பாகிஸ்தான்: இரண்டு சந்தோஷ நிகழ்வுகள் (+ஜேஎன்யு கும்பலின் அடுத்த போராட்டம்?)

February 29, 2016

இரண்டு நல்ல விஷயங்கள் இன்று,  பாகிஸ்தான் தொடர்பாக நடந்திருக்கின்றன. ஒன்று: ஒரு விருது கொடுக்கப்பட்டது; இரண்டாவது: ஒரு மரணதண்டனை நிறைவேற்றப் பட்டது.

1. என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ஷர்மீன் ஒபைத்-சினாய் அவர்களுக்கு, ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இவருக்கு 2012லும் ஒரு ஆஸ்கர் விருது,  அவருடைய ஆவணப் படத்திற்காகக் கிடைத்தது. திரைப்படத்தைப் பற்றிய காத்திரமான புரிதலும், தரம் வாய்ந்த திரைப்படங்களை எடுக்கும் பாங்கும், கதை சொல்லும் திறனும், தைரியமும், நம்பிக்கையும் கொப்பளிக்கும் ஷர்மீன் அவர்களுடைய தகுதிக்கு, இம்மாதிரி விருதுகள் நிச்சயம் கொடுக்கப்படவேண்டும் என்பதில் எனக்கு ஐயமேயில்லை.
Screenshot from 2016-02-29 18:43:59
மேற்கண்ட படம் + கட்டுரை: http://nymag.com/thecut/2016/02/oscars-needed-sharmeen-obaid-chinoys-speech.html

2016ல் கிடைத்திருக்கும் இவ்விருது – நதியில் ஒரு பெண்: மன்னிப்புக்குக் கொடுக்கும் விலை (~A Girl in the River: The Price of Forgiveness) எனும், பாகிஸ்தானில் தொடர்ந்து நடக்கும் ‘கௌரவக் கொலைகள்’ தொடர்பான ஆவணப்படத்திற்காக.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஷர்மீன் அவர்கள் – பலப்பல நம்மூர் ஆவணக்கோமணப் படங்கள் இந்தியாவுக்குச் செய்வது போல, பாகிஸ்தானின் மோசமான விஷயங்களை மட்டுமே காட்டி, அந்த நாடு பற்றிய பொதுப்புத்தி சார்ந்த மேற்கத்திய முத்திரைக்குத்தல்களை ஆமோதித்து அவற்றுக்குத் தூபம் போட்டு, தம் மக்களைத் தாமே சிறுமைப் படுத்தி, விருதுகள் வாங்கும் ஜாதியினர் அல்லர்.

அதாவது, அருந்ததி ராய்-மல்லிகா சாராபாய் போன்றவர்கள் வாய் கூசாமல் புளுகுவது போலல்லாமல்,  நேர்மையாகவும் தைரியமாகவும் பிரச்சினைகளை அணுகுபவர். ஊடகப் பேடிகளுக்காக நடனம் ஆடாதவர்.

அவர் தொழில்முறை வெட்டி மனித உரிமைக்காரரும் அல்லர். எதற்கெடுத்தாலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று பாகிஸ்தானின் கடமைகளைக் கைகழுவிவிடும் போக்கும் இல்லை; மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் சிடுக்கல் பிரச்சினைகளை அணுகுபவர்.

இம்மாதிரி ஒரு இளம் பாகிஸ்தானியக் கலைைஞருக்கு ஒரு அழகான அங்கீகாரம் கிடைத்திருப்பது ஒரு சந்தோஷமான விஷயம்தான். :-)

(இவரைப் பற்றிய ஒரு குறிப்பும், அவருடைய பேச்சு ஒன்றின் தமிழ் எழுத்துவடிவமும் சில வாரங்கள் முன் பதிக்கப்பட்டது: அறியாக் குழந்தைகளை மதராஸாக்களில் சேர்த்து, அவர்களை மதவெறித் தற்கொலைக் கொலைகாரர்களாக மாற்றுவது எப்படி – சில குறிப்புகள் 03/02/2016)

-0-0-0-0-0-0-

ஸல்மான் தஸ்ஸீர் அவர்கள், பாகிஸ்தானின் மதிக்கப்பட்ட தலைவர்களில் ஒருவராக இருந்தார்; ஒரு அப்பழுக்கற்ற அரசியல்வாதியாகவும் இருந்தார். ஒரு தொழிலதிபராகவும், மதிக்கப்பட்ட தினசரி ஒன்றின் ஸ்தாபகராகவும் கொடிகட்டிப் பறந்தார்.
Screenshot from 2016-02-29 15:30:45ஸல்மான் தஸ்ஸீர் அவர்கள், உண்மையாகவே மதச் சார்பின்மையினர்; பலூச்சிகளை, மொஹாஜ்ஜிர்களை, வடமேற்கு குறுங்குழுத் திரள்களை அரவணைத்துச் சென்றவர்.  அல்லாவையும், இறைதூதரையும், இஸ்லாமையும் விமர்சித்தால் அதற்கு  ‘அவிசுவாசம்’ எனப் பெயரிட்டு, ஸுன்னியல்லாத முஸ்லீம்களையும் பிற மதத்தவர்களையும் குறிவைக்கும் சட்ட திட்ட நடவடிக்கைகளுக்கும், ஹராம் எனச்  சிலவகையான ஆடல்பாடல்களை, வழிபாட்டு முறைகளைத் தடைசெய்து ஒடுக்குவதற்கும் (blasphemy laws)  எதிராகத் தொடர்ந்து போராடியவர்.

ஆக – இஸ்லாமை விமர்சித்து ஒரு வார்த்தை பேசினால், சட்டரீதியாகவே மரணதண்டனை என, பாகிஸ்தானிய ராணுவத்தாலும், மதவெறி முல்லாக்களாலும் முன்னெடுத்துச் செல்லப்பட்ட இந்தப் போக்கை,  இவர் எதிர்த்தார். (என் மங்கலான நினைவில், இவர் ஸியா-உல்-ஹக் காலத்திலிருந்தே, தொடர்ந்து போராடி வந்திருக்கிறார் எனத்தான் தோன்றுகிறது)

ஆகவே நாடெங்கும், இவருக்கெதிராக மதவெறி உச்சாடனங்களும் எழும்பிக் கொண்டிருந்தன. இதன் விளைவாக, பஞ்சாப் பிரதேசத்தின் ஆளுநராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அவர், 2011ல் பட்டப் பகலில் மாலிக் மும்தாஸ் ஹூஸ்ஸைய்ன் கத்ரி எனும் ஜிஹாதியால் கொல்லப்பட்டார். இந்த மனிதன், தஸ்ஸீர் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பாதுகாப்பு வளைய ராணுவவீரர்களில் ஒருவன். (நம்மூர் இந்திரா காந்தி அவர்கள் கொலைசெய்யப்பட்டவிதம்தான்!)

சரி. அவர் கதை முடிந்தது.

இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மும்தாஸ்கத்ரி, விசாரணை செய்யப்பட்டபோதும், நீதிமன்றத்துக்குக் கொணரப்பட்டபோதும் – ஸுன்னி இஸ்லாமிய வெறியர்கள் பேயாட்டம் போட்டுக் கொண்டேயிருந்தனர். எனக்குத் தெரிந்தே பலமுறை, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட இந்தக் கொலைகாரன் மீது, அவன் ஏதோ தியாகி போல,  ரோஜாப் பூவிதழ்களைத் தூவும் விஷயமும் நடந்தது; இந்த அற்பத்தனத்தைத் தொடர்ந்து செய்தது – ஜிஹாதி வழக்குரைஞர்கள். (நம்மூர் வெறி அரைகுறை வழக்குரைஞர்களும் இதற்குச் சமமாகத் தம்மையும் நீதிமன்றத்தையும் இழிவு செய்துகொள்பவர்கள்தானே! தமிழகத்து ரௌடி வழக்குரைஞர்கள் பற்றி நாம் அறியாத அற்பத்தனமா?)

…நான் நினைத்தேன், இந்த வழக்கு முடியவே முடியாது. தீர்ப்பு வந்தாலும் அது நிறைவேற்றப் படாது எனவெல்லாம். ஆனால், எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும்படிக்கு, இந்தக் கொலைகாரனுக்கு இன்று காலை தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது.
Screenshot from 2016-02-29 19:36:05(மேற்கண்ட படம் + கட்டுரை: http://www.bbc.com/news/world-asia-35684452)

பாகிஸ்தானில் சட்டத்தின் மாட்சிமை என்பது இன்னமும் இருக்கிறது, நீதிமன்றங்களுக்கும் அரசுக்கும் இன்னமும் முதுகெலும்பு இருக்கிறது என்பதை அறிந்துகொள்வது எனக்கு,  ஒரு நல்ல நம்பிக்கை தரும் விஷயம். (மரணதண்டனையின் அவசியம் 28/11/2012)

ஸல்மான் தஸ்ஸீர் போன்றவர்களை நாம் மறக்கவே கூடாது!

-0-0-0-0-0-0-0-

பின்குறிப்புகள்:

பாகிஸ்தானிய ஜிஹாதிகள் இதற்கெதிராகக் கண்டனம் தெரிவிப்பார்களோ இல்லையோ, நம்முடைய செல்ல ஜேஎன்யு மாணவர்கள், இந்த மரணதண்டனைக்கு எதிராகப் போராடுவார்கள் எனத்தான் நினைக்கிறேன்; அவர்கள் என்ன படிப்பைக் கண்டார்களா, பொறுப்புணர்ச்சியைக் கொண்டார்களா அல்லது அவர்களுக்கு வரிப்பணத்தை அழும் நம்மை உணர்ந்தார்களா அல்லது…

அவர்களுக்காகத் தயாராக ஒரு கொள்கை முழக்க எழவையும் தயாராக வைத்திருக்கிறேன்:

Pakistan tere tukde honge, Inshah allah, Inshah allah…

இது ஒரு பெரிய விஷயமில்லை; அவர்களுடைய கொள்கை முழக்கத்தில் இருந்து Bharat என்பதை ‘டெம்பரவரியாக’  சும்மா Pakistan என்று மாற்றிவிட்டேன். அவ்வளவுதான்.

சரி. இந்த தண்டனை நிறைவேற்றலுக்கும் சம்பந்தாசம்பந்தமில்லாமல் ஆட்சேபம் தெரிவித்து, அருந்ததி ராய் அவர்கள் தாம் பெற்ற ராயல்டி வகையறாக்களை திருப்பித் தரப் போகிறார் எனவும்தான் கனவு காண்கிறேன்.

… எது எப்படியோ,  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நல்லது நடந்தால் சரிதான். நன்றி.

-0-0-0-0-0-0-0-

தொடர்புள்ள பதிவுகள்:

One Response to “பாகிஸ்தான்: இரண்டு சந்தோஷ நிகழ்வுகள் (+ஜேஎன்யு கும்பலின் அடுத்த போராட்டம்?)”


  1. நானும் பாகிஸ்தான் நீதியின் முதுகெலும்பை பாராட்டுகிரேன். அதே போல் பாங்கிளாதேஶீன் அரசின் முதுகெலும்பையும் பாராட்டுகிரேன் – அங்கு சில மாதங்கள் முன் 1971 விடுதலைப்போர் காலத்தில் அட்டூழியம் செய்த ஜிகாதிகளை தூக்கிலிட்டனர் நீதி ரொம்ப காலம் இழுத்தடித்தாலும் , கடைசியில் அமல்படுத்தப்பட்டது.

    பாகிஸ்தானில் ராணுவக் குழைந்தைகள் பள்ளீயில் புகுந்து பல குழந்தைகள் கொல்லப்பட்டதால் , 400 ஜிகாதிகள் ராணுவத்தால் தூக்கிலிடப்பட்டுள்ளானர். தன் வினை தன்னைச் சுடும். அதை அங்கு யாரும் எதிர்க்கவில்லை.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s