சாளரம் #2: வரலாறு = குத்துமதிப்பாக இது, ஒருவேளை வரலைந்துக்கும் வரலேழுக்கும் நடுவில் தொங்கிக் கொண்டிருக்கும் ஜந்துவோ என்னவோ?

November 20, 2013

(அல்லது)  தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (5/n)

அதாவது, வரலாறு என்பது முதற்சங்கத்துக்கும் முன்னால், பஃறுளியாறு லெமூரியாவில் குமரிக்கண்டத்தில் ஓட ஆரம்பித்தற்கும் முன்னால், ஏன் கல் தோன்றுவதற்கே கூட முன்னால்,  தமிழகமெங்கும் ஓடோதி ஓட்டமாக ஓட்டமெடுத்துக் கொண்டிருந்த ஒரு பண்டமிழ் ஆறு என்பதை அறிக. மேலும், அச்சமயத்திலேயே, நம் முன்னோதிமுந்தைய மூதாதைகளின் பேரரசன் அதிமுற்காலச் சோழன் – ஒன்றரையாம் கபாடபுரம் கண்டாராதித்தன் இமையம் சென்று கோவேறுகழுதைகளைப் பிடித்துக் கொண்டு வந்ததையும் மேலதிகமாக அறிக! (எனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான இமையம் அவர்களை இப்படி உபயோகிப்பதற்கு அவர் என்னை மன்னிப்பாரா?)

சாளரம் #2: பொதுவாக, நமக்கு வரலாற்றறிவு என்பது குறைவு. மிக முக்கியமாக, சமகால வரலாற்றை அவதானிப்பது என்பது இன்னமும் குறைவு.

இவ்வரிசையில், முந்தைய பதிவுகள்: தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??

-0-0-0-0-0-0-0-0-0-0-

ஏன்  நமக்கு வரலாற்றைப் பற்றிய பிரக்ஞை இல்லையென்றால், நமக்குப் பல முக்கியமான விஷயங்களைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கோ, தெரிந்து தெளிவதற்கோ சிரத்தையில்லை. நாம் பெரும்பாலும் நுனிப்புல் மேய்பவர்கள் என்பதை தனிப்பட்ட முறையில், நேரடியாக அறிவேன். எப்படியெனில்,  நானும் இந்த நுனிப்புல் மேயும் ஜாதியின் பிரதம அங்கத்தினன் தான் என்பதை மட்டில்லா மகிழ்ச்சியுடன் இங்கு தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன் –  என்ன இருந்தாலும் நானும்  ஒரு தமிழன் தானே!

… சரி, இதை நாம் ஒப்புக் கொள்ளாவிட்டாலும், இதைப் படித்தாலே  கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தாலும் – நிதர்சன – பிரத்தியட்ச உண்மைகள் இப்படித்தான். பொதுவாக, நம் தமிழர்களுக்குப் படிப்பறிவு அவ்வளவு இல்லை. படிப்பறிவு என்றால் – தினத்தந்தி – குமுதம் – விகடன் – உயிர்மை போன்றவைகளைப் புரட்டுவது அல்லது படித்துவிட்டு, ஏதாவது ஒரு ஆவணத் திரைப்படத்தைப்  பார்த்துவிட்டுப் புளகாங்கிதத்துடன் பதிவுகள் எழுதுவது போன்ற இழவுகளையல்ல.

நான் புத்தகங்கள்  படிப்பதைச் சொல்கிறேன். ஆழ்ந்த, புலமைவாய்ந்த, வீச்சும் புனைவுசக்தியும் மிகுந்த  எழுத்தாளர்களால், துறை விற்பன்னர்களால் எழுதப்பட்ட தமிழ்/மற்றைய மொழிகளில் எழுதப்பட்ட – பல திசைகளிலிருந்து குவியும் புத்தகங்களை…

ஆனால்… புத்தகம் படிக்காவிட்டாலும் பரவாயில்லை. சரி விடுங்களென்று – பல்துறைச் சான்றோர்களிடம் கற்றறிந்து, அவர்களுடன் உரையாடி நம் கருத்துகளை வளர்த்தெடுத்துக் கொள்ள முடியுமா என்றால் அதுவும்  நடக்காத விஷயம் – ஏனெனில் நமது தமிழ்க் கலாச்சாரச் சூழலில், சான்றோர்கள் – அவர்கள் இடதுசாரி அல்லது திராவிட அரசியல் சார்பற்றவர்களாக இல்லாமல் இருந்தால் அவர்கள் பெரும்பாலும் அறியப் படவே மாட்டார்கள். அதே சமயம், இன்னொருபக்கம், இவ்வரசியல் சார்புள்ளவர்களில் பலருக்கு, ஒரு சமன நிலையே இல்லை – தனிப்பட்ட காழ்ப்புகளின், வெறுப்புணர்ச்சிகளின் மீதிருந்து அரசியல்/பிரச்சாரக் கட்டுமானம் செய்பவர்கள் இவர்கள்.

DoYouPreferTVOrRealLifeExperiences4ஆனால் (=ஆகவே) தொலைக்காட்சி மட்டும் பார்த்து, பரப்பப் படும் பொய்களை, பிரச்சாரங்களை — அப்படியே உள்வாங்கிக் கொண்டு கருத்துகளை(!) உருவாக்கிக் கொள்பவர்கள் தாம், பிலுக்கர்கள்தாம் இங்கே பெருமளவில் இருக்கிறார்கள். உரக்கப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆக, அறிவார்த்தமான உரையாடல்களையே விடுங்கள் – நமக்குக் காரியார்த்தமான உரையாடல்களைக் கூட மேலெழுப்பிச் செல்ல முடியாது.

ஆனால், வியக்கத் தக்க அளவில், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும்  ஒரு பலம் வாய்ந்த, உரத்த சப்தத்துடனான கருத்தை வைத்திருப்போம். இவற்றுக்கு தர்க்க ரீதியாக ஒரு விதமான அடிப்படையும் இல்லாமல் போனாலும். திருப்பித் திருப்பிச் சொன்னதைச் சொல்லியே  நம் பக்கத்தை நிறுவி விடுவோம். (என்னைப் போல)

… எப்படா அடுத்த புல்லரிப்பு என்று – அற்ப நிகழ்ச்சிக் குவியல்களின்மீது பாண்டியாட்டம் ஆடிக்கொண்டு மட்டுமே  காலத்தை கடத்துவது என்பது தமிழர்களாகிய நமக்குப் பிடிக்கும். ஏன், எதற்கு, யாரால், எதனால், எப்படி, எப்போது, எவ்வாறு என ஒரு விஷயத்தை அக்குவேர்-ஆணிவேராகப் புரிந்துகொண்டு, அதனுடைய அறியக்கூடிய சகல பரிமாணங்களையும் அறிந்து, தெளிந்துகொண்டு, அதன்பின் அப்புரிதல்களின்மீது நாம், நம் நம்பிக்கைகள் சார்ந்த குறிக்கோள்களைநோக்கிச் செயல்பட முடியும் என்பதை – நம் கல்வியும் சொல்லித் தருவதில்லை.இதனை நாமே கற்றுக்கொள்ளும் வக்கும், பொதுவாக நமக்கு இல்லை.

வரலாற்றைத் தெரிந்து கொண்டு ஆகவேண்டியது என்ன? போங்கடா!

வரலாற்றைத் தெரிஞ்சிக்கினு   பெருஸ்ஸா இன்னாடா ஆவோணும்?  போங்கடா!

உப சாளரம்: நமது வரலாற்றிலிருந்து எப்படியோ (ஒன்றிரண்டு புறநானூற்றுப் பாடல்களின் முதல் வரிகள், தமிழ் நாட்டுப் பாட நூல் நிறுவனப் புத்தகஆபாசங்கள், அரசியல் மேடை உச்சாடனங்கள், சாண்டில்யன், கல்கி, கருணாநிதி இன்ன பிறர்) நாம் அறிந்துகொண்டுள்ள சொற்ப விஷயங்களில் – சில படிமங்களுக்கும் குறியீடுகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுப்போம். அவற்றை ஒட்டியே நம் வாழ்வுகள் சுற்றிக்கொண்டிருக்கும்… நம்முடைய வரலாற்று மீட்டெடுப்பே அலாதிதான்!

எடுத்துக்காட்டுகள்:

வெற்றிவேல் வீரவேல் என்று தேர்களை ஓட்டி, அவற்றின் முகப்புகளிலும் உச்சிகளிலும் தங்கள் நாட்டுக் கொடி படபடக்க எக்களித்து, போர் முழக்கமிட்டு, கையிருப்பில் தயாராக வாகை மர இலைகளை, பூக்களைப் பறித்து வைத்துக்கொண்டு (ஒருவேளை வெற்றி பெற்றால் இவற்றைச் சூடவேண்டுமல்லவா?) அலைந்துகொண்டிருக்கும் பண்டமிழர் பற்றிய சித்திரம்.

இதனை நாம் இன்னமும் குறியீடுகளாக மட்டுமே பயன்படுத்துகிறோம். எப்படியென்றால், தமிழகத்தில் மிகப்பல கார்களில், ‘போஸ்ட்’ எனப்படும் கொடிக்கம்பம், வண்டிக்கு முன்பக்கத்தில் பான்னெட் மீதோ அல்லது இடிப்புக்குறைப்பான் மீதோ அமைக்கப்பட்டிருப்பது.  இவற்றிலிருந்து பட்டொளி அல்லது ப்ளாஸ்டிக்கொலி வீசிப்பறக்கும் கட்சி/ஜாதி சார் கொடிகளைப் பார்ப்பது ஒரு கண்கொள்ளாக்காட்சிதான். இதன் குறியீடுகள் என்னவென்றால், 1) அந்தக் காரின் உரிமையாளர்அல்லது பயணம் செய்பவர் ஒரு குறுநில மன்னர் / படைவீரர் / ஏதாவது சாயம்தோய்த்த புரட்சிக்காரர் – ஆக, நாங்களல்லாத மக்கள் நீங்கள் அனைவரும் (காவல்துறையினர் உட்பட) எங்களைப் பற்றி ஜாக்கிரதையாக இருக்கவேண்டும், 2) இம்மாதிரி இக்கால மன்னர்கள் நகர்வலம் வருவது அனைவருக்கும் தெரியவேண்டும்என்பதே! (இந்தியாவில் வேறெங்கும் இந்த கார்க்-கொடி வெறி இந்த அளவுக்குக் கேவலமாக, பரந்துபட்டதாக இல்லை.)

நம் கட்அவுட் / ப்ஃலெக்ஸ் தட்டி வீரர்களுக்கு வாகைமரம் என்றால் என்ன ஜந்து என்று தெரியாது. ஆனால் ஆர்ப்பரித்து அலைகடலென எழவேண்டும். வெற்றிவாகை சூடவேண்டும்; என்னதான் செய்வார்கள்  நம்மவர்கள்? இதற்காக, நாம் கண்டு பிடித்திருக்கும் கருவி: பொற் சால்வை (பொது வழக்கில் இதைப் பொன்னாடைஅல்லது பன்னாடை என்று சொல்வார்கள்). இந்த இழவில் பொன்னும் இருக்காது, அதன் அளவும் ஓர் உருப்படியான, உபயோககரமான சால்வையின் கிட்டேகூட  வராது – ஆகவே இது ஆடையுமில்லை. இருந்தாலும் இந்தப் பன்னாடையை நம் தமிழர்கள் வெற்றிவாகைக்குப் பதிலாக —  போர்த்து, போர்த்து என்று போர்த்திக்கொண்டே இருப்பார்கள். இந்தப் பன்னாடை போர்த்தப்படுபவர் ஒரு பெண்மணியாக இருந்தால் – மகளிரை பொய்மையாக மதிக்கும் நம் நற்றமிழர் பண்பாட்டின்படி அவருக்குப் போர்த்திவிடாமல் பவ்யமாகக் கையில் அது கொடுக்கப்படும். நம் தமிழ் நாட்டில் கைபேசிகளுக்கு அடுத்து  இந்தப் பொன்னாடைகளின் விற்பனைதான் அதிகமாக இருக்கும் என்பது என் எண்ணம். (இந்தக் கழிசடை வெற்றுவாகைப் பொன்னாடைக் கலாசாரமும், தமிழ் நாட்டில் உள்ள அளவு இந்தியாவில் வேறெங்கும் இல்லை; இப்படி லட்சக்கணக்கில் போர்த்தப்படும்பொன்னாடைகள், பின்னர் என்னவாகின்றன என்றும் எனக்குத் தெரியவில்லை – என் வாழ்நாளில் இதுவரை நான்குமுறை மட்டுமே இந்த இழவால் போர்த்தப்பட்டுள்ளேன் என்பதை மிகவும் வெட்கத்துடன் இங்கே சொல்லிவிடவேண்டும் – அவற்றை என் வீட்டு மீன்குட்டைக்குப் பாதுகாப்பாகப்போர்த்தியிருந்தேன். இல்லாவிடில் நீர்ப்பறவைகள் மீன்களைக் கொத்திக்கொண்டு போனமணியம்…)

பண்டைத் தமிழ் நாட்டில் மக்களின் உடையணிகள், அணிகலன்கள் பற்றிச் சிறிது படித்தோமானால், போர்வீரர்கள் போர் தொடர்பான காரியங்கள் / சடங்குகள் நடக்கும்போது அவற்றுக்கேற்றதுபோல் பூக்களை / இலைகளை அணிவார்கள்.போருக்குச் செல்லும்போது, எதிரிக்கும் நம்மாளுக்கும் வித்தியாசம் தெரியவேண்டும் என்பதால், ஒருசிலவிதமான இலைகளை / பூக்களை அணிவார்கள். கெரில்லாப் போர்முறை என்பதெல்லாம் அப்போது இல்லை.மறைந்திருந்தே தாக்கும் மருமமில்லை. ஆனால், இக்காலத்தில் – எப்போது, எதற்கு, யார்  தலைமையில் எந்தப்போர்முனைக்குச் சென்றுகொண்டிருக்கிறோம் என்று தெரியாத அரசியல் கட்சிப்போர்வீரர்கள், எல்லாச் சமயங்களிலும் – நம்மாளுக்கும், எதிரிக்கும் வித்தியாசம் கண்டுகொள்ளவேண்டும்.

இதற்கான சமகால தமிழகக் கண்டுபிடிப்பு:கறை வேட்டி – இதற்கும் அக்கட்சிக் கொடிக்கும் ஒரு உறவு, ஒட்டுதல் வேறு! இதில் ஒரு சோகம்: பத்துபேர் இருக்கும் ஓர் அரசியல் கட்சிகூட அதற்கென ஒரு கறைவேட்டி வைத்திருப்பது (அகில இந்தியாவிலும் இப்படிக் கறை வேட்டி / பைஜாமாபடிந்த கட்சிகள், தமிழகத்தில்தான் மகாமகோ அதிகம்).

அக்காலத்தில் தண்டோரா போட்டு அறிவிப்புகளைச் செய்வர். இந்த அறிவிப்புகள் பெரும்பாலும் உண்மையாகவே இருந்திருக்கக்கூடும். ஆனால் ஒரு நாட்டரசின் தண்டோரா, அடுத்த நாட்டுக்குப் போகாது. இல்லையேல் அது குழப்பம்தான் விளைவிக்கும். ஆனால் இக்காலத்தில், நம் நடைமுறை ஜனநாயகத்தில், தடியெடுத்தவன் தண்டல்காரனாக ஆவதைப் போல — தண்டோரா அடிப்பவன் எல்லாம் தண்டோராக்காரன்தான். ஆனால் தண்டோராக்கள் இக்காலத்தில் தொலைக்காட்சிச் சேனல்கள் என்ற பெயரில் வலம் வருகின்றன. ஒரேவிஷயத்தைப் பல தண்டோராக்காரர்கள் பலவிதமாகப் பார்த்து (அல்லது பார்க்காமல்) ஒரே அரசின்கீழ் இருக்கும் மக்களுக்கு, விதம் விதமாகச் செய்திகளைக்கொடுக்கின்றனர், அரைகுறை அறிவிப்புகள் செய்கின்றனர். பொய்கள் மட்டுமே சொல்கின்றனர். ஆக, மக்களுக்கு ஒரே கந்தறகோளக் குழப்பம்தான். குரஸாவா அகிரா எனும் ஜப்பான் திரைப்பட இயக்குனர் ரஷொமோன் என்ற படம் எடுத்தார். அந்தப்படம் நம் தண்டோராக் கொழுந்துகளிடம் பிச்சை வாங்கவேண்டும். ஹ்ம்ம். (இந்த நவீன தண்டோராக்களிலும் தமிழக அரசியல்வாதித் தண்டோராக்கள் மிக அதிகம். இந்தமாதிரி மானாவாரி தொலைக்காட்சிச் சேனல்களிலும் – அதிலும் அரசியல்வாதிகள் சார்ந்த சேனல்களில், நம் தமிழகம்போல வேறெங்கும் நம் இந்தியாவில், அவ்வளவு அசிங்கமாக  இல்லை).

மழபுல வஞ்சி, உழபுல வஞ்சி என்றெல்லாம் சில கவிதைகளில் புறநானூறு பாடுகிறது – போர் சமயம் அல்லது அதனை வென்ற பின் — எதிரி நாட்டின் விளைநிலங்கள், நெற்களஞ்சியங்கள், வீடுகள், கால்நடைகள், நீராதாரங்கள், எஞ்சியுள்ள வீரர்கள், மக்கள் (பெண்டிர் உட்பட) சூறையாடப்படுவதை, அழிக்கப்படுவதை இக்காலத்திலும் நாம் இப்படிச் செய்கிறோம். ‘ஸ்டுடென்ட் ப்ரொடெஸ்ட்’ புகழ் மாணவமணிகள் செய்தது மழபுல வஞ்சித்தனம்தானே? புறநானூற்றுப் போராட்டப் போராளி வீரத்தைத்தானே பாமக காட்டியது தர்மபுரியில்? மழபுல வஞ்சித்தனத்தைத்தானே செய்துகாட்டினார்கள் விசிகே, பாமக கட்சியினர் – மரக்காணத்தில்…  இதற்குப் போய் நாம் கலவரப்படலாமா? (இம்மாதிரி வஞ்சித்தனத்தைப் பொறுத்தவரை நம் தமிழகம், அந்தஅரைகுறைக் கேடுகெட்ட தண்டகாரண்ய நக்ஸல்பாரிகளுக்குச் சற்றும் குறைந்ததல்ல.)

‘வடக்கிருந்து உயிர்துறத்தல்’ அல்லது ‘வடக்கிருத்தல்’ என்கிற கோட்பாடு ஒரு காலத்தில் இருந்தது. இதுவானது – உலகவாழ்வில் தாம் செய்யக்கூடிய / செய்யவேண்டியிருந்த காரியங்களைச் செய்துவிட்டோம் என்று, பொறுப்புகளை நிறைவேற்றிவிட்டோம் எனத் திருப்தியுடன் நினைக்கும் மனிதன் (அல்லது ஏதோ மானபங்கப்பட்டுவிட்ட உணர்ச்சி ஏற்பட்டு, செய்யத்தகாததைச் செய்துவிட்டோமே என்று துக்கத்தால் வாடும் மனிதன்) வடக்கு நோக்கி ஒரு சடங்குபோல, உட்கார்ந்து, உண்ணாமல், பேசாமல் தம் உயிரை மாய்த்துக்கொள்வது. நாம் இப்போதும் வடக்கிருக்கிறோம், ஒரு சில வித்தியாசங்களுடன்.

நம் வீட்டைச்சுத்தமாக வைத்துக்கொள்ளவே திராணியும் உழைப்புமற்ற, மேலும் பொறுப்புணர்வும்இல்லாத நாம் – இதற்கு வடக்கு (தமிழகத்துக்கு வடக்கில் இருப்பவைதாம், ஏறக்குறைய அனைத்து மாநிலங்களும்) திசையை நம்பியிருக்கிறோம். வடக்கிலிருக்கும் மத்திய அரசிடம் தேவையற்ற பிச்சை எடுத்து, தம் மகாமகோ ஊழல்களைத் தொடர்ந்து வரும் கரிய நிழல்களான சட்ட நடவடிக்கைகளுக்குப் பயந்து, படு கேவலமாக வடக்கிருக்கிறோம். ஸ்ரீலங்கா விஷயத்தில் ஒரு புண்ணாக்கும்கூடஉருப்படியாகச் செய்ய முனையாத நாம், அதனை, வெகு அயோக்கியத்தனமாக மேலும் கந்தறகோளமாக்குவதில் முனைந்தோம், முனைகிறோம். ஆனால் நாம் விளைவித்த கந்தறகோளங்களைச் சரிசெய்ய வடக்கிருக்கிறோம் – மத்திய அரசை ‘ஏதாவது’ செய்யச்சொல்லி கடிதத்திற்கு மேல் கடிதம் போடுகிறோம். வயதான காலத்தில் டெஸ்ஸோபுஸ்ஸோ என்று மூச்சுவாங்க ‘வட போச்சே’ என்று வடக்கிருந்து வடக்கிருந்து மற்றவர்களை உயிர் துறக்க வைக்கிறோம். ஒரு அற்ப ராஜ்யசபா நாற்காலிக்காக வடக்கிருக்கிறோம். (இம்மாதிரிக் கேவல, பொறுப்பற்ற வடக்கிருப்பு பஜனையை, அப்பட்டமான சுயநலத்தை மறைக்கக்கூட முடியாத, முனையாதஅசிங்கத்தை – மாயாவதி, முலாயம்சிங், லாலுப்ரஸாத் போன்றவர்கள் கூடச் செய்வதில்லை.)

-0-0-0-0-0-0-0-0-

தொடரத் தொடர வேதனை மிகும்.

ஆனால் – நம் ‘மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட’ வரலாறுகளைப் பற்றி அறிய நாம் இப்போது நம்புவது திரைப்படங்களையே. எனக்கு இதனை நினைக்கும் போது உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது.

நகைச்சுவைக்கு நகைச்சுவையும் ஆயிற்று; கொஞ்சத்துக்குக் கொஞ்சம் வரலாற்றைத் தேத்திக்கின மாறியும் ஆச்சு. இன்னா மச்சீ, நாஞ் சொல்றது?

-0-0-0-0-0-0-0-0-0-

நம்முடைய வரலாறைப் பற்றி நாம் அறியவே முற்படாமல், அரைகுறை ஆய்வாளர்கள் சொன்ன, மிஷனரிகள் காரியம் ஆவதற்காகப் பரப்பிய, பின்னர் நம் படிப்பறிவற்ற அரசியல் தலைவர்கள் எடுத்துக் கொண்டு உச்சாடனம் செய்த, செய்கிற காலாவதியாகிவிட்ட ஆரியப் படையெடுப்பு சொறியெடுப்பு சிரங்கெடுப்பு கோட்பாடுகளை நாம் இன்னமும் பூஜிக்கிறோம்.

லெமூரியா மலேரியா என்று ஜுரவேகத்தில் பிதற்றுகிறோம். பழம் பெருமைப் புல்லரிப்பைப் பற்றி மட்டுமே வீர வாய்ப்பேச்சு பேசும் கிழம் எருமைகளாக மாறி வருகிறோம்.

நம் வரலாற்றில் ஒன்றிரண்டு சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள் என்று சிலரை அறிவோம்; அவர்கள் குளம் தொட்டு வளம் பெருக்கியதைப் படித்திருப்போம். அந்தப் போர் இந்தப் போர் தலையாலங்கானத்து எரு தின்ற கணைக்கால் இரும்பொறை நெடுஞ்செழிய பாண்டியன் என்றெல்லாம் உருப் போட்டிருப்போம். ஆனால் – இம்மாதிரி அரசர்களைத் தவிர, அதிகாரக் கட்டுமானங்கள், சமூக அமைப்புகள், முரணியக்கங்கள், இலக்கியங்களின் வரலாறு, பொறியியல் அடிப்படை வாழ்வாதாரக் கட்டுமானங்கள், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தையும் கேள்வி கூடப் பட்டிருக்க மாட்டோம். அவ்வளவு தூரம் ஆக்ரா போய் அந்தத் தாஜ்மெஹல் முன்னால் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நமக்கு, நம்முடைய மகாமகோ அதிசயமான வீராணம் ஏரி எங்கிருக்கிறது அதன் வரலாறென்ன என்பதெல்லாம் தெரியாது. அதன் சமகால ஊழல் வரலாறும் தெரியாது.

திரா விட இயக்கம், விடுதலை இயக்கம் உள்ளிட்ட விஷயங்களிலிருந்து மிக அண்மைய வரலாறான ராஜ்யசபா நாற்காலிக்காக சாகும் வரை உண்ணும் விரத அறப் போர் வரை, நமக்கு எதனையும்  ஐயம்திரிபறத் தெரிந்து கொள்ள விருப்பமில்லை.

ஆனால், நம்மால் ராஜபக்ஷவுக்கு மிரட்டல்களும், அறைகூவல்களும் (=அரைகூவல்கள்) விட முடியும். வரலாற்றை மறுபடியும் மறுபடியும் மறந்து, ஏன், அமைதியின் அவசியம் பற்றிக் கூட கள்ளத்தனமாக  மறந்து, தமிழ் ஈழம் வாங்கிக் கொள் என்று அந்தப் பாவப்பட்ட ஸ்ரீலங்கா தமிழர்களை, இங்கு பாதுகாப்பாக  அமர்ந்து கொண்டு, உசுப்ப முடியும்.

… நம் அடிப்படை வரலாற்றுக் காரணிகளைத் தெரிந்து கொள்ளாமல், படிப்பறிவு இல்லாமல் — ஏற்றுக் கொள்ளவேண்டியவற்றை ஏற்று நம்மைச் செழுமைப் படுத்திக் கொண்டு, விலக்கவேண்டியதை விலக்க முயற்சி செய்து நம்மை மேலெடுத்துச் செல்லவெல்லாம் எப்படித்தான் முடியும்?

கேள்விகள், கேள்விகள்

-0-0-0-0-0-0-0-0-0-

மேலும்… தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (6/n)

தொடர்புள்ள பதிவுகள்: தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??

6 Responses to “சாளரம் #2: வரலாறு = குத்துமதிப்பாக இது, ஒருவேளை வரலைந்துக்கும் வரலேழுக்கும் நடுவில் தொங்கிக் கொண்டிருக்கும் ஜந்துவோ என்னவோ?”

  1. surya Says:

    fantastic post!

  2. Yayathi Says:

    1. //ஆனால் – நம் ‘மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட’ வரலாறுகளைப் பற்றி அறிய நாம் இப்போது நம்புவது திரைப்படங்களையே. எனக்கு இதனை நினைக்கும் போது உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது.//
    –உங்கள் பாணியல் சொல்வதானாள் “வரேழாம் அறிவு ” படத்திற்காக போதி தர்மர் தமிழில் காஞ்சிபுர ஆளாகவும் தெலுங்கில் குண்டூர் ஆளாகவும் காட்சி அளித்தார் :-)

    2. //லெமூரியா மலேரியா என்று ஜுரவேகத்தில் பிதற்றுகிறோம். பழம் பெருமைப் புல்லரிப்பைப் பற்றி மட்டுமே வீர வாய்ப்பேச்சு பேசும் கிழம் எருமைகளாக மாறி வருகிறோம்.
    //
    இப்படியே போனால் “வைக்கோல் பார்க்கும் கிழ எருது” என்று ஆகிவிட்டால் வேதனைக்கூரியதுதான் !


  3. கொஞ்சநாள் பொறுத்தால் நீங்கள்; இப்படிப் புலம்பவேண்டி இருக்காது. ஏனெனில், இன்று தமிழ்நாட்டுப் பள்ளிகளில் யாரும் தமிழ் மீடியம் படிப்பதில்லை. தமிழை வாய்விட்டுப் படிக்கும் பழக்கம் யாருக்கும் இல்லை. எனவே சங்க இலக்கியங்களை யார் படிக்கப்போகிறார்கள்! தமிழ்ப் பண்பாடு குறித்து யார் பேசப் போகிறார்கள்!

  4. Anonymous Says:

    பின் நாம் எப்படித்தான் தெரிந்து கொள்வது நம்முடய வரலாற்றை.

    • ramasami Says:

      சுலபம்தான்.

      சில வருடங்கள் செலவழித்து – அடிப்படைப் புத்தகங்கள் – பல இருக்கின்றன – படித்து, சிந்தித்து, கொஞ்சம் பயணங்கள் (மலிவாக, மிதிவண்டியில் சென்றால் போதும்) செய்தால் எட்டி விடும் தூரம் தான்.

  5. Yayathi Says:

    This is one version of how you trace back and there could be many more :-)

    Have you seen the recently hit move Raja Rani – it was claimed to be a hit by the media and by the promoters – if you have seen Mouna Ragam ( by Mani Rathnam), you would know “Raja Rani” is Mouna Ragaam times two (past love stories of both lover and the loved). If you go back still further, you would know that Mouna Ragam itself was another version of “Nenjathai Killathae” (by Mahendran). If you go back further, you would see that Mani Rathanam was the product of the sensitivity of Mahendran and style of C.V.Sridhar (who himself was influenced by Guru Dutt). So, history is how do you trace back each of your steps and the logic behind them and the collective understanding. and agreement.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: