பயிர் வட்டங்களும், மயிர் வட்டங்களும்…

May 30, 2014

பயிர் வட்டங்கள் என்று உடும்புத்தைலவாதிகளால் அழைக்கப்படும் ‘crop circles’ளின் உள்ளே பயிர் இருக்காது. இதைப் பயிரற்ற வட்டங்கள் என்றுதான் அழைக்க வேண்டும். ஆனால் வெள்ளைக்கார முட்டாள்கள் இவற்றை இப்படித்தான் அழைக்கிறார்கள். ஆகவே நாமும் அவர்களை வாழ்த்தி, வணங்கி மகிழ்ந்து அவர்கள் காலடியில் விழுந்து புரண்டு – இந்தியாவில் ஒரு எழவு ‘பயிர் வட்டமு’ம் இல்லாத போதிலும் பயிர் வட்டம் பற்றி கப்ஸாக்களை,  படு ஸீரியஸாக விடுகிறோம். இம்மாதிரி விஷயங்களைப் பதிப்பிப்பதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள்!

ஆனால் — அதேபோல மயிர் வட்டங்கள் என்பவையும் இருக்கின்றன என்பதை நாம் அறிந்துதெளிந்தோமில்லை! இவை பெரும்பாலும் வயதான ஆண்களின் உச்சந்தலைக்கும் பிடரிக்கும் நடுவில் திடுக்கிடும் வகையில், புரிந்துகொள்ளவே முடியாத வகையில், திகைக்கவைத்து விக்கித்துப் போக உதிக்கும் தலைமயிரில்லாத பகுதிகள் –  அதாவது, இதனைப் படிக்கும் நீங்கள் ஆணாக இருந்து – உங்கள் வயது 45க்கு மேலான பட்சத்தில், உங்கள் பின்னந்தலையை யோசிப்பது போல் தடவிப் பார்த்தால் கொஞ்சம் வழுக்கும் பகுதிகள்தாம் இவை; ஆனால், ஒரு ஆணுக்கு ஒன்று என்று மட்டுமே, அம்மா இலவச வழுக்கைத் திட்டத்தின்படி அளிக்கப்படுவது இது. ஆகவே ஒன்று வாங்கினால் இன்னொன்றும் ஃப்ரீ எனக் கிடந்து ஞமலிபோல அலையவேண்டாம்.  மேலும், உங்கள் மண்டையில் ஒரு ஓளி வட்டத்திற்குத்தான் இடம். இன்னொன்று வந்தால்,  கொஞ்சம் – ரிஃப்லெக்டர் என்பதற்குப் பதிலாக இரு ஹெட் லைட்டுகள் போலக் கண்றாவியாகக் காட்சியளிக்கும் என்பதை மனதில் கொள்ளவும். உங்கள் பின்னால் அணிதிரண்டு ஆர்பரித்து வருபவர்கள் – கெக்கலி கொட்டிக் கண்கூசச் சிரிப்பார்கள் என்பதை உணரவும்.

… சரி. ஒரு டமிள் எள்த்தாளன் எண்றால் – பொதுவாக நமக்குத் தெரிந்த விஷயங்களில்தானே ஆரம்பிக்கவேண்டும்?  பின் விரிவடையும் வட்டங்களில் பிற விஷயங்களைப் பற்றி எழுதவேண்டும்?? ஆனால் டமிள் எள்த்தாளன் என்பவன், ஒரு டம்மி எள்த்தாளன் அள்ளவா?? ஆகவே, அவன், ஏதாவது ஒரு எழவையும் புரிந்துகொள்ளாத விஷயத்தைப் பற்றி மட்டுமே  விலாவாரியாக எள்துவான்.

மயிர் வட்டங்களில் ஆரம்பித்து, பின் பயிர் வட்டங்களைச் சென்றடைவதுதானே முறை? முதலில், நம்முடைய சொந்த உடற்கூறுகளைப் பற்றிப் புத்தகம் எழுதுவது தானே முறை? ஆனால் மண்டைக்குள்ளும், மண்டைக்கு வெளியேயும் வழுக்கையர்களாக இருக்கும் நாம் இவற்றைப் பற்றி – அதாவது மயிர் வட்டங்களைப் பற்றி எழுதவே மாட்டோம்.  ஏனெனில், பயிர் வட்டங்களைப் பற்றிப் பல புருடா புத்தகங்களும் போலிவிஞ்ஞானிகளும் விலாவாரியாக(!) எழுதியிருக்கிறார்கள். ஒற்றியெடுத்து எழுதலாம். ஆனால் மயிர் வட்டங்களைப் பற்றி அப்படி ஒன்றுமே கிடைப்பதில்லை. இருக்கும் புத்தகங்கள், படு டெக்னிகலாக இருக்கின்றன – என்ன செய்வது சொல்லுங்கள்.

-0-0-0-0-0-0-

ஆனாலும் – இந்த மயிர் வட்டங்களைப் போலத் திகைக்கவைக்கும், மர்மமான, அமானுஷ்யமான, புதைக்கப் பட்ட, மறைக்கப் பட்ட உதிர்க்கப்பட்ட, மனிதனை உலுக்கும் பிரத்தியட்சமான உண்மைப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல் – சிலபல புத்தகங்களிலிருந்து ஒற்றியெடுத்து அந்தக் கேடுகெட்ட பயிர் வட்டங்களைப் பற்றி எழுதி என்ன பயன்?

இதிலும், இதற்குப் பின்னாலும் அமெரிக்கச் சதி இருக்குமோ? ஃப்ரீமேஸன்கள் இதன் பின்னர் உள்ளனரோ? நிச்சயம் இஸ்ரேலிய மொஸ்ஸாத் இதன்பின்னணியில் இருந்தே தீரவேண்டும்.

ஏதேச்சாதிகார சக்திகளின், பன்னாடு நிறுவனங்களின் மயிராண்மைக்கு எதிராக நாம் அணி திரளவேண்டும்.

நாம் இயற்கை மயிராண்மை முறைகளுக்கு மாறவேண்டும். நம் பாரம்பரிய மயிர்வளர்ச்சி முறைகளை மீட்டெடுக்கவேண்டும்.  பசுமைப் புரட்சி போல, நாம் உடனடியாக ஒரு மயிர்மைப் புரட்சியைத் தொடங்கவேண்டிய நேரம் வந்துவிட்டது! அடுத்த பத்தாண்டுகளில் ஒரு தமிழ ஆணுக்கும் ஒரு நரைமுடிகூட இருக்கக் கூடாது…

அம்மா அவர்கள் ஒரு சரியான இலவசத் திட்டமொன்றை இது தொடர்பாக வெளியிடுவாரோ? இசுடாலினார் ஏற்கனவே அவர் தலைமுடியில் சாயமடித்துக்கொள்கிறார் – அது பாவம், பல சமயம் வெளுத்தும் விடுகிறது – ஆனாலும் அவருக்கு இலவசமாக ஒரு ஹேர்டையும் கழக ஆட்சியில் கிடைக்காது என்பதற்கு நான் உத்தரவாதம்.

ராஜராஜசோழனுக்கு வழுக்கை இருந்தது என்பதற்கு ஆதாரமே இல்லை. திருவள்ளுவன்  அவன் வாழ்ந்த 1330 வருடங்களில் ஒரு வழுக்கையற்ற அள்ளிமுடிந்த புலவனாக மட்டுமே இருந்திருக்கிறான் என்பதற்கு தமிழகப் பேருந்துகளில் வைக்கப்பட்டுள்ள அவன் படங்களே சான்று! லெமூரியா என்பது லெ மயிரியா எனும் ஃப்ரெஞ்சுதமிழ் பதத்தின் மரூவு.

வடவர்களின் ஆதிக்கத்தால், நாம் நம் குறுகிய மயிர்வட்டங்களில் ஊடாடிக் கொண்டிருக்கிறோம். வாழ்க்கையை வாழாமல், வழுக்கையில் நம்மைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆரியச் சதியின், தமிழ் மறவனின் தன்னம்பிக்கையைக் குலைக்கும் தன்மையை நாம் உணர்ந்தால் – நமக்கு வழுக்கையே விழாது என்பது தலைமேல் மயிர்.

… நரேந்த்ர மோதிக்கும் இதற்கும் ஏதாவது தொடர்பிருந்தே ஆகவேண்டியிருக்குமே!  குஜராத்தில் வழுக்கைத் தலையர்களின் எண்ணிக்கையில் முஸ்லீம்கள் எவ்வளவு சதவிகிதம்? அது உயர்ந்து கொண்டே போகிறதென்றால், அதற்கு மோதிதானே காரணமாக இருக்க முடியும்? சிறுபான்மை வழுக்கையினால் பெரும்பான்மை மயிர் ஆட்கொள்ளப் படுவது இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைக்குப் புறம்பானது அன்றோ? தலைமுழுவதும் முடி இருப்பது ஒரு அடிப்படை மயிர்மை அல்லவா?

ஹ்ம்ம்ம்… என்ன எழவு குஜராத் வளர்ச்சி மாடலோ – அது ஒருகால் மயிர்வட்ட வளர்ச்சிகள் சார்ந்ததாக மட்டுமே இருக்குமோ? இந்த தீஸ்தா சீதளவாத அம்மணி என்ன தலைமுடி செய்துகொண்டிருக்கிறார், இது பற்றி ஒரு உண்மை விளம்பும் குழு அமைத்து உடனடியாக ஐநா சபையில் அறிக்கையளிக்காமல்…. :-( இவருக்கெல்லாம் ஏன் தேவைமெனெக்கெட்டு அமெரிக்கா பண உதவி செய்யவேண்டும்?

மோதியின் நண்பர்களான அம்பானிகள், அடானிகள், டாட்டாக்கள் பிர்லாக்கள் எல்லாரும் – இந்த வழுக்கைத்தலையில் முடிவளர்க்கும் தைலமருந்துகளை தயாரித்து யானைவிலை குதிரைவிலைக்கு விற்கப் போகிறார்கள். கொள்ளை லாபம் அடிக்கப் போகிறார்கள். இந்த தேசத்திற்கு நாதியில்லை. எவரும் தட்டிக்கேட்க முடியாது இந்த பாசிச கும்பலை.

… ஸோனியா அம்மையாரின் அருமந்த மருமகனான ராபெர்ட் வாத்ரா பற்றி ஆயிரம் குற்றம் சொல்கிறார்கள் – ஆனால், இம்மாதிரி சுத்தம் செய்யப்பட்ட மனிதத் தலைப் பகுதிகளை அவர் எப்போதாவது ஆக்கிரமித்த குற்றச்சாட்டு இருக்கிறதா?  மோதி ஒழிக.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் அனைவரும் தொப்பி போடுவதன் மர்மம் வழுக்கையோ? ஆனால் ஞாநி அவர்கள் ஒரு சராசரி வழுக்கைத் தலைய ஆப்புக் கட்சியினர் அல்லர் என்பதில் தமிழனான எனக்குப் பெருமையே! அவர் இதுவரை அந்த ஆப்புக் குல்லா போட்ட புகைப்படம் ஒன்றைக்கூட நான் இதுவரை பார்க்கவேயில்லை…

ஹ்ம்ம்ம்…  என்ன எழவோ? யோசிக்க யோசிக்க எல்லாமே மயிர்மமாக இருக்கிறது. :-(

-0-0-0-0-0-0-0-0-0-

ஆனால், எது எப்படியோ – உங்களுக்கு நகைச்சுவைப் புத்தகம் ஒன்றைப் படிக்கவேண்டுமென்றால் – ராஜ் சிவா என்பவரால் எழுதப் பட்டுள்ள இதனைப் படிக்கவும்: “இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?

இதில் ஏலியன்கள், பேருச்சாளியன்கள், சூண்டெலியன்கள் ரீதியில் – உலகளாவிய சதித் திட்ட வலைப்பின்னல்களைப் பற்றி, அமெரிக்க சதிகளைப் பற்றி, பயிர் வட்டங்களைப் பற்றியென்று அழகாகக் கலந்தடித்துப் பரிமாறுகிறார், ராஜ் சிவா அவர்கள்.

ஒரே ரோதனை. ரோமாஞ்சனம். இத்தாலியம். ஸோனியாவியம்.

எனது மயிர் வட்டம் பெரிதானதற்கு ராஜ் சிவா அவர்கள் ஒரு முக்கியமான காரணம் என்பதை அவர் அறிய மாட்டார். :-((

அலக்கியம், காப்பிக்கடை, இன்னபிற இழவுகள்…

11 Responses to “பயிர் வட்டங்களும், மயிர் வட்டங்களும்…”

  1. சரவணன் Says:

    ராஜ் சிவா என்ன சொல்லியிருக்கிறாரோ தெரியாது. ஆனால் கண்டிப்பாகப் பல உண்மைகள் மறைக்கப்படுவது வழக்கம் தான். உதாரணமாக, காணாமல் போன எம்.எச்.370 என்ன ஆனது என்று அமெரிக்காவுக்கும், மலேசியாவுக்கும் தெரியும். உலகத்திடமிருந்து (சீனா உட்பட்ட) மறைக்கிறார்கள்.

    ஏலியன்களோடு தொடர்பு ஏற்பட்டால் அதைக் கண்டிப்பாக உடனேயோ அல்லது அது பறுறிய அனைத்தையுமோ மக்களிடம் சொல்லிவிட மாட்டார்கள். இதன் நீட்டிப்பாகப் பார்த்தால் ஏற்கெனவே ஏலியன்களுடன் தொடர்பு ஏற்பட்டிருந்தாலும் ஆச்சரியமில்லை.

    நம் அணு சக்தித் துறை இதில் ஸ்பெஷலிஸ்ட்.

    ராஜதந்திரிகள் காலம்காலமாக உண்மைகளை மறைப்பதை ஸ்டேட்கிராஃப்ட்டின் ஒரு முக்கியப் பகுதியாகக் கடைப்பிடித்துத்தானே வந்திருக்கிறார்கள்? இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

    உண்பைகள் மறைக்கப்படாவிட்டால் அசாஞ்சுக்கோ, ஸ்நோடெனுக்கோ தேவையில்லையே.

  2. thangathirumal Says:

    அறிவியல் ஆராய்ச்சி கட்டுரைகளை மேம்போக்காக விமர்சிக்க வேண்டாம். உலகின் நியதி படி ஒவ்வொரு particle கும் ஒரு anti -particle இருக்கும். நெருப்பில் வாழும் உயிரினம் என்று கூறினால் சாமானியன் ஏத்துக்கமட்டான். ஆனால் எரிமலை குழம்பில் வாழும் பேக்டீரியா இப்போது கண்டு பிடிக்கபட்டு உள்ளது.ஏன் அமெரிக்காவில் மட்டும் பயிர் வட்டம் உள்ளது ? நல்ல கேள்வி… ஏன் ஆஸ்திரேலியா வில் மட்டும் கங்காரு உள்ளது ? ஏன் இந்தியாவில் மட்டும் இமையமலை (world ‘s youngest mountain ) உருவாகியது ? ஏன் சாக்கடலில் மட்டும் 7 மடங்கு உப்பு ? அணைத்து கேள்விக்கும் விஞ்ஞானம் மட்டுமே பதில் தர முடியும், வியாக்கியானம் அல்ல ….. தெளிவாக புரிந்து கொண்டால், புரியாத இழவு என்று ஒன்றும் இல்லை …..


    • அய்யா, தாங்கள் ஒரு ‘பயிர் வட்ட ஆர்வலர்’ என்பதை அறிந்து இறும்பூதடைந்தேன்.

      “உலகின் நியதி படி ஒவ்வொரு particle கும் ஒரு anti -particle இருக்கும்” என்றெல்லாம் தைரியமாக எழுதுகிறீர்களே!

      வாழ்த்துகள்.

      • shankaran Says:

        ஐயா ,
        ஒவ்வொரு துகளுக்கும் ஒரு எதிர் துகள் இருக்கும் என்று தானே அவர் சொல்கிறார்.. இதில் என்ன பிழை உள்ளது என்று புரியவில்லை.
        ஒருவேளை சரியான பதங்களுடன் சொல்லவில்லை என்கிறீர்களா?


      • அய்யா, சில துகட்களுக்கு, அந்தத் துகட்களே எதிர்த்துகட்கள்.தனிப்பட்ட முறையில் அவைகளுக்கு என்று எதிர்த்துகட்கள் இல்லை. க்லூவான், க்ரேவிடான்,ஸீ துகட்கள் அப்படிப்பட்டவை.

        இந்த அடிப்படைத் துகட்களை (முக்கியமாக, எதிர்த்துகட்களை) என்னவோ ஒரு பெரிய விஷயம் போல, வசீகரம் மிகுந்தவையாகச் சித்திரிப்பதே தவறு. அவை சாதா தோசைகள் தாம். (எனக்குத் தெரிந்து) கடந்த 80 வருடங்களாக இவைகள் அறிவியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த குப்பை எழுத்தாளர் (=டேன் ப்ரௌன்) போன்றவர்களெல்லாம்தான் அரைகுறை செய்திகளைப் பரப்பி – என்னவோ இந்த எதிர்த்துகட்களை வில்லன் மாதிரி சித்திரித்து விடுகின்றனர்.

        மேலும், நான் என் குட்டுரையில் அடிப்படைத் துகட்களைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. நான் எழுதியது பயிரற்ற வட்டங்களைப் பற்றியும், மயிரற்ற வட்டங்களைப் பற்றியும்தான்!

        “ஆனால் எரிமலை குழம்பில் வாழும் பேக்டீரியா இப்போது கண்டு பிடிக்கபட்டு உள்ளது”

        அப்படியா என்ன? பேக்டீரியா 130 ஸெல்ஸியஸ் டிகிரிக்கு மேல் வாழ்வது முடியவேமுடியாத விஷயம் – அய்யா, அவை பொதுவாக கார்பன் தனிமத்தின் மேலெழுப்பப்பட்ட விலங்குகள்தானே?

        எரிமலைக் குழம்பின் வெப்பம் சுமார் 1100 – 1300 ஸெல்ஸியஸ் டிகிரி!

        எங்கிருந்து இந்த உண்மைகளைப் பிடித்திருக்கிறார் இவர்? :-)

        இன்னொன்று – தங்கத்திருமால் அவர்கள் வியாக்கியானம் என்றால் விஞ்ஞானம் அல்ல என்றுகூடச் சொல்கிறார். இதனைப் பற்றியெல்லாம் எழுத ஆரம்பித்தால் அது பதிவு அளவுக்கு நீண்டுவிடும்…

        ஆம். “தெளிவாக புரிந்து கொண்டால், புரியாத இழவு என்று ஒன்றும் இல்லை …..”
        :-)))

        “அணைத்து கேள்விக்கும் விஞ்ஞானம் மட்டுமே பதில் தர முடியும்”

        ஹ்ம்ம். :-)

        இதனைப் பற்றி ஒரு புத்தகம் எழுதலாம். ஆனால் அவருடைய பார்வையில் விஞ்ஞானம் என்பது என்ன என்பது எனக்குப் புரிகிற அளவுக்கு மூளையில்லை. ஒப்புக் கொள்கிறேன்.

  3. thangathirumal Says:

    http://en.wikipedia.org/wiki/Thermophile
    மேலே உள்ள உரலியில் நான் கூறிய பாக்டீரியா பற்றிய லீட் உள்ளது ….


    • அய்யா – 45 லிருந்து 122 °C வரைதான் இவை உயிர்வாழமுடியும் எனத்தான் இந்த விக்கிபீடியா எழவில் இருக்கிறது.

      எரிமலைக்குழம்பான லாவாவில்?? அதன் வெப்ப நிலை இதைவிட மிக அதிகமல்லவா?

      கொஞ்சம் சிந்திக்கவும், தயவுசெய்து.

  4. thangathirumal Says:

    நான் இங்கு anti -particle பற்றி பேசியது, இந்த விவாதம் பாசிட்டிவாக செல்லும் பட்சத்தில், anti universe பற்றியும் பேசலாம் என்று தானே தவிர, இது ஒன்றும் topic devience இல்லை ….


    • அய்யய்யோ! அன்டீ யுனிவர்ஸ்!! :-)

      பறக்கும் தட்டுகளில் பரபரக்கும் ஏலியன்கள் வருகிறார்கள்! உஷார்!!

      (மன்னிக்கவும்)

      • Eswaramurthi Says:

        ராஜ் சிவா மீது பயங்கர வெறுப்பில் உள்ளீர் போல.

  5. வி.அருண் குமார் Says:

    மயிர் வட்டங்கள் பற்றிய தகவல்கள் அருமை மற்றும் புதுமை வேறு எந்த தலங்களிளும் இந்த மயிர் வட்டங்கள் பற்றிய தகவல்கள் இல்லை….! ஹா ஹா ஹா….!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s