தேர்தல் ஜுரம் – சில குறிப்புகள்

April 23, 2014

பத்ரி சேஷாத்ரி அவர்களின் உபயத்தில்  ஆலந்தூர் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆம்ஆத்மிகட்சி  வேட்பாளரும் அணுக்கருவுலை எதிர்ப்பு நிபுணருமான மேதகு ஞாநி சங்கரனார் அவர்கள் நடத்திச் சிறப்பித்த சவப்பெட்டி உற்சவத்தைப் பற்றிப் படிக்க நேர்ந்தது.

அவருடைய ஒருகாலத்திய செல்லங்களான நக்ஸல்பாரிக் குஞ்சாமணிகளின் போராட்டகோஷம்:

தேர்தல் பாதை, திருடர் பாதை!

ஆக,  ஒரு பெரிய சுற்று சுற்றிவந்த நாடகத் தன்மை மிக்க ஞாநி சங்கரனார் அவர்களின் தற்போதைய புதிய கோஷம்:

தேர்தல் பாடை, திருடர் பாடை!

… ஹ்ம்ம்ம்… … என்னவோ போங்க. :-(

மேலதிகமாக  Modern Keechaka Vadham – எனும் நாடகத்தை வேறு நடத்தினாராம் – இது நம்  நவநாகரீக அறிவுஜீவிகளின் ‘மாடர்ன் கீச்சகவாதம்’  – அதாவது கீச்சு கீச்சென்று ட்விட்டரில் கீச்சி மட்டுமே தேர்தலில் வெல்லலாம் என்கிற கோட்பாடான கீச்சகவாதத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாமோ??

எது எப்படியோ — வாழ்க, நமது அறிவுஜீவிகளின் நகைச்சுவையுணர்ச்சி, வளர்க அவர்தம் தொண்டான குண்டு. (அதாவது குடமுருட்டி வகையறா) வெல்க அவருடைய கட்சி, டெபாஸிட்டையாவது!

-0-0-0-0-0-0-0-

2014 தேர்தலில் – பக்கத்தில் உள்ள புதுச்சேரியில் ரங்கசாமி காங்க்ரெஸ் கட்சிக்கும் (=ராதாகிருஷ்ணன்),  நாராயணசாமி காங்க்ரெஸ் கட்சிக்கும்தான் (= நாராயணசாமி) சரியான போட்டி.  மற்றபடி  அஇஅதிமுக (ஓமலிங்கம்), திமுக (நாஜிம்), பாமக (அனந்தராமன்), கம்யூனிஸ்ட் (விசுவநாதன்), ஆம் ஆத்மி (ரெங்கராஜன்) கட்சிகள் எல்லாம் சும்மனாச்சிக்கும் கூடவோடிகள் போலத்தான் இருக்கின்றன…

கடந்த ஒரு வாரத்தில் பல தடவை, வேலை நிமித்தம், அருகிலுள்ள பிள்ளைச்சாவடி (புதுச்சேரி) போக நேரிட்டது. ஆக, இப்படியாகத்தானே நான்கு நாட்களுக்கு முன் காலை சுமார் 10:30 மணிவாக்கில் நண்பருடன், பிள்ளைச்சாவடித் ஒரு தெருமுனையில் பொறுக்கவேமுடியாத இனிப்ப்ப்ப்ப்ப்பான டீ குடித்துக்கொண்டு ஷாக் அடித்தாற்போல நின்று கொண்டிருந்தேன்; ஸிபிஎஸ்ஈ கல்வித்திட்டம் – தமிழ் நாட்டின் சமச்சீரழிவுக் (உபயம்: கருணாநிதி) கல்வித்திட்டம் குறித்த சாதகபாதகங்களைப் பற்றியும் ஏசிக் கொண்டிருந்தோம். இன்னொரு நண்பர் வந்தவுடன் காளாபேட்டை போகவேண்டியிருந்தது. பொழுது போகவேண்டுமே!

… முதலில் தொண்டர்கள் புடைசூழ, நாராயணசாமி வந்தார்.

அவர் வருவதற்கு பத்து நிமிடம் முன்னர் அந்தத் தெருவிலிருந்த வீடுகள் அனைத்திலுமிருந்து சுமார் 120 வாக்காளர்கள் அழைத்துவரப் பட்டனர். தெருமுனையில் (ஈஸிஆர் சாலையில்) நிற்கவைக்கப் பட்டனர். கையில் ஒரு வாக்காளர் பட்டியல் வைத்திருந்த ஒரு ‘தொண்டர்,’  அதில், வந்திருந்தவர்களின் பெயர்களைக் குறித்துக் கொண்டார்.  நாராயணசாமி வருவதற்கு ஐந்து நிமிடம் முன்பு வந்த ஒரு மஹீந்த்ரா ஸ்கார்ப்பியோவிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட கைத்தட்டிகள், அட்டைக் ‘கை’  சின்னங்கள் எடுத்து பகிர்ந்தளிக்கப் பட்டன. ஒரே கசமுசா. சரியாகப் 10:45க்கு நாராயணசாமி கை கூப்பிக்கொண்டே வந்தார். ஒரே கோஷ்டம். வாழ்க கோஷங்களை கைகளை ஆட்டியபடி, விரலை உயர்த்தியபடி ஒரு தொண்டர் படிக்கப் படிக்க, நாராயணசாமி தொகுதிக்குச் செய்ததாகச் சொல்லிய விஷயங்களைச் சொல்லச்சொல்ல —  திரள் ஆவேசமாக வாழ்க வாழ்கவென்றது.  பின் ஒரு மூன்று நிமிடம் போல, நாராயணசாமி பேசினார். சுமார் 30 மீட்டர் மட்டுமே தள்ளியிருந்த எனக்கே ஒன்றும் புரியவில்லை. ஒரே கோஷங்கள். ‘உங்கள் சின்னம், கை சின்னம்!’  நாராயணசாமிக்கு சந்தோஷம். அடுத்த தெருமுனைக்குச் சென்றார். அடுத்த தெருமுனையில் ஸ்கார்ப்பியோ#2 ஏற்கனவே நின்று கொண்டிருந்தது.

அவர் சென்றதும், அட்டைகள் பிடுங்கப் பட்டன. வண்டியில் அடுக்கப் பட்டன. ஸ்கார்ப்பியோ#1 அடுத்த தெருவுக்கு அடுத்ததற்குச் சென்று அங்கே நின்றது.

என் தெருமுனையில் ஜாபிதாவைக் கையில் வைத்திருந்தவர் – வந்திருந்து கோஷ்டம் போட்டவர்களுக்கெல்லாம் பணத்தைப் பகிர்ந்தளித்தார். (ஆண்களுக்கு ரூ100/-; பெண்களுக்கு ரூ50/-; ஒரு கோஷமும் போடாமல் அல்லாடிக்கொண்டிருந்த கிழம்கட்டைகளுக்கு ரூ 20/-); இந்தப் பணம் தனியாக வந்த ஒரு அம்பாஸடர் காரிலிருந்து எடுக்கப் பட்டது.

நாராயணசாமி வருவதற்கு சுமார் அரைமணி முன் ஆரம்பித்த வைபவம், அவர் வந்து பத்து நிமிடங்களில் முடிந்தது. ஒவ்வொரு தெருவிலும் இப்படி!

சரி, சுமார் 11:15 மணிக்கு ராதாகிருஷ்ணன் வந்தார். ஆச்சரியம், ஆச்சரியம் – அதே வரிசைமுறை, ஏறக்குறைய அதே மக்கள். அதே பேச்சு, கோஷ்டங்கள் வேறு, தட்டிகள் வேறு. கொடிகள் வேறு, வண்டிகளும் வேறு. ஆனால் பணப் போங்களிப்பு இங்கேயும்…

(நான் என் நண்பருக்காகக் காத்திருப்பதை விட்டுவிட்டு  சுவாரசியமாகப் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன் – அவர் ஏதோ புதுச்சேரிச் சாலை நெரிசலில் மாட்டிக் கொண்டு வர தாமதமாகிக் கொண்டிருந்தது – அல்லது அவரும் என்னைப் போல, நம் நடைமுறை ஜன நாயகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாரோ என்னவோ!)

அடுத்து நாஜிம் வந்தார். பாவமாக இருந்தது அவரைப் பார்க்க. அவ்வளவு ஜனங்கள் இல்லை. அவர்களுக்கும் எவ்வளவு தடவைதான் வரமுடியும் சொல்லுங்கள்? இருந்தாலும் வந்தவர்கள் கோஷ்டம் போட்டு அட்டைகளை, கொடிகளை ஆட்டிக் கொண்டிருந்தார்கள்.  வண்டியிலிருந்து நாகூர் ஹனீஃபா கட்டைக்கணீர்க்குரலில் திமுக கொள்கைப்(!)பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார்.  நாஜிம் சுரத்தேயில்லாமல் ஏதோ பேசினார்.  அதே வாழ்க கோஷங்கள். அவர் புதுச்சேரிக்காரர் அல்லரானதால் கொஞ்சம் பிரச்சினைபோலத் தோன்றியது.  பாண்டிச்சேரியின் முஸ்லீம் பகுதிகளில் தொப்பியுடன் திரிந்த அவர், பிள்ளைச்சாவடியில் தொப்பியில்லாதவராகக் காட்சியளித்தார் – ஆக, இவர் ஒரு அக்மார்க் ஸெக்யூலர்காரர் தான்! ஒருகால், வெயில்தான் காரணமோ?

ஹ்ம்ம்ம்… எது எப்படியோ, அவர் போனபின் அவருடைய பணம் கொடுக்கும் ஆள்,  ஒவ்வொருவருக்கும் அடுத்த தடவை அதிகப் பணம் கொடுப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.  இந்தப் பணம் வந்து நிற்பதற்குத்தான், கவலையே படாதீங்க – தேர்தலுக்கு முன் இன்னமும் வந்து கொடுப்போம்! அரை நாள் தட்டியைத் தூக்கிக் கொண்டு அவர்கள் வார்டில் தெருத்தெருவாக அலைந்தால் – ஒவ்வொரு பெண்ணுக்கும் 150 ரூபாயும், மதிய உணவுத் திட்ட பிரியாணியும் கொடுப்பதாகவும் சொன்னார்…

இவர்களுடைய வண்டிகள், தட்டிகள், பணப்பெட்டிகள் புறப்பட்டபின் சில நிமிடங்களுக்கு அமைதி. இந்த நூதன ஓட்டுச் சேகரிப்பு ஃபார்மேட் முறைக்கு முன்னர்,  கார்ப்பரேட் நிறுவனங்கள், ஈவென்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனங்கள் பிச்சைவாங்கவேண்டும் போங்கள்!

11:30 மணி வாக்கில் ஒரு தன்னந்தனி டப்பா ஜீப்பில் விளக்குமாற்றை ஆட்டியபடி, பாவப்பட்ட வெள்ளைத் தொப்பியைப் போட்டபடி ரெங்கராஜன் வந்தார். பத்துப் பதினைந்துபேர் நின்றுகொண்டிருந்த தெருமுனைக்கு வந்து –  அவர் பின்னால் விளக்குமாற்றை ஒருவர் ஆட்டிக்கொண்டிருக்க – அவர் பேசினார்: நான் உங்களுக்கு பணம் கொடுக்க மாட்டேன். ஆனால் பணி செய்வேன்.

அசிரத்தையாகக் கேட்டுக்கொண்டிருந்த சில மூதாட்டிகள்  ‘யார்டீ இந்த ஆளு’ எனக் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர் தொடர்ந்து கெஜ்ரீவால் பற்றி, நாற்பத்தொன்பதே நாட்களில் அவர் டெல்லியை ஆண்டவிதம்(!) பற்றி, காங்க்ரெஸ் ஊழல், மதவாத சக்திகள் பற்றி….

இருந்த சொற்ப கூட்டத்தில் ஈயாடவில்லை. வெயில் வேறு பொசுக்கிக் கொண்டிருந்தது. ஒரே கசகசா!  ‘எனக்கு ஓட்டுப் போடுவீர்களா’ எனக் கேட்டார்.

ஒரு மூதாட்டி – ‘நீதான் ஓண்ணுமே குடுக்க மாட்டேண்றியே’ என்றார்.  ரெங்கராஜன்,  ‘நான் பைசா கொடுக்கமாட்டேன்’  என்றார்.  ‘என்னைத் தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு உழைப்பேன்’ என்றார்.

அந்த மூதாட்டி அசராமல்…  ‘அப்போ, ஒங்கிட்ட இருக்கற தொடப்பத்தயாவது கொடுத்திட்டு போ! ரெண்டு வெச்சிக்கினு கீறியே! ஒண்ணைக் கொடு!!’ என்று கேட்டாரே பார்க்கலாம். ரெங்கராஜன் விக்கித்துப் போய்விட்டார் பாவம்.

எனக்கு இந்த கெஜ்ரீவால் கட்சி ஒத்துவராது. அவரை ஒரு படுபுத்திசாலிப் போலி (=ஃபேக் / Fake)  என நினைப்பவன் நான். அமைப்புகளின் பலவீனங்களை உபயோகப் படுத்தி, சாதுர்யமாக தன்னை முன்வைத்து, முன்னேற்றிக்கொள்ள முயல்பவர் (=ஸிஸ்டெம் பீட்டர் / System Beater) எனவும், நிர்வாகத் திறனற்றவர் எனவும் கருதுபவன்.  இருந்தாலும், இந்த ரெங்கராஜன்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. கட்சித்தலைமையும் அவர்களுடைய நெடு நாள் திட்டமும் சரியாக இல்லாதபோது, கூட்டணியில் பப்பரப்பா ஊடகங்கள் மட்டும் இருக்கும் சூழலில் –  பாவம், அடிமட்டத் தொண்டர்களும் என்னதான் செய்யமுடியும்…

பின்குறிப்பு: மதியத்திற்குமேல் ஓமலிங்கம் வந்தாராம். மேற்கண்டபடி விஷயம்தான் – ஒரு மாற்றமுமில்லை; ஆனால் கும்பல் சற்று அதிகம். அனந்தராமன் வரவில்லை. அவர் ரங்கசாமியுடன் ஏதோ புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறார் என நண்பர் சொன்னார்.  இது வதந்தியாக இருக்கலாம். விசுவனாதன் ஒரு தூய மார்க்ஸிஸ்ட் காரர்; அவர் அடுத்த நாள் வந்திருக்கிறார். அவருக்கு உழைப்பாளிகள் மத்தியில் ஆதரவு இருக்கிறது – ஆனால் இக்கட்சி நேர்மையானது – ஆகவே சூது தொடர்ந்து கவ்விக்கொண்டேயிருக்கிறது, பாவம்.

… …. ஆனாலும்,  எப்படியும் புதுச்சேரியின் தொழில்முறை அரசியல்வாதிகளின் “நீ போங்காட்டம் ஆடும்போது நான் கண்டுக்கமாட்டேன், அதே மாரி நான் ஆடும்போது நீயும் கண்டுக்காம இருந்திரு நைய்னா!” எனும் வாழு-வாழவிடு பண்பு தமிழக அரசியலில் இல்லை என்பதை ஒப்புக் கொள்ளவேண்டும்தான்.

-0-0-0-0-0-0-0-

இப்போது தமிழகத்து விழுப்புரம் தொகுதி விவகாரங்களுக்கு வருவோம்.

நம்  ‘திருமங்கலம் ஃபார்முலா’ புகழ் திராவிடக் கட்சிகளின் அடிமட்ட, படுமட்டத் தொண்டர்களுக்கு இரண்டு டென்ஷன்கள் – தாங்கள் பணம் பட்டுவாடா செய்யும்போது பிற திராவிடர் பார்க்கக் கூடாது. அதேசமயம் பிறர் செய்யும்போது மோப்பம் பிடித்து தங்கள் கட்சி மேலாளர்களுக்குச் சொல்லவேண்டும்.

எங்கள் பள்ளி இருக்கும் கிராமம் பொதுவாக அஇஅதிமுக (ராஜேந்திரன்) சார்புடையது. அதனால் பிற கட்சிகளுக்கு அசிரத்தை. இருந்தாலும் நேற்றிரவு இங்குள்ள வாக்காளர்களுக்கு தலா 150 – 300 ரூபாய் என கொடுத்திருக்கிறார்கள் மற்ற கட்சியினர் – இதில் திமுக (முத்தையன்),  தேமுதிக (உமாசங்கர்) அடக்கம். “பணம் வாங்கிக்கிட்டீங்க இல்ல, உங்க மனச்சாட்சி படி போடுங்க!”

மக்கள் அடம் பிடித்ததை அடுத்து, அஇஅதிமுக-வும் இன்றிரவு பணம் கொடுக்கப் போகிறது. அவர்கள் கொடுத்தால், மேலதிகமாக, மறுபடியும் வன்கொடை கொடுக்க திமுக தயாராக இருக்கிறது.

காங்க்ரெஸ் (ராணி), கம்யூனிஸ்ட்(ஆனந்தன்), பஹுஜன் சமாஜ் (கலியமூர்த்தி) கட்சிகள் (இதுவரை) ஒன்றும் கொடுக்கவில்லை. இன்றிரவு அரசியின் சேவகர்கள் வரலாம் என நினைக்கிறேன். ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

மொத்தத்தில் – என் கிராமத்தில் இருக்கும் 2700 போல எண்ணிக்கையில் இருக்கும் வாக்காளர்களுக்கு, எப்படியும் தலா 1500 ரூபாய் கிடைத்துவிடும்.  2700 x 1500 = கிட்டத்தட்ட நாற்பது லட்சம்! ஆக, விழாக்கோலம்தான்! ஊரில் பலர் வாய்களிலும் பல்லிருப்பதை இன்றுதான் தெரிந்துகொண்டேன்.

வருவாய்த்துறை, பொலீஸ் ஸ்டேஷன் போகப் போகிறேன் என்று போனமுறை பயங்காட்டினேன். இந்த தடவை அதுவும் செய்யவில்லை.   பேசாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டு  கொஞ்ச நேரம் ஜேஜே: சில குறிப்புகள் படித்துக் கொண்டிருந்தேன். பின்னர், மன அமைதிக்காக பக்கத்திலுள்ள திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற சிவத்தலமாகிய இரும்பையில் கொஞ்ச நேரம் போல மாலையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அவ்வளவுதான். மன அமைதியும் கிட்டவில்லை.

ஐந்து மணிக்குத் திரும்பிவந்து, மூன்றுவருடம் முன் என் பத்தாம் வகுப்பு மாணவர்களாக இருந்தவர்களில் சிலர் (=7) வீட்டிற்குச் சென்றேன். இது அவர்களுக்கு முதல் தேர்தல். சிண்டைப் பிடித்து அவர்களுக்கு  நேற்றிரவு கொடுக்கப்பட்ட பணத்தை உள்ளூர் மாரியம்மன் கோவில் உண்டியலில் போட்டுவிட்டு, கவலையே படாமல் அவர்கள் மனத்துக்குப் பிடித்த வேட்பாளருக்கு, நாளைக்கு ஓட்டுப் போடச் சொன்னேன்.  பாவம், அவர்களும் நான் சொன்னபடி செய்தார்கள்; நாலு இரட்டை இலை, ஒரு முரசு என்று நாளை இந்த ஐந்து ஓட்டுகள் விழும். ஆக,  தலை நிமிர்ந்து நடப்பார்கள்.  எனக்கும் கொஞ்சம் ரத்தக் கொதிப்பு அடங்கியது. ஒரு வழியாக  இந்தப் பதிவை எழுத ஆரம்பித்தேன்.  (இன்னொன்று: நான் வரப்போகிறேன் என்று தெரிந்துகொண்டு  மற்ற இரண்டு பையன்கள் அவர்கள் வீட்டைவிட்டு ஓடிப் போய்விட்டார்கள்! இவர்கள் இன்னொரு நாள் என்னிடம் மாட்டாமலா போவார்கள்?)

… … இலவசங்களுக்கு நாயாக அலைபவர்களாக நம் மக்களை உருவாக்கிவிட்டார்கள்,  இந்த திராவிடத் தமிழ்ப் பாவிகள்.  தமிழர்களைப் பிச்சைக் காரர்களாக்கிவிட்டார்கள், சுயமரியாதையற்று இளிப்பவர்களாக்கிவிட்டார்கள்! :-(

கர்நாடகா (இங்கு 2 லோக்சபா, 3 சட்டசபை தேர்தல்களில் ஓட்டு போட்டிருக்கிறேன்), ஆந்திராவிலெல்லாம் கூட, இவ்வளவு படுகேவலமாக இல்லை, இந்த நிலைமை…

-0-0-0-0-0-0-

சென்ற லோக்சபா, சட்டசபை தேர்தல்களுக்கு – உடல்ரீதியாக, எழுத்து-பேச்சு ரீதியாக அதிகம் உழைத்தேன் – அதுவும் வாரக்கணக்காக. ஆனால் இந்த முறை நான் வசிக்கும். சார்ந்திருக்கும் சமூகத்துக்கு அதன் உள்ளார்ந்த கோட்பாடுகளுக்கு மதிப்புக் கொடுத்து, பள்ளியின் ஓயாத வேலைகளால் அலைக்கழிக்கப்பட்டு – பதிவுகளை எழுத மட்டுமே செய்திருக்கிறேன். இதற்கும் உழைப்பும் மாளா மகாமகோ நீள தொலைபேசல்களும் இருந்தனவென்றாலும் — தேர்தலுக்கென்று ஓடியாடி ஒரு வேலையும் செய்யவில்லை. செய்யாததில் வருத்தமும் இல்லை.

மோதி, குஜராத், நல்லாட்சி  பற்றி எழுதுவதற்கு சுமார் 70 பக்கங்களுக்கு என – அவருடைய குறிப்பிடத் தக்க சுமார் 30 திட்டங்கள் பற்றி, மக்களின் ஆதரவு பற்றியென சுருக்கமான குறிப்புகள் இன்னமும்  இருக்கின்றன – இவற்றை விரித்தால், பதிவுக்கு 1000 வார்த்தைகள் கணக்கில், இன்னமும் சுமார் 80-90 பதிவுகள் வரலாம். ஆனால் செய்வதாக இல்லை. சந்தோஷப் படுங்கள். தேவமைந்தனை ஸ்தோத்தரியுங்கள். அல்லேலுயா. அல்லேலுயா. நீங்கள் ரட்சிக்கப் பட்டீர்கள். நாயுடுஹாலைச் சரணடைந்தவர்கள் பாக்கியவான்கள். ப்ராலோக ராஜ்ஜியம் அவர்களுடையது. ஆமென்.

… … ஆனால் ஒன்று சொல்லவேண்டும்:  இந்த எழுதாமை ‘எவ்வளவு தடவை திரும்பித் திரும்பிச் சொன்னாலும் கோத்ரா  2002 மதவெறி சிறுபான்மை என்று பொத்தாம் பொதுவாக வாயோர நுரைதள்ள, மூக்கிலிருந்து சளியொழுக, குடல்வாயுக்களை வெளியேற்றிக்கொண்டு தொடர்ந்து உளறிக் கொண்டேயிருக்கிறார்கள்’ என்பதால் உண்டான பொறுமையின்மையினால் இல்லை – ஏனெனில் எனக்கு நம் தமிழகக் கருத்துதிர்க்கும் குளுவான்களைப் பற்றித் தெரியும் – இதற்கு அப்பாற்பட்டு சிந்திக்க, செயல்பட அவர்களுக்கு ஏலாது.

மாறாக, எனக்கு பலவிதமான வேலைகள் செய்யப் படுவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றன. அடுத்த 3 மாதங்களில் நான்கு வட்டார இளைஞர்களுக்கு அறிவியல், கணித அடிப்படைகளைக் கொடுப்பதாக சொல்லியிருக்கிறேன், முடிந்தால் கொஞ்சம் கம்பராமாயணத்தையும், மின்னியலையும். இந்தப் பையன்களுக்கு ஒரு மாதம் முன்னமே இந்த உதவியைத்தொடங்கியிருந்தாலும், இதுவரை  ஒவ்வொரு நாளுக்கும் ஒன்றரை மணிநேரத்துக்கு மேல் எனக்குச் செலவிடமுடியவில்லை. எனக்கு அரசியல் பிடிக்கும் என்றாலும் – தேர்தல் எனும் விழாவுக்கு அப்பாற்பட்டு  வாழ்க்கையில் பலப்பல விஷயங்கள் இருக்கின்றன. ஆகவே.

சிறுபிள்ளைகளுடன் மின்னியல் பொருட்களை, சிறு எஞ்சின்களை, அறிவியல்-கணித மாதிரிகளை உருவாக்கும் திட்டம் இருக்கிறது. பள்ளிக்காக ஒரு பெரிய காய்கறித் தோட்டம் போடும் எண்ணமும் இருக்கிறது. அடுத்த மூன்று மாதங்களில் படித்தேயாக வேண்டிய இறந்தமரப் புத்தகங்கள் என நூற்றுக்கணக்கில் குவிந்திருக்கின்றன. குடும்பஸ்த வேலைகளும். காந்தியாயணம் வேறு மறுபடியும் தொடங்கவேண்டும். ஃபுகுஷிமா, கதிரியக்கம் பற்றியும் எழுதவேண்டும். ஆகவேயும்தான்.

பார்க்கலாம். அயர்வாக இருக்கிறது.

இதனைப் படிக்கும் அந்தப் பாவப்பட்ட, சுமார் 50 பேர்களை, அவர்கள் தமிழகத்தில் வாழும் பட்சத்தில் – நாளை – 24/04/2014 அன்று அவசியம் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

நரேந்த்ர மோதி!

7 Responses to “தேர்தல் ஜுரம் – சில குறிப்புகள்”

  1. க்ருஷ்ணகுமார் Says:

    அன்பின் ராம்……….

    17 to 23 – தினம் தொடர்ந்து கருத்தாழமிக்க ஒரு பதிவு. வெல் டன்.

    எழுதுவது ……….. பாங்காக எழுதுவது……….. உங்களுக்கு ஊக்கம் தருகிறது என நினைக்கிறேன்.

    நான் எழுத வேண்டும் என்று நினைக்கையில்………முதுகு வலி, மூட்டு வலி இத்யாதியெல்லாம் ஏன் வருகிறது தெரியவில்லை.

    \\ அந்த மூதாட்டி அசராமல்… ‘அப்போ, ஒங்கிட்ட இருக்கற தொடப்பத்தயாவது கொடுத்திட்டு போ! ரெண்டு வெச்சிக்கினு கீறியே! ஒண்ணைக் கொடு!!’ என்று கேட்டாரே பார்க்கலாம். ரெங்கராஜன் விக்கித்துப் போய்விட்டார் பாவம். \\

    You really made my day. விழுந்து விழுந்து சிரித்தேன் என்றால் மிகையாகாது. கூடவே ஒரு க்ஷணம் ஆட்டோ ட்ரைவரிடம் மாலை வாங்கிக்கொண்டு அடுத்தக்ஷணம் பளார் பளார் என்று புன: வாங்கிக்கட்டிக்கொண்டு………… காந்தி சமாதி முன்னர் நாலு நாள் கொல்லைக்குப் போகாதவன் போல மூஞ்சியை வைத்துக்கொண்டு………….. வாதாவரண ப்ரதூஷணம் செய்தபடி……. உட்கார்ந்திருந்த ஏகே 49 வேறு நினைவுக்கு வந்து தொலைத்தார். புளகாங்கிதம்.

    இதை என் தில்லி மித்ரரிடம் சொல்ல …………

    350 X 2 = 700 …….. நான் கட்டாத பிஜிலி பில்லுக்கு எனக்கு சப்சிடி கொடுத்த கேஜ்ரிவால் எங்கே எனக்கு ஒண்ணும் பண்ணாத பாஜக மற்றும் காங்க்ரஸ் எங்கே……….நான் வெளக்கமாத்துக்குத் தான் ஓட்டுப்போட்டேன் என்றார்………மித்ரர் அக்கவுண்ட் ஆப்பீசர். இப்போது சிரிப்பதா அழுவதா தெரியவில்லை.

    இல்ல…….. இது எனக்கு தேவையாங்கிறேன்.

    \\ அடுத்த 3 மாதங்களில் நான்கு வட்டார இளைஞர்களுக்கு அறிவியல், கணித அடிப்படைகளைக் கொடுப்பதாக \\

    இப்படி மட்டிலும் வேலை செய்ய புத்திகொடு பழனியாண்டவா என்று ப்ரார்த்திக்கிறேன்.

  2. nparamasivam1951 Says:

    ஆம். அவசியம் ஒட்டு போடா போகிறேன், NDAக்கு

  3. nparamasivam1951 Says:

    ஒட்டு போடப் போகிறேன் NDAக்கு என வாசிக்கவும்.

  4. Raghavan Raman. Says:

    அன்புள்ள ராமசாமி, வணக்கம்.
    நான் தங்கள் வாசகர்களில் ஒருவன். உங்கள் ஆசுவாசத்திற்கு – எனக்கு ஓட்டு இல்லை. ஒரு காலத்தில் இருந்தது, ஆனால் ஒருமுறை கூட என் ஆள்காட்டி விரலில் கறை படிந்ததில்லை. ஒவ்வொரு முறையும் பிற்பகல் நான் ஓட்டு பதியு செய்ய வரும் முன்னரே, என் பெயரில் ஓட்டு பதிவு செய்யப்பட்டு விட்டது.
    உங்கள் இடுகைகளை நான் மிகவும் மதிக்கிறேன். நீங்கள் சொல்வது போல் .. இல்லை இல்லை, அதில் கால் பாகம் கடைப் பிடித்தாலே இந்தியா 5 வருடங்களில் ஒரு வல்லரசு ஆகிவிடும். உங்கள் கனவு நினைவேறட்டும்!

    அன்புடன்,

    ராகவன் ராமன்.

  5. Venkatesan Says:

    இரும்பை மாகாளம் கோவில் அழகானது. அமைதியான ஆலயம். ஆனால், மூல சந்நிதி முழுதும் உலோக தகடு அடித்திருப்பது எனக்குப் பிடிக்கவில்லை.

  6. A.SESHAGIRI Says:

    திரு.ராமசாமி அவர்களுக்கு,இந்த தேர்தலிலும் மோதி அவர்கள் பிரதமர் ஆவதற்காக.,தங்கள் செய்த எழுத்துப்பணி மிகவும் போற்றுதலுக்கு உரியது. கடந்த 05.04.14 முதல் 23.04.14 வரை ஏறக் குறைய தொடர்ச்சியாக வந்த கட்டுரைகள் எல்லாம் மிகவும் அருமை.அவை இன்னும் சற்று முன்பு வெளி வந்திருக்கலாம்.இன்னும் 80-90 பதிவுகள் வரை எழுத விஷயம் இருக்கிறது என்று எழுதியதை படிக்கும் போது சற்று ஆதங்கமே ஏற்படுகிறது(அவை வெளிவராது என்பதை நினைத்து).அது சரி உங்களை மாதிரி விஷயம் தெரிந்தவர்களை எல்லாம் தகுந்தபடி தமிழ்நாடு பி.ஜே பி.கட்சி பயன் படுத்தி கொள்ளாததை நினைத்து மிகுந்த வருத்தமே ஏற்படுகிறது.(முக்கியத்துவம் வாய்ந்த நீல கிரி தொகுதியில் ஒழுங்காக வேட்பு மனுத்தாக்கல் செய்ய துப்பு இல்லாத இவர்களிடம் வேறு எதைத்தான் எதிர் பார்க்க முடியும்).மோதி அவர்களை எந்த வகையிலும் இப்பொழுது பிரயோஜனம் இல்லாத ரஜினி அவர்களை சந்திக்க செய்து அவரின் பொன்னான நேரத்தை பாழ் படுத்திய புத்திசாலிகள் தானே இவர்கள்!.கடைசியாக இவர்களின் கந்தர கோளங்களை எல்லாம் மீறி தமிழ்நாட்டில் பி.ஜே.பி கூட்டணி கணிசமான இடங்களை வென்றால் அதில் தங்களுக்கும் ஒரு பங்கு உள்ளது என்பதை மறுக்க முடியாது.

  7. kakkoo Says:

    பலருக்கு நக்கல் நையாண்டி எப்போவாவது ஆங்காங்கே வந்து விழும் ஆனால் உங்களுக்கு முதல் வார்த்தையிலிருந்து பதிவின் கடைசி வார்த்தை வரை மகா பயங்கர நக்கல்….. நக்கல்….. – satire. தங்களின் ப்ளாக் எனக்கு சமீபத்தில்தான் அறிமுகமானது. ஒவ்வொரு ஆக்கத்தையும் படிக்க ஆரம்பித்துள்ளேன். எனக்கு பிடித்த தமிழ் ப்ளாக் R P ராஜநாயஹம் தான். இபோழுது ஒத்திசைவு அதற்கும் முன்னால் வந்து நிற்கிறது.
    :))


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s