தமிழ்நாடு vs குஜராத் வளர்ச்சி ‘மாடெல்’, மோதி… …: சில தன்னிலை விளக்கங்கள், குறிப்புகள்

March 31, 2014

… இதெல்லாம் தேவையா  என்றாலும்..

நான் மிகவும் மதிக்கும், தொடர்ந்த காதலில் இருக்கும் பெரியவர்களில் மூன்று பேர் (இதில் ஒருவர் என்னுடைய ‘அந்தக் கால’ பேராசிரியர் – கேள்விகேள்வியாகக் கேட்டு இவரை நான் மிகவும் கஷ்டப்படுத்தியிருக்கிறேன், பாவம்), என்னைப் பல கேள்விகள் கேட்டிருக்கிறார்கள், கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள்; வெட்கமேயில்லாமல் அறிவுரைகள் வேறு! பல மின்னஞ்சல்கள், சில தொலைபேச்சுக்களிலிருந்து இந்தக் குறிப்புகள: (கொசுக்கடி தாங்கமுடியவில்லை; வேறு வழியில்லை)

உன்னை ஒரு அறிவுஜீவி / களப்பணியாளன் என்று நினைத்தேன், ஆனால் ஒரே பிரச்சார நெடி அதிகமாகி விட்டது, இதனால் எதிர்மறைபாதிப்பு வராதா – நடு நிலைமை தவறுகிறாயோ எனச் சந்தேகமாக இருக்கிறது – ஏன் தேவையில்லாமல் இளைஞர்களை பாதிக்கிறாய் – ஏன் விளம்பரமோகம் –  உன்னைப் படிப்பவர்களை ஏன் அரசியலை நோக்கித் தள்ளுகிறாய்? மேட்டிமைவாதியாக ஆகிக் கொண்டுவருகிறாய். அறிவியல், கணிதம் என்று எழுதலாமே. தமிழ்நாடு நன்றாகத் தானே வளர்ந்து கொண்டிருக்கிறது. நீயே தமிழ்வழிக் கல்வியை, தமிழகத்தில் படித்துத் தானே மேலெழும்பி வந்திருக்கிறாய். இதில் என்ன பிரச்சினை? உன்னால் மதிக்கக் கூடிய புள்ளியியல் விவரங்களும் இதனைத் தானே சுட்டுகின்றன? ஏன் இந்தியாவில் ‘தமிழ் நாடு வளர்ச்சி மாதிரி’ போன்றவற்றை எடுத்துப் பரப்புவதற்காக நீ எழுதக் கூடாது? ஏன் குஜராத் முன்மாதிரியை முன்னெடுக்கிறாய்? ஏன் மோதியை ஆதரிக்கிறாய்? ஏன் என்னுடைய இரத்த அழுத்தத்தை அதிகப் படுத்துகிறாய்? நீ ஏன் உன் தொழிலைச் செய்யாமல், இந்த விதண்டாவாதங்களில் இறங்கியிருக்கிறாய்? ஏன் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றை வெறுக்கிறாய் – இவையும் உரையாடல்களுக்கான தளங்கள்தானே? நானே உபயோகப்படுத்தும் போது, நீயும் இவற்றை உபயோகப் படுத்தலாமே? …ஏன் x ஏன் y ஏன் z …

சரி, இந்தக் கேள்விகளில், சில – அறிவுஜீவி-கிறிவுஜீவி களப்பணி-கிழப்பிணிஎன்பவைகளைப் பற்றி – ஒரு தனி பதிவே (ராமசாமி – யாரில்லை?) எழுதியிருக்கிறேன். பார்த்துக் கொள்ளவும். பற்களை நற நறத்துக் கொள்ளவும். நான் பரம யோக்கியன், ஒரு தவறும் செய்யாதவன் என்றெல்லாம் சொல்ல வரவேயில்லை. நான் இன்னமும் பல தவறுகள் (ஒரு உதாரணம்: இந்த ஒத்திசைவு ஜந்து) செய்து கொண்டிருப்பவன் தான். தேவைப்பட்டால் பொய்களும் (=தீமை இலாத சொலல், பெரும்பாலும்) சொல்பவன் தான். ஆக, ‘நான் உன்னைவிட ஓஸ்தி’ என்ற நினைப்பெல்லாம் இல்லை. மேட்டிமைத்தனம் – இது இருக்கலாம். எனக்கு எப்போதுமே தரம் முக்கியம்; பரம நிச்சயமாக – வெற்றுவேட்டு  ‘எவ்வளவு தரம்’ எண்ணிக்கைகளல்ல.

இனி, தலையில் அடித்துக் கொண்டு – உங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் விடை சொல்கிறேன் – ஒத்துவந்தால் ஏற்கவும், இல்லையேல் கடாசவும் – ஒரு பிரச்சினையுமில்லை.

பிரச்சாரம்: ஆம், நான் பிரச்சாரம் செய்கிறேன்; வெளிப்படையாகச் செய்கிறேன். மோதி வரவேண்டும் என்கிறேன். இதில் என்ன தவறு? எனக்குச் சரியென்று பட்டதை சரியென்று சொல்கிறேன். தவறென்று தோன்றுவதைத் தவறென்று சொல்கிறேன். என்னால் வழவழா கொழகொழாவென்றெல்லாம் உளறிக்கொட்ட முடியாது. நீங்கள் என் தரப்பை ஒப்புக்கொண்டேயாக வேண்டும் என்றும் அழுத்தம் கொடுப்பதில்லை. நம்பகமான தரவுகள், நம்பகமான மனிதர்களின் கருத்துகள் கிடைத்தால், யோசித்து என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.  முடிந்தவரை எதிர்க் கருத்தாளர்களுடன் உரையாடலில் இருக்கிறேன். ஓரளவுக்கு மேல் அமைதியாக இருக்கிறேன், முடியவில்லையென்றால் கொஞ்சம் கிண்டல் செய்கிறேன். தேவையில்லாமல் அவமரியாதை செய்ய முயல்வதில்லை.

நான் எழுதுவதைத் தொடர்ந்து மண்டையில் அடித்துக்கொண்டு  படிக்கும் வாசகர்களை (சுமார் 40-50 பேர்தான், அதிகமில்லை – அதுவும் உங்களையும் என்னையும்   சேர்த்துத்தான்; கவலை வேண்டேல்! என் வீச்சை, ‘ரீச்’சை மிகவும் அதிகமானதாகக் கற்பனை செய்து கொண்டு பயப்படவேண்டேல்!), அவர்களின் அழகான மூளைகளை அவமதிப்பதில்லை. ஒரு போதும் ஜாதியை, மதத்தை வைத்து ஒருவரையும் தாழ்த்தியோ உயர்த்தியோ நினையாமல், பேசாமல் இருக்கிறேன். மனதாறப் பொய் சொல்லாமல், செய்தியைத் திரித்துச் சொல்லாமல் இருக்கிறேன்.

இருப்பினும் நான் பிரச்சாரகன் தான். இதில் என்ன பிரச்சினையென்று என் குருவிமூளைக்குத் தெரியவில்லை.  நீங்கள் என்னை வெறுமனே ‘நெட்டை நெடுமரம்’ நிற்கச்சொல்லிப் பார்க்க விரும்பினால், என்னை மன்னிக்கவும், என்னால் முடியாது. நான் எழுதுவதில் ‘நெடி வீசுகிறது’ என்று எதிர்மறையாக நீங்கள் கருதுவது, உங்கள் உரிமை.  நீங்கள் படிக்கும் ‘த ஹிந்து’விலும்,  சாயம்போன ‘ஃப்ரன்ட்லைனி’லும்அற்ப ‘தெஹல்கா’விலும், நம்பிய ‘குடி-அரசு’விலும், நம்பும் ‘பொருளாதார, அரசியல் வாராந்தரி (EPW)’-யிலும் இல்லாத அயோக்கியப் பொய்மைப் பிரச்சாரங்களா? விழுந்து விழுந்து படிக்கிறீர்களே, படித்திருக்கிறீர்களே அவற்றை? எவ்வளவு படு கேவலமாகச்  செய்திகளைத் திரிக்கிறார்கள் இவர்கள்!

எது எப்படியோ – உங்களை, நான் எழுதுவதையெல்லாம் படித்தே தீரவேண்டும் என்றா சொன்னேன்? நீங்களே தானே படிக்கிறீர்கள்? அய்யாமார்களே, இது இருவழிச்சாலை. புரிந்து கொள்வீர்களா?

நடு நிலைமை: நாம் முன்னமே எழுதியதுபோல, நான் இப்படிப்பட்டவனல்லன்: “நான் ஒரு நடுநிலைமைக்காரன் – அதாவது, நன்மைக்கும் தீமைக்கும் நட்டநடுவே மட்டும் நின்று கொண்டு கையைப் பிசைந்து   கொண்டிருப்பது தான் ஒரு நடு நிலைமைவாதி செய்யவேண்டியது என்பதில் தீவிரமாக இருப்பவன். நல்லதிற்கு அருகிலே போனால், பாவம், தீமைக்கு நாம் உதவியாக இருக்கமுடியாது அல்லவா? ஒரு ஜனநாயகத்தில் வசிக்கும் நாம், அனைத்துத் தரப்புகளுக்கும் ஆதரவு அளிக்கவேண்டுமல்லவா? நான் ஒரு ஜனநாயகவாதி என்பதில் உண்மையில் பெருமையடைபவன்.”

ஆக, நான் நடு நிலைமை தவறுபவன் தான். எனக்கு உண்மையாகவே, இந்த நடுநிலைமை எழவின்  விசித்திரப் புரிந்துகொள்ளல் என்பது முடியாத காரியம்தான். இப்படிப் பட்டவர்த்தனமாகச் சொன்னாலும் பலருக்குக் கோபம் வந்து விடுகிறது.

தெருவில் ஒரு வெற்று குண்டன் ஒரு பெண்ணிடம் (அதாவது, உங்கள்  மகளிடம்) வாலாட்டுகிறான். இப்போது – அவனையும் சரி, அவளையும் சரி – கண்டுகொள்ளாமல், அல்லது கண்டு கொண்டாலும் இருவரிடமிருந்தும் சரிசமமான பாதுகாப்பான தூரத்தில் உங்களை வைத்துக் கொண்டு கைபேசியை வைத்துக் கொண்டு குய்யோமுறையோ கீச்கீச்சென்று ட்விட்டரில் ‘ஐயகோ, இந்த சமூக அவலத்தைப் பாரீர்! இதனைக் கேட்பாரே இல்லையா!!’ என்று ஒரு புகைப்படத்தைப் போட்டு 140எழுத்துகளுக்குள் கீச்சுவது தான் உங்களுடைய பாணி நடு நிலைமையை எடுத்துக் காட்டும் என்றால் – அந்தக் குப்பைத்தனமான ‘ நடுநிலைமை’ எனக்குத் தேவையே இல்லை. இதனை நான் மனதாற வெறுக்கிறேன். புரிந்ததா?

நான் என்றுமே  தொழில்முறை நடுநிலைமைக்காரனாக இருக்கவே மாட்டேன்.

தமிழ் நாடு மாதிரி (‘மாடெல்’) பற்றி: தமிழ் நாட்டின் வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் சுட்டும் பல, குஜராத்தை விட நன்றாகவே இருக்கின்றனதான். பல கீழாகவும் இருக்கின்றனவும் தான். ஆனால் – தமிழ் நாட்டிற்கான வளர்ச்சி மாதிரி என்றால், என்னால் காமராஜ், ராஜாஜி போன்றவர்கள் வளர்த்தெடுத்த வளர்ச்சிக் கூறுகளைத் தான் சொல்லமுடியும்; எம்ஜியார் அவர்கள் வரை வந்தோமானால்  கூட, அவருடைய விரிவுபடுத்தப் பட்ட மதியவுணவுத் திட்டத்தைச் சொல்ல முடியும். அரைமனதுடன் ஜெயலலிதா அவர்களின் சில  திட்டங்களைக் கூடச் சொல்லமுடியும்.

ஆனால், நம் தற்போதைய தமிழகத்தை ஓரளவு புரிந்து கொண்டிருக்கிறேன் என்கிற முறையில் சொல்ல முடியும்: தமிழக அரசின் வருவாயில் பெரும்பகுதி சமூகத்தையே ஒட்டுமொத்தமாகக் காயடிக்கும்   சாராயத்தால், கள்ளால் ஆக்கப் பட்டுள்ளது. தமிழர்களின் மூளை  குப்பை திரைப்படங்களாலும் தொலைக்காட்சி அலைவரிசைகளாலும் ஆக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் மனம்  திரா விட உளறல்களால் நிரப்பப் பட்டிருக்கிறது. தமிழர்களுடைய செயலூக்கம், குப்பை இலவசங்களால் குட்டிச் சுவராக்கப் பட்டுள்ளது, தமிழக அரசியல் சூழல்கள் — குடும்ப ஊழலும் குடும்பஊழலைச் சார்ந்த இடமாக மட்டுமே இருக்கின்றன. அச்சு ஊடகங்கள்  காப்பிக் கடைகாரர்களால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளன. தமிழக  இளைஞர்கள் தங்களுக்கோ தங்கள் குடும்பங்களுக்கோ, தங்கள் சமுதாயத்துக்கோ, தங்கள் தமிழகத்திற்கோ, ஏன், தங்களுக்கே  கூட, ஒரு குப்பையையும் செய்யத் திராணியில்லாமல் – பெரிதாக அந்தத் தமிழீழத்தை வென்றெடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். தமிழகக் கல்வியானது அதல பாதாளத்தில் வீழ்ந்து பல்லிளிக்கிறது. தமிழகக் கல்வி நிலையங்கள் அரைகுறை அயோக்கியக் கல்வித் தந்தைகளால் ராப்பிச்சைபோடப்பட்டவையாக இருக்கின்றன. தமிழ் மொழியே, செம்மொழியாக்கப் பட்டு கலைஞர் தொலைக்காட்சியில் உச்சரிக்கப் பட்டே  ஒழிக்கப் படுகிறது. போகிற போக்கில் தமிழகம் என்றால் தரமின்மையகம்  என்றாகிவிடும் போலத்தான் இருக்கிறது! (இவை அனைத்துக்கும் சில அழகான,அமைதியான விதிவிலக்குகள் கூட இருக்கின்றன, என்பது தான் நல்ல விஷயம்)

ஆம், தமிழகத்தின் வளர்ச்சி குறித்த பல புள்ளியியல் விவரங்கள் (=டாஸ்மாக்-கடைகளின் வளர்ச்சி, பொரிப்பொரியாக பொரிந்து கொண்டிருக்கும் பொரியியல் கல்லூரிகள், ஜாதிக் கட்சிகள், தமிழகத்தின் முன்னேற்றத்தில் சினிமாவின் பங்கு, ட்விட்டர்/ஃபேஸ்புக் இத்யாதிகளில் தமிழர்படைகள் கோலோச்சுவது போன்றவை) மிக நன்றாகவே இருக்கின்றன. பொதுவாக, தமிழனானவன் திரைப் படங்களிடமும் தொலைக்காட்சியிடமும் நிபந்தனையற்றுச் சரணடைந்து விட்டதால், தமிழகமும் பெரும்பாலும் அமைதிப் பூங்காவாகத்தான் இருக்கிறது.  ஓரளவுக்குத் தொழில் துறை, சாலைப் பணிகள், ஏபிஎல் முறையில் அரசுப் பள்ளிக்கூடங்களில் சிலவற்றில் நடக்கும் படிப்பித்தல் — இவற்றிலெல்லாம் நன்றாகவேதான் இருக்கிறோம். ஆயிரம் குறைகள் இருந்தாலும் எனக்கு என் தமிழகத்தை, என் மொழியைப் பிடிக்கும் தான்.

இருந்தாலும், பொதுவாகவே, புள்ளியியல் விவரங்கள் எப்படிச் சேகரம் செய்யப் படுகின்றன எனும் சோகத்திற்கு அப்பாற்பட்டு,   நாம் போகவேண்டிய தூரம் மிக, மிக அதிகம். என்னுடைய பிரச்சினையே, தமிழ் நாட்டின் நீண்டகால நீடித்த மேன்மைக்கு என்ன விஷயங்கள் எப்படி நடந்துகொண்டிருக்கின்றன எனும் விசனம் தரும் சிந்தனைதான்… :-(

குஜராத் ‘மாடெல்’ பற்றி: இதைப் பற்றி நிறைய எழுத வேண்டும். ஆனால் எனக்கிருப்பது ஒரு மண்டையும் பத்து விரல்களும்தான், என்ன செய்ய. ஆக,  இக்காலங்களில் நான் பெரும்பாலும் இயங்கிக் கொண்டிருக்கும் கல்வித் துறையைப் பற்றி மட்டும் பேசுகிறேன் – நீங்கள் குஜராத் அரசின் அற்புதமான ‘குணோத்ஸவ்’ திட்டம் (+அந்தத் திட்டம் நிறைவேற்றப் படுதல்) பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இது கல்விக்கான, அதன் மேன்மைக்கான நெடியநோக்குத் திட்டம். இந்த ஒரு விஷயத்திற்காக மட்டுமேகூட நான் மோதியின்ஆட்சியை மெச்சுகிறேன் – இத்திட்டத்தின் காரணமாக ஏற்படக் கூடிய நீண்டகால விளைவுகளை நினைத்து வியக்கிறேன்.

இம்மாதிரி, பல திட்டங்கள் இருக்கின்றன அங்கு – அனைத்தும் செயல்படுத்தப் படும் திட்டங்கள்.

ஆக நான் குஜராத்தின் இன்றைய மாடெலையும், தமிழகத்தின் அன்றைய மாடலையும் கோர்த்து யோசித்து – இவ்விஷயங்கள் இந்தியாவில் நடந்து கொண்டிருப்பதற்காக, நடந்ததற்காக உண்மையிலேயே பெருமைப் படுகிறேன்.

ஆம், நான் தமிழகத்தின் கடந்த நாற்பது வருட மாடெலைப் பெரிதாக எண்ணவில்லை என்பது சரியே.

ஏன் மோதியை ஆதரிக்கிறேன்? இதற்கு இரண்டு காரணங்கள்:

1. இல்லை. நான், மெய்யாலுமே மோதியை வெறுக்கிறேன். (108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன் ?)
2. நான் மோதி / பாஜகவிடம் ‘பொட்டி’ வாங்கிக் கொண்டிருப்பதால், நன்றிக் கடனை, தவணை தவணையாகச் செலுத்திக் கொண்டிருக்கிறேன். (ஆம். நான் மோதி/பாஜக விடம் ‘பொட்டி’ வாங்கியிருக்கிறேன்)

ஏன் ஐயன்மீர், கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டீர்களா?  மோதியை ஆதரிக்காமல் என்ன, என்னால் (அல்லது உங்களாலுமே!) வடிவேலர், குஷ்பு அம்மையார், அர்விந்த் கெஜ்ரீவாலர், இசுடாலிர் போன்றவர்களையா ஆதரிக்க முடியும்?

-0-0-0-0-0-0-0-

சரி.  நான் எழுதுவதெல்லாம் உங்களுக்குப் பிடித்திருக்க வேண்டியதில்லை. உங்களுக்குப் பிடிக்காதவற்றை, நீங்கள் படித்து அவஸ்தைப் படவேண்டிய அவசியமும் உங்களுக்கில்லை.

உங்களுக்கு ஆசுவாசம் தரும், ஆத்தும சுகமளிக்கும்  ஃப்ரன்ட்லைன், தி ஹிந்து, இபிடபிள்யு போன்றவற்றை மட்டும் தொடர்ந்து படித்தால் உங்கள் உடல் நிலை சரியாகவே தொடர்ந்து இருக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம். சரியா? பொய்ப் பிரச்சார விஷத்துக்குப் பழகிய மூளையும் மனமும் கொண்டிருப்பது ஒரு பிரச்சினைதான், என்ன செய்ய? ;-)

புலம்பல் வேண்டேல். ;-))

… மற்ற கேள்விகளுக்கான (=விளம்பரமோகம், ட்விட்டர், இளைஞர்களை பாதிப்பது, தமிழ் வழிக் கல்வி,  இத்யாதி, இன்னபிற) பதில்கள்(!), பின் வரும் பதிவொன்றில்… …

நரேந்த்ர மோதி!

6 Responses to “தமிழ்நாடு vs குஜராத் வளர்ச்சி ‘மாடெல்’, மோதி… …: சில தன்னிலை விளக்கங்கள், குறிப்புகள்”

 1. Pugazhenthi Says:

  முழுவதும் புரியாமலும் உங்களைப் படித்து வருகிறேன்…
  சராசரித் தமிழர்களை விமர்சனம் செய்கிறீர்களே…
  சராசரி இந்தியனை விடவும் அவன் தாழ்ந்திருப்பதாகக்
  கருதுகிறீரா…அல்லது உங்களோடு ஒப்பிட்டு பழிக்கிறீரா…


  • 1. எனக்குப் பல அற்புதமான தமிழர்களைத் தெரியும். இப்படிப்பட்ட தமிழ் இளைஞர்களும் இதில் அடக்கம். இவர்களின் எவருமே சராசரிகளில்லை, மகத்தானவர்கள்தாம்.

   2.ஆனால், நான் ஒரு சராசரித் தமிழன். சக சராசரித் தமிழர்களுகாக, சராசரித்தனமாக எழுது(!)பவன். சக சராசரிகளுடன் சண்டையும் போடுபவன். இந்தியச் சராசரிகளை விட தமிழகச் சராசரிகளாகிய நாம், கீழே தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறோம் என்பதையும் உணர்கிறவன். ஆகவேதான் தமிழகத்தை விட்டுப் புலம் பெயர்ந்த சராசரித் தமிழர்களால் – ஒரே சமயத்தில் உலகத்திலும் தமிழகத்திலும் சராசரித்தனத்தை அதிகப் படுத்தமுடியும் எனும் புள்ளியியல் விவரத்தை உணர்ந்தவனும்.

   3. பல முனைவுகளில், சராசரித்தனமாக – நாம் மேலும் கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருப்பதைப் பார்த்து வாயடைத்துப் போயிருப்பவன் – அதனால் தான் கைவிரல்களால் கீபோர்டை உபயோகப் படுத்துபவன். குடியும், திரைப்படமும் – இவை இரண்டு மட்டுமே, தமிழனை தொடர்ந்து மலடனாக்கிக் கொண்டுவருவதை – தினமும், தினம்தினமும் (என் பள்ளிக் குழந்தைகள் வழியாகவும்) பார்த்துக்கொண்டிருப்பவன்.

   4. அதிசராசரியான என்னுடன் ஒப்பிட்டு, சக சராசரித் தமிழனைப் பழிக்கிறேன். உண்மைதான். எப்படித்தான் அவன் என்னைவிட அதிக சராசரியாக விடுவேன்? இந்த அவலத்தை எப்படி ஒப்புக் கொள்வேன்? அதனால்தான் அவனைத் தரதரவென்று இழுத்து வந்து என் அளவுக்குக் கொணர முயல்கிறேன்.

   5. கவலை வேண்டேல்; பொதுவாக, எனக்கும் நான் எழுதுவதென்பது என்னவென்று புரிவதில்லை. அதனால் என்ன, சராசரியாகிய எனக்கு, அடுத்த சராசரிப் பதிவைப் தேற்ற வேண்டுமே — என்ற எண்ணத்தில் மேற்கொண்டு எழுதுகிறேன். ஆனால் — பாவம், உங்கள் பாட்டை நினைத்தால்தான்… :-(

 2. Venkatachalam Says:

  மோடியைப் பற்றி எவ்வளவு எழுதினாலும் இந்தத் தருணத்தில் பொருத்தமாகவே இருக்கும். சூழ்நிலை எதை எதிர்பார்க்கிறதோ அதை சமுதாய நன்மையை முன் வைத்து செய்வதே உயர்ந்த மனநலத்தின் அடையாளம். ராமசாமி அவர்களே நீங்கள் காணக்கிடைக்காத தங்க ஆசாமி. தொடரட்டும் உங்கள் பணி. என்னுடைய வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள்

 3. A.seshagiri Says:

  திரு.வெங்கடாச்சலம் அவர்கள் கருத்தில் முழுக்க,முழுக்க உடன்படுகிறேன்.நீங்கள் இந்த பாராளுமன்றத் தேர்தல் முடியும் வரை (குறைந்த பட்சம் ஏப்ரல் 24ம் தேதி வரை)மற்ற எல்லாவற்றையும் கடாசிவிட்டு தினமும் ஒரு கட்டுரையாவது -மோதி அவர்களை தேர்ந்து எடுக்க வேண்டியதின் அவசியத்தை விளக்கி-வெளியிடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 4. க்ருஷ்ணகுமார் Says:

  ம்………. ஸ்ரீ நரேந்த்ரபாய் பற்றி மட்டிலும் எழுதினால் போதாது.

  ஸ்ரீ அரவிந்த கேஜ்ரிவால் அவர்களது செயல்பாடுகளில் காணப்படும் குறைகள் (நிறைகளும் கூட) பற்றி இதுவரை முழுமையாக ஒரு பதிவு வருமா என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.


  • அய்யா க்ருஷ்ணகுமார், என்னை மன்னிக்கவும்.

   எனக்கு அவ்வளவு நேரமில்லை என்பதைத் தவிர, ஒரே அலுப்பாக இருக்கிறது. தூக்கம் போதவில்லை. ஒரு அரைமணி நேர நீச்சலுக்குக் கூடப் போகமுடியவில்லை. ஒரு தேர்தல் பணிக்கும் செல்ல முடியாத நிலைமை.

   பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ஒரு பள்ளியில் நடந்துகொண்டிருக்கின்றன, பின்னர் இன்னொன்றில், ஐஜிஸிஎஸ்இ தேர்வுகள் – ஜூன் 12 வரை… ஆபத்துதவி (=tutorials) வேலைகள் + பிற க்ருஹஸ்தப் பணிகள்… :-)

   ப்பிங்க் ஃப்லாய்ட் பாட்டுவரிகள் சொல்வது போல்:

   “Everything under the sun is in tune,
   But, the sun was eclipsed by the moon”

   :-)

   ஆக, ஒத்திசைவுக்கும், அதன் பாவப்பட்ட சொற்ப வாசகர்களுக்கும் கொஞ்சம் விடுமுறை கொடுக்கலாமென நினைத்துக் கொண்டிருக்கிறேன்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s