தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (2/n)

November 14, 2013

முந்தைய இரு பதிவுகள்:

ஆக, மேலே (அல்லது) கீழே படிக்குமுன் நீங்கள் கீழ்க்கண்ட சுட்டிகளைப் படித்தால் நலம். (இந்த விவரணைகளுக்குப் பின்புலம்: ஸ்ரீலங்காவில் காலங்காலமான தமிழர்கள் பிரச்னை குறித்து, திடுதிப்பென்று முழித்துக்கொண்டு 2013-ல் – இந்தியத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆடிய ‘போர் ஆட்டம்’ – மாணவர்கள் படித்துக் கரை  கண்டுவிட்டதால், அவர்களும் கூடச் சேர்ந்து கலந்தடித்த ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்!’ மேற்படி, இந்த களப்பிணியாளர்கள், போராளி, வீரசோழச்சேரப்பாண்டிய தமிழிளைஞ இத்யாதிகள், வினோத  ஜந்துக்கள் பற்றிய என் குறிப்புகள்)

-0-0-0-0-0-0-0-

சரி. வேண்டுமளவு தன்னிலை விளக்கம், முன்னெச்சறிக்கை போன்றவைகளைக் கொடுத்தாகி விட்டது.

ஆக, நம் உலகத்தை அதன் உட்கூறுகளை, அதன் ஊக்கிகளைப் புரிந்துகொள்ள – இவை ஏன் இப்படி  நடக்கின்றன, ஏன் அப்படி நடக்கக்கூடாதா, மற்ற இடங்களில் இம்மாதிரி  இல்லையே, ஏன் நாம் இப்படி  இருக்கிறோம் – போன்ற அடிப்படைக் கேள்விகளைப் பல வருடங்களாக கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

பல நிறங்கள் சார்ந்த கொள்கையாளர்களின் பேச்சுக்களையும், புத்தகங்களையும் – நம் திரா விட வாதிகளிலிருந்து – வெள்ளைக்கார அறிவிலிகள் வரை தீவிரமாகப் படித்திருக்கிறேன்; நம் புத்திசாலி நேர்மையாளர்களிருந்து — வெள்ளைக்கார அல்லது வேறு நிறக்கார புத்திசாலி நேர்மையாளர்கள் வரை எனப் பலவிதமான சான்றோர்களின் கருத்துகளையும், என்னால் முடிந்தவரை வாசித்திருக்கிறேன். என்னளவில் – பல தளங்கள், துறைகள் சார்ந்தவைகளைப் புரிந்துகொண்டு அவற்றைத் தொகுத்துக் கொள்ள முயன்றிருக்கிறேன். அவற்றைத் தொடர்ந்து புரிந்து கொள்ள, என் அனுபவங்களுடன் பொருத்திப் பார்க்க முயன்று கொண்டிருக்கிறேன். ஆனால்,  பல கேள்விகளுக்கு, இம்முயற்சிகளில் பதில் கிடைக்கவில்லை.

ஆக, இப்படிப்பட்டவற்றை வெற்றிடத்தில் கேட்டுப் பதில் பெற முடியாது என்பதை அனுபவத்தில் உணர்ந்ததால், நான், கடந்த 35 வருடங்கள்போலச் சேகரித்த சுமார் 45 மானுட உளவியல், சிந்தனைகள் சார்ந்த மேற்கோள்கள் / சிடுக்கலில்லாத எளிமையான கோட்பாடுகள் கைவசம் வைத்திருக்கிறேன். அதில் என்னுடைய சொந்த  மேற்கோள்கள் / கோட்பாடுகள் எனச் சுமார் 10. (ஒரு மாதிரியாகப் பார்க்காதீர்கள்!)

இந்தச் சேகரத்தைப் பற்றி சொல்வதற்கு என்ன காரணம் என்றால் – நான் இவற்றின் சாரங்களின் மூலமாக, நான் புரிந்துகொள்ள வேண்டிய எந்த அனுபவத்தையும், நிகழ்வையும் ஒரு முப்பட்டகக் கண்ணாடி (‘ப்ரிஸ்ம்’) வழியாகப் பார்ப்பதுபோலப் பார்த்துத் தர்க்கரீதியாகப் பகுத்து விரித்து என் அவதானிப்பில் – என் சொந்த வாழ்க்கையில், பொது வாழ்க்கையில், உலக/நாட்டு நடப்புகளில் – என்னதான் நடக்கிறது, ஏன் நடக்கிறது, என் எதிர்வினைகள் எப்படி இருக்கவேண்டும்(அல்லது இருக்கவேண்டுமா?), எப்படி என் பார்வையை விசாலமாக்கிக் கொள்ளவேண்டும் என்பவற்றைப். புரிந்துகொள்ள முயற்சி செய்ய – இவை மிகவும் ஏதுவாக  இருக்கின்றன.

இதைத் தவிர நான், இம்மாதிரியே, நம் செல்லத்  தமிழகத்தை, தமிழர்களைப் புரிந்துகொள்வதற்கு, என்னுடைய  தமிழுளவியல்(!) அடிப்படைகளை அறிவதற்கு என்று – இன்னொரு சுமார் பத்துபோலக் கோட்பாடுகள் உள்ள உபசேகரம் வைத்திருக்கிறேன்.

இவற்றை வைத்து – இந்த இரண்டு சேகரங்களிலுமிருந்து கருதுகோள்கள் (இதற்குச் சாளரங்கள் என்பதுதான் சரியான பதம் என நினைக்கிறேன்) சிலவற்றை உபயோகித்து, நம் தமிழைக் கூறு போடும் நல்லுலகைப் பற்றி, நான் மேலே எழுதலாம் என்றிருக்கிறேன்.

ஒரு விஷயம்: இந்தச் சாளரங்களும் தன்னந்தனியாக இயங்குவதில்லை, மற்றவற்றிலிருந்து கடன் வாங்கியும், அவற்றின்மேல் கட்டுமானம் செய்தும் பல விதங்களில் இவை ஒன்றையொன்று சுவீகரித்தும் முன்னகர்த்தியும் நம் எதிர்வினைகளை நிர்ணயிக்கின்றன என்பது என் அனுபவம்.

இன்னொரு விஷயம்: இந்தச் சாளரங்களைப் பெரும்பாலும் வெளியேயிருந்து உள் நோக்கிப் பார்ப்பது போலத்தான் உபயோகிக்கிறேன்.எனக்கு — ஏதாவது ஆழமான, அதிமுக்கியமான பணி செய்யும்போது — புழுக்கமில்லாமை  மிக முக்கியம்.

மேன்ஃப்ரெட் மேக்ஸ்-நீஃப் அவர்கள் ஒரு மேதை. அவருடைய இந்தப் புத்தகம் அடுத்த 100 ஆண்டுகளுக்குள் தமிழில் கிடைக்கப் பெற்றால் அது நம் பாக்கியமாக இருக்கும்.

சிலே நாட்டினரான மேன்ஃப்ரெட் மேக்ஸ்-நீஃப் (Manfred Max-Neef) அவர்கள், ஒரு மேதை. இவருடைய சிந்தனைகள் அடுத்த 100 ஆண்டுகளுக்குள் தமிழில் கிடைக்கப் பெற்றால் அது நம் பாக்கியமாக இருக்கும்.

ஆகவே, இச்சாளரக் கோட்பாடுகள் விரிக்கப் படுவது – ஒரு இருண்ட அறையில் இருந்துகொண்டு சாளரத்தைத் திறந்து வெளியே ஆஹாவென்று வெளிச்சத்தைப் பார்ப்பது போல அல்ல.

ஒப்புக் கொள்கிறேன் – இவை மானுட-சமூகவியல் ரீதியாக கறாராகவெல்லாம் செப்பனிடப்படவில்லை. Participant Observation, Non-participant Observer என்றெல்லாம் கலந்தடித்துப் பேராசிரியத்தனமாக எழுதப் படவில்லை, மன்னிக்கவும்.

மேலும், இந்தக் கருதுகோட்களும் மகாமகோ சிக்கலானவையல்ல.

-0-0-0-0-0-0-0-

ஹ்ம்ம். இன்னொன்று சொல்லவேண்டும். ஒரு மானுட சமூகவியல்/ அரசியல் பாடுபொருள் சார்ந்த தெளிவான கட்டுரை ஒன்றைத் தமிழில் எழுதுவதில் சில முக்கியமான பிரச்னைகள் உள்ளன. அதில் ஒன்று – நான், நம்மில் பலரையும் போல, இரண்டு மொழிகள் வழியாகக் கல்வி கற்றவன் – சிந்திப்பவன் – ஆக நான், மெக்காலேயின் மேலேயே உட்கார்ந்து உலகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் அவனுடைய பேராண்டி அல்லவா?

கருத்துப்படம்: Mக்கு மேலே -- M என்றால்...  (இந்தப் புகைப்படம் நமக்குச் சொல்லும் செய்திகள் அனேகம். ஆனால் அந்தப் பாவப்பட்ட குரங்கினை நம் மனிதர்களுடன் ஒப்பிட்டு - அல்லது என்னுடன் ஒப்பிட்டு - அதன் இயல்பான கம்பீரத்தைத் தாழ்த்தலாகாதுதான்...

கருத்துப்படம்: Mக்கு மேலே — M என்றால்… (சிறைவாசம் என்றில்லை, மன்னிக்கவும்). ஹ்ம்ம்…  இந்தப் புகைப்படம் நமக்குச் சொல்லும் செய்திகள் அனேகம். ஆனால் அந்தப் பாவப்பட்ட குரங்கினை நம் மனிதர்களுடன் ஒப்பிட்டு – அல்லது என்னுடன் ஒப்பிட்டு – அதன் இயல்பான கம்பீரத்தைத் தாழ்த்தலாகாதுதான்…

ஆக, ஒரு மொழியின் மூலமாக ஒரு விஷயம் சரியாகப் புரியாவிட்டால் அல்லது விளக்க முடியாவிட்டால், இன்னொரு மொழிக்குத் தாவி, அதிலும் செய்யப் புறப்பட்டதைச் செய்யமுடியாமல் புறமுதுகு வாங்குபவன்.

ஹ்ம்ம். அலுப்புக்குரிய விஷயமாக இருக்கிறது இது. நிகழ்காலக் கோட்பாடுகளினூடே, சமூக அறிவியல்ரீதியாகத் தமிழில் சிந்திக்க — தமிழில், அதன் நெடிய பண்பாட்டுத் தொடர்ச் சங்கிலியில் – தமிழ்ச் சொல்லாடல்களை வளர்த்தெடுத்தல்கள், அறிவியல் / தொழில் நுட்பம் இன்னபிற துறைகள்சார் கலைச்சொற்களை  அவற்றின் வேற்றுமொழி வேர்களிலிருந்து, மொழி பெயர்க்காமல் தமிழ்ப்படுத்திக்கொள்ளுதல், வேறு மொழிகளிலிருந்து இடகாலதேசவர்த்தமானம் கருதி, பிற பண்பாட்டுப் படிமங்களை, குறியீடுகளைத் தமிழுக்குள் ஆட்கொள்ளுதல், அவற்றைப் பரந்துபடுத்துதல், மக்களுக்குச் சேர்த்தல் என்பதெல்லாம் ஏறக்குறைய இல்லை.

இம்மாதிரி மொழியைச் செம்மைப் படுத்துவதற்கும், எதிர்காலத் தேவைகளுக்கான முனைவுகளும், அனேகமாக நம் தமிழ்ச் சூழலில் –  நம்மால் நம்பவே முடியாத அதிகோர சராசரித்தனமான திரா விட மாயையைச் சார்ந்த ‘அறிஞர்கள்’ தாம் தம்மால் முடிந்த படி பணி ( = 0) செய்து கொண்டிருக்கிறார்கள். இதன் ஒரு மகத்தான விளைவு தான் சில வருடங்கள் முன்பு நடந்த  ‘டமிள் மொளி செம்மொலி மானாடு மயிலாடு’ என்பதறிக. மற்ற அறிஞர்களெல்லாம் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை.

இந்தச் சூழலில், தொடர்ந்து சிலர், தமிழில் சிந்தித்து, தமிழில் பல துறைகள் சார்ந்து பேசியும், நிறைய எழுதியும் வரமுடிவது எவ்வளவு அழகான, முக்கியமான விஷயம்! இம்மாதிரியான வரவேற்கத்தக்க போக்குக்கு, மிகப்பல உதாரணங்கள் என்னால் கொடுக்கமுடியவில்லை / இல்லையென்றாலும், என்னைப் பொறுத்த அளவில், பத்ரிசேஷாத்ரி.இன் இணைய தளமுகப்பில் இடப் பக்கச் சட்டகத்தில் உள்ள (~20%) தளங்களை இந்தப் போக்குக்கான எடுத்துக் காட்டுகளாகக் கொள்ளலாம்.

இச்சமயம் எனக்குத் தோன்றுகிறது –  பேராசிரியர் வா செ குழந்தைசாமி போன்ற அறிஞர்கள் 1970-களிலிருந்தே, தமிழில் பல்துறைக் கலைச்சொற்களைக் கட்டியெடுப்பதைப் பற்றி, அவற்றின் புத்துருவாக்கத்திற்கான அவசியம் பற்றி, இணையத் தமிழை மேலெழுப்புவதற்கான அவசியம் பற்றித் தொடர்ந்து குரலெழுப்பியும், பணிபுரிந்தும் வந்தார்கள், ஆனால் இவர்களெல்லாம் எங்கே? இவர் போன்ற – தமிழ்மீது மரியாதையும், காதலும், மேதைமையும், தளராத செயலூக்கமும் உடைய அறிஞர்கள் மாய்ந்து மாய்ந்து எழுதி வந்துள்ள எழுத்து / மொழிச் சீர்திருத்தங்கள் எங்கே? இவர்களுடைய அனைத்து முயற்சிகளும் வியர்த்தமா? அழகான முத்து நெடுமாறன்கள் எங்கே? ‘ப்ரோஜெக்ட் மதுரை’ கல்யாணசுந்தரம்கள் எங்கே! இவர்களையே விடுங்கள் – ஜார்ஜ் ஹார்ட்கள் எங்கே? நமக்கு லபித்தது கலைங்கரின் தமில்மொலி செம்மொலி மாணாடு மயிளாடுதானா? அல்லது, இவர்கள் போன்றோர் எல்லோரும் இன்னமும்  முனைந்துகொண்டுதான் இருக்கிறார்களா? ஹ்ம்ம். சமகாலச் செய்திகளை அறியாத எனக்கு இவர்களின் தற்கால முனைவுகள் பற்றித் தெரியாமலும் இருக்கலாம்! இவர்களெல்லாம் இன்னமும் பணி செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் எனக்கு மிகவும் மகிழ்ச்சிதான்…

ஆனால் – காலச்சுவடு, ஆழம், தீராநதி, துக்ளக், சுதேசி செய்தி போன்ற பத்திரிகைகள் (என்னால் இவற்றைத் தொடர்ந்து படிக்க முடியாவிட்டாலும்)  தொடர்ந்து வந்து கொண்டிருப்பதில் சந்தோஷம்தான்.

-0-0-0-0-0-0-0-0-

என்ன சொல்லவருகிறேன் என்றால், என் இயல்பான கரடுமுரடான  தமிழ் உரைநடையுடன், இக்கட்டுரையின் பாடுபொருட்களுக்கான – இந்தப் பரந்துபட்ட கலைச்சொற்கள் (எனக்குப்) போதாமையும் சேர்ந்து உங்களைத் தடுத்தாட்கொள்ளாமல் இருக்கவேண்டும்; சரி. அங்கலாய்ப்பதை நிறுத்தி – எனக்கு உவப்பான, உதவிகரமாகவுள்ள கோட்பாடுகளில் சிலவற்றுக்கு, அவற்றின் எளிமைப்படுத்தல்களுக்குச் செல்கிறேன் – எங்கு வேண்டுமோ, அவற்றின் ஆங்கிலச் சுருக்கத்தையும் கொடுக்கிறேன்; முடிந்தவரை பரவலாகத் தெரிந்த (அறியப்பட்ட என்றில்லை) எடுத்துக்காட்டுகளையும்கூட.

ஆலாபனை முற்றிற்று. கீர்த்தனம் ஆரம்பிக்கிறது…(பயப்படாதீர்கள், மொத்தம் பதினைந்து போல எண்ணிக்கையிலுள்ள சாளரங்கள் தான் – அவற்றுக்குப் பின் பத்ரி அவர்களின் கேள்விகளுக்கு என் எதிர்வினைகள்.)

அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ கிஞ்சித்தேனும் விரும்பும் ஒருவன் – எக்காரணம் கொண்டும் குண்டுதைரியமாக, பொதுப்புத்திவெளியில் இருக்கும் எந்தவொரு ஒரு தவற்றையும் சுட்டிக் காட்டவோ, அதனைக் களையவோ எத்தனிக்கவே கூடாது.
வில்லியம் ஜான் தோம்ஸ் (William John Thoms), என்னென்னமோ செய்துவிட்டு, கடைசியில் – இங்கிலாந்தின் பிரபுக்கள் சபையின் துணை நூலகராகவும் இருந்தவர், 1873 வாக்கில் சொன்னது…

கலிஃபோர்னிய நாட்டுப்புறவியல் காலாண்டிதழ்  1946ல் வெளியிட்ட தோம்ஸ் பற்றிய ஒரு நல்ல கட்டுரை.

கலிஃபோர்னிய நாட்டுப்புறவியல் காலாண்டிதழ் 1946ல் வெளியிட்ட தோம்ஸ் பற்றிய ஒரு நல்ல கட்டுரை. இதனை இணையத்தில் படிக்கவேண்டுமென்றால் ஜேஸ்டோர் உறுப்பினராக இருக்கவேண்டும்; நான் நண்பர் ஒருவரிடமிருந்து இதன் அச்சுப் பிரதியைப் பெற்று, பலகாலமுன்பு படித்தேன். சுவாரசியமான தோம்ஸ் அவர்களைப் பற்றிய ஒரு சமனமான அறிமுகம் இது.

… நான் அடிப்படையில் – அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ விழைபவன் தான்.

கடந்த சில வருடங்களாகத்தான் தொடர்ந்து பொதுவெளியில், எனக்குச் சரியென்று பட்டவற்றைப் பற்றி எழுத ஆரம்பித்திருக்கிறேன். ஆக, நம் மகாமகோ தமிழ்ப் பாரம்பரியத்தின் படி – என்னைப பற்றிய வசவுகளையே விடுங்கள் – என் தாயை மனைவியைப் பற்றி, அவர்களுடைய தொழில் பற்றியெல்லாம் கடந்த சில வருடங்களாகத்தான் விமர்சனங்கள்(!) வருகின்றன. இந்த நிலைமை கொஞ்சம் கேவலமாகத்தான்  இருக்கிறது.

நேற்றுகூட, ஜெயமோகன் அவர்களைப் பற்றியும் சாருநிவேதிதா அவர்களைப் பற்றியும் படு கேவலமாக ‘விமர்சித்து’ ஒரு அரைவேக்காட்டனார் ஒருவரிடமிருந்து பின்னூட்டம் வந்தது. இதனை அவர்களுக்கே  நேரடியாக அனுப்பாமல் (ம்ம், ஆனால், நான் அவர்களுடைய ஆரோக்கியத்தையும் விரும்புபவன் தான்) எனக்கு  அனுப்பியிருக்கிறார்.  மப்பு? முட்டாள்தனம்?? திரா விடம்??? தீரா விடம்???? என்ன இழவோ! :-)

ஆனால் என் தமிழர்களை, நமது வாய்ச்சொல் வீரத்தை, அற்பக் கோழைத்தனத்தை ஓரளவு அறிந்துள்ள எனக்கு, இதெல்லாம் ஆச்சரியமாகவே இல்லை. இப்படி எதிர்வினைகள்(!) வராமலிருந்தால்தான்  கலிகாலம் என்று நினைப்பேன்.

… இருந்தாலும், நான் சில பார்வைகளைக் கொடுக்கவேண்டும். இதில் எனக்கு தீவிரம்தான். இவை என்னைப் பொறுத்தவரை சரிதான் என்றாலும், உங்களுக்கு ஒத்துவராமல் இருக்கலாம். ஆனாலும் — நேரமிருந்தால், எனக்கும் உங்களுக்கும் பொறுமையிருந்தால், விவாதிக்கலாம்.

என் உயிரான உடலான பொருளான ஆனந்தியானஆவியான மூச்சான வாழ்வான வளமான மங்காத்தா புகழான சங்கான முழங்கான படுசெல்லமான தமிழுக்கு, என்னால் இதைக்  கூடச் செய்யமுடியாதா என்ன?

அடுத்த பதிவில் (3/n) மேலும் — சாளரம் #1லிருந்து தொடர்கிறேன்…

-0-0-0-0-0-0-

தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம்??

போங்கடா, இதுதாண்டா *&#@! பதிவுகள்

3 Responses to “தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (2/n)”


  1. தங்களது சரளமான தமிழ் படிப்பதற்கு உறுத்தாமல், மிகவும் இயல்பாக இருக்கிறது. சில சமயங்களில் ஆச்சரியமாகக்கூட இருக்கிறது.

    //கடந்த சில வருடங்களாகத்தான் தொடர்ந்து பொதுவெளியில், எனக்குச் சரியென்று பட்டவற்றைப் பற்றி எழுத ஆரம்பித்திருக்கிறேன். //
    // இந்த நிலைமை கொஞ்சம் கேவலமாகத்தான் இருக்கிறது//

    அவரவர்கள், அவர்களிடமிருக்கும் ஆயுதத்தைத்தான் உபயோகிக்கமுடியும். கூட்டத்தில கல்லெறிவது நமது சமுதாயத்தில் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்று. செய்திருக்கலாமோ என்று வருந்தாமல், முயற்சி செய்த திருப்தியுடனாவது இருப்பது நல்லது என்று நினைக்கிறேன். அங்கங்கே அறிமுகப்படுத்தும் நூல்களுக்கும் நன்றி.

  2. பாலசுப்ரமணியம் Says:

    Eagerly waiting for other parts…

  3. jag673 Says:

    I came across this and sharing – a pdf version of “From the outside looking in” available – http://www.dhf.uu.se/publications/other-publications/from-the-outside-looking-in-experiences-in-%E2%80%98barefoot-economics%E2%80%99/

    Thanks

    Ramanan


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: