சரி, தமிழ் நாட்டு மாணவர்கள் என்னதான்  செய்யவேண்டும்?

February 20, 2014

… தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி  இருக்கிறோம்? (22/n)

பத்ரி:விஷயங்கள்எல்லை மீறிப் போவதைப் பார்க்கும் தமிழ்நாட்டு மாணவர்கள் என்னதாம்செய்யவேண்டும்? அவர்கள் கோபமடையவே கூடாதா? அவர்கள் நன்றாகப் படித்து, நல்லமதிப்பெண் பெற்று ஒரு வேலையைத் தேடிக்கொண்டால் போதுமா? அவ்வளவுதானா? வேறொன்றுமில்லையா?? (“What should the Tamil Nadu students do at all – when they see things going all messy? Should they not get angry at all? Are they merely supposed to study well and get a degree and a job? That is it? Nothing more?”)

தமிழ் நாட்டு மாணவர்கள் ஈழப்  பிரச்னையில் என்ன செய்யவேண்டும் என்றா கேட்கிறீர்கள், பத்ரி? உங்களுக்கு ஆனாலும்  நகைச்சுவை உணர்ச்சி அதிகம்தான், போங்கள்!.

என்னைப் பொருத்தவரை – ‘கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன், வானமேறி வைகுண்டம் போவானா’ எனும் அதி அற்புத அனுபூதிப் பார்வையில் நிறைய எழுதியிருக்கிறேன். (கீழே சில பதிவுகளின் சுட்டிகள்)

இருந்தாலும்… இப்போது இவர்களில் மிகப்பெரும்பாலோர் உடனடியாக ஒன்றும் (எதற்குமே, ஏன்,  தங்களுக்கேகூட!) உதவிகரமாகச் செய்யக்கூடிய நிலைமையில் இல்லை என்றாலும், இவர்கள் செய்யக்கூடியவை இவைபோல் இருக்கலாம் எனக் கருதுகிறேன். கிண்டலையும் நகைச்சுவையையும் முற்றிலும்  தவிர்க்கிறேன். :-(

நான் கீழே கொடுத்திருக்கும் விஷயங்கள் (உண்மையில் தமிழ் இளைஞனுக்கு, அவன் வாழ்வு வளமையும் செறிவும் பெற என் கோரிக்கைகள் / பரிந்துரைகள்) – சுமார் இருபது வருடமுன்பு, ஒரு இந்திய இளைஞன், எப்படி இந்தியாவையும் தன்னையும் அறிந்துகொள்வது என சுமார் 40 பக்க விஸ்தீரணத்தில் நான் எழுதியிருந்த டெலெக்ஸ்நடை ஆங்கிலமூல ஆவணத்திலிருந்து கடன் பெறப்பட்டது. (ஆங்கில மூலம் தொலைந்துபோய்விட்டது; என் நினைவிலிருந்துதான் அதில் குறிப்பிட்டிருந்த சில விஷயங்களை எழுதுகிறேன்.)

அ: உழைப்பு என்றால் என்ன, தொழில் தர்மம் (work ethic) எப்படிக் கடைபிடிப்பது எனப் புரிந்துகொண்டு, நேரம் தவறாமையை ஒரு மதம் போலப் பாவித்து – உடல், மன, மூளை உழைப்புகளை அனுதினம் பழகவேண்டும். எவ்வளவு தொழில்கள் முடியுமோ அவ்வளவு தொழில்கள் கற்கவேண்டும். 17/18 வயதுக்குமேல், பெற்றோர்களுக்கோ, மற்றவர்களுக்கோ (அல்லது அரசாங்கத்துக்கோகூட) பாரமாக இருக்காமல், உழைத்துப் படிக்க / உண்ணக் கற்றுக்கொள்ளவேண்டும்.

ஆ: தங்கள் படிப்பறிவையும் (தமிழென்றால், சங்க இலக்கியங்களிலிருந்து ஆரம்பித்து, ஒரு யோகம் போல, பரீட்சைக்குப் படிப்பதுபோலக் குறிப்புகள் எழுதிவைத்துக்கொண்டு படிக்கவேண்டும்), உடலுரத்தையும், மனத்திண்மையையும், தாங்குதிறனையும், உரையாடும் திறனையும் – ஒரு கால அட்டவணை போட்டுக்கொண்டு நியமத்தைக் கடைப்பிடித்து வளர்த்துக்கொள்ள வேண்டும். (இதற்கு என் கணக்கில், சுமார் 15 வயதிலிருந்து ஆரம்பித்தால் 25 வயதில் ஒரு திடத்துக்கு வரலாம்; ஆனால், 25 வயதில் ஆரம்பித்தால் – அதுவரை கற்றுக்கொண்ட கந்தறகோளங்களை மறுதலித்து புதுவெள்ளம் பாய்ச்சுவதற்கு – அது மேற்கொண்டு, சுமார் 25 வருடம்போல எடுக்கும்; ஆக, ஒரு திடத்துக்கு வரும்வரை, ஊருக்கு உபயோகமாக இல்லாமலிருந்தாலும், உபத்திரவமாவது செய்யாமல் இருக்கவேண்டும்.)

இ: எப்போதுமே, எந்தத் துறைக்குமே – தரம் வாய்ந்த ஆசிரியர்கள், ஆசான்கள், அறிஞர்கள் போன்றோர்களைக் கண்டடைவது மிக, மிகக்  கஷ்டம்; அப்படி யாராவது தென்பட்டால் – அக்கால குருகுலமுறைப்படி அவர் வீட்டில் பெருக்கிச் சுத்தம் செய்தோ, முதுகைச் சொறிந்துகொடுத்தோ, துணி துவைத்தோ அல்லது வேறு எப்படியாவதாகவோ அவருக்கு உபயோகமாக இருந்து – அட்டை மாதிரி ஒட்டிக்கொண்டு ‘கல்வி’ கற்கவும். (இந்த நடவடிக்கையானது தொழில்தர்மத்தை, அறிதலின் அறத்தை – அவற்றின் இனிமையான சுவையைத் திகட்டத் திகட்டப் புகட்டும்.)

ஈ: மாணவர்கள் / இளைஞர்கள் – மூன்று விதமாக இயக்கங்களுக்கு – அவர்களுடைய வாசிப்பையும், அவதானிப்பையும், நிதானத்தையும் சார்ந்து செல்லலாம். காந்தீய இயக்கங்கள், ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள்… இவை அவர்களுக்கு இயக்கம், அரசியல் பற்றிய அடிப்படைகளையும், முனைப்பையும், செயலூக்கத்தையும் கொடுக்கக்கூடியவை; முக்கியமாக, இவை அவநம்பிக்கைவாதத்தை ஊட்டமாட்டா.

குறிக்கோள்களை நோக்கிய குவிந்த உழைப்பு, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பற்றியெல்லாம் அறிந்துகொள்ளவேண்டும் என்றால், திரா விடக் கட்சிகள், கொழுந்துகள், தமிழ்த் தேசியக் குளுவான்கள் அருகிலேயே  செல்லக்கூடாது. இதுவும் முக்கியம். (ஹ்ம்ம். மன்னிக்கவும். நகைச்சுவை உணர்ச்சியையும் வளர்த்தெடுக்க வேண்டி இருப்பதால், அவ்வப்போது ‘நமது எம்ஜிஆர்,’ ‘விடுதலை,’ ‘முரசொலி’ போன்றவற்றைப் படிக்கலாம். இந்தத் தினசொறிகளில் என்னுடைய ஓட்டு ‘விடுதலை’க்கே!)

உ: மாணவர்கள் தற்சார்பு உணர்ச்சியை (self reliance) வளர்த்துக்கொள்ளவேண்டும்.; தலைமுடி ஷவரமா, வண்டிகளைப் பழுது பார்ப்பதா, கிழிந்த துணிகளைத் தைத்துக் கொள்வதா, நீர்க்குழாய், மின்சார, தச்சு, கொல்லர், கட்டட, சக்கிலிய, வண்ணார் வேலைகளா – இவை அனைத்தையும் இவற்றுக்கு மேலும் அவர்களே முட்டி மோதி கற்றுக்கொண்டு அவர்களுடைய சுயமரியாதையை (self respect) வளர்த்துக்கொள்ளவேண்டும். பிற்காலத்தில், உணர்வுகளும் எழுச்சிகளும் கனிந்து, அவர்கள் ஆன்மா என்பது தன்னிறைவு (self sufficiency) என்ற குறிக்கோளை நோக்கிப் பயணம் செய்ய இந்த இரு கூறுகளும் முக்கியம். (ஆனால், சுயம் என்றால் என்ன என்றே இல்லாமல் சுயமரியாதை என்றெல்லாம் உளறிக்கொட்டுவது மிக சுலபம்தான்)

ஊ: மாணவர்கள் முனைந்து அமெரிக்க பீஸ் கோர் (Peace Corps – http://www.peacecorps.gov/) போல ஒன்றை – தமிழ் நாட்டரசு ஏற்படுத்தப் போராடவேண்டும். இந்த அமைதிக் கட்டுமான அணியில் சேர்பவர்களுக்கு அரசு பல விஷயங்களிலும் முன்னுரிமை தர வேண்டும். (இம்மாதிரி மேலெழும்பி வருபவர்கள் எப்படியும் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் தான் இருப்பார்கள் – ஆக தங்களுடைய தகுதியினால் மட்டுமே அவர்கள் விடிவெள்ளிகளாக ஆகிவிடுவார்கள்தாம்!)

எ: கட்டாயமாகத் தமிழ் + ஆங்கிலம் + ஹிந்தி மொழிகளில் படிக்க, பேச, எழுத கற்கவேண்டும். மேலதிகமாக ஓரிரு இந்திய / வெளி மொழிகள் கற்க முடிந்தால் அது இன்னும் விசேஷம். (குறைந்தபட்சம் இரண்டு மொழிகளில் சிந்திக்கத் தெரிந்தால், நகைச்சுவை உணர்ச்சி வளர சாத்தியக்கூறுகள் அதிகம். எப்படி இருந்தாலும், தன்னைப் பார்த்துத் தானே வாய் விட்டுச் சிரிக்கப் பழகிக்கொள்ளவேண்டும். அபத்தங்களைப் பார்த்தால் / எதிர்கொள்ள நேர்ந்தால் அவற்றில் இருக்கும் நகைச்சுவையை அவதானித்துச் சிரிப்பதைப் பழக்கப் படுத்திக்கொள்ளவேண்டும். இந்த நகைச்சுவை உணர்ச்சி வளர்த்தெடுக்கப் படவில்லையானால், தமிழகச் சூழலில், சிந்தனை செய்பவனாக இருப்பது மிகவும் துர்பாக்கியமான விஷயமாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இன்னொன்று: நகைச்சுவை உணர்ச்சி அதிகமானால் – யாராவது குறை கூறினால் சுணங்கிப்போய் உலர்ந்து விடுவது, சுயபச்சாத்தாபக் கழிவிரக்கத்தில் மூழ்குவது போன்ற தன்மைகள் மிகவும் குறைந்து விடும். (எனக்குத் தெரிந்த மகாமகோ விஞ்ஞானிகள், தொழில் விற்பன்னர்கள், காந்தியர்கள் மகத்தான  நகைச்சுவை உணர்ச்சி கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.)

ஏ:. செவ்வியல், நாட்டார் வழிமுறை வரைகலை, நுண்கலைகள், இலக்கியம், இசை / பாடல்கள் பற்றிய புரிதலும் அறிதலும் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலதிகமாக மேலைய-கீழைய நாட்டு இம்மாதிரி மரபுகளின் அறிமுகம் இருந்தால் அது அற்புதம்.

ஐ: வலுக்கட்டாயமாக  தேவைமெனெக்கெட்டு இவற்றைச் செய்யலாம்: ஒரு ஐந்து சிங்களவர்களுடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டு, அவர்கள் பார்வை என்ன என்பதைப் புரிந்துகொள்ளலாம். இவர்களையே விடுங்கள் – ஐந்து ஸ்ரீலங்கா தமிழர்களுடன் (புலம் பெயர்ந்தவர்களைச் சுட்டவில்லை இங்கு) நட்பு ஏற்படுத்திக்கொள்ள முயலலாம். குறைந்த பட்சம் இரண்டு வேறு மதங்கள் சார்ந்த இளைஞர்கள் (தலா ஐந்து), இந்திய ஆனால், இரண்டு வேற்று மொழி பேசும் மக்கள் / இளைஞர்கள் (தலா ஐந்து) போன்றோரிடமும். புத்த மதத்தின் (அல்லது எல்லா மதங்களின்) அடிப்படைக் கூறுகள் என்ன, அவற்றின் அவசியம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முயலலாம். இந்தியத் தத்துவவியல்களை, அதன் தரிசனங்களைக் கற்க முயலலாம். நம் பொக்கிஷங்களை நாமே  கண்டறியாவிட்டால் நமக்கு மோட்சமே இல்லை.

ஒ: வீட்டு வாசலில் ஒரு மரக்கன்றையாவது நட்டு, அதனைப் பராமரிக்கலாம். (இதில் உள்ள, எழும்பும் பிரச்னைகள், சிக்கல்கள் – நம் வாழ்வைப் பற்றிய பல படிப்பினைகள் தரும்) முதலில் அவர்கள் தெரு மக்களை ஒருங்கிணைத்து, அவர்கள் தெரு அளவில் குப்பைகள் இல்லாமல், நீரை விரயம் செய்யாமல் பார்த்துக்கொள்ளலாம். மக்கும் உரம் தயாரிக்கலாம். சிறு காய்கறித் தோட்டங்கள் போடலாம். (இவையும் நம் மக்களின் அடிப்படை எண்ணப் போக்குகளைப் பற்றி நம் இளைஞர்களுக்கு முக்கியமான படிப்பினைகள் தரும்.)

ஓ: தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது மாணவர்கள் / இளைஞர்கள் தங்கள் (இன்னொருவருடையதைக்கூடச் சொல்லவில்லை) வீட்டுக் கழிவு நீர்த் தொட்டியை (septic tank), சுத்தம் செய்யவேண்டும். இது கொடுக்கக்கூடிய – தொடங்கிய காரியத்தை முடிப்பது, எடுத்த காரியத்தைச் செவ்வனே செய்வது, சுற்றுப்புறச் சூழல் பேணுவதில் நமது பங்கு, தொழில் தர்மம், கடின வேலைகள் செய்பவர்கள்மேல் பரிவும் மரியாதையும் – போன்ற மகத்தான படிப்பினைகளை, வேறெந்த  வேலையும் பெற்றுத் தராது. இதைவிட முக்கியமாக, இக்காரியத்தை நாம் துப்புரவாகச் செய்யக்கூடுமானால் – நம்மால் தலித்களையும் அவர்களையும்விட மிகக் கீழான நிலைமையில் உள்ள கழிவுசுத்த வேலைகளில் இருக்கும் மாமனிதர்களையும் புரிந்துகொள்ள ஆரம்பிக்க முடியும். ஜாதி ஒழிப்பு, பேதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு என்று வாய் கிழியப் பேசிக்கொண்டிருக்கும் நாம், முதலில் இதனையாவது செய்யவேண்டுமல்லவா? நம்முடைய சொந்தக்  கழிவிகளிலிருந்தாவது ஆரம்பிக்கவேண்டுமல்லவா?

ஔ: நன்றாகச் சமைக்க, சமையலறை மேலாண்மையைக் கற்றுக்கொள்ளலாம். சமையல் என்றால் அடுப்பில் ஏற்றி இறக்குவதோ, மைக்ரோவேவ் அடுப்பில் சூடு செய்வதோ, டீ போடமுடிவதோ இல்லை. சமையலறை மேலாண்மை என்பது திட்டம் போடுவதிலிருந்து, தேவையான பொருட்களை வாங்குவதிலிருந்து, வேண்டியதை ருசியாக சமைப்பது, அன்புடன், மதிப்புடன் பரிமாறுவது ஊடாக, பின்னர் மிச்சமீதிகளை மேலாண்மை செய்வது, பாத்திரங்களை அடுத்த வேளைச் சமையலுக்குத் தயார் நிலையில் வைப்பது, சமையலறையைச் சுத்தம் செய்வது போன்றவையெல்லாம் அடங்கும்.

ஃ: வாரம் ஒரு மாலையாவது சுற்று வட்டாரக் குழந்தைகளுக்கு இலவசமாகப் பாடம் சொல்லிக்கொடுக்கலாம். அல்லது பொதுவாகப் பேசிக்கொண்டிருக்கலாம்.

க: கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிர்த்து, நேரடியாக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை வளர்த்தெடுக்கலாம்.

ங: மிதி வண்டியில் அல்லது நடைப்பயணமாக (இதெல்லாம் முடியாதென்றால், அரசுப் பேருந்துகளில் மட்டும்) – வருடத்துக்கு இரு முறையாவது, நம் குண்டுச் சட்டியை விட்டுவிட்டு வெளியே ஓரிரு மாதங்களுக்கு ஊர் சுற்றவேண்டும். எங்கே வேலை செய்ய முடிகிறதோ செய்து, கிடைத்ததைச் சாப்பிட்டு, கிடைத்த இடத்தில் இளைப்பாறி, குறைந்த அளவு பேசி, ஆனால் விழித்திருக்கும் சமயங்களில், அனைத்துப் புலன்களாலும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு — —  தினம் அறிந்துகொண்டவை, உதிக்கும் கேள்விகள் போன்றவற்றை தினக் குறிப்புகளில் எழுதி வைத்துக்கொண்டு – இச்சிந்தனைகளை மேலெடுத்துச் செல்லவும் வேண்டும். (இந்த ஊர்சுற்றிப் புராணங்கள், சுயானுபவங்கள் மூலமாக உங்களுக்குப் பிடிபடும் உலகம் / இந்தியா / தமிழகம் என்பது – உங்களுடைய சமூகம் பற்றிய எண்ணங்களைப் புரட்டிப் போட்டுவிடக் கூடியது; இந்தியா எனும் கருத்தாக்கத்தின் மேலாக, மன எழுச்சியையும், நெகிழ்வையும் கொடுக்கக் கூடியது; இந்தியச் சிந்தனை மரபுகளின் தொடர்ச்சியையும், அவற்றினாலான பண்பாட்டு வளர்த்தெடுத்தல்களையும் புரியப் படுத்துவது.)

… இன்னமும் நிறைய  இருக்கின்றன. ஆனால் தற்போதைக்கு இவை போதும்.

இன்னொன்று — நான் என் இளம்வயதில் / வாழ்க்கையில் செய்ய முயலாத எதனையும், நான் மற்ற இளைஞர்களுக்குச் சொல்ல வரவில்லை. எனக்கு எப்போதுமே ‘யாம் பெற்ற பேறு, பெருக இவ்வையகம்’ தான்!

-0-0-0-0-0-

அடுத்து… தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி  இருக்கிறோம்? (23/n)

தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??

9 Responses to “சரி, தமிழ் நாட்டு மாணவர்கள் என்னதான்  செய்யவேண்டும்?”

  1. Prabhu Says:

    Yes Mr.Ramasamy if you have “courage” as The “Tamizh” says please answer it :) But I am just wondering what the question is?

  2. MV Seetaraman , Visakhapatnam. Says:

    திரு ராமசாமிக்கு,
    வன்தனம். மாணவர்கள் ஒரு கனின்த மனிதனாக மாற
    உன்களின் 16 கமாண்மண்ட்ஸ் மிக னன்ரு.
    60 வயதில் திரும்பி பார்தால், னான் னல்ல மாணவனாக
    தயாரனது, ய்ன் அதிற்டமே !!
    தன்தை, ஆசிறியர், சுய புத்தி , கழகஅறிவு, ஆன்திர தெச வேலை
    மற்றும் “ஒத்திசைவு…”
    ம. வே. சீதாராமன்

  3. Kannan Says:

    “மக்கும் உரம் தயாரிக்கலாம். சிறு காய்கறித் தோட்டங்கள் போடலாம்.” I agree, this humble device
    http://www.dailydump.org/products/kambha can turn our kitchen waste into wonderful compost with the help of sawdust and microbes.

    Also setting up a greenhouse is easy, anybody interested let me know.

  4. poovannan73 Says:

    காந்தீய இயக்கங்கள் ,ஆர் எஸ் எஸ் என்று ஒன்றாக சொல்வதை விட oxymoron இருக்க முடியாது சார்

    காந்தி கொலை வழக்கு,அதில் வழங்கப்பட்ட தண்டனைகள்,தண்டனை வழங்கபட்டவர்களுக்கு ஆதரவான முயற்சிகள்,வழக்குகள் போன்றவற்றை படித்து வருகிறேன்.காந்தியின் கொலையால் ஏற்பட்ட நன்மைகள் என்று ஹிந்து இயக்கங்கள் அன்றும்,இன்றும் பேசி ,எழுதி வருவதை கொஞ்சம் கண்களை திறந்து பார்த்தால் படிக்க முடியும்.காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்றவர்கள் சிறையில் இருந்து வெளியில் வர 10 ஆண்டுகளிலேயே ஹிந்து இயக்கங்கள் முயற்சிகள்,வழக்குகளை ஆரம்பித்து விட்டன.16 ஆண்டுகளில் வெளியில் வந்து பிரமாதமான வரவேற்பு பெற்று பல ஹிந்து இயக்கங்களில் பொறுப்புகளிலும் தண்டனை பெற்ற குற்றவாளிகள் இருந்தார்கள்.

    இந்த இயக்கங்களில் தான் ஒழுங்கை,ஒழுக்கத்தை கற்று கொள்ள வேண்டும் என்றால் சிரிக்க கூட முடியவில்லை.

    ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் கட்சியான பா ஜ க எங்கு எல்லாம் வலுவாக இருக்கிறதோ அங்கு தான் பெண் சிசுகொலை அதிகம்,பெண்கள் கல்வியில்,பணிகளில் மிக குறைவு,ஆயிரக்கணக்கான கணவனை இழந்த கைம்பெண்கள் தெருவில் பிச்சை எடுத்து வாழும் நிலை போன்ற அற்புதங்கள் உண்டு.

  5. jag673 Says:

    the suggestions/commandments reminded me of “The Student Manual by Todd’, a book that i read ( as suggested by my dad)when i was in school.
    Thanks
    Ramanan

  6. சான்றோன் Says:

    பூவண்ணன் சார்……

    ஆர். எஸ்.எஸ் சிடம் பயிற்சி எடுக்கக்கூடாது ..சரி …வேறு யாரிடம் பயிற்சி எடுக்கலாம்?

    ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது , திருப்பூரில் பட்டப்பகலில் ஒரு போலீஸ் இண்ஸ்பெக்டர் உயிரோடு பெட்ரோல் ஊத்தி கொளுத்தப்பட்டார்…..கொலையாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்….. திமுக ஆட்சியை பிடித்த‌வுடன் அந்த கிரிமினல்கள் விடுதலை செய்யப்பட்டனர்….அவர்கள் மட்டுமல்ல….தமிழகம் முழுக்க வன்முறையில் ஈடுபட்டு பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்த குற்ற‌வாளிகள் அனைவரும் ” மொழிப்போர் தியாகிகள் ” என்று அறிவிக்கப்பட்டு , அரசால் கவுரவிக்கப்பட்டனர்…. இன்றுவரைஅவர்களுக்கு அரசுப்பணத்தில் பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது……

    இதுபோல் பல ” சாதனைகளை ”[ அண்ணாமலைப்பல்கலைக்கழக மாணவன் உதயகுமார் விவகாரம் , லீலாவதி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை அண்ணாத்துரை பிறந்த‌நாளை ஒட்டி விடுதலைசெய்தது , இன்னும் பல] செய்த கழ‌கங்களிடம் அனுப்புவோமா?

  7. பொன்.முத்துக்குமார் Says:

    courage ? to answer what ? come on who’re you trying to kid ? Your own self ? LOL

    // நல்ல எழுத்து / பேச்சுப் புலமையும் , அதிலும் ஊர்ப்பக்கத்தில் இருந்து ‘கொண்டு’ வரும் குசும்பையும் //

    கிட்டத்தட்ட racism-க்கு இணையான பிரயோகம். ”மெட்ராஸ் பசங்க” சொல்லலாம் இதை. ஐகாரஸ் பிரகாஷ் சொல்வதை ஜீரணிக்க இயலவில்லை.

    // பிடிக்காத எல்லாவற்றையும் கீழே போட்டு மிதித்து, //

    இங்கு மிதிக்கப்படுபவை (அல்லது மிதிக்கப்படவேண்டும் என்று சொல்லப்படுபவை) எவை என்று கொஞ்ஞ்ஞ்ஞ்சூண்டு படித்துப்பார்த்தாலே ”மோதி மிதித்துவிட” சொன்ன கீழ்மைதான் என்பது புரியும். வேறென்ன செய்யவேண்டும் அவற்றை ? கொஞ்சி உச்சி முகரவேண்டுமா ?

    // அந்த ‘அட்டாக்’ ஐ எதிர்கொள்ளத் தேவையான மொழியறிவும், reflex உம் இல்லாமல் திகைத்து, சுதாரிப்பதற்குள் காலி பண்ணுவது சோ, சூச்சாமி டெக்கினிக். //

    யார் அந்த மொழியறிவையும் reflex-ஐயும் வளர்த்துக்கொள்ளவேண்டாம் என்று தடுத்தார்கள் ? ஏன் சோ, சூச்சாமி-க்களுக்கு மட்டும்தான் அந்த மொழியறிவும் reflex-ம் வாய்க்குமா ? முயன்றால் எல்லாருக்கும் எட்டுவதுதானே அவை ? முயலாமையால் புலம்பலாமா ?

    // நாக்கிலும், தட்டச்சுச் செய்யும் விரலிலும், நரம்பில்லாமல் இது போல எழுதுபவர்கள், எந்தக் காலத்திலும் யாரும் கண்டுபிடித்து விடாவண்ணம் ஒளிந்து கொண்டு இருக்கும்படியும் , எஸ்டாபிளிஷ்மெண்ட்டை எதிர்த்துக் குரல் கொடுக்கும் இளைஞர்கள், எந்த அச்சமும் இல்லாமல் நாலு பேருக்குத் தெரியும் வண்ணம் ஊர் பேர் தெரிய ரோட்டில் இறங்கிப் போராடும்படியுமான ஒரு ஏற்பாடு இருக்கிறதே… //

    இதற்கும் கொஞ்ஞ்ஞ்சூண்டு யோசித்தாலே போதும். மேற்படி “நரம்பில்லா நபர்கள்” ஒளிந்துகொண்டிருக்கும்படியும் “எஸ்டாப்ளிஷ்மெண்டை எதிர்க்கும் அச்சமில்லா அடலேறுகள்” தெருவிலிறங்கி போராடும்படியுமான ஒரு ஏற்பாடு எப்படி ஏற்பட்டது, அப்படிப்பட்ட ஏற்பாடு ஒரு சமூகத்துக்கு நல்லதுதானா, அப்படிப்பட்ட சமூக ஏற்பாட்டை மாற்ற வேண்டாமா, “அ.அ” அடலேறுகளாகத்தான் இருக்கின்றனவா அல்லது வெள்ளாட்டு மந்தைகளாகவா …..

    யோசியுங்கள் அன்பரே. முக்கியமாக காய்தல் உவத்தலின்றி, அதுவும் கொஞ்சம் தனிமையில்.

    சும்மா அங்கிங்கு மேய்ந்துவிட்டு மேற்கோள் காட்டுவது மட்டுமா நம்மாலானது ?


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s