கல்வி, பயிற்சி, கணிநிகள், சாத்தியக்கூறுகள், புகைப்படங்கள்: சில தெலங்காணா குறிப்புகள், சிந்தனைகள்
August 13, 2016
இக்காலங்களில் நான் சார்ந்து இயங்கும் நிறுவனம் மூலமாக சிலபல – சுவாரசியமான ஆனால் நடைமுறையில் அயர்வுதரும் – கல்வி தொடர்பான ‘ஆராய்ச்சிகள்’ நடந்துகொண்டிருக்கின்றன.
ஏனெனில் அரசுப் பள்ளிகளில் மட்டுமேதான் இந்த முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன – அதுவும் நகரங்களைத் தவிர்த்துவிட்டுத் தொலைதூர கிராமங்களில், அனுகூல சத்துருக்களான மாநில அரசு கல்வித்துறையினரின் ஈடுபாட்டுடன்… இந்த கல்வித்துறை மனிதர்கள் என்னதான் செய்கிறார்கள் என்பதே எனக்குச் சிலசமயம் புரிபடுவதேயில்லை. தாமஸகுணம்தான் பெரும்பாலும் நடைமுறையில் இருக்கிறது, என்ன செய்ய…
எதையுமே அதீத ஆர்வத்துடன் ஆரம்பித்துவிடுவது என்பது மிக எளிது. (ஆனால் – நடைமுறையில், நெடுங்கால நோக்கில் தொடர்ந்து அந்த விஷயத்தை நடத்திச் செல்வது என்பதற்கு அசாத்தியமான பொறுமையும், தொடர்ந்த உழைப்பும், கூர்மையான குவியமும் தேவை. அவநம்பிக்கை ஒத்தேவராது!)
அதே சமயம் ஒன்றிரண்டு பின்னடைவுகளைக்குப் பின் ‘நான் எவ்வளவு பொது நலத்துக்காக உழைக்கிறேன், எவருமே எனக்கு உதவ வரமாட்டேனென்கிறார்களே’ எனப் பிலாக்கணம் வைத்து வாலைச் சுருட்டிக்கொண்டுச் சுணங்கி ஓடிப்போய்விடுவது என்பது இன்னமும் எளிது!
ஆக, உண்மையைச் சொல்லவேண்டும்: சிலசமயங்களில், தளர்வடையவைக்கும் தருணங்களில் – நண்பர்கள் சிலர் நல்லெண்ண முட்டாக்கூ ‘அறிவுரைகள்’ கூறுவதுபோல எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிப்போய் ஏதாவது பொட்டிதட்டும் கடையில் சேர்ந்தொழிந்தோ அல்லது நிபந்தனையற்று அந்தக் கேடுகெட்ட அமெரிக்காவையோ கனடாவையோ அல்லது அந்த எழவெடுத்த ஆஸ்திரேலியாவையோ சரணடைந்து அங்கேதாவது பெட்ரோல் பங்க் (அல்லது ஸாஃப்ட்வேர் அண்டர்வேர்) எழவில் பணிக் காலட்சேபம் செய்து மினுக்கிக்கொண்டலைவதுதான் உய்வதற்கான வழிகளோ எனத் தோன்றினாலும் – பின்வாங்குவது என்பது எனக்குப் பொதுவாகவே ஒத்துவராது. எனக்கு நானே போட்டுக்கொள்ளும் தளை அது; மேலும், இந்த மாதிரி ஒப்பாரிப் பதிவுகளை எழுதுவதும் இந்த வைராக்கியத் தளையை இறுக்கம் அடையச் செய்கிறது, எல்லாம் நல்லதற்கே!
எப்படியும், விவேகம் இல்லாவிட்டாலும் வயதென்பது ஏறிக்கொண்டேயிருப்பதை ஆனமட்டும் முழுமூச்சோடு எதிர்ப்பவன் நான். மேலும், என்னுடைய நாற்பது வயதிலிருந்து நான் காலரீதியாக, பின்னோக்கி மட்டும்தானே வளர்ந்துகொண்டிருக்கிறேன்! ஆக, கூடிய விரைவில் தவழ்ந்துகொண்டே என் தாயின் கருப்பையை அடைந்துவிடுவேனோ? ;-) தாயின் தொப்புள்கொடி பாரீர்!
…அதேசமயம் – உழைக்கும் உழைப்பிற்கு(!) ஒன்றிரண்டு சிறிய ஆனால் சாதகமான + மனதுக்குப் பிடித்தமான (அல்லது அப்படிக் கற்பனை செய்துகொண்டு பிரமையில் ஆழக்கூடிய) நிகழ்வுகள் நடந்தால்போதும் – ஒரேயடியாகக் குதூகலப்பட்டு, துள்ளிக்குதித்து – எதிர்காலத்தைப் பற்றிய எல்லா சந்தேகங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டுக் குருட்டாம்போக்கில் முன்னேறுவதும்(!)தான் பெரும்பாலும் நடக்கிறது. :-)
எப்படியும், நானும் ஒன்றும் மிகஅதிகமாகக் கேட்கவில்லை, அளவுக்கு மீறி எதிர்பார்க்கவில்லை; ஒரு பத்து எத்தனங்களுக்கு ஒருமுறையாவது ஏதாவது மேம்போக்கான சாதக விளைவுகள் – அன்றைக்கேவோ அல்லது உடனடியாகக்கூட அல்ல, ஒரு சில மாதங்களுக்குப் பின்னாவது இப்படி நடக்குமா என்றுதான் அற்பத்தனமாக அலைகிறேன்…
…சரி. எதிர்காலம் குறித்த பைத்தியக்காரத்தனமான நம்பிக்கைகளினால்தான், சிலபல சக பைத்தியக்காரக்கூவான்களாலும்தான் என் சமூகம் முன்னேறமுடியுமோ? அல்லது இதுவும் என்னுடைய சுயமைதுன பைத்தியக்காரக்கூவான்மையவாதத்தின் ஒரு அங்கமோ?
ஏனெனில் பைத்தியக்காரக்கூவான்களல்லாத பிறராலும், என்னைப்போலல்லாமல், அமைதியாகத் தன் பணியைச் செவ்வனே செய்துகொண்டிருப்பவர்களாலும் அமோகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டுதானே இருக்கின்றன? எனக்கு மட்டும் ஏன் இந்த முட்டாக்கூத்தனமான ஒரு அவசரம். பொறுமை, பொறுமை…
ஆனால், என்னைப் பொறுத்தவரை இரண்டாம் வகையில் இருக்கும் விகசிப்புகள், அசைபோடக்கூடிய அனுபவங்கள் முதலாம்வகையில் இருக்குமா எனத் தெரியவில்லை. ஆகவே, வாழ்க்கையின் முக்கிய அனுபவங்களை இளமையிலேயே வெறுத்தொதுக்கும் போக்கு எனக்குப் பரிதாப உணர்ச்சியையே வரவழைக்கும். இருந்தாலும் – அவரவருக்கு அவரவர் வாழ்க்கை, என்ன செய்ய என்பதெல்லாம் புரிந்தாலும்… ஆனாலும் எனக்கு, இந்த கன்யாஸ்த்ரீக்களைப் பார்த்தால் ஒரு பரிதாபம்தான். இளம்பெண்களுக்கே (அல்லது இளைஞர்களுக்கே) உரிய துள்ளலும் துடுக்கும் இல்லாமல் அவர்கள் சாவிகொடுத்த பொம்மைகள் போல இருந்தால், எனக்குச் கொஞ்சம் சங்கடமாகவே இருக்கிறது…
… நானும் அந்தப் பெண்கள் பின்னால் அந்த மாதாகோவில் பக்கம் சென்றேன். அது, வெளியிலிருந்து பார்ப்பதற்கு மிக அழகாகவும் அமைதியாகவும் இருந்தது.
ஆனால் உள்ளே போகலாம் என நினைத்தாலும், நான் வியர்வை நச நசப்பிலும் லுங்கியிலும் இருந்ததால் அதனைச் செய்யவில்லை. வழிபாட்டிடங்களுக்கு அவைகளுக்குரிய மரியாதையைத் தரவேண்டுமல்லவா? ஆகவே, வெளியிலிருந்து இரண்டு புகைப்படங்களை எடுத்ததோடு சரி. அதுவும், சர்ச் காவலாளியிடம் ஒப்புதல் பெற்றுத்தான்.
ஆனால் ஜியார்ஜ் அவர்களின் 1) குடும்பக் குலக்கல்விக்கு சர்ச் காரணமா, அல்லது ராஜாஜியின் குலக்கல்விச் சதி காரணமா 2) பையன் குலத்தொழிலை விட்டதற்கு திராவிடத் தலைவர்கள் காரணமா, அல்லது மும்பய் அம்பானி காரணமா — என்பவை எனக்குச் சரியாகப் புரியவில்லை. அடுத்த தடவை வரும்போது என் உடைந்த தெலுகு மொழியில் அவரிடம் கேட்கவேண்டும். இந்தப் பகுதிகளிலும், கிவீ ரமணிப் பட்சிகள் இருக்கலாம். விசாரிக்கவேண்டும்.

இந்தப் படங்களில் வந்திருப்பதைவிட மிக அழகாகவே இருந்தது அந்தக் காலைவேளை மாதாகோவில். மாதாகோவில் கண்டாமணியின் சப்தம் – அதன் ஆழத்தையும் ஒத்திசைவையும் விவரிக்க வார்த்தைகள் இல்லை.
12.08.2016: சரி. கடந்த சிலநாட்களாக ஹனம்கொண்டா பக்கத்து டொக்கு ஒன்றின் அரசுஆசிரியர் பயிற்சிக்கல்லூரி வளாகத்தில் – சுமார் 45 ஆசிரியர்களுக்கு பயிற்சி நடந்துகொண்டிருக்கிறது.
இது தொடர்பாகத் தான் எழுதவேண்டும் என ஆரம்பித்து என்னென்னவோ எழுதிக்கொண்டிருக்கிறேன். (இப்படியெல்லாம் மனம்போனபோக்கில் எழுதிவிட்டு, பின்னர் ஜெயமோகன் கிண்டலில் இருந்து தப்பிக்கவேண்டுமே என்பதை நினைத்தால் அடிவயிற்றில் கலக்கமாக இருக்கிறது…)
(ஆக, அடுத்த பதிவுக்குப் படபடப்புடன் காத்திருக்கவும். நன்றி!)
August 13, 2016 at 10:53
“வழக்கமான தவளை நடை”
ஜெயமோகன் உபயம்
August 22, 2016 at 18:29
Ramaswamy garu, write more about the Hanumakonda official work exxperience, i am waiting eagarly.