தமிழகத் தமிழர்களாகிய (அல்லது திராவிடக் கட்சிகளாலாகிய) நாம், இந்த ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு என்னதான் செய்யக்கூடும்?

February 19, 2014

… தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி  இருக்கிறோம்? (21/n)

முந்தைய பதிவின் (=பதிவுகளின்) தொடர்ச்சி… (மேலும்: தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??)

பத்ரி சேஷாத்ரியின் இரண்டாவது கேள்வி: தமிழகத்தின்பொதுமக்கள்/சமூகம் என்ன செய்யவேண்டும்? போராடவேண்டுமா அல்லது ஒன்றுமேசெய்யவேண்டாமா? போராடவேண்டுமென்றால், எதற்காகப் போராட வேண்டும்? (“What should the civil society of Tamil Nadu do? Fight or do nothing? If fight, fight for what?”)

நம்முடைய பொதுமக்கள்/தமிழச் சமூகத்தினர், வழக்கமாக என்ன செய்வார்களோ, அதனைச் செய்துகொண்டிருந்தால் (=சும்மா இருப்பது) அதுவே போதுமானது.

ஆனால் எப்படியாவது ஏதாவது செய்தேயாக வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றினால், அவர்கள் நான்கு விஷயங்களைச் செய்ய யத்தனிக்கலாம்.

அ: ஸ்ரீலங்காவையும் அதன் பிரச்னைகளையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் முதலில் அதனைப் பற்றி ஆழ்ந்து படிக்கவேண்டும். என்னிடம் சுமார் 15 புத்தகங்கள் போல, பல நோக்குகளில் / பார்வைகளிலிருந்து எழுதப்பட்ட புத்தகங்களின் ஜாபிதா இருக்கிறது (இந்த ஜாபிதாவைக் கேட்பதற்கு முன்னால் குறைந்த பட்சம் – ‘வரலாறென்றால் என்ன’ என ஈ ஹெச் கார் அவர்கள் ( ‘What is History‘ by EH Carr) எழுதிய புத்தகத்தைப் படியுங்கள், அதன் பிறகு ஜோஸஃப் கேம்ப்பெல் அவர்களின் தொன்மங்களின் சக்தி (‘The Power of Myth‘ by Joseph Campbell) படியுங்கள், செரியுங்கள் – அதைப் பற்றி எனக்கு எழுதுங்கள். பின்னர் உரையாடலாம்); இதைத் தவிர பீமராவ் ராம்ஜி அம்பேட்கர் புத்தமதம் பற்றி எழுதிய பல கட்டுரைகளையும் படிக்கவேண்டும். (இதெல்லாம் முடியாதவர்கள் குறைந்தபட்சம் ‘பொன்னியின் செல்வன்’ படிக்கவேண்டும். அதில், நம் தமிழர்களுக்கேவென  ஊக்கபோனஸாக – அனுராதபுரம், சிலுக்குபுரம், குஷ்புபுரம் பற்றியெல்லாம்கூட இருக்கிறதாம்!)

ஆ: கொஞ்சம் பணம் கையில் இருந்தால் ஒரு சுற்றுலாப் பயணியாக ஸ்ரீலங்கா சென்று அங்கு என்னதான் நடக்கிறது என்பதை நேரில் கண்டு களிப்புறலாம். அங்கு மிக மோசமாக ஏதாவது நடக்கிறது என்று பிரத்தியட்சமாகத் தெரிந்தால் அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். என்னைப் பொருத்தவரை, இப்படிப் போய்வரும் எவரும், நம் தமிழகக் குப்பைத் தலைவர்களைத்தான்  தூக்கில் போட ஆதரவு கொடுப்பார்களே தவிர, ராஜபக்ஷவை அல்ல. (என்னிடம் பேசிக்கொண்டிருந்த அந்தப் பொறியாளர் சொல்வதைக் கேட்டால் என் தலை சுற்றுகிறது. தமிழகத்தில் பரப்பப்படும் ஸ்ரீலங்கா தொடர்பான அண்டப் புளுகுகளுக்கு, கயமை வதந்திகளுக்கு ஒரு அளவே  இல்லை என்றுதான் தோன்றுகிறது.)

இ: நம் அற்ப, பொய்ப்பெருந்தீனி ஊடகங்களின் வதந்திக் கிளுகிளுப்புமுதல் வாதங்களுக்கு எதிராகப் போராடலாம். ஒரு ஆரம்பத்துக்காக, காவல்துறையின் அனுமதி பெற்று, ஸன் டீவி செட்டாப் பெட்டிகளை (set-top boxes), அதன் மின்காந்த அலை தட்டுப் பெறுவான்களை (dish antennae) அறவழியில் ;-) நடுத் தெருவில் போட்டு உடைத்து, எரித்து – பின் அந்தக் குப்பைகளை வாரிக் கொண்டுபோய் ஸன் டீவி அலுவலகத்தின் வரவேற்பறைக்குள் கொட்டலாம்.

ஈ: ஒரு பத்து ஸ்ரீலங்காக்காரர்களுடன் நட்பு கொள்ள முயலலாம் – அதில் பாதி பேராவது சிங்களவர்களாக இருக்கவேண்டும். அப்போதுதாம் நமக்குத் தெரியும், அவர்களும் நம்மைப் போல சாதாரண மனிதர்கள் தான் என்று. (நம்மில் ‘மெத்தப் படித்த’ பெருந்தகைகள்கூட சிங்களவன் என்றால் அயோக்கியன், தமிழர்களைத் துன்புறுத்துபவன் என்று பொத்தாம்பொதுவாக ஒரு ஆதாரம்கூட இல்லாமல் முட்டாள்தனமாக நினைத்துக்கொண்டிருப்பதை நான் அறிவேன்!)

-0-0-0-0-0-0-

பத்ரி சேஷாத்ரியின் மூன்றாவது கேள்வி: இந்தப்பிரச்னையில், தமிழகத்தின் பெரிய/முக்கிய அரசியல் கட்சிகளுக்கும், சிறு/உதிரி/விளிம்புநிலை  இயக்கங்களுக்கும் உள்ளான பங்கு என்ன? ஏன் அவை, பொதுமக்கள்/சமூகத்தால் ஒதுக்கப்படவேண்டும்? (“What is the role of Tamil Nadu mainstream parties and fringe groups? Why should they be shunned by the civil society and concerned citizens?”)

நாம், அரசியலை – நம் தமிழக  அரசியலை – அதிகாரத்தில் பங்கேற்பு என்பது முதல் பல திசைகளிலிருந்து பார்க்கவேண்டும். ஆனால் ஸ்ரீலங்கா தொடர்பான தமிழகப் பிரச்னைகள் பற்றி மட்டும் நாம் பேசிக்கொண்டிருப்பதால், மூன்று  கோணங்களிலிருந்து மட்டும் உங்கள் கேள்விகளுக்கான பதில்களைப் பார்க்கலாம்.

#ஒன்று : திரிசமன் சமன் செய்யப்படல்: பொதுவாக ஜனநாயகச் சாயம் உள்ள நாடுகளில், அதுவும் குடிமையுணர்ச்சி அதிகம் உள்ள நாடுகளில் (யூஎஸ்) – தேர்தல் நேரத்திலும், அதற்கு முன்னோட்ட நேரத்திலும் மட்டுமே பெரும்பாலான அரசியல்கட்சித் தலைவத்தொண்டர்கள் மிகுந்த, மேலதிக முனைப்புடன் கட்சிப் பணிகளில் ஈடுபடுவர். இப்படி நேரடி அரசியலில் ஈடுபடுபவர்களும், சமூகத்தில் ஒரு சிறு பகுதியினரே.

ஆனால் நம் இந்தியா போன்ற தேசங்களில், அதுவும் குடிமையுணர்வற்ற திரா விடக்  கட்சிகள் கோலோச்சும் நம் தமிழகத்தில் – சில குறிப்பிடத்தக்க சிறு கட்சிகள் / அமைப்புகளைத் தவிர – பெரிய அரசியல்கட்சித் தலைவத்தொண்ட திரியாவரங்களானவர்கள் — சதாகாலமும் ஏதோ போராட்டம், கல்லெறிதல், பேருந்து எரித்தல் எனப் பொழுதன்னிக்கும் நடந்துகொண்டேயிருந்தால்தான், கட்சியின் கட்டுக்கோப்பு குலையாமல் இருக்கும், கட்சியினர் ‘ஒரு குடையின்’ கீழ் அணி திரள்வர், கட்சியை மறந்துவிடமாட்டார் என எண்ணுபவர்கள்.

ஏனெனில் இந்தத் தலைவர்களுக்கு மூன்று  மிக  முக்கியமான விஷயங்கள் தெரியும்:

  1. தங்கள் கட்சியின் கொள்கை என்பது மகாமகோ பூதக் கண்ணாடியால் பார்த்தாலும், அந்த ஆண்டவனுக்கேகூடத் தெரியாது. ஆக எதிர்மறையாக உணர்ச்சிபூர்வமாக மட்டுமே பிரச்சினைகளை அணுகவேண்டும். வேறு எப்படியும்  கட்சியையும், வாக்குவங்கியையும் தக்கவைத்துக் கொள்வது என்பது முடியாத காரியம்.
  2. தங்கள் கட்சி ஆட்சியில் இல்லையென்றால் வன்முறைப் பேச்சு அல்லது நேரடி வன்முறையேதான் வழி (இதன்மூலம், காவல்துறை செயல்பாடு, கைதுகள், வழக்கு என விரியும் காட்சியில், கட்சியின் கட்டுக்கோப்பு காக்கப்படும்),
  3. வன்முறைக்கு ( = தங்களுக்குச் சொந்தமில்லாத சொத்துகள்மீது கல்லெறிதல், ஷாமியானா உண்ணாவிரதங்கள், பேருந்து எரிப்புகள், சாலையோர மரம் வெட்டுதல்கள், சாராயக்கடைக்குப் பூட்டுப் போடுதல்கள், ராஜபக்ஷவுக்கு மானசீகத் தூக்கு போடுதல்கள்…) அறைகூவல் விடுத்தால் அதற்குக் கிடைக்கும் ஆதரவானது – நன்முறைக்கு ( = ‘ஒரு நாள் அனைத்து திமுக தொண்டர்களும் சேர்ந்து கோபாலபுரத்துச் சந்துபொந்துகளையும், சுவர்களையும் சுத்தம் செய்வோம்’ மேலும் ‘எடுத்த குப்பைகளை போயஸ் தோட்டம் பக்கம் வீச மாட்டோம்!’ அல்லது ‘கூவத்தை மணக்கவைக்கக்கூட வேண்டாம், அதனைத் தூர் வாருவோம்!’) சுத்தமாகக் கிடைக்காது.

ஆக இந்தக் கட்சிகளின் இம்மாதிரிச் செயல்பாடுகளை, ஒரு பிரத்தியட்ச மறுதலிக்கமுடியாத   உண்மை என்பதை நாம் உணரவேண்டும். நமக்கு இந்தப் போக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இந்த நிதர்சன நிலைமையை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். :-(

கொஞ்சம் யோசியுங்கள்: விசிலடிச்சான்குஞ்சப்பத் தொண்டரடிப்பொடிகள், கட்சிகளின்கீழ் இருக்கும்போதே இவ்வளவு நாசம் செய்கிறார்கள், இவர்கள் கட்சி சார்பற்றவர்களாக இருந்தால், ஒருவிதமான ‘கட்டுக்கோப்பும்’ இல்லாமல் – தமிழகம் முழுவதும் பேருந்துகளை எரித்துக்கொண்டும், தங்களில் ஒருவராக பாவிக்கப்படாத மற்றவர்களின் வீட்டை எரித்துக்கொண்டும், துரத்திக் கல்லெறிந்துகொண்டும் இருப்பார்கள், அல்லவா? அராஜக நிலைமைதான் எஞ்சும்.

இப்படியாகத்தானே, நாம் இவர்கள் செய்யும் பொதுச்சொத்து நாசங்களை, மக்களுக்கு இழைக்கும் இடர்பாடுகளை, விளைவிக்கும் குழப்பங்களை – இவற்றுக்கு மாற்றாக, இவற்றைவிட மகாமகோ கோர வக்கிரதாண்டவங்கள் நடைபெறாமல் இருப்பதற்குக் கொடுக்கப்படவேண்டிய விலையாகக் கருதவேண்டும். அவற்றை — அவர்களுடைய மேன்மை செய்யப்படாத வன்முறை உணர்ச்சிகளுக்கு, அடாவடித்தனச் செயல்பாடுகளுக்கு, திரிசமன்களுக்கு  (unsublimed violent emotions & behaviours), ஒரு வடிகாலாகக் கருதவேண்டும்.

நமக்கு, நமது சமூக அளவில், பரந்துபட்ட குடிமையுணர்ச்சி, பொறுப்புணர்வு, உரையாடும் தன்மை, படிப்பறிவு, தன்னூக்கம், தொழில் தர்மம் போன்றவை எல்லாம் போதிய அளவு வளர்ந்து ஆழமும் செழுமையும் பெறும்வரை பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும்.

#இரண்டு :பொருளாதார ரீதியிலான லாபம்:  சுண்டைக்காயளவு எதிர்மறைக் குப்பைச் செய்திகளை ஊதி ஊதிப் பெருக்கும், கொள்ளைலாப வெட்டி அரசியல்கட்சிசார் பப்பரப்பா ஊடகங்களுக்கும் இது ஒரு லாபம் பார்க்கும் உத்தி மட்டுமே!

… ஊடகங்களில் வருவதெல்லாம் உண்மையே அல்ல; அப்போதைக்குத் தோன்றியதுபோல கருத்துத் தெரிவித்தல் உண்மைவிளம்புதல் அல்ல.  இந்த பப்பரப்பாக்களில், எப்பொழுதாவது தப்பித் தவறி, வானிலை அறிக்கை என்று அதிகபட்சம் பத்து சதம் உண்மை வந்தால் அதற்காக அவர்களை மன்னித்துவிட்டு அடுத்த மெகாசீரியல் பார்க்க உட்கார்ந்துவிடலாம், நமக்கு வேறு வழியேயில்லையே!

இந்த ஊடகங்கள் செய்வதையும் ஒரு விதத்தில் மேன்மை செய்யப்படாத பாலுணர்வுசார் வன்முறை உணர்ச்சிகளுக்கு, அடாவடித்தனச் செயல்பாடுகளுக்கு (unsublimed sexually violent emotions & behaviours) ஒரு வடிகாலாகக் கருதவேண்டும்.

#மூன்று : கேளிக்கை: அனைவருக்கும் பொழுதுபோகவேண்டும். பெரிய/சிறிய அரசியல் கட்சிகளுக்கும் பொழுது போகவேண்டும். அதேபோல — உலகத்தில் எந்தப் பகுதியில் என்ன நடந்தாலும், உடனுக்குடனே, உலகமக்களை உய்விக்கத் தங்களது மேதகு கருத்தைத் தெரிவித்து இணையத்தில் / பத்திரிகைகளில் எழுதுபவர்களுக்கும் பொழுதுபோகும். பொதுமக்களுக்கும்,  ‘கைவல்ய நிலை அவர்கள் கைவந்தகலை’ என்பதால் – இவர்கள் எழுதுவதை / பிலிம் காண்பிப்பதை – ஒரு கேள்விகூடக் கேட்காமல், அசைபோடாமல் அப்படியே முழுங்கி, ஒருவாறாகப் பொழுதுபோகும்.

ஒன்று சொல்லவேண்டும்: கடந்த பல வருடங்களாக, ஒரேவிதமாக – தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் – ஏன், ஸ்ரீலங்காவுக்குமேகூடப் பயனாகும் வகையில் நோக்கங்களையும் செயல்பாடுகளையும் வைத்திருப்பது காங்க்ரெஸ் கட்சிதான். இந்த ஒரு விஷயத்திலாவது நாம் காங்க்ரெஸ் கட்சியை ஆதரித்தே ஆகவேண்டும்.

ஆக, இந்த அரசியல் கட்சிகளின் நேரடிப் பங்கு என்பது ஒன்றும் இல்லை. ஆனால் மறைமுகமாக நம் தமிழ்ச்சமூகத்தின் பெரும்பாலான அமைதி நிலவரத்துக்கு – இவர்கள் ஆற்றும் பங்கும் குறைத்து மதிக்கக்கூடியது அல்ல.

என்னைப் பொருத்தவரை, பொதுமக்கள்/சமூகம் – இந்த அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்களை ஒன்று+இரண்டு மூலம் புரிந்துகொண்டு – மூன்றாவதாக,  ‘தொட்டுக்கொள்ள’ அவற்றைக் கேளிக்கையாகவும் (‘டைம் பாஸ்’) – அடிப்படை வன்முறை உணர்வுகள் கொஞ்சமாக வெளிப்படுவதாகவும் கருதவேண்டும்.

யோசித்துப் பாருங்கள் – இந்த வடவச் சதித்திட்டத்தை முறியடிக்கும் கோணத்தை: இந்த டெஸொ-புஸொ மேடைகளில் ஆவேசப் பேச்சுப் பேசி உசுப்பி விட்டவர்கள் எல்லாம் -சும்மனாச்சிக்கும் பேச்சு பேசிக்கினே இருக்காமல் –  ஆளுக்கு ஒரு பேருந்தை திராவிட இயக்கங்களுக்கே உரித்தான அறப்போராட்ட முறையில் கொளுத்தியிருந்தால் என்ன ஆகியிருக்கும்?  மறுபடியும் – புதுப் பேருந்துகளை விற்கிறேன் பேர்வழியென்று வடவ டாடா, பிர்லா, ஹிந்துஜாக்கள்தானே மேலதிகமாக லாபம் ஈட்டியிருப்பர்?ஆரியர்களுக்கு அல்லவோ துணை போயிருப்பர்?

ஒருகால் இந்த டெஸொ-புஸொ இத்யாதிகளின் குயுக்தியான வடவ சதியை நம் தமிழகச் சதிகாரர்கள் (=கேடி சகோதரர்கள்) ஹைஜாக் செய்துவிட்டார்களோ? இதில் பாமகவுக்குப் பங்கு கிடைக்கவில்லையோ? அதனால்தான் பாமக மவெ[1] கட்சியாக இருந்ததிலிருந்து உருமாறி, பேஎ[2] கட்சி ஆயிற்றோ? என்ன எழவோ,  தலை சுற்றுகிறது. (இப்போதுதான் யோசித்து இந்தச் சதித் திட்டத்தைப் பற்றி எழுதினேன் – ஆனால் இது நிஜமாகவே உண்மையாக  இருக்கலாமோ?)

நம் தங்கத் தமிழகத்தில் கேளிக்கைக்கும், மகிழ்ச்சிக்கும், திடுக்கிடவைக்கும் கற்பனைச் சதித்திட்டங்களுக்கும் ஒரு அளவு என்பதே இல்லை. இதைத் தட்டச்சு செய்யும்போதே எனக்கு றொம்ப றொம்ப ஸிர்ப்பா வர்த்பா!

டமிள் நாட்னா டைம்பாஸ்நாட் பாஸ்! வோக்கேவா?

ஆ ஆங்….வாடீ யென் கெப்பெ கெழங்கே….

-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-

ஆக, பத்ரி அவர்களே!  இந்த ஸ்ரீலங்கா பிரச்னையில், தமிழகத்தின் பெரிய/முக்கிய அரசியல் கட்சிகளுக்கும், சிறு/உதிரி/விளிம்புநிலை  இயக்கங்களுக்கும் உள்ளான பங்கு என்பது  ‘பொழுதுபோக்கு’ என்பதை மிகப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள்  ஏன்  ‘அவை, பொதுமக்கள்/சமூகத்தால் ஒதுக்கப்படவேண்டும்’ எனக் கேட்கிறீர்கள்? அவைகளை ஒதுக்கவோ உதைக்கவோ வேண்டாம். ஏனெனில் நம் தமிழகத்தில், நிச்சயமாக நகைச்சுவைக்குப் பஞ்சம்தானே? இந்த வருந்தத்தக்க சூழ்நிலையில், இவைகளும் கையைவிரித்து விட்டால், நாம் என்னதான்  செய்யமுடியும் சொல்லுங்கள்…

-0-0-0-0-0-0-0-

[1] மரம் வெட்டும்;  [2] பேருந்து எரிக்கும்

அடுத்து: தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (22/n)

தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??

One Response to “தமிழகத் தமிழர்களாகிய (அல்லது திராவிடக் கட்சிகளாலாகிய) நாம், இந்த ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு என்னதான் செய்யக்கூடும்?”

  1. A.seshagiri Says:

    “இந்த ஸ்ரீலங்கா பிரச்னையில் தமிழகத்தின் பெரிய/முக்கிய அரசியல் கட்சிகளுக்கும்…. ‘பொழுதுபோக்கு’ என்பதை மிகப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.”
    ‘பொழுதுபோக்கு’ மட்டும் அல்ல அதன் மூலம் ஒட்டு பொறுக்குதலும்,பிழைப்பை நடத்துதலும் சேர்த்துதான்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s