அஹ்மெத் ஷா மஸூத், பஞ்ச்ஷேரின் சிங்கம், ஆஃப்கனிஸ்தானின் ஒப்பற்ற தலைவன்: சில குறிப்புகள், படங்கள்
September 9, 2016
“எவ்வளவோ வரலாற்று நாயகர்கள் இருந்திருக்கிறார்கள்… ஆனால் அவர்களில் பலரும் – பாடப்படாமல், பேசப்படாமல், போற்றப்படாமல் ஏகோபித்த இருளில் மறைந்துவிட்டார்கள்; ஏனெனில் அவர்களைப் பற்றிய நினைவுகளை எழுதக்கூடிய வீரியம் மிக்கவர்கள் இல்லை…”
க்வின்டுஸ் ஹொராடியஸ் ஃளாக்கூஸ் (65 – 8; ஏசு பிறந்ததற்கு முன்னால்) (எனது மேற்கண்ட நிர்மூலத்தின் லத்தீன்வழி ஆங்கில மூலம்= Many heroes lived . . . but all are unknown and unwept, extinguished in everlasting night, because they have no spirited chronicler)
மகாமகோ அஹ்மெத் ஷா மஸூத், சந்தேகத்திற்கிடமின்றி நமது சமகால வரலாற்று நாயகன் தான்! பலப்பல போற்றுதற்குரிய கல்யாண குணங்களை உடையவன்; வாழ்க்கையைத் தீவிரமாக அணுகியவன், புத்திமான். பலவான். மிக முக்கியமாக, அவன் மிக அற்புதமான மனிதன்.
சர்வ நிச்சயமாக, நான் மகாமகோ வீரியமுள்ள எழுத்தாளன் என்றெல்லாம் இல்லை. ஏன், சொல்லப்போனால், நான் எழுத்தாளனேகூட அல்லன். ஆனால், அஹ்மெத் ஷா மஸூத் போன்றவர்கள் மறக்கப் படவே கூடாது. அவர்கள், அபூர்வமாகவே பூக்கும் விடிவெள்ளிகள்.
ஆகவேதான் இதனைப் பதிக்கிறேன்..
நம் தமிழகத்திலோ இந்தியாவிலோ மட்டுமல்ல – உலகளாவிய ரீதியில், கண்டகண்ட அற்பக் கழுதைகளையெல்லாம் அயோக்கிய ஜந்துக்களெல்லாம் – இஸ்லாமின், முஸ்லீம்களின் மகத்தான தலைவர்களாக பீற்றிக்கொண்டு அலைகின்றன. அவைகளின் பின்னாலேயே வாலைப் பிடித்துக்கொண்டு குளுவான்களின் அணி திரளல்கள் வேறு.
அதனால்தான் – இவர்களுக்கு நடுவில் விடிவெள்ளிகளைப் பற்றியும் பேசியே ஆகவேண்டும் என்பதாலும்… ஆகவே – நடைமுறை இஸ்லாமில் – இப்படிப்பட்டவர்களின் பிரதிநிதித்துவமும் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டவும்தான்…
-0-0-0-0-0-0-0-
சரி. இணையம் பக்கம் வரவேமுடியாதபடிக்கு வேலைகள் (கடந்த நான்கு வாரங்களில் மொத்தமே அரை மணி நேரம் தான் இணையத்தில் செலவழித்திருப்பேன் என அனுமானிக்கிறேன்), உடனடியாகப் பதிலளிக்கவேண்டிய பலப்பல மின்னஞ்சல்கள் (என்னை மன்னிப்பீர்களா?) இருந்தாலும் – இம்மனிதனைப் பற்றிய குறுங்குறிப்புகளையாவது எப்படியாவது இன்று பதித்தேயாகவேண்டும் என ஒரு அவா.
சரி. உண்மையைச் சொல்லப்போனால் – 1979ல் ஸோவியத் ரஷ்யா, ஆஃப்கனிஸ்தானை ஆக்கிரமிப்பு செய்தபோது, அது எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. ஏனெனில், நான் என் சிறுவயதில், விடலைப் பருவத்தில், கம்யூனிஸக் கனவுகளால் படுமோசமாக பாதிக்கப் பட்டிருந்தேன். உலக அனுபவமே துளிக்கூட இல்லாத, கட்டாந்தரையில் காலைப் பதிக்காமல் மூளைப்புலத்தில் மட்டுமே சஞ்சரித்த கனாக் காலங்கள். ஸோவியத்யூனியன் உட்காரவைத்த நஜீபுல்லா ஒரு கொடுங்கோலராக இருந்தாலும், ஆஃப்கனிஸ்தானிற்கு அப்போதைய தேவை அவர்தான் என நினைத்திருந்தேன். உதாரணமாக, நஜீப் காலத்தில்தான் பெண்களுக்கு சுதந்திரமாக நடமாடும் உரிமையே வந்தது. (இத்தனைக்கும் அஹ்மெத் அவர்கள், அச்சமயம், ஸோவியத் படைகளுக்கு எதிராக கோரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார்!)
மேலும் எனக்கு சில ‘முற்போக்கு’ முஸ்லீம் இளைஞர்கள் ஆப்த நண்பர்களாக இருந்தார்கள். படிப்பாளிகள். திறமைசாலிகள். ‘ஏகாதிபத்திய’ எதிராளிகள். மறுமலர்ச்சி விரும்பிகள். (ஆகவே பின்னாட்களில் இவர்கள் இருவரும் நிபந்தனையற்று அமெரிக்காவைச் சரணடைந்துவிட்டார்கள்! இது எனக்கு அப்போது ஆச்சரியத்தையும் கோபத்தையும் தந்தது என்றாலும் – பிற்காலத்தில் பெரும்பான்மை இந்திய முஸ்லீம் சமூகத்தின் ஊடுபாவுகளைப் பற்றித் துளி அறிந்துகொண்டுவிட்ட பிரமையில் அவர்களையும் புரிந்துகொள்கிறேன்!)
இவர்கள் மூலமாகவும்தான் – நான் 1980களின் ஆரம்பத்தில் அறிந்துகொண்ட மனிதன் அஹ்மெத் ஷா மஸூத். நான் கொடுத்துவைத்தவன்.
பின்னர் அகஸ்மாத்தாகச் சென்னையில் தென்னாப்பிரிக்காவைச் சார்ந்த யூத இளைஞன் ஒருவனுடன் இந்த மனிதரைப் பற்றி விஸ்தாரமாகப் பேசியிருக்கிறேன் – 2004ல் நடந்த விஷயம் இது என நினைவு. (இவன் அஹ்மெத் அவர்களை ஒருதடவை நேர்காணல் செய்திருக்கிறான் – அவன் இதுவரை பதிப்பிக்காமல் இருக்கும் ஒரு ஆங்கிலப் புத்தகத்திற்காக; அவருடைய குழுவுடன் பலமாதங்கள் தங்கியிருந்திருக்கிறான்; வெகுவாகச் சிலாகித்தான் இந்த மனிதரை, அவருடைய படுகொலையைப் பற்றிப் பேசியபோது புளுக்கென்று கண்ணீர்கூட வந்துவிட்டது பாவம், அவனுக்கு)
இவரது வாழ்க்கை பற்றிய விவரணைகளை – வெகு சுருக்கமாகக் கொடுக்கிறேன்.
பஞ்ச்ஷேர் (‘ஐந்து சிங்கம்’) பள்ளத்தாக்கு பகுதியின் ஒரு தஜிக் இனக்குறுங்குழு சார்ந்த ஸுன்னி முஸ்லீம் குடும்பத்தில் 1953ல் பிறந்தவர் இந்த அஹ்மெத்; அவருடைய தகப்பனார் ஆஃப்கனிஸ்தான் ராணுவத்தில் பணிபுரிந்த உயரதிகாரி. அஹ்மெத் படிப்பில் சூட்டிகையாக இருந்து காபூலில் பொறியியல் படிப்பை முடித்தவர். மாணவர் இயக்கங்களில் பணிபுரிந்தவர். (நம் தில்லிமாநகரின் ஜேஎன்யு, சென்னை மாநகரின் ப்ரெஸிடென்ஸி மாணவப் பொறுக்கித்தனங்களுடன், பஸ்ரூட் பராக்கிரமங்களுடன் இவரைக் குழப்பிக்கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்)
பின்னர் ஆஃகனிஸ்தானின் ஸோவியத் எதிர்ப்பு என தேசியவுணர்ச்சியுடன், எதிர்காலம் குறித்த கனவுகளுடன் தொடர்ந்து மேலெழும்பினார். பஞ்ச்ஷேர் பகுதியில் தன்னுடைய ‘முஜாஹெத்தின்’ ராணுவத்தைப் படிப்படியாக கட்டமைத்தார். பயிற்சியும் செயலூக்கமும் பெற்ற வீரர்களால் நிரம்பிய அவருடைய ராணுவம் – மிகச் சிறிதாக இருந்தாலும் பராக்கிரமம் மிக்கதாக இருந்தது. கெர்ரிலாப் போர்த்தந்திரங்களில் நைச்சியத்துடன் ஈடுபட்டு (இவற்றில் பல சேகுவரா, மாவோ ட்ஸேடுங் உபயோகித்த வழிகள்) தன்னை மேன்மேலும் ஆழமும் வீச்சும் பெற்றதாக ஆக்கிக்கொண்டு வளர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வடக்கு ஆஃப்கனிஸ்தானின் பெரும்பகுதிகளை கையகப் படுத்தியது. அது மட்டுமல்ல – வெறுமனே பொருதிக்கொண்டிருக்காமல் ஏகோபித்த பொருளாதார வளர்ச்சிக்கும் வித்திட்டது. மக்களுக்கு ஒரளவு அமைதியும் வாய்த்தது. (1983 வாக்கில் இவற்றைப் பற்றியெல்லாம் பிபிஸியிலும், ஜெர்மனியின் டாயிட்ச்வேர்ல்ட் ரேடியோ அலைவரிசையிலும் இவற்றின் விவரணைகளைப் பற்றி நிறையவே கேட்டிருக்கிறேன், ஒரே ஆச்சரியம்தான்!)

ஆனால் பாகிஸ்தானுக்கும் (அதனிடம் ஆதாயம் பெற்றுக்கொண்டிருந்த, பெற்றுக்கொண்டிருக்கும்) தலெபன் இயக்கத்துக்கும் தெரியும் – அஹ்மெத் மேலெழும்பினால் பின்னர் அவர்களுக்கு அமெரிக்க உதவி கிடைக்காதென்று. ஆகவே முடிந்தவரை தந்திரமாகவே ஆஃப்கனிஸ்தான் ஒருங்கிணைப்பை எதிர்த்தார்கள். அஹ்மெத் அவர்களின் சகாக்களைச் சூழ்ச்சி செய்து கொன்றார்கள். ஐக்கிய நாடுகள் சபை வரைபோய் அஹ்மெத் அவர்களுக்கு எதிராகப் பிலாக்கணம் வைத்தார்கள்! கம்யூனிஸ்ட் நஜீப் ஆட்சி வீழ்ந்தவுடன் தங்கள் கைப்பாவையான குல்புத்தீன் ஹெக்மத்யாரை ஆடவிட்டார்கள். (அதே சமயம் அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒன்றையொன்று அஹ்மெத் அவர்களுக்கு உதவிசெய்வதாகக் குற்றம் சாட்டிக்கொண்டன; ஆனாலும் அஹ்மெத் ஒரு வசீகரத் தலைவர், வளர்ந்துகொண்டேயிருந்தார்!)
1990களின் இறுதியில், ஆஃப்கனிஸ்தானில் – இந்த அயோக்கியர்களுக்கு எதிராக ஒரே ராணுவ அமைப்புதான் இருந்தது – அதுதான் அஹ்மெத் அவர்களுடையது… மேலும், பெரும்பான்மை ஆஃப்கன் நிலம் அவர் வசம்தான் இருந்தது. தலெபனின் கயமைக்கு ஒரே எதிரிதான் – அது அஹ்மெத்.
அதேசமயம் – அவர், தம் பகுதியிலும் பிறபகுதிகளிலும் உள்ள தலைவர்களை ஒருங்கிணைத்து (Northern Alliance) பலப்பல ஜனநாயக பரீட்சார்த்த நடவடிக்கைகளில், காத்திரமான செயல்பாடுகளில் ஈடுபட்டார். வெறும் குரானை கையில் வைத்துக்கொண்டு பழமை வாதம் பேசியவர் அல்லர் அவர். உண்மையாகவே முன்னேற்றத்துக்கும் பன்முகத்தன்மைக்கும் பாடுபட்டவர்… ஒரு சிறு எடுத்துக்காட்டாக, பெண்ணுரிமைக்காக வடித்தெடுக்கப்பட்ட வரைவுகளை சட்டங்களாக்கினார். இப்படிப் பல அழகான விஷயங்கள்… 2001 வாக்கில் – இந்தியாவும் அஹ்மெத் அவர்களின் வடக்குக் கூட்டணிக்கு உதவியது – மருத்துவ மனைகளைக் கட்டிக்கொடுத்தது. சில யுத்த தளவாடங்களையும் அளித்தது. யானைப் பசிக்குச் சோளப்பொறி வகைதான்.
ஆனால்… இந்த சமயத்தில்தான் ஓஸாமா பின் லேடனின் ஜிஹாதிப் பொறுக்கிகள் 9/11 நிகழ்வுகளை அரங்கேற்ற முனைத்துகொண்டிருந்தனர். நடந்து முடிந்தவுடன் அவர்களைப் பெருச்சாளிகளைப் போல அழித்தொழிக்க அமெரிக்கா முனையும் ஆகவே அவர்கள் ஒளிந்துகொள்ள பாதுகாப்பான இடம் தேவை எனவுணர்ந்தனர். ஆக – அவர்களுக்கு முன்னமே அறிமுகமான தலெபன் இயக்கத்துடன் தொடர்புகொண்டு அவர்களை சரிக்கட்டினர். அல்கைய்தா இயக்கத்துக்கும் அஹ்மெத் அவர்களை எப்படியாவது ஒழிக்கவேண்டும் – ஒரே கொலைக்கு இரண்டு குறிக்கோட்கள்.
அல் கைய்தா அமைப்பினரால் – ஐரோப்பாவில் இருக்கும் ஆம்ஸ்டர்டேம் ப்ரஸ்ஸல்ஸ் நகரின் புறப்பகுதிகளின் ஒன்றான மோஹ்லன்பீக் (இதே ஊர் இஸ்லாம் வெறிய ஆசாமிகள் தான் பாரீஸ் நகரில் டிஸெம்பர்2015ல் படுகொலைகளை நிகழ்த்தினார்கள்!) வாசிகள் இருவர் தற்கொலைப்படையினராகப் பயிற்சி கொடுக்கப்பட்டனர். அஹ்மெத் ஷா மஸூத் அவர்களைச் சுற்றி ஏகப்பட்ட பாதுகாப்பு வளையங்கள் இருந்தாலும் – இந்தக் கொலைகாரர்கள் செய்தியாளர்கள் போல வேடம்போட்டுக்கொண்டு தம் கேமராவில் வெடிகுண்டுகளை வைத்துக்கொண்டு தாங்களும், அஹ்மெத் அவர்களுடன் போய்ச் சேர்ந்தனர்.
தலெபனுக்கும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கும் திருப்தி. தங்களுக்கும் தாங்கள் நடத்த விரும்பும் படுகொலைகளுக்கும் நடுவில் நந்தி போலவிருந்த ஒரு இக்கட்டு ஒழிந்தது.
அல் கைய்தா அமைப்புக்கும் அது விரும்பிய பாதுகாப்பு கிடைத்தது. ஏனெனில் இரண்டு நாட்களுக்குப் பின்னர் – 11 ஸெப்டெம்பர், 2001 அன்று அமெரிக்க இரட்டைகோபுரங்கள் வீழ்த்தப்பட்டன. சுபம்.
-0-0-0-0-0-0-
நம் முஸ்லீம் இளைஞர்களின் மானசீகத் தலைவராக, வழிகாட்டியாக இருக்கவேண்டியவர் இவர்…
-0-0-0-0-0-0-
குறிப்புகள்:
- பொதுவாக, விக்கிபீடியாவின் நம்பகத்தன்மை என்பது, என்னைப் பொறுத்தவரை நகைக்கத்தக்கது – இருந்தாலும் மேலதிக விவரங்களுக்கு விக்கிபீடியா பக்கத்தை அணுகலாம் எனப் பரிந்துரைப்பேன். ஏனெனில் அஹ்மெத் அவர்கள் குறித்த பக்கம் ஓரளவுக்குச் சரியாகவே வந்திருக்கிறது:
https://en.wikipedia.org/wiki/Ahmad_Shah_Massoud - அஹ்மெத் ஷா மஸூத் அவர்களின் மீதான ஒரு அழகான பாட்டு, அழகான புகைப்படத் தொகுப்பு – Sediq Shubab Azadi ( Freedom ) https://www.youtube.com/watch?v=W6kxFqUwQN0
- ஆஃப்கனிஸ்தான் விவகாரங்களைப் பற்றி சுமார் 35 புத்தகங்களையாவது படித்திருக்கிறேன் என நினைக்கிறேன் – அவற்றைப் படித்த நினைவிலிருந்தும், என் தனிப்பட்ட அனுபவங்கள் சார்ந்த குறிப்புகளிலிருந்தும்தான் மேற்கண்ட பதிவை எழுதியிருக்கிறேன்.
-
இப்பதிவிலுள்ள படங்கள் – கடந்த 4-5 வருடங்களில் – இணையத்திலிருந்தும் நான் படித்த சிலபல புத்தகங்களிலிருந்தும் எடுக்கப்பட்டவை.
நன்றி.
September 10, 2016 at 01:53
Thank you Ram.
September 10, 2016 at 15:36
Odd man Ahmed. I was thinking that Iraq is Shia Majority & Iran is Sunni Majority. Then why Iran has not helped Ahmed? Saudi Kings are Sunni and why they acted against Ahmed? Confusing. All said, & done, I understand from the blog that Lion Ahmed is a MAN, who loved his motherland, his people & worried about their future. Thanks for introducing a Hero, of our times. Che Guvara or Castro are nobody in his presence.
September 10, 2016 at 17:39
Sir, Paramasivam,
1. Iraq is a sunni majority country. But a good amount of shias are there. Iran is a shia majority country with a small % of sunnis.
2. Saudis are wahhabis (a violent & exclusive islam practicing sunnis) – who are ONLY interested in cloning more wahhabi scoundrels. They are the major supporters of wahhabi violence across the globe along with Quatar. In India, saudis+malaysian money is fueling extremism.
3. Ahmed Masood was a sunni – but an exalted, non sectarian, inclusive one. Much like about 95% of the Kurds – who are also mostly sunni muslims. These folks are very progressive and are MODEL muslims, worth emulating.
4. But, Organized Sunni Islam in practice (even during the times of the prophet’s last years and then on) has been very sectarian, divisive and violent. It therefore does not like Kurds and Masoods. For that matter, the shia establishment also, if they are in a majority, act similarly.
5. But an average hapless muslim, in spite of all the difficult baggage that he is forced to carry and is identified with – is as lovable or hateable creature just like all the rest of us – including you and I.
October 20, 2016 at 14:03
Thanks Sir. I get some clarity.
September 10, 2016 at 19:23
சரியான சமயத்தில் அஹ்மத் ஷா மசூத் பற்றிய நினைவு. அவர் கொலைக்கு உடனேயே ந்யூயார்க் ட்வின் டவர்கள் அழிக்கப்பட்டன, அதனால் அஹ்மதின் கொலை அவ்வளவாக நினைக்கப்படவில்லை.
அஹ்மத் டாஜிக் இனக்குழு, அவர்கள் பஷ்டூன் போல் அவ்வளவான பழையகால இஸ்லாத்தில் மூழ்கியவர்கள் அல்ல. வடக்கு அப்கானிஸ்தான் தலைநகர் மசார்-இ-ஷரிஃஃபில் ஓரளவு மனித சுதந்திரமும் பெண்சுதந்திரௌம் இருந்தது. அவர் சோவியத் படைக்கு எதிரான போர்களை தன் குழு பலத்திலியேயே நடத்தினார்.
அஃப்கானிஸ்தானின் பெரிய சாபம் பாகிஸ்தானுக்கு பக்கத்தில் இருப்பது. பாகிஸ்தான் தனக்கு வேன்டிய பஷ்டூன் ஜிஹாதி குழுக்களைத்தான் ஆதரித்தத்து; அதனால் அஹ்மத் மேல் அவர்களுக்கு மிகப்பெரும் கோபம், அவர் கொலையில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.யின் கைவரிசை நிச்சயம் உள்ளது.
மோலன்பீக் பெல்ஜிய தலைநகர் ப்ரஸ்ஸல்ஸில் ஒரு பகுதி, அது ஆம்ஸ்டர்டேம் பகுதி அல்ல. பாகிஸ்தான் அன்றும் இன்றும் ஆஃப்கானிஸ்தான் ஸ்திரமான ராஜாங்கம் இல்லாமல் வன்முறை மூலம் குழப்பம் அடைவதில் பெரும் வெற்றி கன்டுள்ளது.. பாகிஸ்தான் ராணுவ உபாய சித்தாந்தம் (Strategic doctrine) படி ஆஃப்கானிஸ்தான் பாகிஸ்தான் கட்டுப்பாடு அல்லது கைவசத்தில் இருக்க வேன்டும், அதனால் உபாய ஆழம் (strategic depth) கிடைக்கும், அதை வைத்து இந்தியாவுடன் யுத்தம் புரியலாம்.
வன்பாக்கம் விஜயராகவன்
ப்ரஸ்ஸல்ஸ்
September 11, 2016 at 06:21
நன்றி விஜயராகவன், தூக்கக் கலக்கத்தில் நான் செய்த ப்ரஸ்ஸல்ஸ்ஆம்ஸ்டர்டேம் தவற்றினைத் திருத்திவிட்டேன். நான் சரிபார்த்திருக்கவேண்டும்.
September 18, 2016 at 23:23
http://www.islamicweb.com/beliefs/cults/shia_population.htm http://www.pewresearch.org/fact-tank/2014/06/18/the-sunni-shia-divide-where-they-live-what-they-believe-and-how-they-view-each-other/ http://www.bbc.com/news/magazine-27945271
September 18, 2016 at 23:27
https://ianbachusa.wordpress.com/2015/06/07/interview-with-ahmed-shah-massoud/ https://www.yahoo.com/news/lion-panjshirs-son-ready-afghan-destiny-084626766.html
September 9, 2021 at 20:27
[…] […]
September 10, 2021 at 11:12
நன்றி.
இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய, ஒரு proper contextualization இருந்ததில்லை.
காந்தஹார் விமானக்கடத்தல் சமயத்தில் தான் முதன் முதலில் அஃப்கனிஸ்தான் பற்றி கேள்விப்பட்டேன். அதன் பிறகு பாமியான் புத்தர் சிதைப்பு, 9/11, ‘குண்டுவீசி கற்காலத்துக்கு விரட்டியடிப்பேன்’ என்ற புஷ் சூளுரை…வழியாகவே அறிந்தது.
அதன்பிறகு நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக போர்ச்செய்தி/
யாரும் யாரும் அடித்துக்கொள்கிறார்கள், எம்முறை கேளிர், என்ன சமாசாரம், நல்லவரா கெட்டவரா?!
ஸோவியத் காலகட்டத்துப் போரில் யார் எவர் தரப்பு, குழுப்பிளவுகள் என்ன, அவற்றின் இனக்குழு அடிப்படைகள் (சுமாராக உண்மையான இனக்குழு, ‘தமிழன் என்றோர் இனமுண்டு’ போன்ற பேத்தல்கள் அல்ல) என்று செய்தி படித்து, நினைவில் இருத்திக்கொள்ள முயன்று, இளமை வேகம் நீங்கியபின் கைவிட்டு திசைநோக்கித் தொழுது…
இந்தப் பிரதேசத்தில் who stands for what and when and who has switched sides என்றெல்லாம் படம் வரைந்து பாகங்கள் குறித்து புரிந்துகொள்வதற்குள் நரைகூடி கிழப்பருவம் எய்தியாகிவிடுகிறது.
இன்றும் இந்த வடக்கூட்டணியினரைப் பற்றி இன்று கேள்விப்படும் சமாசாரங்கள் ‘தாலிபான் வெறியர்களுக்கு இவர்கள் தேவலை, என்பதைத் தாண்டி எதுவும் நம்புவதற்கில்லை’ என்கிற ரீதியில் இருப்பது போலதான் தெரிகிறது.
ஒருவேளை முன்பொருகாலத்தில் (இன்னார் இருந்தபோது) நம்பிக்கையளிக்கும் எதிர்த்தரப்புகள் இருந்திருக்கின்றன என்று இவ்விடுகை வழியே புரிந்துகொள்கிறேன்.
September 10, 2021 at 11:26
🙏🏿 You should also factor in tonnes of disinfo unleashed by the very professional/successful ISPR – In fact, ‘northern alliance’ was their coinage, done with a view to regionalizing the relevant leaders/groups to create an impression that they do not represent the whole of Afghanistan.
Besides: https://othisaivu.files.wordpress.com/2021/09/confidencevsknowledge.jpg