#தமிழண்டா!

January 31, 2017

இந்தத் தமிழேண்டா, திராவிடண்டா, வீரமறவன்டா, வீழமாட்டோம்டா, வீரிட்டெழுவோம்டா, வீரவேல்டா, வெற்றிவேல்டா, வாளாவிருக்கமாட்டோம்டா, வாளைச் சுழற்றுவோம்டா, திமிறி எழுவோம்டா, திர்ப்பி அடிப்போம்டா, நெருப்புடா, செருப்புடா++  வீரவசனக் கொந்தளிப்புக் கோமாளி வகையறா தினவாளர்களைக் கவனிக்க நேரும்போதெல்லாம் சங்கடமாகவும் கூச்சமாகவும் (கொஞ்சம் கோபமாகவும், மிகவும் வெறுப்பாகவும்) இருக்கிறது; ஜிகினா மினுமினுக்கும் அவர்களுடைய அட்டைக்கத்திகளைப் பிடுங்கி சகதிராவிடர்களுக்கு ஈந்து இனமானக் கழுதைகளின் பசியை ஆற்றலாம் எனப் படுகிறது. ஆகவே முத்தாய்ப்பாக மட்டுமே, முக்கியமான இந்தக் கருத்துப்படங்களைப் பகிர்ந்துகொள்கிறேன், இந்தப்பதிவை வெறும்வெட்டி நகைச்சுவை – என நினைக்காதீர்கள். படு ஸீரியஸ் கட்டுரைதான் இது. கவலை வேண்டேல். சரியா? (இதில் சுமார் 2350 வார்த்தைகள்; ஸாரி, கொஞ்சம் ஓவர்தான்!)

கருத்துப்படம் #1: தமிழண்டா!  ^%&*$#@!தமிழண்டா!

கருத்துப்படம் #2: பெரியாரின் பேரண்டாக்கள்!

பெரியாரின் பேரண்டாக்கள்!இந்த அற்பத் தமிழண்டா! வகையறாக்களில் மிகப்பெரும்பான்மையினருக்கு, மேற்கண்ட அண்டா வகைகளில் உள்ளது போலவே உள்ளீடற்ற, மேல்மாடி காலி, ToLetகள். மேலதிகமாக, இவர்கள் காலிப்பயல்கள் மட்டுமல்லர், வெறும் வெப்பக் காற்றடைத்த பைகள் மட்டுமே! உணர்ச்சிகள் மட்டும் அமோகமாக இருக்கின்றன; மூளைகள்தான் பாவம், நெடு நாள் விடுப்பில் கடுப்பாகச் சென்றுவிட்டன, பாவம் அவை! :-(

தமிழ் அண்டா-வாம்!  தமிழ்ச்சொம்புடாவாம்! போங்கடா போக்கத்த அரெகொறெக் கூவான்களா! இது முதற்கோபம்; இது நடுக்கோபம். நீங்கள் இப்போது படிக்காமல் ஓடப்போவது கடைக்கோபம்.

எல்லாம், ஒர்ரே கோபமயம். ஏனெனில் – காத்திரமாக செயல்படவேண்டிய பலப்பல விஷயங்களில் அமோகமாகக் கோட்டைவிடுவதும், ஆனால், அற்ப மேலோட்டமான விஷயங்களுக்காகப் புல்லரித்துப் (இதை Bullஅரித்து எனவும் படித்துக்கொண்டு இன்புறலாம்) பொங்கிப் படையல் வைப்பதும் அதிசராசரி அரைகுறைத் தமிழனின் இயல்புகளில் தலையாயவையாக மாறி, பல மாமாங்கங்கள் ஆகிவிட்டன. மகாமகோ திராவிடத்துக்கு நன்றி.

சரி. இந்தப் பதிவை, வழக்கம்போலவே மண்டையில் அடித்துகொண்டு படித்தோ முழுவதும் படிக்காமலோ பொங்கலாம். பொங்காமலும் இருக்கலாம். கண்டுகொள்ளாமல் கடந்தும் போகலாம். கடைவிரிக்கிறேன்; கொள்வார் இல்லையென்றால்கூட, கட்டிவிடுவதாக இல்லை – மன்னிக்கவும். #விட்டேனாபார் ;-)

ஜல்லிக்காட்டான்களும் ஜல்லிக்கோட்டான்களும்: சில குறிப்புகள் (பாகம் 3/3)

இதில் இரண்டு தரப்பினருக்கும், பொதுவாகவும் தனித்தனியாகவும், சிலபல விவாதப் புள்ளிகள் இருக்கின்றன. முடிந்தால் படித்து இன்புறவும்.

அக்மார்க் தமிழினமான ஜல்லிக்காட்டான்களின் தரப்பு: ஜல்லிக்காட்டு இதிகாசம் படைத்து ஊடகப் படையல் வைக்கும் மயிரமுத்துக்களுக்கு… (இது – நேர்மையுடனும், அதீத உழைப்புடனும் பாரம்பரியக் கால்நடை இனங்களைப் பாதுகாப்போருக்கும், பாரம்பரியத்தின் உன்னதக்கூறுகளை அடுத்த தலைமுறையினருக்கு அமைதியுடன் ஆக்கபூர்வமான, அறிவியல்பூர்வமான முறைகளில் எடுத்துச் சென்றுகொண்டிருப்பவர்களுக்கும்  எதிராக அல்ல)

மிருகடம் புகழ் ஜல்லிக்கோட்டான்களின் தரப்பு சிறிய அளவில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு எதிராகக் கருத்துக் கபடியாடி  – அதேசமயம், மற்றபடி பசுக்களும் ஆடுகளும் அமோகமாக, வீதிவீதியாகச் சடங்குக்கொலைகளுக்கு ஆட்கொல்லப்படுவதை எதிர்க்காமல் – மதச்சார்பின்மைஎழவுடன் அமோகமாகக் காலட்சேபம் செய்பவர்களுக்கு… (இது – நேர்மையுடன் ஜீவகாருண்யத்தை அணுகும் சிலபல மனிதர்களுக்கும் அமைப்புகளுக்கும் எதிராகச் சர்வநிச்சயமாக அல்ல!)

சரி. பொது:

அ: வன்முறை ஒன்றும் 100% ஒதுக்கத்தக்க, அருவருக்கத்தக்க விஷயமல்ல. நம் சமூகம் தொடர்பான பலப்பல விஷயங்களில், வன்முறை இருக்கிறது; நம் பாரம்பரியம் என நம்மை நாமே புகழ்ந்துகொள்ளும் பலவற்றில் வன்முறை இருக்கிறது – இவற்றில் வெளியே பிரத்தியட்சமாகத் தெரியவருபவைகள் சில – ஆனால் கமுக்கமாகவும் சர்வவியாபிகளாகவும் இருப்பவை என்பவைபல; இவை  சமூக, பொருளாதார, அரசியல் அதிகாரங்களுடன் பின்னிப் பிணைந்தவை. நம் இயல்பான, நடைமுறை வாழ்க்கையின் அங்கங்களாக இருப்பவை. இவற்றில் சிலவற்றை நாம் கண்டுகொள்கிறோம். சிலவற்றைக் கண்டுகொள்வதில்லை. இதற்குக் காரணங்கள் பல. இது ஒரு மகாமகோ சாம்பல் நிறப் பரப்பு. இடம் தேசம் காலம் வர்த்தமானம் என பகுத்துப் பகுத்துமட்டுமே இவற்றைத் தருக்கரீதியாகப் புரிந்துகொள்ளமுடியும்;   வன்முறைகள் இல்லாமல் சமூகம் இல்லை –  பலசமயங்களில், நம் மானுடச்சூழல்களில் வன்முறைதான் ஒருங்கிணைப்பையும், அமைதியையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்த முடியும். ஆனால், அதேசமயத்தில் நாம், எல்லா வித வன்முறைளையும் ஒப்புக்கொள்ளவேண்டிய அவசியமுமில்லை. தேவையற்ற வன்முறைகளை அவ்வப்போது கழித்துக்கட்டியும் சிலசமயங்களில் ஒழித்துக்கட்டியும்தான் நம் சமூகங்கள் தொடர்ந்து மேலெழும்பி வந்துள்ளன. இதனால்தான் – நான் வன்முறை என்றாலே அதை மோசமாகக் கருதுவதில்லை. எடுத்துக்காட்டாக, நக்ஸலைட்கள்/ரௌடிகள் ‘என்கௌன்டர்கள்’களில் கொல்லப்படுவது வன்முறை வகையறா தான், ஆனால் இது பரந்துபட்ட சமூகத்துக்கு நெடு நாள் நோக்கில் நன்மை பயப்பது. இஸ்லாமிக் ஸ்டேட் குண்டர்கள் ஒழிக்கப்பட்டாலும் அது வன்முறைதான். ஆனால் இதுவும் மிகமிகத் தேவையானது. வன்முறை என ஒன்றை நாம் அழைப்பதனாலேயே அது விரும்பத் தகாததாகிவிடாது.

ஆ: நானும் நீங்களும் இந்த வன்முறைப் படிக்கட்டுகளில் ஏறித்தான் இங்கு வந்திருக்கிறோம்.  நீங்கள் படிப்பதற்காக இங்கு வந்தோம் என்ற பெயரில் இங்கு எப்படியோ வந்து பஜனை செய்துகொண்டிருக்கிறீர்கள் – உண்மையாகவே இங்கு வந்து படித்து, சமூகத்திற்கு உபயோககரமாக இருக்க விழையும் சிலபலர் மண்டைகளில் ஏறி அவர்களை அமிழ்த்தித்தான் இது நடந்திருக்கிறது – இதில் இல்லாத வன்முறையா? கண்ணாடிவீடுகளில் இருந்துகொண்டு கல்லெறிவது தமாஷ்தான். நீங்கள் அரசு இதனைச் சரியாக அணுகவில்லை, காவல்துறை சரியாக அணுகவில்லை, நீதிமன்றம் சரியில்லை என்றெல்லாம் சொல்கிறீர்கள். முதலில் நாம் ஒழுங்காக இருக்கவேண்டாமா? நாம் மாணவர்களாக, எந்தப் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்கிறோம்? சமூகப் பொறுப்புணர்ச்சி என்பதையே விடுங்கள்…

இ: பிற விஷயங்களையே விடுங்கள் – பிறத்தியார் பணத்தில் (அது பெற்றோருடையதாக இருக்கலாம் அல்லது அரசுடையதாக இருக்கலாம்)  கற்பிக்கப்படும் நம்முடைய சொந்தக் கல்வியை, மேற்படிப்பை நாம் எப்படி அணுகுகிறோம்? நாம் உபயோகிக்கும் பலப்பல சொற்றொடர்களின் சரியான அர்த்தங்களை நாம் அறிந்திருக்கிறோமா? கூரையேறிக் கோழி பிடிக்க, மண்ணில்  பெருச்சாளிகள் போலக் குழிதோண்டும் அதிபுத்திசாலிகளான நாம், வானமேறி வைகுந்தம் போவதுதான் எப்படி?

ஈ: என்ன சொல்கிறேன் என்றால் – ஜல்லிக்கட்டும் வன்முறை. ஜல்லிக்கட்டுக்காகப் போராடுவதும் வன்முறை; ஜல்லிக்கட்டைத் தடுப்போம் என அலைவதும் வன்முறை. சாம்பல் நிறத்தை உபாசனை செய்வோம்! கொஞ்சமேனும் பின்புலங்களைப் புரிந்துகொண்டு நேர்மையான செயல்பாடுகளை மேலெடுத்துச் செல்வோம்.

உ: இந்தப் பண்டைய பாரம்பரியம் என்பதின் கூறுகளெல்லாமே – வசீகரமும், முனைப்பும், அதிகாரமும் உள்ள தனி நபர்களால் தோற்றுவிக்கப்பட்டு தொடர்ந்த முரணியக்கப்படுத்தப்பட்டு – பின்னர் அவர்களைச் சுற்றியிருந்த  குழுக்களினால் வளர்க்கப்பெற்று, பிராந்தியச் சமூகங்களினால் மேலெடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் பலப்பல வரலாற்றுக் காரணங்களினால் பரவலாகியவைதான்;  காலங்காலமாக – ஆதிகாலத்திலிருந்து (ஏன், பகபகவெனச் சிரித்துக்கொண்டேயிருந்த அந்த பகவன் காலத்திலிருந்தே! மன்னிக்கவும்!) இந்தத் தனிமனிதக் கருத்து+செயல்பாடுகளுக்கும் சமூகத்தின் ‘பாரம்பரிய’ குணாம்சங்களுக்கும் இந்த முரணியக்க இழுபறி நிலை என்பது தொடர்ந்து வந்திருக்கும் ஒன்று; நம் பாரம்பரியம் என்பது ஒரு ஒற்றைப்படையான, எந்தக் காலத்திலும் மாறாத பேருண்மை அல்ல. பழையன கழிதலும் புதியனவும் கழிதலும் உலகத்தின் பழம்பெரும்(FruitGetting ©எஸ்ரா) நியதிகள்.

ஊ: தனி மனிதவுரிமை, கருத்துரிமை என்பதிலும் வன்முறை இருக்கிறது. பாரம்பரியம் என உருவாகி வருவதிலும் வன்முறை இருக்கிறது. இவை ஒன்றுக்கொன்று பொருதிக்கொள்ளும்போது நமக்குச் சமன நிலை தவறிவிடுகிறது. அறிவுஜீவிகளாகத் தம்மைக் கருதிக்கொள்ளும் பலரும் தனிமனிதவுரிமையைத்தான் தூக்கிப் பிடிப்பார்கள். பெருமாள் முருகனின் உதவாக்கரை நாவலான ‘மாதொருபாகன்’ அதன் மைய நிகழ்ச்சியாக ஒரு கருத்தியல் வன்முறையைக் கொண்டுள்ளது. அது எதிர்க்கப்பட்டதிலும் வன்முறை இருந்தது. இவை இப்படித்தான் நடக்கவேண்டும் எதிர்கொள்ளப்படவேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் ‘கொடுக்கப் படவேண்டிய விலை’ என்பது எதற்குமே கொடுக்கப்படத்தானே வேண்டும்? ஆனால் பெமுவின் நாவலுக்கு எதிரானவர்களைத்தான் நாம் எதிர்ப்போம்! ஏனெனில் நமக்கு தனிமனிதவுரிமைதான் முக்கியம். ஆனால் – எங்கெங்கு காணினும் சாம்பல் நிறமப்பா.

எ: அதே சமயம் – ஜல்லிக்கட்டு என வந்துவிட்டால் தனிமனிதக் கருத்துரிமையை (மிருகங்கள் வதைபடுவதற்கு எதிராகப் போராடுபவர்களுடையது) காற்றில் பறக்கவிட்டுவிட்டு, தமிழ்ப் பாரம்பரிய உணர்ச்சிக்குக் கட்சி மாறிவிடுவார்கள், நம் அறிவுஜீவிகள்!

ஏ: சரி. இந்தப் பின்புலத்தில் – நம்மால் இப்போதைக்கு முடிகிற விஷயமான முற்போக்குவாத போராளித்தனத்தை – மேம்போக்காக வன்முறை என நாம் கருதுவது என்பதைப் பற்றி முழ நீளமாகப் பேசிக்கொண்டு பஜனை செய்து —  முக்கிமுக்கிப் பிரயத்தனப்பட்டு வெளிக்காட்டுவது மட்டுமில்லாமல், ஏதாவது ஆக்கபூர்வமாகச் செய்வதிலும்தான் தான் நேர்மையிருக்கிறது.  அதாவது பேசுவது (எழுதுவதும்தான்!) மிக எளிது. கோஷ்டம் போடுவது இன்னமும் எளிது. மெரீனா கடற்கரையில் மாபெரும் கூட்டமாக, உணர்ச்சிவசப்பட்ட கூமுட்டைத்தனத்துடன் அணிதிரண்டு, கடற்கரையை மூத்திரக்காடாக மாற்றுவது மகாமகோ எளிது. இவையெல்லாவற்றையும்விட இணையத்தில் கண்டமேனிக்கும் பொங்குவது மிகமிகமிக மிக ஜுஜூபி. நன்றி, ரஜினிகாந்த்.

ஜல்லிக்கோட்டான்களுக்கு:

க: ஓவ்வொரு தேசத்திலும், நிலப் பகுதியிலும் இம்மாதிரி கோழிச்சண்டை ஓட்டகச் சண்டை மனிதச் சண்டை என பலப்பல இருக்கின்றன. ஐரோப்பிய, அப்ரஹாமிய மரபுகளில்(!)  குரூர விளையாட்டுகள் கொண்டாடப்படுகின்றன – மனிதர்களையும் (பலவற்றில் இவர்கள் ஆயுதம் தாங்கிகள்), பாவப்பட்ட பட்டினிபோடப்பட்ட நிராயுதபாணி மிருகங்களையும் பொருதவிட்டு ரத்தக்களறியை அரங்கேற்றுபவர்கள் அவர்கள். அவற்றுடன் ஒப்பிடும்போது இந்த நம்மூர் ஜல்லிக்கட்டு, ஒரு அப்பாவித்தனம்தான். இந்த நாடுகளில் இருந்து, தன்னார்வப்பணப் பிச்சையைப் பெற்றுக்கொண்டு, இங்கு என்ஜிஓ கஞ்சிவோ நடத்திக்கொண்டு –  கமுக்கமாக நம் நாட்டில் செயல்பட்டு மனிதவுரிமை மண்ணாங்கட்டியுரிமை மிருகவுரிமை எனக் கபடியாடுவது சரியல்ல.

ச: ஜல்லிக்கட்டுகளில் எருதுகளைக் கொலை செய்ய ஏற்பாடுகள் இல்லை. சிலசமயம் அவைகளுக்கு வெறியேற்ற சாராயம் ஊற்றிக்கொடுக்கப்படும் என்றாலும், சிலபல சமயங்களில் மனிதவுயிர்ச்சேதம் இவற்றில் ஏற்பட்டிருக்கின்றன என்றாலும், பாவப்பட்ட சண்டைஎருதுகள்  மிகவும் கஷ்டப்படுகின்றன என்றாலும் – ஜீவகாருண்ய ரீதியில் பார்த்தால் – சடங்குரீதிக்கொலைகளைப் போன்ற அட்டூழியம் இவற்றில் கிடையாது.

ட: உங்களுடைய இரட்டைவேடம் அலாதியானது; அக்டோபர் 2015 வாக்கில், மாட்டிறைச்சி பற்றிய மும்முரத்தில் நீங்கள் இருந்தீர்கள்;  ஊடகப்பேடிகளும் இதனை விசிறிவிட்டுக்கொண்டிருந்தார்கள் – அப்போது என்ன சொன்னீர்கள், நினைவிலிருக்கிறதா?   “நான் இன்று மாட்டிறைச்சி சாப்பிட்டேன், என்னைக் கொலை செய்” அல்லது “என்னைக் கைது செய்” என்று ஊர்கோலம் போய் உளறினவர்கள்தாமே நீங்கள்? இப்போது ஏன் இந்த  ஜல்லிக்கட்டு என்பது காளையுரிமை மாடுகளின்மீதான வன்முறை எனப் பம்முகிறீர்கள்? சாத்வீகமாக மாட்டிறைச்சி சாப்பிட்டாலும் முற்போக்குத்தனம், ஜல்லிக்கட்டை எதிர்த்தாலும் முற்போக்குத்தனம்! உங்களுடைய கருணையுணர்ச்சியே அலாதிதான்! ஒரு பக்கம் மாடு கொல்லப்பட்டால் ருசிகரம்; ஆனால் மாடு விரட்டப்பட்டால் அது வன்முறை. உங்களுடைய வேடங்களுக்கு ஒரு எல்லையேயில்லை!  உங்களைப் போன்ற முற்போக்குவாதிகள் போல போங்காட்டம் ஆடும், கயமைக் கபடிகளில் ஈடுபடும் பிற்போக்கு அற்பர்களை நான் இதுவரை கண்டதில்லை. உங்களுடைய ஆஸ்தான வாகனம் பச்சோந்திதான், எனக்கு இதில் சந்தேகமேயில்லை!

த: ஜல்லிக்கட்டுக்கு எதிராக இவ்வளவு பேசுகிறீர்களே! உங்களில் யாராவது, ஒருவராவது, இங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கோவண்டியின் மகாகசாப்புக் கடைகளுக்குச் சென்றதுண்டா? மின்சார அதிர்ச்சி எழவைக்கொடுத்து சில நொடிகளில் மாடுகளைக் கொல்லாமல் – அவை துடிக்கத் துடிக்க சாவகாசமாகக் கழுத்துகள் அறுக்கப்பட்டு ரத்தக்களறியாகவதைப் பார்த்திருக்கிறீர்களா? அடுத்தது தம்முறைதான் என எப்படியோ தெரிந்துகொண்ட வரிசை மாடுகள், எருகிக்கொண்டே  தீனமான குரலில் முனகுவதைக் கேட்டிருக்க்கிறீர்களா?  இவற்றுக்கு எதிராகவும் உங்கள் ஊழல் ப்ரொடெஸ்ட் அறப்போர் ஒன்றைச் செய்து, பின்னர் சாவகாசமாக ஜல்லிக்கட்டு பக்கம் வந்தால் அதுவாவது பரவாயில்லை. ஆனால் இதெல்லாம் மைனாரிட்டி சமாச்சாரம் ஏன் வம்பு என சாய்ஸில் விட்டுவிடுவீர்கள் அல்லவா? கமுக்கமாகக் கண்டுகொள்ளாமல் போய்விடுவீர்கள் அல்லவா?

ப: வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள், தெருவோரக் கசாப்புக்கடைகள் தொடர்புள்ள வன்முறைகளை நீங்கள் ஏன் கண்டுகொள்ள மாட்டேனென்கிறீர்கள் – ஏன், நீங்கள் அப்பன் செலவில் புகைக்கும் கஞ்சா புகையின் வழியே சமதர்ம சமூகத்தைப் பார்த்துக்கொண்டு தத்தித்தத்தி நடக்கையில் உங்கள் காலடியில் நசுங்கி எறும்புகள் செத்தால் பரவாயில்லையா? எறும்பாபிமானம் வேறு, எருதாபிமானம் வேறா?

ற: நகர்ப்புறங்களில் உட்கார்ந்துகொண்டு கருத்துப்பட்டங்களை விட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்கு – கிராமம் என்றாலே கருமாந்திரம். முற்போக்குகளாகிய நீங்கள், பிற்போக்குகளான கிராமத்தான்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை; எனெனில் கிராமங்கள் ஜாதிவெறியிலும், மூட நம்பிக்கைகளிலும், காட்டுமிராண்டித்தனங்களிலும், உரத்த சப்தங்களிலும், கோமணங்களிலும் ஆழ்ந்திருப்பவை. கிராமவாசிகளுக்குப் படிப்பறிவோ சுயசிந்தனையோ இல்லை – அவர்களுக்கெல்லாம் நாமாக ஏதாவது பார்த்துப் போட்டு ஏதாவது செய்தால்தான் உண்டு. ஐரோப்பா அல்லாத பூவலகப்பகுதிகள் வெள்ளைக்காரனின் சுமை(whiteman’s burden) என்பதைப் போல, உங்களுடைய சுமை நம் கிராமங்கள். :-(

ங: ஆக ஜல்லிக்கட்டிலிருந்து கிராமங்களை விடுவிப்பது – உங்கள் தலையாய கடமை அல்லவா? எனக்குப் புரிகிறது. (அதே சமயம், கிராமம் என்றாலே ஒரு ரொமேன் டிக், அதிவுன்னத சித்திரத்தை விரித்துக்கொண்டு, மாட்டுக்கு எவ்வளவு கால் என்பதே தெரியாமல் – ஜல்லிக்கட்டை உணர்ச்சி சொட்டச்சொட்ட ஆதரிப்பவர்களும் உங்களில் இருக்கிறீர்கள், இவர்களுக்கும் விமோசனமேயில்லை, நன்றி)

ஜல்லிக்காட்டான்களுக்கு:

அ: 22-23 ஆண்டுகளுக்கு முன் (என நினைவு; என் நண்பன் ஒருவன் என்னைக்கூட்டிக்கொண்டு போயிருந்தான். இவனும் இப்போது வெளிநாடே சரணம்!) நானுமேகூட இந்த அலங்காநல்லூர் வீர்ர்ர்ரவிளையாட்டுக்குச் சென்றிருக்கிறேன். அங்கு – நம் வீரர்களானவர்கள் காளைகளின் வாலை முறுக்கி அதிலிருக்கும்  மசுத்தைப் பிடுங்குவது, பாவப்பட்ட எருதின் ஆண்குறியை/கொட்டையை உதைப்பது, அதன் காதை முறுக்கிக் கடிப்பது/கிள்ளுவது, கண்ணைமூடுவது, கண்களில் மிளகாய்ப்பொடியைத் தூவுவது, படங்கை (burlap) நசுக்குவது – போன்றவற்றை வீரம் சொட்டச்சொட்டச் செய்வதைப் பார்த்திருக்கிறேன்; சிலசமயம் இந்த பாவப்பட்ட எருதுகளின் உரிமையாளர்கள், அமைப்பாளர்களிடன் இதுபற்றிக் கண்டனம் தெரிவித்ததைக் கவனித்திருக்கிறேன். (அதாவது – இம்மாதிரி அசிங்கங்களை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்! ஆனால் இக்காலங்களிலும் இதே அலங்கோலம்தானா என்பதறியேன்! இப்போது எருதுகளுக்கு கமுக்கமாக ஸ்டெராய்ட் எழவுகளைக் கொடுக்கிறார்களோ என்ன எழவோ!)

ஆ: இந்த விஷயம் எனக்குப் புரியமாட்டேனென்கிறது. ஒருபக்கம், கலவரத்தில் இருக்கும் ஒரு எருது. இன்னொரு பக்கம், அதனை ‘அடக்கும்’ அல்லது பணமுடிப்பைப் பிடுங்கும் வெறியில் இருக்கும் இந்த மறவர்திலகங்கள்.  ஓண்டிக்கு ஓண்டி இல்லாமல் – கும்பலாக சேர்ந்து ரௌடித்தனம் செய்து பாவப்பட்ட ஒரு எருதை அடக்குவதில் என்ன வீரம் இருக்கமுடியும் – எனக்கு இது, சனியன் புரியவே மாட்டேனென்கிறது. மாறாக அதே சமயம் – இந்த வீரர்கள் ஏன் தனித்தனியாக ஒரு இருபது கோபக்கார எருதுகளுடன் பொருத மாட்டேனென்கிறார்கள் என்பதும் புரியவில்லை.

இ: ஜல்லிக்கட்டு வீர(!) விளையாட்டுக்கும் திராவிட இனமானத்துக்கும் ஒரு தொடர்புமில்லை; ஏன், திராவிடத்துக்கும் மானத்துக்குமேகூட ஒரு மசுத்துக்கும் தொடர்பில்லை. மன்னிக்கவும்.

ஈ: பாவப்பட்ட ஈவெரா ‘பெரியார்’ அவர்களை இந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இழுக்கவேண்டாம். அவர் மேல் ஆயிரம் விமர்சனங்களை வைக்கலாம் – ஆனால், அவருடைய எழுத்துகள்+செயல்பாடுகள் மூலம் அவரை அறிந்துகொண்ட எவரும் அவர்மேல் இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்தமுடியாது – அவர் இந்த ஜல்லிக்கட்டை காட்டுமிராண்டித்தனம் என்றுதான் சொல்வார். வெட்டிப் பழமைவாதம் என்றுதான் சொல்வார். ‘பெரியாரின் பேரன்’ என மார்தட்டிக்கொள்ளும் எவருக்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பேத்த மட்டுமே முடியும். நீங்கள் பல விதங்களில் அமோகமாக உளறுகிறீர்கள். (அந்தப் பையன் இச்சமயம் விவாதிக்க வந்தான் – அதாவது பெரியார் பற்றி ஒரு எழவும் படிக்காமலேயே! அவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எழுதியிருக்கிறார் என அட்ச்சுவுட்டான்! திராவிடக் குஞ்சப்ப நாயனார்போலும், ஒட்ட நறுக்கிவிட்டேன், அற்பன்!) :-(

உ:  ஜல்லிக்கட்டின் ‘பாரம்பரியம்’ ஆவணப்படுத்தப்படாமல் அல்ல. அதிகமாகப் படிக்காத எனக்கேகூட இது தெரியும் – ஒரு எடுத்துக்காட்டாக, இது பாடுபொருளாக உள்ள அழகான தமிழ் நாவல் இருக்கிறது – வாடிவாசல்; சிசு செல்லப்பா எனும் மகாமகோ மனிதர், காந்தியர் எழுதியது, செறிவானது. இதனை நீங்கள் படித்திருக்கிறீர்களா? அதனுடைய ஒரு அழகான ஆங்கில மொழிபெயர்ப்பு கூட வந்திருக்கிறது – அதனை வேண்டுமானால் உங்கள் நூலகத்துக்குக் கொடுக்கத் தயார். (தமிழ்ப் பையனுக்கு இதுபற்றி ஞே! ஆனால் தெகிர்யமாகவும் பொத்தாம்பொதுவாகவும் ஒன்றுமே இல்லை தமிழகத்தில் என்று அட்ச்சுவுட்டான்; அவனுக்கு என்ன, தான் ரொமிலா  தாபர் என நினைப்போ?)

screenshot-from-2017-01-31-115254இதை அழகாக மொழிபெயர்த்துள்ளவர் என் நண்பேண்டா! ;-)

ஊ:  மேலும், பாரம்பரியம், பழமை என்றாலே தூக்கிக் கொண்டாடவேண்டிய அவசியமுமில்லை. அல்லது அற்ப முற்போக்காளர்களைப்போல அவற்றை இழிவு செய்து ஏறி மிதிக்க வேண்டியதும் இல்லை.  எடுத்துக்காட்டாக – ஒருசில நூற்றாண்டுகள் முன்பு வரை, நம் தமிழ்ப் பெண்கள் (மற்ற பகுதிகளில், ஒற்றைப்படை மலட்டுத் தன்மைமிக்க அப்ரஹாமிய மதத்தாக்கங்களும் அதிஒழுக்கவியல் கூறுகளும் இல்லாத இடங்களில் இருந்ததுபோலவே)  பாற்சுரப்பிகளை மூடவில்லை. அது ஒரு பெரிய விஷயமாகக் கருதப் படவில்லை. ஆனால் – பாரம்பரியம் என்று புல்லரித்துக்கொண்டே இருப்பவர்களுக்கு – இதுவும் ஒரு முக்கியக்கூறு என்று பட்டால், முதலில் அவர்களுடைய குடும்பங்களில் இதனை நடைமுறைப்படுத்தலாம். பின்னர் பிற பாரம்பரியக் கூறுகளைப் பிறருக்கு போதிக்கவரலாம். நன்றி.

எ: இந்த வருடமேகூட இந்த ஜல்லிக்கட்டு நடந்தால், சிலபல உயிர்கள் பறிக்கப்படலாம் – ஜல்லிக்காட்டான்கள் இறந்தாலோ அல்லது போக்கற்ற பராக்குப் பார்வையாளர்கள் இறந்தாலோ எனக்குப் பெரிய விஷயமில்லை. இவர்களெல்லாம் அபாயங்களைப் பற்றிய விவரங்களை நன்கு அறிந்தவர்கள்; முழு ஒப்புதலுடன் தான் வந்திருப்பார்கள். செத்தால் சாகட்டும். ஆனால் ஆறறிவற்ற அந்த ஜீவன்கள்?

ஏ: வாட்ஸ்அப் ட்விட்டர் ஃபேஸ்புக் போன்ற சமூகவளைத்தலங்களில் அதீத ஆர்வத்துடன் ஈடுபடும் பலர், குறிப்பாக என் செல்லத் தமிழர்களானவர்கள் — பொருளாதார மேதைகள் எனவும், பல்துறை விற்பன்னர்கள் (Dental Salesmen ©எஸ்ரா) எனவும், சமூக ஆர்வலர்கள் எனவும், பலப்பல காத்திரமான முறைகளில் நம் சமூகம் மேன்மையும் செழுமையும் அடைய முயற்சிகள் போன்றவற்றை உட்கார்ந்த இடத்திலிருந்தே அதுவும், அல்லும்பகலும் ஆட்காட்டிவிரலை மட்டும் ஸ்மார்ட்ஃபோன் திரையில் தேய்த்துத் தேய்த்தே  உழையோவுழை என உழைத்துச் சாதித்திருப்பவர்கள் எனவும் முன்னமே அறிவேன்; ஆனால், இப்படிப்பட்ட பல இன்றியமையாத விஷயங்களை அறிந்த, மகா மனோதிடமும் புஜபல பராக்கிரமும் வாய்ந்த எனக்கே — அந்த சமூகவளைத்தல எலிகளில், இவ்ளோ நிறைய்ய்ய விஞ்ஞானிகளும் இருக்கிறார்கள், அதி நவீன அறிவியல் பூர்வமாக உலகின் அனைத்துப் பிரச்சினைகளையும் அலசுகிறார்கள் என்பது இன்றுதான் தெரியும். என் அறியாமையை நினைத்தால் எனக்கே மிகச் சோகமாக இருக்கிறது. நான் தேய்க்க வேண்டிய ஸ்மார்ட்ஃபோன் திரைகள் அதிகம், வேறென்ன சொல்வது! :-(

ஐ: நான் புரிந்துகொண்ட வகையில் இந்த ஜல்லிக்காட்டு விஞ்ஞானிகள் தர்க்கபூர்வமான விஷயங்களைச் சுட்டுகிறார்கள் – இதில் ஒன்று ‘ஜல்லிகட்டு தடை செய்யப்பட்டால் பலமிக்க காளைகள் தெரிவு செய்யப்படுவதும் அவற்றின் விந்துமூலமாக நம் நாட்டுக் கால் நடை வகைகள் வளர்த்தெடுக்கப்படுவதும் நடக்காது’ இன்னொன்று: ‘ஜல்லிக்கட்டு நடக்காவிட்டால், அதற்காக வளர்க்கப்படும் காளைகள் அடிமாடுகளாக விற்கப்பட்டுவிடும்’தமாஷ்தான்.

1. இந்த விஞ்ஞானிகள் சொல்லவருவது என்னவென்றால் ஜல்லிக்கட்டு இல்லையென்றால் – சுதேசி இனங்கள் வளரமுடியாது. ஜல்லிக்கட்டுக்காக வளர்த்தவற்றை அடிமாடுகளாக விற்றுவிடுவோம்! என்னே அவர்களுடைய மரபைப் போற்றும் தன்மை. இவ்ளோதானாடா வொங்களோட டங்கு அல்லது டக்கு?
2. ஜல்லிகட்டுக்காகப் பிரத்தியேகமாக வளர்க்கப்படும் காளைகள் பொலிகாளைகள்! அப்படியா என்ன? :-))  Just because they are trained/groomed to fight jallikkattu – they do not AUTOMATICALLY become seedbulls; any self respecting veterinarian or a scientist would know this, but our twitter/facebook/whatsapp scientists are a different fantastic breed altogether, they know EVERYTHING, OMG! – நம் ஜல்லிக்காட்டான்களின் பரப்புரையே அலாதிதான்! விஷயம் என்னவென்றால் – பாலுக்காக, இறைச்சிக்காக, பண்ணைவேலைக்காக எனப் பலப்பல காரணங்களுக்காக இனங்கள் விருத்தி செய்யப்படுகின்றன – அறிவியல் பூர்வமாக அணுகப்படுகின்றன. பொத்தாம்பொதுவான பார்வை நல்ல நகைச்சுவை மட்டுமே!
3. நான் என்னுடைய மதனபள்ளிவாழ் சுதேசிக்கால்நடை இயக்க நண்பர் ஒருவருடன் மதுராந்தகம் பக்கமிருக்கும் ஒரு மாமனிதர் (முகுந்தன்? பெயர் சட்டென்று நினைவுக்கு வரவில்லை) நடத்திக் கொண்டிருந்த (கொண்டிருக்கும்?) பண்ணை ஒன்றுக்கு,  சுமார் 20 வருடங்கள்முன்  சென்றிருக்கிறேன். இவர் சுதேசிப் பசுக்களை அறிவியல் பூர்வமாக அணுகி அவற்றை விருத்தி செய்ய முயன்று வெற்றி கண்டவர். என் பெருமதிப்புக்கு உரிய ஸ்ரீ தரம்பால் அவர்களுக்கும் அறிமுகமானவர். இந்தப் பெரியவர் ஜல்லிக்கட்டு ஒன்று மட்டுமேதான் காத்திரமான சுதேசி இனங்களை வளர்த்தெடுக்க பொலிகாளைகளை உருவாக்க முடியும் எனச் சொல்லவேயில்லை.
4. இம்மாதிரி மனிதர்களின் பண்ணைகள் பலவற்றுக்கு (குஜராத், மஹாராஷ்டிரா, ஆந்திரம், கர்நாடகா, (இப்போதைய)ஜார்கண்ட் மாநிலங்கள்) சென்றிருக்கிறேன்; இவர்களில் பலர் காந்தியர்கள்; அறிவியல் பூர்வமாக விஷயங்களை அணுகுபவர்கள். அந்தப் பிரதேசங்களில் (எனக்குத் தெரிந்து இந்த கர்நாடகாவைத் தவிர) ஜல்லிக்கட்டு போன்ற வீர(!)விளையாட்டுகள் இல்லை. இருந்தாலும் தமிழகத்தை விட மிகமிக நல்லமுறையில் சுதேசி இனங்களை விருத்தி செய்கிறார்கள். அதுவும் அலட்டிக்கொள்ளாமல், விளம்பரமில்லாமல், உணர்ச்சிகர உச்சாடனம் செய்யாமல்…
5. நம் தமிழர்களிடமிருந்து அலப்பரை செய்யக் கற்றுக்கொண்டு அவர்கள் செல்லவேண்டிய தூரம் அதிகம்தான். பாவம், அவர்கள். மேலும் அவர்களுக்கு மெரினா போன்ற கடற்கரை இல்லையாம், அதனால் அங்கு தங்கி மூத்திரம் அடிக்க அவர்களுக்குக் கொடுப்பினையும் இல்லை. என்ன கொடுமை பாருங்கள்.

ஒ: இன்னொன்று – பரவல் மயமாக்கல் (உலகமயமாக்கல் எனும் ) விஷயத்தைப் பற்றி: ஜல்லிக்கட்டு என்பது ஏறுதழுவதல் என பண்டையகாலங்களில் அழைக்கப்பட்ட சமாச்சாரம், கிராமங்களில், முல்லை+மருத நில எல்லைத் தொகுப்புகளில், தைமாத வாக்கில் அறுவடை முடிந்தவுடன் பொழுதுபோக்குக்காக – ஒரு கொண்டாட்டத்துக்காக நடத்தப்பட்டதொன்று. இந்த விளையாட்டை – வீரம் செறிந்த, மறம் பொங்க, தினவு தெறித்த, பொருதுதல் பொரிந்த, ரத்தம் சொட்ட என்றெல்லாம் நாம் இப்போது அதனை அழைத்துக்கொள்ளலாம். அது வேறு விஷயம். அது அப்படியே அங்கேயே பிராந்தியச் சூழல்களில் இருந்தால் ஒரு பிரச்சினையும் இருந்திருக்காது. ஆனால், கடந்த சிலபல ஆண்டுகளாக – இதனை ஒரு சுற்றுலா வர்த்தகப் பொருட்காட்சியாக்கி, ஏகப்பட்ட விளம்பரம் கொடுத்து, பரப்புரை செய்து, ஊடகப் பேடிகளின் பேய்ப்பசிக்கு பலிகொடுத்து என — ஒரு அதிசாகசப் பிம்பத்தை வளர்த்தெடுத்துவிட்டார்கள். விளம்பரம் என்றால் – அதற்கு நாலுவிதமான எதிர்வினைகள் இருக்கும். இந்த எதிர்வினைகளுக்குப் பயப்பட்டால், அதிஆவேசப் பட்டால் – முதலில் வினை விதைத்தது யார்?

ஓ: சரி. அதில் ஒரு எதிர்வினைதான் இந்த மிருககாருண்ய அமைப்புகள் போட்ட வழக்கு. அதே சமயம் இந்த வழக்குகளுக்கு காத்திரமான எதிர்வினையென ஒன்றையும் செய்யாமல் (சுப்ரமணியன் சுவாமி அவர்களின் செயல்பாடு, இந்தக் கையாலாகாதவர்களின் பிலாக்கணத்துக்கு ஒரு விதிவிலக்கு, இன்னும் சிலர் இப்படி இருக்கலாம், எனக்குத் தெரியாது) பின்னர் குய்யோமுறையோ என அழுதால் என்ன புண்ணியம்?

ஜல்லிக்காட்டான்களே, ஜல்லிக்கோட்டான்களே! 

நீங்கள் இப்படியே வீரமாகப் பேசிக்கொண்டிருப்பதில் ஒரு நல்லவிஷயம் இருக்கிறது – அது என்னவென்றால். இதற்குப் பதிலாக — நீங்கள் ஜிஹாதிகளைப்போல ஏகே47களுடன் கண்ணில்பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொண்டு, கிடைத்த பெண்பிள்ளைகளையெல்லாம் கற்பழித்துக்கொண்டு அலையாமல் இருக்கிறீர்கள் எனும் அதிஅற்புதமாக விஷயம்தான்.

ஆகவே, வேலைவெட்டியில்லாமல் இப்படியே பேசிக்கொண்டிருங்கள்.விவாதியுங்கள். உட்கார்ந்த இடத்திலிருந்து அலங்காமல் நலுங்காமல் களப்பணி செய்யுங்கள். ஸீஸனுக்கு ஏற்றமாதிரி நடனமாடுங்கள். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளுங்கள். எந்தப் பக்கம் அது வீசினாலும் பிரச்சினையில்லை. உங்களுடைய போக்கற்ற நோம் சாம்ஸ்கி சொன்னது – we’re defined by our actions, not our words – வெறுமனே போராட்டத் தட்டிகளுக்கு மட்டும்தானே?

…இந்த ஸெமெஸ்டரும் ஜாலியாக முடிந்துவிடும்.  பின்னர் வேலையில்லாப் பட்டதாரிகளாக மாறி பட்டம் பட்டமாக விட்டுக்கொண்டிருக்கலாம். அல்லது ஏதாவது பிச்சைக்காரத் தன்னார்வ நிறுவனத்தில் சேர்ந்து போராளித்தனமாக அமோக பஜனை செய்துகொண்டிருக்கலாம். நன்றி.

-0-0-0-0-0-

…நடையைக் கட்டினேன். அவர்களிடம் அப்பனிடமிருந்து (அல்லது அரசிடமிருந்து) சுட்ட பணம் இருந்தால் கண்டிப்பாக, என் மேல் ஒரு ‘ஸுபாரிக் கொலை ஒப்பந்தம்‘ வைப்பார்களோ என்ன எழவோ! நனிகொலைப் பேராசான், கராச்சிதாதா, பாலிவுட்கொண்டோன்  தாவுத் இப்ராஹிம்தான் என்னைத் தடுத்தாட்கொல்லவேண்டும். ராமசாமி தேரா டுக்டே ஹோங்கே, இன்ஷாஅல்லா, இன்ஷாஅல்லா… ;-)

சரி. மாடொருபாகம் தொடரின் மூன்றாம்/கடைசிப் பாகம் முற்றிற்று. எனக்கும் முற்றி விட்டது.
-0-0-0-0-0-

ஹ்ம்ம்… …நமக்கு எதிர்காலமேயில்லை, எங்கும் எதிலும் சராசரித்தனம்தான், பிறத்தியார் அனைவரும் அயோக்கியர்கள் மட்டுமே, நன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை நடத்திக்கொண்டு செல்லவேமுடியாது என்று கருதும் 100% அவநம்பிக்கை/சுணக்கவாதியல்லன் நான். அப்படிக் கருதுபவனாக இருந்திருந்தால் நானும் என் ‘பணி’ மூலம் அந்த அவநம்பிக்கைவாதத்தை நடைமுறைப் படுத்தி உண்மையாக்கியிருப்பேன்… Life then, would be a self-fulfilling pessimistic prophecy.

மாறாக – எனக்கு, வளமான/செழுமையான எதிர்காலத்தைக் குறித்த ஒரு மௌடீகமான நம்பிக்கை இருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறேன். தொடர்ந்த காத்திரமான பங்களிப்புகளினால், நாம் நல்ல மாற்றங்களைக் கொணரமுடியும், விட்டுவிடுதலையாகி நின்று ஒரு சிட்டுக்குருவியைப் போல சுதந்திரமாகப் பறக்கமுடியும் எனவும் ஆத்மார்த்தமாக உணர்கிறேன்.  பாரம்பரியப் பழமையை முற்போக்குத்தனம் + மதச்சார்பின்மைத்தனத்துடன் வெறுக்காத, புதுமையைப் புதுமை என்பதற்காகவே ஆராதிக்காத, சமனமிகுந்த மக்கள் நிரம்பிய (மிக முக்கியமாக, நகைச்சுவை உணர்ச்சி மிக்க) புதியதோர் உலகத்தைச் சமைத்தெடுக்க முடியும் என நம்புகிறேன். வரலாறு மட்டுமல்ல, அறிவியலும் தொழில் நுட்பமும், ஏன் இலக்கியம்கூட என்னை விடுதலை செய்யமுடியும் என்பதை அனுபவித்து மகிழ்கிறேன், நன்றி.

மூன்று பிற்சேர்க்கைகள்:

1. நண்பர் ஒருவரின், ஜல்லிக்கட்டு குறித்த எண்ணங்கள்: Protests Around Us – A Few Thoughts

2. ஸ்வப்னா சுந்தர் அவர்கள் எழுதிய, முக்கியமான ஆங்கிலக் கட்டுரை; ஜெல்லிகட்டிலிருந்து ஜல்லிக்கட்டு வரை (அந்த எழவெடுத்த தஹிந்துத்துவா பதிப்பித்திருக்கிறது இக்கட்டுரையை… இதையும் சலபதி எழுதியிருக்கலாமே! ஜனரஞ்சகமாக இருந்திருக்குமே எனும் எண்ணத்தைத் தவிர்க்கமுடியவில்லை, மன்னிக்கவும்!)

3. இது இன்னொரு நண்பர் ஒருவர் அனுப்பிய ஜல்லிக்கிண்டல் தொகுப்பு மின்னஞ்சலிலிருந்து:

A man was getting the bull ready to take part in Jallikattu and the bull said, ‘Aiyo! You people dislike me so much that you have worked day and night just to have the right to bully me?’ The man replied, ‘No! We have no beef with you, it was our Tamil pride at steak!’

5 Responses to “#தமிழண்டா!”


  1. Hi sir, can you please share your point of view about the reservation system in India??


  2. Hi sir, Can you please share your point of view about reservation system in India?


    • Dear Santhosh, can I suggest something please? Why don’t you write your views on it? If you really want to know something – then the best place to start is to pendown your thoughts on it – and then develop it, looking at all its ramifications.

      There are many learned people who have written volumes on it – personally I relate a lot to Madhu Kishwar’s views as, IMO it is very and transparently reflective of the real reality.

      Best:

      __r.

  3. ஆனந்தம் Says:

    இந்தப் போராட்டம் இவ்வளவு பேரை இவ்வளவு மயிர்க்கூச்செறிய வைத்ததற்குக் காரணம் முதலில் உங்கள் செல்ல ஐடி குளுவான்கள் மெரினாவில் அமர்ந்ததுதான் என்கிற பகீர் உண்மை உங்களுக்குத் தெரியுமா? கருப்பாக அசிங்கமாக கோவணங்கட்டிய விவசாயிகள் உட்கார்ந்திருந்தால் அவர்கள் பின்னே போக தமிழ் இளைஞனுக்குப் பைத்தியமா என்ன? எதுவுமே ட்ரெண்டிங்காக இருக்கிறதா என்று பார்த்துவிட்டுத்தானே கருத்து உதிர்க்க வேண்டும்? பாரம்பரியத்தைக் காப்பது கூட ஃபேஷனுக்கு உகந்ததாக இருந்தால்தானே அதில் இறங்க முடியும்?

  4. Rajaram Says:

    Hi,
    Please see this video. Speech from a person who is caring for native bulls for a long time.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s