பெருமாள் ‘மாதொருபாகன்’ முருகனுக்கு ஈவெரா ‘பெரியார்’ அவர்களின் ஏகோபித்த ஆதரவு!

January 31, 2015

பாவப்பட்ட ஜீவனான,  கருத்துரிமைப் பிரகடனங்களிடும் சக வீரத்தமிழ்ப் போராளிகளால் முட்டுக்கொடுத்து நிற்கவைக்கப்படவேண்டிய பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்ட மாஜி நக்ஸலைட் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்கு, ஏதோ என்னாலான ஆதரவு. ஹ்ம்ம்ம்…

கீழ்காணப்படுவது ஒரு புனைவல்ல – இது ஒரு மேடைப்பேச்சு என்பதையும் – இன்னமும் நம் தமிழர்களால் தலைமேலே வைத்துக்கொண்டு கூத்தாடப் படுவது என்பதையும், இப்படிப் பேசுவது ஒரு மூன்றாம்தர திமுக/அதிமுக மேடைஏச்சாளர் அல்லர் என்பதையும் உணரவும்:

… … கட்டிப் போட்டு இருக்கிற பெண்பிள்ளைகள் எல்லாம் உற்சவம் என்றால்தானே கோயிலுக்குப் பார்த்துப் போக முடிகிறது. அங்கே போனால்தானே நாலு ஆண்பிள்ளைகளோடு உராய முடிகிறது. வீட்டில் இருந்தால் என்ன வேலை என்று மிரட்டுவான் புருஷன்.

‘வர முடியலையே, நசுக்குகிறானே நசுக்குகிறானே’ என்பாள் அவள். ‘வா வா முட்டிக்கிட்டு வா’ என்பான் அவன். அந்தச் சுகமெல்லாம் பெண்டாட்டியைக் கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு போனதால் அவள் அங்கே அடைகிறாள்; அது பழக்கமாகப் போயிற்று; எல்லோருடைய பெண்டாட்டியும் அந்தக் கதி ஆனதினாலேயே, எவனும் பரிகாசம் பண்ணுகிற நாடு இல்லை.

இப்படிப்பட்ட காரியங்களினாலேயே அது உயிரைப் பிடித்துக்கொண்டு இருக்கிறது. நாம் அதற்குத் தகுந்தபடி வேறே ஏற்பாடெல்லாம் பண்ணினால், பெண்டுகள் திரும்பிவிடுவார்கள்…

… மலையாளிகளில் பெரும்பாலும் பார்ப்பானின் தேவடியாள்மகன் தான்!

குறிப்பு: மேற்கண்டவை – ஈவெரா ‘பெரியார்’ அவர்களின் இறுதிச் சொற்பொழிவிலிருந்து சில பகுதிகள்;  ‘மரண சாஸனம்‘ என, பிற்காலங்களில் வெகுவாகச் சிலாகிக்கப்பட்ட இந்தப் பேச்சு  – 19.12.1973 – தியாகராய நகர், சென்னையில்  ‘சிந்தனையாளர் மன்றம்’ நடத்திய கூட்டத்தில் பொழியப்பட்டது; நான் இந்தக் கூட்டத்திற்குப் போயிருக்கிறேன் – என் தகப்பனார் இதற்குக் கூட்டிக்கொண்டு சென்றிருந்தார் – ஆனால் நான் அப்போது ஒரு சிறுவன்; கூட்டத்தின் ஆரவாரம், விசிலடித்தல், உச்சாடனங்கள், ஊளையிடல்கள் எல்லாம் மட்டுமே மங்கலாக நினைவில் இருக்கின்றன. இது தொடர்பாக – இந்த பேச்சின் ஏச்சின் விளைவாக நங்கநல்லூர்/பழவந்தாங்கல் பகுதிகளில் சில அசிங்கமான நிகழ்ச்சிகளும், அடுத்த சில நாட்களில் அரங்கேறின, பின்னர் அடுத்த ஒரு வாரத்தில் அவர் போய்ச்சேர்ந்தபிறகும்கூட இன்னொருதடவை! இவை பற்றிப் பின்னொரு சமயம் பார்க்கலாம்.

ஆனால் 1979 அல்லது 1980ஆம் ஆண்டு வாக்கில்தான், ஏதோ அகழ்வாராய்ச்சிக்காக,  இந்தப் பேச்சின் எழுத்து வடிவத்தை முதலில் முறையாகப் படித்தேன் – மிகுந்த ஆச்சரியமுற்றேன் – இப்படியும்கூட ஒருவர் பொதுக்கூட்டங்களில் பேசமுடியுமா என்று!  பின்னர்  – இன்னொரு சமயம், சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் பதிப்பித்த பெரியார் தொகை நூல்களில் இருந்து எடுத்த குறிப்புகளிலிருந்து இப்பகுதிகளைக் கொடுத்திருக்கிறேன். இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன இவ்வேச்சில் – இம்மாதிரியும் இதைவிடக் கேவலமாகவும் அவதூறுகளும் நினைக்கவேமுடியாத திட்டல்களும்; ஆனால் அவையெல்லாம் இன்னொரு சமயம் பார்க்கலாம்.

-0-0-0-0-0-0-0-0-0-0-

இதுவல்லவா அவதூறு? இதைவிடவுமா – நம் பெண்களை, திருவிழாக்களை, பாரம்பரியங்களை, குடும்பங்களை, ஆண்களை – ஒருவர் கேவலப் படுத்தி விடமுடியும், கொச்சையாகப் பேசமுடியும்,  சொல்லுங்கள்? பெருமாள் முருகன் எழுதியது அடிப்படையில் ஒரு தரமற்ற புனைவு என்றாலும் அது ஒரு வெறும் புனைவு மட்டும்தானே? ஆக அதற்கான தரவுகளை, ‘பெரியார்’ அவர்களின் இம்மாதிரியான பேச்சுகளில் இருந்து எடுத்துக்கொண்டேன் எனக்கூடச் சொல்லலாமே?

பெரியாரே இப்படிச் சொல்லிவிட்டார், ஆகவே மறுபேச்சில்லை என்று சொன்னால், பெரியாரை வைத்து வெங்காய வியாபாரம் செய்துகொண்டிருக்கும் சகல திராவிடக் கட்சிகளும், கழகங்களும் திரண்டுவந்து, இனமறவர்களைக் கொண்டு பாவப்பட்ட பெருமாள்முருகன் அவர்களுக்கு ஒரு மகாமகோ பாதுகாப்பு அரண் அமைத்து அவரைக் கடைந்தேறச் செய்துவிடுவார்கள்தானே! ஆம், ஆம் – நிச்சயம் செய்துவிடுவார்கள்தான்.

ஹ்ம்ம்… நம் தமிழகம் என்பது ஒரு அலாதியான பிரதேசம்தான்!

-0-0-0-0-0-0-0-0-

எதுஎப்படியோ, இந்த – நாளை இன்னொரு, தமிழர்களுக்கு மிகமுக்கியமான பப்பரப்பா திரண்டு வந்தால் (எடுத்துக்காட்டாக – ‘தமிழ் குட்டிநடிகர்/குட்டிநடிகை மேடையில் குசுவிட்டார்!’) மறந்துவிடப்படக்கூடிய – பெருமாள்முருகப் பிரச்சினைக்கு அப்பாற்பட்டு…

…நம் தமிழச் சமுதாயத்திற்கு, தயவுதாட்சணியம் பாராமல் பல கசண்டுகளை இனம் கண்டுகொண்டு அவற்றை இடக்கையால் புறம்தள்ளவேண்டிய காலம் வந்து கொண்டிருக்கிறது. நாம் புனிதமானவை என நினைக்கும் அத்தனை விஷயங்களையும், பெருந்தகைகள், சான்றோர்கள்-தமிழச் சமுதாயத்தை உய்விக்க வந்தவர்கள் என நம்பப் படும் அனைவரையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆரியம்-திராவிடம் போன்ற கற்பிதப் பிரிவினை உளறல்களையும் – தொடர்ந்து கயமையுடன் பரப்பி வரும், தமிழர்களை ஞானமலடுகளாக ஆக்கும் அற்ப வதந்திகளையும், அவற்றின் ஊற்றுக்கண்களில் இருந்து அடையாளம் காணவேண்டிய நிர்ப்பந்தம் எழுந்துகொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.

-0-0-0-0-0-0-0-0-0-
என் இளம் நண்பரும் ‘பெரியார்’ அவர்களின் சுயப்பிரகடனத்தை முதல்பக்கத்தில் மேற்கோள் காட்டி, அவர் வழியொழுகி நடப்பதாகவும் சித்திரத்தை விரிக்கும் ‘எழுத்தாளருமான’ ஸ்ரீஸ்ரீ யுவகிருஷ்ணா அவர்கள், அண்மையில் எழுதியிருக்கிறார்:
“யார் வேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் யாரைப்பற்றி வேண்டுமானாலும் எழுதிவிட்டு போகலாம் என்பதையெல்லாம் கருத்துச் சுதந்திரம் என்று பார்க்கமுடியாது. என்னுடைய கருத்துச் சுதந்திரத்தின் வரம்பளவு உங்களுடைய மூக்கின் அரை இஞ்சுக்கு முன்னால் முடிந்துவிடுகிறது அல்லவா.” (சுதந்திரக்கலவி தமிழகக்கலையா?)
இவர் ‘பெரியாரை’ கொஞ்சமாவது படித்திருக்கிறாரா, அசைபோட்டிருக்கிறாரா என்பது தெரியவில்லை.  ஆனால் பெரியார் அவர்களின் வரம்புமீறிய நாகரீகமற்ற ஏச்சுகளுக்குக் கண்டனம் தெரிவிப்பார் என நம்புகிறேன்.

-0-0-0-0-0-0-0-

 … யோசித்துப் பார்த்தால், ஈவெரா ‘பெரியார்’ அவர்கள் போன்றவர்களையே (விமர்சிக்கக்கூட இல்லாமல்) தாங்குதாங்கு என்று தாங்கிப் புளகாங்கிதம் அடையும் தமிழைக் கூறுபோடும் நல்லுலகமும், அரசியலதிகார மையங்களும் – வெறும் பெருமாள் முருகன் அவர்கள் போன்றவர்களையா தாங்கமுடியாது?

ஆனால், பொதுப்புத்தித் தமிழமனம் என்பது தர்க்கரீதியில் செயல்பட்டு, சுமார் ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டனவே! (தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??)

தொடர்புள்ள பதிவுகள்:

44 Responses to “பெருமாள் ‘மாதொருபாகன்’ முருகனுக்கு ஈவெரா ‘பெரியார்’ அவர்களின் ஏகோபித்த ஆதரவு!”

  1. nparamasivam1951 Says:

    அய்யா, காலம் மாறி விட்டது. 50 வருடங்களுக்கு முன் இருந்த சாது மக்கள் இருந்த இடத்தில் இப்போது இருப்பது துடிப்பு வாய்ந்த மதப் பற்றுள்ள இளைஞர்கள். அவர்களால் பெருமாள் முருகனின் அபத்தத்தை பொறுக்க முடியவில்லை. இது தான் யதார்த்தம். இனிமேலும்

  2. சரவணன் Says:

    //// பெரியார் அவர்களின் வரம்புமீறிய நாகரீகமற்ற ஏச்சுகளுக்கு ////

    ஐயா, பெரியார் ஒரு அனார்க்கிஸ்ட். வரம்புகளை மீறுபவர்தான் அனார்க்கிஸ்ட்டாகவே இருக்க முடியும்! பெரியார் சென்ற பல நூற்றாண்டுகளில் தமிழகம் கண்ட மாபெரும் சமூக சீர்த்திருத்தவாதி என்பதை நடுநிலையாளர்கள் எவரும் ஒப்புக்கொள்வார்கள்.

    சர்வதேச அளவில் மதிக்கப்படும் வரலாற்றாய்வாளர் ராமச்சந்திர குஹா ட்வீட் ஒன்றில் குறிப்பிடுகிறார்;

    @Aarjava I admire Periyar, Gandhi, Ambedkar, Nehru– all great social reformers. Mr Modi upholds the RSS ideology, which is hate-filled.

    தனது மேக்கர்ஸ் ஆஃப் மாடர்ன் இந்தியா புத்தகத்தில் பெரியார், ராஜாஜி போன்றவர்களை சேர்த்துக்கொண்டு, அண்ணாவையும் காமராஜரையும் விட்டுவிட்டது பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்;

    “The criteria I used to include people were the originality of thought, the literary and intellectual quality of their writings, and most importantly, the fact that prose and themes should travel across generations,” he said.

    இன்றைய தமிழ்நாட்டில் வாழும் எல்லோரும், எந்த சாதி, மதத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும், பெரியாருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்பதே உண்மை. அவரைப் போன்ற கலகவாதிகள் உருவாகவும், செயல்படுவதற்ககுமான அரசியல்-சமூக வெளி நிலவியது இந்திய அரசியல், ஜனநாயக மரபுகளின் பெருமைக்குரிய விஷயம்.


    • அய்யா சரவணன்:

      நீங்கள் பெரியாரைப் பற்றி விதந்தோதியருப்பதற்கும் கட்டுரையின் வழக்குரைக்கும் தொடர்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

      பெரியாரின் ‘மரண சாசன’த்திலிருந்து ராம் மேற்கோள் காட்டியிருக்கும் வரிகளின் தரத்தைப் பற்றி இருவேறு கருத்துகள் இருக்கமுடியாது. அது பெண்களின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சமூக அவலத்தைப் பற்றிய, அவர்களுடைய பாலியல் வேட்கைகளைப் பற்றிய, கொச்சையான பார்வை மட்டுமே. விடலைப் பருவத்தில் சிறுவர்கள் இப்படிப் பேசுவதைப் பார்க்கலாம். இதற்கும் சமூகச் சீர்திருத்தத்துக்கும் எந்தத் தொடர்பும் இருக்கமுடியாது.

      இருப்பினும், பொதுவெளியில் நிகழ்ந்த இந்தப் பேச்சுக்கு தமிழ்நாட்டில் எந்த எதிர்ப்பும் எழவில்லை என்பதுதான் உண்மை. பொதுவாக, பெரியாரின் ’கலகம்” பிராமணர்களைத் தவிர வேறு எந்த ஆதிக்கசாதியினரினையும் குறிவைக்கவில்லை என்பதும் இதன் அடிப்படைக் காரணமாக இருக்கலாம்.

      ஆனால் பெருமாள் முருகனின் புனைகதையில் விவரிக்கப்படும் ஒரு சடங்கு ஒரு வகுப்பினருக்கே அவமானமாகச் சித்தரிக்கப்படுகிறது. அந்த சாதியைச் சேர்ந்த சங்கங்கள் மற்றும் அந்த ஊரின் தோழமை (!) ஆதிக்க சாதியினர் அனைவரும் சேர்ந்து எழுத்தாளனின் மீது இடைவிடாத தாக்குதலை நிகழ்த்தி கட்டப்பஞ்சாயத்து வழிமுறைகளின் மூலம் அவரையும் அதன் வழி கருத்துச் சுதந்திரத்தையும் முடக்குகிறார்கள்.

      இந்த வேறுபாட்டைத்தான் நகைமுரணாக ராம் சுட்டுகிறார் என்பது என் புரிதல்.

      இந்த வேறுபாட்டுக்கு என்ன காரணம்? பெருமாள் முருகனுக்கு எதிராக சாதி அடிப்படையில் அணிதிரட்ட முடிந்தது என்பதுதான். அதுவும் அந்த குறிப்பிட்ட சாதி தமிழ்நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார தளத்தில் மிகவும் செல்வாக்குடைய 4-5 சாதித் தொகுப்புகளில் ஒன்று என்பதும்தான்.

      இவ்வாறு நான்கைந்து சாதித் தொகுப்புகள் அரசியல், சமூக அதிகாரத்தை முழுவதுமாகக் கைப்பற்றியிருப்பதும் பெரியார் இயக்கத்தின் நேரடி விளைவுகளில் ஒன்றுதான்.

      இந்த நிலைமைக்கு பொதுச் சமூக விழுமியங்களில் ஆர்வம் உள்ள எவரும் பெரியாருக்கு நன்றி சொல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கமுடியாது.

      • nparamasivam1951 Says:

        அய்யா, நீங்கள் குறிப்பிட்டபடி அந்த சாதி மிகவும் செல்வாக்கான சாதியா என தெரியாது. நான் அந்த சாதியை சேர்ந்தவன் அல்ல. அந்த குறிப்பிட்ட கோவிலுக்கு ஒரு சமயம் எனது ஊரான திருச்சியில்இருந்து சென்றுள்ளேன். நான் அறிய விரும்புவது ஒன்று தான்.: எந்த ஆதாரமும் இன்றி, ஓரிரு முதியவரிடம் கேட்டேன் என்று, ஒரு குறிப்பிட்ட ஒட்டு மொத்த சமுதாயத்தை இகழ்வதற்க்கு யாருக்கும் (திரும்ப யாருக்கும்) உரிமை இல்லை. இவ்வாறு எழுத எந்த எழுத்தாளருக்கும் உரிமை இல்லை, இல்லை, இல்லை, என்பதில் நான் உறுதி யாக இருககின்றேன்.. இவ்வாறு பழித் துறைக்கப்பட்ட மக்களுக்குக்காக நான் வருத்தப் படுகிறேன், வேதனைப் படுகிறேன்.


      • கல்யாணராமன், சரவணன் – தங்கள் கருத்துகளுக்கு நன்றி.

        அய்யா சரவணன்:

        1) பெரியார் திருப்பித்திருப்பி உரத்துச் சொன்ன பல கருத்துகளில் சிவற்றைக் கோடி காட்டியதில் புண்பட்டுவிட்டீர்களோ?

        2) மற்றபடி அவரை ஒரு கலகக்காரர், அனார்க்கிஸ்ட் என்றெல்லாம் சொன்னால், அவரே வெறுத்துவிடுவார். எவ்வளவு முறை அவர் அதிகாரவர்க்கத்தினரிடமும், சமூகப் பெரியமனிதர்களுடனும் காலனி அரசாங்கத்திடமும் முறையீடுகள் வைத்திருப்பார், சொல்லுங்கள்?

        3) அவர் பொதுவாக ஆராய்ச்சிகீராய்ச்சி என்றெல்லாம் நேரத்தை விரயம் செய்யாமல், தனக்கு அவ்வப்போது உதித்த விஷயங்களைப் பற்றி, ஜனரஞ்சகமாகப் பேசியும் எழுதியும் வந்தார். மக்களுடைய போதாமைகளுக்கும் இயலாமைகளுக்கும் வடிகாலாக வெறுப்புணர்ச்சியை ஒருங்கிணைத்தார். பல தனிப்பட்ட கல்யாணகுணங்கள் இருந்தாலும், அதெல்லாம் அவருடைய அசூயைகளினாலும், இளம் தலைவர்கள் அவர் நிழலிலேயே உருவாவதை சந்தேகத்துடன் பார்த்ததாலும், அவருடைய அடிப்படை நிதானமின்மையாலும் நாசமாயின. அவ்வளவுதான். ஒரு சுவாரசியமான மனிதர்தாம். பண விஷயத்தில் – தன் நிதியை உபயோகித்து பொதுச்சபையில் வேலை செய்தவர்தாம் – அதாவது அவர் வழித்தோன்றல்களான நிதிகள் போலல்லாமல்.

        4) அவர் பெயரைச் சொல்லிக்கொண்டு பம்மாத்து செய்யும் பல கழகங்களையும் நிறுவனங்களையும் அவருடைய லிகஸி-யாகச் சொல்லலாம். மேலும், நம் தமிழகத்தில் ஜாதிபேதங்கள், வெறியுணர்ச்சிகள் அதிகமாக இருப்பதற்கும் அவரையும் ஒரு முக்கியமான காரணமாகச் சொல்லலாம்.

        5) என்னைப் பொறுத்தவரை, ஈவேரா-வின் ஒரே முக்கியமான, அழகான – தமிழச் சமூகத்திற்கான பங்களிப்பு என்பது அவருடைய எழுத்துரு வகை சீர்திருத்த எண்ணங்கள்தாம்.

        6) ராமச்சந்திரகுஹா அவர்களுக்கு தமிழில்(எனக்குத் தெரிந்தவரை) படிக்கவோ எழுதவோ வராது. ஆக அவர் ஈவெரா-அவர்களின் எழுத்துகளை, அவர் தட்டியெழுப்பிய திராவிடமாயையைப் பற்றி விவரமாக வாசித்திருக்கும் சந்தர்ப்பமே இல்லை. ஆகவே அவர் கருத்துகள் கடாசத் தக்கவை. (அவர் எழுதிய ட்வீட்களாக நீங்கள் குறிப்பிடுபவை பற்றித்தான் சொல்கிறேன்.) அவர் காந்தி பற்றி எழுதிய புத்தகங்கள்மீதும் எனக்கு விமர்சனங்கள் இருக்கின்றன.

        7) நான் பலமுறை எழுதியிருப்பதுபோல – நான் ஒரு நடுநிலைமைக்காரன் அல்லன். எனக்குச் சரியென்று பட்டதைச் சொல்கிறேன். அவ்வளவுதான்.

        அய்யா கல்யாணராமன்,

        நான் இந்தப் பதிவை, கொஞ்சம் கிண்டலாகத்தான் எழுத ஆரம்பித்தேன். ஆனால்…

        உங்கள் பார்வைகளுடன் ஒத்துப் போகிறேன் + மேற்கண்ட #5யும் சேர்க்கிறேன். நன்றி.

        அலுப்பாகவே இருக்கிறது. தூங்கப் போகிறேன்.

        கனவில் பெரியார் வந்து என் கண்ணைக் குத்திவிடுவாரோ? பயமாக இருக்கிறது.

        __ரா.

      • சரவணன் Says:

        ஒரே ஒரு விஷயத்துக்கு மட்டும் பதில் சொல்ல வேண்டும்– நான் எதற்காகப் புண்படப் போகிறேன்? நிச்சயமாக இல்லை. ‘ஐயோ அபச்சாரம்! இப்படியெல்லாம் பேசலாமா?’ என்ற சட்டகத்துக்குள் இருந்துகொண்டு பெரியாரை அணுக ஆரம்பிக்கவே முடியாது. நம் சகல புனிதப் படிமங்கள், முன்முடிவுகள், சாதி-மத-மொழிப் பற்றுகள், வழிபாடுகள், வைதீக மனநிலை போன்றவற்றைக் களைந்துவிட்டு வந்தால்தான் அவரை அணுக முடியும். அண்ணா உட்பட அவரைப் பின்பற்றியவர்களாலேயே அது முடியவில்லை. அவர்கள் அவரிடமிருந்து வசதியான, safe ஆன சிலவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டார்கள். மனிதனை (மனுஷியையும் சேர்த்துதான்) சகல தளைகளிலிருந்தும் விடுவிக்க வேண்டும் என்பது அவரது பெருங்கனவு. அந்த இலட்சிய நோக்குக்குத் தடையாக இருந்த சாதி, மதம், சடங்கு, சம்பிரதாயம், பூஜை, புனஸ்காரம் அத்தனையையும் அவர் உடைக்க விரும்பினார். இந்த ‘வெங்காயங்களை’ இயங்கியல் நோக்கில் புரிந்துகொள்ள அவர் ஆர்ம்சேர் ஆராய்ச்சியாளர் அல்ல! அவற்றை முற்றிலும் நிராகரித்தார். நீங்கள் குறிப்பிட்ட பேச்சில் எனக்கு கேவலப்படுத்துதல் என்பதைவிட பண்பாட்டுப் பழக்கங்கள் மீதான பொறுமையின்மையும், எரிச்சலுமே தென்படுகின்றன. அது அவரது 94-வது வயதில் ஆற்றிய உரை வேறு–சுத்தமாகப் பொறுமை இழந்துவிட்டிருந்தார் என்று ஊகிக்கலாம். புண்படும் மனநிலையில் இருப்பவர்கள் யாரும் அவரைப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கவே முடியாது என்பது என் எண்ணம். அவர் கண்டிப்பாகப் பெரிய சிந்தனையாளர் அல்ல, ஆனால் நிச்சயம் மாபெரும் சமூக சீர்திருத்தவாதியே. அதிர்ச்சியூட்டும் கருத்துகளை அவர் ஒரு ‘டைனமைட்’ ஆக (status quo- வை தகர்க்க!) வேண்டுமென்றே முன்வைத்தார் என்று தோன்றுகிறது. His ideas were dangerous (to the prevailing order) and subversive. பெண் ஏன் அடிமையானாள்-ஐ வேறு எந்த இந்திய ஆண் அரசியல்வாதியோ, சமூக சீர்திருத்தவாதியோ எழுதியிருக்க முடியாது. அவர் பெண்களைக் ‘கேவலப்படுத்தும்’ ஆள் அல்ல. ‘காந்தி பிரம்மச்சரிய பரிசோதனைகள் செய்தார், தெரியுமா?’ என்று கேட்பது மாதிரியானதே பெரியாரின் அதிர்ச்சியூட்டும் பேச்சுகளைக் குறிப்பிட்டு ‘இப்படியெல்லாம் அவர் பேசினார், தெரியுமா?’ என்பது. இருவருமே அடைய முடியாத இலட்சியங்களைக் கொண்டிருந்தார்கள். அவற்றுக்காகவே தேசபிதா காந்தியும், தந்தை பெரியாரும் என்றும் போற்றப்படுவார்கள்.

        நன்றி.

      • poornam Says:

        //கனவில் பெரியார் வந்து என் கண்ணைக் குத்திவிடுவாரோ? பயமாக இருக்கிறது.//
        பயம் வேண்டாம். பெரியாருக்கு அடிக்கடி நம் தமிழினத்தலைவரின் கனவில் சென்று அருள்வாக்குகள் கூறும் ட்யூட்டியே சரியாக இருக்கிறது.

  3. A.Seshagiri Says:

    “மாபெரும் சமூக சீர்த்திருத்தவாதி என்பதை நடுநிலையாளர்கள் எவரும் ஒப்புக்கொள்வார்கள்.”!!!!!!!!!!
    நடுநிலையாளர்கள் யாரு? வீரமணி,கருணாநிதி,சரவணன்,மதி மாறன் ,கடைசியாக ராமச்சந்திர குஹா ….
    இந்த ஈ .வே.ரா. வின் ஒரு ஜாதிக்கு எதிரான அதீதமான காழ்ப்புணர்ச்சியை உண்மையாக அறிந்த எவரும் இவரை ஒரு நாளும் சமூக சீர்த்திருத்தவாதி என்று ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்.இவர் வளர்த்தது எல்லாம் துவேஷம், துவேஷம்,துவேஷம் தான் அதை தவிர ஒன்றும் இல்லை.இவரின் லட்சணத்தை கீழ் வெண்மணி சம்பவத்தில் இவர் நடந்து கொண்ட விதத்திலேயே அறியலாம்.சரவணன் போன்றவர்கள் என்னதான் ஊதி,ஊதி,பெருக்கினாலும் தற்சமயம் அது எடுபடாது என்பதுதான் இன்றைய சூழ்நிலை.


  4. அய்யா சரவணன், தங்கள் சமன நிலையிலான பதிலுக்கு நன்றி.

    நான் ஒரு ஒழுக்கவாதி மனப்பான்மையிலிருந்து அவரைப் பார்க்கவில்லை. அதேசமயம் நான் ஒரு கலகக்காரனோ, அனார்க்கிஸ்டோ, ஸ்டேட்டஸ்க்வோயிஸ்டோ அல்லன். சகலவிதமான பரிணாம வளர்ச்சிகளிலும் நம்பிக்கையுள்ளவன். பழமை என்றாலே அருவருப்போ, புதுமை என்றாலே புளகாங்கிதமோ அடைய முயற்சிக்காதவன்.

    அனைத்தையும் உடைத்தெறிந்துவிட்டால் எதுதான் மிஞ்சும் சொல்லுங்கள்? மாறாக – எந்தவொரு விஷயத்திலும் எடுக்கவேண்டியவற்றை எடுத்துக்கொண்டு, நீக்கவேண்டியவற்றை நீக்கி, நம்மைத் தொடர்ந்து மேலெழுப்பிக்கொண்டு செல்லவேண்டாமா?

    ஆகவே – அவரை பலப்பல நேரிடை-எதிரிடைச் செயல்பாடுகளின் கலவையாகவேதான் பார்க்கிறேன். He is a bundle of contradictions; he never bothered about any internal or external consistencies in what he said and practised. Therein lies the rub.

    பலவிதங்களில் அவர் ஒரு வெகுளியான, குழந்தைத்தனம் மிக்க நபர். உணர்ச்சிக் கலவைகளால் கொந்தளித்துக்கொண்டு மட்டுமே இருந்ததால், சிந்தனையாளரோ ஆராய்ச்சியாளரோ அல்லரானதால் – அவரால் முட்டியடி/தடாலடி எதிர்வினைகளைத்தான் கொடுக்கமுடிந்தது. ஆகவே அவர் திராவிட இயக்கத்தை, அதன் தாக்கத்தை மிகைமதிப்பீடு செய்தது மட்டுமல்ல – அதன், தமிழக மக்களின் மீதான பக்கவாத விளைவுகளை (எடுத்துக்காட்டாக, அனாதிகாலம் தொட்டு வரும் ஜாதிக்கட்டமைப்புகளை இறுக்கியமை), சமூகப் பிரச்சினைகள் அனைத்திற்கும் வெளிக்காரணங்களைத் தேடி ‘நிறுவிய’ சுயபரிசோதனையற்ற பொதுத்தன்மை, அரசியல்/அதிகாரரீதியான பொறுக்கிமயமாக்கலை (lumpenization), இன்னும் பலவற்றை – சிறிதளவுக்கு மேற்பட்டு கணிக்கவேமுடியவில்லை, பாவம்.

    இப்படிப்பட்ட பின்புலத்தில், ஈவெரா அவர்கள் ‘பெரியார்’ என்ற மனிதர் ஆனமைக்கு – அவர் கருத்துகளும் உள்வாங்கப்பட்டமைக்கு, நாம் நம் பாரம்பரியத்தைத் தான் ஓங்கிப் பிடிக்கவேண்டும். இருந்தாலும் ஒரு புதிர்தான் இது.

    பெண் ஏன் அடிமையானாள் புத்தகத்தை நானும் ஒருமுறையல்ல, பலமுறை படித்திருக்கிறேன். அது ஒரு நல்ல பிரச்சார பேம்ஃப்லெட். அவர் எழுத்துகளில் அதனைத் தலையாயதாக வைப்பேன்.

    அதேசமயம் ‘தேவடியாள் பிள்ளை’ ‘தேவடியாள் மகன்’ என மிகச் சரளமாக – எழுதும்போதும் பேசும்போதும் தொடர்ந்து எதிர்மறைப் பின்புலத்திலேயே வசவாக உபயோகித்திருக்கிறார் அவர். ஆக தேவடியாள் எனப்படுபவர்களை இழிவானவர்களாகவே பார்க்கிறார் – இது ஒரு மிகப்பெரிய முரண்நகை. அவரே இதனை ஒரு தொழில் எனக் கருதவேண்டும், சுதந்திரக் கலவிவேண்டும் என்றெல்லாம் பலமுறை சொல்லியிருப்பதை கவனிக்கவேண்டும். இதேபோல, இவருடைய ஜமீந்தார் வழிபாடு, ‘தாழ்த்தப் பட்டவர்கள்’ மீதான ஒவ்வாத கருத்துகள் போன்றவைகள் புரிந்து கொள்ளமுடியாதவை. அவர் ஒரு கலவை.

    காமராஜர் காந்தி அம்பேட்கர் நேரு போன்றவர்களுடன் இவரை எப்படித்தான் ஒரே பலகையில் வைக்கமுடியும் சொல்லுங்கள்.

    எனது பதிவில் தொக்கி நிற்கும் கேள்வி என்னவென்றால் – தமிழக நடைமுறை அரசியலைப் (=ஜாதி அரசியல்) பொறுத்தவரை ஏன் – ஒரே ‘குற்றத்துக்கு’ பெரியாருக்கும் பெருமாள்முருகனுக்கும் வித்தியாசமான அணுகுமுறைகள்?

    அன்புடன்,

    __ரா.

    • poornam Says:

      இதே மாதிரி நகைமுரண் பலமுறை நடந்ததுதான். குஷ்பூ என்ற அம்மிணி பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்களா தெரியவில்லை. (உங்கள் சினிமா அறிவு சராசரித் தமிழ சினிமா அறிவைவிட பல்லாயிரம் அடிகள் அதல பாதாளத்தில் இருக்கிறது.)
      மேற்படி அம்மிணி பெரியார் பற்றிய திரைப்படத்தில் மணியம்மையாக நடித்தார். இவர் அதற்கு சில நாட்கள் முன்பாக தமிழ்ப்பெண்களுக்குக் கற்பு கிடையாது என்று பொருள்படும்படியாக ஏதோ பேசியிருந்தார். உடன் நமது வெத்துவேட்டுகள் பொங்கி எழுந்து மேற்படி அம்மிணிக்கு மணியம்மையாக (அதாவது தமிழ்ப்பெண்களுக்குக் கற்பு தேவையே இல்லை என்ற பெரியார் பற்றிய படத்தில் அவரது மனைவியாக) நடிக்கத் தகுதி இல்லை என்று அலப்பறை செய்தன.
      பிற்பாடு அவர் திமுகவின் கொள்கைகளைப் (உனுக்கு ஏதாவது பிரிதா நைனா?) பரப்பியவர் என்பது கூடுதல் செய்தி. தற்போது காங்கிரஸ் இயக்கத்துக்குத் தொண்டாற்றி வருவது அந்த இயக்கம் செய்த பெரும்பேறு.

  5. சான்றோன் Says:

    மேற்படி விவகாரத்தின் போது நான் செய்த சில பதிவுகள்..

    தெருவில் போகும் யாரையாவது பார்த்து டேய் “தேவடியா பயலே” என்று கூப்பிட்டுப்பாருங்கள்…. செவுள் பிய்ந்துவிடும்…..

    ஆனால் , அதே விஷயத்தை ஒரு கோயிலையும் , [ கவனம்…அது ஹிந்துகோயிலாக மட்டும் இருக்கவேண்டும்….. தப்பித்தவறி வேறு மதத்தை குறிப்பிட்டுவிட்டால் உங்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை ]அந்த ஊரில் வாழும் மக்களையும் தெளிவாக குறிப்பிட்டு , அவர்கள் தவறிப்பிறந்தவர்கள் என்று குறிப்பிட்டு ஒரு புத்தகத்தை எழுதுங்கள்….. அதை கால‌ச்சுவடு , உயிர்மை போன்ற பதிப்பகங்கள் மூலமாக வெளியிடுங்கள்….

    உடனடியாக உங்களுக்கு இலக்கியவாதி அந்தஸ்து வழங்கப்படும்….

    ஒட்டுமொத்த தமிழகமும் உங்கள் பின்னால் நிற்கும்….. யார் எதிர்த்தாலும் அவர்களுக்கு மதவாத ,அல்லது சாதி வெறி முத்திரை குத்தப்படும்…….

    போங்கடா …. நீங்களும் உங்கள் கருத்து சுதந்திரமும்……

  6. சான்றோன் Says:

    இலக்கியவாதி என்பவனுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது?

    உண்மையில் இலக்கியவாதி என்பவனுக்கான வரையறை என்ன? எழுதுபவன் எல்லாம் எழுத்தாள‌ன் என்றால் ஆபாசக்கதை எழுதுபவனும் எழுத்தாள‌ன் தானே?

    ஒரு விவசாயியை விட , ஒரு விஞ்ஞானியை விட , ஒரு மருத்துவரை விட ஒரு எழுத்தாளன் எந்த வகையில் உயர்ந்தவன்? அவனுக்கு மட்டும் என்ன சிறப்புச்சலுகை?

    அவனவன் வேலையை அவனவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்….. தன்னால் முடிந்த அளவுக்கு சமூகத்துக்கு தன் பங்களிப்பை செலுத்துகிறான்….. சொல்லப்போனால் மேற்கண்ட மூவரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகம்…. அவர்கள் எழுத்தாள‌ர்களைப்போல ஒரு அமைப்பாக‌ ஒன்று திரள்வதில்லை…. அவர்களுக்காக குரல் கொடுக்க எந்த ஊடகமும் முன்வருவதில்லை….

    கலை , இசை ,இலக்கியம் எல்லாமே மனித மனங்களை பண்படுத்தவே உருவானவை….பிறரை புண்படுத்தினால் அவற்றின் ஆதார நோக்கமே சிதைந்துவிடும்….

    மாதொரு பாகன் விவகாரம் ஒரு மாபெரும் சதியின் ஒரு அங்கம்…. அதை வெறும் கருத்து சுதந்திரம் என்ற அளவில் கடந்து செல்வது மிகவும் ஆபத்தானது…..

    கால்டுவெல் என்ற கிறித்தவ பாதிரி ஹிந்துக்களிடையே பிளவை உண்டாக்க உருவாக்கியதுதான் திராவிட – ஆரிய இனவாதம்…. இன்றைய அறிவியல் அந்த தியரியை துடைத்துப்போட்டுவிட்டது…. இருப்பினும் , இன்றும் எத்தனை பேர் அதைப்பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள்….

    இன்று அது வெறும் புத்தகம்…. எந்த எதிர்ப்பும் பதிவு செய்யப்படாமல் விட்டுவிட்டால் , நாளை அதுவே வரலாறாக மாறும் அபாயம் உண்டு….

    தேவர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள் , வன்னியர்கள் எல்லாம் மரவெட்டிகள் என்று கடந்த காலத்தில் நிலைநிறுத்திய அதே கும்பல்தான் தற்போது கவுண்டர்களை குறிவைக்கிற‌து….கவுண்டனைத்தானே சொல்கிறான் என்று கடந்து சென்றால் நாளை உங்கள் மீதும் இதே மாதிரியான தாக்குதல் தொடுக்கப்படும்….

    திருச்செங்கோடு என் மண்ணின் ஒரு அங்கம்…. என் அப்ப‌ன் சிவனின் திருத்தலம்…. அந்த மண்னை எவன் அவமதித்தாலும் அது என்னையும் அவமதிப்பதாகும்…..

    பெருமாள் முருகனின் அந்த அபத்தக்குப்பையை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி… நீங்களும் அதேபோன்ற ஒரு திருவிழாவில் , முகம் அறியாதவனுக்கு பிறந்தவன் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்…. உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன்

    • nparamasivam1951 Says:

      திரு சான்றோன் அவர்கள் எனது எண்ணத்தையே பிரதி பலித்துள்ளார். எண்ணத்தை சரியாக தெரிவிக்க நான் ஒரு எழுத்தாளன் அல்ல என்பது இப்போது புரிகிறது. எனினும், திரு சான்றோனின் கருத்துகளுக்கு நான் உடன் படுகிறேன்.

    • சரவணன் Says:

      /// ஒரு விவசாயியை விட , ஒரு விஞ்ஞானியை விட , ஒரு மருத்துவரை விட ஒரு எழுத்தாளன் எந்த வகையில் உயர்ந்தவன்? அவனுக்கு மட்டும் என்ன சிறப்புச்சலுகை? ////

      சான்றோன், இந்தக் கேள்வி பலமுறை கேட்கப்பட்டு பதில் சொல்லப்பட்டுவிட்ட பாமரத்தனமான கேள்வி. விவசாயியோ மருத்துவரோ செய்நேர்த்தியுடன் தம் தொழிலைச் செய்யக்கூடும். புதிய உத்திகளையும் தொழில்நுட்பங்களையும்கூடப் புகுத்தக்கூடும். அவர்களது பணி, சமூகப்பங்களிப்பு இன்றியமையாதது, போற்றத்தக்கது. என்றாலும் இவர்கள் படைப்பாளிகள் அல்லர். அவர்களிடம் இருப்பது க்ராஃப்ட், தொழில் நுட்பம் தானே தவிர கலை அல்ல. அச்சில் பதுமைகளை வார்ப்பவருக்கும் சிற்பிக்கும் உள்ள வேறுபாடு இதுதான். ஜெயமோகன் தளத்தில்கூட தேடிப்பார்த்தால் அவர் பலமுறை இதே (மாதிரியான) கேள்விக்கு சலிக்காமல் பதில் சொல்லியிருப்பதைப் பார்க்கலாம். ஒரு எழுத்தாளனால் உங்களை சில மணிநேரம் திருச்செங்கோடு வாசியாக அல்லது அமேசான் காட்டு ஆதிவாசியாக உணரச் செய்ய முடியும். அரசனாகவும் ஆண்டியாகவும், ஏன் ஒரு விலங்காகவோ முற்றிலும் கற்பனையான அதியச ஜீவராசியாகவோ உலவ்விட முடியும். சோழர்கள் காலத்திலோ அல்லது ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு வரும் காலத்திலோ வாழ்ந்துபார்க்கச் செய்ய முடியும்.

      இலக்கியத்தை விடுங்கள், ஸ்டார் வார்ஸ் திரைப்படங்களைக்கூட நினைத்துப்பாருங்கள். ஏதோ கடந்த காலத்தில் எங்கோ தொலைதுர உலகுக்கு அத்திரைப்படம் நம்மை அழைத்துச்செல்லவில்லையா? அதை ஒரு விவசாயியோ, மருத்துவரோ, பொறியியலாளரோ செய்ய முடியுமா?


  7. அன்புள்ள சரவணன்:

    பெரியாரின் மேற்கண்ட பேச்சைப் பற்றிய என் கருத்தை மாற்றிக் கொள்ள எந்த முகாந்திரமுமில்லை. எந்த நோக்கிலும் அது தரக்குறைவானதுதான். சந்தேகமேயில்லை. எந்தத் தலைவரும் – காந்தி, லெனின், நேர்ய் உள்பட – விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரில்லை.

    இங்கு நாம் கவனிக்கவேண்டியது இதுதான். அடுத்தவர்களை பொதுவெளியில் தரக்குறைவாகப் பேசுவது நம் தமிழ்நாட்டில் நெடுநாட்களாக நடந்துவருவதுதான். இதை திராவிட இயக்க/கட்சியினர் மட்டுமல்ல, மற்றவர்களும் செய்திருக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் வெறும் புனைகதைக்காக ஒரு தனிமனிதனை – அதுவும், நாடறிந்த எழுத்தாளனை – சில குழுக்கள் சூழ்ந்துகொண்டு அவரை பலவந்தத்துக்கு ஆளாக்குவது போன்ற நிலைமைக்கு கொண்டு சென்றதில்லை. அந்த நிலப்பரப்பில் சாதிய ஆதிக்கம் கேள்விமுறைக்கு உட்படாத அளவுக்கு வளர்ந்திருக்கும் சூழ்நிலையில் மட்டுமே – அதாவது அரசு நிறுவனங்கள் சாதிக்கண்ணோட்டத்தின் வெளிப்பாடாக மாறிவிட்ட சூழ்நிலையில் மட்டுமே – இது நடந்திருக்க முடியும். இதுதான் ஒரு சமூகமாக நாம் எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினை.

    பெரியார் வழிபாடு அல்லது பெரியார் பெருமை பேசுதல் இதற்கு உதவும் என்று நான் நினைக்கவில்லை. இது நடப்புப் பிரச்சினை. இந்த நிலைமையை நேர்மையாக நாம் புரிந்துகொள்வதே அதை எதிர்கொள்வதற்குத் தேவையான முதல் படி. மாறாக இன்றைய தமிழ்நாட்டுச் சூழல் பற்றிய விமர்சனம் எழும்போதெல்லாம் கண்மூடித்தனமாக பெரியார் புகழ் பாடுவதென்பது, இன்றைய அதிகார அமைப்புக்கும் அது இழைத்துவரும் அநீதிகளுக்கும் மறைமுகமாக வக்காலத்து வாங்குவதுதான்.

    பல சிந்தனையாளர்களும் சீர்திருத்தவாதிகளும் வாழ்ந்த, வாழ்ந்துவரும் பூமிதான் இது. இங்கு பல அரசியல் மரபுகளும் சிந்தனை மரபுகளூம் உரையாடிக்கொண்டிருப்பது அவசியம். இந்தப் பன்மைத்துவத்துக்கு பெரியார் வழிபாடு தடையாகத்தான் இருக்கிறது.

    • சரவணன் Says:

      பெருமாள் முருகன் விஷயத்தை விவாதிக்க அல்லது விமர்சிக்கப் பெரியாரை இழுக்கவே வேண்டாம் (போற்றியோ, தூற்றியோ) என்பது என் கருத்து.


      • பெருமாள் முருகனின் எழுத்துகளைப் போலவே பெரியாரும் சிலபல கருத்துகளை முன்வைத்திருக்கிறார். இவை விமர்சனத்துக்கப்பாற்பட்டவையல்ல. எனவே இவற்றை இந்த தருணத்தில் சுட்டிப் பேச எல்லா நியாயங்களும் உண்டு. இதில் ‘இழுப்பது’ ’தூற்றுவது’ என்று எதுவும் கிடையாது. அப்படி நீங்கள் கருதுவது உங்கள் வழிபாட்டுணர்ச்சியையே காட்டுவதாக இருக்கிறது.

        ஒப்பற்ற சமூகச் சீர்திருத்தவாதி என்று விதந்தோதப்படுபவரின் கருத்துகளும் செயல்பாடும் அந்த சமூகத்தின் இன்றைய நிலையை ஆய்வதன்மூலமே விமர்சிக்கப்படவேண்டும்; படும். வழிபாடு அதிகாரத்தைப் பேணக்கூடியது; விமர்சனம் பொது விழுமியங்களைப் பேணக்கூடியது. இது ஈவெரா காலத்தில் உண்மையாக இருந்தால் இப்போதும் உண்மையாகவே இருக்கிறது.

      • சரவணன் Says:

        பெரியாரை நான் வழிபடவில்லை. கண்டிப்பாக அவரை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அதே சமயம் தமிழ்ச் சமூகத்துக்குப் பெரியாரின் ஒட்டுமொத்த பங்களிப்பு என்பது (குறிப்பிட்ட உரை அல்லது கட்டுரைகள் மீதான விமர்சனங்களைத் தாண்டி) நேர்மறையானது என்று கருதுகிறேன். இதற்குப் பெரியாரை வழிபடுபவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

      • Yayathi Says:

        திரு. சரவணன் அவர்களே, ஈ.வே.ரா. சொன்னார், “பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டு பார்ப்பானை அடிக்கனும் ” – பாம்பை விட்டு பார்ப்பானை அடிக்க அலைந்ததில் பாம்பு (சாதியியம் ) வளர்ந்து விட்டது . இன்று தமிழகத்தில் பார்ப்பனர்களை விட சாதியியமே (இதன் பெயர் பெரியாரியம், பார்ப்பனியம் அல்ல) மேலோங்கி நிற்கிறது. இந்த சாதியிய பாம்புதான் பல தலைகள் (சாதிகள்) எடுத்து ஆடுகிறது.

        எவ்வாறு வரலாற்று சாதியியத்தின் தலைமையாக பார்ப்பனர்கள் விமர்சிக்க பட்டார்களோ, அது போல தற்போதைய சாதியியத்துக்கு தலைமையாக ஈ.வே.ராவும் திராவிட கழகங்களும் விமர்சிக்கப்படுவார்கள், விமர்சிக்கப்படவேண்டும்.

      • poovannan73 Says:

        அன்புள்ள சரவணன்

        ஒத்திசைவு ஐயா,கல்யாணராமன் ஐயா ,யயாதி ஐயா தெளிவாக விளக்கியும் உங்களுக்கு விளங்கவில்லையா

        உலகத்திலேயே மோசமான பகுதி தமிழ்நாடு -காரணம் பெரியார்

        உலகத்திலேயே மோசமானவர்கள் தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக வசிக்கும் இடைநிலை சாதியினர் தான் -காரணம் பெரியார்

        எவ்வளவு ஆதாரங்களை அவர்கள் இந்த கூற்றை நிரூபிக்க அடித்து விட்டும் உங்களுக்கு புரியவில்லையா

        எடுத்துகாட்டாக காந்தி மண் குஜராத்தை எடுத்து கொள்வோம்

        200 பேருக்கு மேல் இருந்த ரயில்வே கோச் தீ பற்றி கொள்ள வலிமையான சேவக்குகள் அடித்து பிடித்து கொண்டு 150 பேருக்கு மேற்பட்டோர் தப்பித்து கொள்ள மற்றவர்கள் அதில்சிக்கி உயிர் இழந்த நிகழ்வுக்கு ஏதாவது எதிர்வினை இருந்ததா -அது காந்தி மண்,காந்தியினால் கிடைத்த நன்மை.1947 பிறகு குஜராத்தில் ஒரு மத,சாதி கலவரம் நடந்ததா

        நேரு மண் காஷ்மீருக்கு வருவோம்.16 ஆண்டுகள் பிரதமராக இருந்த காஷ்மீர பண்டிதர் அவர்களின் மதசார்பின்மை கொள்கைகளுக்கு எடுத்த்காட்டாக அவர் மண் காஷ்மீர் திகழ்வதை போலவா இருக்கிறது சீரழிந்த தமிழ்நாடு

        ஒவ்வொருவர் மண்ணாக பார்ப்போம்.தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே மோசமான மாநிலம்,உலகத்திலேயே மோசம் என்று எத்தனை ஆயிரம் தரவுகளை அவர்கள் அள்ளி கொட்டுகிறார்கள்.இன்னுமா நீங்கள் பெரியார் என்று சொல்ல முற்படுகிறீர்கள்


      • பூவண்ணன் அவர்களே வருக! நிலையான காட்சி தருக!!

        இத்தனை நாள் எங்கே அய்யா போயிருந்தீர்கள்? உங்களைப் பிரிந்துவாடி, எனக்குப் பசலை நோயே வந்துவிட்டது!

        ஆனால் பாவம், சரவணன் அவர்களை விட்டுவிடவும்.

  8. க்ருஷ்ணகுமார் Says:

    \\ ஒரு டிக்ஷனரி மூலமாக மட்டுமே பல விஷயங்களை அணுகமுடியாது அல்லவா? ஸம்ஸ்க்ருதத்தில் – பலவகைகளில், பேச்சுவழக்குகளில், தொன்மங்களில் இந்த குறியீட்டு விரிவாக்கல் (~symbol overloading) இருக்கிறது என்றார். \\

    எனக்குப் பரிச்சயமான வித்வான் களிடம் நானும் இப்படிக் கேட்டிருக்கிறேன்.

    ம்……… நம் தொன்மத்துடைய வீச்சினைக் கூட மேற்கத்திய டிக்ஷ்னரி மூலம் தெரிந்து கொள்ள விழைவதை நினைக்கும் போது சற்று லஜ்ஜையாகவும் இருக்கிறது.

    விஸ்தாரமான விளக்கத்துக்கு நன்றி ராம். அட்வான்ஸ் நன்றி……. இப்படி சந்தடி சாக்கிலே சித்பவன் காரரைப் பற்றித் தாங்கள் சொல்ல விழையும் சஸ்பென்ஸுக்கும் சேர்த்தியே.

    கே.எம் சொன்ன கருத்தை நானும் பல முறை வாசித்தேன்.

  9. பெரியார் தடி Says:

    தற்கால ஆங்கில அறிவோடு ஷேக்ஸ்பியர் படித்த கதையாக எங்க அய்யாவை தற்கால தற்குறி பார்வையில் சில குளுவான்கள் பாத்து குறை சொல்லுது.இதெல்லாம் இதுகளுக்கு எப்படி சொன்னாலும் விளங்காது என்பதே உண்மை.காரணம் பார்ப்பன இந்து மதத்தில் அரைவேக்காட்டு உளறல்கள் எதுவும் இல்லை.

    • பெரியார் தடி Says:

      இந்து மதத்தில் அரைவேக்காட்டு உளறல்கள் தவிர* எதுவும் இல்லை

  10. க்ருஷ்ணகுமார் Says:

    அன்பின் ஸ்ரீ சரவணன்

    சாதுர்யமான ………… த்ராவிட இயக்கத்துக்குப்பொருத்தமில்லாத படிக்கான……….. தங்களது கண்ணியமான வாதங்களுக்கு வாழ்த்துக்கள்………

    மற்ற கட்சிகளிலும் தரக்குறைவாகப் பேசும் பேச்சாளர்கள் உண்டு தான்………… அவர்களெல்லாம் இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலைப் பேச்சாளர்கள்……

    ஆனால் தரக்குறைவான, ஆபாசமான பேச்சுக்களாலேயே தொண்டர் படை என்னும் குண்டர் படையை உருவாக்கிய தலைமையைக் கொண்ட தனிப்பெரும் சிறப்பைப் பெற்றது த்ராவிட இயக்கம் என்பதைத் தாங்கள் மறுக்கமாட்டீர்கள் என எண்ணுகிறேன்.

    அதன் உச்சத்தில் இருப்பவர் த்ராவிட மடத்தின் ஆத்ய மடாதீசரான ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் காரு.

    ஆபாசம் என்பதன் இலக்கணத்தை இந்த மடாதீசரிடமிருந்து கற்ற சிஷ்யப்பிள்ளைகள் தானே ஸ்ரீலஸ்ரீ அண்ணாத்துரை முதலியாரும் ஸ்ரீலஸ்ரீ தக்ஷிணாமூர்த்திகாரு அவர்களும்.

    த்ராவிட ஆபாசத்தின் வித்து ராமசாமி நாயக்கர் அவர்களே.

  11. ganpat73 Says:

    என்ன கொடுமை சரவணன் இது

    யயாதி ஐய்யா எவ்வளவு தெளிவாக தமிழ்நாடு ஏன் இப்படி மோசமாக இருக்கின்றது என்பதை விளக்கி விட்டாரே. பெரியார் பிராமணர்களை திட்டியதால் அவர்கள் கோவித்து கொண்டு சாதியை ஒழிக்காமல் விட்டு விட்டு ,இடைநிலை சாதிகளின் ஆதிக்கத்தில் அனைவரும் துன்பங்களை அனுபவியுங்கள் என்று விட்டு விட்டார்கள்

    பெரியார் பாதிப்பு இல்லாத ராஜஸ்தான்,உதர்ப்ரதேசம்,பீகார்,குஜராத் போன்ற மாநிலங்களில் எல்லாம் இடைநிலை,கடைநிலை,முதல்நிலை சாதிகள் வன்முறை என்ற பேச்சுக்கே இடம் கொடுக்காமல்,தீண்டாமை என்றால் என்னவென்றே அறியாத நிலை உருவாகி இருக்கிறது. பெண் கல்வி,கைம்பெண் மணம்,பெண்களுக்கு எழுத்தாளர்களுக்கு அங்கு இருக்கும் உரிமைகள் எல்லாம் பார்த்து ஐரோப்பாவே அசந்து போய் இருக்கிறது.

    இது மட்டுமா அங்கு யாரும் திட்டாமல் இருந்ததால் பிராமணர்கள் சாதியையே ஒழித்து விட்டார்கள்.

    பெரியார் என்ற மனிதர் இங்கு இல்லாமல் இருந்திருந்தால் நாம் ஒரு குஜராத்தாக,ராஜச்தானாக இருந்திருப்போம் என்பதில் துளி கூட சந்தேகம் கிடையாது.எப்படி இருந்திருக்க வேண்டிய நாம் அவரால் இப்படி ஆகி விட்டோம்


  12. நாம் ராஜஸ்தான், குஜராத் போல இல்லாததற்கு பெரியார் மட்டுமே காரணம் என்பதும், பெரியார்தான் நம்மை அந்த அவலத்திலிருந்து ’காப்பாற்றினார்’ என்பதும் தமிழர்களின் வரலாற்றை விரிவாக அறியாதவர்களின், அறிந்துகொள்ள விரும்பாதவர்களின், பரப்புரை மட்டுமே.

    இந்தப் பரப்புரையும் இன்றைய ஆதிக்க அமைப்புக்கு வக்காலத்து வாங்கும் ஒரே நோக்கத்துடன் மட்டுமே செய்யப்படுகிறது என்பது தெளிவு.

    நான் ஏற்கெனவே சொல்லியிருப்பதுபோல பெரியாரின் ’ஒட்டுமொத்த பங்களிப்பை’ மதிப்பிடுவது இன்றைய தேதியில் தலைபோகிற விடயமன்று. இன்றைய தமிழ்நாடும் இங்கு நிகழ்ந்தேறுகிற ஆதிக்க வன்முறைகளும், அநீதியும், சுரண்டலும்தான் நாம் எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்.

    இந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்முகமாக ’பெரியார் நம்மை உய்வித்துவிட்டார். இங்கு எல்லாமே அற்புதம். குஜராத், ராஜஸ்தான் மட்டும் என்ன வாழ்ந்தது/” என்று சல்லியடிப்பவர்கள், பெரியாருக்கு மட்டுமல்ல, சமூக சீர்திருத்தவாதிகள் என்று அறியப்படுகிற எந்த மனிதருக்கும் சீடராக இருக்கும் தகுதியற்றவர்கள்.


    • நன்றி. என் கருத்து என்னவென்றால்:

      தமிழகத்தின் வளர்ச்சி என்பது திராவிட இயக்கத்தின் முயக்கங்களையும் மீறித்தான் நடந்திருக்கிறது என்பேன். இதற்குக் காரணம் மக்களின் அடிப்படை நேர்மையும், உழைப்பும்தான்.

      யோசித்துப் பாருங்கள் – திராவிட முயக்கம் இல்லாமலிருந்திருந்தால் நாம் மேலதிகமாக எவ்வளவு உச்சங்களை எட்டியிருப்போம் என்றூ?

      • poovannan73 Says:

        பெரியார் தான் பெருமாள் முருகன் புத்தகம் மீதான எதிர்ப்புகளுக்கு காரணம்,அவரால் தான் இடைநிலை சாதியினர் வேறு எங்கும் இல்லதபை இங்கு மட்டும் வன்கொடுமைகளில் புகுந்து விளையாடுகின்றனர் என்று வாய் கூசாமல் பேசி விட்டு ,அடித்து விடுவதை விட வன்மம் வேறு உண்டா.

        பெருமாள்முருகனை விட பலமடங்கு கடவுள்களை,சாதியின் பழக்கங்களை,குல வழக்கங்களை உள்ளது உள்ளபடி வெளியில் போட்டுடைத்து,அதன் அவலங்களை பேசியவர் பெரியார்.சாதி சங்க பத்திர்க்கைகள்,சாதிசங்க தலைவர்கள்,சாதிவெறியர்களின் முதல் எதிரி பெரியார் தான்

        ராஜஸ்தானை விட்டு விடுவோம் அருகில் உள்ள கர்நாடகம்,ஆந்திரத்தில் பெண் கல்வி,தொழில் முனைவோரில் பெண்களின் பங்கு,அரசியல் அதிகாரத்தில் பல்வேறு பீரிவினரின் பங்கு என்பதனை ஆராயலாமே.எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் தமிழ்நாடு தான் மிக மோசமான மாநிலம் ,அதற்க்கு முழு காரணம் பெரியார் தான் என்பவர்கள் உலகத்திலேயே அனைத்துவிதமான பதவிகள் மட்டுமல்ல,அனைத்திலும் சீடனாக அல்ல தலைமை பொறுப்பே வகிக்க தகுதி கொண்டவர்கள் என்பதை மறுக்க முடியுமா

  13. poovannan73 Says:

    ?தகுதி இல்லாதவர்களுக்காக தானே ஐயா பெரியார் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்.

    அவரை பற்றி பேசாதே என்று சீரும் அறசீற்றம் I Like it

    யார் எதற்கு தகுதி

    யார் யார் எது எதற்கு தகுதியற்றவர்கள் என்று தீர்மானிக்கும் உரிமை 2014இல் கூட இருக்கும் போது பெரியார் என்ன கிழித்தார் எனபது நியாயமான கேள்வி தான்

    பெருமாள் முருகன் பிறந்த சாதி கொங்கு வெள்ளால் கௌண்டர்.அவர் சாதி கடந்து எழுத்தாளராக உருவாக,எழுத துளி கூட பெரியார் காரணம் கிடையாது.ஆனால் அவர் மீது வரும் முழு எதிர்ப்பிற்கு பெரியார் தான் காரணம் எனும் அற்புத கண்டுபிடிப்பு ,அந்த தகுதி எந்த காலத்திலும் வரகூடாது என்பதை விட வேறு என்ன வேண்டுதல் இருக்க முடியும்

  14. க்ருஷ்ணகுமார் Says:

    பேரன்பிற்குரிய ஸ்ரீமான் பூவண்ணன்

    \\ ஒவ்வொருவர் மண்ணாக பார்ப்போம்.தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே மோசமான மாநிலம்,உலகத்திலேயே மோசம் என்று எத்தனை ஆயிரம் தரவுகளை அவர்கள் அள்ளி கொட்டுகிறார்கள். \\

    செல்லாது. செல்லாது. செல்லாது. நாட்டாம தீர்ப்ப மாத்துங்க.

    ரெண்டு நா முந்தி காக்கா வீட்டாண்ட கத்தின போதே பகுத்தறிவு பூர்வமாக இங்க பதிவு போட்டுட்டேன். பூவண்ணன் சார் பதிவு போடப்போறாருன்னு.

    ராம் நீங்க இவ்வளவு எழுதுறீங்க. இன்னும் பூவண்ணன் சார் இதுக்கு பதில் போடலன்ன அவரோட பதிலெல்லாம் ஸ்பேம் ஃபோல்டர்ல் போயாச்சான்னு பாருங்கன்னு. தாஸாம் ஆவிரபூத் ……… என ஆஜராகி விட்டீர்கள். வாழ்க வளமுடன்.

    இப்படி வாராத வந்த மாமணியான தாங்கள் உரல் உலக்கை இல்லாமல் நிராயுதபாணியாக இருப்பதை ஏற்கவே முடியவில்லை.

    தெற்கு சீமையில் தேவர்-பள்ளர் வடக்குத் தமிழகத்தில் வன்னியர் மற்றும் தலித் சஹோதரரிடையே பாசம் பொங்கித் தமிழகத்தில் அமுத ஊற்று பொங்கிப் பெருகுவதற்குக் காரணம் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இல்லை. இல்லை. இல்லவே இல்லை. பார்ப்பனீயம் தான் காரணமுன்னு இவிங்க யாருக்கும் தெர்ல சார். நீங்க வெளக்கமா வெவரமா ரெண்டு உரலால அடிச்சாத் தான் கள கட்டும்.

    வாழ்க உரலாயுதம்.

    • poovannan73 Says:

      அன்புக்கும் மரியாதைக்கும் உரிய கிருஷ்ணகுமார் ஐயா

      நீங்கள் மற்றும் ஒத்திசைவார் தான் என்னை மறந்து விட்டீர்கள்.அந்த துயர் தாங்காமல் சற்று காலம் பணியே கதி என்று இருந்தேன்.கோத்ரா பற்றி எழுதியதற்கு கோவம் கொண்டு பொங்கி கிழிக்கிறேன் பார் என்று பொங்கியவர் அது கடினம் என்பதால் ஒதுங்கி கொண்டதை போல நீங்களும் திண்ணையில் ஷா பானு மற்றும் ஜசொதா பென் அவர்களை ஒப்பிட்டு ?தரவுகளோடு எழுதிய ,ஷா பானுவை விட பல மடங்கு துன்பத்தை அனுபவித்து கொண்டு இருப்பவர் ஜசொதா பென்,அதற்க்கு காரணம் இந்து மதம் போன்றவற்றை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டீர்களே

      http://puthu.thinnai.com/?p=27775

      இன்றும் பெண் சிசு/கருகொலைக்கும் எனக்கு பிடித்த மாட்டு கறி உணவை இணைத்து பல ?தரவுகள்/மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகளை வைத்து பதிவு எழுதி இருக்கிறேன்.சைவர்கள் தான் இந்தியாவிலயே பெண் கருகொலையில் பல படிகள் மேலே முன்னணியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.எவ்வளவு வகையான மாமிசம் அதிகம் உண்ணும் பழக்கமோ அங்கு தான் பெண்கரு கொலை மிக மிக குறைவு என்று(திண்ணையில் வருமோ வராதோ தெரியாது. எது ஆண்ட சாதி என்று பதிவு அனுப்பினேன்.இன்றுவரை கிணற்றில் போட்ட கல் தான் )அபப்டி வந்தால் தயவு செய்து வந்து என்னை உங்கள் அன்பால் குளிப்பாட்டுங்கள்.


      • ஒப்பாரி வைக்கவேண்டிய நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டுள்ளதைப் பார்த்தால், பாவமாகவே இருக்கிறது.

        “கோத்ரா பற்றி எழுதியதற்கு கோவம் கொண்டு பொங்கி கிழிக்கிறேன் பார் என்று பொங்கியவர் அது கடினம் என்பதால் ஒதுங்கி கொண்டதை போல”

        :-)

        அய்யா, ஒதுங்கிக் கொள்ளவில்லை. நேர மேலாண்மைப் பிரச்சினைதான்.

        உங்கள் கோத்ரா பற்றிய கருத்தபத்தங்களை (தமிழ்பேப்பர் தளத்தில் வந்திருந்தது என நினைக்கிறேன்) எதிர்கொண்டு எழுத ஆரம்பித்து அது 100கிமீ தொலைவில் மையம் கொண்டிருக்கிறது. கூடிய சீக்கிரம் தாக்கும்.

        மேலொருவிஷயம்: தாங்கள் கருத்துத் தெளிப்பு விஞ்ஞானியாக பலகாலமாய் அயராது பணி செய்துவருகிறீர்கள். நன்றி. ஆனால் – நீங்களாக வந்து மூக்கை நுழைத்து ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட் குஞ்சாமணிகளுக்கு ஆதரவாகக் கருத்துதிர்த்தபோது, நான் சில அடிப்படைக் கேள்விகளைக் கேட்டிருந்தேன் அல்லவா? அவற்றுக்கு பதில் எங்கே?

        போராட்டங்கள் – சில கேள்விகள், உரையாடல்கள் 29/03/2013
        https://othisaivu.wordpress.com/2013/03/29/post-186/

        அய்யா, இரண்டு வருடங்கள் ஆகி, அதற்கு இரண்டாம் வருடக் கருமாந்திரமும் நடக்கும் சூழலில், தாங்கள் தங்கள் கடைக்கண் பார்வையை இதன்மீது வீசக் கூடாதா?

        மற்றபடி, வழக்கம்போல ஜமாயுங்கள். :-)))


  15. பூவண்ணன் அவர்களே:

    உங்களுக்கு புரிந்துகொள்வதில் பிரச்சினை போல :)

    தமிழ்நாட்டில் இன்று நிலவும் ஆதிக்க வன்முறைகள், அநீதி மற்றும் சுரண்டல்கள் இவற்றை விமர்சிக்காமல், இத்தகைய விமர்சனங்கள் எழுந்த உடனேயே பெரியாரின் பெயரைச் சொல்லி வழிபடச் சொல்வது வெளிப்படையான தந்திரம் என்பதுதான் என் நிலைப்பாடு. பெரியார் வழிபாட்டின் மூலமாக இன்றைய அதிகாரத்துக்கு வக்காலத்து வாங்கப்படுகிறது. இன்று எந்த புகழ்பெற்ற பெரியாரிஸ்டும் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது உடனே புலப்படும் விஷயம். (இதை நீங்கள் ஏற்காவிட்டால் பரவாயில்லை.)

    இப்படி அதிகாரத்துக்கு துணைபோகிறவர்கள் சமூக சீர்திருத்தவாதிகளைப் போற்றிப் பேசுவதற்குத் தகுதியற்றவர்கள் என்பதும் என் நிலைப்பாடு.

    எனவே, தகுதியில்லைன்னு சொல்லிட்டான் என்றெல்லாம் மாய்மாலம் செய்யவேண்டாம். எனக்கு சமூக அதிகாரமெல்லாம் கிடையாது. நான் எதைச் சொன்னாலும் சாதி அடையாளத்தைச் சொல்லிப் புறந்தள்ளும் சூழலும் அதிகாரமும்தான் இங்கிருக்கிறது. எனவே ஓவராக நடிக்காதீர்கள்.

    இறுதியாக, மற்ற பின்தங்கிய மாநிலங்களுடன் ஒப்பிட்டு தமிழ்நாட்டின் நடைமுறையாக இருக்கும் சாதிய ஆதிக்கத்தை நியாயப்படுத்துகிறீர்கள். தெரியாமல்தான் கேட்கிறேன். சுயமரியாதை இயக்கம் தோன்றியபோது வடக்கே பிராமண ஆதிக்கம் இங்கிருந்ததை விட மோசமாக இருந்தது. அந்த வகுப்பினர் மக்கட்தொகையிலும் விகித அளவில் அதிகமாயிருந்தனர், சொத்துரிமையும் பெற்றிருந்தனர்; அதனால் கூடுதல் வலிமை பெற்றிருந்தனர். இருந்தும் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து இங்கே இயக்கம் நடத்தப்பட்டதல்லவா? அதைவிட இங்கே எவ்வளவோ மேல் என்றெல்லாம் வழக்குரைகள் முன்வைக்கப்படவில்லை.

    அந்த இயக்கம் அரசியலிலும் வெற்றியடைந்து ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றியது. இப்போது இடைநிலைச் சாதியினரின் சாதிப் பெரும்பான்மைவாத ஆதிக்கத்தை எதிர்த்து எழும் குரலும் அது போன்றதுதான் (ஆனால் சிறுபான்மையினரை துவேஷிப்பதில்லை; பெரும்பான்மை அதிகாரத்தை எதிர்ப்பது). இதனால் உபியைப் பார், தமிழ்நாட்டின் இன்றைய சாதியம் வெறும் தக்காளி சட்னி என்று டூப் விடாதீர்கள். அதற்கு பெரியாரின் திருவுருவையும் துணைக்கழைக்காதீர்கள்.

    இதை சர்வநிச்சயமாக நீங்கள் புரிந்துகொள்ளப் போவதில்லை. இதைப் படிக்கப்போகும் மூன்றாம் நபர்களுக்காகவே இதை எழுதியுள்ளேன்.

    நன்றி.

    • poovannan73 Says:

      அன்புள்ள கல்யாணராமன் ஐயா

      நானும் இதையே தானே சரவணன் அவர்களுக்கு சொன்னேன்.தமிழ்நாட்டில்,இந்தியாவில் ,அணைத்து கண்டங்களிலும் என்ன நல்ல மாற்றங்கள் நடந்தாலும் அதற்க்கு அன்றும் இன்றும் என்றும் காரணம் பிராமணர்கள்.என்ன மோசமான சம்பவங்கள் நடந்தாலும் அதற்க்கு காரணம் பெரியார் மற்றும் அவரது தகுதியான ,தகுதியற்ற சீடர்கள் என்று ராமஜெயம் போல தினமும் எழுதி கொண்டு வந்தால் அனைத்து மாற்றங்களும் ஏற்பட்டு விடும் என்று தானே சொன்னேன்

      நல்ல வேளை குஜராத்தில் பல நூறு கிலோமீட்டர் சுற்றளவில் தேடி தேடி இஸ்லாமியரை கொலை செய்ததற்கு (ஒத்திசைவார் கூட அறசீற்றம் கொண்டு கர்ப்பிணி பெண்ணை வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்தனர் என்று எழுதியதை பொய் என்று கண்டித்த பதிவில் நீதிமன்ற தீர்ப்பு,சவ பரிசோதனை சான்று போன்றவற்றை வைத்து குத்தி கொலை செய்பட்டு பின் எரிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் தான் குழந்தை இருந்தது ,வெளியே எடுக்கப்படவில்லை என்பதை ஏற்று கொண்டார்)காந்தி தான் காரணம் என்று சொல்லும் அறிவுஜீவிகள் இல்லை என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டியது தான். ஈச்லாமியர்கள் என்ன அடித்தாலும் இன்முகத்தோடு ஏற்று கொள்ளுங்கள் என்று அவர் சொன்னதால் தான் ஈச்லாமியர்கள் மீது இந்த வன்மம் ஏற்பட்டது என்று அலசி ஆராய்ந்து நாட்டாமையாக தீர்ப்பு கூறும் குஜராத்தியர்கள் இல்லையா அல்லது அவர்களின் தீர்ப்புகள் கண்ணில் படவில்லையா என்று தெரியவில்லை

  16. poovannan73 Says:

    1920 இல் மற்ற மாநிலங்களில் அரசியலில்,வேலைவாய்ப்புகளில் பிராமணர்களின் பங்கு ,மற்றும் தம்ஜிகாணட்டில் என்ன பங்கு என்பதை பற்றி தரவுகளோடு ஆராயலாமா ஐயா

    கடந்த 67 ஆண்டுகள் மற்றும் இன்றும் தொழில்துறை ,அரசியல் முதல் பி சி சி ஐ(குஜராத் மாநிலத்தில் மோடி செய்த அற்புத மாற்றங்களில் கிரஈச்கட் சங்க தலைவராக இ2009 முதல் இருந்து இன்று அந்த பொறுப்பை அமித் ஷா அவர்களிடம் ஒப்படைத்து உள்ள மோடியின் சாதனைகளை ஒத்திசைவு ஐயா உட்பட எந்த பரிவாரமும் இன்றுவரை சொல்ல மறந்ததால் நினைவுபடுத்த அதையும் சேர்த்து கொள்கிறேன்),பத்திர்க்கை,சட்ட துறை போன்றவற்றில் தமிழ்நாட்டில் பிராமணர்களின் சதவீதத்தை மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்க்கலாமே சார்.

    • poornam Says:

      அன்புள்ள பூவண்ணன்,
      டோண்டு அவர்களின் தளத்தில் முன்பொரு முறை நடந்த விவாதம் தங்களுக்கு நினைவிருக்கிறதோ என்னமோ, அங்கே நான் சொன்ன கருத்தை மீண்டும் சொல்கிறேன், கண்ணெதிரே தெரியும் ரிஸல்ட் திருப்தி தராத போது உங்களது புள்ளி விபரங்கள் அலுப்பூட்டுகின்றன. (நம் தமிழினத் தலைவருக்குக் கூட இந்த வழக்கம் உண்டு. தமிழகத்தில் 3 மணி நேரம் மின் வெட்டு என்றால் போன ஆட்சியில் 4 மணி நேரம் இருந்ததே என்பார். தமிழகத்தில் அரிசி விலை 2 ரூபாய் ஏறிவிட்டதே என்றால் ஆந்திராவில் 2.25 பைசா ஏறியிருக்கிறது என்பார்.)
      பொருளாதார விஷயங்களில் எப்படியோ சமூகப் பிரச்சினைகளில் புள்ளி விபரங்களை நம்பிக் கொண்டு தொங்கிக் கொண்டிருப்பதால் யாருக்கு எவ்வளவு பலன் என்று புரியவில்லை. உதாரணமாக, போன வருஷம் ஜாதிக்கலவரத்தில் செத்தவர்கள் 100 பேர். இந்த வருஷம் வெறும் 98 பேர்தான் என்று புள்ளி விபரங்கள் சொன்னால் – 98 வேண்டாம் 50 என்றே வைத்துக்கொள்வோமே – இந்த வருஷம் ஜாதிக்கலவரத்தில் வெறும் 50 பேர்தான் செத்துப்போனார்கள் என்று சந்தோஷப்படுவதில் உள்ள அபத்தம் உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். சமூக விஷயங்களில் கண்ணுக்கு நேரே தெரிகிற அநீதிகளைக் களைவைதை விட்டுப் புள்ளிவிபரங்களைப் பார்த்துப் புளகாங்கிதம் அடைவதைப் பார்க்கும்போது எனக்கு எப்போதுமே பரிதாபமாக இருக்கிறது.
      ஒரு விஷயம் பற்றிய புள்ளி விபரங்கள் காட்டத் தேவைப்படுகின்றது என்றாலே அதில் பிரச்சினை இருக்கிறது என்றுதான் பொருள். ஆரோக்கியமான மனிதனுக்கு யாரும் மணிக்கொரு முறை தெர்மாமீட்டர் வைத்துப் பார்ப்பதில்லையே? காய்ச்சல் என்று வந்தால்தானே ஒரு மணி நேரம் முன்னால் எவ்வளவு, இப்போது எவ்வளவு என்று தெரிந்துகொள்ள அவசியப்படுகிறது?
      பெரியார் பிறக்காத மாநிலங்களில் நடக்கிற ஒன்று இங்கு அறவே இல்லை, அல்லது 0.1% அல்லது 0.2% நடக்கிறது என்று சொன்னால் புண்ணியம். ஆனால் நீங்கள் வழக்கமாகக் காட்டும் புள்ளி விபரங்கள் பெரியார் பிறக்காத மாநிலங்களில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் வருடத்துக்கு 3456 இங்கு வெறும் 2287, அங்கு பிராமணர் ஆதிக்கம் 20.8743% இங்கு வெறும் 18.25672% என்கிற ரீதியில் இருக்கும். இது அரைக்கிணறு / முக்கால் கிணறு தாண்டிவிட்டேன் என்கிற கதையாக அல்லவா இருக்கிறது? பெரியார் பிறந்ததனால் ஒரேயடியாக சாதி என்கிற விஷயமே இங்கு இல்லை என்றாகியிருந்தால் அவரது ஒட்டுமொத்தப் பங்களிப்பைப் பற்றி வாய்கிழியக் கத்த வேண்டிய வேலையே அவரது அடிபொடிகளுக்கு இருக்காது. அவரது பெருமையை சரித்திரம் தானே பேசும்.
      ரிஸல்ட் கண்ணுக்கெதிரே தெரியும்படியாக சாதியம் அடியோடு ஒழிந்தால் இந்த மாதிரி அரைக்கால் வீசம், கால் அரைக்கால் வீசம் என்கிற பழங்கணக்குகளுக்கு அவசியமே இருக்காது. சாதியம் பற்றிக் காட்டப் புள்ளிவிபரங்களே இல்லாத- இன்னும் சொல்லப்போனால் அதற்கு அவசியமே இல்லாத நாள் வந்தால் அது பெரியாரின் சாதனை என்று சொல்லுங்கள், ஒப்புக்கொள்கிறேன்.

      • poornam Says:

        //பெரியார் பிறக்காத மாநிலங்களில் நடக்கிற ஒன்று இங்கு அறவே இல்லை, அல்லது 0.1% அல்லது 0.2% நடக்கிறது என்று சொன்னால் புண்ணியம்.//
        0.01% 0.02% என்று இருக்க வேண்டும். தவறுக்கு மன்னிக்கவும்.

  17. poovannan73 Says:

    அன்புள்ள பூர்ணம் சார்

    உங்கள் கூற்றுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.நான் ஒரு அல்லோபதி மருத்துவன் என்பதால் மருத்துவத்துறையை வைத்து முயற்சிக்கிறேன்

    புற்று நோய் என்றால் மரணம் தான் என்று நம்பும் மக்கள் இன்றும் அநேகம்.அவர்களிடம் பேசும் போது இப்போது இந்தியாவில்,தமிழ்நாட்டில் ஆணுறுப்பு புற்று நோய் ,ரத்த புற்றுநோய் போன்றவற்றில் 95 சதவீதம் நோயாளிகள் முழு குணம் அடைந்து விடும் நிலை இருக்கிறது , கர்ப்பப்பை புற்றுநோய் ,மார்பக புற்றுநோய் போன்றவற்றில் 70 சதவீதத்திற்கு அருகில் முழு குணம் அடையும் நிலை இருக்கிறது,அடையாறு கான்செர் மருத்துவமனை,CMC வேலூர் ,அண்ணா புற்றுநோய் மருத்துவமனை போன்றவை இருக்கும் மாவட்டங்களில் ,சுற்று பகுதிகளில் குணமான நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம்.,மற்ற இடங்களோடு,மாநிலங்களோடு ஒப்பிடும் போது ஏழைகளும் இலவச வைத்தியம் மூலம் புற்று நோய் தாக்கினாலும் குணமாக வாய்ப்புகள் தமிழ்நாட்டில் அதிகம் என்றால் அது தவறா

    இன்றும் ஐந்து சதவீதம் மக்கள் சில வகை புற்றுநோய் தாக்கினால் இறக்கிறார்களே,30 சதவீத மக்கள் வேறு வகை புற்று நோயால் இறக்கிறார்களே .அப்படி இருக்கும் போது புற்று நோயின் தாக்கம் குறைந்து வருகிறது,தமிழ்நாடு மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது அதற்கான மருத்துவ வசதிகளை பெருக்கி பாதிகப்பட்ட மக்கள் குணமாக அதிக வாய்ப்புகள் உள்ள சூழலை உருவாக்கி உள்ளது என்று சொல்வது சரியா என்று கேட்கிறீர்கள்.சாதியும் ஒரு புற்று நோய் தான்

    எனக்கு தெரிந்தே கேரளாவை சேர்ந்த இரு நண்பர்கள் ஆண் குழந்தை வேண்டும் என்று முதலில் பெண் பிறந்ததால் அடுத்தடுத்து கருவில் என்ன குழந்தை என்பதை அறிந்து கலைத்த நிகழ்வுகள் நடந்துள்ளன.அதனை வைத்து கேரளாவில் தான் 0-6 ஆண் பெண் குழந்தை சதவீதம் அதிகம்.மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி என்று சொன்னால்,அது தவறு ,அங்கும் பலர் பெண் சிசு என்பதை அறிந்து கருவை கலைக்கும் செயல் உண்டு என்பதால் 1000-960 இருக்கும் கேரளாவும் (தமிழ்நாடு 946) 1000-886 இருக்கும் குஜராத்தும் ஒன்று தான் என்று வாதிடுவது நியாயமான நிலையா

    • poornam Says:

      புள்ளி விபரங்கள் இல்லாமல் உங்களால் வாதிடவே முடியாதா பூவண்ணன் ஐயா?
      உங்கள் வாதத்தையே எடுத்துக்கொள்ளலாம். கேரளாவும் குஜராத்தும் சமமில்லைதான். ஆனால் கேரளாவிலும் ஆண்- பெண் சமநிலை இல்லை என்பதுதானே உண்மை?
      அந்த 1000க்கு 960 என்பது 1000க்கு 1060 என்று ஆனபின்னால்தான் பெருமைப்பட இடமுண்டு அதுவரை 960க்கோ 980கோ பெருமைப்படுவது உள்ளார்ந்த அபத்தமுள்ளது என்பது என் வாதம்.

      உதாரணமாக பெரியார் பிறந்த தமிழகத்தில் இன்னும் தனி டம்ளர் முறை இருக்கிறதே என்றால் குஜராத்தை விடக் குறைவாக இருக்கிறது அங்கே 40% இருக்கிறது, இங்கே 20% என்கிற ரீதியில் உங்கள் பதில் இருக்கும். 40 ஐவிட 20 குறைவு என்பது என்ன விதமான ஆறுதல்?

      வேறு ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு வாகனம் ஓடவில்லை. காரணங்களை ஆராய்ந்தால் ஒரு வீல் பங்க்சர். நம் வாகனம் பங்க்சராகி விட்டதே என்றால் பக்கத்து வாகனத்தில் ரெண்டு, எதிரே நிற்பதில் மூன்று, பின்னால் நிற்பதில் 4 பங்க்சர். இதைப் புள்ளி விபர ரீதியாகப் பார்த்தால் மற்றவற்றை விட நம் வாகனம் ஓட வாய்ப்புகள் 2 மடங்கு/ 3 மடங்கு அதிகம் என்று பெருமைப்பட்டுக்கொண்டால் என்ன பலன்? ஒரே ஒரு வீல் பங்க்.சர் ஆனாலும் நாலு வீல் பங்க்.சர் ஆனாலும் வண்டி ஓடாது என்றால் ஓடாதுதானே?

      அதனால்தான் சமூகச் சீர்கேடுகள் பற்றிப் பேசும்போது அளவுக்கதிகமாக புள்ளி விபரங்களைப் பிடித்துக் கொண்டு தொங்குவதில் பொருளில்லை. சில விஷயங்களில் Trend எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ள உதவுமே தவிர (புற்று நோய் குணமாவது பற்றிய உங்கள் உதாரணம் இந்த வகை.) எப்போதும் அதைப் பிடித்துக்கொண்டு தொங்குவது அபத்தம் என்று தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.

      ஆனால் புற்று நோய் போல உடலைப் பீடிக்கும் தனிமனித நோய்களை விட சாதி போன்ற சமூகச் சீர்கேடுகள் பல மடங்கு கொடியது, அதனால் முன்னதில் புற்று நோய் பாதிப்பு குறைகிறது, குணமாகும் வாய்ப்பு அதிகரிக்கறது என்ற Trend மட்டுமே போதுமானது. பின்னது அப்படியல்ல. அடியோடு ஒழிப்பது ஒன்றே லட்சியமாக இருக்க வேண்டுமே தவிர அரைகுறைத்தனத்துக்குத் துளியும் இடமிருக்கக் கூடாது. வீட்டுக்குள் 10 பாம்புகள் நுழைகின்றன என்று வைத்துக்கொள்வோம் அதில் ஐந்தைப் பிடித்து அடித்துவிட்டோம், அதனால் புள்ளி விபரப்படி முன்பைவிடப் பாதி நிம்மதியாக இருப்போம் என்று இருக்க முடியுமா? இதில் Trendஐப் பார்ப்பது உதவுமா?

      சாதியோ பெண் கருக்கொலையோ வேறு எந்த சமூகத் தீமையாக இருந்தாலும் அடியோடு ஒழிந்துவிட்டால் அல்லது 0.01% அல்லது 0.02% ஆனால் சொல்லுங்கள் என்கிறேன். அப்படி ஒரு நிலை வந்து விட்டால் நாம் அந்தத் தீமைகள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கவே மாட்டோம், அதற்கு அவசியமே இருக்காது அல்லவா? பேசிக்கொண்டிருக்கிறோம் என்றாலே பிரச்சினை தீரவில்லை என்றுதானே பொருள்?

      ( எனது மேற்படிக் கருத்து புள்ளி விபரங்கள் சேகரிப்பு முறை மற்றும் interpretationஇல் நேர்மை இருக்கிறது என்ற கருதுகோளின் அடிப்படையில் சொல்வது. புள்ளி விபரங்களின் நேர்மை, அவற்றின் சரிபார்க்கப்படும் தன்மை பற்றிப் பேச்செடுக்கப் போனால் அது முற்றிலும் தனிக்கதை.)


      • ஸர்வேஷாம் பூர்ணம் பவது… ;-)

        ஸம்பூர்ண பூவண்ணாயணம் முடிந்தது. அதாவது, இந்தச் சுற்று.

        நன்றி. :-)

  18. poovannan73 Says:

    அன்புள்ள சரவணன் ஐயா

    என்னை தனியே தவிக்க விட்டு விட்டு எங்கே போய் விட்டீர்.திரு பெருமாள் முருகனின் சாதியும் நானும் புத்தகத்தை மறுபடியும் எடுத்து பார்த்தேன்.அவர் நம் கல்யாணராமன் ஐயா,யயாதி ஐயா சொல்வது போல தான் பெரியாரை வசை பாடி இருக்கிறார்

    முதல் பக்கத்தில்

    பலாத்காரத்தில் மனிதனை அடக்கச் சாதி இருக்கிறதே தவிர இயற்கையில் எங்கே இருக்கிறது? என்று கேட்ட தந்தை பெரியார் ஈ வே ரா அவர்களுக்கு

    என்று கோவத்துடன் முதல் பக்கத்தில் வேறு எந்த வார்த்தைகளும் சேர்க்காமல் பெரியாரை தான் முழுமுதல் காரணமாக காட்டுகிறார்.

  19. sevvel Says:

    மாதொருபாகன் நாவல் பற்றி பெருமாள் முருகனின் கூற்றுக்களை விமர்சானம் செய்ய தகுதி, ஆய்வு, கள-அனுபவம் உடையவர்களிடம் கருத்து கேட்க வேண்டும். அதை வீடியோ ஆவணப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது. முதலில் இதைப்பார்க்கவும். முற்போக்கு மாபியாவின் கூச்சலில் உண்மை இறந்துவிடாது..

    http://www.karikkuruvi.com/2015_04_01_archive.html


  20. […] அவருடைய ‘மரண ஸாஸனம்’ கூட்டத்துக்கு நான் நேரில் போய், பெரியாருடைய விடலைத்தனமான வெறுப்பியப் பேச்சைக் கேட்டிருக்கிறேன்கூட! டிஸெம்பர் 19, 1973 தி நகரில் நடந்த கூட்டத்தில் படுமோசமாகவும் விரசமாகவும் பேசினார் இந்த ஈவெராமசாமி – ஒரு எடுத்துக்காட்டு: “மலையாளிகளில் பெரும்பாலும் பார்ப்பானின் தேவடியாள்மகன் தான்!” இதனைக் குறித்து ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன்.) […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s