மாறன்கள், மாறவே மாட்டான்கள்!
January 24, 2015
மகாமகோ மாறன் சகோதரர்களின் ஊழல்கூத்து என்பது ஒரு தொடரும் சோகம்!
மத்திய தகவல்துறை/தொலைத்தொடர்புத் துறை ‘அமைச்சராக’ இருந்தபோது, படுகேவலமாகவும் படுமோசமான பிச்சைக்காரத்தனமாகவும் – தன் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்தே திருட்டு ‘ஸப்-கான்ட்ரேக்ட்’ ;-) எடுத்து தன் வீட்டிலிருந்தும் ஒரு எக்ஸ்சேஞ்ச்(!) நடத்திய மேதகு தயாநிதி மாறன் அவர்களின் கூத்துகள் அம்பலமாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்…
… இதேபோல குருமூர்த்தி அவர்களோ அல்லது காமன்காஸ் அமைப்பினரோ – இந்த ஸன்குழுமத்தின் ஸுமங்கலிகேபிள்விஷன்(SCV) – ரிலையன்ஸ் குழுமத்தைச் சூறையாடி, டாடா குழுமத்தின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிப் பெற்ற ஆதாயங்களையும் ஆராய்வார்களா?
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் இருந்து மாறன்கள், வெகுஅண்மையில் அநியாயமாகத் திருடிய பணத்தைக் குறித்து ஆய்வார்களா?
(…ஹ்ம்ம்… ஆனால், மாறன் சகோதரர்களின் நகைச்சுவையுணர்ச்சி என்பது கொஞ்சம் அதிகம்தான்! ஏனெனில், இந்த அழகில் ஆர்எஸ்எஸ் குருமூர்த்தி, பசிதம்பரம் கார்த்திசிதம்பரம் போன்றவர்கள்தாம் – தாம் திருடியதற்குக் காரணம் என்று வேறு சொல்கின்றார்களே! படா டமாஸ்ஸாக் கீதுபா!)
-0-0-0-0 -0-0-0-0-
சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னால் வந்த என் பதிவுகளில் ஒன்றிலிருந்து இந்த குறிப்புகள்:
ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற்ற ‘அன்பளிப்பு’ நெடுநாள்முன் நான் தொலைத்தொடர்புத் துறையுடன் தொடர்புள்ளவனாக இருந்தேன். அப்போது தயாநிதி மத்திய அமைச்சர். ரிலையன்ஸ் நிறுவனம், இந்திய நாடெங்கும், குறுக்கிலும் நெடுக்கிலும் ஒளி இழை வடங்களை சாலைகளில், நிலத்தின் கீழ் பதித்துக் கொண்டிருந்தது. அதற்கு, ரிலையன்சிற்கு மத்திய அரசாங்கத்தின் அனுமதி தேவையாக இருந்தது.
இச்சமயம், நம் உதிரி, ரிலையன்சுடன் ஒரு ஊழல் (மகத்தானது! தகத்தகாயது!!) ‘ஒப்பந்தம்’ போட்டார் – அதன் படி, ரிலையன்ஸ் ஒளி இழை வடங்களைப் போடும்போது (கிட்டத்தட்ட 20,000 கிலோமீட்டர் என நினைக்கிறேன்), SCV-க்காக ஒரு ஜோடி வடக் கற்றைகளை ‘இலவசமாகப்’ போட்டுத் தரவேண்டும். எப்படி இருக்கு கதை! (இதற்கான ‘செலவு’ அச்சமயம், குறைந்த பட்சம் 300 கோடி ரூபாய் இருந்திருக்கும்! எல்லாம் நம் பணம்!)
இதன்மூலம், SCV-இன் வலிமையும், வீச்சும், அதிவிரைவு இணைய / தொலைபேசி இணைப்புகளும் பலமடங்கு அதிகரிக்கும். இதனை வைத்து இந்த கேடிகள் இன்னும் பல மடங்கு தங்கள் ‘தமிழ்’ வியாபாரத்தை நடத்த முடியும்.
நண்பர்களே, யோசியுங்கள் – நீங்கள் தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு சாலையிலும், அவற்றின் கீழ், கேடி சகோதரர்களின் ஊழலாறு ஓடிக்கொண்டிருக்கிறது! தலைக்குமேல் தாறுமாறாக ஊழல் டிவி வடங்கள் ஓடிக்கொண்டிருக்கிறன – சீர்கேடுகளை, ஆபாசங்களைச் சுமந்துகொண்டு! இவற்றையெல்லாம் மீறி கண்ணுக்குத் தெரியாமல் ஜேப்படி செய்யும், செயற்கைக்கோள் தொடர்புகள் வேறு…
ரதன் டாடாவிடம் நேரடியாக துட்டு கேட்ட காதை
தயாநிதியார் அவர்கள் மத்திய மந்திரியாக இருந்த காலம்; சில ஒப்புதல்களுக்காக (TATA Sky) ரதன் டாடா அவர்கள், நம் ஆளைப் பார்க்க வேண்டிஇருந்தது. அந்த சந்திப்புக்குப்பின் டாடா அவர்கள் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டார். பிரதம மந்திரியுடனும் அது பற்றிப் பேசினார். அவர் ஆட்கள் கயமைநிதியுடனும் பேசினர்.
விஷயம் இதுதான்:
டாடா மிகவும் வருத்தப்பட்ட விஷயம் என்னவென்றால் – மற்ற அமைச்சர்கள், கையூட்டு வேண்டுமென்றால், சிறிது சங்கடத்துடன், சிறிது வெட்கத்துடன் – “என்னிடம் கொடுக்க வேண்டாம், என்னுடைய உதவியாளர்களிடமோ அல்லது வீட்டிலோ, காதும்-காதும் வைத்ததுபோல் கொடுத்துவிடுங்கள், தயவுசெய்து” என்பார்கள்.
டாடாவுக்கும் தெரியும் – இந்தக் கையூட்டுப் பணத்தில் மிகப் பெரும் பகுதி, அந்த அமைச்சரின் கட்சி நிதிக்குப் போய் விடும் என்பதும், நம் பாணி கட்சி வளர்ப்பிலும், ‘ஜனநாயகத் தேர்தல்’ அமைப்பிலும், இம்மாதிரி பணம் புரட்ட வேண்டியது தவிர்க்க முடியாதது என்பதும்… டாடாவுடைய புரிந்துகொள்ளலை நாம் மதிக்கலாம்.
ஆனால், நம் தயாநிதி மாறன் – இம்மாதிரி வெட்கமோ, கூச்சமோ படாமல் நேரடியாக எவ்வளவு பணம் தருவீர்கள் – “ஹொவ் மச் கேன் யு கிவ்” என்று கேட்டது மட்டுமல்லாமல், “என் அலுவலகத்திலேயே தாருங்கள்”‘ என்று சொல்லி, “இப்போதே தாருங்கள்” என்று முரண்டு பிடித்தார். மேலும், “எனக்கு உங்கள் தொழிலில் எவ்வளவு பங்கு தருவீர்கள்? நீங்கள் குறைந்த பட்சம் 30% கொடுத்தால்தான், நான் உங்கள் கோப்பைப் பார்ப்பேன்!” என்ற பேரம் வேறு.
வெறுத்துப்போன டாடா – நீயும் வேண்டாம், உன் அனுமதியும் வேண்டாமென வெளியே வந்தார். (அவருக்குத் தெரியாது, இந்த நிதிகளே தீவட்டிக் கொள்ளைக்கார அயோக்கிய கும்பல் என்பது)
பின்னாளில் டாடா நாசூக்காக இந்த சம்பவத்தை: தயாநிதி மாறனுடன் எனக்கு ‘சரி வரவில்லை’ என்று குறிப்பிட்டார். (Tata said he did not share good “chemistry” with Maran)
இதன்பற்றிய தகவல் வெளியே கசிந்து பின்பு தயாநிதியால், கருணாநிதியால் அமுக்கப் பட்டது. இந்த நிகழ்வால் தான், டாடா, தயாநிதி எக்காரணம் கொண்டும் மறுபடியும் ‘தொலைத்தொடர்புத் துறை’ அமைச்சராக வரக் கூடாது என்ற முயற்சி எடுத்தார். (நீரா ராடியா அம்மாளும் உதவி புரிந்தார்; இதனால் தான், கனிமொழி உதவியுடன் – தகத்தகாய ராசா ‘கைய வைக்க’ முடிந்தது…)
*** டாடா நிறுவன TAS (டாடா அட்மினிஸ்ட்ரேடிவ் சர்வீஸ் – IAS போன்றதொரு முக்கிய அமைப்பு , டாட்டா குழும உயர்நிலை மேலாண்மைக்காக ஏற்படுத்தப்பட்டது) அதிகாரி, ஒருவர் சொன்ன – தமிழகத்திற்கே வெட்கக்கேடான நிகழ்ச்சிகள் இவை ***
Scylla, Charybdis என்று கிரேக்க இலக்கியத்தில் இரண்டு படுபயங்கரமான பூதங்கள் பேசப்படுகின்றன. இதில் ஒன்று பலதலை கொண்டது, இன்னொன்று ஒரு கடறாழ்சுழி – ஒரு கடற்சந்தியின் இரண்டு பக்கமும் இவை இருக்கும், அப்பக்கம் போகும் எதனையும் விட்டு வைக்கா. ஆனால் அவ்வழியாகப் போகாமலும் மக்களுக்கு இருக்க முடியாது. இந்த கேடி சகோதரர்களை ஆக்டபஸ் என்று சொல்வதை-குறிப்பிடுவதை விட, ஸைல்லா & காரிப்டிஸ் என்று சொல்லலாமோ என்னவோ!
முழுபதிவும் இங்கே: உதிரிகளின் தொடர்கதை: மாறன்கள், மாற மாட்டான்கள்… (11/04/2011)

நடுவில் மாட்டிக்கொண்டிருக்கும் பாவப்பட்ட பாய்மரக்கப்பல்தான் தமிழகம். மற்றபடி இடப்பக்கமிருக்கும் கடற்சுழலையும் வலப்பக்கமிருக்கும் பலதலை பகாசுரப் பூதத்தையும் மாறன் சகோதரர்களாக உருவகம் செய்துகொள்ளலாம் (படம் இங்கிருந்து)
January 24, 2015 at 22:29
இன்னமும்கூட தான் பண்ணிய திருட்டுத்தனத்தை – அயோக்கியத்தனத்தை – கயவாளித்தனத்தை – மொள்ளமாறித்தனத்தை – முடிச்சவிக்கித்தனத்தை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்குக்குக்காரணம் யார் என்றுதான் புலம்பமுடிகிறதே அன்றி, தான் செய்தது சட்டத்துக்குப்புறம்ன்பான குற்றச்செயல் அல்ல என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியவில்லை பாருங்கள் !
January 26, 2015 at 13:52
IF CAUGHT REDHANDED THESE PEOPLE SAY” I AM A
DALIT THAT IS WHY WE ARE VICTIMISED A RAJA.
IF GURUMURTHY EXPOSES BSNL SCAM THEN DAYANIDHI
SAYS IT IS A RSS PLAN. BUT NOBODY SAYS I HAVE NOT
LOOTED THE MONEY. SHAMELESS PEOPLE.