ஜோ டி’க்ரூஸ், ஜெயமோகன், பாஜக, மோதி, தீரா விட அறிவுமயக்கம், கருத்துச் சுதந்திரம், அரிப்புஜீவிகள், ப்ரொடெஸ்ட்வாலாக்கள், போங்கடா!

April 22, 2014

என்னுடைய மதிப்புக்குரிய செல்லங்களில் ஒருவரும் ஓத்திசைவின் தொழில்முறை பின்னூட்டக்காரருமான சரவணன் அவர்கள் அண்மையில் நான் எழுதிய பதிவுக்குப் பின்னூட்டம் இடுகையில் இப்படிச் சொல்கிறார்:

ஒன்றைக் கவனித்தீர்களா? பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களைவிட திராவிட இயக்கத்திடம் நிச்சயம் சிந்தனை, அறிவியக்க செயல்பாடுகள் அதிகம். பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ் பற்றி, ஜெயமோகன் சொல்வதைப் பார்ப்போமா?

**** இந்தியாவின் வலதுசாரி அமைப்பான பாரதியஜனதாக் கட்சியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அடிப்படையில் அறிவார்ந்த அடித்தளம் அற்றவை. வெறும் தொண்டர் அரசியல் கொண்டவை. அறிவார்ந்த செயல்பாடுகள் மேல் ஈடுபாடோ அறிவுஜீவிகள் மேல் மரியாதையோ அறிவியக்கம் பற்றிய நவீன நோக்கோ , கருத்துக்களில் விரிந்த பார்வையோ, அடிப்படைச் சமநிலையோ அவர்களுக்கு இல்லை. தங்கள் கோஷங்களை எதிரொலிப்பவர்களை மட்டுமே அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியும்.

அத்துடன் அவர்களிடமிருக்கும் அறிவுப்புலம் என்பது மிகமிகப் பழைமையானது. பெரும்பாலும் பிராமண மேட்டிமைவாதம்தான் அது. அவர்கள் நாளை அதிகாரத்துக்கு வந்தால்கூட மிகப்பழைமையான நோக்குள்ள சில பிராமணர்களை கல்வியமைப்புகளில் கொண்டுசென்று நிறுவி அவர்களை உளறவிட்டு தங்களை கேலிக்குரியவர்களாக ஆக்கிக்கொள்வார்கள். இன்றையநிலையில் அதற்கப்பால் செல்ல அவர்களால் இயலாது *********

இந்தக் கேவலத்துக்கு திராவிட இயக்கத்தினரின் அறிவியக்க செயல்பாடுகள் ஆயிரம் பங்கு மேல்!! பிராமண மேட்டிமைவாதத்தை முன்வைப்பதை விட பிறப்பால் அனைவரும் சமம் என்பதைக் கருத்தளவிலாவது ஒப்புக்கொண்டு, அதை நோக்கி சிறிய முயற்சிகளையாவது செய்தவர்கள் மேலானவர்கள் அல்லவா?

… ஹ்ம்ம்… முக்கால்வாசி, நீங்கள் எந்தக் குறிக்கோளுடன் இந்தப் பின்னூட்டத்தை எழுத முற்பட்டீர்கள் என்பது எனக்குச் சரியாகப் புரியவில்லைதான் என நினைக்கிறேன்; ஆனால், நான் புரிந்துகொண்டவகையில் இதற்கு பதில் அளிக்கிறேன்.

ஆனால், நன்றி சரவணன் அவர்களே – ஜெயமோகனின்  – நான் ஒரு வழியாக இன்றுகாலையில் இருமுறை படித்த (மெச்சத் தகுந்த) அக்கட்டுரையில் – ஒன்றை அல்ல,  பலவற்றைக் கவனித்தேன்; அது தொடர்பாகவும், உங்கள் மேற்கோளை முன்வைத்தும் என் எண்ணங்கள் கீழே: (ஏன் இப்படியொரு தனிப் பதிவென்றால், மறுபடியும் மறுபடியும் இப்படிக் கேள்விகளைக் கேட்டு (=அவர் அப்படிச்  சொல்கிறாரே, நீ இப்படிச்  சொல்கிறாயே (அல்லது) அவர் அப்படிச் சொல்கிறார், உன் கருத்தென்ன வகையறா)  என்னை மிகவும் துன்புறுத்துகிறார்கள், அதனால்தான், அவ்வளவுதான்!)

-0-0-0-0-0-0-0-0-0-0-

  1. முதலில், இது தெளிவுபடுத்தப் படவேண்டும் – ஜெயமோகன் உட்பட அனைவருக்கும் அவரவர் கருத்துகளை சமைத்துக் கொள்வதும், கட்டியெழுப்புவதற்கும் உரிமையிருக்கிறது. உங்களுக்கும் இருக்கிறது. ஏன், வெறும் ராமசாமியான எனக்கும் அப்படித்தான்.  இது ஒரு மிக அடிப்படையான விஷயம் – இதை நீங்கள் ஒப்புக் கொள்ளமுடியாதென்றால் விவாதமோ, உரையாடலோ சாத்திமேயல்ல, சரியா??
  2. அவர் எழுதிய முழுக்கட்டுரையுடன் அவருடைய பொதுவான கருத்துகளைப் பொருத்திப் பார்க்கவேண்டும். பின்னர் நீங்கள் மேற்கோள் காட்டியதை அவர் கட்டுரையின் பின்னணியில் பார்க்கவேண்டும். அவருடைய எண்ணங்களை அவர் சமன நிலையுடன் வெளியிட முயல்கிறார் – எல்லா திசைகளிலிருந்தும் பாடுபொருளைப் பார்க்க முயற்சிக்கிறார். ஆகவே, அவர் கட்டுரையில் சில வரிகளை மட்டும் எடுத்துக்கொண்டு அவர் பார்வையை விரிக்க முடியாது. நிச்சயம் அவர் சொன்னதை, நீங்கள் சொல்லியுள்ளபடி, திரா விட இயக்கத்துடன் முடிச்சுப் போடவே முடியாது.
  3. மேலும் –   ஆர்எஸ்எஸ் அமைப்பென்பது முட்டியடி எதிர்வினையாக இடக்கையால் புறம் ஒதுக்கப்படவேண்டியதொன்றல்ல. நேரிடையாக இவ்வமைப்பு சார்ந்த பல மாணிக்கங்களை அறிந்துள்ளேன் – இதில் ஒரு மாணிக்கம், ஒரு முஸ்லீம் குழந்தையை தத்து எடுத்து, அதனை ஒரு முஸ்லீமாகவே வளர்த்துக்கொண்டிருக்கிறது. முதலில் உங்கள் மஞ்சள்கண்ணாடியைக் கழற்றிவிட்டால் பிரச்சினைகளைச் சரி செய்து விடலாம்.
  4. ஜெயமோகன் எழுத வருவதன் பின்புலம் – கலாச்சாரத்தின் அதிகாரமையங்களின் செயல்பாடுகள் – அவை முழுவதும் அரைகுறை (மெக்காலே+மார்க்ஸ்)/2 தர கூலிக்கு மாரடிக்கும் அறிவுஜீவிகளால் ஆட்கொண்டுள்ளமை பற்றி – அதுவும் ஜோ டி’க்ருஸ் அவர்களின் புத்தகப் பிரச்சினையை மையமாக வைத்து.
  5. பின்னர் வினவு-தரக் குளுவான்கள் போன்றவர்களின் புரட்சிகரமைதுன மொண்ணைத்தனங்கள் பற்றி, அவர்களின் முகமூடி வசீகரத் தலைமை பற்றி விமர்சனம் வைக்கிறார். அவருடைய இன்னொரு கருத்து என்னவென்றால் – பாஜக அரசமைத்தாலும் இந்த இடதுசாரி அறிவுஜீவிய மாஃபியாவை மீறிச் செயல்படுவதற்கு, பாஜகவிடம் போதிய நிபுணத்துவமோ, அறிவுஜீவிகளோ இல்லை, குண்டுசட்டியில் கழுதை ஓட்டுபவர்கள் மட்டுமே உள்ளனர் என்பதைக் குறித்தது. இது தொடர்பாக, சில கருத்துகளை வெளியிட்டிருக்கிறார். நீங்கள், அவர் கருத்துகளை, உங்கள் செல்லங்களான கவைக்குதவாத  மொட்டைத் தலையர்களுடன் முடிச்சுப் போடுகிறீர்கள், அவ்வளவுதான்.
  6. கடைசியில் அறிவுஜீவிகளின் தார்மீக உரிமைகள் பற்றிச் சில கருத்துகளைக் கொடுக்கிறார். ஆக எனக்கு, நீங்கள் அவருடைய முழுக் கட்டுரையின் சாராம்சத்தையும் புரிந்து கொண்டீர்களா என்றும் தெரியவில்லை. (சரியாகச் சொல்லவேண்டுமென்றால் – நீங்கள் ஒரு புத்திசாலி ஆசாமி; ஆனாலும் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளாததைப் போல செயல்படுகிறீர்கள்!)
  7. என் கருத்து என்னவென்றால் – நிச்சயம் பாஜக-விடம் தரமான நிபுணர்கள் இருக்கிறார்கள் – ஆனால் அவர்களைப் பரவலாகக் கொண்டுசேர்க்கவேண்டிய வேலைகள் செய்யப்படவில்லை; ஆனாலும் – அப்படிச் செய்வதற்கு – இந்த இடதுசாரி, ஸெக்யூலர்-தட்டச்சு_அறிவுஜீவி, மனிதவுரிமைக்காரக் கூட்டணியின் விஷ நாளங்களை, பாரம்பரியங்களுக்கெதிரான பொய்மைப் பிரச்சாரத்தை, அவர்கள் சிருஷ்டித்துள்ள பொதுப்புத்தியில் உள்ள அரசியல்ஹிந்துத்துவா போன்ற பொய்ப்பிம்பங்களை உடைத்து இன்னொரு பொருட்படுத்தத் தக்க பிம்பச்சட்டகங்களை உருவாக்கவேண்டும்; இதற்குப் பல நாட்களாகும்தான். மேலும், ஜெயமோகன்  — அவர் அனுபவத்தை வைத்து, பாஜக தலைமையில்/கட்சியில் பல விஷயங்கள் இல்லை எனச் சொல்கிறார். ஆனால் என்னைப் பொறுத்தவரை அப்படி ஒரேயடியாகச் சொல்லிவிடமுடியாது என்று தோன்றுகிறது – ஏனெனில் என் அனுபவங்களும் தொடர்புகளும் அப்படி. பல அறிவாளிகள் அங்கேயும் இருக்கிறார்கள்தான். அவர்கள் வெறும் கோஷ்டம் போட்டுக்கொண்டு எதிரொலிகளுக்காகக் காத்திருப்பவர்கள் அல்லர்.  சம நிலையுடன் பார்த்தால், பல விஷயங்கள் (எனக்குமேகூட!) புலப் படலாம்.
  8. ஜெயமோகன், முரளிமனோஹர் ஜோஷி போன்றவர்களைப் பற்றி வந்த/வரும் செய்திகளை வைத்து, அவர்களுடைய செயல்பாடுகளை வைத்து, தன்னுடைய அனுபவங்களை முன்னிறுத்தி ‘மிகப்பழைமையான நோக்குள்ள சில பிராமணர்களை கல்வியமைப்புகளில் கொண்டுசென்று நிறுவி…’ என்று எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன்.  ஆனால்,  நான் என் அனுபவத்தில் அறிந்தவரை, இப்படி வெறும் பழமைவாத விஷயங்கள் நடக்க சந்தர்ப்பங்கள் குறைவுதான் என நினைக்கிறேன். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
  9. இருந்தாலும், பொதுவாக பாஜக போன்ற ‘வலதுசாரி’ இயக்கங்களில் அறிவுசார் சிந்தனைப் போக்குகள் குறைவு என்ற எண்ணம், உலகளாவிய அளவில் பல  நூற்றாண்டுகளாகக் கட்டமைக்கப் பட்டுவருகிறது. கன்ஸர்வேடிவ் – லிபரெல் என இருமை ideal type கருத்தாக்கங்கள் வழியாக மட்டுமே பார்ப்பது வழியாக தரிசிக்கப்படும் உலகம் இப்படித்தான் பிடிபடும். மேலும் அறிவுஜீவிகள் என்கிற பதமே, ‘இடது சாரி’களால் கடத்தப் பட்டுவிட்டது! ஆக, வலதுசாரியென்றால் மூளையை உபயோகிக்காமல் குண்டாந்தடியைச் சுற்றுபவன், அவ்வளவுதான் என்கிற பிம்பம் வெகு திடமாகக் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை – இந்த இடதுசாரி வலதுசாரி பகுப்புகளில்/சிமிழ்களில் மட்டுமே மானுடத் திரள் செயல்பாடுகளைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது.  ஒவ்வொரு அரசியல் படுத்தப்பட்ட மக்கள் திரளிலும், இந்த இருவகைப் பகுப்புகளும் சேர்ந்தேதான் இருக்கும். நம்மால் சாம்பல் நிறத்தின் விசிறிகள் ஆக முடிந்தால் விஷயங்கள் ஓரளவு சரியாகப் புரிந்துகொள்ளப் படலாம்.
  10. ஜெயமோகன் அவர்கள், நான் மதிக்கும் ஒரு எழுத்தாளர். ஆனால், என்னுடைய கருத்துகளுடன் முழுவதும் ஒத்துப் போனால்தான் ஒருவரை மதிப்பேன் என்றில்லை. ஜெயமோகனுக்கும் அப்படித்தான் என நினைக்கிறேன். எடுத்துக்காட்டாக – அவருடைய நண்பருடைய எழுத்துகளை – அதாவது எஸ்ராமகிருஷ்ண ராவல்களைக் கிண்டல் செய்து நான் தொடர்ந்து எழுதுவது,  அவருக்கு ஒரு ஒவ்வாத, அருவருப்பான விஷயமாகத்தான் இருக்கும். அதே போல, திராவிட இயக்கத்தை தீரா விட முயக்கம் என்று, தொடர்ந்து நான் எழுதுவதும் கூட. ஆக, அவருக்கு நேரமிருந்தாலும் நான் எழுதுவதையெல்லாம் படிக்கவேண்டுமென்றோ, ஓப்புக் கொள்ளவேண்டுமென்றோ அவசியமேயில்லை. எனக்கும் அப்படியேதான்; அவர் எழுதுவதையெல்லாம், ஏன்,  சமயத்தில்நான் எழுதுவதையெல்லாம் கூட என்னால் ஒப்புக் கொள்ள முடியாதுதான்,  உங்களுக்குக் கூட அப்படித்தான் இருக்கும்; திரா விடக் கலாச்சாரத்தால்(!) மழுங்கடிக்கப் பட்ட படிப்பறிவால் ஏற்பட்டுள்ள ஒரு மகாமகோ சிதைவு — இந்த ‘அதிமனித வழிபாட்டுக் கலாச்சாரம்’ – ஒருவர் செய்வதை/சொல்வதை அவருடனும், தம் வாழ்வனுபவங்களுடன், படிப்பறிவுடன் பொருத்திப் பார்க்காத தன்மை;  சொல்வதையெல்லாம் ஒரு கேள்விகூடக் கேட்காத உபாசகத் தன்மை. உரையாடல்களுக்கு அப்பாற்பட்டமை. அதற்கு நான் உடன்படுவதில்லை. என்னுடைய அனுபவத்தின் படி,  அனுமானத்தின் படி – இம்மாதிரிச் செயல்பாடுகள், வழிபாட்டுக் கலாச்சாரத்தின் மொண்ணைத்தனங்களானவைகள் – ஜெயமோகன் அவர்களுக்கும் ஒத்துவர மாட்டா என்றுதான் நினைக்கிறேன்.
  11. இன்னொன்று:  ஆனால், நான் ஒரு எழுத்தாளனோ அல்லது அறிவுஜீவியோ அல்லன். உலகப் பிரச்சினைகள் அனைத்திற்கும் என்னிடம் திடீரெக்ஸ் தீர்வுகளோ. ஸில்வர் புல்லெட்களோ இல்லை. எல்லாவற்றைப் பற்றியும் எனக்கு கருத்தென்பது இல்லை, பல விஷயங்களில் எனக்கு முனைப்போ, கரிசனமோ இல்லை; மேலும்,  மிகப்பல விஷயங்களில் நான் ஒரு அஞ்ஞானி மட்டுமே என்பதைப் புரிந்துள்ளேன்.  சர்வ நிச்சயமாக, எனக்குச் சமன நிலையுமில்லை; ஊக்கபோனஸாக, பொறுப்புணர்ச்சியும் இல்லை. என் எழுத்துகளைப் பற்றிய பிரமை என ஒரு எழவும்  இல்லை. ஆகவே என் எழுத்துகளைப்(!) போற்றும்(??!) மக்களோ வாசகர்களோ இல்லை – ஆகவே அவர்களை வழி நடத்தும்(!) அவசியமும், மன அழுத்தமும் எனக்கில்லை. நான் என் எழுத்துகளை(!) மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கும் சொற்ப நபர்களுக்குச் சொல்வதெல்லாம் – உங்கள் மூளைகளை உபயோகியுங்கள், அவ்வளவுதான். ஏனெனில், என் மூளையின் கொள்ளளவு பற்றியும், எனக்கு அபரிமிதமான பிரமைகள் இல்லை. ஆகவே எனக்கு எந்த ஒரு அரசியல்ரீதியான நடுநிலைமையும், கயமைக் கரிசனமும் அவசியமில்லை.
  12. எடுத்துக்காட்டாக: கைகால்களின் திறம் சரியாக இல்லாத மனிதர்களை எனக்கு – அவர்களுடைய எந்தத் திறனைப் பற்றியும் ஒரு குசுவையும் அறியாமல் ‘மாற்றுத் திறனாளர்’ என்று பொத்தாம்பொதுவாகப் பொய்பொய்யாகவெல்லாம் மேட்டிமைத்தனத்துடன், கயமைக் கரிசனத்துடன் (=condescension) குறிப்பிட முடியாது. நான்  நடைமுறை அரசியல்ரீதியாகச் சரியான பக்கத்தில் இருப்பதாகக் காட்டிக் கொள்வதை (=political correctness) வெறுக்கிறேன்.
  13. அதேபோல,  மோதி விஷயத்தில், எனக்கு இருப்பது, எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை. அவருடைய களச் செயல்பாடுகள், அவர் இதுவரை இதுவரை செய்துள்ள பணிகள், ஒழுக்கம், நிர்வாகத் திறமை போன்றவற்றின் மீது வளர்த்தெடுக்கப்பட்ட விழைவு. ஆக எனக்கு மனதில் பட்டதை, எனக்குக் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் எழுதுகிறேன். நாளை மாற்றிக் கொள்ளவேண்டுமென்றால் அவற்றை மாற்றிக் கொள்வேன். எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை;  பிற்காலத்தில் அனுகூலமாக இருக்கலாம் என்று ‘safe harbour ஷரத்துகளை’ என்னால் வைத்துக் கொள்ள முடியாது. இப்படி எழுதினால் அப்படியாகுமோ, அப்படியெழுதினால் இப்படியாகுமோ  எனக் கும்மியடித்து என் கருத்துகளை எழுப்பிக் கொள்ள முடியாது. என் அளவை, கருத்துகளின் ஆழத்தை நான் அறிந்திருக்கிறேன் –  என் கருத்துப்படி விஷயங்கள் நடக்காவிட்டால், நான் தான் அன்றைக்கே சொன்னேனே எனச் சாக்குபோக்குச் சொல்ல ஏதுவாக என் கருத்துகளை இப்போதே ஜாக்கிரதையாகக் கட்டமைத்துக் கொள்ளவேண்டிய அவசியமும் எனக்கில்லை.
  14. வென்டி டோனிகர் அவர்களின் அனைத்துப் புத்தகங்களையும் அவருடைய குளுவான் ஆய்வாளர்களின் சில ஆய்வுகளையும் ஊன்றிப் படித்துள்ளவன் என்கிற முறையில் நான் சொல்வது – வென்டி அவர்களுக்கு அடிப்படையில் குதர்க்க உணர்வும், மேலைய மேட்டிமையும் அதிகம் என்பது. அவர் தன்னுடைய கருத்துச் சுதந்திரத்தின் எல்லைகளை வேண்டுமென்றே உணராமல் அவமதிப்பது என்பது. இதைத் தவிர அவரால் மேற்கத்திய சிந்தனை முறைமைகளை உபயோகப்படுத்தி மட்டுமே கீழைய பண்பாடுகளை அணுகமுடியும் என்பது. ஆனாலும், அவருடைய இந்த மாதிரி ‘உன்மேல் மூச்சு விடுவேன்’ சுதந்திரத்துக்கும் நாம் தலையில் அடித்துக் கொண்டு ஒத்துப் போகவேண்டும்தான். வென்டி அம்மணி போன்ற அற்பர்களுக்கே இப்படியென்றால், ஜோ டி’க்ரூஸ் அவர்களுக்கு பலமடங்கு அதிகச் சுதந்திரம் இருக்கவேண்டும்.  இத்தனைக்கும் அவருடைய அரசியல் சார்பில் தற்போதைய சிந்தனையை மிக நாகரீகமாக, நேர்மையுடன் வெளிப்படுத்தியதற்கே இத்தனை ஊடக அற்பத்தனங்கள். ஆனால் கொடிது கொடிது இடதுசாரி-அறிவுஜீவிய மாஃபியா கொடிது. இந்த மாஃபியா வைக்கும் கயமைத் ‘தீட்டு’ என்பது பப்பரப்பா பரபரப்பாக்களினால் ஆனது.
  15. அதே சமயம், வ கீதா போன்ற தொழில்முறை தகரடப்பா அரிப்புஜீவி  ப்ரொடெஸ்ட்வாலாக்களுக்கும் தன் மொழிபெயர்ப்பை வெளியிடக் கூடாது என்று அவருடைய பதிப்பகத்திடம் சட்டரீதியாக மறுக்க முடியக் கூடும் தான்; கீதா – பதிப்பகம் – ஜோ தொடர்பான ஒருவருடன் மற்றவருக்கான ஒப்பந்தங்கள், பிணையங்கள் போன்றவற்றின் தன்மை எப்படி இருக்கின்றன என்பதைப் பொறுத்த விஷயம் அது. (விடுதலைச் சிறுத்தையான பா ரவிக்குமார் அவர்கள் (இவர் நான் மதிக்கும் அரசியல்வாதிகளில் ஒருவர்) இந்த நவாயனா பதிப்பகத்தின் பங்குதாரர் / தொடங்கிகளில் ஒருவர் என ஒரு மங்கலான நினைவு; இது தவறாக இல்லாத பட்சத்தில், அவர் இந்த விஷயத்தை எப்படி எதிர்கொள்கிறார் என்பது ஒரு சுவாரசியமான விஷயம்!)
  16. இருந்தாலும், தார்மீக உரிமை என்பது இந்தியச் சூழலில். தொழில்முறை இடதுசாரி சார்பு மனிதவுரிமையர்களின் உரிமை மட்டுமேதான், மற்றவர்களுக்கு இம்மாதிரி உரிமைகள் இருக்கக்கூடாது என்பதில் இவர்கள் தீர்மானமாக இருக்கிறார்கள் – அதே சமயம், இவர்களுக்கும் தார்மீகக் கடமைகளுக்கும் சம்பந்தமேயில்லை! ஆனால் – இந்த இடதுசாரிகள் பார்வையில், வலதுசாரிகளுக்குக் கடமைகள் மட்டுமே இருக்கின்றன; உரிமைகள் சொற்பம்; மூளையும் இல்லை; இவர்கள் வெறும் குண்டாந்தடிகள்தான்!  ஆகவே இவர்களைப் பொருட்படுத்தவேண்டிய அவசியமேயில்லை! (வேறு வழியில்லாமல் இந்த மிகவும் நைந்துபோன வடது-இடது  அரைகுறைசாரிப் பதங்களை உபயோகித்திருக்கிறேன், மன்னிக்கவும்)
  17. அண்மையில் ஒரு நண்பர், ஜோ டி’க்ரூஸ் அவர்களுக்கு ஆதரவாக ஒரு திரளைத் திரட்டுவதற்காக, ஒரு அறிக்கை வரைவைத் தயாரித்து இப்படி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்:  “இந்த அறிக்கை ஜோவின் கருத்து சுதந்திரம் மதிக்கப் பட வேண்டும் என்று மட்டுமே கோருகிறது. இதற்கு இசைவு தெரிவிப்பவர்கள்  ஜோவின் கருத்துடன் உடன்பட வேண்டும் என்ற அவசியமில்லை.”  நான் அவருக்கு பதிலுக்கு  இப்படி – ‘நிச்சயமாக ஒப்புதல் – சுதந்திரத்துக்கு மட்டுமல்ல, கருத்துக்கும்தான்’ – அனுப்பினேன்.

அய்யா சரவணன் – ‘திராவிட இயக்கத்தினரின் அறிவியக்க செயல்பாடுகள்’ என்று எழுதுகிறீர்கள் – ஆனாலும் உங்களுக்குக் குறும்புணர்ச்சி அதிகம்தான்! அல்லது oxymoron என்பதற்கு மேற்கண்ட பதத்தை எடுத்துக் காட்டுகிறீர்களோ?

ஆகவே, தன் முயற்சியில் சற்றும் மனம்தளராத சரவணன் அவர்களே, வழக்கம்போல என் பதிலில் திருப்தி அடையாமல்,  மௌனமாக இருப்பீராக. ;-)

இப்போதைக்கு இவ்வளவு போதும்.

நரேந்த்ர மோதி!

அலக்கியம், காப்பிக்கடை, இன்னபிற இழவுகள்…

 

2 Responses to “ஜோ டி’க்ரூஸ், ஜெயமோகன், பாஜக, மோதி, தீரா விட அறிவுமயக்கம், கருத்துச் சுதந்திரம், அரிப்புஜீவிகள், ப்ரொடெஸ்ட்வாலாக்கள், போங்கடா!”

  1. சரவணன் Says:

    ஜோ டி க்ரூஸின் கருத்து சுதந்திரத்தை யாருமே மறுக்கவில்லையே? இதேபோல வ.கீதாவுக்கு ஒரு மொழிபெயர்ப்புப் பணியிலிருந்து விலகிக்கொள்ளவும் நவயானாவுக்கு புத்தக வெளியீட்டுத் திட்டம் ஒன்றைக் கைவிடவும் (ஒப்பந்தங்களுக்கு உட்பட்டு) உரிமை உள்ளது. சாகித்ய அகாடெமி போல அரசு சார்ந்த பதிப்பகம் இதைச் செய்திருந்தால்கூட அதை விவாதிக்க முடியும். ஒரு தனியார் பதிப்பகம் எதை வெளியிட வேண்டும், எதை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்வது அவர்களது உரிமை. அதற்கு அவர்கள் எந்த விளக்கமும் தரத்தேவையில்லை. இதில் பலர் (உங்களிடம் இசைவு கேட்டவரைப்போல) ஏதோ ஜோ டி க்ரூஸின் கருத்து சுதந்திரம் பறிபோய்விட்டதுபோல எதற்கு லபோ திபோ என்று அடித்துக்கொள்கிறார்கள் என்று புரியவில்லை.

    மற்றபடி முதல் 15 பாராக்களில் நீங்கள் கொடுக்கும் தன்னிலை விளக்கங்களுக்கு எந்த அவசியமும் இல்லை. நீங்கள் ஜெயமோகனின் எல்லாக் கருத்துக்களுடனும் ஒத்துப் போக வேண்டுமென்றோ, அவர் உங்கள் ஏதேனும் ஒரு கருத்தோடுகூடக் கட்டாயம் ஒத்துப்போக வேண்டுமென்றோ அவசியம் இல்லை என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். ஜெயமோகனை எதற்கு மேற்கோள் காட்டினேன் என்றால், ஞாநி (உதாரணத்துக்கு) போன்ற ஒருவர் வலதுசாரி பற்றிச் சொன்னதை மேற்கோள் காட்டியிருந்தால் பொருட்படுத்தியே இருக்க மாட்டீர்கள் அல்லவா?

    உங்களுக்கு சமநிலையெல்லாம் ஒன்றுமில்லை, நீங்கள் எழுதுவது அதைத் தலையில் அடித்துக்கொண்டு படிக்கும் மிகச் சிலருக்காக மட்டுமே என்பன போன்ற விஷயங்களெல்லாம் ஏற்கெனவே பலமுறை எழுதிவிட்டீர்கள்.

    கடைசியாக ஒன்று. உங்கள் பாஷையில் நடிகர் விஜய் ‘அற்பர்’. தமிழ்நாட்டில் கிடைக்கப்போகிற மூணு, நாலு சீட்டுக்காக அவரையெல்லாம் பார்த்து ஆதரவு கேட்டுக் கெஞ்சும் நிலையில் மோடியைத் தமிழ்நாடு வைத்திருப்பதற்காகத் தமிழர்கள் ‘உள்ளபடியே’ பெருமிதம் கொள்ள முடியும்!

    ——->>>>>>>>
    நாமெல்லாரும் சாலையோரச் சாக்கடையில்தான் அமிழ்ந்திருக்கிறோம், ஆனாலும் நம்மில் சிலர் நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
    — ஆஸ்கர் வைல்ட்

    அவ்வளவுதான்.

    தங்கள் கருத்துகளுக்கு நன்றி. தமிழகவாசியான பட்சத்தில் அவசியம், நாளை வாக்களிக்கவும். மறுபடியும் நன்றி.

    __ரா.

  2. gopi Says:

    ivarai pondra alla ithai vida arpargalai thaan ungal dravida arivu jeevigal? kenji kondu irunthargal irukirargal endra monnai unmai saravananai pondra mayir pilakku arivu jeevigalukku theriyathu pola.indru therthal mudinthuvittathu vote sathavithathai parthal may 16 andru yaar yaridam kenja pogirargal endru intha so called dravida araivu jeeviku theriyum.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s