வழிப்பாதை நாய்களும், ஒட்டகச்சரக்கு நெடும்பயணங்களும்… (+பத்ரியின் கேள்வி #1)

February 18, 2014

(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (20/n)

சாளரம் #12: வழிப்பாதை நாய்கள்[1] குரைத்துக்கொண்டிருக்கலாம், ஆனால் ஒட்டகச்சரக்கு நெடும்பயணங்கள் தொடர்ந்துகொண்டே இருப்பவை…

‘Dogs bark, but Caravans roll on’ – என்கிற அரேபிய மூல வாசகம் எனக்குப் பெரும் மனவெழுச்சியைப் பல காலமாகக் கொடுத்து வருவது. அற்புதமான குறியீடாகவும், ஏன் படிமமாகவேகூட விரித்தறியத் தக்கது.

நம் தமிழ் நாட்டில் எவ்வளவோ எதிர்மறையும் கவைக்குதவாவையுமான சங்கதிகள் இருக்கின்றன. ஆனாலும் இவற்றையும் இவற்றின் ஆதாரசுருதியான திராவிட இயக்க எச்சங்களையும் மீறி,  நம் சமூகம் எப்படியாவது மேலெழுந்து வரும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தமிழகம் எனும் நிலப்பரப்பிலும் வாழும் தமிழர்களையும், தமிழச் சூழலையும் — நிலமாகவும், கவிதையாகவும், கதையாகவும், திரைப்படமாகவும், மேடைப் பேச்சுகளாகவும், அரைவேக்காட்டு அரசியல் பகடைகளாகவும் மட்டுமே பார்த்து, உபயோகித்து, அவற்றை விற்று தன்னை வளர்த்துக்கொண்ட அறிவுஜீவி அரைவாளிகளும், காப்பிக்கடைக் காரர்களும், அரசியல் உதிரிகளும் நிரம்பிய — தற்போதைய நிலையில், இன்னமும்  குறிப்பிடத்தக்க அளவில் தரம்  வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கக் கூடிய விஷயம்தான்.

albert-einstein-good-quotes-sayings-indifference-people

எப்படி இதனைச் சொல்கிறேன் என்றால், இதற்காகப் பலவிதங்களில் நடந்துகொண்டிருக்கும் சிறு முயற்சிகளில் பலவற்றை நான் அறிவேன். அடுத்தவர்களுக்குத் தெரியாமல், விளம்பரங்கள் பெறாமல் (அவற்றைப் பெற விரும்பாமல்) நம் தமிழகத்தின், இந்தியாவின் மேன்மைக்காக, வளர்ச்சிக்காக – வெகு இயல்பாகவும், சுறுசுறுப்புடனும் – முனகலோ சுயபச்சாத்தாபமோ கர்வமோ துளிக்கூட  இல்லாமல், மகிழ்ச்சியுடன் பாடுபடும் அற்புத மனிதர்களை நான் அறிவேன்.

இம்முயற்சிகளில் பின்னிருக்கும் மகானுபாவர்கள் பொதுவாக இப்படித்தான் சிந்திக்கிறார்கள் என்பதையும் நான் உணர்கிறேன். அதாவது:

‘நம் தாக்கத்தில், நம்மால் துப்புரவாகச் செய்து முடித்துவிடக்கூடிய செயல்களையே நமக்குச் செய்து முடிக்க நேரம் இல்லை. இப்படி இருக்கையில், சரியாக இல்லாத மற்ற விஷயங்களைப் பற்றி, நம்மை மீறிய செயல்பாடுகளைப் பற்றி யோசிக்க, செயல்பட நமக்கேது நேரம்?’

இப்படிப் பொது நலத்துக்காக நேரடியாகப் பணிபுரியாமல் இருந்தாலும்  – பல விதங்களிலும் பல துறைகளிலும் தொழில் அறத்தையும், விடாவுழைப்பையும், குவிந்த ஈடுபாட்டையும், தங்கள் மகத்தான புத்திக்கூர்மையையும் தந்து —  தங்களளவில் உன்னதங்களை எட்டிப் பிடிக்கும் சான்றோர்களை – இம்முனைதல்கள் காரணமாக நம் தமிழகத்துக்கு, இந்தியாவுக்கு ஏன் நம்முலகத்துக்கேகூடக் குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களை அளித்துக் கொண்டிருப்பவர்கள் பலரைப் பற்றியும் அறிவேன் – இவர்களில் சிலரை நேரடியாக அறிவேன்.

இவர்களிடம் வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கைகள் அள்ளிக் கொட்டிக் கிடக்கின்றன. இவர்கள் நம்பிக்கை வீண்போகாது. நான், ஒட்டகங்களைப் பார்த்துக் குரைத்துக்கொண்டிருந்தாலும்…

இவர்களால் தான்  மழை பெய்கிறது. ஆம்.

ஹ்ம்ம்ம்… நம்முடைய சாக்கடையை, தெருவை, குப்பைத்தொட்டிகளை – முகத்தில் ஒரு உணர்ச்சியும் இல்லாமல் நமக்காகச் சுத்தம் செய்கிறவர்கள் எனப் பலர் இருக்கின்றனர் – இவர்களுடன் நாம் உரையாட ஆரம்பித்தால், பணிபுரிய ஆரம்பித்தாலே அது நம்முடைய நம்பிக்கைகள் உறுதிப்படலுக்கு ஓர் எளிமையான ஆரம்பமாக இருக்கக்கூடும்.

-0-0-0-0-0-0-

இப்பதிவுக்கு முன் வந்த 19 பதிவுகளில் பதியப்பெற்ற பனிரெண்டு சாளரங்களைப் பற்றிய மேலதிகக் குறிப்புகள்:

அ: ஒரு மனிதன், இந்தியன், தமிழன் என்கிற முறையில் – மேற்கண்ட அனைத்தும் – எல்லாக் கோட்பாடுகளும் – நேரடி, எதிர்மறை கோட்பாட்டு விரிவுகளும் – எனக்கும்  பொருந்துபவை என்பதை உணர்ந்தே, நான் மேலெழுந்துவரத் தொடர்ந்து முயற்சி செய்கிறேன்.

ஆ: மேற்கண்ட கோட்பாடுகளுக்கு, சில, வெகுசில குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளும் இருக்கின்றன (‘இயற்கை’க்கு நன்றி). ஆனால் அவை – தமிழுலகைக் குறைந்தபட்சம், நான் புரிந்துகொள்ள, பொதுப்படைக் கோட்பாடுகள் பெரும்பாலும்
உபயோககரமாக இருப்பதையே சுட்டுகின்றன.

இ: இந்த சாளரங்களை எப்படிச் சரியாக (அல்லது உங்கள் பார்வையில் தவறாக) அவற்றின் வரலாற்றுப் பின்புலங்களோடு அடைந்தேன், அவற்றின் காரணிகளை, ஊக்குவிப்பான்களை அறிந்துகொண்டேன் என்று நான் எழுதவில்லை. அது இந்தக் கட்டுரைத் தொடரின் சாராம்சத்துக்கு உதவி செய்திருக்காது. மேலும் இவற்றையும், விட்டுப்போன சாளரங்களையும் பற்றி எழுதினால் அது ஒரு குண்டுப்புத்தக அளவுக்கு நீண்டுவிடும்; இது, தற்போதைக்கு அவசியமில்லை என நான் நினைக்கிறேன். (பத்ரி சேஷாத்ரி அவர்களின் கேள்விகளுக்கு/ஆதங்கங்களுக்கு என் பதிலைக் கொடுப்பதற்காக மட்டுமே, நான் என்னுடைய செல்லச் சாளரங்களைப் பற்றி எழுத ஆரம்பித்தேன், அவ்வளவுதான்!)

ஈ: மேற்கண்ட சாளரங்களைப் பற்றிக் கோபமோ வருத்தமோ நீங்கள் அடைந்தால், அது, அவற்றுக்கு/பொதுவிதிகளுக்கு நீங்கள் ஒரு அழகான விதிவிலக்காக இருக்கக் கூடும் என்பதையே சுட்டும். நான் எழுதியிருப்பது என்னளவில், என் படிப்பு / சூழல் / உந்துதல்கள் / அனுபவங்கள் போன்றவற்றால் ஆன என் சிந்தனைகளை மட்டுமே. தாராளமாக நீங்கள் என்னை மறுதலிக்கலாம். முடிந்தபோது உரையாடலாம். கருதுகோள்களைச் செம்மைப்படுத்தலாம். நிராகரிக்கலாம். தமிழகத்தை, உங்கள் பார்வையில் புரிந்துகொள்ள முயலலாம். சரியா?

உ: இப்பதிவு வரிசையில் — அவ்வப்போது சில புத்தகங்களை மேற்கோள் காட்டி, அவற்றில் என்னுடைய கருதுகோள்களுக்கு அனுகூலமாக/உதவியாக இருப்பவற்றைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். ஆனால், மேற்கோள் காட்டாத புத்தகங்கள் / எழுத்தாளர்கள் என ஒரு மகாமகோ ஜாபிதா இருக்கிறது. இவை அனைத்தையும் கொடுக்க எனக்கு நேரமோ, சக்தியோ முக்கியமாகப் பொறுமையோ  இல்லை.  மன்னிக்கவும்.

-0-0-0-0-0-0-0-0-0-

ஒருவழியாக, இப்போது, பத்ரி கேட்ட கேள்விகளுக்கு – ஒன்றன் பின் ஒன்றாகச் செல்லலாம்:  (இவற்றைச் சுமார் பத்து மாதங்கள் முன்பு எழுதினேன்)

பத்ரி: ஸ்ரீலங்கா பிரச்னையை, அதனை எதிர்காலத்தில் தீர்ப்பதை நோக்கிய திசையில் உன் எண்ணங்கள் என்ன? (“What is your take on the solution to Sri Lankan issue going forward?”)

நான் இதற்கு  ஒன்றல்ல – ஆறு  ‘டேக்’குகள் வைத்திருக்கிறேன். ;-)

டேக் #1: அதனை ஸ்ரீலங்காகாரர்கள் (பலவிதமான அங்குள்ள தமிழர்கள் + சிங்களர்கள் + இன்னபிற மற்றவர்கள்) பார்த்துக்கொள்வார்கள். நாம் நம்முடைய வேலைகளைச் செய்துகொண்டிருந்தால் போதும். அவர்களை உபத்திரவப்படுத்தாமல் இருந்தால் போதும். இதுவரை நாம் செய்து கிழித்தது  போதும். நம் பாத்தியதைப் பட்ட, நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய விஷயங்களிலேயே நாம் ஏகோபித்துச் சொதப்புவதுதான் நம்முடைய பாரம்பரிய வழக்கம். என்ன சொல்கிறீர்கள்?

டேக் #2: ராஜீவ்-ஜெயவர்தன உடன்படிக்கையைவிடச் சிறந்ததான தீர்வு இருக்க முடியாது – இப்போதும்கூட. அதனைக் கயமையுடன் எதிர்த்துக் குளிர்காய முற்பட்டதால் வந்த கோர அழிவுகளைப் பாருங்கள். என்ன சோகம் இது! (ஆனால் இந்த உடன்படிக்கை தற்போதைய சூழலில், மீட்டெடுக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்படுவது என்பது முடியாது எனத்தான் தோன்றுகிறது. ஆனாலும் காலம் கனிந்து வரலாம்)

டேக் #3: தற்போது, உலகத்தின் மிகப் பெரிய பிரச்னை – ரோஜாச் சீனாவின் (செஞ்சீனாவின் சாயம் வெளுத்துக்கொண்டிருக்கிறது) அளவுக்கு மீறிய பேராசைதான். இந்தியா இந்த ரோஜாச் சீனாவின் பக்கத்தில் வேறு இருந்து தொலைத்திருப்பது ஒரு பூகோளச் சதி. ஆக இந்தியாவுக்கு இதனால் தலைவலி கொஞ்சம் அதிகமே. ஆக, வேறு எதற்காக இல்லாமல் இருந்தாலும் இதன் காரணமாகவாவது, சீனாவின் சந்தை / எல்லை சார் கபளீகர ஆக்கிரமிப்பு எண்ணங்களை செக்மேட் செய்யவாவது நாம் ஸ்ரீலங்காவுக்கு மேலும் மேலும் உதவி செய்யவேண்டும். இது தொடர்பாக — — ஸ்ரீலங்கா புனரமைப்புக் கான்ட்ரேக்ட்களில் ஈடுபட முயன்று அதற்கான ஒப்பந்தம் பெற முடியாத, ஆனால் மதிக்கத்தக்க நம்பகத்தன்மை வாய்ந்த இந்திய நிறுவனத்தின் உயர்நிலைப் பொறியாளர் ஒருவருடன் சில மாதங்கள் முன்பு பேசிக்கொண்டிருந்தேன். அவர் நிறுவனம் ஒப்பந்தப் புள்ளிகளைப் பெறமுடியாமல் போனது பண முதலீடு விஷயத்தில்தான் என்றார் – ஊழலினால் அல்ல என்றார் – ஆனால், இம்மாதிரி ஒப்பந்தங்களை (இவற்றில் சில, இலவசமாக சீனாவால் செய்து தரப்படுபவை!) வென்ற சீனா, அதன் சிறைக்கைதிகள் 34,000 பேர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. சீனா இவர்களைச் சக்கையாகப் பிழிந்து வேலை வாங்கிக்கொண்டாலும், இந்தக் கைதிகளுக்குச் சம்பளமே தரவேண்டாம்! எப்படியிருக்கிறது கதை! இதனால் சீன ஒப்பந்தக்காரர்களுக்கு செலவு குறைவுதானே! அவர்களால் அடிமாட்டு விலைக்கு வேலையை முடிக்க முடியுமே! இவர் சொல்வதைக் கேட்டால், எதிர்காலத்தில் ஸ்ரீலங்காவின் பல திட்டமுனைவுகளில் சீன ஆக்கிரமிப்பு இருக்கும் என்பது என் எண்ணம். ‘ஃப்ரண்ட்லைன்’ காரர்கள் இது பற்றி, சீன மனிதவுரிமைகளைப் பற்றி எழுதலாம் என்பது ஒருபுறம் இருக்க, இந்தியா, இந்த மறைமுக சீன ஊடுருவல்களுக்கு எதிராக (அதாவது ஸ்ரீலங்காவுக்குச் சார்பாக) செயல்படவேண்டியது அவசியம்.

டேக் #4: இந்தியா பஞ்சாப் மாநிலம் சார்ந்த காலிஸ்தான் பிரச்னையை எப்படி எதிர்கொண்டு வெற்றி கண்டதோ அதேபோல ஸ்ரீலங்கா வெற்றி பெற அதற்கு நாம் உதவவேண்டும் – ஆயுதம் தாங்கிய போராட்டம் மறுபடியும் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளை அறவே ஒழிக்கவேண்டும். பரஸ்பர உறவு புதுப்பிக்கப்பட வேண்டும். இது பணத்தாலும் (கடன், நன்கொடை), யுத்தத் தளவாடங்களைக் குறைந்த விலைக்குக் கொடுப்பதினாலும் (சீனாவின் பாதிப்பினைக் குறைக்கவேண்டும்), புனரமைப்புப் பணிகளினாலும் (இவற்றில் ஈடுபடும் நம் நிறுவனங்கள், நம் அரசின் அரவணைப்புப் பெறுதல் வேண்டும்), ஸ்ரீலங்காவிலிருந்து இறக்குமதிகளை அதிக அளவு செய்வதினாலும் (சரக்கு வணிகத்தில் அது நம்முடைய ‘முக்கியமாக விரும்பப்படும் நாடாக’ MFNஆக அறிவிக்கப்படவேண்டும்), கலாசார-விளையாட்டு-கல்வி தொடர்பான கொடுக்கல் வாங்கல்களினாலும் செவ்வனே கட்டமைக்கப்படவேண்டும்.

டேக் #5: ராஜரீக முறையில் – நேரடியாகவும், மறைமுகமாகவும் (சாம, தான, பேத, தண்ட முறைகளை – தேவைக்கேற்றாற்போல கடைபிடித்து) இந்தியா – ஸ்ரீலங்காவுக்கு அழுத்தம் கொடுத்து – அங்கே சுபிட்சத்தை நோக்கிய பாதைக்கு வழி வகுக்க வேண்டும். நாம் பஞ்சாப் மாநிலத்தில் என்ன செய்தோமோ – எப்படி வன்முறையைப் பூண்டோடு ஒழித்து, செல்வத்தைப் பெருக்கினோமோ – அதே தந்திரோபாயங்களைப் பயன்படுத்த வேண்டும். இந்தியாவே நேரடியாக இவைகளைச் செய்யாமல் – ஸ்ரீலங்காவின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினால் செய்ய வைக்க – சகல விதங்களிலும் முனைய வேண்டும். இதற்கு மிக முக்கியமாக – தமிழ்நாட்டு அரைகுறை திராவிடக் கட்சிகளின் உளறல்களைக், கயமையைக் கண்டுகொள்ளாமல் இருக்க, நமட்டுச் சிரிப்புடன் இடங்கையால் புறந்தள்ள மத்திய அரசு  முனைய வேண்டும்.

டேக் #6: நம்முடைய தமிழகத்தின் பிழைப்புவாத டெஸோபுஸோ அரைகுறைகளை, கவைக்குதவாத வெட்டித் தமிழ் ஈழம் ஆதரவாளர்களை – நம் மக்களானவர்கள் — குறைந்தபட்சம் சுய நலக் கோமாளிகள், அதிகபட்சம் கடைந்தெடுத்த அயோக்கியப் பதர்கள்  எனச் சரியாக  இனம்காணத் தெரிந்து கொள்ள வேண்டும். ஸ்ரீலங்கா வாழ் தமிழர்களும் இந்த அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.   தொப்புள்கொடி தொப்புள்பம்பரம் என்றெல்லாம் கருணாநிதித்தனமாக, விஜயகாந்தினைப் போலவெல்லாம் உளறிக் கொட்டுவதனால் எந்தப் பயனும் இல்லை. இந்தப் பார்வையை நாம் (சாதாரணத் தமிழகத் தமிழர்கள் + ஸ்ரீலங்கா தமிழர்கள்) வளர்த்திக் கொண்டால் – அரைகுறைகளின் நடவடிக்கைகளை ஒரு கேளிக்கையாகப் புரிந்து கொள்ளலாம். பின்னர் ‘ஜாலிலோ ஜிம்கானா’தான்.  ஆமென். (ஆக, இப்படிப்பட்ட புரிதலுக்குப் பின், உதவிகரமாக ஏதாவது செய்யவேண்டுமென முயலலாம்)

-0-0-0-0-0-0-0-

[1] நாய்கள் என்றால் எனக்கு மரியாதையும் பிரியமும்தான். இருந்தாலும் பொதுவாக இந்த ‘நாய்’ என்கிற வார்த்தையை, எதிர்மறையான அர்த்தத்தில்தான் (எஸ் ராமகிருஷ்ணன் அவர்களைப் போல) உபயோகப் படுத்தியிருக்கிறேன்.

அடுத்த பதிவிலும் பத்ரியின் கேள்விகளும் என் பதில்களும் தொடரும் –  தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (21/n)

தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??

14 Responses to “வழிப்பாதை நாய்களும், ஒட்டகச்சரக்கு நெடும்பயணங்களும்… (+பத்ரியின் கேள்வி #1)”

 1. சரவணன் Says:

  ஸ்ரீலங்கா அரசு என்பது சிங்களப் பேரினவாத அரசு. அதற்கு உதவுவதால் யாருடைய நலனும் காப்பாற்றப்பட முடியாது. சிங்கள பேரினவாத அரசின் போர்க்குற்றங்கள் பற்றி விசாரனை நடைபெற்று அதற்குக் காரணமான ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் தண்டிக்கப்படுவதுதான் இலங்கை விஷயத்தில் செய்ய வேண்டியவற்றின் தொடக்கப்புள்ளியாக இருக்கும். (எல்.டி.டி.ஈயின் போர்க்குற்றங்களும் தணைடிக்கப்பட வேண்டும், ஆனால் அந்த இயக்கத்தினர் ஒழிக்கப்பட்டுவிட்டனர் அல்லது ஏற்கனவே விசாரனையின்றி சிறையில் உள்ளனர்.)

  இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் (என்ற கௌரவமான பெயரால் குறிப்பிடப்படும் பேரினவாத கைக்கூலி) டக்ளஸ் தேவானந்தா சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, அவர்மீது சென்னை காவல் நிலையத்தில் இருக்கும் கொலைக் குற்றத்துக்காக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். தண்டனை வாழ்நாள கால சிறைவாசமாக இருக்க வேண்டும். வெளி உலகத்தை அவர் இனி பார்க்கவே முடியக் கூடாது. டக்ளஸ் தேவானந்தா இந்தியாவுக்கு அனுப்பப்படும் வரை இலங்கைமீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.

  இனி ஒரு தமிழ் மீனவர் சுடப்பட்டாலும் மறுநாளே இலங்கைக் கடற்படை மொத்தமும் இந்தியக் கடற்படையால் அரை நாளில் நிர்மூலமாக்கப்படும் என்று விளங்க வைக்க வேண்டும். அவர்கள் மறந்து போயிருக்கும் (நீங்கள் சிலாகிக்கும் ஒப்பந்த த்துக்கு முன்னோட்டமாக அமைந்த) ‘ஆபரேஷன் பூமாலை’யை நினைவுபடுத்த வேண்டும்.

  ஒரு நியாயமான சந்தேகம்- கருணாநிதி பெயரை மட்டும் பல முறை குறிப்பிட்டுள்ளீர்கள்; 2009 மக்களவைத் தேர்தலுக்கு முன் ‘தமிழ் ஈழமே தீர்வு, அதை இராணுவத்தை அனுப்பிப் பெற்றுத் தருவேன்’ என்று முழங்கிய, 2011 உள்ளாட்சித் தேர்தல்களுக்கு முன் ‘இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ என்று சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயல்லிதாவைப் பற்றிக் குறிப்பிடவில்லையே?

 2. T.S. Ravi Says:

  MR. Saravanan,

  I am not able to see your doubt as a நியாயமான சந்தேகம்.
  Why don’t you write about Jayalalitha? MK as well as his followers always throw a counter question whenever any issue is raised against them. Hope you are not one among them.


  • Thanks, Saravanan & TS Ravi – for your viewpoints & considered comments.

   As I have written many times earlier, I do not believe in the idea of idle neutrality or idolizing fence sitters.

   I feel that MK and the ideas he represents are way far more deleterious to the long term development and resurrection of TN (and our dear Tamil) than those of the lady. Having said that, dear Saravanan, please understand that I am not a professional political ANALyst or one afflicted with the urge to comment on any and every happening / development. I am choosy. I have blinkers. I am ordinary. I am Tamil.

   Living with gay abandon all the time, I must tell you that I choose my target posterior openings rather carefully – whether it is MK or YK.

   And, I am of the firm and considered opinion that the dravidian (=bowel) movement is one bloody SAD thing to have happened to TN. And, whether it is the illustrious Ma’am or Kalaignar Saar they are all part of the same mosquitolarval pond. But the latter is of a virulent variety, and that’s the problem.

   ’nuff said.

   • சரவணன் Says:

    ராமசாமி, திராவிட இயக்கங்கள் இன்று எவ்வளவு சீரழிந்திருந்தாலும், அன்றைக்கே அதில் என்ன குறைகள் இருந்திருந்தாலும், ஒரு விஷயத்தில் நானும் பெரும்பாலான தமிழர்களுக்கும் பரம திருப்தி. பட்டுக்கொள்ள முடியும். அதாவது, தமிழகம் மட்டுமே (வடகிழக்கு தவிர்த்து) பா.ஜ.க. தனித்து நின்று ஓரிடம் கூடப் பெற முடியாத, திராவிடக் கட்சி ஒன்றுடன் கூட்டணி அமைத்தாலும் ஓரிரு இடங்களுக்குமேல் பெற முடியாத, எப்படியாவது ஒரு தொகுதியிலாவது வெற்றி கிடைத்துவிடாதா என்று வை.கோ., கேப்டன் (?), ராமதாஸ் என்று கண்ணில் பட்டவர்கள் பின்னெல்லாம் நாயாக அலைய விடப்படும் மாநிலம், இங்கு மதத்தின் பெயரால் ஓட்டுவாங்குவது கனவில் கூட நடக்காது என்பதே அது.. மோதியின் ‘சாதனைகள்’ ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட உள்ளீடற்ற பிம்பம் மட்டுமே என்று நம் மக்களுக்கு குஜராத்தில் வறுமைக்கோடு வெறும் 11 ரூபாய் ஒரு நாளுக்கு (வெட்கம், வெட்கம்) என்ற தகவல் வெளியாகும் முன்பே தெரியும். அந்தப் புனிதர் ஊழல் மன்னன் எட்டியூரப்பாவை மேடையில் வைத்துக்கொண்டே ஊழல் ஒழிப்பைப் பற்றிப் பேசினால் நமக்கு அதிர்ச்சி ஏற்படாது, நமட்டுச் சிரிப்பு மட்டுமே.

 3. A.seshagiri Says:

  நீங்கள் இலங்கை சம்பந்தமாக தெரிவித்து இருக்கும் கருத்துக்களுக்கு,முழுக்க முழுக்க உடன் படுகிறேன்.ஆனாலும் திரு.சரவணன் போன்றோர்களின் கருத்துக்களை படிக்கும் போது,மிகுந்த ஆயாசமே ஏற்படுகிறது.இவர்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி வெட்டித்தனமான உணர்ச்சிகளுக்கு ஆட்கொண்டு,யதார்த்த சூழ்நிலைகளை புரிந்து கொள்ள மறுப்பார்கள் என்று தெரியவில்லை. இவரை போன்றவர்கள், டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுக்கு தாங்களாகவே தண்டனையை தீர்மானிப்பார்கள்.அதே நேரத்தில் நேர்மையான விசாரணை நடத்தி,ராஜீவின் கொலைக்கும் மற்ற அப்பாவிகளின் கொலைகளுக்கும் காரணமானவர்களை தண்டிக்கவிடாமல் தடுப்பார்கள்.என்றுமே இவர்களை பொருத்தவரை
  ஒரு கண்ணில் வெண்ணையும்,மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும்தான்.
  தமிழ்நாட்டில் மறுபடியும் ஆரம்பித்து விட்டது வெட்டி கொண்டாட்டங்கள்!

  • சரவணன் Says:

   சேஷகிரி,

   உங்களுக்கு ஆயாசம் ஏற்பட்டால் அது உங்கள் பிரச்னை, நான் ஒன்றும் செய்ய முடியாது. மற்றபடி, ராஜீவ் கொலையாளிகளை யார் தண்டிக்க வேண்டாம் என்று சொன்னார்கள் என்று தெரியவில்லை. உங்களுக்குத் தெரியுமோ, தெரியாதோ-

   1. ராஜீவைக் கொன்ற தனு அதே குண்டுக்குப் பலியானார்.

   2. அடுத்து ராஜீவைக் கொல்லும் திட்டம் பற்றித் தெரிந்து, மாற்றுக் கொலையாளிகளாக இருந்த சிவராசனும் அவன் சகா சுபாவும் தற்கொலை செய்து மாண்டார்கள்.

   3. அவர்களை ஏவிய பிரபாகரனும், பொட்டு அம்மானும் போரில் கொல்லப்பட்டார்கள்.

   இப்போது சிறையில் இருக்கும் 7 பேருக்கும் ராஜீவ் கொலைத் திட்டம் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. முருகனுக்கு பேப்பரைப் பார்த்துத்தான் குண்டு வெடிப்புப் பற்றியே தெரியும். அறிவுவுக்குத் தான் வாங்கி வரும் சாதாரண பாட்டரி வெடி குண்டில் வைக்கப்பட இருந்தது தெரியாது- அவரது வாக்குமூலம் மாற்றிப் பதிவு செய்யப்பட்டது. நளினி முருகனின் காதலி, மனைவி என்ற முறையில் கூடவே சென்றார் அவ்வளவே.

   இருந்தும் இவர்களை யாரும் தணைடனை இன்றி விட்டு விடவில்லை. 23 ஆண்டுகள் பரோல் இன்றி சிறையில் கழித்துவிட்டார்கள்.

   ஆகவே ராஜீவ் கொலையாளிகள் தண்டிக்கப்படாமல் விடப்பட்டதாகவோ, அல்லது தண்டிக்கபடுவதை யாரும் தடுத்ததாகவோ சொல்வது உங்கள் கற்பனை மட்டுமே.

   • A.seshagiri Says:

    சரவணன் அவர்களே பலரும் அறியாத புதிய ‘கண்டுபிடிப்புகளை(!)’ வெளியிட்டு இருக்குறீர்கள் மகிழ்ச்சி.அதே நேரத்தில் ஒரு பக்கம் விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும் என்று கூறிக்கொண்டே ,உச்சநீதிமன்றம் நன்கு விசாரித்து வழங்கிய தீர்ப்பில் தங்களின் அபார புனைவு திறத்தால் அந்த ஏழுபேரின் நடவடிக்கையை நியாய படுத்துகிறீர்கள்.அது சரி ஆனால் மோதி விசயத்தில் மட்டும்…….ஒ புரிகிறது அதுதான் நான் முன்பு எழுதிய ஒரு கண்ணில் வெண்ணையும்……

 4. சான்றோன் Says:

  சரவணன் அவர்களே…..

  அதுமட்டும் போதாது சார்….. ராஜபக்சே வ அப்படியே கழுத்து சால்வைய புடிச்சு தரத்தரன்னு இழுத்துக்கிட்டு வந்து , நம்ம ஊர்ல நடுத்தெருவுல நிறுத்தி கல்லால அடிச்சு கொல்லனும்…..

  அப்படியே செத்துப்போன ஜெயவர்தனே ,பண்டார நாயகாவையும்எப்பாடு பட்டாவது மேலுலகத்துக்குப்போய் கூட்டிக்கிட்டு வந்து , சீமார் நீதிமன்றத்துல நிறுத்தி மறுபடியும் கொல்லனும்……

  விடாதீங்க சார் …. நானும் சப்போர்ட்டுக்கு இருக்கேன்…… தமில் வால்க…..

  • சரவணன் Says:

   சான்றோன், என் உறுதியான கருத்து

   1. யாருமே விசாரணை இன்றி தண்டிக்கப்படக் கூடாது, அது ராஜபக்ஷயோ, அமித் ஷாவோ. மேலும் நடுத்தெருவில் தரப்படும் லின்ச் மாப் தண்டனை எதையும் யாரும் யாருக்கும் தருவதை ஆதரிக்க முடியாது.

   2. யாருக்குமே, அது ரா.ப.யோ, அ.ஷா.வோ, மரண தண்டனை கூடாது.

   ஆகவே, நீங்கள் உங்கள் லின்ச் மாப் தண்டனைகளைத் தனியாக எழுதுங்கள், எதற்கு என் கமெண்டுக்கு ரிப்ளையாக எழுத வேண்டும் என்று புரியவில்லை.

 5. poovannan73 Says:

  பஞ்சாப் பிரட்சினையை தீர்த்தது போல என்பது திருப்பி திருப்பி வருகிறது.அங்கு என்ன பிரச்சினை,யார் யார் போராடினார்கள்,யார் எதிர்த்து போராடினார்கள் என்பதை தெளிவாக பார்த்தால் இலங்கைக்கும் பஞ்சாபின் நிலைக்கும் துளி கூட தொடொர்பில்லாத நிலை புரியும்.
  இலங்கை பிரட்சினையை விடுதலைக்கு முன் இருந்து தொடரும் நாகலாந்து பிரட்சினையொடு ஓரளவிற்கு ஒப்பிடலாம்.

  பஞ்சாபில் ஹிந்துக்கள் குறிபிடத்தக்க சதவீதம்.அவர்கள் காலிஸ்தான் கேட்டு போராடவில்லை.சீக்கியர்களில் தலித் சீக்கியர்கள் 30 சதவீதம்.அவர்களும் காலிஸ்தான் கேட்ட குழுக்களில் வெகு வெகு குறைவு.
  சீக்கியர்கள் ராணுவத்தில் மதிய அரசு பணிகளில் அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.அவர்களில் பெரும்பாலானோர் காலிஸ்தான் கோரிக்கைக்கு எதிரானவர்கள்.சீக்கியர்களில் ஓரளவிற்கு வசதிவாய்ப்புகள் பெற்றவர்கள் தான் காலிஸ்தான் போராடிய பெரும்பாலனவர்கள்.தீவிரவாதத்தின் காரணமாக நலிவுற்ற பொருளாதரத்தால் குறுகிய காலத்திலேயே அவர்கள் தனி நாடு கோரிக்கையில் சலிப்படைந்தார்கள். ராணுவத்தில் இருந்த சீக்கியர்கள்,காலிஸ்தான் குழுக்களில் பெரும்பான்மையாக இருந்த சாதிகளுக்கு எதிரான சீக்கிய சாதிகள் ,சீக்கிய காவல்துறை அதிகாரிகள்,சீக்கிய முதல்வர்(தீவிரவாததிற்கு அவர் உயிரையும் இழந்தார்)உதவியால் அங்கு தீவிரவாதம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
  பாதிக்கபட்ட பகுதிகளை சார்ந்த தமிழர்கள் எவ்வளவு பேர் இலங்கை ராணுவத்தில்,இலங்கை அரசு பணிகளில் இருக்கிறார்கள் என்பதை பார்த்தால் பஞ்சாப் போல என்ற வாதத்தின் தவறு விளங்கும்.
  வடகிழக்கு மாநிலங்களில் இன்றும் தீவிரவாத குழுக்களோடு மத்திய அரசு சமாதன ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை /கல்வி இடங்களை அதிகரித்து தீவிரவாதத்தை விட்டு திருப்பும் முயற்சிகளை செய்து வருகிறது.அவர்களின் கோரிக்கைகளையும் நிராகரிக்காமல் பரிசீலித்து வருகிறது.இலங்கை தமிழர்களையும் இலங்கை அரசு இதே போல அணுகினால் முன்னேற்றம் ஏற்படலாம்


  • அய்யா பூவண்ணன்,

   எதனையும் எதனுடனும் முழுமையாகப் பொருத்திப் பார்க்கவே முடியாதுதான். அப்படியெல்லாம் பொருத்திப் பார்க்க முடிந்தால், பல விஷயங்களைச் சுளுவாகத் தீர்த்துவிடலாமே!

   ஆக வாதத்தில் தரவுகளை உபயோகித்துக்கொள்ளும்போது ஒத்தியெடுத்து விஷயங்களை நகலெடுக்கலாம் எனச் சொல்லவில்லை.

   பஞ்சாப்: நீங்கள் சொல்வது ராணுவத்தில்/காவல்துறையில் நிலவரம் பற்றி. நீங்கள் ஜாதிய ரீதியாக பார்ப்பது மிகவும் பொதுமைப் படுத்தப்பட்ட ஒன்று. இதனைப் பற்றி நான் அறிவேன் – ஆனால் இதனை நான் சொல்லவரவில்லை. அக்காலங்களில் எனக்கு அறிமுகமாகியிருந்த டிஎஸ்பி ஒருவர்கூட காலிஸ்தானிகளால் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார். நான் சொல்லவந்தது zero tolerance விஷயத்தைப் பற்றி, உடனுக்குடன் கணக்கு தீர்த்தமை பற்றி.

   நாகாலாந்த்: இந்தப் பிரச்சினை, இனக்குழு சார்ந்த பிரச்சினையல்ல. க்றிஸ்தவ குருமார்களினால் (குறிப்பாக அமெரிக்க பாப்டிஸ்ட்) தேடியெடுத்து வளர்க்கப் பட்டு, பின்னர் இனக்குழுச் சாயம் கொடுக்கப்பட்ட பிரச்சினைதான். – ஆக, நீங்கள் எப்படி ஸ்ரீலங்கா பிரச்சினையுடன் இதனை முடிச்சுப் போடுகிறீர்கள் எனப் புரியவில்லை.

   பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பலர் (தமிழ் ஆட்கள்) இப்போது ராணுவத்திற்குள் இருக்கிறார்கள். அரசுப் பணியில் எவ்வளவு இப்படி என்பது எனக்குத் தெரியாது.

   ஆனால், உங்களது கடைசி பத்தியில் உள்ள இரண்டாம் பகுதியிலுள்ள விஷயத்தினை நிச்சயமாக ஒப்புக் கொள்கிறேன்.

   • poovannan73 Says:

    சீக்கிய அரசியல்வாதிகள்,ஆட்சியாளர்கள்,சீக்கிய காவல்துறையினர்,தீவிரவாததிற்கு எதிரான சீக்கிய மக்கள் உதவியுடன் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிந்தது.
    ஆனால் வட கிழக்கு மாநிலங்களில் போராடும் மக்கள்,மொத மக்கள் தொகை எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் வெளியாட்களை வைத்து ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் ஒன்றும் சாதிக்க முடியவில்லை.
    வடகிழக்கு அரசியல்வாதிகள் மத்திய அரசுக்கு ,அவர்களின் தீவிர நடவடிக்கைகளுக்கு ஒத்து கொண்டது கிடையாது.அதே தான் இலங்கையில் தமிழர் பகுதிகளிலும்.
    பொத்தாம்பொதுவாக ஆர் எஸ் எஸ் வாதமான கிருத்துவம் தான் காரணம் என்ற மாயையை விட்டு அவர்களின் கோரிக்கைகள் ஞாயமா,அநியாயமா என்று பார்க்க வேண்டும் சார்.

 6. க்ருஷ்ணகுமார் Says:

  Holocaust க்கு எதிராக ந்யூரம்பெர்க் விசாரணை என்று நிகழ்ந்தது. அப்படி ஒரு விசாரணை நிகழ அதற்குச் சக்தி வாய்ந்த பின்புலம் தேவை. ஸ்ரீலங்கா சர்க்கார் யுத்த காலத்தில் நிச்சயமாக சில அத்துமீறல்களை நிகழ்த்தியுள்ளது. அவை விசாரிக்கப்படவேண்டியவையே. அதை நடத்த ஹிந்துஸ்தானத்துக்கு தெம்பு இருக்கிறதா? அப்படி எதிர்பார்க்கும் டுமீலர்களின் கூச்சல்களில் நேர்மை இருக்கிறதா? அல்லது கூச்சல்கள் வெறும் நாடகம் தானா

  ஆனால் முக்யமானது அப்படிப்பட்ட ஒரு விசாரணை பிற்காலத்தில் தமிழ் மற்றும் சிங்கள் சஹோதரர்கள் இணக்கத்துடன் வாழ வழி வகுக்குமா என்பதே? தென் ஆப்பரிக்காவில் வெள்ளையர் சர்க்கார் நிகழ்த்திய பயங்கரங்கள் Holocaust அவலங்கள் போன்று விசாரணைக்குட்படவில்லை. ஆனால் இன்று வெள்ளையரும் கருப்பரும் ஹிந்துஸ்தானியரும் தென்னாப்பரிக்காவில் ஓரளவுக்கு நெருங்கியே வருகின்றனர்.

  ராஜபக்ஷேவை கசையால் அடிப்பதையோ காராக்ருஹத்தில் தள்ளுவதை விடவோ முக்யமானது….. இன்று ஈழத்தில் இருக்கும் தமிழ்ச்சஹோதரர்கள் தங்கள் வாழ்க்கையை வளமுடன் வாழ வழி இருக்கிறதா என்பதும்…. தமிழர்களும் சிங்களர்களும் ஒருவருடன் ஒருவர் வெறுப்பில்லாமல் வாழ வழி உள்ளதா என்றும்……வாய்ப்புகளைத் தேட வழி செய்வது. கோரமான இறந்த காலத்தை விட முக்யமானது வளமான எதிர்காலம்.

  தமிழ் மீனவர்கள் ஸ்ரீலங்கா படையினரால் கைது செய்யப்படுகிறார்கள் என்ற ப்ரச்சினையை கோஸ்ட் கார்ட் ஏன் தீர்க்க முடிவதில்லை என்பது ஆயாசம் தரும் விஷயம்.

  ஒரு நாற்பது வருஷம் முன்பு சேலம் மஹாத்மா காந்தி ஸ்டேடியத்தில் என்பது தமிழக அணி மற்றும் ஸ்ரீலங்கா அணிக்கு எதிராக க்ரிக்கெட் மேட்ச் நடந்தது நினைவுக்கு வருகிறது.

  இத்தனை பெத்த ஸ்ரீலங்காவை உசுப்பேத்தி ஊதிப்பெரிதாக்கியது கள்க கண்ணுமணிகள். வெள்ளைசர்ச்சின் ஊதுகுழல்களான உதயகுமார்கள் சீமார்கள். ம்…….ஈரப் பேனாக்கி………வால்க tamil சமுதாயம்.


 7. இந்த படிமம், என்றால் என்ன? படிமம்,பிராய்டியம், பின் நவினத்துவம் என்று எல்லாரும் எழுதுவதன் அர்த்தம் என்ன


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s