ஜெயமோகன் -> தமீம் அஹெம்மத், நூருன்னிஸா -> அலறும் நினைவுகள்: சில குறிப்புகள்
June 12, 2016
இதற்கு முகாந்திரம் – ஜெயமோகன் அவர்களுடைய ‘வளரும் வெறி‘ எனும் 6, ஃபெப்ருவரி 2016 அன்று வெளிவந்த கட்டுரை.
சுமார் நான்கு மாதங்களுக்கு முன் இதனை நான் எழுத ஆரம்பித்தேன். அரையும் குறையுமாய் இருக்கும் என்னுடைய பலப்பல வரைவுப்பதிவுகள் போலவே இதுவும் பாவப்பட்ட நிலையில் இருந்தது; இன்று கொஞ்சம் சமயம் வாய்த்திருப்பதால் தூசிதட்டி இதனைப் பதிப்பிக்கிறேன்.
-0-0-0-0-0-
என்னைப் பொறுத்தவரை, தமிழகத்து நிதர்சன நிலவரத்தைப் பற்றித்தான், மாறிக்கொண்டேவரும் தமிழச் சூழலைப் பற்றித்தான் அவர் எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். இருந்தாலும் வலிக்கிறது. பழைய நினைவுகளைக் கிளறி விட்டுவிட்டது அந்தக் கட்டுரை. அதனால்தான் இது.
குறிப்பாக, அவருடைய கட்டுரையின் கீழ்கண்ட பகுதியை எடுத்துக்கொண்டு, ‘ஷிர்க்’ தொடர்பான என் அனுபவங்களில் ஒன்றைப் பற்றியும் விரித்து எழுதுகிறேன்:
/* கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம்? கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்? குடும்பநண்பர்களே காஃபிர்களை அழைக்கலாகாது என்று கட்டுப்பாடு உள்ளது, மன்னித்துவிடுங்கள் என்று நம்மிடம் கோரும் நிலை உருவாகியிருக்கிறது. */
இதனைப் பற்றி எழுத எனக்குக் கொஞ்சம் சங்கடமாகவே இருக்கிறது. இருந்தாலும், இதனை இறக்கிவைக்கவேண்டும் எனவும் தோன்றுகிறது; ஆகவே இந்தப் பழம்நினைவுகளைத் தூசிதட்டி இறக்கி வைக்கிறேன். எப்படியும், இதனைப் படிக்கும் நீங்கள் இதனைக் கடாசினாலும் பிரச்சினையில்லை.
இவை நடந்து சுமார் 25 வருடங்களுக்கு மேலாகிவிட்டன. என்னுடைய இருபதுகளின் ஆரம்பத்தில், எனக்கு ஒரு சமவயது ஐய்யங்கார் நண்பன் – சுதர்சனம் – இருந்தான். கீழ்கட்டளை / நன்மங்கலம் (அப்போதைய சென்னைப் புறநகர்ப் பிரதேசம்) பகுதிக்காரன் என்று நினைவு… அந்தப் பையனின் பக்கத்துவீட்டுப் பையன் தமீம் அஹெம்மத். இலக்கிய ஆர்வம்(!) என்னையும் சுதர்சனத்தையும் ஒன்று சேர்த்தது என்றால், அவனுடைய நண்பன் தமீம், ஒரு பிற்சேர்க்கை. அவனுடைய இயந்திரவியல் ஆர்வத்தால் நண்பனான்; இவர்கள் இருவரும் – நல்ல, கடவுளுக்குப் பயந்த, அம்மா-அப்பா சொற்படி நடக்கும் பிள்ளைகள். என்னுடன் அவர்கள் சேர்ந்தது, எதிர்த்துருவங்கள் ஒன்றையொன்று வசீகரிக்கும் என்பதனால் இருக்கலாம், பாவம்.
வாரத்துக்கு ஒரு முறையாவது, நிச்சயமாக வெள்ளிக்கிழமை மாலைசமயம், வீட்டுக்கு வருவார்கள். அரட்டை. என் அம்மா தவறாமல் கொடுக்கும் காஃபி. சிலசமயம் +சிற்றுண்டி. புத்தகக் கடன் திருப்பல்கள்/வாங்கல்கள் – பல புத்தகங்கள் திருப்பப்பட மாட்டா. ஆனால், எப்படியாவது யாராவது இவற்றைப் படித்தால் போதும் என்று விட்டுவிடுவேன். சிலசமயம் மதங்களைப் பற்றியும் பேச்சு எழும். சே குவேரா பற்றியும்.
…பேசுவதற்கு என்ன, சொல்லுங்கள்? அப்போதெல்லாம் நான் படுதீவிர நாஸ்திகன். ஆஸ்திகர்களைக் குடைந்து நெளிய வைப்பதில், அப்படியொரு அற்பப் பெருமை. புல்லரிப்பு. பெர்ட்ரன்ட் ரஸ்ஸல் என் தாத்தா. அப்ரஹாம் கோவூர் என் சித்தப்பா. ஆனாலும் இப்பையன்கள் என்னுடன் நட்புடன் இருந்தார்கள்; இப்போது தோன்றுகிறது – அதற்குக் காரணம், நான் அப்போது நினைத்துக்கொண்டிருந்ததுபோல் என் அபூர்வமான ஞானக்களஞ்சிய அறிவாளித்தனம் அல்ல, எங்கள் வீட்டு காஃபிதான்! எது எப்படியோ…
நூருன்னிஸாவுக்குப் படிப்பில் ஆசை, சூட்டிகையான பெண், ஆனால் +2வுக்கு மேல் அவளைப் படிக்கவிடவில்லை. ஏனெனில் மாப்பிள்ளை கிடைப்பது கஷ்டமாம்; ஆனால் தமீமைப் படிக்கவைக்க ஆனமட்டும் முயற்சி செய்தார்கள் – ஆனால், பிஎஸ்ஸியில் இவன் பலமுறை கோட்டுவாத்தியம். அவனும் புத்திசாலிதான், ஆனால் பரீட்சைக்கான படிப்பைப் பொறுத்தவரை சிரத்தையில்லாதவன்.
…இரண்டுமூன்று வருடங்கள் இப்படிச் சென்றவுடன் 19 வயதில் நூருன்னிஸாவுக்கு நிக்காஹ். தமீம் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தான். நூருன்னிஸா சோகம். எனக்கும் பாவமாக இருந்தது. ஏனெனில், எதிர்காலக் கணவன் படிப்பறிவேயற்றவன். ஆனால், பணவசதி படைத்த குடும்பத்திலிருந்து வந்தவன். அவன் குடும்பத்தினர் பாரிஸ்கார்னர் பகுதியில் ஏதோ ஜவுளிக்கடை வைத்திருந்தார்கள் என நினைவு. ஆகவே, நூருன்னிஸா சோகக் கவிதைகளை எழுதியவண்ணம் இருந்தாள். என் பார்வைக்குச் சிலவற்றைக் காண்பித்தாள். உண்மையைச் சொல்லப்போனால், எனக்கு இரட்டிப்புச் சோகம்.
சரி. இது தொடர்பாக என்னால் எப்படியும் ஒரு மண்ணையும் செய்திருக்க முடியாது. ஆனாலும் ஒருதடவை தமீம் வீட்டுக்குச் சென்று அவன் வாப்பாவிடம் இது தொடர்பாகப் பேசினேன். ஓரிரு வருடங்கள் பொறுத்துக்கொள்ள முடியாதா என்று மன்றாடினேன். அவருக்குப் பொறுமையுமில்லை, நான் சொல்லவந்ததைக் கேட்டுக்கொள்ளவேண்டிய அவசியமுமில்லை – ஆக ஒரு குழப்ப மன நிலையில் வீடு திரும்பினேன். கையலாகாத் தனம். ஆனால், அவர் என்னைக் காஃபிர் என்றெல்லாம் சொல்லவில்லை.
அடுத்தமுறை வீட்டுக்கு வந்த நூருன்னிஸா, பலஹீனமான குரலில் – தான் வருவது இதுதான் கடைசி தடவை என்றாள். கண் சிவந்து கன்னமெல்லாம் உப்பியிருந்தது. கண்ணீரை நிறுத்த பிரும்மப்பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள், பாவம். வரதட்சிணை 3 லகரம் ஏற்கனவே கொடுத்தாகிவிட்டது என்றான் தமீம். என்னால் முடிந்தது – தமீமுடன் மேலதிக கோரச் சண்டை; அதைச் சரியாகப் போட்டேன், அவ்வளவுதான்.
ஆனால் இதுவல்ல கதை.
சுமார் ஒரு மாதத்துக்குப் பின் தமீம், தன் தங்கையின் திருமண அழைப்பிதழுடன் வந்தான். முகம் வாட்டமாக இருந்தது. சுரத்தில்லாமல் என்னிடம் அதனை நீட்டினான்.
நான் அவனிடம் கிண்டலாகச் சொன்னேன் – டேய், நான் இம்மாதிரி வைதீகமான திருமணங்களுக்கு வரமுடியாது, வேண்டுமானால் அல்லா-மறுப்புச் சுயமரியாதைத் திருமணம் செய்தால், வருவேனோ என்னவோ!
‘இல்லை – நீ அவசியம் வரவேண்டும்’ என்றான். நான் முடியாதென்று சொல்லி, ‘வேண்டுமானால் என் அம்மாவை அழைத்துக்கொள், எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை’ என்றேன்.
அவன் தயங்கித் தயங்கிச் சொன்னான் – ‘உனக்கு முழ நீள தாடி இருக்கிறது யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள், ஆனால் உன் அம்மாவைப் பார்த்ததும் தெரிந்து விடுமே, பிராம்மண அம்மணியென்று! என்னை மன்னித்துவிடு!’
எனக்குக் கோபம் வந்தது – என்னடா கதையிது, அப்போ கல்யாணத்துக்கு ஒரு ஹிந்துவையும்கூட அழைக்கவில்லையா எனக் கேட்டேன். அப்போ, சுதி? (சுதி = சுதர்சனத்தின் செல்லப் பெயர்; திவ்வியமாக நாமம் போட்டுக்கொண்டு அலைபவன். ஸௌத் ஆர்ட்.)
சுதியையும் அழைக்கவில்லை என்றான்! எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. மாடிக்குப் போய் பேசலாண்டா, தனியா பேசணும் என்றான்.
பக்கத்துவீட்டுக்காரங்கடா, பதினைஞ்சு வருஷமா அடுத்தடுத்த வீடு; அவங்க வீட்டு நவராத்திரி கொலுவுக்கு எல்லாம் போய் சுண்டல் சாப்பிட்டுருக்கியேடா, அப்ப எங்கடா போச்சு உன் சுத்த மதம்? – என்றேன்.
அவன் அடைத்துக்கொண்ட குரலில் – ஜமாத்துல ஒத்துக்க மாட்டாங்கடா. ஏற்கனவே எங்களுக்கு ஜமாத்துல அவ்ளோ மதிப்பில்ல! இந்த நிக்காஹ் ரொம்ப முக்கியம். புரிஞ்சுக்கோடா. இதைச் சரியா நடத்தினா, எங்களுக்கும் மதிப்பு கிடைக்குண்டா…
சரி, புரிஞ்சுக்கிறேன். ஆனா, ஒங்க அப்பாவுக்கு பொருள் கொடுத்துத்தானடா மார்க்கத்துக்கு இழுத்தாங்க, முழுதும் மனம் ஒப்பியா போனாரு? நீயேதாண்டா கதைகதெயா சொல்லியிருக்க. இப்ப திடீர்னு ஜமாத் கிமாத்னு பம்மாத் பண்றியே! அவங்களுக்கு பயந்தமாரி நடிக்கிறியே.
சரி ஒப்புத்துக்கறேன். நான் ஒரு பாப்பான், என்னைக் கூப்பிடவேண்டாம். எப்படியும், கூப்பிட்டாலும்கூட நான் வந்திருக்கமாட்டேன். உன்னோட பெரியப்பா, அத்தையெல்லாம் — அவங்களையெல்லாமாவது அழைக்கிறீங்களாடா?
ஹரிஜன்கள சரியா மதிக்கற மதம்னு திரும்பத் திரும்பச் சொன்னியேடா, இப்ப திடீர்னு அவ்ளோ மதிப்பில்லன்றியே! என்னடா இது! உங்க சொந்தக் காரங்களையே விடு, எப்டீடா ஒரு சமூகமா மிச்ச மத மக்களோட இருக்கப் போறீங்க?
அவன் ஒன்றும் சொல்லவில்லை.
நீ அம்பேட்கர மதிக்கறதானே – நானும் அவரை மதிக்கறேண்டா – அந்த அம்பேட்கரே படிச்சுப் படிச்சுச் சொன்னாரேடா, இஸ்லாம் ஹரிஜன்களுக்குச் சரியான மார்க்கமில்லைன்னிட்டு! அங்கே சரி நிகர் சமானமா மதிப்பு கிடைக்காதுன்னிட்டு, அதோட அடிப்படை நடைமுறைகள் ஒத்துவராதுன்னிட்டு… அதனாலதானடா அவரு பௌத்தத்துக்கு மாறினாரு…
இப்படி ஒரு வெத்து மதிப்புக்காக, எப்டியெல்லாம் தேவையேயில்லாம பெறத்தியாருக்காக ஆட்றீங்கடா… எங்களையே விடு, நாங்கெல்லாம் மூணாம் மனுஷங்க – அதுவும் ரெண்டுமூணு வருஷமாத்தான் உங்களத் தெரியும். ஆனா உங்க சொந்தக் காரங்க? நீங்க செய்யறது நியாயமேயில்லடா!
ஆனா அவங்க மாரியம்மன வணங்கறாங்கடா, ஒரே மூட நம்பிக்கை, என் அப்பாரு அவ்ளோ சொல்லியும் அத வுடமாட்டேன்றாங்க. அது ஷிர்க்குடா. ஷிர்க்குல மாட்டிட்டு இருப்பவங்கள கூப்பிட்டா அத எப்டிடா ஜமாத் ஒத்துக்கும்? ஏற்கனவே எங்களுக்குப் பிரச்சின!
இதற்கும் அவன் ஒன்றும் சொல்லவில்லை.
எல்லாரும் சேர்ந்து கூட்டுசதி பண்ணி ஏண்டா, உன் தங்கய கல்யாணம் பண்ணி கழிச்சுக் கட்றீங்க. அவளப் படிக்கவுட்ருந்தா எங்கியோ போயிருப்பாளேடா!
என்ன நினைத்துக் கொண்டானோ பாவம், தளர்ந்துபோய் ஒன்றும் பேசாமல் கிளம்பினான்.
எனக்கு வந்த கோபத்தில் ‘இவ்வளவு சமத்துவம் சகோதரத்துவம் மதஇணக்கம் பெண்ணுரிமை அப்டீன்னெல்லாம் வாய்கிழியப் பேசற நீ, இவ்வளவுதானாடா? ஒன் லெவல் அவ்ளோதானா? ஒனக்கு முதுகெலும்பே இல்லியா?’ என்றேன். [ஹ்ம்ம்… இப்போது யோசித்தால், நான் அப்படிக் கேட்டிருக்கவே கூடாது, ஏற்கனவே கழிவிரக்கத்தில் இருந்த அவனை அடிவயிற்றில் அடித்துவிட்டேன்; மேலும் அவன் ஜமாத்தில் அவன் குடும்பத்துக்கு இருந்த அழுத்தங்களைப் பற்றி நான் சரியாக அறிந்துகொள்ளவில்லை, பாவம்! :-( இன்று வரை, இந்த க்ஷணம்வரை நான் அப்படிப் பேசியதில், எனக்கு வருத்தம்தான்! அசிங்கம். :-( சில சமயங்களில், கோபம் தலைக்கேறினால், இப்படியாகிவிடுகிறது, என்ன செய்ய… :-(]
ஆக, அவனுக்கும் கோபம் வந்துவிட்டது. உதடுதுடிக்க – ‘டேய், ஒன் பாப்பார புத்திய காட்டிட்ட பாரு, இந்தத் திமிருக்காகத்தாண்டா ஒங்கள ஒழிக்கணும்! காஃபிர்!’ என்றான்.
நான் செய்தது தவறுதான், அவன் என்னைத் திட்டியதைப் பொருட்படுத்தவில்லைகூட. இம்மாதிரி வசைபாடப்படுவது – அதற்கு முன்னும் பின்னும் பலருடன் இப்படியாகியிருக்கிறது. எப்படியும், இது எனக்கு ஒரு பெரிய விஷயமேயில்லை.
…அத்தோடு தமீம் சகாப்தம் முடிந்தது. அது ஏகோபித்து மறக்கப்படவேண்டியதொன்றுதான்.
ஆனால், இன்று யோசித்துப் பார்க்கிறேன் – அந்த சூட்டிகைப் பெண் நூருன்னிஸா பற்றி, என்னவாகியிருக்கும் அவளுக்கு? இப்போது 44-45 வயதிருக்கும் அவளுக்கு. வாழ்க்கை கருணையோடு அமைந்திருக்குமா? நடைமுறை இஸ்லாமை எப்படி எதிர்கொண்டிருக்கிறாள்? உட்புழுக்கத்தையும், வெளிப் புழுக்கத்தையும் எப்படி சமாளிக்கிறாள்?
படிப்பறிவில்லா கணவன், மனைவியின் அறிவார்ந்த விழைவுகளை மதிக்கிறானா? குடிகாரனாக இருப்பானோ? அவளிடம் அன்பாக இருக்கிறானா இல்லை தினமும் அடிக்கிறானா? அவளுடைய புத்திக்கூர்மைக்கு வடிகால்கள் இருந்திருக்குமா? கவிதைகளை இன்னமும் எழுதுகிறாளா? ஏதாவது புனைபெயரில் அவை வந்துகொண்டிருக்கின்றனவோ? இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறாளா? அதற்கு அவளுக்குச் சூழ்நிலை ஒத்துவருகிறதா?
அவளுடைய குழந்தைகளை எப்படி வளர்க்கிறாள்? பெண்குழந்தை இருந்தால், அதற்கும் புர்க்கா போட்டிருப்பாளோ அல்லது திமிறிக் கொண்டிருப்பாளா? தமிழகத்தின் முஸ்லீம்களின் மேன்மைக்குப் பணிபுரிவதாக வாய்கூசாமல் புளுகும் தமுமுக. மமக போன்ற அடிப்படைவாத அரசியல் இயக்கங்களைப் பற்றி அவள் எண்ணங்கள் என்ன? மதச் சடங்குகளில் அவளுடைய ஈடுபாடு எந்த அளவில் இருக்கும்? தமிழக முஸ்லீமாக இருக்காமல், கர்டிஸ்தானில் இருந்தால், என் தோழி கில்யஸ் போல, நூருன்னிஸாவும் ஒரு பெரிய மதிக்கத்தக்க வீராங்கனையாக இருந்திருப்பாளோ? கேள்விகள், கேள்விகள்… … இன்னமும் உயிரோடுதான் இருக்கிறாளா?
கடந்த சுமார் 25 வருடங்களில், நிலைமை மோசமாகத் தான் ஆகிருக்கிறது என நினைக்கிறேன்.முஸ்லீம்களைத் தனிமைப் படுத்தி பயபீதி ஊட்டுவதென்பதை, மிக நன்றாகவே ஜமாத்கள், உம்மாக்கள் செய்துவருகின்றன. இது இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் தேவையேயில்லாத விஷயம்.
ஆனால் – இணக்கத்துக்கு, சமரசத்துக்கு உழைக்காதது மட்டுமல்லாமல் – வெறுப்பிய விதைகளை ஊன்றி அவற்றுக்கு நீரும் உரமும் அளிப்பதும் நடக்கிறது. இந்த நாசவேலைகளுக்கு ஸவுதி அரேபியாவும், மலேஷியா/இந்தோநேஷியா மூலமாகவும் பிச்சைப் பணம்வேறு பாய்கிறது.
சமூக அங்கீகரிப்புக்காக, தன் சொந்த/குடும்ப பாரம்பரியங்களை நிராகரிக்க வேண்டியிருக்கிறது! அப்படி நிராகரித்து விட்டதால், மேன்மேலும் தீவிரவாத மத/அரசியல் தலைமைக்குத் தலைவணங்க வேண்டியிருக்கிறது. விஷச்சூழலில் கைத்தட்டிக் குதித்துக் குதித்துக் கும்மியடிக்கும் பேடிச் சுழல். எனக்கு இவையெல்லாம் பார்க்கப் பார்க்க மிகவும் ஆச்சரியமாகவும், கொஞ்சம் சோகமாகவும் இருக்கிறது.
-0-0-0-0-0-0-
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைமை நமக்கு மட்டுமல்ல, நடைமுறை இஸ்லாமுக்கும்தான். (இந்தச் சூழலில் தான், மகத்தான முஸ்லீம் பெரும்பான்மை கர்ட் மக்கள்திரள், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடமளிக்கிறது என்பதையும் பதிவு செய்யவேண்டும்)
பிற மதங்களிலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன, அதேசமயம், அவற்றைக் களையும் காத்திரமான முயற்சிகளும் இருக்கின்றன. இவ்விரண்டு விசைகளின் முரணியக்கத்தில் சமூகம் மேம்படச் சாத்தியக்கூறுகள் அதிகம்.
இருந்தாலும், இஸ்லாமிலும் — குதூகலமும், செயலூக்கமும், நேர்மைவிழைவும் கொண்ட இளைஞர் பட்டாளம் ஒன்று, எதிர்காலத்தில் மேலெழும்பி வரும் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அதற்கு, உலகம் கொடுக்கவேண்டிய விலையை நினைத்தால்தான் கலக்கமாக இருக்கிறது.
ஆனால் ஜெயமோகன் சொல்லியிருப்பதுபோல, ‘உண்மை வெல்லும். ஆனால் பலசமயம் பேரழிவுகளுக்குப்பின்னரே அது வெல்கிறது.‘ :-(
சமஸ் அவர்களின் கட்டுரையானது ‘மிக மிதமான மொழியில், மிகமிக நட்பார்ந்த தொனியில்’ எழுதப் பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார் ஜெயமோகன்.
அது சரிதான், அவருடைய நல்லெண்ணத்தைப் புரிந்துகொள்ளமுடிந்த பின்புலத்தில் – துரதிருஷ்டவசமாக, சமஸ் கட்டுரையில் சிலபல அடிப்படைப் பிழைகளும் மலிந்துள்ளன என்பதையும் புரிந்துகொள்கிறேன்.
இவற்றை நீங்களும் கவனித்திருக்கக்கூடும் எனவும் நினைக்கிறேன். சிரத்தையில்லாமல் வேலை செய்வது எனும் நம் இளைஞர்களைப் பீடித்திருக்கும் சாபக்கேடானது, மிகவும் சோகமான விஷயம். சமஸ் அவர்கள் இதில் ஒரு விதிவிலக்கா என்பதை எனக்கு அனுமானிக்கமுடியவில்லை. அறச்சீற்றப் பெருங்காயத்தையும் கொஞ்சம்போலக் கரைத்துவிட்டடித்து பொத்தாம்பொதுவாகவே பலமுறை எழுதிவிடுகிறார் அவர்!
இருந்தாலும், ‘தமிழ் இந்து’ போன்ற குறிக்கோள்கள்(!) உள்ள ஒரு தினசரியில் இப்படியொரு கட்டுரை வருவதே பெரிய விஷயம்தான்.
சராசரித்தனமான தமிழ்ப் பத்திரிகையாளச் சூழலில், நன்றாகவும் கோர்வையாகவும் எழுத அபூர்வமாக எழுந்துவரும் சமஸ் போன்ற இளைஞர்கள் – ஆய்ந்தறிந்தும், பட்டவர்த்தமானமாகவும், அரசியல்சரி நிலைமையில்லாமலும் எழுத முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
-0-0-0–0-0-0-
…சில நாட்கள் முன் ஜெயமோகன் கட்டுரை படித்த பின்புலத்தில், இஸ்லாமிக்ஸ்டேட் வஹ்ஹாபியம் சார்ந்த கவலைகளுக்கிடையே என் அம்மாவிடம் கேட்டேன் – அம்மா, உனக்குத் தமீம் நினைவிலிருக்கிறானா? கொஞ்சம் யோசித்த அவர், இல்லையென்றார். 25 வருடங்களுக்கு முந்தைய கதை, நம் நங்கநல்லூர் வீட்டுக்கு வாராவாரம் வருவானே என்றேன். நினைவு வரவில்லை. செவிட்டு ஐயங்கார் பையனோடு வருவானே என்றேன். க்ளிக்-க்ளிக் என்று அவருக்கு தமீம் நினைவு வந்துவிட்டது.
‘ஆ, தமீம் எப்படி இருக்கிறான், குழந்தை, சமீபத்தில பாத்தியா?’ என்றார். அவருக்கு எல்லோருமே (அரைக்கிழமான அடியேன் உட்பட) குழந்தைகள்தாம்.
‘இல்லை, ஆனா அவனுக்கென்னமா, அவன் நன்னாதான் இருப்பான்’ என்றேன். ‘எல்லோரும் சௌக்கியமா இருந்தா சரி’ என அவர் வழக்கம்போலவே, பொதுவாகச் சொன்னார். + ஸர்வே ஜனோ ஸுகினோ பவந்து, ராம் ராம் சீதாராம், எல்லோருக்கும் மன/உடல் ஆரோக்கியத்தைக் கொடு இறைவா, காலாகாலத்துல அனைவருக்கும் நடக்கவேண்டியது நடக்க அருள்புரி, வள்ளலார் திருமூலர் பாரதியார் இன்னபிற.
நூருன்னிஸா பற்றி பேச்சையே எடுக்கவில்லை, நான். தேவையேயில்லாமல் எதற்கு ரணத்தைக் கிளறவேண்டும்?
சுபம்.
-0-0-0-0-0-0-0-
… …ஆகவே, என்னால் முடிந்த அளவில், நம்பிக்கை நட்சத்திரங்களான பல்வேறு நாடுகளைச் சார்ந்த, நான் மிகவும் மதிக்கும் முஸ்லீம் இளைஞர்கள் சிலரின் ஆக்கபூர்வமான எழுத்துகளை/ஆக்கங்களைச் சுட்டலாம் என நினைக்கிறேன். இதற்கு உதவ ஐந்தாறு பேர் ஓடி வந்திருக்கிறார்கள். நீங்கள், நான் எழுதுவதையெல்லாம் மண்டையில் அடித்துக்கொண்டு படிப்பீர்களா என்பது தெரியவில்லை. ஆனால், நேரம் கிடைத்தால், பொறுமை இருந்தால் கீழ்கண்டவற்றைப் படிக்கவும்:
- அறியாக் குழந்தைகளை மதராஸாக்களில் சேர்த்து, அவர்களை மதவெறித் தற்கொலைக் கொலைகாரர்களாக மாற்றுவது எப்படி – சில குறிப்புகள்03/02/2016
- [ஸுலைமான் தாவுத்] இஸ்லாமிக்ஸ்டேட் கும்பல் நடத்திய பாரிஸ் கொலைகளுக்குப் பிந்தைய சிந்தனைகள்: சில குறிப்புகள் 06/02/2016
- தொடரும் ‘அல் அன்ஃபல்’ – சில குறிப்புகள் 12/01/2016
- [அலி அம்ஜெத் ரிஸ்வி] மிதவாத முஸ்லீம்களுக்கு ஒரு கடிதம் 29/02/2016
- [ஷகீல் ஹாஷிம்] வன்முறைகளுக்குப் பின், இஸ்லாமின் ஒரு புதிய மறு உருவாக்கத்திற்கான நேரம் வந்துவிட்டது! 25/02/2016
- [ஹாஸன் ரட்வான்] முஸ்லிம்களால் அவர்களது நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்துகொள்ளமுடியும்: இஸ்லாமிக்ஸ்டேட்டுக்கு இதுவே சரியான பதில்! 17/02/2016
- நம் சமகாலத்தில் நடந்துகொண்டிருக்கும் அற்புதம், அதற்காக உதவவேண்டிய நமது கடமை… 02/06/2016
- இஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு
இன்னமும் இரண்டு கட்டுரைகள் (இப்படி நண்பர்கள் மொழிமாற்றம் செய்தவை) கடந்த சில மாதங்களாக வரைவு வடிவத்தில் மட்டுமே இருக்கின்றன. கூடிய விரைவில் அவற்றையும் பதிக்கவேண்டும். ஆவலுடன் மொழிபெயர்த்த நண்பர்கள் என்னை மன்னிப்பார்களா?
நன்றி.
June 15, 2016 at 08:09
இந்தத் திமிருக்காகத்தாண்டா ஒங்கள ஒழிக்கணும்! காஃபிர்!’////
உண்மை தான் அய்யா.. உமக்கு கொஞ்சம் வாய் நீளம்தான் ,…
June 15, 2016 at 19:50
யோவ் ரவீ! கை நீளம் என்று நீங்கள் சொல்லாதவரை உங்களை மன்னிக்கிறேன்!
June 15, 2016 at 18:28
வக்ரமான எண்ணப்பாடுகளை உடைய வழிதவறிய வஹாபியர்களைப் பற்றி எதிர்மறையாகச் சொல்லுவது போல பண்பாட்டில் ஊறிய வஹாபியத்தை அடியொற்றாத …………. ஹிந்துஸ்தானத்தின் கலை, பண்பாடு, இலக்கியம், இசை போன்றவற்றுக்கு பெருமளவு பங்களித்துள்ள இஸ்லாமிய சஹோதரர்களை நாம் போற்றாததும்…… வஹாபிய அரைகுறைகள் உரத்துக் கூச்சலிட ஒரு காரணியோ என்றும் கூட அவ்வப்போது தோன்றுவது உண்டு.
பண்பாட்டில் ஊறிய இஸ்லாமிய சஹோதரர்களையும் அவர்களது பண்பாட்டுச் சுவடுகளையும் வஹாபியர்கள் ஷிர்க் என்ற ஒரே வார்த்தையில் அமுக்கி விடுவார்கள். ஆக பெருகி வரும் அராபிய வஹாபிய சூராவளியில் இஸ்லாமிய சமூஹத்தில் பண்பாடு போற்றும் இஸ்லாமிய சஹோதரர்களுக்கு இடமில்லை. ஹிந்துக்களும் ஏனைய மதத்தவர்களுமாவது பண்பாடு போற்றும் இஸ்லாமியர்களது செயல்பாடுகளை நேர்மறையாக விதந்தோதா விட்டால் ………… இவர்கள் குப்பையால் மூடப்பட்ட மாணிக்கங்களாகி விடுவார்கள் :-(
June 15, 2016 at 19:49
அய்யா க்ருஷ்ணகுமார்,
நீங்கள் சொல்வது சரிதான். நீங்களும் அப்படிப்பட்ட மாணிக்கங்களைப் பற்றி எழுதமுடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! (நானும் என் பங்கிற்கு என்னால் முடிந்த அளவில் இவர்களைப் பற்றி எழுத முயற்சிக்கிறேன்)
நன்றி.
June 16, 2016 at 12:42
ஐயா,
இந்தக் கட்டுரைக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டம்தான் மன்னிக்கவும்.
தங்கள் பாசத்திற்குரிய அரவிந்த் கன்னையனார் அவருடைய தளத்தில் எழுதியுள்ள
“பாரதமாதாகீ ஜே “(http://contrarianworld.blogspot.in/2016/06/bharat-mata-ki-jai-reaction-to.html )
என்ற கட்டுரையில் தங்களை “Favorite adversary, fart obsessed blogger Othisaivu ” என்று வெகுவாக பாராட்டியும்(!!!?),நீங்கள் முன்பு வரலாற்று ஆசிரியர் “ஹபீப்” க்கு எதிராக சொன்ன கருத்துக்கு “Academic style ” லில் ஏதேனும் மாற்று கருத்து இருந்தால் தெரிவிக்க கேட்டு இருக்கிறார் என்பதை தங்கள் பார்வைக்கு கொண்டுவருகிறேன் (அவருடைய ஆங்கிலத்தை எளியேனால் புரிந்துகொள்ள முடியவில்லை)
June 16, 2016 at 17:42
அய்யா, நன்றி.
நீங்கள் சுட்டிய – அரவிந்தன்கண்ணையன் அவர்களின் கட்டுரையைப் படித்து இன்புற்றேன். ersatz கருத்துகளை உருவாக்கிக்கொள்வதற்காக, வேலைவெட்டியில்லாமல் இருக்கும் நேரத்தில், ஒரிரு புத்தகங்களைப் படித்தால் ஞானம் ஏகத்துக்கும் தளும்பும் என்பதை, என் சொந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். ஆகவே.
“Favorite adversary, fart obsessed blogger Othisaivu ” என்று அவர் எழுதியிருக்கிறார். அவருடைய கட்டுரைகளைப் பற்றி – ஆகவே அவருடைய ஞானப்(!)புலத்தைப் பற்றி நான் தொடர்ந்து எழுதியதை அவர் குறிப்பிடுகிறார். அது சரிதான். ஒப்புக் கொள்கிறேன்.
ஆகவே, என்னைச் சரிசெய்துகொண்டுவிட்டேன். இனிமேல் அரவிந்தன்கண்ணையன் அவர்களைப் பற்றி எழுதவே போவதில்லை. I refuse to be obsessed with the likes of Aravindan Kannaiyans anymore. Thanks!
__r.
June 17, 2016 at 21:14
வன்மமும் வெறுப்பும் ஊற்றெடுக்கும் போது பொய்கள் எவ்வளவு சரளமாக வந்து கொட்டுகின்றன .அது எப்படி ஐயா உங்களுக்கே என்றே மோசமான இஸ்லாமியர் வீட்டு வாடகைக்கு வருகிறார்,நண்பனாக வருகிறார். பெண்ணடிமைத்தனத்தின் மொத்த உருவமான குடும்பம் கண்ணுக்கு தெரிகிறது.
கொஞ்சம் ஹிந்துத்வா வெறுப்பு கண்ணாடியை கழட்டி விட்டு வந்து உலகத்தை பாருங்களேன்.என் மாமியார் பெயர் ஜைபுன்னிசா.என் பெயர் பூவண்ணன் கணபதி.அவர்களின் உறவுகளின் அணைத்து திருமணங்களிலும் எனக்கும் என் பெற்றோருக்கும் ,உறவுகளுக்கும் (பிரியாணி என்பதால் யாரும் தவிர்க்க மாட்டார்கள்)அழைப்பு இல்லாமல் இருந்ததே கிடையாது.
என் அண்ணன் படித்தது கிரெசன்ட் பொறியியல் கல்லூரி.அவன் கல்லூரி நண்பர்களில் பலர் இஸ்லாமியர்கள்.அவர்கள் குடும்ப திருமணங்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக குடும்பமாக சென்று கொண்டிருக்கிறோம்.
எங்கள் ஆலந்தூர் வீட்டில் மூன்று ஆண்டுகளாக வாடகைக்கு இருப்பவர் zaide இப்ராஹிமே.புதுச்சேரி இஸ்லாமியர்.அவர் மனைவி அஸ்வினி.ராணுவத்தில் என் உயரதிகாரி மகள்.குடும்பம் ஒத்து கொள்ளாததால் இறுதி ஆண்டு கல்லூரி படிப்பின் போதே திருமணம் செய்து கொண்டார். மெதுவாக சமாதானம் ஆன தந்தை நேரடியாக மகளுக்கு உதவ இருந்த தயக்கம் காரணமாக என்னை பிடித்து வீடு பார்க்க சொன்ன போது,என் அம்மாவை மிரட்டி ,நீ என்னோடு வந்து இரு என்று சொல்லி அவர் இருந்த வீட்டை அவர்களுக்கு வாடகைக்கு விட வைத்தேன்.
தாம்பரத்தில் எங்கள் வீட்டுக்கு எதிர் வீடு நிஷாத் வீடு.அவன் தந்தை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கால்நடை மருத்துவராக பணியில் இருந்தவர். அவர்கள் இல்லத்தில் அணைத்து நிகழ்வுகளுக்கும் ,ரம்ஜான்,பக்ரீத் பண்டிகைகளுக்கும் முதல் பிரியாணி எங்களுக்கு தான்.சென்னை விமான நிலையத்தில் பணி புரியும் நிஷாத் பார்ட்டி தர என் கோட்டா தான் எப்போதும் அவனுக்கு கைகொடுக்கும்.
சான்றுகளோடு இஸ்லாமிய பெண்கள் ஹிந்து பெண்களை விட பல மடங்கு மேலான நிலையில் தான் இருக்கிறார்கள் என்பதை விளக்க தயாராக இருக்கிறேன்.எப்போதாவது மனசாட்சி உறுத்தினால் ஒரு மாறுதலுக்காக உண்மையை அறிய நினைத்தால் உதவ ஓடி வருகிறேன் .
கல்லூரியில் உடன் படித்த,பணியில் மருத்துவராக,செவிலியராக உடன் பணி செய்த இஸ்லாமிய சமூகத்தை சார்ந்த ஆண்,பெண்கள் பற்றி எழுத பல பக்கங்கள் தேவைப்படும்.ஆனால் எதுவுமே நீங்கள் காட்டும் நிலைக்கு காத தூரத்தை விட தூரம் தான்.
இஸ்லாமியர்களுக்கு அறிவுரை சொல்வதும்,அவர்கள் மத நம்பிக்கைகளில் உள்ள குறைகளை சுட்டி காட்டி அன்பான அறிவுரைகளை அள்ளி வீசுவதும் இப்போது பாஷன்.எந்த மதமாக இருந்தாலும் முட்டாள்தனம் தான் 100க்கு 100 சதவீதம்.இதில் சல்லடை ஊசியை பார்த்து ஓட்டையை சுட்டி காட்டுவது தான் பெரும்பான்மையாக நடக்கிறது.பெண் கரு கொலையில் ஹிந்துக்கள் முதலிடம் .ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் கொல்லப்பட்ட பெண் குழந்தைகள் கோடிகளை தாண்டுகின்றன. இதில் மிக பெரும்பான்மையானவை ஹிந்து குடும்பங்களில் தான்.0-6 ஆண் பெண் சதவீதத்தில் கிருத்துவர்கள் 962,இஸ்லாமியர்கள் 950,ஹிந்துக்கள்-925. இந்த 925 கூட ஹிந்துக்கள் கீழ் சேர்க்கப்பட்ட பழங்குடியினர் மற்றும் ஹிந்து மத நம்பிக்கைக்கு எதிராக உள்ளவர்கள் அதிகம் வாழும் ஆட்சி செய்யும் மாநிலங்களான கேரளம்,தமிழ்நாடு,வங்காளம் போன்றவற்றின் புண்ணியத்தில் தான்.இளம் கைம்பெண் முதல் இரு குழந்தைகளுக்கு தாயான கைம்பெண் மறுமணம்,மணவிலக்கு பெற்ற பெண்ணின் மறுமணம் இஸ்லாமில் ஹிந்து மத நம்பிக்கை கொண்டவர்களை விட 100 மடங்கு அதிகம்.இதை மறுக்க முடியுமா
June 18, 2016 at 13:36
அன்பின் ஸ்ரீ பூவண்ணன்
நீங்க உங்கள் தீரா விட வெறுப்புக் கண்ணாடியைக் கழட்டி விட்டு ஏன் உலகத்தைப் பார்க்கக் கூடாது?
\\ இஸ்லாமியர்களுக்கு அறிவுரை சொல்வதும்,அவர்கள் மத நம்பிக்கைகளில் உள்ள குறைகளை சுட்டி காட்டி அன்பான அறிவுரைகளை அள்ளி வீசுவதும் இப்போது பாஷன் \\
ஹிந்துக்களின் வாழ்க்கை முறைகளில் குறைகள் நிச்சயம் இருக்கின்றன. ஆனால் அரைகுறையான புள்ளிவிவரங்களை அள்ளி வீசி ஹிந்துக்களுடைய வாழ்க்கை முறைகளீல் உள்ள குறைகளை வெறுப்பு மிக காழ்ப்பு மிக புளுகுவது என்ன என்று நீங்கள் சொல்லலாமே? விமர்சனங்கள் ஹிந்துக்கள் மீது வீசப்பட்டால் அது சரி.
பெருகி வரும் பயங்கரவாதம், பண்பாடு, இசை, இலக்கியம், கலை என்ற அனைத்தையும் **ஷிர்க்** என்ற ஒரே வார்த்தையில் அமுக்கி மத பிற்போக்கு வாதத்தை பெருக்கும் அவலத்தை குறைகூறினால் அது தவறு.
உங்கள் கருத்தாடல்கள் படி……………இஸ்லாமியப் பெண்களை புர்க்கா போட பலவந்தப்படுத்துவது சரி. பெண்களை அடிப்பது இஸ்லாமிய சட்டப்படிக்கு என்று சொல்லுவது சரி. பெண்களுக்கு இஸ்லாமிய வழமைகளின் படி வ்ருத்த சேதனம் பலவந்தமாக மறைமுகமாகச் செய்வது சரி. முத்தலாக் முறையில் இஷ்டப்படி பெண்களை போகப்பொருள்களாகக் கருதி நினைத்த நேரத்தில் விவாஹ ரத்து செய்வது சரி…………… அப்படித்தானே……… அதை முற்போக்கு என்று கூட சொல்லி விடலாமே.
ராம் அவர்களோ நானோ அல்லது இங்கு பங்கு பெறும் எந்த ஒரு வாசகருமோ நீங்கள் உதாரணமாகக் காட்டும் இஸ்லாமியர்கள் பால் வெறுப்புக் கொண்டதில்லை. தேவையின்றி வெறுப்புக் கருத்துக்கள் காழ்ப்புக் கருத்துக்கள் பகிருவது ராம் இல்லை மாறாக நீங்கள் என்பதனை உங்கள் பதிவுகள் காட்டுகின்றன அல்லவா?
15, திகதி நான் இட்ட பதிவினையும் அதற்கு ராம் அளித்த பதிலையும் நீங்கள் வாசிக்கவில்லை? அது ஏன் உங்களுக்கு நல்ல விஷயங்கள் ஏதுமே கண்ணில் படாமல் போகிறது.
இதே தளத்தில் எத்தனையெத்தனை இஸ்லாமியர்களின் செயல்பாடுகளைப் பற்றி ராம் விதந்தோதி எழுதியிருக்கிறார்? அதெல்லாம் ஏன் உங்கள் கண்ணில் தென்படவில்லை.. அரசியல், இசை, ராணுவம் என பலதுறைகளில் இஸ்லாமியர்கள் ஆற்றிய பங்கினை ராம் விதந்தோதியிருக்கிறாரே? அது ஏன் உங்கள் கண்களில் படவில்லை.
எங்கோ இருக்கும் குர்திஸ்தானத்து இஸ்லாமிய சஹோதரர்களுக்கு ராம் உதவி கேட்டிருந்தாரே அது ஏன் உங்கள் கண்களில் படவில்லை? வஹாபியர்களுக்கு எதிராக ஒரு குழு இயங்கினால் அவர்கள் இஸ்லாமியர்களே இல்லை என்று வஹாபியர் ஃபத்வா விடுவது ந்யாயம்? அதுமாதிரி ஒரு ஃபத்வா பூவண்ணன் விட்டால் அது ந்யாயமோ?
உலகில் பெருகி வரும் வஹாபிய பயங்கரவாதத்தை முனைந்து எதிர்ப்பதும் அதற்கு மாற்றான பண்பாட்டோடு ஒன்றிய அந்தந்த ப்ராந்திய இஸ்லாமிய வாழ்க்கை முறைகளை விதந்தோதுவதும் ஒருங்கே சொல்லப்பட வேண்டிய விஷயங்கள்.
June 19, 2016 at 16:48
யஹ் மேஜர் பூவண்ணன் சாஹேப் கே லியே காஸம்காஸ் தோஹ்ஃபா ஹை.
ஹமாரே முஸல்மான் பாய் கே பரிவார் மே நிக்காஹ் கியே ஹுஏ மேஜர் சாஹேப் கோ ஹிந்து போல்னே மே ஷர்ம் ஆதா ஹை.
ப்ஞ்சாப் தா புத்தர், பஸ்சிமீ பஞ்சாப் மே பைதா ஹுவே தாரிக் ஃபதேஹ் சாஹேப் கோ அப்னே ஆப் கோ முஸ்லீம் போல்னே மே கொய் ஷர்ம் நஹி. பர் அப்னே ஆப் கோ பாகிஸ்தானி போல்னே மே பேஹத் ஷர்ம் ஆதா ஹை. ஹோர் அப்னே ஆப் கோ ஹிந்துஸ்தானி போல்னே பே சாஹேப் ஜீ பேஹத் கர்வ் மெஹ்ஸூஸ் கர்தே ஹைன்.
ஸாட்டே ஹிந்துஸ்தானி ஹோர் பாக்கிஸ்தானி முஸல்மானியோங்கோ தஜ்ஜியான் உடாதே ஹுவே……….. யஹ் தாரிக் சாஹேப் கா ஃபர்மான் த்யான் ஸே ஸுனியே மேஜர் சாஹேப்.
யஹ் நஹீன் போலியே தாரிக் சாஹேப் ராம் சாஹேப் ஜைஸே ஜூட் போல்தே ஹைன்.
ஜூட் போலே கவ்வா காட்டே.
June 19, 2016 at 18:10
बहुत शुक्रिया बड़ी मेहेरबानी… B-)
वे रामसामि :-))
June 20, 2016 at 11:01
அய்யா ராம், இஸ்லாமியர் என்பதை எடுத்து விட்டு பார்பான்களை நாலு சாத்து சாத்தினால் , புண்ணியமாவது கிடைக்கும் … பொழைக்க தெரியாத ஆள் அய்யா !!
June 20, 2016 at 11:19
//
வன்மமும் வெறுப்பும் ஊற்றெடுக்கும் போது பொய்கள் எவ்வளவு சரளமாக வந்து கொட்டுகின்றன
//
அதே வன்மம் ,வக்கிரம், அனைத்தையும் முற்போக்கு மேடை போட்டு பேசாலாம் ..
நீங்கள் செய்தால் முற்போக்கு , பெண்ணியம், புரட்சி ..
அடுத்தவன் சும்மா ஆரம்பித்தாலே மதவெறி, ஹிந்துத்வா, பார்பான் !!!
//
இஸ்லாமியர்களுக்கு அறிவுரை சொல்வதும்,அவர்கள் மத நம்பிக்கைகளில் உள்ள குறைகளை சுட்டி காட்டி அன்பான அறிவுரைகளை அள்ளி வீசுவதும் இப்போது பாஷன்.எந்த மதமாக இருந்தாலும் முட்டாள்தனம் தான் 100க்கு 100 சதவீதம்
//
முடியல .. கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் மேடையில் வைத்து கொண்டு இந்து மதத்திற்கு எதிராக நாத்திகம் பேசினால் இப்படி தான் போகும் … சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதை தான் ..
ஹிந்துகளின் முட்டாள்தனத்தை எதிர்க்கும் போது இனிக்கிறதும், அடுத்தவன் முட்டாள்தனத்தை வாரும் போது கசக்கும் .. இப்படி அரைகுறையாக உளறி கொட்டி பிரச்சனைகளை பெரிசு ஆக்கியது தான் மிச்சம் ..
நாத்திகன் வட்டத்தின் நடு புள்ளி போன்றவன் .. அவனுக்கு அனைத்துமே ஒன்றுதான்..
கொசுறு -> பெண் சிசு கொலைகள் மிகவும் குறைவு -> அயோக்கிய பார்பான் ஆட்களிடம் தான்
June 21, 2016 at 19:44
ரவி சார் கூச்சமே இல்லாமல் எப்படி சார் அடித்து விடறீங்க.மக்கள் தொகை அடிப்படையில் கடந்த மூன்று மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து மாநில வாரியாக,மதவாரியாக அலசி இருக்கிறேன்.
உங்கள் அடிப்படையே தவறு.சைவ உணவு உட்கொள்வோர் மற்றும் தீவிர ஹிந்து நம்பிக்கை உடையோர் அவர்கள் வாழும் மாவட்டம்,மாநிலம் தான் நம்பர் ஒன் பெண் கருக்கொலை /சிசுக்கொலையில்.ஒரே மாநிலத்தில் எடுத்துக்காட்டாக குஜராத்தில் வாழும் இஸ்லாமியர்,பழங்குடியினர் 0-6 ஆண்-பெண் சதவீதம் அதே மாநிலத்தில் வாழும் ஹிந்துத்வர்களின் தீவிர ஆதரவு சைவ சாதிகளோடு ஒப்பிடும் போது பல மடங்கு மேல்.
உத்தரபிரதேசத்தில் பிராமணர்கள் 5 சதவீதத்திற்கு மேல்.அங்கு நடக்கும் சாதி ஆணவ கொலைகள்,சாதி அட்டூழியங்களில் முதல் இடம் அவர்கள் தான். இங்கும் 5 சதவீதத்துக்கு மேல் இருந்தால்,ஒரே பகுதியில் வன்னியர்,முக்குலத்தோர் போல அதிக எண்ணிக்கையில் இருந்தால் அவர்களை விட பல மடங்கு அதிகமாக அட்டூழியங்களில் ஈடுபடுவார்கள்.பிஹாரில் நூற்றுக்கணக்கில் கொலைகளை புரியும் ரன்வீர் சேனா பூமிஹார் பிராமணர்களின் இயக்கம்.மைதிலி பிராமணர்கள் அடி தடியில் ,கொலைகள் புரிவதில் யாருக்கும் சளைத்தவர்கள் கிடையாது.எடுத்துக்காட்டாக கொஞ்சம்
http://timesofindia.indiatimes.com/city/agra/12-year-old-Dalit-boy-electrocuted-by-upper-caste-men-for-plucking-corn/articleshow/52784745.cms
http://www.hindustantimes.com/india/dalit-man-attacked-set-on-fire-for-entering-temple-in-up/story-oZTmIGHAhck4jLi7lB4mMO.html
https://indiankanoon.org/doc/1100478/
June 22, 2016 at 07:05
அய்யா ரவி, பூவண்ணன் அவர்களைவிட்டுவிடுங்கள். அவருடன் பொருத ஒருவருக்கும் ஏலாது. ஆனால், அவர் பின்னூட்டமிட்டால், அதை திருத்தங்களில்லாமல் பதிப்பிப்பதாகத்தான் இருக்கிறேன்.
சர்வநிச்சயமாக – அவருடைய கருத்துரிமை, கருத்தரிப்புரிமை, கருவழித்தலுரிமை, கருக்கலைத்தலுரிமை, கரித்துக்கொட்டலுரிமை போன்ற உரிமைகள் மதிக்கப்படவேண்டியவை.
ஆனால் அவருடைய கருத்துகளைப் பற்றி… பாவம், அவரை ஏன் நோகடிக்கவேண்டும்? பலப்பல முறை சிலபல பதில்களைக் கேட்டும் அவரால் கொடுக்கமுடியவில்லை – என்பது வேறுவிஷயம்!
Yes. Everyone has a right to his/her opinion – but, nobody has the right to be taken seriously – this is equally valid for Poovannan and I – and for everyone else! The second right has to be proven in the field, and gets developed/respected only based on previous instances and then trust.
Right is a tough mistress.
Thanks!
__r.
June 22, 2016 at 07:50
yes my Lord !! i accept
June 22, 2016 at 08:04
:-) Thanks for the ‘understanding’ :-(