படியோ, வருடத்துக்கு ஒரு முறையாவது இவர்களுடன் தொடர்புகொள்ளவேண்டும்.

-0-0-0-0-0-

நம்மூரில் எவ்வளவோ குறைகள் இருக்கலாம். இடியாப்பச் சிக்கல் பிரச்சினைகள் இருக்கலாம். ஆனாலும் பாரதத்தின் ஆன்மா இன்னமும் செல்லரித்துப் போகவில்லை.  அது மிக ஆரோக்கியமாக உயிர்த்துடிப்புடன்தான் இருக்கிறது என்பதென் எண்ணம்.

சரி. இப்போது நான்,  என்னுடைய பாரதியைத் துணைக்குக் கூட்டிக் கொள்கிறேன்:

இந்திய சுதந்திரதேவி! நின்னை அனுதினம் தொழுதிடல் மறக்கிலேனே!

நாமெல்லாரும் கொடுத்துவைத்தவர்கள் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. என்னுடைய பாரதம் மஹோன்னதமானது!  26/01/2015

ஊக்கபோனஸாக — எப்படியாவது அதிசயங்கள் நிகழ்ந்து என்னுடைய நண்பர்கள், ஓஹோவென்றுகூட வேண்டாம் :-(  – சராசரியான, சாதாரண வாழ்க்கையும் (எழவெடுத்த கனடா ஆஸ்திரேலியா அமெரிக்கா எனப் போகவேண்டிவராமல்) அவரவர்கள் நாட்டிலேயே கௌரவத்துடன் வாழமுடிந்தால் அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் அமைதி தருவதாகவும் இருக்கும்.

ஏனெனில், யாராக இருந்தாலும் சரி, அவர்களுக்கும் — பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவையாயினும் நனி சிறந்தனவேதாம்!

சில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள்

3 Responses to “ஹேம் ரேடியோ, டுர்க்மேனிஸ்தான், பாகிஸ்தான் – சில பெருமூச்சுகள், வேறென்ன செய்ய…”

  1. பொன்.முத்துக்குமார் Says:

    // அவரவர்கள் நாட்டிலேயே கௌரவத்துடன் வாழமுடிந்தால் //

    நூற்றில் ஒரு வார்த்தை. நமக்கும் பொருந்தும் ஒன்றுதான்.

  2. ravi Says:

    பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவையாயினும் நனி சிறந்தனவேதாம்// True….


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s