“மோதி-யின் குஜராத்தில் சுற்றுப் பயணம் செய்ததில் நாங்கள் பார்த்ததெல்லாம் ரோட்டோர ஒண்ணுக்கடிப்பாளர்களைத்தான்!”

March 29, 2014

:-) உண்மைதான்! இப்படிப்பட்ட பார்வையுடனும் சொந்தப் பணத்தைச் செலவழித்துக்கொண்டு அரைசியல் (கவனிக்கவும், அரசியல் அல்ல) சுற்றுலா போகிறவர்கள், கருத்துதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள்!

-0-0-0-0-0-0-0-

நான் குஜராத்தில் (தொழில் ரீதியாக) பயணம் செய்திருக்கிறேன் என்றாலும், நரேந்த்ர மோதி ஆட்சிக்கு வந்தபிறகு அங்கு செல்லவில்லை. கட்ச் பகுதியில் பணி செய்துகொண்டிருக்கும் பிஹாரி நண்பர் கடந்த 11 வருடங்களாகக் கூப்பிட்டுக் கொண்டேயிருக்கிறார் – பல காரணங்களால் அங்கு செல்லவே முடிவதில்லை. இர்மா (IRMA) கல்விசாலையிருக்கும் ஆனந்துக்கும் போயிருக்கவேண்டும், போகவில்லை. ஐஐஎம் பேராசிரியரான அனில்குப்தா அவர்களைப் பார்த்துப் பேசவேண்டுமென பல பத்தாண்டுகளாகத் திட்டம். ஹ்ம்ம்ம்.

ஆனால், என் வயதையொத்த (=மிக்க அனுபவமுடைய), நான் மிகவும் மதிக்கும் சில ஐஏஎஸ் அதிகாரிகளை (குஜராத் கேடர்) தனிப்பட்ட முறையில் அறிவேன் – இவர்களுடைய அடிப்படை உற்சாகத்தையும், நேர்மையையும், படிப்பறிவையும் செயலூக்கத்தையும் நிறைய – நேரிடையாகவே தெரிந்துள்ளேன். இவர்களில் இருவருடன் தொடர்பில் உள்ளேன்.

இதைத் தவிர சில குறிப்பிடத்தக்க நண்பர்கள் (தொழில்முறை, ஸூஃபி இசை போன்றவை மூலம் அறிமுகமானவர்கள்) மூலம் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். (இவற்றில் ஒரு நண்பர் ஒரு பழுத்த விசுவாசி முஸ்ஸல்மான் என்பதையும் குறிப்பிடுகிறேன்)

இவர்கள் மூலமாகவும் – மற்றபடியும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தினை, அங்கு இருப்பதாகச் சொல்லப்படும் ‘ஹிந்துத்துவா’வை அறிய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 80 புத்தகங்களாவது இது தொடர்பாகப் படித்திருப்பேன். ஆனால், கண்டகண்ட வாராந்தரிகளை, நாளிதழ்களைப் படிப்பதில்லைதான். இருப்பினும் – சந்தேகங்கள், மேலதிகமான விஷயங்கள் தேவைப் படும்போது மேற்கண்டவர்களைத் தொடர்பு கொண்டு அவற்றை நிவர்த்தி செய்து கொள்கிறேன்.

ஆனால் – என் தம்பி குஜராத்தின் அஹ்மெதாபாத் நகரில், ஒரு வங்கியின் உச்சாணிக் கிளையில் சில வருடங்கள் பணி புரிந்திருந்தாலும்,  குஜராத் அரசு நிறுவனங்களுடன் பலவகைகளிலும் தொடர்பில் இருந்தானானாலும் – அவனிடம் இதனைப் பற்றி ஒன்றும் பேசியதில்லை! (இப்போது யோசித்தால், ஆச்சரியமாகத்தான் இருக்கிறது – இவனுடனும் கூடப் பேசலாம்தான்)

மேற்கண்டவற்றை, நான் எதற்குச் சொல்லவருகிறேன்/சொல்லவந்தேன் என்றால்:

 1. மோதியின் ஆட்சி/கொள்கைகள் காரணமாக குஜராத் நிஜமாகவே, நீண்டகால ரீதியில், பெரும்பாலும் ஊழலற்று ஒளிரும் என்பததைத்தான்.
 2. மோதியைப் பற்றிய பல எதிர்மறை செய்திகள் – அநியாயத்துக்கு அள்ளி வீசப்படும் பொய்கள் என்பதையும் தான்.
 3. பல துறைகளில், புள்ளியியல்/வதந்திக் கந்தறகோளங்களுக்கு அப்பாற்பட்டு ஆழமான, செறிவான நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றனதான்.
 4. மோதிக்கு எதிராகத் திரண்டிருக்கும் பட்டாளம் ஒரு சொறிப் படைதான் – அவர் மேலெழும்பினால் அதற்கு ஏற்படக் கூடிய பிரச்சினைகள் பற்றிய அதீதமான மிரட்சியில் பயபீதியில் இருக்கிறது இந்தப் படை என்பதையும்.

என்னுடைய தரவுகள் சுட்டும் விஷயம் இதுதான். மன்னிக்கவும். நான் ஒரு தொழில்முறை வளர்ச்சி எதிர்ப்பாளனோ, தொழில்முறை மோதி வெறுப்பாளனோ அல்லன்.

அதேசமயம் – நான் தொழில்முறை மோதி ஆதரவாளனும் அல்லன் – எனக்கு அவர் மூலமாகவோ /அவர் சார்பிலேயோ நிச்சயமாக உதவிகள்/ஆதாயங்கள் இல்லை.  ஆனால், போகிற போக்கில் 2002 கோத்ரா மதவெறி கலவரம் இந்துத்துவா பொந்துத்துவா என பொத்தாம்பொதுவாக உளறுபவன் அல்லன். தேவரீர், என்னை மறுபடியும் மன்னிக்கவும்.

-0-0-0-0-0-0-0-

பொதுவாக, யாராவது என்னைப் பார்த்துப் பேச (=ஏச) வேண்டும் என (எனக்குப் புரியவேபுரியாத வகையில்) வந்தே தீருவேன் என அடம் பிடித்தால் – முடிந்தவரை ஏதாவது சால்ஜாப்பு சொல்லி அதனை தவிர்த்து விடுவேன்.  என்னுடைய பலதரப்பட்ட பட்ட எதிர்மறை அனுபவங்களினால்தான் இப்படி. எனக்கு விசிலடிச்சான்குஞ்சிளைஞர்களிடம் வெறுப்பு இல்லை. வெறும் அயர்வுணர்ச்சிதான். ஆனாலும், சில சமயங்களில் கொஞ்சம் களைப்படைந்த தருணங்களில் இந்தச் சந்திப்புகளுக்கு ஒப்புக்கொண்டு விழித்திருக்கிறேன். :-(

ஆக – இக்காலங்களில் இந்த மோதி தொடர்பாக சில இளைஞர்கள் (பெரும்பாலும் பொத்தாம்பொதுவான, அனுபவங்களால் செறிவுபெராத இடதுசாரிப் பார்வையுள்ளவர்கள் – இவர்களுக்கெல்லாம் மோதி மேல் ஒரு இனம் புரியாத தொடர்ந்த, அர்த்தமற்ற வெறுப்பு! பயமோ?) குழாம்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்லியிருக்கிறேன் – சும்மனாச்சிக்கும் கந்தறகோள நாளிதழ்களைப் படித்துவிட்டு, தொலைக்காட்சிச் சேனல்களை மேய்ந்து விட்டு – கண்டமேனிக்கும் கருத்துகளை உருவாக்கிக் கொள்ளவேண்டாமென்று. அனுபவங்களை வளர்த்திக் கொள்ளுங்கள், பரவலாக, ஆழமாகப் படியுங்கள் – நேர்மையாளர்களிடம் (=என்னிடமல்ல, நான்தான் நடுநிலைமையற்றவனாயிற்றே!) பேசுங்கள் என்று. ஆட்சி முறைகள், அதிகாரப் பரவலாக்கம், மேலாண்மை, காலனியாதிக்கத்துக்கு முந்தைய பண்டைய இந்தியாவின் சமூக அமைப்புகள், நிர்வாக முறைகள் போன்ற பல விஷயங்களைப் பற்றியும், மேற்கத்திய, கிழக்கத்திய வகை மேலாண்மை முறைகள், அரசியல் அடிப்படைகள்,  பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அவற்றை நிர்வாகம் செய்வதற்கும் உள்ள வித்தியாசங்கள், அதிகாரவர்க்கங்கள் பணிசெய்யும் முறை , நடைமுறை அரசியல் — போன்றவை பற்றியெல்லாம் படியுங்கள் – உலகம் எப்படி நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் – கொஞ்சமாவது களப்பணி செய்யுங்கள், பின்னர் மோதியை தாராளமாக எதிர்க்கலாம் என்று. … முதலில் நமக்கு ஒன்றுமே தெரியவில்லை என்பதை உணர்ந்ததற்குப் பின் தான் விஷயங்களைக் கொஞ்சமாவது அறிய ஆரம்பிக்க முடியுமென்று. … … என்று. … … என்று…

cynicism_colbert

ஆய்ந்து அறியுங்கள், நான் சொல்வதையெல்லாம் சரியாகவோ  தவறாகவோ எடுத்துக் கொள்ள வேண்டாம்; எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையோடு, விட்டேற்றி மனப்பான்மையை ஒதுக்கி, ஸினிக்கலாக எதையும் பார்ப்பதை விடுத்து – எதை எடுத்தாலும் எதிர்த்துப் போராடாமல், எதற்காகவாவது ஆதரிப்பு கொடுப்பது அதற்காக உழைப்பது எனக் கொஞ்சமாவது பணிசெய்ய கற்றுக் கொள்ளுங்கள் சொன்னேன். நானாகப் போய் அவர்களிடம் ‘அறிவுரை’ சொல்லவில்லை – அவர்களாகத் தான் கேட்டார்கள். :-(

… மேலும் நேரில் சென்று ‘குஜராத்தில் என்ன நடக்கிறது’ பார்த்தால்தான் ஓரளவுக்காவது விஷயங்கள் தெரியவருமென்றும் சொன்னேன் – சிலரை அறிமுகம் செய்தேன்; ஆனால், இந்தக் கடைசிக் கோரிக்கை / விண்ணப்பம் (அறிவுரையல்ல) எப்படிப்பட்ட மகாமகோ தவறு என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு அவ்வளவு மூளையிருந்திருக்கவில்லை அப்போது.

இது நடந்து சுமார் இரண்டு மாதங்களிருக்கும். இந்தக் குழாம்களில் உள்ள இரண்டு பையன்கள் (இவர்கள் இந்தக் குழுக்களில் பின்னர் வந்து சேர்ந்தவர்கள்!) விமானமேறிப் பறந்து குஜராத் சென்று ஏழு நாட்கள் செலவழித்துச் சுற்றி பல விஷயங்களை ‘நேரில் பார்த்து’ பலருடன் ‘நேரில் பேசி’ பார்த்துவிட்டு வந்திருக்கின்றனர்.

சுபம்.

ஒரு வாரத்திற்கு முன், என்னைப் பார்க்க வீரமிதப்புடன் வந்திருந்த இந்தப் பையன்களுடன் (சுமார் 27/28 வயதினர்) பேசிக் கொண்டிருந்தேன். அவர்களுடைய முடிவு: குஜராத் டம்மிபீஸ். மோதி சர்வாதிகார பரப்புரைவாதி (dictatorial propagandist!). ஏன் என்று கேட்டேன். இரண்டு ஃபோட்டோக்களைக் காட்டி ஏதோ சொன்னார்கள்.

அதிசுபம். அவர்களுக்கு தாங்கள் உபயோகிக்கும் வார்த்தைகளின் சரியான அர்த்தங்கள் புரிந்திருந்தாலே அதிகம்!

-0-0-0-0-0-0-0-

எனக்கு, பொதுவாக நம் இளைஞக் கொழுந்துகளின்பேரில், அதுவும் — உள்ளீடற்று, படித்த / காற்றுவாக்கில் வதந்திகளைக் கேட்டும், அனுபவங்களைக் கடன் வாங்கியும் உடனே அவற்றையும் செரிக்கக்கூடச் செய்யாமல் அவற்றை வாந்தி எடுத்தும் — அலைந்து கருத்துதிர்த்துக் கொண்டிருக்கும் கொழுந்துகளின் பேரில் துளிக்கூட  மரியாதையில்லை. (இம்மாதிரியான பொதுவிதிக்கு சில மதிக்கத்தக்க, போற்றத்தக்க  விதிவிலக்குகளும் இருக்கிறார்கள்தாம், சரியா?)

ஆக, அவர்களுடைய சுற்றுலாவில் அவர்கள் செய்தது: ஆலங் போய், கப்பலுடைப்புத் தொழிலைப் பார்த்தது; தண்டி, சூரத், ராஜ்கோட், ஸபர்மதி ஆஸ்ரமம், ஸ்வாமிநாராயண் கோவில் பார்த்தது; கட்ச் போய் காட்டுக் கழுதைகளைப் பார்த்தது; உயர்தர ஹோட்டெல்களில் உணவும் பானமும் உட்கொண்டது. மனித உரிமைக்காரக்குளுவான்கள் (காங்கிரஸ் கட்சி) சிலருடன் பேசியது. என் நண்பர்களான ஐஏஎஸ் அதிகாரிகளையும் போய்ப் பார்த்து பேசியிருக்கிறார்கள், உணவருந்தியிருக்கிறார்கள். என்னுடைய முஸ்லீம் நண்பர், ஐந்து நிமிடத்திற்குப் பின் இவர்களுடன் பேச ஒன்றுமில்லை என்று கிளம்பி விட்டார்.

குஜராத் நிலைமை: மின்சார வெட்டு இருக்கிறது. ரோட்டோர குழாய்களில் சிலவற்றில் தண்ணீர் வருவதில்லை. சாலைகள் மோசம். சுற்றுலாவுக்கு முக்கியத்துவமே கொடுக்கவில்லை. எங்கும் மலமும் குப்பையும். முஸ்லீம்களும், க்றிஸ்தவர்களும், ஜைனர்களும்(!) உயிர்பயத்தில் வாழ்கின்றனர். எதற்கெடுத்தாலும் ஊழல். மோதிக்கும் ஸ்விஸ் வங்கியில் பணம் இருக்கிறது. மோதி ஒரு ஆணவமிக்க சர்வாதிகார பரப்புரையாளர் (arrogant dictatorial propagandist!). ஹிட்லர். பார்ப்பன-பனியா மேலாதிக்கத்தைத் தூக்கிப் பிடிப்பவர்! (ஆறே நாட்களில் எப்படித்தான் இவ்வளவு விஷயங்களைத் தெரிந்து தெளிந்தார்களோ!)

ஆலங்: எங்கு பார்த்தாலும் ஒரே உடைந்த சாமான்கள். ஒரே பீதியளிக்கும் இடம். சுற்றுச்சூழல் நாசம். மனிதர்கள் எப்படி இங்கே வேலை செய்கிறார்கள் என்றே தெரியவில்லை! இதுதான் மோதியின் குஜராத்! (இந்தக் குளுவான்கள் முன்னேபின்னே ஒரு பெரிய தொழிற்சாலைக்கும் போனதில்லை, ஒரு சுரங்கத்துக்கும் போனதில்லை. ஏன், ஒரு துறைமுகத்துக்கோ, ஒரு ஸ்க்ரேப்யார்டுக்கோ கூடப் போனதில்லை; எப்படிப் பொருட்கள் மறுசுழற்சி செய்யப் படுகின்றன என்பதையும் புரிந்து கொள்ளவில்லை)

சூரத்: காய்கறி மார்க்கெட்டில் – ஒரு செத்த பெருச்சாளியைப் பார்த்திருக்கிறார்கள். படத்தைக் காண்பித்தனர். ப்லேக் (கொள்ளை நோய்) வந்ததற்குப் பின்னும் மோதி அரசு ஒரு சுக்கும் செய்யவில்லை! (இவர்களுக்கு எலிக்கும் பெருச்சாளிகளுக்கும் கூட வித்தியாசம் தெரியவில்லை!)

ஸபர்மதி ஆசிரமம்: காந்தி ஆசிரமத்தின் கழிப்பறை ஒன்றைப் பற்றிய படம். அசுத்தமாகத் தான் இருந்தது. மோதி அரசு, காந்திக்குக் கொடுக்கும் மரியாதை இதுதான்! (காந்தி சொல்லும்  ‘சாக்கடை ஆய்வாளர்கள்’ இன்னமும் நம்மிடையே வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!)

ராஜ்கோட்: ரோட்டோரத்தில் ஒண்ணுக்கு அடிப்பவர்கள் இங்கு நிறைய! இதுதான் மோதி ராஜ்ஜியத்தின் சுகாதாரம்! (ராஜ்கோட்டின் மகத்தான சிறுசிறு தொழிற்சாலைகள் பற்றி இவர்கள் கவலையே படவில்லை)

அஹ்மெதாபாத்: முஸ்லீம் பிச்சைக்காரர்கள் தான் நிறைய! மோதி ஆட்சியில் முஸ்லீம்களின் பொருளாதார நிலை வீழ்ச்சிமட்டும்தான் அடைந்திருக்கிறது! (அப்படியா என்ன? எனக்கு இது பற்றி கருத்து இல்லை; ஆனால், ஐஏஎஸ் நண்பர்களிடமிருந்து நகைப்புதான் பதிலாக வந்தது!)

கட்ச்: காட்டுக் கழுதைகளின் சரணாலயம் சரியாகவே பராமரிக்கப் படவில்லை.  பசுமையோ மரம் வளர்ப்பதோ இல்லவேயில்லை; இயற்கையைச் சுரண்டுவதுதான் மோதி அரசின் லட்சணம். மரங்கள் இல்லாவிட்டால் எப்படி மழை பெய்யும்?  (இந்தப் பையன்களுக்கு, இந்தச் சரணாலயம் ஒரு பாலைவனம் போன்ற பகுதியில் அமைந்திருப்பது தெரியவேயில்லை! ஹேபிடேட் என்றால் என்ன, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்றால் என்னவென்றே தெரியவில்லை. நல்லவேளை, அங்கு பனிப்பொழிவு இல்லை, நீர்வீழ்ச்சியில்லை, மழைக்காடுகள் இல்லவேயில்லை என்றெல்லாம் சொல்லவில்லையே என எனக்கு ஆறுதலாகவே இருக்கிறது!)

ஸ்வாமி நாராயண் ஆலயம்: இதனைப் பற்றியும் நக்கலாகச் சொன்னார்கள். (நான் குறிப்பெடுத்துக் கொள்ளவில்லை, நினைவிலும் இல்லை. எனக்கு வெறுத்துவிட்டது.)

-0-0-0-0-0-0-0-0-0-

இந்தக் குளுவான்களைப் பற்றிய என்னுடைய புரிந்துகொள்ள முயலல்கள் – ஆனால் அறிதல்களல்ல:

 • இவர்கள், குஜராத் ஆய்வுக்காக ஹோம்வர்க் (பின்புல அறிவைப் பெறுதல்) என ஒன்றும் செய்யவேயில்லை – நாலு நாளிதழ்களையும் ட்விட்டர் ஃபேஸ்புக் பதிவுகளையும் வைத்து – போய்வந்தே விட்டார்கள். ஏன் இப்படி திட்டமே போடாமல் சென்றீர்கள் என்றால், இது ஒன்றும் பெரிய விஷயமில்லை  ‘we winged it’ – அதாவது ‘ஒப்பேற்றி விட்டோம்’ என்றார்கள்! எதைப் பார்க்கவேண்டும், ஆராய வேண்டும் – என்றெல்லாம் ஒரு விதமான திட்டமுமில்லாமல் எதைக் கண்டாலும் கரித்துக்கொட்ட மட்டுமே தயாராக இருந்திருக்கிறார்கள்! இந்தத் முன்னமே யோசித்துத் திட்டமிடும் எழவையே விடுங்கள் – மற்றவகையிலும் இவர்கள் நகைக்கத்தக்க அளவிலேயே ‘உண்மைகளை ஆராய்ந்து’ வந்திருக்கிறார்கள்!
 • இவர்களுக்கு கட்சி, அரசியல், ஜன நாயகம், தேர்தல் – என ஒரு இழவைப் பற்றியும் அடிப்படை புரிதல்களே இல்லை.
 • நிதி நிர்வாகத்தையே விடுங்கள் – அடிப்படை நிர்வாகம் பற்றியே பூஜ்ய அறிவுதான். இவர்களால் தங்கள் வாழ்க்கையைக் கூட, குடும்பத்தைக் கூட நிர்வாகம் செய்ய முடியாமல் இருக்கும் போது, மோதிக்கு இவர்கள்  நிர்வாக அறிவுரை கொடுக்கும் அளவிற்கு மூளையிருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.
 • புள்ளியியலின் எல்லைகளைப் பற்றி, மானுடவியல், பூகோளம், வரலாறு, பொருளாதாரம், அறிவியல் என ஒரு துறையிலும் இவர்களுக்கு ஆழமில்லை, அகலமுமில்லை. (இவர்கள் இருவரும் தகவல்தொழில்(!)நுட்ப(!!) ஐடி குளுவான்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?)
 • Map is NOT the territory –  எனும் முக்கியமான வாசகத்தை இவர்கள் உணரவேயில்லை. அதாவது நம்மிடம் இருக்கும் எண்ணங்கள், கருத்துகள், முன்முடிவுகள் மூலமாக மட்டுமே எல்லா விஷயங்களையும் பார்த்தால், உண்மையைக் கண்டறிதல் என்பதே முடியாதென்பது. இவர்களுக்கு மோதி ஆட்சி, குரூரமான, வளர்ச்சியில்லாத ஆட்சி – ஆகவே, தங்கள் வாதங்களுக்கு வலு சேர்க்கமட்டுமே முயன்றிருக்கிறார்கள்; இத்தனைக்கும் இவர்கள் போனது ஒரு ‘உண்மை நிலவரம் அறியும்’ குழுவாக! நம்பவே முடியவில்லை!
 • அரசு நிர்வாகம் பற்றி அறிய, மின்சாரப் பகுப்பு பற்றி அறிய, தொலை நோக்குத் திட்டங்கள் பற்றி அறிய, கல்வி, ஆரோக்கியம் பற்றியெல்லாம் பல மக்களுடன் / பணியாளர்களுடன் பேசவோ, எப்படி ஒரு ஸர்வே ஒன்றினை வகுத்தெடுப்பது என்பதையோ – ஒன்றுமே புரிந்து கொள்ளாமல், அடிப்படைகளைக் கூடப் புரிந்து கொள்ளாமல் போய்வந்தும் விட்டார்கள்.
 • இவர்களுக்கு, தாங்கள் சொல்வதெல்லாம் பொய் என்பதோ, தாங்கள் ஒரு இழவையுமே புரிந்துகொள்ளக் கூடிய நிலையில் இல்லாததோ – இவற்றைப் பற்றிய அறிதலேயில்லை. குஜராத் போய் உண்மையாகவே எல்லாவற்றையும் புரிந்து கொண்டுவிட்டதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்!
 • தனிப்பட்ட முறையில் ஏதாவது இவர்கள் சாதித்திருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை – ஒரு மானாவாரி பிடெக் இஇஇ சான்றிதழ்; படித்தது இஇஇ-யாக இருந்தாலும் ட்ரான்ஸிஸ்டருக்கும் ட்ரான்ஸ்ப்ரதருக்கும் என்ன உறவு என்பது தெரியாமல் இருந்ததால்  ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பெஞ்சு தேய்த்து விசைப்பலகையடிக்கும் வேலை.  அவ்வளவுதான்.
 • இவர்கள் ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போவதாகச் சொன்னார்கள். எனக்கு விதிர்விதிர்த்துவிட்டது. அர்விந்த் கெஜ்ரீவால் அவர்கள்  எனக்கு அவ்வளவு ஒத்துவரமாட்டார் – இருந்தாலும் அவருக்கு இப்படிப்பட்ட கொடிய நிலை வருவதை நான் விரும்பமாட்டேன்.

… இவர்களுக்கு மோதி பற்றிய வெறுப்பு இன்னமும் இருக்கிறது. இந்த அர்த்தமற்ற, ஆரோக்கியமற்ற தன்மையைப் போக்குவதற்கு என்னால் ஆன அளவு முயன்றேன்; ஆனால், வெட்கத்துடன் என் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்.

இனிமேல், எந்த மோதி-வெறுப்புக் குளுவானிடமும் – போய் மொதல்ல குஜராத்தைப் பாத்திட்டு வாடா, அப்றம் பேசலாம் – என்று சொல்லவே போவதில்லை என உறுதி கூறுகிறேன்.

-0-0-0-0-0-0-0-0-

மேலும், இம்மாதிரி பலர் குஜராத்தைக் குறைசொல்லும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு, அந்தப் பாவப்பட்ட மா நிலத்தைக் கரைத்துக் குடித்துவிட்டதாகவும், மோதியின் சாயத்தை வெளுக்கவைத்து விட்டதாகவும் அறியும்போது – எனக்குச் சிரிப்பு தாளவேயில்லை.

ஆம் மோதி ஒரு பொலரைஸிங் (polarizing) ஆள் தான். அற்பர்களை அவர் பொலரைஸ் செய்கிறார் – மேலதிகமாக, இனம்புரியாத கதிரியக்கத்தால் உசுப்பேற்றுகிறார் என்பதைப் புரிந்து கொள்கிறேன். ஆமென். ;-)

-0-0-0-0-0-0-0-

அவர்கள் படங்களைக் காட்டி பாகங்களைக் குறித்தவுடன், அவர்கள் பேசியதைக் கொஞ்சம் மேலதிகப் பொறுமையுடன் முக்கால் மணிநேரம் போலக் கேட்டுக்கொண்டு  – டீ கொடுத்து, கொஞ்சம் வருத்தத்துடன் – நீங்கள் இனிமேலும் என் நேரத்தை வீணாக்கவேண்டாம் – என்று சொல்லி அவர்களைக் கிளம்பச் சொன்னேன்; அவர்களுக்கு அது பிடிக்கவில்லை.  ‘You are insulting us!” என்றார்கள். நான் அவர்கள் கருத்தை ஆமோதித்தேன். அலுப்பாக இருந்தது.

சென்னை சென்றவுடன் இவர்கள் இருவரும் என் பதிவுகளிலிருந்து ‘unsubscribe’ செய்து விட்டார்கள். Good riddance too!

நான் என் அதிகாரி நண்பர்களைக் கேட்டேன் – எப்படிப் பேசினார்கள் இவர்கள், என்னுடைய இந்தத் தமிழ் இளைஞர்களைப் பற்றிய அவர்களுடைய அனுமானம் என்னவென்று. அவர்கள் சிரித்துக் கொண்டே சொன்னதன் சாராம்சம் – “நீ ஒரு ஏமாளி. உனக்கு நேரத்தை வீணடிக்க வேறு நல்ல வழிமுறைகளைக் கற்றுத் தருகிறோம், நீ முதலில் குஜராத் வா! இனிமேல் தராதரம் பார்த்து பரிந்துரை செய். கோமாளிகளை விட்டுவிடு.”

இனிமேல் பரிந்துரையாவது, மண்ணாவது. போங்கடா! :-(

அசுபம்.

மேலும் மோதி தொடர்பான பதிவுகள்: நரேந்த்ர மோதி!

போங்கடா, இதுதாண்டா *&#@! பதிவுகள்

11 Responses to ““மோதி-யின் குஜராத்தில் சுற்றுப் பயணம் செய்ததில் நாங்கள் பார்த்ததெல்லாம் ரோட்டோர ஒண்ணுக்கடிப்பாளர்களைத்தான்!””

 1. Venkatachalam Says:

  ராமசாமி சார் அந்த அம்மாவும் அவருடைய கணவரும் சிறையிலாமே. டிவியில் வாயில் நுரை தள்ளப் பேசுவார்களே அந்தப்பெண்மணிதான். அவர்கள் இருவரையும் பற்றி கொஞ்சம் நேரம் செலவழித்து எங்களது பொது அறிவு விருத்தியாக உதவக்கூடாதா?


  • அய்யா வெங்கடாசலம் அவர்களே, நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை. அவர்களின் பெயர்களைச் சொல்ல முடியுமா?

   __ரா.

   • SureshKumar Says:

    Teesta setalvad – u had earlier referred..


   • Oh thanks! I normally browse thru’ newspapers once in 15 days or so – and generally avoid over-the-top/screaming news items. the reason is, I find that I do not learn much from these inane thingies.

    Having said that – I have know Teesta and her gang for the past 15 years of so now. I do not know in what context she is doing time at the gaol, now – but, she richly deserves it on so many counts.

    __r.

 2. சரவணன் Says:

  ஜ.டி.இளைஞர்களை விடுங்கள். இதற்கு என்ன சொல்கிறீர்கள்? காரவன் கட்டுரை, தமிழில் சவுக்கு இணையதளத்தில்-

  http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=1954:2014-03-22-01-47-00&catid=1:2010-07-12-16-58-06&Itemid=19

  ஆஷிஸ் நந்தி மோடி பற்றி (80-களின் பிற்பகுதியில் சந்தித்தது பற்றி) இப்படிச் சொல்கிறார்-

  *** நீண்ட நேரம் சென்றது அப்பேட்டி. உளவியல் ரீதியாக ஃபாசிஸ்ட்டுடன் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை நான் உணர்ந்தேன். கருத்தியல், நடத்தை, சிந்தனை ஓட்டம் இவற்றைவைத்து ஒருவரை ஃபாசிஸ்ட் என்று கணிக்கமுடியும்.. அப்படியே நான் அவரை வகைப்படுத்துகிறேன். நான் ஒன்றும் அவரை வசை பாடவில்லை.யதேச்சாதிகார ஆளுமைகளை நீண்ட காலம் மருத்துவ ரீதியாக உளவியல் ரீதியாக ஆய்வு செய்து அடையாளம் காணப்பட்ட அனைத்து குணாதிசயங்களும் நரேந்திர மோடியிடம் ஒரு சேர குடிகொண்டிருக்கிறது. கடும் நிலைப்பாடுகள், எப்போதுமே தன்னை முன்னிலைப்படுத்துவது, உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள, வன்முறையின் மீதொரு மோகம், தனக்கிருக்கும் தீவிர இலட்சியங்களையும் அச்சத்தையும் மறைப்பது, எல்லோரையும் சந்தேகிப்பது, தான் விரும்புவது வெறுப்பது எதுவாயிருந்தாலும் அதனை ஒரு வெறியுடனேயே செய்வது, இவையனைத்தையும் நான் அன்று மோடியிடம் கண்டேன். ஏதோ இந்தப் பிரபஞ்சமே இந்தியாவை எதிர்த்து சதி செய்வது போலவும் ஒவ்வொரு முஸ்லீமும் எதிர்கால பயங்கரவாதி என்பது போலவும் அவர் அன்று பேசியது இன்னமும் பசுமையாக என் நினைவிலிருக்கிறது. ****

  மோடியைத் தடுக்க ஒரே வழி ஆம் ஆத்மியை அதரிப்பதுதான். இதைத்தான் அந்த இளைஞர்கள் செய்திருக்காறார்கள். They did a wise thing!


  • ஆ! ஆஷிஸ் நந்தி! :-)

   பொதுவாகவே இவருடைய கருத்துகளை கவனிப்பவன் நான். இவரிடம் மரியாதை வைத்திருக்கிறேன். பிறப்பால் ஒரு வைதீகக் க்றிஸ்தவராக இருந்தாலும் ப்ரம்மொஸ்மாஜி குடும்பத்தில் வளர்ந்தாலும் – தம்மை, கடும் முயற்சி செய்து, படித்து – மிகமிக புத்திசாலித்தனத்துடன் செழுமைப் படுத்திக் கொண்டவர் – பாபுஜியின் பார்வைகளை, ஒரு தன்னளவில் முழுமையான அ-மேற்கத்திய பார்வையை அளிக்க வல்லவை என்பதையும் மிகச் சரியாகவே கண்டுகொண்டவர்.

   இவருடன், நேரடியாகச் சிலமுறை விவாதித்தவன் என்கிற முறையில் – சில விஷயங்களில் அவருடன் ஒப்புமை இல்லாதவன் என்கிறமுறையிலும் – அவர் எழுதுவதையெல்லாம் அப்படியே செரிக்க மாட்டேன்.

   மேலும் அவருக்கு, பிடிக்காதவர்களெல்லாம் டபக்கென்று ஃபாஸ்ஷிஸ்ட்களாகி விடுவார்கள் என்பதையும் அறிந்திருக்கிறேன். (இந்த ‘மாற்றி நோக்குவது’ நம் அறிவுஜீவிகளுக்கு ரொம்ப சகஜம் என்பதையும்தான்!)

   Each unto his own – counter-fascistச் included, what else! ;-)

   பின்குறிப்பு: அந்த இளைஞர்களை உங்கள் மீது ஏவி விடட்டா? 8-)

   • க்ருஷ்ணகுமார் Says:

    அய்யா சாமி, இது வரை உங்களுக்கு ஏவல், பில்லி, சூன்யம் இத்யாதியெல்லாம் (= மட்டிலும்) தெரியாது என்று நினைத்திருந்தேன். இப்படியெல்லாம் பயங்காட்டலாமா?

    கே.பீ.எஸ் அம்மா இப்படி பயங்காட்டுகிறாரே. ஆத்திச்சுவடி கொன்றைவேந்தன் இத்யாதியிலிருந்து எதை எடுத்துப் பாராயணம் செய்வேன். ஔவையார் துணை.


   • அய்யா க்ருஷ்ணகுமார் – வல்ல பூதம், வலாஷ்டிகப் பேய்கள், அடங்கா முனி, புழக்கடை முனி, ப்ரம்ம ராட்சதர் உள்ளிட்ட பல்ரையும் அறிஅறி என்று அறிவேன்!

    பரிந்துரைகள்: கந்தறகோளக் கவசத்தை அணிந்துகொண்டால் மட்டுமே, உய்வது முடியும். கோளாறுபதிகமும் உதவலாம்.

 3. க்ருஷ்ணகுமார் Says:

  Quote :-

  \\ யதேச்சாதிகார ஆளுமைகளை நீண்ட காலம் மருத்துவ ரீதியாக உளவியல் ரீதியாக ஆய்வு செய்து அடையாளம் காணப்பட்ட அனைத்து குணாதிசயங்களும் நரேந்திர மோடியிடம் ஒரு சேர குடிகொண்டிருக்கிறது. கடும் நிலைப்பாடுகள், எப்போதுமே தன்னை முன்னிலைப்படுத்துவது, உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள, வன்முறையின் மீதொரு மோகம், தனக்கிருக்கும் தீவிர இலட்சியங்களையும் அச்சத்தையும் மறைப்பது, எல்லோரையும் சந்தேகிப்பது, தான் விரும்புவது வெறுப்பது எதுவாயிருந்தாலும் அதனை ஒரு வெறியுடனேயே செய்வது, இவையனைத்தையும் நான் அன்று மோடியிடம் கண்டேன் \\

  Unquote :-

  மோதி நல்லவரும் அல்லர் – கெட்டவரும் அல்லர். நாம் குழந்தைகளுக்கு நீதிபோதனைக் கதைகள் சொல்வது போல இதனை அணுகக் கூடாது. பார்க்கப் போனால், இம்மாதிரிப் பாமரத்தனமான கேள்விகளைக் கேட்கும் நிலைமைகளிலிருந்து நாம் மாறவேண்டும். ஏனெனில் நம்மில் ஒருவர் கூட முழுக்கமுழுக்க நல்லவரோ அல்லது கடைந்தெடுத்த கொடியவரோ இல்லை.

  ம்………….ராமசாமி சார், உங்களுக்குப் பொறுமை அதிகம் தான்.

  பட்ட காலிலேயே படும்.

 4. க்ருஷ்ணகுமார் Says:

  Dear Ram,

  I read this wonderful article in Vijayvaani. “Israel using desalination to revolutionize its water economy” by Mary Burdman.

  http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=3152

  I would request you to go through the same.

  It was amazing to read these lines

  \\ “Historically, water has always been a reason for war or fights. We think that water is a bridge to peace and this is why we need to deal with water to try to build up confidence between us and our neighbors, to let them share in what we have already succeeded in doing, and let them step ahead with this water sector,” \\

  If possible, I would request you to pen your thoughts as to how this technology could be applied in Hindusthan’s scenario.

  I hope already there should be desalination plants in various states of Hindusthan (hope already we have desalination plants in Tamilnadu) . How cost effective are they? The potential for expansion? The scenario in Gujarat especially.

 5. சரவணன் Says:

  பி.ஏ.கிருஷ்ணன் தமிழ் தி இந்துவில்-

  ****2001-லிருந்து குஜராத்தின் விளைநிலங்கள் வருடத்துக்கு இரண்டு லட்சம் ஹெக்டேர்கள் என்ற வீதத்தில் அதிகரித்திருக்கின்றன. இந்த வளர்ச்சி சௌராஷ்டிரா பகுதியில் பயணம் செய்யும்போது நன்றாகத் தெரிகிறது.

  ****குஜராத் வளர்ச்சி அடையவில்லை என்று நிச்சயம் சொல்ல முடியாது. ஆனால், வளர்ச்சி எல்லோரையும் போய்ச் சேரவில்லை என்பதற்குப் பல அடையாளங்கள் இருக்கின்றன.

  ****தமிழகக் கிராமங்களில் கண்கூடாகத் தெரியும் வளர்ச்சி குஜராத் கிராமங்களில், நான் பார்த்த அளவில், தென்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

  ****வெளியில் வந்த என்னைப் பிச்சைக்காரிகள் சூழ்ந்து கொண்டனர். படிக்க வேண்டிய வயதில் உள்ள பெண்கள். ஒரு பெண்ணுக்குப் பத்து ரூபாய் கொடுத்தேன். பின்னால் வந்துகொண்டிருந்த என் மனைவியிடம் நோட்டைக் காட்டி, “இது எத்தனை ரூபாய்?” என்று கேட்டாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காசுகளைத்தான் அடையாளம் காண முடியும். நோட்டுகளின் மதிப்பு என்ன என்பது தெரியாது என்ற நிதர்சனம் வறுமைக்கும் அறியாமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை ஒரு நொடியில் எனக்குக் காட்டிவிட்டது. தமிழகத்தில் இத்தகைய கொடிய வறுமை இருக்காது என்றுதான் நினைக்கிறேன். ******

  பல பத்தாண்டுகளாக திராவிடக் கட்சிகளால் ஆளப்படும் தமிழகத்தை எட்டிப்பிடிக்க குஜராத் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் போலிருக்கிறது!!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s